news
உலக செய்திகள்
இறைவனில் இணைந்த ஏழைகளின் திருத்தூதர்

குஸ்தாவோ குத்தியரஸ்! (Gustavo Gutiérrez-Merino Díaz OP)

விடுதலை இறையியலின் தந்தை (Father of Liberation Theology) என்று கருதப்படும் டொமினிகன் அருள்பணியாளர் குஸ்தாவோ குத்தியரஸ் (Gustavo Gutiérrez-Merino Díaz OP) அவர்கள் கடந்த அக்டோபர் 22 -ஆம் நாள் தன்னுடைய 96-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவர் 1928 -ஆம் ஆண்டு பெரு நாட்டில் பிறந்தவர். முதலில் மருத்துவம் படித்த பிறகு தத்துவம், உளவியல், இறையியல் பயின்றார். லிமாவில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர், இலத்தீன் அமெரிக்கா முழுவதும் மக்கள் எதிர்கொள்ளும் சமூகச் சவால்களில் கவனம் செலுத்தினார். இலத்தீன் அமெரிக்க விடுதலை இறையியலின் நிறுவுநர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் ஒரு பெருவியன் மெய்யியலாளர் மற்றும் கத்தோலிக்க இறையியலாளர்.

1971-ஆம் ஆண்டு வெளியானவிடுதலை இறையியல் (A Theology of Liberation) எனும் இவரது நூல் விடுதலை இறையியலின் உருவாக்கத்திற்கு அடித்தளமாகக் கருதப்படுகிறது. இவர் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல பெரிய பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றியவர். வறியவர்களின் தேவைகளை மேம்படுத்துவதில்தான் மீட்பும், விடுதலையும் இணைந்துள்ளது என எடுத்துரைத்தார். ‘ஏழைகளின் திருத்தூதர்எனப் போற்றப்படும் இவர், இலத்தீன் அமெரிக்கா மற்றும் கத்தோலிக்கத் திரு அவையில் வறுமைக்குக் காரணம் சமூக மற்றும் பொருளாதார அநீதி என எடுத்துரைத்தார். ‘வறுமை என்பது இறப்பு (Poverty is Death); அது மக்களையும், குடும்பங்களையும் அழிக்கிறது. திரு அவை கடந்த காலங்களைவிட தற்போது தன் மக்களை நன்றாகப் புரிந்துகொள்கிறது எனக் கூறினார். நமது காலத்தின் மிகச் சிறந்த இறையியலாளர்களில் ஒருவரான இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்.

news
உலக செய்திகள்
உயிருடன் எரிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள்
அக்டோபர் 6 அன்று ஆப்பிரிக்க நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள மன்னி நகரில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், கிறிஸ்தவர்கள் உள்பட 150-க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டார்கள். சந்தையில் கூடியிருந்த மக்கள்மீது கண்மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்; கடைகளைக் கொள்ளையடித்தனர்; பல கட்டடங்களுக்குத் தீ வைத்தனர். பாதிக்கப்பட்டவர்களில் சிலரை உயிருடன் எரித்தனர். பாதிக்கப்பட்டவர்கள், ‘பயங்கரவாதிகள் எல்லாவற்றையும் எரித்தாலும், அவர்கள் எங்கள் நம்பிக்கையை எரிக்க முடியாது’ என்று கூறினர்.
news
உலக செய்திகள்
விளையாட்டு வாழ்வின் பாடல்
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  ‘கொரியர் டெல்லோ ஸ்போர்ட்-ஸ்டேடியோ’வின் 100-வது ஆண்டு நிறைவு விழாவுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், “வெற்றியின் உச்சம், வெற்றிக்கான முயற்சி மற்றும் தோல்வியின் இழப்பு ஆகியவற்றிலிருந்து வீரர்கள் கற்றுக்கொள்வதால், விளையாட்டு வாழ்க்கையில் பாடங்களை வழங்குகிறது. அர்ஜென்டினாவைச் சேர்ந்த சலேசிய குருவான அருள்தந்தை லொரென்சோ மாசா அவர்கள் சிறுவர்களுக்காகக் கால்பந்து விளையாட திரு அவையின் கதவுகளைத் திறந்துவிட்டார். இனம், மதம் அல்லது வர்க்கம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் விளையாட்டை அணிதிரளச் செய்வதற்கான வழிமுறையாக ஒவ்வொருவரும் பயன்படுத்த வேண்டும். மோதல்கள் மற்றும் வன்முறைகளுக்கு மத்தியிலும், விளையாட்டு மக்களை ஒன்றிணைத்து, ஒரே குடும்பத்தின் ஒரு பகுதியாக உணர்கின்றேன்”  என்று கூறினார்.
news
உலக செய்திகள்
திருத்தந்தையுடன் செலன்ஸ்கி
உக்ரைன் நாட்டின் அரசுத் தலைவர் செலன்ஸ்கி அக்டோபர் 11-ஆம் தேதி வத்திக்கானில் திருத்தந்தை மற்றும் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் ஆகியோருடனான சந்திப்பின்போது, இரஷ்யாவுடனான போரில் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனின் போர் நிலைகள் குறித்தும், மனிதாபிமான நெருக்கடிகள் குறித்தும், நீடித்த அமைதியைக் கொண்டு வரவேண்டுமென்றும், போரை முடிவுக்குக் கொணரும் முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. திருத்தந்தை பிரான்சிஸ் ‘அமைதி என்பது வலுவற்ற ஒரு மலர்’ என்ற எழுத்துகளும், மலரின் உருவமும் பொறிக்கப்பட்ட வெண்கலத் தகட்டையும், இவ்வாண்டிற்கான அமைதி செய்தியையும், திருத்தந்தை எழுதிய சில ஏடுகளையும், உக்ரைன் கிரேக்கக் கத்தோலிக்கர்கள் குறித்த நூல் ஒன்றையும் அரசுத் தலைவருக்குப் பரிசாகத் திருத்தந்தை வழங்கினார்.
news
உலக செய்திகள்
கர்தினால்களாக உயர்த்தப்பட்ட FABC பொறுப்பாளர்கள்

