news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 24 -ஆம் ஞாயிறு (15-09-2024)

எசாயா 50:5-9; யாக்கோபு 2:14-18; மாற்கு 8:27-35

திருப்பலி முன்னுரை

‘யார் இந்த இயேசு?’ என்பது கேள்வியல்ல; அது ஒரு தேடல்! தம்மைப் பற்றிச் சுய ஆய்வு செய்து கொள்கிறார் நம் ஆண்டவர் இயேசு. ‘மக்கள் தம்மைப் பற்றிய சரியான புரிதலோடு இருக்கிறார்களா?’ என்ற தேடலை கேள்விகள் வழியாகக் கேட்கிறார். உண்மையான இறைமகன், பாடுகள் பல ஏற்க வேண்டும்; துன்பத்தைத் துணிந்து சுமக்க வேண்டும்; இறப்பின் வழியாகத்தான் உயிர்ப்பை அடைய முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார். தொடக்கக்காலத் திரு அவையில் இயேசுவைப் புறக்கணிக்கிறவர் தன்னுயிரை இழந்தவர் என்றும், இயேசுவை அறிக்கையிடுபவர் உயிரைக் காக்கிறவர் என்றும், இயேசுவின் பொருட்டும், அவர் நற்செய்தியின் பொருட்டும் உயிரைக் கொடுப்பவர் நிலைவாழ்வைப் பெறுபவர் என்றும் நற்செய்தியாளர் மாற்கு காட்டுகிறார். எனவே, அனைத்தையும் கொடுத்த இறைவன், நம்பிக்கையின் வழியாக வாழ்வையும் கொடுக்கிறார். இறைவன்மீது அசைக்க முடியாத நம்பிக்கைக் கொண்டு வாழ இத்தெய்வீக திருப்பலியில் வரம் வேண்டி இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் காட்டப்படும் தலைவர் பல சித்திரவதைகளைத் தன் கடவுளுக்காக ஏற்றுக்கொள்கிறார். அடிப்பதற்கு முகத்தைத் திறந்து வைத்தல் மற்றும் எச்சில்களை ஏற்றுக்கொள்ளுதல் அக்கால அரசர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாதவை; அதனையும் இந்த ஊழியர் ஏற்றுக்கொள்கிறார். இந்த அவமானங்களை எப்படி இவர் தாங்கிக் கொள்கிறார் என்றால், ‘ஆண்டவர் என்னுடன் இருக்கிறார்’ என்ற நம்பிக்கை மட்டும்தான் என்று எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

வழிபாட்டையும், வழிபாட்டுத் தலங்களையும் தாண்டி நம் நம்பிக்கை வளர வேண்டும். நம்பிக்கை என்பது கண்ணுக்குப் புலப்படாத காரியமில்லை; நம்பிக்கைக்குச் செயல் வடிவம் கொடுக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். நம்பிக்கை என்பது தொடக்கக்காலத் திரு அவையில், அதுவும் முக்கியமாக யாக்கோபின் திரு அவையில் நற்செயல்களுடன் தொடர்புபட்டிருந்தது என்பது இரண்டாம் வாசகத்தின் வழியாகப் புலப்படுகிறது. எனவே, நம்முடைய நம்பிக்கை செயல்வடிவம் பெற அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம். 

மன்றாட்டு

1. ‘உம் நம்பிக்கை உம்மை நலமாக்கும்’ என்று கூறிய ஆண்டவரே, எம் நம்பிக்கையை வளர்க்கும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவறத்தார் அனைவரையும் ஆசிர்வதித்து, நம்பிக்கையின் முன்மாதிரியாக இருக்க அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. இன்று இந்தியா முழுவதும் பொறியாளர் தினத்தைக் கொண்டாடுகிறோம். நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றும் பொறியாளருக்குத் தேவையான அறிவையும், வல்லமையையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. நம்பிக்கை செயல் வடிவம் பெற வேண்டும் என்று கூறிய இறைவா, வழிபாட்டையும், வழிபாட்டுத் தலங்களையும் தாண்டி, எங்கள் நம்பிக்கை செயல் வடிவம் பெறும் ஆற்றலைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. சொந்த நாட்டை இழந்து அகதிகளாக இருக்கும் மக்களுக்காக மன்றாடுகிறோம். உரிமையிழந்து தவிக்கும் மக்களுக்கு உரிமையான வாழ்வைத் தந்து, துன்பத்திலிருந்து இன்பமான வாழ்வைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 23 -ஆம் ஞாயிறு (08-09-2024)

