news
ஞாயிறு தோழன்
03 நவம்பர் 2024 (இரண்டாம் ஆண்டு) ஆண்டின் பொதுக்காலம் 31-ஆம் ஞாயிறு-இச 6:2-6; எபி 7:23-28 மாற்கு 12:28-34

திருப்பலி முன்னுரை

மனித குலத்தை அன்புதான் ஆள்கிறது. ‘எங்கே அன்பிருக்கிறதோ, அங்கே வாழ்க்கை இருக்கிறது’ என்கிறார் காந்தியடிகள். முழுமையான அன்பு இல்லையேல், முழுமையான அழகு இருக்க முடியாது. அழகு முழுமையாக இல்லாத இடத்தில் முழுமையான மகிழ்ச்சி ஏற்பட இயலாது. வாழ்க்கை என்பது அழகானது, அற்புதமானது. அப்படிப்பட்ட வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதுதான் இறைவிருப்பமாக உள்ளது. சமூகத்தில் அன்பிழந்து வாழ்ந்த சமாரியர்தான் அடிபட்டு காயத்தோடு இருந்தவருக்கு உதவி செய்தார். சட்டத்தின்படி தண்டிக்க வேண்டுமென்று விபச்சாரப் பெண்ணைச் சுற்றிக் கற்களோடு இருந்த கூட்டத்தில், அன்போடு மன்னித்த இயேசுவின் அன்பு மிகப்பெரியது. அப்படிப்பட்ட அன்பின் கட்டளைகளோடு வாழ இறைவன் அழைப்புக் கொடுக்கின்றார். பலவிதமான சட்டங்களைச் சொல்லி நம்மைக் குழப்பாமல், இரு பொன்னான சட்டங்களைக் கடைப்பிடிக்க வலியுறுத்துகின்றார். இறைவனை அன்பு செய்வது, அடுத்திருப்பவரை அன்பு செய்வது என்று அனைத்துக் கட்டளைகளையும் இவ்விரு கட்டளைகளில் சுருக்கியுள்ளார்.  எனவே, இறைவனுக்குச் செலுத்தும் பலியைவிட அன்பே மிகச் சிறந்தது. எனவே, இறைவன் நமக்குக் கொடுத்த வாழ்க்கையை அன்போடும் மகிழ்வோடும் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

இறைநம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் நமக்குத் துணையாக இருப்பவை கட்டளைகள். இக்கட்டளைகள் நமக்கு நன்மை செய்யவும், இறைத்திட்டத்தை நிறைவேற்றவும், இறைவனின் மக்களாக நீண்ட காலம் வாழவும் துணைபுரிகின்றது. கட்டளைகளைக் கடைப்பிடிக்கவும் கற்பிக்கவும் நாம் படைக்கப்பட்டுள்ளோம். இறைக்கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் வழியாக இறைவனை அன்பு செய்ய முடியும் என எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

குருத்துவப் பணிபுரியும் குருக்கள் நிலையற்றவர்கள். அவர்களும் இறந்துபோகக் கூடியவர்கள். நிலையற்ற குருக்களின் மத்தியில், நிலையான நிறைவான தலைமைக்குரு இயேசு ஆண்டவர் மற்றத் தலைமைக்குருவைவிட, மேலான தலைமைக்குருவாகத் திகழ்கின்றார். தம்முடைய ஒரே பலியின் வழியாக, மக்களைப் பாவங்களிலிருந்து மீட்டார் என இயேசுவின் தியாக அன்பை எடுத்துரைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்புத் தந்தையே எம் இறைவா!  உம்முடைய பிள்ளையாகிய நாங்கள், உம் வார்த்தைகளைக் கடைப்பிடித்து என்றும் மகிழ்வோடும், நிறைவோடும் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அமைதியின் தெய்வமே என் ஆண்டவரே! இவ்வுலகத்தில் நடைபெறும் போர்கள் நீங்கி, நீர் தந்த நிலையான நிறைவான அமைதியில் வாழ அருள் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. உழைப்பின் மேன்மையை எங்களுக்குக் கற்றுத்தந்த இறைவா! எம் குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக உழைப்பவர்களுக்கு உடல், உள்ள வலிமையைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உன்னை அன்பு செய்வதுபோல பிறரையும் அன்பு செய்ய வேண்டுமென்று கட்டளையிட்ட ஆண்டவரே! வலியோடும் வேதனையோடும் துன்பத்திலிருக்கும் மக்களை அன்பு செய்து வாழ, வரம் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 25-ஆம் ஞாயிறு (22-09-2024)

