news
ஞாயிறு தோழன்
பிப்ரவரி 9, 2025, ஆண்டின் பொதுக்காலம் 5-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 6:1-8; 1கொரி 15:1-11; லூக் 5:1-11

திருப்பலி முன்னுரை

நம்பிக்கையோடு ஆண்டவரின் கரம் பற்றி வாழ  ஆண்டின் பொதுக்காலம் ஐந்தாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. திருமுழுக்குப் பெற்ற நாம் அனைவரும் ஆண்டவருக்குள் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். இன்றைய நற்செய்தியில் சீமோன் பேதுரு இயேசுவிடம்ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறோம்என்கிறார். அப்படியே செய்து பெருந்திரளான மீன்களைப் பிடிக்கிறார். நம்முடைய வாழ்க்கையில் வரும் துன்பங்கள், துயரங்கள், நோய்கள், கடன் தொல்லைகள், புரிந்துகொள்ளாத நிலைகள் போன்ற நேரங்களில் நாம் தனியாக இல்லை; இறைவன் நம்மோடு இருக்கிறார் என்று பயணிப்போம்; அப்போது  நம்முடைய வாழ்க்கையிலும் ஏராளமான அற்புதங்களைக் காண்போம். அன்றாடம் அளவற்ற நன்மைகளைப் பெற்றுக்கொண்டே இருக்கிறோம். மனநிறைவோடு ஆண்டவருக்கு நன்றி சொல்வோம்சீமோன் பேதுரு இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய் விடும்என்கிறார். சீமோன் பேதுரு அறிக்கையிட்டது போல நமது இயலாமையை நினைத்துஆண்டவரின் பாதத்தில் அறிக்கையிட்டுச் சரணடைவோம். நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பதையெல்லாம் விடுத்து அனைத்தையும் நல்லதெனக் காண்போம்.   உலகச் செல்வங்களைவிட உன்னதச் செல்வமாகிய இயேசுவைச் சிக்கெனப் பிடித்துக்கொள்வோம். அளவில்லாத  அருள்வரங்களைக் கொடுக்க நமக்காகக் காத்துக்கொண்டிருக்கும் இறைவனிடம் நம்மையும், நம் பங்கிலுள்ள குடும்பங்களையும் ஒப்புக்கொடுத்து செபிப்போம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

எலியா தன்னுடைய குறையை உணர்கின்றார். ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்படுகின்றார். தன்னை முழுமையாக அர்ப்பணிக்கின்றார். ‘இதோ என்னை அனுப்பும்என்று சரணடைகின்றார். அழைப்பு என்பது குருக்கள், துறவியருக்கு மட்டுமல்ல; மாறாக, ஆண்டவரின் பிள்ளைகளாகிய நம் அனைவருக்குமே உரியதுஅழைப்பின், அர்ப்பணிப்பின் மகத்துவத்தைக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

