news
உலக செய்திகள்
ஆசிய ஆயர் பேரவையின் முக்கியப் பொறுப்பில் அமராவதி ஆயர் மால்கம் செக்வேரா!

இந்தியத் திரு அவைக்குப் பெருமை சேர்க்கும் வகையில், அமராவதி மறைமாவட்ட ஆயர் மேதகு மால்கம் செக்வேரா, ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) சமூகத் தொடர்பு பணியகத்தின் (OSC) ஆயர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். பாங்காக் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த அமைப்பில், இவரது நியமனம் உள்ளூர் மற்றும் இந்தியத் திரு அவைக்குக் கிடைத்த ஒரு நற்பேறாகக் கருதப்படுகிறது.

தனது புதிய பொறுப்புக் குறித்து ஆயர் மால்கம் கூறுகையில், “இந்தப் பெருமை எனது அமராவதி மறைமாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. இறைவனின் அளப்பரிய ஆசிகளுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடவுளின் வழிகாட்டுதலில் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை உண்மையுடன் நிறைவேற்றப் பாடுபடுவேன்என்றார். ஆயரின் இந்தப் பணி ஆசியத் திரு அவையில் புதிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

news
உலக செய்திகள்
“போர் ஒருபோதும் தீர்வாகாது” - ஈராக் கர்தினால் சாக்கோ

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், “போர் என்பது தீர்வாகாது; தூதரகப் பேச்சு வார்த்தைகளே சிக்கல்களைத் தீர்க்கும்என்று பாக்தாத் கல்தேய கத்தோலிக்கத் திரு அவையின் தலைவரான கர்தினால் லூயிஸ் இரபேல் சாக்கோ தெரிவித்துள்ளார். கடந்த 2003-ஆம் ஆண்டு நிகழ்ந்த படையெடுப்பிற்குப் பிந்தைய குழப்பங்களை ஈராக் ஏற்கெனவே அனுபவித்துள்ளதை நினைவுகூர்ந்த இவர், தற்போதைய சூழல் மீண்டும் மக்களைப் பேரழிவிற்கு இட்டுச்செல்லும் என எச்சரித்துள்ளார். அமைதிக்காகத் திருத்தந்தை லியோ மற்றும் மகா அயதுல்லா அல்-சிஸ்தானி ஆகியோர் காட்டிய சகோதரத்துவப் பாதையைப் பின்பற்றுமாறு அனைத்து மதத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ள இவர், கிறித்தவர்கள் ஒவ்வொரு ஞாயிறு திருப்பலியிலும் அமைதிக்காகச் செபிக்க வேண்டுமென்றும், முசுலிம் தலைவர்கள் வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

news
உலக செய்திகள்
“ஆயுதங்கள் இன்றி அமைதியைத் தேடுங்கள்”- திருத்தந்தை லியோ

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றங்கள் குறித்து செய்தியாளர்களிடம் உரையாற்றிய திருத்தந்தை, அமைதிக்காக உழைக்கவும், பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் மீண்டும் ஒருமுறை உலகளாவிய சமூகத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளார். “அமைதிக்காக இறைவேண்டல் செய்யுங்கள், வெறுப்பைக் குறையுங்கள்; உலகில் வெறுப்பு உணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதுஎன்று வேதனையுடன் தெரிவித்த திருத்தந்தை, “ஆயுதங்கள் மூலமாகவோ அல்லது பரஸ்பர மிரட்டல்கள் மூலமாகவோ ஒருபோதும் நிலையான அமைதியைக் கட்டியெழுப்ப முடியாதுஎன்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை நினைவுபடுத்திய அவர், “ஆயுதங்கள் அழிவையும் துயரத்தையும் மட்டுமே விதைக்கும். நேர்மையான மற்றும் பொறுப்புள்ள பேச்சுவார்த்தைகள் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வாகும்என்றார்.

news
உலக செய்திகள்
“குவாதலூப்பே அன்னை, நற்செய்திப் பணிக்கான ஒரு சிறந்த முன்மாதிரி” - திருத்தந்தை லியோ

மெக்சிகோ நகரில் பிப்ரவரி 24 முதல் 26 வரை நடைபெற்ற குவாதலூப்பே நிகழ்வு குறித்த இறையியல் மாநாட்டிற்குத் திருத்தந்தை லியோ சிறப்புச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், குவாதலூப்பே அன்னையை நற்செய்தியைப் பண்பாட்டு மயமாக்குவதற்கான மிகச்சிறந்த முன்மாதிரியாக அவர் முன்னிறுத்தியுள்ளார். 2031-ஆம் ஆண்டுடன் குவாதலூப்பே அன்னை காட்சியளித்த 500 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இம்மாநாடு நடத்தப்படுகிறது. பண்பாட்டுமயமாக்கல் என்பது ஒரு கலாச்சாரத்தைப் புனிதப்படுத்துவதோ அல்லது புறக்கணிப்பதோ அல்ல; மாறாக, அந்தக் கலாச்சாரத்தினூடாகக் கிறிஸ்துவைச் சந்திப்பதே ஆகும் என்று திருத்தந்தை விளக்கியுள்ளார். நவீன மற்றும் பன்முகத்தன்மை கொண்ட உலகில், நம்பிக்கையைப் பகிர மறைக்கல்விப் பணி முக்கியமானது என்றும், சவால்களை எதிர்கொள்ள முதிர்ந்த சீடத்துவம் அவசியமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

news
உலக செய்திகள்
260 பேரைப் பலிகொண்ட தற்கொலைப்படை தாக்குதல்! - சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கக் கோரியது இலங்கைத் திரு அவை!