எசாயா 35:4-7; யாக்கோபு 2:1-5; மாற்கு 7:31-37

திருப்பலி முன்னுரை

“இயேசுவை அடைய நாம் பயணிக்க வேண்டிய பாதை அன்னை மரியா” என்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். இன்று நம் அன்னை மரியாவின் பிறந்த நாளைக் கொண்டாடுகின்றோம். பெண் குழந்தைகளின் தினத்தையும் அனுசரிக்கின்றோம். ‘தாயின்றிச் சேயில்லை’ என்பது முன்னோர் மொழி. இறைவனின் படைக்கும் தொழிலில் பங்கேற்பவர் தாய் மட்டும்தான். இது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும். இவ்வுலகம் இயங்குவதும் இருப்பதும் தாயின் அன்பால்தான். தாயின் அன்பு தனிப்பட்ட அன்பு கிடையாது. அனைவரையும் அன்பு செய்யும் பொதுநல அன்பு. வயதான காலத்தில் கருவுற இயலாத எலிசபெத்தைச் சந்தித்து, அவருக்குப் பணிவிடை செய்தது தாயின் அன்பு. கானாவூர் திருமணத்தில் திராட்சை இரசம் இல்லை என்றதும், தானாகச் சென்று உதவி செய்ய தன் அன்பு மகனுக்கு அழைப்பு விடுத்தது தாயின் அன்பு. இறுதியாக, இவ்வுலகம் வாழ்வு பெற, மீட்படைய தன் மகனையே அர்ப்பணித்தது தாயன்பின் உச்சக்கட்டம். இன்றைய நற்செய்தியில் இயேசு தொடுதல் வழியாகக் காது கேளாதவருக்குக் காது கேட்கும் திறனைக் கொடுக்கிறார். தொடுதல் வழியாக உரிமையும் பாதுகாப்பும் அன்பும் கடத்தப்படுகின்றது. அன்னையின் பிறந்த நாளில் அன்னையைப் போல பிறரன்புச் செயல்பாடுகளில் பங்கேற்க வரம் வேண்டி, இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

தொடர் தோல்வி, ஏமாற்றம், சுமக்க முடியாத சுமையைச் சுமந்து கொண்டிருக்கும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வார்த்தையாகவும், நம்பிக்கையூட்டும் வார்த்தையாகவும் இன்றைய முதல் வாசகம் அமைந்துள்ளது. அரசர்களின் முறையற்ற அரசியல், தவறான வழிகாட்டுதல், அசிரியாவின் அச்சுறுத்தல் காரணமாக வட இஸ்ரயேல் அழிவின் நிலைக்கு வந்துவிட்டது. எனவே, ‘இறைவனின் நீதியின் முகம், மக்களை மீட்கும் தன்மை கொண்டது; எனவே, மக்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும்’ என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளுக்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

உலகம் தோன்றிய காலம்தொட்டு ஏழை- பணக்காரன் என்ற வேறுபாடு காட்டப்படுகின்றது. உலகின் பார்வை வேறு, ஆண்டவரின் பார்வை வேறு என்பதை இன்றைய இரண்டாம் வாசகம் எடுத்துரைக்கின்றது. உலகின் பார்வையில் ஏழைகளாக இருப்பவர்கள், ஆண்டவரின் பார்வையில் செல்வர்களாக இருக்கிறார்கள். அதற்குக் காரணமாக அவர்கள் கொண்டிருந்த நம் பிக்கை காட்டப்படுகிறது. நம்முடைய பார்வையும், இறைவனின் பார்வையாக இருக்க வேண்டும் என்று எடுத்துரைக்கும் இரண்டாம் வாசகத்திற்கு நம்பிக்கையோடு செவிமடுப்போம்.