சாஞா 2:17-20; யாக்கோபு 3: 16-4:3; மாற்கு 9: 30-37

திருப்பலி முன்னுரை

சுயநலம் என்பது ஒவ்வொருவரும் தமது நலன்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து செயல்படுவதைக் குறிக்கிறது. சுயநலவாதிகள் தங்களுக்கு மட்டுமே நல்லவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்களைப்  பற்றி நினைப்பதில்லை. நம் வாழ்க்கை எப்போதும் சுயநலமாக இருந்தால் நீடித்த மகிழ்ச்சி இல்லை. சிறுவன் ஆபேலின் காணிக்கையானது சுயநலமற்றக் காணிக்கையாக இருந்தது. அதனால் இறைவன் ஏற்றுக்கொண்டார். சிறுவன் தாவீது தனது உயிரைப் பெரிதாக நினைக்காமல் மக்களின் விடுதலைக்காக, கோலியாத்தை எதிர்த்துப் போராடினார். சிறுவன் சாமுவேல் தன் வாழ்வை இறைப் பணிக்காக அர்ப்பணித்தார். ஐயாயிரம் மக்களுக்கு உணவைப் பகிர்ந்து கொடுக்கும்போது, பெயர் பதிவு செய்யப்படாத சிறுவன், தான் வைத்திருந்த ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொடுத்தான். இப்படியாக, சுயநலமற்றச் சிறுவர்களைத் திருவிவிலியம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. இன்றைய நற்செய்தியிலும் ‘யார் பெரியவர்?’ என்று இயேசுவின் சீடர்கள் சுயநலத்தோடு வாதாடிக் கொண்டிருக்கும்போது சிறுபிள்ளையை முன்நிறுத்தி, சுயநலமற்ற வாழ்வை வாழ அழைப்புக் கொடுக்கின்றார் இயேசு. எனவே, நாமும் சுயநலமுள்ள வாழ்வின் முறையை விட்டுவிட்டு, பொதுநலத்தோடு வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் உள்ளத்தில் எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள் என்பதை முதல் வாசகம் எடுத்துரைக்கின்றது. சாலமோனின் ஞானம் கிரேக்கர்களுக்கு எழுதப்பட்டமையால், கிரேக்கக் கலாச்சாரத்தின் தீமைகளை மறைமுகமாகச் சாடுகின்றார். நீதிமான்களுக்குத் துன்பம் வருகிறது, பொல்லாப்புகள் வருகின்றது, பகைவர்களிடம் துன்பப்படுகிறார்கள். ‘யார் அவர்களைப் பாதுகாப்பார்?’ என்ற இறைப்பற்றில்லாதவர்களின் கிண்டல் பேச்சு முதல் வாசகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

