news
தமிழக செய்திகள்
நம் வாழ்வு அரை நூற்றாண்டு காலச் சாதனை! (வாழ்த்துச் செய்தி)

தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகம், அதன் வார இதழ்நம் வாழ்வுதன் பொன்விழாவைக் கொண்டாடும் இத்தருணத்தில் அதன் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் செ. இராஜசேகரன், துணை ஆசிரியர்கள், அலுவலர்கள், வாசகர்கள் அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்.

ஊடகம் சனநாயகத்தின் நான்காவது தூண் என்பதை நாமறிவோம். ஊடகம் இன்று மிகவும் வலிமையான ஆயுதமாக இருக்கிறது. தரவுகளை உடனுக்குடன் பகிரும் இன்றைய டிஜிட்டல் உலகில், அச்சு ஊடகத்திற்கு என்றே தனிச்சிறப்பு இருக்கிறது. எதையும் ஆவணப்படுத்துவதற்கு அச்சு ஊடகமே தலையாயது. ‘சொல் பிடி கொடுத்தாலும், எழுத்துப்பிடி கொடுக்கக்கூடாதுஎன்பார்கள். எழுத்து என்பது எப்போதும் ஆவணமாகிறது. ஆகவே, தெளிந்த சிந்தனையோடு, கருத்துகள் தெளிவாகப் பதிவு செய்யப்பட வேண்டும். இத்தகைய பயணத்தில்நம் வாழ்வுசிறப்புறப் பயணித்திருப்பது உண்மையிலேயே பாராட்டுதற்குரியது.

கிறித்தவ அச்சு ஊடகப் பணி நான்கு படிநிலைகளைக் கொண்டிருக்க வேண்டும்: ஒன்று, கருத்துகள் கூர்மையானதாக இருக்க வேண்டும்; இரண்டு, அதில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும்; மூன்று, அக்கருத்துகள் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்; நான்கு, திரு அவையின் மரபையும் போதனையையும் பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும். அதாவது, கிறிஸ்துவின் விழுமியங்களைத் தழுவியதாக, திரு அவையின் மதிப்பீடுகளைத் தாங்கியதாக இருக்க வேண்டும். இத்தகைய வரிசையில்நம் வாழ்வுவார இதழ் 50 ஆண்டுகள் தமிழ்நாடு திரு அவையில் கிறித்தவ மக்களுக்கும் இச்சமூகத்திற்கும் ஆற்றியுள்ள பணிகள் மிகவும் பாராட்டுதற்குரியதே!

ஐம்பது ஆண்டுகள் பயணம் என்பது சாதாரண செயல் அல்ல; இது அரை நூற்றாண்டு காலச் சாதனை! இச்சாதனைக்குப் பலர் சொந்தக்காரர்கள். இவ்விதழைத் துவங்கிய ஆயர் பெருமக்கள், இப்பணியகத்தின் தலைவர்களாக இருந்த ஆயர்கள், முதன்மை ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பொறுப்பாளர்கள், எழுத்தாளர்கள், அச்சகத்தார், மற்றப் பணியாளர்கள், வாசகர்கள் மற்றும் சந்தாதாரர்கள் ஆகிய அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்!

கிறிஸ்துவில்  அன்புள்ள,

மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி

பேராயர், சென்னை -மயிலை உயர்மறைமாவட்டம்

தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை

news
தமிழக செய்திகள்
தமிழ்நாடு திரு அவைக்கான இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவையின் (CCBI) - மேய்ப்புப் பணித் திட்டம் (MISSION) குறித்த விளக்கக் கூட்டம்

இந்தியக் கத்தோலிக்க ஆயர் பேரவை (CCBI) வெளியிட்டுள்ள MISSION-2033 என்ற மேய்ப்புப் பணித் திட்டத்தை தமிழ்நாடு திரு அவைக்கு எடுத் துச் செல்வதற்கான வழிகாட்டுதல் கூட்டம் டிசம்பர் 12, 2024 அன்று மதுரை, கரடிப்பட்டியிலுள்ள PILLAR மையத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு ஆயர் பேரவையின் பொதுச் செயலரும் கோட்டாறு மறைமாவட்ட ஆயருமான மேதகு நசரேன் சூசை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பணிக்குழுக்களின் மாநிலச் செயலாளர்கள், மறைமாவட்ட மேய்ப்புப்பணி மைய இயக்குநர்கள் சுமார் 40 பேர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு ஆயர் பேரவையின் இணைச்செயலரும், CCBI-இன் தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைப்பாளருமான (RDS) அருள்முனைவர் பிரான்சிஸ் ஜோசப் கூட்டத்தை ஒருங்கிணைப்பு செய்தார். கருத்துரையாளராக அருள்பணி. ஜோ சேவியர் சே.. திட்டம் குறித்த அறிமுகம் மற்றும் விளக்கங்களை இரு கருத்தமர்வுகளில் சிறப்பாக  விளக்கினார். பிற்பகலில் குழு ஆய்வும், தொடர்ச்சியாகக் குழு ஆய்வின் முடிவுகள் பெறப்பட்டுக் கருத்துகள் கூர்மைப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பணிக்குழுவின் மாநிலச் செயலரும், அவருடைய பணிக்குழுவைச் சார்ந்த மறைமாவட்டச் செயலர்களை உள்ளடக்கி வரும் பிப்ரவரி 28, 2025-க்குள் Mission-2033-இன் கருத்துப் பரவலாக்கக் கூட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. நிகழ்வுக்கு வந்திருந்த அனைவருக்கும் கிறித்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடல் பணிக்குழுவின் மாநிலச் செயலாளர் அருள்பணி. பெனடிக்ட் பர்னபாஸ் நன்றி கூறினார்.

news
தமிழக செய்திகள்
இன்றைய தமிழ்நாட்டின் ‘புதிய கமாலியேல்கள்’

முதுமுனைவர் அருள்பணி. பெலிக்ஸ் வில்பிரட் அவர்களின்தகைசால் செம்மல் விருது - இன்றைய தமிழ்நாட்டின்புதிய கமாலியேல்கள்என்ற நிகழ்வு கடந்த டிசம்பர் மாதம் 13-ஆம் நாள் வேளாங்கண்ணி திருத்தலத் தியான மையத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மியான்மர் நாட்டின் முதல் கர்தினாலும் Yangon மறைமாவட்ட பேராயருமான மேமிகு சார்லஸ் போ தலைமை தாங்கினார். தஞ்சை மறைமாவட்டத்தின் ஆயர் மேதகு முனைவர் சகாயராஜ் அவர்கள் பங்கெடுத்து, விருந்தினர் அனைவரையும் வரவேற்றார். அருள்முனைவர் R.K. சாமி அவர்கள் இந்நிகழ்வு பற்றிய அறிமுக உரையை நிகழ்த்தினார். மூன்று நிகழ்வுகளை மையப்படுத்தியதாக இவ்விழா அமைந்திருந்தது.

முதலில், முதுமுனைவர் அருள்பணி. பெலிக்ஸ் வில்பிரட் அவர்களைப் பெருமைப்படுத்தும் விதமாக அவர்கள் பெயரால் இரண்டு பேருரைகள் வழங்கப்பட்டன. ‘New Frontiers of Mission in Asiaஎன்ற தலைப்பில் கர்தினால் மேமிகு சார்லஸ் போ அவர்களும், ‘Changing Scenario and the Evolving Challenging of Ministries in the Church in Tamil Naduஎன்ற தலைப்பில் அருள்முனைவர் X.D. செல்வராஜ் அவர்களும் கருத்துரை வழங்கினர்.

இரண்டாவது நிகழ்வாக, அருள்முனைவர் R.K. சாமி அவர்கள் தொகுத்தThe Shrines are the Wellsprings of Salvationஎன்ற ஆங்கில நூலும், அருள்முனைவர் கரம்பை S. செபாஸ்டின் அவர்கள் எழுதியEcumenism in the Local Church: Sacraments, Mother Mary, Veneration of Saints and Joint Actionஎன்ற தமிழ் நூலும் அருள்முனைவர் பெலிக்ஸ் வில்பிரட் அவர்களால் வெளியிடப்பட்டது.

மூன்றாவது, மிக முக்கிய நிகழ்வாக, உண்மையை உரக்கச் சொல்லி, இறையியலைப் பொதுவெளியில் பேசி, நடைமுறைப்படுத்தியவர்களுக்குமுதுமுனைவர் அருள்பணி. பெலிக்ஸ் வில்பிரட்தகைசால் செம்மல் விருதுவழங்கி, அவர்கள் இன்றைய தமிழ்நாட்டின்புதிய கமாலியேல்கள்எனப் பெருமைப்படுத்தப்பட்டனர்.

தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் திரு. அப்பாவு, தமிழ்நாடு மேனாள் சிறுபான்மை நல ஆணையத் தலைவர் திரு. பீட்டர் அல்போன்ஸ், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திருமதி. தாரகை கத்பர்ட்அருள்முனைவர் மைக்கிள் A. அமலதாஸ் சே.., அருள்பணி. ஜேம்ஸ் பாரதபுத்ரா சே.., அருள்முனைவர். X.D. செல்வராஜ், அருள்சகோதரி. அன்னை முனைவர் மரிய பிலோமி FBS, தொழிலதிபர் திருவாளர் அமல்ராஜ், திரு. இலாரன்ஸ், திரு. கிளமென்ட் ஆன்றனி, திரு. ஜோசப் பாண்டியன் ஆகிய 11 நபர்களுக்குபுதிய கமாலியேல்விருது வழங்கப்பட்டன.

இந்தச் சிறப்பு நிகழ்வில் பாண்டி-கடலூர் உயர் மறைமாவட்டப் பேராயர் மேமிகு பிரான்சிஸ் கலிஸ்ட், சேலம் மறைமாவட்ட ஆயர் மேதகு இராயப்பன், கும்பகோணம் மறைமாவட்ட ஆயர் மேதகு ஜீவானந்தம், சிவகங்கை மறைமாவட்ட ஆயர் மேதகு லூர்து ஆனந்தம், கோட்டாறு மறைமாவட்ட மேனாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ், தூத்துக்குடி மறைமாவட்ட மேனாள் ஆயர் யுவான் அம்புரோஸ் மற்றும் 350-க்கும் மேற்பட்ட இறைமக்கள் கலந்துகொண்டனர். விழா நிகழ்வுகள் அனைத்தையும் அருள்முனைவர் R.K. சாமி வழிநடத்தினார்.

news
தமிழக செய்திகள்
நம் வாழ்வின் நன்றிக்குரியோர்

நம் வாழ்வின் நன்றிக்குரியோர்

நம் வாழ்வின் வாரந்தோறும் ஞாயிறு திருப்பலியில் மக்களைச் சந்தித்து திருப்பலி நிறைவேற்றவும், நம் வாழ்வுவார இதழ் பற்றிக் கூறி சந்தாதாரர்களை உருவாக்கவும், மறைமாவட்டப் பங்குகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிக்குப் பேராதரவு தரும் பங்குத்தந்தையர் ஒவ்வொருவருக்கும் ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணிக்குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சிறப்பான நன்றிக்குரியோர்!

தம் பங்கு மக்களைநம் வாழ்வுவார இதழில் வாசகர்களாகவும் சந்தாதாரர்களாகவும் மாற்றும் வண்ணம், வாசிப்பு, வார இதழ் தயாரிப்பின் சிறப்புகள் - சிரமங்கள், ‘நம் வாழ்வுஇதழின் தனித்துவம், குழந்தைகளை வாசிக்க ஊக்குவித்தல், ‘நமது இதழுக்கு நாம்தான் ஆதரவு அளிக்க வேண்டும்என விழிப்புணர்வு கொடுத்து 50 சந்தாதாரர்களைப் பெற்றுத் தந்த சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம் புழல் புனித அந்தோணியார் ஆலயப் பங்குத்தந்தை அருள்பணி. Y.F. போஸ்கோ அவர்களுக்கும், 52 சந்தாக்களைப் பெற்றிட உதவிய செங்கல்பட்டு மறைமாவட்டம் சேலையூர், புனித சூசையப்பர் ஆலயப் பங்குத்தந்தை அருள்பணி. தாமஸ் பிரேம்குமார் அவர்களுக்கும் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.                                  

