news
தலையங்கம்
புதிய தொழிலாளர் சட்டங்களால் தொலைந்து போகும் உரிமைகள்!

உழைப்புதனிமனிதனின், சமூகத்தின் மேம்பாட்டுக்கான குறியீடு. உழைப்பு இல்லையேல் உயர்வு இல்லை! உழைப்பே ஒவ்வொருவருக்கும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோல். உழைப்பாளர்கள் இன்றி வீடும் நாடும் ஒருபோதும் உயர்வடையாது. வளமான வேலைவாய்ப்புகளும் தகுதியான பணியாளர்களும் முறையான சட்ட திட்டங்களும் தனிமனிதனின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு அடிப்படையானதாகிறது.

1950-ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பின் பிரிவுகள் 14-16, 19(), 23-24, 41-43 ஆகியவை தொழிலாளர் உரிமைகள் பற்றிப் பேசுகின்றன. பிரிவு 14, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமமாக இருக்க வேண்டும்என்றும், பிரிவு 15, ‘வேலைவாய்ப்புகளில், பணி நியமனங்களில் அரசு குடிமக்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டக்கூடாதுஎன்றும், பிரிவு16, ‘அரசின் கீழ் வேலைவாய்ப்பு அல்லது நியமனத்திற்கான சமவாய்ப்பு உரிமையை வழங்க வேண்டும்என்றும், பிரிவு 19, ‘தொழிற்சங்கங்களை உருவாக்க உரிமை உண்டுஎன்றும், குறிப்பாக, அரசமைப்பின் பிரிவு 39-() ‘ஆண்களும் பெண்களும் சம வேலைக்குச் சம ஊதியம் பெறவேண்டும்என்றும் கூறுகிறது.

இதன் அடிப்படையில் இந்திய ஒன்றிய அரசிற்கு எதிராக ரத்தீர் சிங் மேற்கொண்ட வழக்கில், ‘சமவேலைக்குச் சம ஊதியம்என்ற கொள்கை அரசியல் அமைப்பு ரீதியான குறிக்கோள் என்றும், 1976-இல் வெளிவந்த சம ஊதியச் சட்டத்தின் அடிப்படையில் அரசியல் அமைப்பின் 32-வது பிரிவின் கீழ் அரசமைப்புத் தீர்வுகள் மூலம் அதை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இவ்வாறு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும்-பின்பும் அதாவது 1930 முதல் 1950 ஆண்டுகளுக்கு இடையில் தொழிலாளர் நலனுக்காக 44 சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் 15 சட்டங்களை நீக்கிவிட்டு, எஞ்சிய 29 சட்டங்களை ஒருங்கிணைத்து ஊதிய விதி (Code on Wages) 2019, தொழில்துறை தொடர்பு விதி (Industrial Relations Code)  2020, சமூகப் பாதுகாப்பு விதி (Code on Social Security)  2020 மற்றும் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதி (Occupational Safety, Health and Working Condition – OSH Code) 2020 என நான்கு சட்டத் தொகுப்புகளாக இப்போது ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் 1436 தொழிலாளர் சட்ட விதிகள் 351-ஆகக் குறைக்கப்பட்டிருக்கின்றன.

1990-களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண, அன்றைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான ஒன்றிய அரசு, புதிய பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது. ஆனால், அதற்கேற்றவாறு தொழிலாளர் சட்டங்களைச் சீரமைக்கத்  தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அவரது ஐந்தாண்டுகால ஆட்சியில் அது சாத்தியப்படவில்லை. பிறகு வந்த ஆட்சியாளர்களாலும் சீர்திருத்தத்தைக் கொண்டுவர இயலவில்லை.

பா...-வின் ஆட்சி காலத்தில், 2015 முதல் 2019 வரையில் நான்கு ஆண்டுகள் தொழிலதிபர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் என முத்தரப்புக் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டு, இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையிலும் இந்தச் சட்டங்கள் நவம்பர் 21-முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஒன்றிய தொழில்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்துத் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “காலத்திற்கேற்ப பல நாடுகள் தங்களது தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளன; அதன் தொடர்ச்சியாக, தற்போது இந்தியாவிலும் 29 தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை நான்கு சட்டங்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனஎனத் தெரிவித்துள்ளார். மேலும், 40 கோடி தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாகவும், அவை வெறும் சீர்திருத்தங்கள் மட்டுமல்ல, தொழிலாளர்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பு எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒன்றிய முதன்மை அமைச்சரோ, “மகளிர், இளையோர் எனத் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச மற்றும் உரிய நேரத்தில் ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் இலாபத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை இத்தொழிலாளர் சட்டங்கள் உறுதி செய்கின்றனஎன்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “சுதந்திரம் அடைந்தபிறகு தொழிலாளர்களின் நலனை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான சீர்திருத்தங்கள் தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாத்து, இந்தியப் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வழிவகுக்கும். இதனால் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, ‘வளர்ச்சியடைந்த இந்தியாஎன்ற இலக்கை விரைவில் அடைய முடியும்; வணிகம் மேற்கொள்வது இனி எளிமையாகும்எனவும் குறிப்பிட்டிருக்கிறார். ‘யாருடைய வணிகம் எளிதாக இனி மேம்படும்?’ என்பது நமக்குப் புரியாததல்ல; அது ஊரறிந்த, உலகறிந்த உண்மை.