சுயநலம் இன்று மட்டுமல்ல, தொடக்கக் காலத் திரு அவையிலும் இருந்துள்ளது. சுயநலம் அனைத்து விதமான தீமைகளுக்கும் காரணமாக இருந்திருக்கிறது. சுயநலமற்ற உலகம் அமைதியான உலகம் என்பார்கள். அந்த அமைதிக்கும் நீதிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. தற்கால மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மானிடவியலாளர்கள், அமைதி ஏற்படுத்த நீதிதான் மிகப்பெரிய ஆயுதம் என்கிறார்கள். சிற்றின்பம் தரும் வேண்டுதலைத் தவிர்த்து, சண்டை சச்சரவில்லா அமைதியான வாழ்வைப் பெற முயல வேண்டுமென்று எடுத்துரைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா! இவ்வுலகத்தில் இயற்கையோடு வாழ நீர் எங்களைப் படைத்தீர். இயற்கை வளங்களைச் சுரண்டும் பகைவர்களிடமிருந்து, இயற்கை வளத்தைக் காப்பாற்ற எங்களுக்குத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. உண்மையை எடுத்துரைக்கும் ஆண்டவரே! சுயநல உள்ளத்தோடு வாழும் எங்களுக்குப் பிறரை அன்பு செய்து, பிறரின் உரிமைகளை மதிக்கவும், பிறருக்கு உதவி செய்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வல்லமையான தலைவராம் எம் இறைவா! எங்களை ஆண்டு நடத்தும் ஆன்மிகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் சுயநலமின்றி, பொதுநலத்துடன் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. வழிநடத்தும் வள்ளலே எம் இறைவா! எம் குடும்பத்தை வழிநடத்தும் எம் பெற்றோர்களை ஆசிர்வதித்து, நல்வழியில் எங்களை வழிநடத்தத் தேவையான அருள் வரத்தைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 24 -ஆம் ஞாயிறு (15-09-2024)

எசாயா 50:5-9; யாக்கோபு 2:14-18; மாற்கு 8:27-35

திருப்பலி முன்னுரை

‘யார் இந்த இயேசு?’ என்பது கேள்வியல்ல; அது ஒரு தேடல்! தம்மைப் பற்றிச் சுய ஆய்வு செய்து கொள்கிறார் நம் ஆண்டவர் இயேசு. ‘மக்கள் தம்மைப் பற்றிய சரியான புரிதலோடு இருக்கிறார்களா?’ என்ற தேடலை கேள்விகள் வழியாகக் கேட்கிறார். உண்மையான இறைமகன், பாடுகள் பல ஏற்க வேண்டும்; துன்பத்தைத் துணிந்து சுமக்க வேண்டும்; இறப்பின் வழியாகத்தான் உயிர்ப்பை அடைய முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார். தொடக்கக்காலத் திரு அவையில் இயேசுவைப் புறக்கணிக்கிறவர் தன்னுயிரை இழந்தவர் என்றும், இயேசுவை அறிக்கையிடுபவர் உயிரைக் காக்கிறவர் என்றும், இயேசுவின் பொருட்டும், அவர் நற்செய்தியின் பொருட்டும் உயிரைக் கொடுப்பவர் நிலைவாழ்வைப் பெறுபவர் என்றும் நற்செய்தியாளர் மாற்கு காட்டுகிறார். எனவே, அனைத்தையும் கொடுத்த இறைவன், நம்பிக்கையின் வழியாக வாழ்வையும் கொடுக்கிறார். இறைவன்மீது அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டு வாழ இத்தெய்வீக திருப்பலியில் வரம் வேண்டி இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் காட்டப்படும் தலைவர் பல சித்திரவதைகளைத் தன் கடவுளுக்காக ஏற்றுக்கொள்கிறார். அடிப்பதற்கு முகத்தைத் திறந்து வைத்தல் மற்றும் எச்சில்களை ஏற்றுக்கொள்ளுதல் அக்கால அரசர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை; அதனையும் இந்த ஊழியர் ஏற்றுக்கொள்கிறார். இந்த அவமானங்களை எப்படி இவர் தாங்கிக் கொள்கிறார் என்றால், ‘ஆண்டவர் என்னுடன் இருக்கிறார்’ என்ற நம்பிக்கை மட்டும்தான் என்று எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

வழிபாட்டையும், வழிபாட்டுத் தலங்களையும் தாண்டி நம் நம்பிக்கை வளர வேண்டும். நம்பிக்கை என்பது கண்ணுக்குப் புலப்படாத காரியமில்லை; நம்பிக்கைக்குச் செயல் வடிவம் கொடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். நம்பிக்கை என்பது தொடக்கக்காலத் திரு அவையில், அதுவும் முக்கியமாக யாக்கோபின் திரு அவையில் நற்செயல்களுடன் தொடர்புபட்டிருந்தது என்பது இரண்டாம் வாசகத்தின் வழியாகப் புலப்படுகிறது. எனவே, நம்முடைய நம்பிக்கை செயல்வடிவம் பெற அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம். 

