news
உலக செய்திகள்
111-வது புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினம்

2025-ஆம் ஆண்டிற்கான உலகப் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தினத்திற்கான மையக் கருத்தாகபுலம்பெயர்ந்தோர், எதிர்நோக்கின் மறைப்பணியாளர்கள்என்பதைத் திருத்தந்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

மார்ச் 3, 2025 அன்று அவர் வெளியிட்ட குறுஞ்செய்தியில், அக்டோபர் மாதம் 4, 5 ஆகிய நாள்களில் யூபிலி நாள் என இந்தத் தினம் சிறப்பிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். போர்கள், மோதல்கள், துன்புறுத்தல்கள் மற்றும் பொருளாதாரக் காரணங்களால் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை நினைவு கூர்ந்து அவர்களுக்காகச் செபிக்க வேண்டும் என்பதற்காக 1914-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

புலம்பெயர்ந்தோர் தங்கள் வாழ்வில் கடவுளை நம்பி, எதிர்நோக்கின் சான்றுகளாக உள்ளனர் என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

news
உலக செய்திகள்
வத்திக்கான் நிர்வாகத் தலைவராக அருள்சகோதரி!

வத்திக்கான் நகர உயர்மட்ட நிர்வாகத்தின் பொதுச் செயலராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் அருள்சகோதரி Raffaella Petrini அவர்களை வத்திக்கான் மாநிலத்திற்கான திருப்பீட ஆணையத்தின் தலைவராகவும், நகர நிர்வாகத் துறைத் தலைவராகவும் திருத்தந்தையால் பணியமர்த்தப் பட்டுள்ளார். Francesca di Giovanni, Nathalie Becquart, Alessandra Smerilli ஆகிய அருள்சகோதரிகளும், Barbara Jatta, Natasa Govekar, Cristiane Murray போன்ற பெண் பொதுநிலையினரும் திருத்தந்தையால் முக்கியப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

news
உலக செய்திகள்
இணக்கமான சகவாழ்வே ஆன்மிகத்தின் அடித்தளம்

செனகலில் நடைபெற்ற 33-வது இஸ்லாமியக் கூட்டத்தில் உரையாற்றிய பேராயர் வால்டிமர் ஸ்டெயின்ஸ்லா, “கடவுளின் பெயரால் நாம் எப்போதும் ஒன்றுபட வேண்டும்; பிரிக்கப்படக் கூடாதுஎன்று திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டதுடன், ஒவ்வொரு மத நம்பிக்கையும், வெவ்வேறு அணிகளாக இருந்தாலும், மக்களை ஒன்றிணைக்கும் பணியைத் தன்னகத்தே கொண்டுள்ளன என்றார். மேலும், “அன்பும் நல்லிணக்கமும் உறவுகளைத் தக்கவைக்கும் மதிப்புகளாக இருக்க வேண்டும்என்றும் குறிப்பிட்டுள்ளார்.

news
உலக செய்திகள்
அமைதியைக் கட்டியெழுப்புவோம்! பேராயர் பால் ரிச்சர்ட் அழைப்பு

பிப்ரவரி 7 அன்று உரோம் நகரில் நடந்த மாநாட்டில், “மனித மாண்பு மற்றும் சமூகத்தின் அடிப்படையிலான கொள்கைகளைக் காப்பதும், ஒற்றுமை மற்றும் ஒழுங்கை உருவாக்குவதும் அவசியம்என்று கூறிய பேராயர் பால் ரிச்சர்ட் காலகர், “அமைதியைக் கட்டியெழுப்புவதற்கு நீதி மற்றும் தொண்டு அடிப்படையில் செயல்பட வேண்டும்; அமைதிக்கான துணிவு என்பது வெறும் போர் நிறுத்தத்தை மட்டும் நாடுவது அல்ல; மோதல்களுக்குக் காரணமான விவாதங்களை நிராகரிப்பதுஎன்றும் தெரிவித்தார்.

news
உலக செய்திகள்
‘சையத்’ விருது பெற்றவர்கள்!

உலகின் பல துன்பங்களுக்கான உதவி மற்றும் பராமரிப்பைச் செய்து வரும்World Central Kitchenஅமைப்பு, கரீபியன் நாட்டின் பிபர்டாஸ் பிரதமர் மியா மோட்லி மற்றும் எத்தியோப்பிய-அமெரிக்க 15 வயதான ஹேமன் பெக்கேல் ஆகியோருக்குசையத்விருது வழங்கப்படுகிறது. இந்த விருது 2019 -இல் திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் அல்அஸ்ஹார் தலைவரின் வரலாற்றுச் சிறப்பாகக் கையெழுத்திடப்பட்டமனித உடன் பிறந்த உணர்வு நிலைஅறிகுறியின் மகத்துவத்தை உள்ளடக்கி உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பினால் கடந்த பத்தாண்டுகளில் உலகெங்கிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 கோடிக்கும் மேல் உணவு வழங்கப்பட்டுள்ளது. மியா மோட்லி, காலநிலை மாற்றத்திற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளுக்காகப் பாராட்டப்படுகிறார். ஹேமன் பெக்கேல், தோல் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் ஒரு மலிவு சோப்பைக் கண்டுபிடித்து உலகத்துக்கு முன்னோடி ஆகியுள்ளார். விருது பிப்ரவரி 4 அன்று அபுதாபியில் வழங்கப்பட்டது.

news
உலக செய்திகள்
குழந்தைகளுக்கான அப்போஸ்தலிக்கத் தூது மடல்

திருத்தந்தை பிரான்சிஸ், குழந்தைகளுக்கான அப்போஸ்தலிக்க அறிவுரைத் தூது மடல் ஒன்றை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். குழந்தைகள் கடும் துயர், ஏழ்மை, போர் மற்றும் கல்வி பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். வத்திக்கானில் நடைபெற்ற உலகக் குழந்தைகள் உரிமைகளுக்கான பன்னாட்டு கருத்தரங்கின் இறுதியில், காசாவில் வாழும் குழந்தைகளின் துயர நிலைகளும், 96% குழந்தைகள் தங்கள் சாவு எந்நேரமும் நிகழக்கூடும் என்று அஞ்சும் நிலையும் பங்கேற்பாளர்களால் பகிரப்பட்டு, உலகம் இதற்குப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. கருத்தரங்கின் இறுதியில், குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த எட்டு இலட்சியங்களை உள்ளடக்கிய ஒப்பந்தத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் மற்றும் உலகத் தலைவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.