news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 21-ஆம் ஞாயிறு (25-08-2024)

யோசுவா 24:1-2,15-17,18; எபேசியர் 5: 21-32; யோவான் 6: 60-69

திருப்பலி முன்னுரை

நாள்தோறும் நமது காதுகளில் பல வார்த்தைகளைக் கேட்கிறோம். நன்மையான வார்த்தைகளும், கவர்ச்சியான வார்த்தைகளும், புரட்சிகரமான வார்த்தைகளும், வாழ்வை முன்நோக்கி நகர்த்தும் வார்த்தைகளும், வாழ்வைப் பின்னோக்கித் தள்ளும் வார்த்தைகளும் கேட்கிறோம். ஆனால், இறைவார்த்தை என்பது இறைவனின் இயல்பை எடுத்துரைக்கிறது; இறைவனின் குணநலனை வெளிப்படுத்துகிறது. “நமக்குப் பிடித்த இறைவார்த்தையை மட்டும் நம்பி, பிடிக்காத இறைவார்த்தையை ஒதுக்குவது இறைவார்த்தையே அல்ல” என்கிறார் புனித அகுஸ்தினார். இன்றைய நற்செய்தியில் இயேசு கூறிய வார்த்தையை நம்பாத சீடர்கள், அவருக்கு எதிராக முணுமுணுக்கிறார்கள்; அவரை விட்டு விலகிச் செல்கிறார்கள். நன்மையான காரியத்தை நம்பி வருவோரைவிட, நம்பாமல் விலகிச் சென்றவர்கள்தான் அதிகம். ‘யாரிடம் செல்வோம் இறைவா! வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன’ என்று மொழிந்த பேதுருவைப் போல இறைவார்த்தையை நம்பி வந்தவர்கள் சிலர் மட்டுமே. இந்த உலகத்தை உருவாக்கியது இறைவார்த்தை, நம் வாழ்வுக்கு விளக்காக அமைவது இறைவார்த்தை. நம்பிக்கையோடு இறைவார்த்தையை எடுத்துரைக்கும்போது பெரிய மலைகூட நகர்ந்து செல்லும். எனவே, இறைவார்த்தையை நம்பி, அதனைக் கடைப்பிடித்து வாழ வரம் வேண்டி இத்தெய்வீகத் திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

யோசுவா  மோசேவுக்கு உதவியாகவும், அவருக்குப்பின் மக்களை வழிநடத்தக்கூடிய அதிகாரத்தையும் பெற்றவர். அவர் மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்துகின்ற பணியை முதன்மையான பணியாகச் செய்தவர். ‘யாவே இறைவனுக்கு மட்டும் நானும் என் வீட்டாரும் பணி செய்வோம்’ என்று உரக்க அறிவித்தவர். அவரின் வழியில் மக்களும் ‘ஒரே கடவுளுக்குப் பணி புரிவோம்’ என்று தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்திய முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

திரு அவையின் மேன்மையையும், குடும்பத்தின் மேன்மையையும் புனித பவுல் எபேசிய மக்களுக்கு எடுத்துரைக்கிறார். எவ்வாறு திரு அவையில் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறார்களோ, அதுபோல குடும்பம் என்கிற குட்டித் திரு அவையிலும் கணவனும், மனைவியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; இருவரும் சமமான மதிப்புப் பெற வேண்டும்; அன்பு செலுத்துவதில் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எடுத்துரைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அனைத்தையும் ஆளும் இறைவா! எம் அண்டை மாநிலமான கேரளாவிலுள்ள வயநாட்டில் நடந்த நிலச்சரிவில் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு நீரே அடைக்கலமாகவும் ஆதரவாகவும் நம்பிக்கையாகவும் இருந்து காத்திட வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

2. உணவாக வந்த தெய்வமே எம் இறைவா! அன்றாடம் பசியாலும், வறுமைப் பிடியாலும் துன்பப்படுகின்ற மக்களுக்கு நாங்கள் உணவளிக்கும் வண்ணம் எங்களுக்கு நல்மனத்தைத் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3. ‘உண்மையை எடுத்துரைப்பதே என் பணி’ என்று கூறிய இறைவா! எங்கள் நாவிலிருந்து புறப்படும் வார்த்தைகள் பிறரைப் புண்படுத்தாத வண்ணம், உண்மையை மட்டும் எடுத்துரைக்கும் வரத்தைத் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன’ என்று கூறிய பேதுருவைப் போல நம்பிக்கை இழக்கும் வேளையில், உம் வார்த்தையை நம்பி வாழத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 20-ஆம் ஞாயிறு (18-08-2024)
நீமொ 9:1-6; எபே 5:15-20; யோவா 6:51-58

