news
உலக செய்திகள்
தென்கிழக்கு நைஜீரியாவில் இரண்டு அருள்சகோதரிகள் கடத்தப்பட்டனர்!

நைஜீரியாவின் தென்கிழக்குப் பகுதியான அனம்பிரா மாநிலத்தில் உள்ள அமல உற்பவ அன்னை சபையைச் சேர்ந்த அருள்சகோதரி மரியா மற்றும் அருள்சகோதரி கிரேஸ் ஆகியோர் சனவரி 7 அன்று கடத்தப்பட்டதாகFidesசெய்தி நிறுவனம் அறிவித்துள்ளது. இருவரும் ஓக்போஜியில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்றுத் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையில் ஆயுதமேந்திய நபர்கள் அவர்களைக் கடத்திச் சென்றுள்ளனர். இரண்டு அருள்சகோதரிகளையும் மீட்பதற்காகக் காவல்துறை கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கை தொடங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

news
உலக செய்திகள்
முதன்முறையாகத் திருப்பீடத் துறையின் தலைவரான அருள்சகோதரி!

திருத்தந்தை பிரான்சிஸ் முதன்முறையாக ஒரு பெண் துறவியைத் திருப்பீடத் துறையின் தலைவராக நியமித்துள்ளார். கொன்சலாத்தா துறவு சபையைச் சேர்ந்த இத்தாலிய அருள்சகோதரி Simona Oramoilla அவர்கள் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு நிறுவனங்கள் மற்றும் அப்போஸ்தலிக்க வாழ்வு அமைப்புகளுக்கான திருப்பீடத்துறையின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 2011 -ஆம் ஆண்டில் கொன்சலாத்தா துறவு சபையின் தலைவியாகப் பணியாற்றி, 2023 அக்டோபரில் திருப்பீடத்துறையின் செயலராக நியமிக்கப்பட்டிருந்தார். இவர் திரு அவையில் தலைவராக நியமிக்கப்படும் முதல் பெண் துறவி என்ற பெயரைப் பெறுகிறார்.

news
உலக செய்திகள்
புனிதக் கதவு வழியாக ஐந்து இலட்சம் பேர் கடந்து சென்றனர்!

வத்திக்கானில் புனித பேதுரு பெருங்கோவில் புனிதக் கதவு வழியாக கடந்த இரு வாரங்களில் 5,45,532 பேர் கடந்து சென்றதாக யூபிலி ஆண்டிற்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 24-ஆம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் புனிதக் கதவைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது திருப்பயணிகள் ஆர்வத்துடன் புனிதக் கதவுக்குள் நுழைந்தனர். அவ்வாறே, ஜனவரி 5 -ஆம் தேதி புனித பவுல் பெருங்கோவிலின் புனித கதவு திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உரோம் நகரின் நான்கு பெருங்கோவில்களின் புனிதக் கதவுகள் வழியாகத் திருப்பயணிகள் சென்று பலனடைந்து வருகின்றனர்.

news
உலக செய்திகள்
துறவிகளுக்கு அன்பான வாழ்க்கை முறை அவசியம்!

வத்திக்கானில் ஜனவரி 4 அன்று துறவிகளுக்கான நிகழ்வில் திருத்தந்தை பிரான்சிஸ்துறவிகளுக்கான தூய்மையின் நிலையான அர்ப்பணிப்பு, தீவிர இறையியல் தயாரிப்பு மற்றும் இணக்கமான வாழ்க்கை முறை அவசியம்என்றார். மேலும், வருத்தம் கொண்ட முகம் உள்ளவர்களாக அருள்சகோதரிகள் இருத்தலாகாது; எல்லாருடனும் அன்பான உறவு கொள்பவராக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். தூய்மையான வாழ்க்கை, தயாரிப்பு மற்றும் இணக்கமான உறவுகள் துறவிகளுக்குத் தேவையானது. இறை அழைத்தல் குறைந்து வரும் சூழலில், தூய்மையான வாழ்க்கை, தயாரிப்பு, இணக்கமான உறவுகள் கொண்டு வாழுங்கள்என்று தெரிவித்தார் திருத்தந்தை.

news
உலக செய்திகள்
“எல்லாரையும் விருந்திற்கு அழைத்து வாருங்கள்!”

திருத்தந்தை பிரான்சிஸ், உலகக் குழந்தைகளுக்கான மறைப்பணி நாளான திருக்காட்சிப் பெருவிழாவில், ‘எல்லாரையும் விருந்திற்கு அழைத்து வாருங்கள்என்ற மையச்செய்தியை வலியுறுத்தினார். ஜனவரி 6-ஆம் தேதி வத்திக்கானில் திருப்பயணிகளுக்கு வழங்கிய மூவேளைச் செப உரையில், உலகெங்கும் உள்ள குழந்தைகள், இளையோருக்கான செபங்கள் மற்றும் ஒற்றுமை நடவடிக்கைகள் முன்னேற்றத்துக்கு ஊக்கமளிப்பதாகக் கூறினார். அமேலியா சமூகத்தாருக்குப் பாரம்பரிய முறைப்படி வத்திக்கான் வளாகத்தை அழகுபடுத்தியதற்காக நன்றி கூறினார். போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான செபங்களை முன்வைத்தார்.

news
உலக செய்திகள்
கர்தினால் ஸ்டீசூஃபன் சோவின் அறிவுரை

கர்தினால் ஸ்டீசூஃபன் சோ, ஹாங்காங் மறைமாவட்ட இயேசு சபை அருள்பணியாளர். உணவின் மாண்பை மதிப்பதன் முக்கியத்துவத்தை ஜனவரி 3-இல் சிந்தனை வலைதளத்தில் இவர் பகிர்ந்தார். உணவின் வீணாக்கம் மற்றும் அதன் மேல் நமக்கு உள்ள பொறுப்புகளைப் பற்றிக் கருத்து தெரிவித்த இவர், “நமது கடமை, உணவின் மாண்பை மதிப்பதுஎன்று குறிப்பிட்டார். மேலும், உலகில் அனைத்து உயிர்களும் கடவுளின் அன்பாலும் கருணையாலும் படைக்கப்பட்டன என்றும் கூறி, அவற்றின் பாதுகாப்பு மற்றும் கவனிப்பில் கடவுளின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றார். பெரும்பான்மையான விருந்துகளில் உணவுகள் வீணாகும் என்பதைக் கண்டால் உணவின் மாண்பு பாதிக்கின்றது என்பது அர்த்தம். மனிதர்களுக்கான உணவின் அடிப்படையில் நமக்கு ஒரு பொறுப்பும் பண்பும் இருக்க வேண்டும். எதிர்நோக்குடன் வாழும் இந்த யூபிலி ஆண்டில், உணவை வீணாக்காமல், அதை மாண்புடன் மதிக்க வேண்டும் என்று கர்தினால் சோ வலியுறுத்தினார்.