தூய பவுல், ‘நான் திருத்தூதர்களிடையே மிகக் கடையவன். திருத்தூதர் என அழைக்கப் பெறத் தகுதியற்றவன்என்கிறார். இந்த மனநிலை நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். நம்முடைய அறிவால், ஆற்றலால் அல்ல; மாறாக, இறைவன் கொடுத்த அருளால்தான் வாழ்கிறோம். அவரின் அருளில் நிலைத்து, திளைத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நல்ல ஆயனே ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரையும் ஆசிர்வதியும். உம் பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்துக் கொண்ட இவர்கள் ஒவ்வொரு நாளும் உம்மீது கொண்ட நம்பிக்கையில் வளரவும், அழைத்தலின் மகத்துவம் அறிந்து காலத்தின் தேவைக்கேற்ப கருத்தாய் பணிபுரிய தேவையான ஞானத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. ஞானத்தின் ஊற்றான ஆண்டவரே! எம் நாட்டுத் தலைவர்களை ஆசிர்வதியும். ஏழை மக்களின் நல்வாழ்வுக்காகத் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து, மக்கள் நலனைக் கண்முன் கொண்டு வாழவும், போர், வறுமை, பஞ்சம் ஆகியவற்றிலிருந்து மக்களைக் காக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எங்களோடு பயணிக்கும் ஆண்டவரே! ஒவ்வொரு நாளும் நாங்கள் உம்மீது கொண்ட நம்பிக்கையில் வளரவும், அன்பும், மன்னிப்பும், மனிதநேயமும் கொண்ட வார்த்தைகளைப் பேசவும், எம் வாழ்வுக்கு ஒளியாக இருக்கும் இறைவார்த்தையைப் படித்து, சிந்தித்து அதனை வாழ்வாக்கவும் தேவையான வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அளவின்றி எம்மை அன்பு செய்யும் ஆண்டவரே! நீர் கொடுத்த இந்த வாழ்க்கைக்காக நன்றிகூர்கின்றோம். ஆலயத்தில் மட்டும் உம்மைத் தேடாமல் அடுத்தவரிலும் உம் முகம் கண்டு மகிழவும், ‘நான், ‘எனது, ‘எனக்குஎன்பதிலிருந்து விடுபடவும், இருப்பதில் நிறைவு காணவும் தேவையான வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பிப்ரவரி 2, 2025, ஆண்டின் பொதுக்காலம்; 4 ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) மலா 3:1-4; எபி 2:14-18; லூக் 2:22-40 - ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல்

திருப்பலி முன்னுரை

இன்று அன்னையாம் திரு அவை ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்த நாளைச் சிறப்பிக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு என்ற ஒளியைக் கையில் ஏந்தியவுடன், சிமியோன் மீட்பைக் கண்டுகொள்கின்றார். அவ்வாறே திருமுழுக்கு என்ற ஒளியால் நாம் ஆண்டவரின் மக்களாக  இணைக்கப்பட்டுள்ளோம். அன்றாடம் திருப்பலியின் வழியாக இயேசுவை நாம் சுவைத்துக்கொண்டு இருக்கிறோம். இயேசுவை நமது வாழ்க்கையில் வெளிப்படுத்த நாம் மேற்கொண்ட முயற்சிகள் யாவை? சிந்திப்போம். மேலும், இன்று துறவியர் தினத்தைக் கொண்டாட திரு அவை நமக்கு அழைப்பு விடுக்கிறது. திரு அவையில் பணிபுரியும் அனைத்துத் துறவியர்களையும் இறைவன் நிறைவாக ஆசிர்வதிக்கவும், பணி வாழ்வில் உடன் பயணிக்கவும், இறையழைத்தல் பெருகவும் செபிப்போம். நம் குழந்தைகளை மருத்துவராக, பொறியாளராக, விஞ்ஞானியாக, ஆசிரியராக மாற்றவேண்டும் என்று நினைப்பதோடு, அதற்காக அன்றாடம் உழைக்கின்றோம். ஆனால், நமது குழந்தைகளை அருள்பணியாளராக, அருள்சகோதரியாகப் பணிசெய்வதற்கு அனுப்ப நாம் முயற்சி எடுத்துள்ளோமாமீட்பின் ஒளியைக் கையில் ஏந்தியுள்ள நாம் ஒளியின் மக்களாக வாழ்ந்து, இயேசு என்ற ஒளியை அகத்தில் ஒளிர்வித்து, உண்மைச் சீடர்களாக வாழ வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசகம் முன்னுரை

இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன். அவர் எனக்கு முன் வழியை ஆயத்தம் செய்வார்என்கிறார் படைகளின் ஆண்டவர். நமது வாழ்வும் வார்த்தையும் எப்போதும் ஆண்டவரை அறிவிப்பதாக இருக்க வேண்டும். ஆண்டவர் எப்போதும் நம்முடன் பயணிக்கிறார் என்று கூறி, ஆண்டவரில் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