மன்றாட்டு

1. அன்பையும் பண்பையும் தரும் இறைவா! எம்மோடு வாழும் சக மனிதர்களை அன்பு செய்து, அவர்களின் இன்ப, துன்பத் தருணங்களில் பங்குகொண்டு, இறை உறவில் நாங்கள் வளர தேவையான அருளைத் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

2. ஆள்பார்த்துச் செயல்படாத உன்னதமான இறைவா! நாங்கள் வாழும் சமூகத்தில் இருக்கும் பலவிதமான பிரிவினைகளை அகற்றி, குறிப்பாக ஏழை-பணக்காரன் என்ற பொருளாதார ஏற்றத்தாழ்வில்லாமல் மனிதனை மனிதத்தோடு மதிக்கும் பண்பைத் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

3. பெண்மை வாழ்வின் மேன்மை என்று வாழ்ந்த ஆண்டவரே, எம் குடும்பத்தில் இருக்கும் பெண் குழந்தைகளுக்காக மன்றாடுகிறோம். பாலின வேறுபாடின்றி அனைவருக்கும் சம உரிமை, மதிப்புக் கொடுத்து வாழ அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

4. மாற்றுத்திறனாளிகளைக் குணப்படுத்திய அன்பு இறைவா! எங்களோடு வாழும் மாற்றுத்திறனாளிகளைப் பிரிவினை பார்க்காமல், கேலி கிண்டல் செய்யாமல் அவர்களோடு அன்பாக வாழ வரம் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலம் 22 -ஆம் ஞாயிறு (01-09-2024)

இச 4:1-2,6-8; யாக் 1:17-18,21-22,27; மாற்கு 7:1-8,14-15,21-23

திருப்பலி முன்னுரை

“அரசியலமைப்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் கண்டால், அதை எரிக்கும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்” என்கிறார் இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர். மிருகத் தன்மையிலிருந்து மனிதத்தன்மைக்குக் கடந்துவர நமக்கு உதவியாக இருப்பது சட்டங்கள். நம்மை நெறிப்படுத்தவும், பிறருடன் இணக்கமான வாழ்வை வாழ உதவி செய்வதும் சட்டங்கள் மட்டும்தான். தற்காலத்தில் இயற்கையான சட்டங்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டங்கள் எனப் பலவகையான சட்டங்களை நாம் பின்பற்றி வருகிறோம். அதில், இன்றும் மிகவும் உயர்ந்து இருப்பது இறைச்சட்டம்.  துன்புறும் அனாதைகளையும், கைம்பெண்களையும் கவனிப்பதற்கும், எதிரிகளை நேசிப்பதற்கும், கறைபடியாத வாழ்வு வாழச் செய்ய உதவியாக இருப்பது இறைச்சட்டம். இன்றைய முதல் வாசகம் ‘நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம்; அதிலிருந்து எதையும் நீக்கவும் வேண்டாம்’ என்கிறது. இரண்டாம் வாசகம் இறைவார்த்தையான திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்கின்ற மக்களாக வாழ அழைப்பு கொடுக்கிறது.  மரபுகளைப் பின்பற்றி மனிதர்களைக் கைவிடக்கூடாது என்கிறது இன்றைய நற்செய்தி. எனவே, இறைச்சட்டத்தைக் கற்று, அதனைக் கடைப்பிடிக்கின்ற மக்களாக வாழ வரம் வேண்டி செபிப்போம்.