இலங்கையில் 2019-ஆம் ஆண்டு தற்கொலைப்படை நடத்திய தாக்குதலில் சுமார் 260 பேர் உயிரிழந்த நிலையில், இத்தனை ஆண்டுகள் கடந்தும் நியாயம் கிடைக்கவில்லை எனவும், இதனை விசாரிக்க, சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கக் கோரியும் அந்நாட்டுத் திரு அவை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம், நீர்கொழும்பில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயம், மட்டக்களப்பில் உள்ள சியோன் ஆலயம் மற்றும் மூன்று சொகுசு விடுதிகள் மீதும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உள்பட சுமார் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் நீதியை எதிர்பார்த்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களும், கத்தோலிக்கத் திரு அவையும், இந்த நாடும் காத்திருக்கிறது. ஏனெனில், தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம். இந்த வழக்கின் விசாரணைக்குச் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கவேண்டும் எனவும், உயிரிழந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க கத்தோலிக்கத் திரு அவை தொடர்ந்து போராடும் எனவும் ரோஹன் சில்வா தெரிவித்துள்ளார்.

news
உலக செய்திகள்
சிறுமலரின் சிறு வழி! (வாழ்த்துச் செய்தி)

சிறுமலர் தெரேசா அவர்கள் புனிதராக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவடையும் இந்த மகிழ்ச்சிகரமான தருணத்தில், அவர் உலகிற்கு வெளிப்படுத்திய புனிதத்திற்கான, ஆழமான ஆனால் எளிமையான பாதையை - ‘சிறுவழியைநாம் நினைவுகூர்கிறோம்.

ஒரு நூற்றாண்டு கடந்தாலும், சிறுமலர் தெரேசா அவர்களின் அன்பின் நறுமணம் உலகம் முழுவதும் பரவிக்கொண்டே இருக்கிறது. அன்றாட வாழ்வின் மறைமுகமான தருணங்களில்தான் புனிதம் மலர்கிறது என்பதை அவர் கற்றுக்கொடுத்தார். மென்மையான சிரிப்பில், பொறுமையான வார்த்தையில், அமைதியான செபத்தில், ஒவ்வொரு செயலின் பின்புலத்தில் உள்ள அன்பான எண்ணத்தில் புனிதம் மலர்கிறது.

அவர் உலகத்தின் பார்வையில் மகத்தான, வெளிப்படையாகப் பெரிய வீரச் செயல்களைச் செய்யவில்லை; ஆனால், கடவுளுடனான ஆழமான உறவுக்கு ஒரு புரட்சிகரமான, எல்லாரும் அணுகக்கூடிய புதிய பாதையை வெளிப்படுத்தினார். புனிதம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கே உரியது அல்ல; மாறாக, ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட அழைப்பு! நம் அன்றாட வாழ்வின் சிறு சிறு நிகழ்வுகளில் நிறைவேற்றக்கூடியது என்று அவர் நமக்குக் கற்றுக்கொடுத்தார்.

இன்று மகத்தான செயல்கள் மற்றும் சிக்கலான சவால்களால் மூழ்கியிருக்கும் இவ்வுலகில், புனித சிறுமலர் தெரேசாவின் செய்தி நம் ஒவ்வொருவருக்கும் குணமளிக்கும் மருந்தும் வழிகாட்டும் விளக்குமாகும். இந்தச்சிறு வழிகள்மூலமே கடவுளையும் அயலாரையும் நேசிக்க வேண்டும் என்று இறைவன் நமக்குக் கொடுத்த அழைப்பை நாம் உண்மையிலேயே வாழ முடியும். நமது சாதாரண வாழ்க்கையை அசாதாரண பக்திச் செயல்களாக மாற்றமுடியும்.

புனித தெரேசா தன்னை ஒரு சிறு குழந்தையாகக் கருதினார். எனவே, அவளால் தனியாகச் செங்குத்தான படிக்கட்டுகளில் ஏற முடியாது என்பதை உணர்ந்து, அவள் இயேசுவின் கரங்களை மின்தூக்கியாக (Lift) தேர்ந்தெடுத்தாள். இந்த ஆழமான எளிமை, கடவுளின் அன்பு நம்மை உயர்த்தும் என்ற நம்பிக்கையுடன், நமது சிறுமையையும் பலவீனத்தையும் ஏற்றுக்கொள்ள நம்மை ஊக்குவிக்கிறது.

இந்தச் சிறந்த புனிதரிடமிருந்து நாம் அனைவரும் நமது சிறுமையைத் தழுவிக்கொள்ளவும், கடவுளின் மாறாத அன்பில் முழுமையாக நம்பிக்கை கொள்ளவும், புனிதத்திற்கான பாதையில் நடக்கவும் கற்றுக்கொள்வோம்.