ஆண்டவர் பணியை நாம் செய்யத் துவங்கும் போது அவர் நம் அருகில் இருப்பார். அனைத்துவித மான நன்மைத்தனங்களாலும் நம்மை நிரப்புவார். நாம் கேட்பதற்கு மேலாக நமக்குத் தேவையான அருள்வரங்களைத் தந்து காத்து வழிநடத்தும் இறைவனின் பேரன்பில் திளைத்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1) அன்பு ஆண்டவரே! உமது பணிக்காக நீரே தேர்ந்துகொண்ட எம் திரு அவைத் தலைவர்களை ஆசிர்வதியும்அவர்கள் அனைவரும் அழைத்தலின் மகத்துவத்தையும் நோக்கத்தையும் அன்றாடம் அறிந்து, உமது வழியில் பயணிக்கத் தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) ஞானத்தின் ஊற்றே எம் இறைவா! எம் பங்கிற்கும் குடும்பத்திற்கும் நீர் கொடையாகக் கொடுத்த எமது குழந்தைகளுக்காக உம்மிடம் வேண்டுகின்றோம். ஒவ்வொரு நாளும் இறைப்பற்றிலும் இறைநம்பிக்கையிலும் அவர்கள் வளரவும், அவர்கள் எதிர்காலம் சிறக்கவும் தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) ஒளியின் ஊற்றே எம் இறைவா! ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்த இந்த நாளில் எங்களையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். நாங்கள் அனைவரும் உண்மை ஒளியாகிய உம்மில் வாழவும், இருளின் செயல்களைக் களைந்துவிட்டு, அன்பு, நீதி, உண்மை, நேர்மை போன்ற பண்புகளில் நாளும் வளர்ந்து சான்றுபகரத் தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4) அன்பின் இறைவா! துறவியர் தினத்தைக் கொண்டாடும் இந்த நாளில் உலகில் உள்ள அனைத்துத் துறவியரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். அனைவரையும் ஆசிர்வதியும். அவர்களுடைய பணிவாழ்வில் நாங்கள் துணையாக இருக்கவும், எமது குடும்பங்களில் உள்ள பிள்ளைகளுக்கு இறையழைத்தலை ஊக்குவிக்கவும் தேவையான வரமருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
சனவரி 26, 2025 ஆண்டின் பொதுக்காலம் 3-ஆம் ஞாயிறு - நெகே 8:2-4,5-6,8-10; 1கொரி 12:12-30; லூக் 1:1-4; 4:14-21

திருப்பலி முன்னுரை:

இயேசுவின் பணிவாழ்வில் பங்குகொண்டு, உயிரோட்டமுள்ள வாழ்வு வாழ  ஆண்டின் பொதுக்காலம் மூன்றாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு ஏழைகள்மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். ஏழைகளிடமிருந்துதான் தம்முடைய பணிவாழ்வை ஆரம்பிக்கிறார். இன்றைய நற்செய்திப் பகுதி வழியாக இயேசு இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கத்தைத் தீர்க்கமாக எடுத்துரைக்கிறார். நாமும் ஏழைகள், வறியோர், ஒதுக்கப்பட்டோர், புறக்கணிக்கப்பட்டோர், இயலாதோர் அனைவருக்கும் துணையாக இருப்போம். ஆண்டவரின் அருள்தரும் ஆண்டான இந்த யூபிலி ஆண்டிலே எவரையும் தனித்துவிடாமலும் உறவைக் கொடுப்பவர்களாகவும், சமத்துவத்தை விதைப்பவர்களாகவும், அனைவரையும் அன்பு செய்பவர்களாகவும், தேடிச்சென்று உதவுபவர்களாகவும், உண்மை உடையவர்களாகவும், கடவுளின் கருணையை நினைத்து நன்றி சொல்பவர்களாகவும், இருப்பதில்  நிறைவு கொண்டவர்களாகவும் வட்டிக்குக் கடன் கொடுக்காதவர்களாகவும் யாரையும் அடிமைப்படுத்தாதவர்களாகவும் மற்றவர்களைப் பற்றி நல்லது மட்டும் பேசுபவர்களாகவும் வாழ்வோம். அனைவரிலும் அனைத்திலும் இறைவனைக் கண்டு வாழ இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் குரு எஸ்ரா திருச்சட்ட நூலைத் திறந்தபோது மக்கள் கடவுளின் மாட்சியைத் தங்கள் நடுவில் உணர்ந்தனர். அதை வாசிக்கக் கேட்ட பொழுது அழுதார்கள் என்பதைக் கேட்கும்போது நமக்குள்ளும் ஒரு கேள்வி எழுகிறது. நற்செய்தி நூலைத் திறக்கும்போதும் அதை வாசிக்கும்போதும் இதுபோன்ற இறைப் பிரசன்னத்தை உள்ளூர உணர்கின்றோமா? ஆண்டவரின் மகிழ்வே நமது வலிமை. ஆண்டவருக்குள் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