முதல் வாசக முன்னுரை

பலதரப்பட்ட இனங்களைவிட இஸ்ரயேல் இனம் சிறந்து விளங்குகிறது. காரணம், அவர்களிடத்தில் உள்ள நியமங்கள். அந்த நியமங்கள் கடவுளால் கொடுக்கப்பட்டவை. சட்டங்கள், விதிமுறைகள், நியமங்கள் அனைத்தும் மக்களை ஒழுங்குபடுத்தவும் நெறிப்படுத்தவும் கொடுக்கப்பட்டவை. அதற்கும் மேலாக, கடவுள் இஸ்ரயேல் மக்கள்மீது அளவற்ற அன்பு கொண்டுள்ளார் என்பது அவர் கொடுத்த நியமங்களில் வெளிப்படுத்தப்படுகிறது. கடவுள் கொடுத்த சட்டத்தைத் திருத்தவோ, மாற்றவோ யாருக்கும் அனுமதியில்லை. இறைவன் கொடுத்த சட்டத்தைக் கடைப்பிடிப்போர் யாவரும் ஞானமிக்கவர்கள் என்று வெளிப்படுத்தும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஒரு பொய்யைக் காப்பாற்ற பல பொய்கள் தேவைப்படும். ஆனால், உண்மையைக் காப்பாற்ற ஒரே ஓர் உண்மை மட்டும் போதும். உண்மையே இறைவன். அவரிடம் வெளிப்படும் வார்த்தையும் உண்மையே. இறைவார்த்தையை நாள்தோறும் பல்வேறு வடிவங்களில் கேட்கின்ற நாம், இறைவார்த்தையின்படி நம் வாழ்வு அமைந்திருக்கின்றதா? என்று உள்ளத்தில் கேள்வி கேட்க உதவி செய்யும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டு

1. இறைவார்த்தையை எம் உள்ளத்தில் ஊன்றிய ஆண்டவரே! வாழ்வு தரும் இறைவார்த்தையை நாள்தோறும் வாசிக்கவும், அதனைக் கடைப்பிடிக்கவும் ஆற்றலும் வல்லமையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்பையும் பண்பையும் எம்முள் விதைத்த ஆண்டவரே! உம்மைப்போல படைப்பு அனைத்தையும் அன்பு செய்யவும், அதனைப் பாதுகாக்கவும், நேசிக்கவும் தடையாய் இருக்கும் காரணிகளை அகற்றி, உம்மைப்போல் வாழ அருளைத் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தலைமுறைதோறும் ஆசிர்வதிப்பவரே எம் இறைவா! எம் பிள்ளைகளுக்காகச் செபிக்கிறோம். எம் பிள்ளைகளுக்குத் தேவையான உடல்நலனையும், மனநலனையும், நல்ல எண்ணங்களையும், இறை உணர்வையும் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. அன்பே உருவான இறைவா! நாங்கள் வாழும் பகுதியில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக மன்றாடுகிறோம். விளிம்பில் இருக்கும் மக்கள் மையத்தை நோக்கி வரத் தடையாக இருக்கும் காரணிகளை நீக்கி, சுயமரியாதையோடு வாழ அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 21-ஆம் ஞாயிறு (25-08-2024)

யோசுவா 24:1-2,15-17,18; எபேசியர் 5: 21-32; யோவான் 6: 60-69

திருப்பலி முன்னுரை

நாள்தோறும் நமது காதுகளில் பல வார்த்தைகளைக் கேட்கிறோம். நன்மையான வார்த்தைகளும், கவர்ச்சியான வார்த்தைகளும், புரட்சிகரமான வார்த்தைகளும், வாழ்வை முன்நோக்கி நகர்த்தும் வார்த்தைகளும், வாழ்வைப் பின்னோக்கித் தள்ளும் வார்த்தைகளும் கேட்கிறோம். ஆனால், இறைவார்த்தை என்பது இறைவனின் இயல்பை எடுத்துரைக்கிறது; இறைவனின் குணநலனை வெளிப்படுத்துகிறது. “நமக்குப் பிடித்த இறைவார்த்தையை மட்டும் நம்பி, பிடிக்காத இறைவார்த்தையை ஒதுக்குவது இறைவார்த்தையே அல்ல” என்கிறார் புனித அகுஸ்தினார். இன்றைய நற்செய்தியில் இயேசு கூறிய வார்த்தையை நம்பாத சீடர்கள், அவருக்கு எதிராக முணுமுணுக்கிறார்கள்; அவரை விட்டு விலகிச் செல்கிறார்கள். நன்மையான காரியத்தை நம்பி வருவோரைவிட, நம்பாமல் விலகிச் சென்றவர்கள்தான் அதிகம். ‘யாரிடம் செல்வோம் இறைவா! வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம்தானே உள்ளன’ என்று மொழிந்த பேதுருவைப் போல இறைவார்த்தையை நம்பி வந்தவர்கள் சிலர் மட்டுமே. இந்த உலகத்தை உருவாக்கியது இறைவார்த்தை, நம் வாழ்வுக்கு விளக்காக அமைவது இறைவார்த்தை. நம்பிக்கையோடு இறைவார்த்தையை எடுத்துரைக்கும்போது பெரிய மலைகூட நகர்ந்து செல்லும். எனவே, இறைவார்த்தையை நம்பி, அதனைக் கடைப்பிடித்து வாழ வரம் வேண்டி இத்தெய்வீகத் திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