முதன்முறையாக அமைப்புசாரா தொழிலாளர்களைச் சமூகப் பாதுகாப்புப் பலன் வரம்பிற்குள் கொண்டு வருவது, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நியமனக் கடிதம் கட்டாயம் என்பது, அனைத்துத் துறைகளிலும் குறித்த நேரத்தில் ஊதியம், பணிக்கொடை பெறும் காலவரம்பு தளர்வு, பல்வேறு ஊதிய மற்றும் விடுப்புப் பலன்கள் உள்ளிட்ட முக்கியக் கூறுகளை இந்தச் சட்ட வடிவு கொண்டிருக்கிறது. இது ஊழியர்களின் நீண்டகால நலனுக்கான ஒரு முயற்சி என்றாலும் கூட, குறைந்தபட்ச ஊதியத்தை ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் வரை சில மாநில அரசுகள் காத்திருக்க வேண்டியிருப்பது தொழிலாளர்களைப் பாதிக்கக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.

மேலும், புதிய தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் தொழிலாளரின் Basic Salary  என்னும் அடிப்படை ஊதியம் மொத்த ஊதியத்திலிருந்து குறைந்தபட்சம் 50 விழுக்காடாக இருக்கவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், கையில் வாங்கும் சம்பளம் குறையும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. அவ்வாறே, புதிய விதியின்கீழ் நிறுவனம் ஊழியருக்கு வழங்கும் CTC எனப்படும் மொத்த ஊதியத்தை மாற்றாமல், வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடைப் பங்களிப்பை அதிகரித்தால் தற்போது வாங்கிக் கொண்டிருக்கும் ஊதியத்தில் 15 விழுக்காடு வரை ஊழியர்கள் இழக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு அண்மையில் நடைமுறைப்படுத்தியுள்ள தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களுக்குத் தொழில் நிறுவனங்கள் வரவேற்பும், எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. மாறிவரும் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையில், இந்தச் சட்டத் திருத்தம் தவிர்க்க இயலாதது என்று ஒன்றிய அரசு முன்வைத்தாலும், இவை நாட்டின் நீடித்த, நிலைத்த வளர்ச்சியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் அல்ல என்றும், தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களாக இவை இருக்கின்றன எனவும் எதிர்க்கட்சிகள் வலுவாகக் குரல் எழுப்புகின்றன.

புதிய சட்டத்தில் எட்டு மணி நேர வேலை எனக் கூறப்பட்டிருந்தாலும், தொழிலாளரின் இசைவுடன் கூடிய கூடுதல் வேலை நேரத்திற்கு இரண்டு மடங்கு ஊதியம் என்பது, பணிநேரத்தை அதிகரிக்க மறைமுகமான தூண்டுதல் என்றும், காலப்போக்கில் அதுவே நிரந்தரமாகிவிடும் என்றும் தொழிற்சங்கங்கள் அஞ்சுகின்றன. மேலும், இனி தொழில் நிறுவனங்களில் தங்களின் ஆதிக்கம் குறைந்துவிடும் எனத் தொழிற்சங்கங்கள் அஞ்சுவதோடு, தொழிலாளர்களில் 51% பேர் உறுப்பினர்களாக இருக்கும் தொழிற்சங்கங்கள் மட்டுமே கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்னும் விதி தொழிற்சங்கங்கள் பெருகிவிட்ட நிலையில் நடைமுறைச் சாத்தியமல்ல என்பதும் அவர்களது அச்சத்திற்குக் காரணமாக அமைகின்றன. இந்த விதியைப் பயன்படுத்தி அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகள் தங்கள் ஊழியர்களைச் சிறு சிறு குழுக்களாகப் பிரித்தாளும் குறுக்கு வழியைப் பின்பற்றினால் தொழிற்சங்கங்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்தோ, பேரம் பேசும் வல்லமையின்றியோ போய்விடும் என்பது அச்சுறுத்தும் எதார்த்தம்.

நாடெங்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, பத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன. திடீரென வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் என, தொழில் நிறுவனங்களும் வலியுறுத்தி வருகின்றன.

இந்தியாவில் 15 முதல் 60 வயது பிரிவில் உள்ள 80 கோடி பேரில், 50 கோடி பேர் உழைக்கும் வர்க்கத்தினர். அவர்களில் 10 பேர் மட்டுமே நிரந்தர வேலைவாய்ப்புப் பெறுபவர்கள். இந்த நிலையில், அனைவருக்குமான சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தொழிலாளர் சட்டத் திருத்தம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது என்று ஒன்றிய அரசு நியாயப்படுத்தினாலும், இது நீண்ட நெடுங் காலமாகப் போராடிப்பெற்ற தொழிலாளர்களின் உரிமையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் இருப்பதாகவும், முதலாளிகளுக்கு வரைமுறையற்ற அதிகாரத்தை வாரி வழங்குவதாகவும் கருதி, இந்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துத்  தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு வலுவூட்ட வேண்டியது நமது கடமை.

news
தலையங்கம்
பீகாரில் ஆட்சியமைத்த ‘S.I.R.’ தமிழ்நாட்டை நெருங்கும் ஆபத்து!