திருப்பலி முன்னுரை

நற்கருணை திரு அவையின் உயிர்நாடி. திரு அவையின் முழு ஆன்மிகச் செல்வமும் அதில்தான் அடங்கியுள்ளது. ஏனென்றால், நற்கருணை முழு கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆதாரமும், உச்சமும் ஆகும். திருப்பலியும் நற்கருணையும் ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாதவை. அழிந்துபோகும் உணவுக்காக உழைப்பதைவிட, அழியாத உணவுக்காக உழைப்பதே சிறந்த ஞானம். “ஞானம் பவளத்தைவிட விலைமதிப்புள்ளது; உன் அரும்பொருள் எதுவும் அதற்கு நிகராகாது” என்று நீதிமொழி தெளிவுபடுத்துகிறது. எனவே, ஞானம் என்பது இறைவனால் கொடுக்கப்பட்டது. “ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில்திறமை அனைத்தும் அவனுக்கு உண்டாகுமாறு நான் அவனை இறை ஆவியால் நிரப்பியுள்ளேன்” (விப 31:3) என்று விடுதலைப் பயண நூலில் கடவுள் விளக்கியுள்ளார். உண்மையான செபத்தாலும், நன்மையான எண்ணத்தாலும், உதவிகரமான வாழ்க்கையாலும், அழியாத நற்கருணையை உட்கொள்வதாலும் நாம் இறை ஆவியால் நிரப்பப்பட முடியும். இறை ஆவியால் நாம் ஒவ்வொருவரும் நிரம்பி, இறை ஞானத்தைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் பக்தியோடு இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

ஞானத்தையும், மதிகேட்டையும் பற்றி முதல் வாசகம் எடுத்துரைக்கின்றது. ஞானம் என்பது இங்கு ஒரு பெண்ணாக வர்ணிக்கப்படுகிறது. மதிகேடு திருவிவிலியத்தில் ஞானத்திற்கு எதிர்ப்பதமாகவும், தீயவர்களுக்கான வாழ்க்கை முறையாகவும் பார்க்கப்படுகிறது. ஞானம் கடவுளின் பண்பாகவும், கடவுளை அடைய எளிய முறையாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றபோது, மதிகேடு ஒருவரைக் கடவுளிலிருந்து விலகிச் செல்லும் எதிர்க்காரணியாகப் பார்க்கப்படுகிறது. ஞானத்தால் வாழ்நாள் கூடுகின்றது, நன்மைத் தனங்கள் பெருகுகின்றன என்ற நம்பிக்கை தரும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

எபேசியர்கள் தங்கள் நடத்தையில் கவனமாக இருக்க வேண்டும் என்று பவுல் கூறுகின்றார். இந்தக் கவனமாக இருக்கும் வாழ்வே ஞானமுள்ள வாழ்க்கை எனக் காட்டுகிறார். ஞானமற்ற வாழ்க்கை இருள் வாழ்க்கை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கிறிஸ்தவ வாழ்வு, நன்றி செலுத்தும் வாழ்வாக இருக்க வேண்டும் என்பது பவுலின் விருப்பம். மேலும், கடவுளுக்கு நன்றி செலுத்த முடியும்; இருப்பினும், அதன் ஊடகமாகக் கிறிஸ்துவே இருக்க வேண்டும் என்பதில் பவுல் ஆணித்தரமாக இருக்கிறார் என எடுத்துக்காட்டும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டு

1. ஞானம் நிறைந்த ஆண்டவரே! எங்களை வழிநடத்தும் ஆன்மிகத் தலைவர்கள், அரசியல் தலைவர்களை ஆசிர்வதித்து, அவர்களுக்கு ஞானத்தைத் தந்து, மக்களை நல்முறையில் வழிநடத்தத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