யோசுவா  மோசேவுக்கு உதவியாகவும், அவருக்குப்பின் மக்களை வழிநடத்தக்கூடிய அதிகாரத்தையும் பெற்றவர். அவர் மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்துகின்ற பணியை முதன்மையான பணியாகச் செய்தவர். ‘யாவே இறைவனுக்கு மட்டும் நானும் என் வீட்டாரும் பணி செய்வோம்’ என்று உரக்க அறிவித்தவர். அவரின் வழியில் மக்களும் ‘ஒரே கடவுளுக்குப் பணி புரிவோம்’ என்று தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்திய முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

திரு அவையின் மேன்மையையும், குடும்பத்தின் மேன்மையையும் புனித பவுல் எபேசிய மக்களுக்கு எடுத்துரைக்கிறார். எவ்வாறு திரு அவையில் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறார்களோ, அதுபோல குடும்பம் என்கிற குட்டித் திரு அவையிலும் கணவனும், மனைவியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்; இருவரும் சமமான மதிப்புப் பெற வேண்டும்; அன்பு செலுத்துவதில் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எடுத்துரைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அனைத்தையும் ஆளும் இறைவா! எம் அண்டை மாநிலமான கேரளாவிலுள்ள வயநாட்டில் நடந்த நிலச்சரிவில் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு நீரே அடைக்கலமாகவும் ஆதரவாகவும் நம்பிக்கையாகவும் இருந்து காத்திட வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

2. உணவாக வந்த தெய்வமே எம் இறைவா! அன்றாடம் பசியாலும், வறுமைப் பிடியாலும் துன்பப்படுகின்ற மக்களுக்கு நாங்கள் உணவளிக்கும் வண்ணம் எங்களுக்கு நல்மனத்தைத் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

3. ‘உண்மையை எடுத்துரைப்பதே என் பணி’ என்று கூறிய இறைவா! எங்கள் நாவிலிருந்து புறப்படும் வார்த்தைகள் பிறரைப் புண்படுத்தாத வண்ணம், உண்மையை மட்டும் எடுத்துரைக்கும் வரத்தைத் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடம் தானே உள்ளன’ என்று கூறிய பேதுருவைப் போல நம்பிக்கை இழக்கும் வேளையில், உம் வார்த்தையை நம்பி வாழத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 20-ஆம் ஞாயிறு (18-08-2024)
நீமொ 9:1-6; எபே 5:15-20; யோவா 6:51-58

திருப்பலி முன்னுரை

நற்கருணை திரு அவையின் உயிர்நாடி. திரு அவையின் முழு ஆன்மிகச் செல்வமும் அதில்தான் அடங்கியுள்ளது. ஏனென்றால், நற்கருணை முழு கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆதாரமும், உச்சமும் ஆகும். திருப்பலியும் நற்கருணையும் ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாதவை. அழிந்துபோகும் உணவுக்காக உழைப்பதைவிட, அழியாத உணவுக்காக உழைப்பதே சிறந்த ஞானம். “ஞானம் பவளத்தைவிட விலைமதிப்புள்ளது; உன் அரும்பொருள் எதுவும் அதற்கு நிகராகாது” என்று நீதிமொழி தெளிவுபடுத்துகிறது. எனவே, ஞானம் என்பது இறைவனால் கொடுக்கப்பட்டது. “ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில்திறமை அனைத்தும் அவனுக்கு உண்டாகுமாறு நான் அவனை இறை ஆவியால் நிரப்பியுள்ளேன்” (விப 31:3) என்று விடுதலைப் பயண நூலில் கடவுள் விளக்கியுள்ளார். உண்மையான செபத்தாலும், நன்மையான எண்ணத்தாலும், உதவிகரமான வாழ்க்கையாலும், அழியாத நற்கருணையை உட்கொள்வதாலும் நாம் இறை ஆவியால் நிரப்பப்பட முடியும். இறை ஆவியால் நாம் ஒவ்வொருவரும் நிரம்பி, இறை ஞானத்தைப் பெற்றுக்கொள்ள இத்திருப்பலியில் பக்தியோடு இணைவோம்.