மன்றாட்டு

1. ‘உம் நம்பிக்கை உம்மை நலமாக்கும்’ என்று கூறிய ஆண்டவரே, எம் நம்பிக்கையை வளர்க்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் ஆசிர்வதித்து, நம்பிக்கையின் முன்மாதிரியாக இருக்க அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இன்று இந்தியா முழுவதும் பொறியாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம். நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் பொறியாளருக்குத் தேவையான அறிவையும், வல்லமையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நம்பிக்கை செயல் வடிவம் பெற வேண்டும் என்று கூறிய இறைவா, வழிபாட்டையும், வழிபாட்டுத் தலங்களையும் தாண்டி, எங்கள் நம்பிக்கை செயல் வடிவம் பெறும் ஆற்றலைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. சொந்த நாட்டை இழந்து அகதிகளாக இருக்கும் மக்களுக்காக மன்றாடுகிறோம். உரிமையிழந்து தவிக்கும் மக்களுக்கு உரிமையான வாழ்வைத் தந்து, துன்பத்திலிருந்து இன்பமான வாழ்வைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 23 -ஆம் ஞாயிறு (08-09-2024)

எசாயா 35:4-7; யாக்கோபு 2:1-5; மாற்கு 7:31-37

திருப்பலி முன்னுரை

“இயேசுவை அடைய நாம் பயணிக்க வேண்டிய பாதை அன்னை மரியா” என்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். இன்று நம் அன்னை மரியாவின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றோம். பெண் குழந்தைகளின் தினத்தையும் அனுசரிக்கின்றோம். ‘தாயின்றிச் சேயில்லை’ என்பது முன்னோர் மொழி. இறைவனின் படைக்கும் தொழிலில் பங்கேற்பவர் தாய் மட்டும்தான். இது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். இவ்வுலகம் இயங்குவதும் இருப்பதும் தாயின் அன்பால்தான். தாயின் அன்பு தனிப்பட்ட அன்பு கிடையாது. அனைவரையும் அன்பு செய்யும் பொதுநல அன்பு. வயதான காலத்தில் கருவுற இயலாத எலிசபெத்தைச் சந்தித்து, அவருக்குப் பணிவிடை செய்தது தாயின் அன்பு. கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் இல்லை என்றதும், தானாகச் சென்று உதவி செய்ய தன் அன்பு மகனுக்கு அழைப்பு விடுத்தது தாயின் அன்பு. இறுதியாக, இவ்வுலகம் வாழ்வு பெற, மீட்படைய தன் மகனையே அர்ப்பணித்தது தாயன்பின் உச்சக்கட்டம். இன்றைய நற்செய்தியில் இயேசு தொடுதல் வழியாகக் காது கேளாதவருக்குக் காது கேட்கும் திறனைக் கொடுக்கிறார். தொடுதல் வழியாக உரிமையும் பாதுகாப்பும் அன்பும் கடத்தப்படுகின்றது. அன்னையின் பிறந்த நாளில் அன்னையைப் போல பிறரன்புச் செயல்பாடுகளில் பங்கேற்க வரம் வேண்டி, இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

தொடர் தோல்வி, ஏமாற்றம், சுமக்க முடியாத சுமையைச் சுமந்து கொண்டிருக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வார்த்தையாகவும், நம்பிக்கையூட்டும் வார்த்தையாகவும் இன்றைய முதல் வாசகம் அமைந்துள்ளது. அரசர்களின் முறையற்ற அரசியல், தவறான வழிகாட்டுதல், அசிரியாவின் அச்சுறுத்தல் காரணமாக வட இஸ்ரயேல் அழிவின் நிலைக்கு வந்துவிட்டது. எனவே, ‘இறைவனின் நீதியின் முகம், மக்களை மீட்கும் தன்மை கொண்டது; எனவே, மக்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்’ என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