உடலின் உறுப்புகள் பலவாயினும், உடல் ஒன்றாய் இருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். நாம் கிறிஸ்துவின் உடலாய் இருக்கிறோம். வாய் உண்ணக் கை உதவுகிறது. கால் நடக்க கண் வழி காட்டுகிறது. உடலில் எங்கே காயப்பட்டாலும் கண் அழுகிறது. பல்லுக்கும் நாவுக்கும் பகைமை என்றால் பேச்சு ஏது? உடலில் உள்ள அங்கங்கள் அனைத்தும் சங்கமத்திற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. கிறிஸ்துவின் உறுப்புகளாகச் செயல்பட்டு உறவுள்ள வாழ்வு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்:

1) இரக்கமே உருவான இறைவா! தாயாம் திரு அவையை வழிநடத்தும் எம் திரு அவைத் தலைவர்களை ஆசிர்வதியும். இறைப்பணிக்காகத் தங்களை  அர்ப்பணித்துக்கொண்ட இவர்கள்  கிறிஸ்துவின் மதிப்பீடுகளை வாழ்ந்து காட்டவும், வாழ்க்கையால் மற்றவர்களுக்குப் போதிக்கவும் தேவையான  அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) அன்பின் இறைவா! மனிதரில் எத்தகைய வேற்றுமையும் பாராமல், உலகில் உள்ள அனைவரும் முக்கியமானவர்கள் என்று கருதி சாதி, சமயம், மொழி, இனம், பொருளாதாரம், அறிவுசார்ந்த வேறுபாடுகள் அனைத்தையும்  களைந்து அனைவரோடும் இணைந்து வாழ்ந்து, ஒற்றுமையின் இறையரசைக் கட்டியெழுப்பிட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) அன்பின் இறைவா! எசாயா தன் இறை வாக்கின் வழியாக உம் திருமகன் இவ்வுலகிற்கு வந்ததன் நோக்கத்தை அறிந்து அறிவித்தது போல நாங்களும் எங்களுக்கான இறைத் திட்டத்தை ஆவியாரின் உதவியால் சிந்தித்து, தேர்ந்து தெளிந்து அதன்படி வாழ்ந்திட அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4) அன்பின் இறைவா! குடியரசு தின விழாவைக் கொண்டாடும் எம் தாய்நாட்டை ஆசிர்வதியும்தலைவர்கள் தங்களின் சுயநலப் போக்கினால் ஆட்சி செய்யாமல், பரந்துபட்ட அறிவோடு அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய ஆட்சி அமைத்திடவும், மக்கள் இன்புற்று வாழ வழிகாட்டவும் தேவையான  அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
சனவரி 19, 2025, ஆண்டின் பொதுக்காலம் 2-ஆம் ஞாயிறு (மூன்றாம் ஆண்டு) எசா 62:1-5; 1கொரி 12:4-11; யோவா 2:1-12

திருப்பலி முன்னுரை: இன்றைய நாள் இறைஇயல்பில் வாழ நமக்கு அழைப்புவிடுக்கிறது. இயேசு ஏழை, எளிய மக்களுக்காக இவ்வுலகிற்கு வந்தார். தந்தை தமக்குப் பணித்த அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றினார். இன்றைய நற்செய்தி வாசகத்தில் கானாவூர் திருமணத்தில் இயேசு தண்ணீரை திராட்சை இரசமாக மாற்றுகிறார். இதுதான் இயேசு தம்முடைய பணியைத் தொடங்கியவுடன் செய்த முதல் அருளடையாளம். திருமண விருந்தில் குறைவை நிறைவாக்கி மகிழ்ச்சியைக் கொடுக்கிறார்.  நம்முடைய வாழ்க்கை அன்பு, மன்னிப்பு, இரக்கம், உடனிருத்தல், நீதி, நேர்மை, உண்மை, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற விழுமியங்களால் நிரப்பப்படும்போது, நம்முடைய வாழ்விலும் அருஞ்செயல்கள் கட்டாயம் நடக்கும். அன்னை மரியா தன்னுடைய பிள்ளைகளின் வாழ்வில் குறிப்பறிந்து உதவி செய்பவர் என்பதற்கு இந்நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டு.  அன்னை மரியாவின் துணையை அன்றாடம்  நாடுவோம். அவர் நமக்காகத் தன்னுடைய மகனிடம் பரிந்து பேசிக்கொண்டே இருக்கிறார். ஆகவே, நமது விருப்பங்களை விடுத்து இயேசுவின் விருப்பத்தை நிறைவேற்றுவோம். இந்த யூபிலி ஆண்டிலே  நீண்ட நாள்களாக அமைதியில்லாமல் இருக்கும் குடும்பங்களுக்கு நமது உடனிருத்தலால் அமைதியைக் கொடுப்போம். அப்போது அன்னை மரியின் அரவணைப்பும், இயேசுவின் வழிகாட்டுதலும் நமக்கும், நமது பங்கிலுள்ள குடும்பங்களுக்கும் நிறைவாகக் கிடைக்கும். அத்தகைய அருள் வேண்டி இத்திருப்பலியில் பங்கெடுப்போம்!

முதல் வாசகம் முன்னுரை: கடவுள் இறைவாக்கினர் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கு எப்சிபா, பெயுலா என்ற புதிய பெயர்களைச் சூட்டி, அவர்களிடமிருந்த பழைய கறைகளைப்போக்கி மகிழ்விக்க இன்றே, இப்பொழுதே வரும் கடவுளாக வெளிப்படுகிறார். “ஆண்டவன் கையில் நீ அழகிய மணிமுடியாகத் திகழ்வாய், உன் கடவுளின் கரத்தில் அரச மகுடமாய் விளங்குவாய்என்று இஸ்ரயேல் மக்கள் மீது அளவு கடந்த அன்பு கொண்டு அவர்களுக்கு ஆசிர் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை: தூய பவுல், ‘ஆவியானவர் ஒருவரே! அவர் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான திறமைகளை அளிக்கிறார்அதைச் செயலாக்கம் செய்பவரும் அவரே. வரங்களைப் பெற்றுக்கொண்ட நாம் அதை சுயநலத்திற்காக, பெருமைக்காக, புகழுக்காகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, மற்றவர்கள் நன்மைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்என்று கூறுகின்றார். நாம் பெற்றுக் கொண்ட வரங்களின் மகத்துவம் அறிந்து வாழ அழைக் கும் இரண்டாம் வாசகத்திற்கு நாம் செவிமடுப்போம்