2. உயர்வான, உன்னதரான இறைவா! எங்கள் வாழ்வை உயர்வாக நினைத்து, படைப்பின் சிகரமாக இருக்கின்றோம் என்ற பெருமையில், நாங்கள் பார்க்கும் மனிதர் எல்லாரும் இறைவனின் சாயல் என்பதை ஞானத்தோடு அறிந்து செயல்பட அருளைத் தர வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

3. ‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே’ என்று கூறிய ஆண்டவரே, அழிந்து போகும் உணவுக்காக உழைக்காமல், அழியாத உணவுக்காக உழைக்க அருள்தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

4. தம்மையே தரணிக்குத் தந்த ஆண்டவரே எம் இறைவா! தம்மையே பலியாக்கி மக்கள் வாழ்வு பெற வேண்டுமென்று உழைக்கும் ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்காகவும் மன்றாடுகிறோம். அவர்களுக்கு நல்ல உடல் சுகத்தைக் கொடுத்து, இன்னும் மக்களுக்காக உழைக்க அருளைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 19-ஆம் ஞாயிறு (11-08-2024)

1அரசர்கள் 19:4-8; எபேசியர் 4:30-5,2; யோவான் 6:41-51

திருப்பலி முன்னுரை

உணவு என்பது ஓர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் உணவைக் குறிக்கிறது. நற்கருணை என்பது கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும் நம்பிக்கையாளர்கள் திருவழிபாட்டில் பெற்றுக்கொள்ளும் ஆன்மிக உணவைக் குறிக்கிறது. இது நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது மற்றும் சவால்களையும், துன்பங்களையும் தாங்குவதற்குத் தேவையான வல்லமையை அவர்களுக்கு வழங்குகிறது. மேலும், நற்கருணை நம் வாழ்வின் நம்பிக்கை உணவு. ஏனெனில், இது நம்பிக்கையாளர்களின் ஆன்மிக வாழ்க்கையை வளர்க்கிறது; ஒற்றுமையான சமூகத்தை உருவாக்குகிறது; அழியாத வாழ்வையும், மன்னிப்பையும் உறுதியளிக்கிறது; நம்பிக்கையாளர்கள் கிறிஸ்துவுடன் இணைகிறார்கள் என்பதை நினைவூட்டுகிறது. எனவே, நாம் அன்றாடம் உண்ணும் நற்கருணை, பிறரை ஒதுக்கிவைக்காமல், வெறுக்காமல் அன்பு செய்ய நம்பிக்கையைத் தூண்டும் ஆன்மிக உணவாக அமைய வரம் வேண்டி இந்தத் திருவழிபாட்டில் நம்பிக்கையோடு பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கினர் எலியா, ஈசபேல் அரசிக்கு எதிராக நீதியின் சார்பாகப் போரிடுகிறார். அவரிடமிருந்து உயிரைக் காத்துக்கொள்ள பாலைநிலத்தில் பயணம் செய்கிறார். சூரைச் செடியின் அடியில் அமர்ந்து, தான் சாகவேண்டும் என விரும்புகிறார். ஆனால், ஆண்டவர் உணவால் அவரைத் திடப்படுத்தி, எதிர்த்துப் போராடத் துணிச்சலைக் கொடுக்கும் நிகழ்வைக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்தவ வாழ்வுக்கு ஆதாரமாகவும், அடித்தளமாகவும் இருப்பவர் தூய ஆவியார். கிறிஸ்தவர்கள் இந்தத் தூய ஆவியாருக்கு உகந்த வாழ்க்கை வாழ அழைக்கப்படுகிறார்கள். அன்புதான் தூய ஆவியாரின் இயல்பு. அன்பால் இந்த உலகத்தை ஆள முடியும் என்ற சிந்தனையை ஏற்று இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டு

1. பண்பை வளர்க்கும் பரமனே எம் இறைவா! சுயநல உலகத்தில் வாழும் நாங்கள், எங்கள் விருப்பத்தைவிட, பிறரின் தேவையை அறிந்து வாழ தேவையான வரத்தைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

2. இரக்கமே உருவான இறைவா! எம்மை வழிநடத்தும் அனைத்து அரசியல் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். தங்கள் சுய நலத்தை விட்டு விட்டு மக்களின் நலனுக்காக உழைக்க முன்வர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

3. தூய்மையான உதடுகளைத் தந்த ஆண்டவரே! எம் நாவைத் தூய்மைப்படுத்தி, அடுத்தவர்களின் நன்மைத்தனத்தை அறிவிக்கக் கூடிய ஆற்றலைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம். 

4. சிறைப்பட்டோர் விடுதலை பெற வேண்டும் என்று கூறிய ஆண்டவரே, தவறாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் மனம் வருந்தி, திருந்தி வாழ வேண்டும் என்று சிறையிலிருந்து செபிக்கும் இல்லறவாசிகளைக் கண்ணோக்கி விடுதலையைத் தரவேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 18 -ஆம் ஞாயிறு (04-08-2024)

விடுதலைப் பயணம் 16:2-4.12-15; எபேசியர் 4:17.20-24; யோவான் 6:24-35

திருப்பலி முன்னுரை

தெய்வீக உணவைப் பெற்றுத் தரும் தெய்வீக விருந்துக்கு அன்போடு அனைவரையும் வரவேற்கின்றோம். ‘குருத்துவம் என்பது இயேசுவின் இதயத்தின் அன்பைப் போன்றது. குருவைப் பார்க்கும்போது இயேசுவைப் பார்ப்பதற்குச் சமம்’ என்கிறார் புனித ஜான் மரிய வியான்னி. இன்று குருக்களின் பாதுகாவலர் புனித ஜான் மரிய வியான்னியின் திருவிழாவைக் கொண்டாடுகின்றோம். குரு என்பவர் வழிபாட்டின் தலைவர் மட்டும் அல்லர்; வாழ்வின் தலைவர். வாழ்வை எவ்வாறு வாழ வேண்டுமென்று நமக்கு வழிகாட்டும் தலைவர். அவர் இயேசுவின் மீட்புத் திட்டத்தின் பங்கேற்பாளர். ஆயனாக இருந்து, மக்களைப் பாவத்திலிருந்து மீட்டு, உண்மையான வழியில், இறைவனின் வழியில் வழிநடத்தும் நல்லதொரு வழிகாட்டி. தன்னை மறுத்து, தன் வழியாக இறைவனை மக்களுக்கு வெளிக்காட்டுவது குருவின் தன்னலமற்ற பணி. “பாலைநிலத்தில் உங்களுக்கு உணவளித்தது மோசே அல்ல; என் தந்தையே” என்கிறார் இயேசு. அதுபோல, இறைவனின் திட்டத்தை நிறைவேற்றும் பணியாளர்கள் அவர்கள். “கிறிஸ்துவை யாரும் காண முடியாது; ஆனால், ஒவ்வொருவரும் குருவைப் பார்க்கிறார்கள்; அவர் மூலமாக அவர்கள் இறைவனைக் காண விரும்புகிறார்கள்; இறைவனுடைய மகத்துவம் மகத்தானது; குருக்களின் கம்பீரமும், கண்ணியமும் அளப்பரியது” என்கிறார் திருத்தந்தை இரண்டாம் யோவான். குருத்துவத்தின் மகத்துவம் உணர்ந்து, குருக்களின் பணி சிறக்கத் தேவையான அருளையும், ஆற்றலையும், வல்லமையையும் இறைவன் குருக்களுக்குத் தரவேண்டுமென்று நாம் அனைவரும் இணைந்து செபிப்போம், இறையாசீர் பெறுவோம்.

முதல் வாசக முன்னுரை

இஸ்ரயேல் மக்கள் பசியால் மாண்டு போக, அந்தப் பாலைநிலத்திற்கு அழைத்து வந்ததாக மோசேவுக்கும், ஆரோனுக்கும் எதிராகக் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கடவுளுக்கு எதிராக முறுமுறுக்கின்றார்கள். முறுமுறுத்தல் என்பது கடவுளை வசைபாடுகின்ற எதிர்மறையான, நம்பிக்கையின்மையின் அடையாளம். கடவுளுக்கு எதிரான முறுமுறுத்தலை, நம்பிக்கைக்கு எதிரான திட்டமாகவும், தண்டிக்கப்பட வேண்டிய துரோகமாகவும் விடுதலைப் பயண ஆசிரியர் பதிவு செய்கின்றார். அதனைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இரண்டாம் வாசகம் கிறிஸ்தவப் புதுவாழ்வைப் பற்றிப் பேசுகின்றது. புனித பவுல் பழைய வாழ்க்கை முறையை மாற்றச் சொல்கிறார். இந்தப் பழைய வாழ்க்கை முறை என்பது கிறிஸ்தவர்களாக மாறுவதற்கு முன் வாழ்ந்த கிரேக்க-உரோமைய வாழ்க்கை முறையைக் குறித்துக் காட்டுகின்றது. மக்களின் மனப்பாங்கு புதுப்பிக்கப்பட வேண்டும். கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பு. அவ்வியல்பு உண்மையான நீதியில் வெளிப்படுகிறது. நாமும் இறைவன் விரும்பும் புதுவாழ்வை வாழ வேண்டும் என்ற உணர்வோடு வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டு

1. வழிகாட்டும் வல்லமையான இறைவா! திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவிகள் ஆகியோரை நிறைவான ஆசிரால் நிரப்பியருளும். மக்களை ஆன்மிகத்திலும், முழுமையான வளர்ச்சியிலும் வழிநடத்தத் தேவையான அருளைத் தர இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

2. ‘நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் நிறைவு பெறுவர்’ என்று கூறிய இறைவா! அநீதி நிறைந்த உலகில் உண்மையையும், நீதியையும் அழியாமல் காக்கும் நபர்களுக்காக மன்றாடுகிறோம். நீதியைக் காக்கப் போராடும் மக்களுக்குத் தேவையான வல்லமையையும், ஆற்றலையும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. அழியாத உணவை அளித்த அன்பு ஆண்டவரே! மக்கள் பசியால் இறக்கக்கூடாது என்று உழைக்கும் மக்களுக்காக மன்றாடுகிறோம். தங்களிடம் இருப்பவற்றை இல்லாதவர்களுக்குப் பகிர்ந்தளிக்கும் மக்களுக்கு, நிலையான அழியாத மகிழ்ச்சியை அவர்களுக்குத் தந்து அருள்புரிய இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்களுக்காக இரத்தம் சிந்திய உன்னதமான இறைவா! நோயாளிகளுக்கும், விபத்தில் சிக்கிய நபர்களுக்கும், தேவையில் இருப்பவர்களுக்கும் தங்களின் இரத்தத்தைக் கொடையாகக் கொடுக்கும் நபர்களுக்காக மன்றாடுகிறோம். அவர்களின் தன்னலமற்ற மனப்பான்மையைப் போல பலரும் முன்வந்து குருதிக் கொடை தர இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 17 -ஆம் ஞாயிறு (28-07-2024)

2அர 4:42-44; எபே 4:1-6; யோவான் 6:1-15

திருப்பலி முன்னுரை

பகிரும் பண்பை வளர்க்கும் தெய்வீகத் திருப்பலிக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம். “மக் களை வரவேற்பதிலும், அவர்களுடன் உணவு, நேரம், நம் வீடுகளில் சிறிய இடத்தைப் பகிர்ந்து கொள்வதில் நாம் தாராளமாக இருக்கும்போது, நாம் இனியும் ஏழைகளாக இருப்பதில்லை என்பது மட்டுமல்ல, நாம் செல்வந்தர்களாக இருக்கிறோம்” என்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். நாம் பணத்தால் செல்வந்தராக இல்லையென்றாலும், நம்முடைய பகிர்வுத்தன்மையால் செல்வந்தராக இருக்க முடியும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். பசித்தவனுக்கு உணவைப் பகிர்ந்து கொடுப்பது அவர்களை அன்பு செய்வதற்கு இணையானது. உணவற்றவருக்கு உணவு கொடுப்பது, அவர்களுக்கு வாழ்வு கொடுப்பதற்கு இணையானது. “நான் ஆடுகள் வாழ்வைப் பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன்” என்கிறார் இயேசு. மேலும், “நானே வாழ்வு தரும் உணவு” என்று கூறி நற்கருணை வழியாகத் தம்மையே நமக்கு ஆன்மிக உணவாகக் கொடுக்கிறார். முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எலிசா உணவைப் பகிர்ந்து கொடுத்து, அனைவரும் வயிறார உண்டனர் என்பதைப் பதிவு செய்கின்றார். இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் பகிர்வதற்கு ஒற்றுமையே சிறந்த வழி என்பதை எடுத்துரைக்கிறார். நற்செய்தி வாசகத்தில் இயேசுவும் உணவை மக்களுக்குப் பகிர்ந்து கொடுக்கிறார். இந்த நிகழ்வு இயேசு மிகப்பெரிய இறைவாக்கினர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தந்தையாம் கடவுளின் செய்தித் தொடர்பாளராக இருப்பதன் மூலமும், அவருடைய செய்தியை மக்களுக்கு அறிவிப்பதன் மூலமும் இறைவாக்கினர் பங்கை நிறைவேற்றினார். இறுதியாக, உணவைப் பகிர்ந்து கொடுத்து, மக்களை நல்வழிப்படுத்தி உன்னத இறைவாக்கினராகத் திகழ்கிறார். இறைவாக்கினர் இயேசுவைப்போல பகிர்ந்து கொடுக்கும் மனநிலையை இறைவன் நமக்கு நிறைவாகத் தர வேண்டும் என்று இந்தத் திருவழிபாட்டில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கினர் எலிசா வடநாட்டில் இறைவாக்குப் பாரம்பரியத்தின் மிக முக்கியமான இடத்தைப் பிடித்தவர். எலிசா என்றால் ‘கடவுளின் மனிதர்’ என்பது பொருள். புதுமைகளைப் பொறுத்தவரையில் அதிகமான புதுமைகளை எலிசா இறைவாக்கினர் செய்திருக்கிறார். கோணிப்பையில் இருந்த வாற்கோதுமை அப்பங்களை, தானியங்களை எலிசா சொன்னபடியே அனைவரும் வயிறார உண்டனர். இந்த வல்ல செயல் எலிசாவின் புனிதமான வாழ்க்கையைக் காட்டுகிறது. எலிசா என்ற மனிதர் இயற்கையின்மீது அதிகாரம் உள்ள இறைமனிதர் என்பதற்கு முதல் வாசகமே சாட்சி. அதனை ஆர்வத்தோடு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

புனித பவுல் தன்னைக் கைதியாக அறிமுகப்படுத்துகிறார். அவர் அரசியல் கைதியாகச் சிறையில் இருக்கும் போது எழுதப்பட்ட திருமுகம் இரண்டாம் வாசகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஒரே எதிர்நோக்கு, ஒரே உடல், ஒரே ஆவி, ஒரே திருமுழுக்கு, ஒரே தந்தை என்ற உணர்வோடு அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அழைப்பை விடுக்கின்றார். ஒற்றுமையே நமது பலம்; ஒற்றுமையே நமது மிகப்பெரிய ஆயுதம் என்று எடுத்துரைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம். 

மன்றாட்டு

1. அன்பு இறைவா! ஆன்மிக வழிகாட்டியாகவும், அனுபவத்தின் ஆசானாகவும், அன்பு செய்வதில் கடல் அலை போலவும் இருக்கும் எங்கள் தாத்தா, பாட்டிக்காக மன்றாடுகிறோம், எங்களுக்கு நம்பிக்கையை ஊட்டிவளர்த்த அவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான மன நிலையையும், உடல் நிலையையும் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

2. உண்மையை எடுத்துரைக்கும் இறைவா! உண்மையை மட்டும் பேசி, உண்மையான வாழ்வு வாழும் நபர்களை ஆசீர்வதித்து, போராட்டம் நிறைந்த வாழ்வில் உண்மையாக வாழ்வது என்பது சவால் நிறைந்தது. அனைத்துச் சவால்களையும் எதிர்கொண்டு உண்மையாக வாழும் மக்களுக்கு ஆற்றலைத் தர வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

3. இயற்கையில் உறையும் இறைவா! உலக இயற்கை பாதுகாப்புத் தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், நாங்கள் அனைவரும் இயற்கையை நேசித்து, இயற்கையைப் பேணிப் பாதுகாக்கத் தேவையான அறிவையும், ஆற்றலையும், வல்லமையையும் தந்து அருள்புரிய வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

4. தம்மையே எங்களுக்கு உணவாகக் கொடுத்த எம் இறைவா! நாங்களும் எங்களிடம் இருப்பதைப் பகிர்ந்து கொடுத்து, உண்மையான இறைவனின் மக்களாக வாழ, அருள்புரிய வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.