முதல் வாசக முன்னுரை

ஞானத்தையும், மதிகேட்டையும் பற்றி முதல் வாசகம் எடுத்துரைக்கின்றது. ஞானம் என்பது இங்கு ஒரு பெண்ணாக வர்ணிக்கப்படுகிறது. மதிகேடு திருவிவிலியத்தில் ஞானத்திற்கு எதிர்ப்பதமாகவும், தீயவர்களுக்கான வாழ்க்கை முறையாகவும் பார்க்கப்படுகிறது. ஞானம் கடவுளின் பண்பாகவும், கடவுளை அடைய எளிய முறையாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றபோது, மதிகேடு ஒருவரைக் கடவுளிலிருந்து விலகிச் செல்லும் எதிர்க்காரணியாகப் பார்க்கப்படுகிறது. ஞானத்தால் வாழ்நாள் கூடுகின்றது, நன்மைத் தனங்கள் பெருகுகின்றன என்ற நம்பிக்கை தரும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

எபேசியர்கள் தங்கள் நடத்தையில் கவனமாக இருக்க வேண்டும் என்று பவுல் கூறுகின்றார். இந்தக் கவனமாக இருக்கும் வாழ்வே ஞானமுள்ள வாழ்க்கை எனக் காட்டுகிறார். ஞானமற்ற வாழ்க்கை இருள் வாழ்க்கை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். கிறிஸ்தவ வாழ்வு, நன்றி செலுத்தும் வாழ்வாக இருக்க வேண்டும் என்பது பவுலின் விருப்பம். மேலும், கடவுளுக்கு நன்றி செலுத்த முடியும்; இருப்பினும், அதன் ஊடகமாகக் கிறிஸ்துவே இருக்க வேண்டும் என்பதில் பவுல் ஆணித்தரமாக இருக்கிறார் என எடுத்துக்காட்டும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டு

1. ஞானம் நிறைந்த ஆண்டவரே! எங்களை வழிநடத்தும் ஆன்மிகத் தலைவர்கள், அரசியல் தலைவர்களை ஆசிர்வதித்து, அவர்களுக்கு ஞானத்தைத் தந்து, மக்களை நல்முறையில் வழிநடத்தத் தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

2. உயர்வான, உன்னதரான இறைவா! எங்கள் வாழ்வை உயர்வாக நினைத்து, படைப்பின் சிகரமாக இருக்கின்றோம் என்ற பெருமையில், நாங்கள் பார்க்கும் மனிதர் எல்லாரும் இறைவனின் சாயல் என்பதை ஞானத்தோடு அறிந்து செயல்பட அருளைத் தர வேண்டுமென்று ஆண்டவரே, உம்மை மன்றாடுகிறோம்.

3. ‘விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே’ என்று கூறிய ஆண்டவரே, அழிந்து போகும் உணவுக்காக உழைக்காமல், அழியாத உணவுக்காக உழைக்க அருள்தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

4. தம்மையே தரணிக்குத் தந்த ஆண்டவரே எம் இறைவா! தம்மையே பலியாக்கி மக்கள் வாழ்வு பெற வேண்டுமென்று உழைக்கும் ஒவ்வொரு நல்ல உள்ளங்களுக்காகவும் மன்றாடுகிறோம். அவர்களுக்கு நல்ல உடல் சுகத்தைக் கொடுத்து, இன்னும் மக்களுக்காக உழைக்க அருளைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.
news
ஞாயிறு தோழன்
பொதுக்காலத்தின் 19-ஆம் ஞாயிறு (11-08-2024)