வாக்குரிமை - அந்த நாட்டுக் குடிமகனின் பிறப்புரிமை. ஒரு நாட்டின் அரசமைப்பில் தேர்தல் முறைகள் மாறலாம்; வாக்குரிமை நிலைகள் மாறுபடலாம்; ஆனால், வாக்குரிமை என்பது எல்லாச் சூழல்களிலும் பிறப்புரிமையோடு தொடர்பு கொண்டது.

ஒவ்வொரு நாட்டிலும் மக்கள், தங்களை ஆள்வதற்கும் வழிநடத்துவதற்கும் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமை கொண்டிருக்கிறார்கள். இந்திய அரசமைப்பு மக்களாட்சித் தத்துவம் கொண்டது. நாட்டை ஆள்வதற்குரிய எல்லா அரசியல் அதிகாரங்களும் நாட்டின் குடிமக்களுக்கு உண்டு என்பதே மக்களாட்சியின் தத்துவம். குடிமக்கள் தங்கள் அரசியல் அதிகாரத்தை வெளிப்படுத்தும் கருவியே வாக்குரிமை. அதன் அடிப்படையிலேயே தங்கள் உரிமையைப் பயன்படுத்தி, தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து, தங்கள் சார்பில் அரசை வழிநடத்திவர அவர்களுக்கு அதிகாரம் அளிக்கின்றனர்.

ஆகவே, மக்களாட்சி நடைபெறும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு குடிமகனி(ளி)ன் வாக்குரிமை என்பது  இன்றியமையாத ஒன்றாகும். இந்திய அரசமைப்புச் சட்டம், அரசமைப்பின் படிநிலைகளில் ஊராட்சி, நகராட்சி, சட்டமன்றம், நாடாளுமன்றம் என எல்லாத் தளங்களுக்கும் பிரதிநிதிகளை அனுப்பிவைக்க வாக்குரிமையை அதிகாரமாகத் தன் குடிமக்களுக்கு அளித்திருக்கிறது. தமிழ் மரபு வாக்களிக்கும் முறையைப் பண்டைக்காலம் தொட்டே பயன்பாட்டில் கொண்டிருந்தது என்பது தமிழனின் அறநெறி வாழ்வின் மதிப்பீட்டை உலகிற்கு எடுத்துக்கூறும் வரலாறு.  ‘குடவோலைமுறை என்னும் இரகசிய வாக்கெடுப்பு முறையால் தங்கள் பிரதிநிதிகளை நிர்வாக அமைப்புகளின் உறுப்பினர்களாக நம் முன்னோர் தேர்ந்தெடுத்திருக்கின்றனர்.

அவ்வாறு, வாக்கு உரிமையும் வாக்களிக்கும் வழிமுறையும் தமிழர்தம் உணர்வில் இரண்டறக் கலந்தவை. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் இந்த வாக்குரிமையின் மாண்பினை உணர்ந்து இதனைக் குடிமக்களின் சட்டப்பூர்வமான அரசியல் உரிமையாக வடிவமைத்திருக்கிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைத்து இந்தியக் குடிமக்களும் இந்திய அரசமைப்பின்கீழ் வாக்களிக்க உரிமை உண்டு எனக் குறிப்பிடுகிறது இந்திய அரசமைப்பின் பிரிவு 326. இத்தகைய உரிமை திட்டமிட்டுப் பறிக்கப்படுவதையும் முறையான காரணமின்றிப் பறிபோவதையும் என்னவென்பது?

நமக்கு வாய்த்த ஒன்றிய அரசின் பிரதமர் மோடி தலைமையிலான பா... அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே  நடுவண் புலனாய்வுச் செயலகம் (சி.பி..), வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் ஆகியவற்றில் ஆளுங்கட்சி ஆதிக்கம் செலுத்தி எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச் செய்து, சனநாயகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதை ஊரும் உலகும் நன்கறியும். தேர்தல் வெற்றிகளைப் பறிப்பதற்காகப் பல்வேறு வழிமுறைகளைப் பயன்படுத்தும் ஒன்றிய பா... அரசு, அண்மைக்காலங்களில் S.I.R. (Special Intensive Revision Electoral Rolls) என்னும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் என்னும் புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது.