உலகம் தோன்றிய காலம்தொட்டு ஏழை- பணக்காரன் என்ற வேறுபாடு காட்டப்படுகின்றது. உலகின் பார்வை வேறு, ஆண்டவரின் பார்வை வேறு என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கின்றது. உலகின் பார்வையில் ஏழைகளாக இருப்பவர்கள், ஆண்டவரின் பார்வையில் செல்வர்களாக இருக்கிறார்கள். அதற்குக் காரணமாக அவர்கள் கொண்டிருந்த நம் பிக்கை காட்டப்படுகிறது. நம்முடைய பார்வையும், இறைவனின் பார்வையாக இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கும் இரண்டாம் வாசகத்திற்கு நம்பிக்கையோடு செவிமடுப்போம்.

மன்றாட்டு

1. அன்பையும் பண்பையும் தரும் இறைவா! எம்மோடு வாழும் சக மனிதர்களை அன்பு செய்து, அவர்களின் இன்ப, துன்பத் தருணங்களில் பங்குகொண்டு, இறை உறவில் நாங்கள் வளர தேவையான அருளைத் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆள்பார்த்துச் செயல்படாத உன்னதமான இறைவா! நாங்கள் வாழும் சமூகத்தில் இருக்கும் பலவிதமான பிரிவினைகளை அகற்றி, குறிப்பாக ஏழை-பணக்காரன் என்ற பொருளாதார ஏற்றத்தாழ்வில்லாமல் மனிதனை மனிதத்தோடு மதிக்கும் பண்பைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. பெண்மை வாழ்வின் மேன்மை என்று வாழ்ந்த ஆண்டவரே, எம் குடும்பத்தில் இருக்கும் பெண் குழந்தைகளுக்காக மன்றாடுகிறோம். பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை, மதிப்புக் கொடுத்து வாழ அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. மாற்றுத்திறனாளிகளைக் குணப்படுத்திய அன்பு இறைவா! எங்களோடு வாழும் மாற்றுத்திறனாளிகளைப் பிரிவினை பார்க்காமல், கேலி கிண்டல் செய்யாமல் அவர்களோடு அன்பாக வாழ வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 22 -ஆம் ஞாயிறு (01-09-2024)

இச 4:1-2,6-8; யாக் 1:17-18,21-22,27; மாற்கு 7:1-8,14-15,21-23

திருப்பலி முன்னுரை

“அரசியலமைப்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டால், அதை எரிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்” என்கிறார் இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர். மிருகத் தன்மையிலிருந்து மனிதத்தன்மைக்குக் கடந்துவர நமக்கு உதவியாக இருப்பது சட்டங்கள். நம்மை நெறிப்படுத்தவும், பிறருடன் இணக்கமான வாழ்வை வாழ உதவி செய்வதும் சட்டங்கள் மட்டும்தான். தற்காலத்தில் இயற்கையான சட்டங்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் எனப் பலவகையான சட்டங்களை நாம் பின்பற்றி வருகிறோம். அதில், இன்றும் மிகவும் உயர்ந்து இருப்பது இறைச்சட்டம்.  துன்புறும் அனாதைகளையும், கைம்பெண்களையும் கவனிப்பதற்கும், எதிரிகளை நேசிப்பதற்கும், கறைபடியாத வாழ்வு வாழச் செய்ய உதவியாக இருப்பது இறைச்சட்டம். இன்றைய முதல் வாசகம் ‘நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம்; அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம்’ என்கிறது. இரண்டாம் வாசகம் இறைவார்த்தையான திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கின்ற மக்களாக வாழ அழைப்பு கொடுக்கிறது.  மரபுகளைப் பின்பற்றி மனிதர்களைக் கைவிடக்கூடாது என்கிறது இன்றைய நற்செய்தி. எனவே, இறைச்சட்டத்தைக் கற்று, அதனைக் கடைப்பிடிக்கின்ற மக்களாக வாழ வரம் வேண்டி செபிப்போம்.