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள், இறைமக்கள் அனைவருக்கும் நம்பிக்கை செய்தியையும், இறைவனின் நல்வாக்கையும் எடுத்துரைக்கும் இறைவாக்கினர்களாக வாழவும், பணிவாழ்வில் இடையூறுகள் ஏற்படும்போது அழைத்தவர் கைவிடமாட்டார் என்ற உத்வேகத்தில் பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான ஆற்றலைத் தந்து வழிநடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. காத்து வழிநடத்தும் இறைவா! நீர் எங்கள்மீது கொண்டுள்ள அன்பினால் எங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ள வரங்களையும் கொடைகளையும் மற்றவர்களோடு பகிர்ந்து வாழவும், உமது மகிமைக்காக உழைக்கவும் தேவையான வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எங்களோடு வாழும் இறைவா! கானாவூர் திருமண வீட்டில் தீர்ந்துவிட்ட திராட்சை இரசம் குறித்து  அக்குடும்பத்தார்மீது அக்கறை கொண்ட உம் தாய் உம்மிடம் பரிந்துரைத்து உதவி செய்ததைப்போல நாங்களும் மற்றவர்கள் துன்பத்தைக் கண்டு  மனமுவந்து உதவி செய்திடும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. எங்களை அன்பு செய்யும் ஆண்டவரே! அன்னை மரியா கூறியஅவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்என்ற வாக்கை எமதாக்கி, அன்றாடம் இறைவார்த்தையை வாசித்து, அவை காட்டுகின்ற வழியில் நடக்கவும், இயேசுவின் அளவற்ற அன்பை நாங்கள் சுவைத்து, மற்றவர்களும் சுவைக்கச் செய்திட தேவையான வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா (மூன்றாம் ஆண்டு - 12-01- 2025) எசாயா 40:1-5,9-11; தீத்து 2:11-14;3:4-7; லூக்கா 3:15-16,21-22

திருப்பலி முன்னுரை

இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாட அன்னையாம் திரு அவை நம்மை அழைக்கிறது. இயேசுவின் யோர்தான் அனுபவம் உன்னதமானது. இயேசு அங்குத் திருமுழுக்குப் பெறும் வேளையில்என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்என்று வானத்திலிருந்து தந்தையின் குரல் கேட்கிறது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்குகிறார். இவ்வாறு தந்தை, மகன், தூய ஆவி என்ற மூவொரு இறைவனின் வல்லமையை உணர்த்தும் விழாவாக இவ்விழா இருக்கிறது. நாம் திருமுழுக்கின் வழியாக ஐந்து விதமான ஆசிர்களைப் பெற்றுள்ளோம். 1) கடவுளின் குழந்தைகளாக நாம் மாறுகிறோம், 2) மீட்புத் திட்டத்தில் பங்குபெறும் உரிமையைப் பெறுகிறோம், 3) தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்படுகிறோம், 4) ஆதிப் பாவம் கழுவப் பெற்று தூய்மையாகிறோம், 5) அகில உலகக் கத்தோலிக்கத் திரு அவையின் உறுப்பினராகிறோம். இத்தகு சிறப்பு வாய்ந்த திருமுழுக்கைப் பெற்ற நாம் ஆண்டவருக்கு நன்றி கூறுவோம். இயேசு திருமுழுக்குப் பெற்ற பிறகு ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோருக்கு விடுதலை வழங்கவும், பார்வையற்றோருக்கு பார்வைக் கொடுக்கவும், ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலையை வழங்கவும், ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் துவங்கினார். திருமுழுக்குப் பெற்ற நாமும் நம்முடன் வாழும் சகோதர சகோதரிகளுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுத்து வாழ்வோம்அப்போது நம் அனைவரையும் பார்த்துநீயே என் அன்பார்ந்த மகன் / மகள்என்று ஆண்டவர் கூறுவார். ஆண்டவரின் அன்பை அன்றாடம் அனுபவித்து, அறிவித்து வாழ வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

நம்முடன் வாழும் ஆண்டவரோடு நாம் இணைந்திருக்கும்போது, நம் வாழ்க்கையில் பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை எல்லாம் நேராக்கப்படும்; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும்; அவரது மாட்சி வெளிப்படுத்தப்படும் என்று கூறி அவரில் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசகம் முன்னுரை