- முதன்மை ஆசிரியர்

news
தமிழக செய்திகள்
கிறிஸ்து பிறப்பு விழா - யூபிலி 2025 நல்வாழ்த்துகளும் ஆசிரும்!

ஆதவன் உதிக்க, காரிருள் மறைவது போன்று... நம்மைச் சூழ்ந்திருக்கும் காரிருளின் பல்வேறு தன்மைகளை முற்றிலுமாகப் போக்கிட பேரொளி தந்திடஉலகின் ஒளியாய்பிறந்துள்ள பாலன் இயேசுவின் பெயரால் உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் செபங்களையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

பிறந்துள்ள பாலன் இயேசுவின் வருகையானது நமக்கும், நம் குடும்பங்களுக்கும் பங்குத்தளங்களுக்கும் துறவற இல்லங்களுக்கும் அவருடைய வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்த அனைவருக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் புது வாழ்வையும் புது விடியலையும் நிறைவாகத் தருவதாக!

கிறிஸ்து பிறப்பு அன்பின் காலம். மகிழ்வை, அமைதியை, இறைவனின் நிறை ஆசிரைப் பகிரும் காலம். கடந்த காலத்தின் நிறைவையும், நிகழ்காலத்தின் மகிழ்வையும், எதிர்காலத்தின் எதிர்நோக்கையும் குறித்துக் காட்டி நன்றியுணர்வுடன் வாழ வழிகாட்டும் காலம்.

கிறிஸ்து பிறப்பின்-2025 யூபிலி ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அறைகூவலுக்கேற்ப புதிய எதிர்நோக்குடன் ஒருங்கியக்கப் பாதையில்எதிர்நோக்கின் திருப்பயணிகளாகநாம் பயணிப்போம். அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், உண்மை, நீதி, நேர்மை எனும் இறையாட்சியின் மதிப்பீடுகளில் வாழ்ந்து இவ்விழுமியங்கள் கொண்ட சமூகத்தை உருவாக்குவோம்.

பிறக்கும் பாலன் இயேசு நம் அனைவருக்கும் விண்ணக மகிழ்வையும், அமைதியையும், ஆசியையும் நிறைவாக அருள்வாராக!

+ மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி

சென்னை - மயிலை உயர் மறைமாவட்டம், தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை

news
தமிழக செய்திகள்
முதல்வர் கணினித் தமிழ் விருது! நீங்களும் விண்ணப்பிக்கலாம்!

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, உலகமெல்லாம் கணினி வழியாகத் தமிழ்மொழி பரவச் செய்யும் வகையில் கணினித் தமிழ் வளர்ச்சிக்காகச் சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக முதல்வர் கணினித் தமிழ் விருது என்ற பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவருக்கு விருது தொகையாக ரூ. 2 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படுகிறது. இந்த 2024-ஆம் ஆண்டுக்குரிய முதல்வர் கணினித் தமிழ் விருதுக்கு தனிநபர் மற்றும் நிறுவனத்திடமிருந்து, தமிழ் வளர்ச்சிக்கான மென்பொருள்கள் / செயலிகள் வரவேற்கப்படுகின்றன.

விருதுக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2021, 2022, 2023 -ஆம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும் இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளைத் தமிழ் வளர்ச்சித்துறையின்www.tamilvalarchithurai.in.gov.inஎன்ற இணையதளத்தில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்கம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை - 600 008 என்ற முகவரிக்கு அஞ்சல் வாயிலாக டிச.31 - க்குள் அனுப்பி வைக்கவும் கூடுதல் விவரமறிய விரும்புவோர் 044 - 28190412, 044 - 28190413 ஆகிய தொலைப்பேசி எண்களை அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.

                                                                          - தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ்நாடு அரசு