ஆசிய ஆயர் மாநாடுகளின் கூட்டமைப்பின் (FABC) துணைத் தலைவரான ஆயர் பாப்லோ விர்ஜிலியோ சியோங்கோ டேவிட் (65) மற்றும் FABC பொதுச்செயலாளர் பேராயர் டார்சிசியோ இசாவோ கிகுச்சி (65) ஆகியோர் கர்தினால்களாக உயர்த்தப்பட்டுள்ளனர்.  மேதகு ஆயர் பாப்லோ விர்ஜிலியோ சியோங்கோ டேவிட் மார்ச் 2, 1959 பிலிப்பைன்சில் பிறந்தார். 1983, மார்ச் 12 அன்று சான் பெர்னாண்டோ உயர் மறைமாவட்டத்திற்குக் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1986 முதல் 1991 வரை பெல்ஜியத்தின் லூவைன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் படித்தார். இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார். 2006, மே 27 அன்று திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்களால் சான் பெர்னாண்டோ துணை ஆயராக நியமிக்கப்பட்டார். பின்னர் 14-10-2015 அன்று கலூகன் மறைமாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். பிலிப்பைன்ஸ் கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (CBCP) தலைவராக 2021, 2023 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2023 ஆண்டு ஆசிய ஆயர் மாநாடுகளின் கூட்டமைப்பின் (FABC) துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

01-11-1958-இல் பிறந்த டார்சிசியஸ் இசாவோ கிகுச்சி மார்ச் 15, 1986 அன்று குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். செப்டம்பர் 20, 2004 அன்று நீகாட்டாவின் ஆயராக நியமிக்கப்படுவதற்கு முன்பு இவர் மேற்கு ஆப்பிரிக்காவின் கானாவில்  மிஷனரியாகப் பணியாற்றினார். 25-10-2017 அன்று டோக்கியோ பேராயராக நியமிக்கப்பட்டார். ஜப்பான் காரித்தாஸ் மற்றும் காரித்தாஸ் ஆசியா ஆகியவற்றின் தலைவராகவும், காரித்தாஸ் இன்டர்நேஷனலின் பிரதிநிதிகள் அவையின் உறுப்பினராகவும் உள்ளார். ஜப்பான் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகவும் பணியாற்றுகிறார். 2021, 2024-இல் FABCஇன் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். FABC பணியாற்றிய இருவரும் கர்தினாலாக உயர்த்தப்பட்டுள்ளது குறித்து ஆசியத் திரு அவை மகிழ்ச்சி கொள்கிறது.

news
உலக செய்திகள்
நோக்கம் தெளிவானதாக இருக்க வேண்டும்!
லியூவன் (Leuven) பல்கலைக்கழகத்தில் மாணவர்களைச் சந்தித்த திருத்தந்தை, “அழகான இந்த உலகைப் பேணிக் காக்கவும், போற்றவும், எதிர்காலத் தலைமுறையினருக்கு அதனை விட்டுச்செல்லவும், பொது நன்மைக்காக உழைக்கவும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் பிரச்சினையானது மனிதனின் இதயத்தில் எழும் பொருளாதாரத்தின் மேல் உள்ள அதிகப்படியான ஆர்வமே. அளவுக்கதிகமான பணம் எப்போதும் ஆபத்தானது. அது அலகையைப் போல நமது உள்ளங்களில் நுழைந்து விடுகின்றது. எனவே நாம் மிக கவனமாக இருக்க வேண்டும். நமது நோக்கம் தெளிவானதாக இருக்க வேண்டும்” என மாணவர்களிடம் உரையாற்றினார்.