1அரசர்கள் 19:4-8; எபேசியர் 4:30-5,2; யோவான் 6:41-51

திருப்பலி முன்னுரை

உணவு என்பது ஓர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் உணவைக் குறிக்கிறது. நற்கருணை என்பது கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும் நம்பிக்கையாளர்கள் திருவழிபாட்டில் பெற்றுக்கொள்ளும் ஆன்மிக உணவைக் குறிக்கிறது. இது நம்பிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது மற்றும் சவால்களையும், துன்பங்களையும் தாங்குவதற்குத் தேவையான வல்லமையை அவர்களுக்கு வழங்குகிறது. மேலும், நற்கருணை நம் வாழ்வின் நம்பிக்கை உணவு. ஏனெனில், இது நம்பிக்கையாளர்களின் ஆன்மிக வாழ்க்கையை வளர்க்கிறது; ஒற்றுமையான சமூகத்தை உருவாக்குகிறது; அழியாத வாழ்வையும், மன்னிப்பையும் உறுதியளிக்கிறது; நம்பிக்கையாளர்கள் கிறிஸ்துவுடன் இணைகிறார்கள் என்பதை நினைவூட்டுகிறது. எனவே, நாம் அன்றாடம் உண்ணும் நற்கருணை, பிறரை ஒதுக்கிவைக்காமல், வெறுக்காமல் அன்பு செய்ய நம்பிக்கையைத் தூண்டும் ஆன்மிக உணவாக அமைய வரம் வேண்டி இந்தத் திருவழிபாட்டில் நம்பிக்கையோடு பங்கேற்போம்.

முதல் வாசக முன்னுரை

இறைவாக்கினர் எலியா, ஈசபேல் அரசிக்கு எதிராக நீதியின் சார்பாகப் போரிடுகிறார். அவரிடமிருந்து உயிரைக் காத்துக்கொள்ள பாலைநிலத்தில் பயணம் செய்கிறார். சூரைச் செடியின் அடியில் அமர்ந்து, தான் சாகவேண்டும் என விரும்புகிறார். ஆனால், ஆண்டவர் உணவால் அவரைத் திடப்படுத்தி, எதிர்த்துப் போராடத் துணிச்சலைக் கொடுக்கும் நிகழ்வைக் கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்தவ வாழ்வுக்கு ஆதாரமாகவும், அடித்தளமாகவும் இருப்பவர் தூய ஆவியார். கிறிஸ்தவர்கள் இந்தத் தூய ஆவியாருக்கு உகந்த வாழ்க்கை வாழ அழைக்கப்படுகிறார்கள். அன்புதான் தூய ஆவியாரின் இயல்பு. அன்பால் இந்த உலகத்தை ஆள முடியும் என்ற சிந்தனையை ஏற்று இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டு

1. பண்பை வளர்க்கும் பரமனே எம் இறைவா! சுயநல உலகத்தில் வாழும் நாங்கள், எங்கள் விருப்பத்தைவிட, பிறரின் தேவையை அறிந்து வாழ தேவையான வரத்தைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

2. இரக்கமே உருவான இறைவா! எம்மை வழிநடத்தும் அனைத்து அரசியல் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். தங்கள் சுய நலத்தை விட்டு விட்டு மக்களின் நலனுக்காக உழைக்க முன்வர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.

3. தூய்மையான உதடுகளைத் தந்த ஆண்டவரே! எம் நாவைத் தூய்மைப்படுத்தி, அடுத்தவர்களின் நன்மைத்தனத்தை அறிவிக்கக் கூடிய ஆற்றலைத் தர வேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம். 

4. சிறைப்பட்டோர் விடுதலை பெற வேண்டும் என்று கூறிய ஆண்டவரே, தவறாகக் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மற்றும் மனம் வருந்தி, திருந்தி வாழ வேண்டும் என்று சிறையிலிருந்து செபிக்கும் இல்லறவாசிகளைக் கண்ணோக்கி விடுதலையைத் தரவேண்டுமென்று இறைவா, உம்மை மன்றாடுகிறோம்.