முச்சங்கம்
வளர்த்த மதுரை மாநகரில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக உயர்ந்திருப்பது திருப்பரங்குன்றம் மலை. இம்மலையில்
இந்துகள், முஸ்லிம்கள், சைனர்கள் ஆகியோர் நீண்ட காலமாக அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் தங்களது தனித்தனி வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழும் இம்மக்களின் அமைதியைச் சீர்குலைக்கச் சில மதவாத அமைப்புகள் அண்மையில் முயற்சிகளை மேற்கொண்டன.
இந்த
மதவாத அமைப்புகளின் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கண்டித்து மார்ச் 9-அன்று மதுரை கே.கே. நகரிலுள்ள
கிருஷ்ணய்யர் அரங்கில் ‘மத நல்லிணக்க மாநாடு’ நடைபெற்றது.
இம்மாநாட்டுக்கு வழக்குரைஞர் வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். இம்மாநாட்டில் பேசிய மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், “என் இறைவனுக்கும் என்னுடைய மதத்திலும் என்னென்ன மாதிரி வழிபாடு நடத்த வேண்டும் என்ற தனிமனித உரிமையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை” எனக் கூறினார்.
இம்மாநாட்டில்
தமிழ்நாட்டின் மத நல்லிணக்க மலையாகத்
திருப்பரங்குன்றம் மலையைத் தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்; திருப்பரங்குன்றம் கோவிலில் புகுந்து வன்முறையைத் தூண்டிய கட்சிகள், அமைப்புகள்மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; மதுரை மாநகர், புறநகர், திருப்பரங்குன்றம் பகுதி முழுவதும் மத நல்லிணக்கக் குழுக்களை
உருவாக்கி மத நல்லிணக்கத்தைக் காக்க வேண்டும்
போன்ற பல்வேறு
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில்
தமிழ்நாடு ஆயர் பேரவையின் பல்சமய உரையாடல் பணிக்குழுவின் தலைவர் மேதகு இலாரன்ஸ் பயஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன், நெல்லையப்பர் ஆதினம் பதினெண்சித்தர் பீடம் சித்தர் மூங்கிலடியார், அருள் பணி. பெனடிக்ட் பர்னபாஸ், ஹென்றி டிபேன், மீ.த. பாண்டியன்
மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள், கட்சிப் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.
இம்மாநாட்டை
மத நல்லிணக்க மக்கள் கூட்டமைப்பினர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.