முதல் வாசக முன்னுரை

பலதரப்பட்ட இனங்களைவிட இஸ்ரயேல் இனம் சிறந்து விளங்குகிறது. காரணம், அவர்களிடத்தில் உள்ள நியமங்கள். அந்த நியமங்கள் கடவுளால் கொடுக்கப்பட்டவை. சட்டங்கள், விதிமுறைகள், நியமங்கள் அனைத்தும் மக்களை ஒழுங்குபடுத்தவும் நெறிப்படுத்தவும் கொடுக்கப்பட்டவை. அதற்கும் மேலாக, கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது அளவற்ற அன்பு கொண்டுள்ளார் என்பது அவர் கொடுத்த நியமங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. கடவுள் கொடுத்த சட்டத்தைத் திருத்தவோ, மாற்றவோ யாருக்கும் அனுமதியில்லை. இறைவன் கொடுத்த சட்டத்தைக் கடைப்பிடிப்போர் யாவரும் ஞானமிக்கவர்கள் என்று வெளிப்படுத்தும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஒரு பொய்யைக் காப்பாற்ற பல பொய்கள் தேவைப்படும். ஆனால், உண்மையைக் காப்பாற்ற ஒரே ஓர் உண்மை மட்டும் போதும். உண்மையே இறைவன். அவரிடம் வெளிப்படும் வார்த்தையும் உண்மையே. இறைவார்த்தையை நாள்தோறும் பல்வேறு வடிவங்களில் கேட்கின்ற நாம், இறைவார்த்தையின்படி நம் வாழ்வு அமைந்திருக்கின்றதா? என்று உள்ளத்தில் கேள்வி கேட்க உதவி செய்யும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டு

1. இறைவார்த்தையை எம் உள்ளத்தில் ஊன்றிய ஆண்டவரே! வாழ்வு தரும் இறைவார்த்தையை நாள்தோறும் வாசிக்கவும், அதனைக் கடைப்பிடிக்கவும் ஆற்றலும் வல்லமையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்பையும் பண்பையும் எம்முள் விதைத்த ஆண்டவரே! உம்மைப்போல படைப்பு அனைத்தையும் அன்பு செய்யவும், அதனைப் பாதுகாக்கவும், நேசிக்கவும் தடையாய் இருக்கும் காரணிகளை அகற்றி, உம்மைப்போல் வாழ அருளைத் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தலைமுறைதோறும் ஆசிர்வதிப்பவரே எம் இறைவா! எம் பிள்ளைகளுக்காகச் செபிக்கிறோம். எம் பிள்ளைகளுக்குத் தேவையான உடல்நலனையும், மனநலனையும், நல்ல எண்ணங்களையும், இறை உணர்வையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பே உருவான இறைவா! நாங்கள் வாழும் பகுதியில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மன்றாடுகிறோம். விளிம்பில் இருக்கும் மக்கள் மையத்தை நோக்கி வரத் தடையாக இருக்கும் காரணிகளை நீக்கி, சுயமரியாதையோடு வாழ அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 21-ஆம் ஞாயிறு (25-08-2024)