இதன் அடிப்படையில் அரியானாவில் வெற்றி கண்டவர்கள், பீகாரிலும் அதைத் தொடர்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், அவசர அவசரமாக அங்கும் அது அரங்கேற்றப்பட்டது. ஏறக்குறைய 66 இலட்சம் மக்களுடைய பெயர்கள் நீக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விசித்திரமான தேர்தல் அரங்கேறியுள்ளது. நாடே உற்றுநோக்கிய பீகார் மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமார் - பா... தேசிய சனநாயகக் கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது என்கிறார்கள். ஆனால், உண்மையில் ஆட்சியைப் பிடித்தது S.I.R. மட்டுமே!

இங்குக் கூட்டணிக் கட்சிகள் மாறுபடுகின்றன; பா...வும், தேர்தல் ஆணையமும் இணைந்து கைகோர்த்துச் சனநாயகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டதன் பலனால் கிடைத்த வெற்றி இது. அண்மைக்காலங்களில் தேர்தல் ஆணையம் பா...வின் கைப்பாவையாகவே மாறிப்போனது. இந்திய அரசமைப்பின் செயலாக்கத்தில் தலைகுனிவு ஏற்பட்ட தருணங்கள் இவை. “I am NOT the Chief election commissioner of the Govt. of India; but I’m Chief Election Commissioner of Indiaஎன்று கூறினார் டி.என். சேஷன். ஆனால், இன்று தனித்தியங்க வேண்டிய அவ்வமைப்பு  ஆள்வோரின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றுபோல மாறிப்போனது.  

இத்தகைய வெற்றிக்குப் பின் ஒளிந்திருக்கும் S.I.R.-இன் நடைமுறைச் செயல்பாடுகளைவாக்குத்திருட்டுஎன்கிறது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். திரைமறைவில் தீட்டப்படும் இந்தச் சூழ்ச்சியில், பல இலட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் முறையற்ற விதத்தில் நீக்கப்படுவதாகவும் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

இந்தியா முழுவதும் தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள், இரண்டு யூனியன் பிரதேசங்கள் என, 12 பகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத்  தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்து, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் தீவிரமாக இப்போது திருத்தம்நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போலி வாக்காளர்களின் பெயர்களையும், இறந்தவர்களின் பெயர்களையும் நீக்குவதற்காகவே இத்திருத்தம் மேற்கொள்ளப்படுவதாகத் தேர்தல் ஆணையம் விளக்கமளித்திருந்தாலும், இது மேற்கொள்ளப்படுகின்ற விதமும், நடைமுறைப்படுத்தப்படுகின்ற முறையும், வழங்கப்பட்டுள்ள குறுகிய கால அளவும், கட்டாயப்படுத்தப்படும் கூடுதல் பதிவுகளும் குறிப்பாக, 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் இணைந்தோர் தங்களின் பிறந்த தேதி, வாழ்விடத்திற்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும் எனக் கோரப்படும் பல சான்றிதழ்களும் இச்செயல்பாட்டின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம், நகரமயமாக்கல், புலம்பெயர்தல், தகுதியற்றவர்கள், புதிய வாக்காளர்களைச் சேர்த்தல்இறந்தவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படாதது, வெளிநாடுகளிலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வாக்குரிமை வைத்திருப்பது போன்ற காரணங்களால் இது மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்பட்டாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் ஏழரைக் கோடி மக்கள் இருக்கும் சூழலில் வழங்கப்பட்டிருக்கும் குறிப்பிட்ட காலஅளவு, தமிழ்நாட்டை இன்னொரு பீகாராக மாற்றும் சதியோ என நம்மை ஐயப்பட வைக்கிறது.

தமிழ்நாட்டின் சட்டமன்றத் தேர்தல் அண்மையில் வரவிருக்கும் சூழலில், ஒன்றிய அரசு இவ்வளவு வேகமாக இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் என்ன? புதிதாக வெளிவரும் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் இடம் பெறாவிட்டால், மீண்டும் முறையிட்டு வாக்குரிமை பெற போதிய கால அவகாசமும் இல்லை. உயிரோடு இருப்பவர்களுக்குக்கூட பல பின்னணி காரணங்களுக்காக வாக்கு மறுக்கப்படும் அபாயம் இருக்கிறது என்றும், இத்தகைய குறுகிய காலக் குளறுபடியால் ஒரு கோடி பேர் வாக்குரிமையை இழக்க நேரிடும் எனவும், அப்படி இழப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு வாக்களிக்க விரும்பாதவர்களாக இருக்கக்கூடும் எனவும் அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், தமிழ்நாட்டில் S.I.R. பணிகள் உரிய திட்டமிடலின்றி, பயிற்சிகள் அளிக்காமல், கூடுதல் பணியிடங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்காமல் அவசரகதியில் - போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள நிர்ப்பந்தம் செய்யப்படுவதாக, தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.பி. முருகையன் தெரிவித்திருக்கிறார் .

இந்தப் படிவம் எளிய நடையில் இல்லாதபோது, வாக்காளர்கள் அதைப் பிழையில்லாமல் பூர்த்தி செய்வதும், இப்பணியை மேற்கொள்ளக்கூடிய சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள், நகராட்சி- மாநகராட்சி பணியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு இன்னும் கேள்விக்குள்ளாகிறது.

இது முறையாகச் செய்யப்பட வேண்டிய வரலாற்றுப் பதிவு. ஆயினும்அவசர காலம், போதிய பயிற்சி இல்லாத பணியாளர்கள், முறையான - தெளிவு இல்லாத படிவங்கள், கட்டாயப்படுத்தப்படும் தேவையற்ற ஆதாரங்கள், கூடுதல் சான்றிதழ்கள் எனப் பல காரணங்களால் இது செய்யத்தக்க செயலாக எவரும் கணிக்கவில்லை. இத்தகைய சூழலில் ஐய்யன் வள்ளுவனின் அறம் கூறும் அடிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன...

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க

செய்யாமை யானுங் கெடும் (குறள் 466).

அதாவது, ஒரு செயலைச் செய்வதற்கு முன் நன்கு சிந்தித்து, செய்யத்தகுந்த செயல்களைச் செய்யவேண்டும். செய்யத்தகுந்த காரியங்களைச் செய்யாமல் விடுவதும், செய்யத்தகாத காரியங்களைச் செய்வதும் அழிவுக்கு வழிவகுக்கும் எனக் கூறும் வள்ளுவர், சரியான நேரத்தில், சரியான காரியங்களைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார்.

அவசியமான செயல் - ஆனால், அதிவேகமாக மேற்கொள்ளப்படுவதால், இன்று பீகாரில் S.I.R.-தான் அரியணை ஏறியது. இதன் நீட்சியாக அதே வழிமுறையில் தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் ஆட்சிப்பீடம் ஏறிவிடலாம் எனப் பா... பகல் கனவு காண்கிறது. ஆனால், அரியானாவும், பீகாரும் கற்றுக்கொடுத்த பாடத்தால் தூக்கத்திலிருந்து விழித்துக்கொண்ட தமிழர்கள் உறுதியாக பா... விற்குப் பாடம் கற்பிப்பார்கள்.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
கண்ணாடி முன்னிற்கும் பிரிவினைவாதிகள்!

வேற்றுமையில் ஒற்றுமைகாணும் மக்களாட்சித் தத்துவம் கொண்டது நம் இந்தியத் திருநாடு. அதன் அரசியலமைப்பின் முகப்புரை: “இந்தியாவை ஓர் இறையாண்மை, சமூகத்துவ, சமயச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு என்றும், அரசியல் நீதி (JUSTICE), தன் செயலுரிமை (LIBERTY), சமத்துவம் (EQUALITY), அனைவரிடத்திலும் உடன்பிறப்புணர்வை (FRATERNITY) ஊக்குவிக்கிறதுஎன்றும் குறிப்பிடுகிறது.

ஆயினும், நாட்டின் ஒற்றுமையைப் பற்றிப் பேச வேண்டிய அரசியல் தலைவர்கள், அவ்வப்போது சுயநலக்கோட்டைக்குள் சிக்கிக்கொண்டு வெறுப்பைக் கக்கி வெற்றிபெறலாம் என்ற எண்ணத்தோடு இன்று அரசியல் மேடைகளில் அநாகரிகமாக வலம்வந்து கொண்டிருக்கின்றனர். இத்தகைய அரசியல் தலைவர்களின் பட்டியலில் இன்று நமது பிரதமர் மோடியும் சேர்ந்திருப்பது பெரும் வேதனைக்குரியது.

அண்மையில் பீகார் சட்டப்பேரவைக்கு நடந்தேறிய இரண்டு கட்டப் பரப்புரைகளிலும் பிரதமர் மோடியின் பேச்சு விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது. தங்களது வாக்குறுதிகளை அடுக்கி, சாதனைகளைப் பட்டியலிட்டு, எதிர்க்கட்சிகள் மீதான ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைத்து வாக்குச் சேகரிக்க வேண்டிய பரப்புரைக்களம், கரைபுரண்டு வந்த காட்டாற்று வெள்ளம் பாய்ந்த காணி நிலம்போல, வரையறையற்ற வார்த்தை முழக்கங்களால் கொலையுண்டு கிடக்கிறது.

பீகார் தேர்தல் களத்தில் முதல் கட்டப் பரப்புரையின்போது பிரதமர் மோடி, “தெலுங்கானாவிலும் கர்நாடகாவிலும் காங்கிரஸ் தலைவர்கள் பீகாரிகளை இழிவுபடுத்துகின்றனர். தமிழ்நாட்டில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களைத் தி.மு..வினர் துன்புறுத்துகின்றனர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அவர்களோடு கூட்டணியில் இருக்கும் இராஷ்டிரிய ஜனதாதளம் அமைதியாக இருக்கிறதுஎன்று பேசியிருக்கிறார்.

பிரதமரின் பேச்சு, பிரிவினைவாதச் சிந்தனையின் உச்சக் கட்டம் என நாடெங்கிலுமிருந்தும் கண்டனக் கணைகள் தொடுக்கப்படுகின்றன. பிரதமரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.. ஸ்டாலின், “நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே மோடி அடிக்கடி மறந்துவிடுகிறார். இது போன்ற பேச்சுகளால் தன்னுடைய பொறுப்புக்குரிய மாண்பை அவர் இழந்துவிடக்கூடாது. ஒடிசா, பீகார் என்று எங்கு சென்றாலும் பா...-வினர் தமிழர்களின் மீதான வன்மத்தைத் தேர்தல் அரசியலுக்காக வெளிப்படுத்துவதற்கு தமிழ்நாடு மக்களின் முதலமைச்சர் என்ற முறையில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்று குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறே, எதிர்க்கட்சித் தலைவர் இராகுல்காந்தி, “இந்தியாவின் மக்களாட்சித் தத்துவத்தை மோடி இழிவுபடுத்தியுள்ளார்என்று கூறியிருக்கிறார்.

மேலும், சீதாமர்ஹி, பெத்தியா ஆகிய பகுதிகளில் இரண்டாம் கட்டப் பரப்புரை மேற்கொண்டபோது பிரதமர், “கடந்த 2005-வரை சுமார் 15 ஆண்டு காலமாக இங்கு காட்டாட்சி நடந்தது; கொள்ளையர்கள், ரவுடிகளின் சொர்க்கப் பூமியாக பீகார் மாற்றப்பட்டது. நாட்டுத் துப்பாக்கி, தவறான நிர்வாகம், கொடுமைகள், ஊழல் இவையே காட்டாட்சியின் அடையாளங் கள். காட்டாட்சி நடத்தியவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உங்கள் தலையில் நாட்டு துப்பாக்கியை வைத்து மிரட்டுவர்என்று பேசியிருக்கிறார்இதற்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, “பிரதமர் மோடியின் தலையில் டிரம்ப் நாட்டுத் துப்பாக்கி வைத்து மிரட்டினாரா? அதனால்தான்ஆபரேஷன் சிந்தூர்குறித்த டிரம்பின் கருத்துகளை மறுக்க பிரதமர் அஞ்சுகிறாரோ?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரிவினைவாதச் சிந்தனைகளைப் பேசுவது ஒன்றும் பா...-விற்குப் புதிதல்ல. 2024-இல் ஒடிசாவில் நடந்த தேர்தலில் நவீன் பட்நாயக் கட்சியில் இணைந்த தமிழ்நாடு அதிகாரி பி.கே. பாண்டியனை விமர்சித்துப் பேசுவதாக நினைத்து, “பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் பெட்டகச் சாவி தற்போது தமிழ்நாட்டில் இருக்கிறது. ஒடிசா மண்ணை ஒரு தமிழன் ஆளலாமா?” என்றெல்லாம் மாநில பிரிவினைப் பேசி வாக்குச் சேகரித்தார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

2023-இல் மணிஷ் காஷ்யப் என்ற யூடியூபர், வட மாநிலத்தின் ஏதோ ஒரு மூலையில் எடுக்கப்பட்ட வீடியோவைக் கொண்டு தமிழ்நாட்டில் புலம்பெயர் பீகார் தொழிலாளர்கள் தாக்கப்படுகின்றனர் என்று வதந்தி பரப்பினார். இந்த வீடியோ போலியானது என நிரூபித்து, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் மணிஷை கைது செய்தது தமிழ்நாடு காவல்துறை. ஆனால், பின்னாளில் பா... அவரைத் தங்கள் கட்சியில் இணைத்துக்கொண்டது.

தொண்டன் முதல் தலைவர் வரை பா...வில் யாவருடைய சிந்தனையிலும் பிரிவினைவாத மனப்பான்மை அரியணை போட்டு அமர்ந்திருக்கிறது என்பது வெள்ளிடை மலையாகிறது. அமைதியைச் சீர்குலைக்கும் எண்ணத்தில் வதந்தியைப் பரப்பிய மணிஷ் போல, இன்று பிரதமரே அப்படியான வதந்திகளைப் பரப்ப நினைப்பது பேரதிர்ச்சியை அளிக்கிறது. மதப் பிரிவினையை உண்டாக்கி வாக்குச் சேகரிப்பு நோக்கத்தில் இத்தனை காலம் பேசிக்கொண்டிருந்த பிரதமர் மோடி, தற்போது மொழி-மாநில ரீதியான பிரிவினைகளை விதைத்து வாக்குச் சேகரித்து வருவதாக அரசியல் ஆர்வலர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் வாழும் மற்ற மாநில மக்களுக்குப் பாதுகாப்பு இல்லைஎன்கிற பொய்யான பரப்புரை உலகெங்கும் வாழும் பல கோடி தமிழர்களின் மனத்தைப் புண்படுத்தியிருக்கிறது. இந்திய மாநிலங்களை ஒரு குடையின்கீழ் ஒன்றிணைத்த சர்தார் வல்லபாய் படேலுக்கு 3000 கோடி செலவில் சிலை வைத்துவிட்டு, அவருடைய சிந்தனை அடிப்படையில்தேசிய ஒற்றுமை தினத்தையும்கொண்டாட அழைப்பு விடுத்துவிட்டு, மாநிலங்களுக்கிடையே பகைமையை உண்டாக்கும் விதமாக எவ்வித ஆதாரமுமின்றி ஒரு வதந்தியை முன் வைத்து வாக்குச் சேகரிப்பது சங்கப் பரிவாரங்களின் வன்மம் நிறைந்த நீண்ட நெடுங்காலத் தேர்தல் சூட்சுமத்தை உணரச் செய்கிறது

ஒருவேளை, அப்படி ஒரு சூழல் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருந்தால் தன் அதிகாரத்தின் கீழ் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக நிலைப்பாடு எடுக்க வேண்டிய பிரதமர், தேர்தல் நேரத்தில் இது பற்றிப் பேசுவது அவருடைய உள்மன நோக்கத்தைப் புரிந்துகொள்ளச் செய்கிறது. வடக்கே செல்கின்றபோது தெற்கைப் பற்றி விமர்சிப்பதும், தெற்கே வந்தால்வடக்கு வளமாக இருக்கிறதுஎனப் பொய்ப் பிம்பங்களைக் கட்டமைப்பதையும் மரபாகக் கொண் டிருக்கிறார். ஒட்டுமொத்த நாட்டின் தலைவராக அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டிய தலைவர், பீகாருக்கும் தென் மாநிலங்களுக்குமிடையே பகைமையைத் தூண்டி, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க நினைக்கிறார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் காப்பேன்...” என்று கூறி மூன்று முறை பிரதமராகப் பதவி ஏற்றவர், அந்த உறுதிமொழியை ஒவ்வொரு தேர்தலின்போதும் மறந்துவிடுகிறார்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்எனும் பல்லுயிர் நேயத்தையும், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்என்னும் சகோதரத்துவத்தையும் உலகிற்கு உணர்த்தி, வந்தாரை வாழவைப்பது தமிழகம். யாவரையும் வாஞ்சையோடு அணைத்துக்கொள்ளும் அதன் தாயுள்ளத்தையும் தனிச்சிறப்பையும் சிதைத்ததோடு, ‘வேற்றுமையில் ஒற்றுமைஎன்ற இந்தியாவின் அடையாளத்தையும் அவர் சீர்குலைத்து விட்டார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தலுக்காக ஆண்டாண்டு காலமாக நம் முன்னோரால் நிலைத்து நிற்கும் நம் மரபை, இந்திய அரசியலமைப்பின் ஆன்மாவை நிலைகுலையச் செய்து விட்டார். தேச ஒற்றுமையைப் பலிகொடுத்துப் பெறும் வெற்றி நீண்ட காலம் நிலைக்காது; அதுபங்காளிகளுக்குள் பகை உண்டாக்கி பலனடையும் பாம்பு போன்றது; பேராபத்து என்றால் பால்வார்த்தவனே பல்லாக்கு ஏற்றி விடுவான்என்னும் கிராமத்துச் சொலவடைதான் நம் எண்ணத்தில் எழுகிறது.

நம் நாட்டின் தேசியப் பாடலானவந்தே மாதரம்இயற்றப்பட்டதன் 150-வது ஆண்டுக் கொண்டாட்டத்தைத் தொடங்கிவைத்துப் பேசுகையில், “கடந்த 1937-இல்வந்தே மாதரம்பாடலின் முக்கியப் பத்திகள் நீக்கப்பட்டபோதே பிரிவினை விதைகள் விதைக்கப்பட்டன; இத்தகைய பிரிவினைவாத மனப்பான்மை இப்போதும் நாட்டுக்குச் சவாலாகவே உள்ளதுஎன்றுவருத்தப்பட்டிருக்கிறார்பிரதமர் மோடி.

1870-இல் பங்கிம் சந்திர சாட்டர்ஜியால் இயற்றப்பட்டு, 1896-இல் இரவீந்திரநாத் தாகூரால் இசையமைக்கப்பட்டு, 1950, ஜனவரி 24 அன்று அரசியல் நிர்ணய சபையால் நாட்டின் தேசியப் பாடலாக முறைப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது இப்பாடல். முன்னதாக 1937-இல் மௌலானா அபுல்கலாம் ஆசாத், ஜவகர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், ஆச்சரிய நரேந்திர தேவா, இரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் கொண்ட குழுவின் பரிந்துரையால், ஆறு பத்திகள் கொண்ட இப்பாடலில் இரண்டு பத்திகள் மட்டுமே தேசியப் பாடலாகத் தேர்வு செய்யப்பட்டது. இந்தப் பாடல் குறித்து, இப்போது இன்றைய பிரதமரின்பிரிவினைவிமர்சனம் ஏன்? என்பது இப்போது நமக்கு நன்கு புரிகிறது.

