news
தமிழக செய்திகள்
விருதுபெற விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காகப் பலர் ஆற்றிவரும் அரிய தொண்டுகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும்டாக்டர் அம்பேத்கர் விருதுவழங்குகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கானடாக்டர் அம்பேத்கர் விருதுபெற விரும்புவோர், தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் நவ. 22 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ‘www.tn.gov.in/ta/forms/Deptname/I’ என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். சென்னையில் உள்ள ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம் அல்லது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.

- தமிழ்நாடு அரசு

news
தமிழக செய்திகள்
வேலூர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர் அருள்முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து

தமிழ்நாட்டின் வேலூர் மறைமாவட்டத்தின் ஏழாவது ஆயராக, செங்கல்பட்டு மறைமாவட்டத்தைச் சார்ந்த அருள்முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து (58) அவர்களைத் திருத்தந்தை பிரான்சிஸ் நவம்பர் 9 சனிக்கிழமை, இலாத்தரன் பெருங்கோவில் நேர்ந்தளிப்பு விழா அன்று நியமனம் செய்துள்ளார். அருள்தந்தை அவர்கள், 1966, மே 3-ஆம் நாள் செங்கல்பட்டு மறைமாவட்டத்தில் உள்ள செய்யூரில் பிறந்தார். 1993, மார்ச் 25 அன்று அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்ட தந்தை அவர்கள் சென்னை தூய சாந்தோம் பேராலயத்தில் உதவிப் பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். தொடர்ந்து செங்கல்பட்டு தூய யோசேப்பு பேராலயம், ஒரகடம் திரு இருதய ஆலயம், படப்பை தூய சகாய அன்னை ஆலயம் போன்ற பங்குகளில் பங்குத்தந்தையாகச் சிறப்புடன் பணியாற்றினார்.   

பெல்ஜியத்தில் லூவைன் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முதுகலைப் பட்டத்தையும், உரோமில் உள்ள ஆஞ்செலிக்கம் பல்கலைக்கழகத்தில் தத்துவயியலில் முனைவர் பட்டத்தையும் பெற்றார். செங்கல்பட்டு மறைமாவட்டப் பள்ளிகளின் கண்காணிப்பாளர், ஜீவன் ஜோதி இந்திய ஆட்சியாளர் உருவாக்கப் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் (Jeevan Jyothi Indian Administrative Service - JJIAS), பூவிருந்தவல்லி திரு இருதயக் குருத்துவக் கல்லூரியின் துணை அதிபர், நூலகர், பேராசிரியர் எனப் பல பணிகளைத் திறம்பட ஆற்றியவர். ஏழு ஆண்டுகள் செங்கல்பட்டு மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளராகப் பணியாற்றிய இவர், தற்போது திருத்தந்தையின் இந்திய மறைத்தூதுப் பணியகத்தின் தேசிய இயக்குநராகவும் இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் மறைபரப்புப் பணிக்குழுச் செயலராகவும் பணிபுரிந்து வருகிறார். இவருடைய அருள்பொழிவு வருகின்ற டிசம்பர் 09 -ஆம் நாள் வேலூர் மறைமாவட்டப் பேராலயத்தில் நடைபெறவுள்ளது.

- முதன்மை ஆசிரியர்

news
தமிழக செய்திகள்
தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு இராஜராஜ சோழன் பெயர்

தமிழகத்தில் பல மன்னர்கள் ஆட்சி புரிந்திருந்தாலும், சிறந்த ஆட்சி நிர்வாகத்தைக் கொடுத்த இராஜராஜ சோழனைத்தான்பெருமன்னன்என அழைக்கிறோம். அவரது ஆட்சிக் காலத்தில் விவசாயம் செழித்தோங்கியது. சமயத்தையும், தமிழையும் வளர்க்கும் பணியில் ஈடுபட்டவர் இராஜராஜ சோழன். அவரின் புகழ் இந்த உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட இராஜராஜன் என்ற பெருமன்னனின் சதய விழாவைத் தமிழக அரசு நடத்துவதுடன், தமிழுக்குத் தொண்டாற்றக்கூடிய, தமிழுக்காக உருவாக்கப்பட்டுள்ள தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கு இராஜராஜ சோழன் பெயரைச் சூட்ட வேண்டும். அவ்வாறு செய்வது பெருமன்னன் இராஜராஜ சோழனுக்குச் செய்யும் சிறப்பாக இருக்கும்.”

