அன்புக்குரியவர்களே!
1975-ஆம் ஆண்டு
பிறப்பெடுத்த ‘நம் வாழ்வு’ என்னும் இந்த அழகிய நங்கை இன்று தனது 50-வது அகவையை எட்டியிருக்கும் அவளுக்குப் பாராட்டு விழா எடுப்பது தகுதியும் நீதியுமானது. இத்தருணத்தில் காலங்கள் உருண்டோடினாலும், தன் அழகும் வனப்பும் வசீகரமும் சிறிதேனும் குறையாது, பேரழகு நங்கையாய் அனைவரையும் தன் இனிய தமிழால், தெளிந்த சிந்தனையால், ஆழமான கருத்துகளால், கூர்மையான தொலைநோக்குப் பார்வையால் இளமைத் துடிப்போடு இன்றும் வலம் வந்து கொண்டிருப்பது பாராட்டத்தக்கது.
திரு
அவைக்கும் தமிழ்க்கூறும் நல்லுலகிற்கும் தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் உண்மையையும் நீதியையும் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் உரிமைக்கான குரலையும் பதிவு செய்யும் நோக்குடன் நன்மைகளை மேற்கோள்காட்டி, தீமைகளைச் சுட்டிக்காட்டி எந்தச் சூழலிலும், எவருக்கும் எவற்றிலும் சமரசமின்றி உண்மையை உரக்கச் சொல்லி ‘நல்லவர்களின் நாடித் துடிப்பாக’
இவள் பயணித்து வருவது இவள் கண்ட முதல் சாதனை!
இப்பயணத்தில்,
‘நம் வாழ்வு’ இதழின் மேனாள் ஆசிரியர்கள், வெளியீட்டுச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றிய ஆயர் பெருமக்கள், இதன் தொடக்க காலத்தில் களப்பணியில் ஈடுபட்ட பெரியவர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள் யாவரும் இப்பெருமைக்குரியோரே! அவர்களுக்கு நன்றி சொல்லும் நன்னாளே இப்பொன்னாள்!
இந்த
இதழை ஏழு ஆண்டுகள் மூன்று மாதங்கள் இதன் ஆறாவது முதன்மை ஆசிரியராகப் பயணித்து வழிநடத்திய காலத்தை எண்ணிப் பெருமைப்படுகிறேன். அத்தருணத்தில் பல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.
மேலும், தரமான அரசியல் கட்டுரைகளால் கிறித்தவ மக்கள் மட்டுமின்றி எல்லாச் சமயத்தவரும் அரசியல் தலைவர்களும் வாசிக்கும் பொதுவெளி ஊடக இதழாக உயர்ந்து நின்றது. குறிப்பாக, கிறித்தவர்களை அரசியலுக்கும் அரசியலைக் கிறித்தவர்களுக்கும் கொண்டு செல்லும் இலக்கோடு பயணித்தது. அத்தகைய இதழியல் வேட்கையோடு அது மீண்டும் புத்தெழுச்சி பெற்று வலம் வருவது பாராட்டத்தக்கது.
‘நம் வாழ்வு’ நம் ஆண்டவர் இயேசுவின் இறையாட்சி விழுமியங்களை உள்வாங்கி, உண்மையை உரக்கச் சொல்லி வருவது இவ்விதழின் தனித்தன்மையை எடுத்துரைக்கிறது. இனி வரும் காலங்களிலும் இதன் சாதனைப் பட்டியல் நீள வேண்டும், வாசகர்கள் கூட வேண்டும், பத்திரிகை வளர வேண்டும், எல்லாருடைய கைகளிலும் இது தவழ வேண்டும், பலருடைய சிந்தனைகளில் மாற்றம் காண வேண்டும், மாற்றத்திற்கான முன்னெடுப்புகள் இளையோர் மத்தியிலும், அரசியல் தளத்திலும், சமூக தளத்திலும் மலர வேண்டும் என்பதே என் ஆவல். இத்தகைய எண்ணத்தில் ‘நம் வாழ்வு’ இதழின் பயணம் தொடர்ந்து கொண்டிருப்பது சமூக மாற்றத்திற்கான உறுதியான நம்பிக்கையைத் தருகிறது.
இப்பொன்விழாவில்
கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி. விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த ‘நம் வாழ்வு’ ஆசிரியர் அருள்முனைவர் செ. இராஜசேகரனுக்கும், துணை ஆசிரியர்களுக்கும், அலுவலக அன்பர்களுக்கும், வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
அன்புடன்
மேதகு முனைவர்
லூர்து
ஆனந்தம்
சிவகங்கை
மறைமாவட்ட ஆயர்
தலைவர்
- நம் வாழ்வு வெளியீட்டுச் சங்கம்,
தமிழ்நாடு
ஆயர் பேரவை.