வல்லமை மிக்க இறைவனின் வழிநடத்துதலையும் பராமரிப்பையும் மறந்து பாவம் செய்தபோதும் அவர் நம்மை விட்டு விலகுவதில்லைதம் இரக்கத்தை முன்னிட்டு புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும், புதுப்பிக்கும் தூய ஆவியாலும் நம்மை மீட்டுக் காத்து வருகிறார்நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீயநாட்டங்களையும் மறுத்து, கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் வாழும்போது நிலை வாழ்வைப் பெறலாம் என்று கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1) பாதுகாக்கும் ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்தும் திரு அவைத் தலைவர்களை ஆசிர்வதியும். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இறை மக்களைக் கருத்தாய் வழிநடத்தவும், நாங்களும் திரு அவை எமக்கு விடுக்கும் அழைப்பிற்குச் செவிகொடுத்து வாழவும் தேவையான வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) வழிகாட்டும் ஆண்டவரே! திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடும் நாங்கள் அனைவரும் தூய ஆவியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழவும், நீர் எமக்குக் கொடுத்துள்ள இந்த வாழ்க்கையின் மேன்மையை உணர்ந்து, ஒவ்வொரு நாளும் நன்றியுள்ள மக்களாக வாழவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) அன்பின் இறைவா! திருமுழுக்கில் ஞானப்பெற்றோராக இருந்துஎம் பிள்ளைகளை வழிநடத்துவோம்என்று வாக்குறுதி கொடுத்த நாங்கள் அனைவரும் எங்கள் குழந்தைகளை ஞானத்திலும் ஒழுக்கத்திலும் வளர்க்கவும், திருப்பலியில் தவறாது பங்கேற்கும் ஆர்வத்தை அவர்கள் மனத்தில் விதைக்கவும், தேவையான வரத்தை எமக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

4) பாசமுள்ள ஆண்டவரே! எம் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் ஆசிர்வதியும். நாங்கள் அனைவரும் திருமுழுக்கின் வழியாக ஒரே குடும்பமாக இணைக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிந்து, அனைவரையும் அன்பு செய்து நல்லுறவோடு வாழவும், பங்குத்தந்தையோடு இணைந்து பங்கு என்ற தலத் திரு அவையை வளர்த்தெடுக்கவும் தேவையான வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
ஆண்டவருடைய திருக்காட்சிப் பெருவிழா (05-01-2025) எசாயா 60:1-6, எபேசியர் 3:2-3,5-6

முன்னுரை

இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடத் திரு அவை நமக்கு அழைப்பு விடுக்கிறது. இவ்விழாவானது இயேசுவைக் கண்டு அனுபவித்து வாழவும், அவர் காட்டுகின்ற ஒளியின் வழியில் நடக்கவும் நம்மை அழைக்கிறது. ஞானிகள் எவ்வாறேனும் ஆண்டவரைக் காணவேண்டும் என்ற தாகம் கொண்டார்கள்ஆண்டவரைக் கண்டார்கள். ஆண்டவரைக் காண வேண்டும் என்ற ஏக்கம் நம் உள்ளத்தில் எழும்போது, அவரைக் காணும் பேறுபெறுவோம். ஞானிகள் தங்கள் பதவி, பணம், பட்டம் ஆகியவற்றிலிருந்து இறங்கி வந்தார்கள். இயேசுவைக் கண்டு தெண்டனிட்டு வணங்கினார்கள். நாமும் ஆண்டவர்முன் நம்மைத் தாழ்த்துவோம்; அவர்முன் நம்மை அர்ப்பணிக்கும்போது நம் வாழ்க்கையில் எக்குறையும் இருக்காது. ஞானிகளைப் போன்று நம்முடைய தேடல் எப்போதும் இயேசுவாக மட்டுமே இருக்க வேண்டும். ஞானிகள் இயேசுவுக்குத் தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப்போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு  நம் இதயப் பேழையைத் திறந்து எதைக் கொடுக்கப் போகிறோம்? அன்பையா? இரக்கத்தையாவிட்டுக்கொடுத்தலையா? மன்னிப்பையா? நல்லுறவையா? சிந்திப்போம். பிறர் இயேசுவை அறியவும் அறிவிக்கவும் நாமும் விண்மீன்களாக இருப்போம்! அத்தகைய வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசகம் முன்னுரை

ஒளி இறைவனின் அடையாளம். நம்மை விடுவிக்க நமக்காக ஒளி தோன்றியுள்ளது. ஒளி இருக்கும் இடத்தில் அச்சம், பயம், பாவம் இவற்றிற்கு இடம் இல்லை. ஆண்டவரின் மாட்சி நம்மேல் உதித்துள்ளது. துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சியும், இன்னல்கள் நீங்கி இன்பமும், குழப்பங்கள் நீங்கி நம்பிக்கையும், நோய்கள் நீங்கி வளமையும் நமக்குக் கிடைக்கும். எனவே, ஒளியின் மகத்துவத்தை உணர்ந்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

இயேசு என்ற ஒப்பற்ற செல்வத்தைச் சுவைத்தவர் தூய பவுல். ஆண்டவரின் அன்பைச் சுவைத்தவர்களால் இயேசுவை அறிவிக்காமல் இருக்க முடியாது என்பதற்குச் சிறந்த இலக்கணமும் அவரே. இன்றைய இரண்டாம் வாசகத்தில் கடவுளின் அருளால் தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பையும் அந்த மறைபொருள் தனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டதாகவும் கூறுகிறார். நாமும் இறைவெளிப்பாட்டை நமது வாழ்க்கையில் கண்டு, மறைபொருளான இயேசுவை அனுபவித்து வாழ இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. ஞானத்தின் ஊற்றே இறைவா! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் இயேசுவை அனுபவித்து அதை வாழ்க்கையால் மக்களுக்குப் போதிக்கவும், உமது பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான உடல்-உள்ள சுகத்தைத் தந்து காத்திடவும், அவர்களின் தனிமையில் உம் தூதர்களைக் கொண்டு வழிநடத்திடவும் தேவையான அருளைத் தர வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. எங்களோடு பயணிக்கும் ஆண்டவரே! எம் தாய்த் திருநாட்டை உம் பாதம் அர்ப்பணிக்கிறோம். எம் நாட்டில் பஞ்சம் பறந்திடவும், தீராத நோய்கள் அழிந்திடவும், ஏழைகள் அனைவரும் வாழ்வு பெறவும், வேற்றுமைகள் வேரறுக்கப்படவும், வன்முறை ஒழிந்து அனைவரும் மகிழ்வோடு வாழ்ந்திடவும், கொலை, கொள்ளை நீங்கி மக்கள் அனைவரும் பாதுகாப்போடு வாழ்ந்திடவும் தேவையான வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எமக்காக இம்மண்ணிற்கு வந்த ஆண்டவரே! திருக்காட்சிப் பெருவிழாவைக் கொண்டாடும் நாங்கள் அனைவரும் அடுத்தவரில் உம்மைக் காணவும், எம் நற்செயல்கள் வழியாக உம்மை வெளிப்படுத்தவும், விண்மீன் போன்று நாங்களும் அடுத்திருப்போருக்கு இயேசுவைக் காண வழிகாட்டவும் தேவையான வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. வாழ்வு வழங்கும் ஆண்டவரே! எம் குடும்பத்திலுள்ள குழந்தைகள் அனைவரையும் ஆசிர்வதியும். பெற்றோர்களாகிய நாங்கள் அவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து ஆன்மிகத்தில் அவர்களை வளர்த்தெடுக்கவும், திருவழிபாட்டு நிகழ்வுகளில் முழுமையாகப் பங்கேற்க நாங்கள் உதவிசெய்யவும்  தேவையான வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.