- திரு. ஆர். சுரேஷ் குமார், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

news
தமிழக செய்திகள்
நன்றி! நன்றி! நன்றி!

நம் வாழ்வின் பொன்விழா ஆண்டுத் தயாரிப்பாக வாரந்தோறும் ஞாயிறு திருப்பலியில் மக்களைச் சந்தித்து திருப்பலி நிறைவேற்றவும்நம் வாழ்வுவார இதழ் பற்றிப் பேசி சந்தாதாரர்களை உருவாக்கவும் மதுரை உயர் மறைமாவட்டப் பங்குகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிக்குப் பேராதரவு தரும் பங்குத்தந்தையர் ஒவ்வொருவருக்கும் ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணிக்குழு சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சிறப்பான நன்றிக்குரியோர்!

தன் பங்கு மக்களைநம் வாழ்வுவார இதழில் வாசகர்களாகவும் சந்தாதாரர்களாகவும் மாற்றும் வண்ணம் வாசிப்பு, வார இதழ் தயாரிப்பின் சிறப்புகள் - சிரமங்கள், ‘நம் வாழ்வு  இதழின் தனித்துவம், குழந்தைகளை வாசிக்க ஊக்குவித்தல், ‘நமது இதழுக்கு நாம்தான் ஆதரவு அளிக்க வேண்டும்என விழிப்புணர்வு கொடுத்து 102 சந்தாதாரர்களைப் பெற்றுத் தந்த மதுரை, அண்ணாநகர் ஆரோக்கிய அன்னை திருத்தலப் பங்குத்தந்தை அருள் பணி. எட்வின் சகாயராஜ் அவர்களுக்கும், 70 சந்தாக்களைப் பெற்றிட உதவிய கே.புதூர், தூய லூர்து அன்னை திருத்தல பங்குத்தந்தை அருள்பணி. ஜார்ஜ் .. அவர்களுக்கும் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.     

- முதன்மை ஆசிரியர்

news
தமிழக செய்திகள்
ஓய்வு பெறும் மதுரைப் பேராயர் அந்தோணி பாப்புசாமி

மதுரை உயர் மறைமாவட்டத்தின் பேராயர் அந்தோணி பாப்புசாமியின் (75 வயது) பணி நிறைவை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் அந்தோணி சாமி சவரிமுத்து அவர்களை நவம்பர் 4 முதல் மதுரை உயர் மறைமாவட்ட திருத்தூது நிர்வாகியாக நியமித்துள்ளார்.

திண்டுக்கல் மறைமாவட்டம், மாரம்பாடியில் 01-10-1949 அன்று பிறந்த பேராயர் பாப்புசாமி, 07-07-1976 அன்று திருச்சி மறைமாவட்டத்தில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 1998-இல் மதுரையின் துணை ஆயராக நியமிக்கப்பட்டதன் மூலம் அவரது ஆயர் பயணம் தொடங்கியது. 2003-ஆம் ஆண்டில் அவர் திண்டுக்கல்லின் முதல் ஆயரானார். 2014-இல் மதுரைப் பேராயராக உயர்ந்தார்.

பேராயர் பாப்புசாமி அவர்கள் திரு அவையின் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். தமிழ்நாடு ஆயர் பேரவையின் தலைவராகவும் (2018-2022),  பாளையங்கோட்டை (2018-2019) மற்றும் குழித்துறை (2022-2024) ஆகிய மறைமாவட்டங்களுக்கான திருத்தூது நிர்வாகியாகவும் பணியாற்றியவர். புதிய நிர்வாகி அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

news
தமிழக செய்திகள்
சென்னை உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டும்

தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரத்துடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டியது அனைவரின் கூட்டுப் பொறுப்பு. இந்தப் பாரம்பரியத்தைக் காப்பதில் என்னுடைய பங்கும் இருக்கும்.”

- திரு. கே.ஆர். ஸ்ரீராம், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி