ஏழைகளின்
தந்தையாக, புறக்கணிக்கப்பட்ட மக்களின் ஆதரவுக் குரலாக, புலம்பெயர்ந்தோரின் காவலராக வாழ்ந்தவர் திருத்தந்தை பிரான்சிஸ். புனித வாரத்தில் நோயுற்று இருந்தபோதும்கூட ‘நான் என் மக்களைப் பார்க்க வேண்டும்’
என்று கூறி, சக்கர நாற்காலியில் வந்து பார்த்தவர். எப்போதுமே புறக்கணிக்கப்பட்ட மக்களின் குரலாக இருக்க வேண்டும் என்று கூறியவர். புனித வியாழன் பாதங்கள் கழுவும் சடங்கின் நிகழ்வில் யாருமே தொடத் தயங்குகிற புண்களும் அசுத்தமும் இருக்கக் கூடிய தொழுநோயாளர்களின் பாதங்களைத் தொட்டு முத்தமிட்டவர். சிறைக்கைதிகள் மற்றும் பால்வினை நோயாளர்களின் பாதங்களையும் தொட்டு முத்தம் செய்தவர்.
இவர்
கத்தோலிக்கத் திரு அவைக்கு மட்டும் தலைவரல்லர்; உலகத்துக்கே மிகச்சிறந்த தலைவராக இருந்துள்ளார். திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபொழுது,
“ஏழைகளை ஒருபோதும் மறந்து விடாதீர்கள்” என்று
கூறிய உடன் கர்தினாலின் வார்த்தையைக் கடைசிவரை வாழ்வில் செயல்படுத்தியவர். 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித பிரான்சிஸின் பெயரை ஏற்று, அவரைப்போல எளிமையையும் ஏழ்மையையும் தன் வாழ்வின் இறுதிவரை கடைப்பிடித்தார். நூறு ஆடுகளுள் ஒன்று தவறினாலும்கூட தொண்ணூற்றொன்பது ஆடுகளை விட்டுவிட்டு தவறிய அந்த ஓர் ஆட்டைத் தேடுகிறவர்தான் உண்மையான தலைவர் என்பதை எண்பித்துக்காட்டியவர். தெருக்களில் அகதிகளாக, ஏழைகளாக, விளிம்பு நிலை மக்களாக வாழ்வாதாரம் ஏதுமின்றிக் கதறிக் கொண்டிருந்த மக்களைத் தேடிச்சென்று, அவர்கள் எல்லாருக்கும் ஒரு தலைவராக இருந்தவர்.
இந்தத்
திரு அவை யாருக்கானது? எந்த மக்களுக்கானது? என்பதை உலகுக்கு உணர்த்தியவர். ‘கொரோனா’ நேரத்தில் ஆயிரக்கணக்கான அகதிகளுக்கு வத்திக்கானையே திறந்துவிட்டவர். இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தனக்கான வத்திக்கான் மாளிகையில் தங்கவில்லை. ‘நான் மாளிகையின் தலைவன் அல்ல; குடிசைகளின் தலைவன்’ என்று கூறி ஆண்டாண்டு காலமாகத் திருத்தந்தையர் தங்கி இருந்த வத்திக்கான் அரண்மனையை விட்டு விட்டு, ஏழைகளைச் சந்திக்கும் விதமாக ஓர் எளிய அறையில் தங்கினார். இப்படிப்பட்ட மிகப்பெரும் திருத்தந்தையின் வெற்றிடத்தை நிரப்புவது மிகவும் கடினம். திரு அவை மட்டுமல்ல, எங்கெங்கெல்லாம் ஏழைகள், அகதிகள், புறக்கணிக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களோ அவர்கள் அனைவரும் இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கிறார்கள்.
திருத்தந்தை
பிரான்சிஸ் எல்லாருக்குமான ஒரு தலைவராக இருந்து, பெரும் மாற்றங்களைத் திரு அவையில் கொண்டு வந்தார். ‘வெவ்வேறு பாலின இயல்புகளைக் கொண்ட மக்களைத் தீர்ப்பிட நான் யார்?’ எனக் கேட்டவர். ‘திருத்தந்தை தவறிழைக்க மாட்டார்’
என்ற கோட்பாட்டை மாற்றி, ‘கடவுள் மட்டுமே தவறிழைக்காதவர்; நான் சாதாரண மனிதர்தான், தவறிழைக்கக்கூடியவர்’ என்று
கூறிய மாமனிதர். வத்திக்கான் வங்கியில் மாற்றம் கொண்டு வந்த புரட்சியாளர்.
இறுதி
நேரத்திலும் உலக அமைதிக்காக நாட்டுத் தலைவர்களைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்திச் சென்றிருக்கிறார். சமூக நீதி என்னும் சிந்தனையை ஆளும் தலைவர்கள் மனத்திலே விதைத்துச் சென்றிருக்கிறார். ‘இந்தப் பூமி அனைவருக்கும் சொந்தமானது’ என்று
கூறி, இயற்கையைச் சுரண்டும் முதலாளித்துவத்தைக் கடுமையாகச் சாடியுள்ளார். முதலாளித்துவச் சிந்தனை இருந்தால், இயற்கையை அழித்துவிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். நுகர்வு கலாச்சாரத்தால் நம்முடைய வாழ்வு பாதித்துள்ளது என்று கூறி, ‘அதீத முன்னேற்றம் ஆபத்தானது’
என்று முழங்கியுள்ளார். ‘சாதாரண ஏழைகளுக்கு எல்லாம் கிடைப்பதை உறுதி செய்வதுதான் உண்மையான பொருளாதார வளர்ச்சி’
என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏழையாக,
ஏழைகளுக்காக வாழ்ந்து, ஏழையாகவே இறைமடி சேர்ந்துள்ள தந்தை பிரான்சிஸ் அவர்களை ஏழைகள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.