யோசுவா 24:1-2,15-17,18; எபேசியர் 5: 21-32; யோவான் 6: 60-69

திருப்பலி முன்னுரை

நாள்தோறும் நமது காதுகளில் பல வார்த்தைகளைக் கேட்கிறோம். நன்மையான வார்த்தைகளும், கவர்ச்சியான வார்த்தைகளும், புரட்சிகரமான வார்த்தைகளும், வாழ்வை முன்நோக்கி நகர்த்தும் வார்த்தைகளும், வாழ்வைப் பின்னோக்கித் தள்ளும் வார்த்தைகளும் கேட்கிறோம். ஆனால், இறைவார்த்தை என்பது இறைவனின் இயல்பை எடுத்துரைக்கிறது; இறைவனின் குணநலனை வெளிப்படுத்துகிறது. “நமக்குப் பிடித்த இறைவார்த்தையை மட்டும் நம்பி, பிடிக்காத இறைவார்த்தையை ஒதுக்குவது இறைவார்த்தையே அல்ல” என்கிறார் புனித அகுஸ்தினார். இன்றைய நற்செய்தியில் இயேசு கூறிய வார்த்தையை நம்பாத சீடர்கள், அவருக்கு எதிராக முணுமுணுக்கிறார்கள்; அவரை விட்டு விலகிச் செல்கிறார்கள். நன்மையான காரியத்தை நம்பி வருவோரைவிட, நம்பாமல் விலகிச் சென்றவர்கள்தான் அதிகம். ‘யாரிடம் செல்வோம் இறைவா! வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன’ என்று மொழிந்த பேதுருவைப் போல இறைவார்த்தையை நம்பி வந்தவர்கள் சிலர் மட்டுமே. இந்த உலகத்தை உருவாக்கியது இறைவார்த்தை, நம் வாழ்வுக்கு விளக்காக அமைவது இறைவார்த்தை. நம்பிக்கையோடு இறைவார்த்தையை எடுத்துரைக்கும்போது பெரிய மலைகூட நகர்ந்து செல்லும். எனவே, இறைவார்த்தையை நம்பி, அதனைக் கடைப்பிடித்து வாழ வரம் வேண்டி இத்தெய்வீகத் திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

யோசுவா  மோசேவுக்கு உதவியாகவும், அவருக்குப்பின் மக்களை வழிநடத்தக்கூடிய அதிகாரத்தையும் பெற்றவர். அவர் மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்துகின்ற பணியை முதன்மையான பணியாகச் செய்தவர். ‘யாவே இறைவனுக்கு மட்டும் நானும் என் வீட்டாரும் பணி செய்வோம்’ என்று உரக்க அறிவித்தவர். அவரின் வழியில் மக்களும் ‘ஒரே கடவுளுக்குப் பணி புரிவோம்’ என்று தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்திய முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

திரு அவையின் மேன்மையையும், குடும்பத்தின் மேன்மையையும் புனித பவுல் எபேசிய மக்களுக்கு எடுத்துரைக்கிறார். எவ்வாறு திரு அவையில் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறார்களோ, அதுபோல குடும்பம் என்கிற குட்டித் திரு அவையிலும் கணவனும், மனைவியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; இருவரும் சமமான மதிப்புப் பெற வேண்டும்; அன்பு செலுத்துவதில் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எடுத்துரைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அனைத்தையும் ஆளும் இறைவா! எம் அண்டை மாநிலமான கேரளாவிலுள்ள வயநாட்டில் நடந்த நிலச்சரிவில் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு நீரே அடைக்கலமாகவும் ஆதரவாகவும் நம்பிக்கையாகவும் இருந்து காத்திட வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

2. உணவாக வந்த தெய்வமே எம் இறைவா! அன்றாடம் பசியாலும், வறுமைப் பிடியாலும் துன்பப்படுகின்ற மக்களுக்கு நாங்கள் உணவளிக்கும் வண்ணம் எங்களுக்கு நல்மனத்தைத் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3. ‘உண்மையை எடுத்துரைப்பதே என் பணி’ என்று கூறிய இறைவா! எங்கள் நாவிலிருந்து புறப்படும் வார்த்தைகள் பிறரைப் புண்படுத்தாத வண்ணம், உண்மையை மட்டும் எடுத்துரைக்கும் வரத்தைத் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன’ என்று கூறிய பேதுருவைப் போல நம்பிக்கை இழக்கும் வேளையில், உம் வார்த்தையை நம்பி வாழத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.