இத்தகைய பிரிவினை விமர்சனத்தைப் பதிவு செய்யும் இந்திய பிரதமர் மோடியும் பா...வினரும்  கண்ணாடியின் முன்னிற்கும்போது பிரிவினைவாத மனப்பான்மை கொண்டவர்கள் யார்? என்பதை அவர்கள் முன்னிற்கும் கண்ணாடியே அவர்களுக்குக் காட்டும். ஏனெனில், கண்ணாடிகள் ஒருபோதும் பொய் சொல்வதில்லை.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
கிறிஸ்துவின் மனநிலையில்... கொன்சாகாவின் 250-வது யூபிலிக் கொண்டாட்டம்!

மறைப்பணி என்பது திரு அவையின் இதயம்என்றார் திருத்தந்தை பிரான்சிஸ். நற்செய்தியை, கிறிஸ்துவின் மேன்மைமிகு இறையாட்சியின் விழுமியக் கோட்பாடுகளை எங்கும் விதைத்து, சமத்துவச் சமூகம் படைப்பதே மறைப்பணி. இயேசு என்னும் நற்செய்தியையும், இயேசுவின் நற்செய்தியையும் அறியாத ஒருவருக்கு வழங்கி அவரை மெய்மறையில் சேர்த்து, தொடர்ந்து இறை உறவில் வளரச் செய்வது உலகோர் கண்களுக்கு மதமாற்றமாக அடையாளப்படுத்தப்பட்டது. ஆனால், இறை நம்பிக்கையை மட்டும் பகிர்ந்துகொள்ளாது மற்ற நம்பிக்கையாளர்களையும் மாண்புடன் மதித்து, அறச்சிந்தனைகளை விதைத்து, தனிமனிதனிலும் சமூகத்திலும் மாற்றத்தை முன்வைத்து, சமூக மேம்பாடு என்னும் உன்னத இலக்குடன் மதமாற்றம் அல்ல. மாறாக, மனமாற்றமும் மானுட ஏற்றமும் காண மேற்கொள்ளப்பட்டதே கிறித்தவ மறைப்பணி.

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்களுக்கு நற்செய்தியைப் பகிர்ந்து, அருளடையாளங்களை வழங்கி, நம்பிக்கையை வளர்க்கும் அன்றாட ஆன்மிகப் பணிகளோடு மறைப்பணி முற்றுப் பெறுவதில்லை; மாறாக, அது... “ஏழையருக்கு நற்செய்தி, சிறைப்பட்டோருக்கு விடுதலை, பார்வையற்றோருக்குப் பார்வை, ஒடுக்கப்பட்டோருக்கு உரிமை வாழ்வு, அருள்தரும் ஆண்டினை முழக்கமிட்டு அறிவிப்பது (லூக் 4:18-19) எனும் ஆன்மிக அடித்தளம் கொண்ட சமூகப் பணிகளைக் கண்முன் நிறுத்துவதே! குறிப்பாக, கல்வி, மருத்துவம், சுகாதாரம், பொருளாதார ஏற்றம், சமூக மாற்றம், மனிதமாண்பு, சமத்துவ உரிமை போன்ற தனிமனித மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளை முன்னெடுப்பதே கிறித்தவ மறைப்பணி.

திசையறியா, தேக நிலையறியா, தேச முறையறியா எண்ணம் கொண்டு, தன்னை முழுமையாக அறிந்து, அழைத்த தேவனை மட்டுமே வாழ்வில் கண்டு, தன் நாடு, இனம், தந்தை வீடு (தொநூ 12:1) என்னும் முகவரி துறந்து, முகமற்றவர்களின் முகமாய், குரலற்றவர்களின் குரலாய், முகவரியற்றவர்களின் முகவரியாய் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களே மறைப்பணியாளர்கள்.

கருணையும் அன்பும் கறையில்லா வாழ்வும் கொண்டு, கரைசேரா ஓடங்களுக்குக் கலங்கரை விளக்கானவர்கள் மறைப்பணியாளர்கள். இருள்சூழ் உலகில் தனிமனிதரிலும் சமூகத்திலும் அகமும் புறமும் ஒளியேற்றியவர்கள்; அவர்கள் மனிதர் முன் ஞான ஒளி வீசியவர்கள் (மத் 5:16).

பிறர் துயர் தீர்க்கும் பெருங்கருணை ஒன்றுதான் மனித வாழ்வை அர்த்தமுள்ளதாக ஆக்கும். “வாழ்க்கை என்பது தன்னிடம் உள்ளதைப் பிறருக்குக் கொடுப்பது; அடுத்தவரிடமிருந்து எதையும் எடுப்பது அன்றுஎன்றார் பிரெஞ்சுப் படைப்பாளி விக்டர் ஹயூகோ. “அன்பில்லாத இடத்தில் மனித முகங்கள் வெறும் படங்கள்; அவர்கள் பேசும் பேச்சு உயிரில்லா ஓசை கொண்டவைஎன்றார் ஆங்கில அறிஞர் பேகன். அவ்வகையில், அன்பும் கருணையும் மறைப்பணியாளர்களை உன்னத மகான்கள் ஆக்கியது; தன்னலம் துறந்து, பிறர்நலம் தேடும் பொதுவுடைமைச் சிந்தனையாளர்கள் ஆக்கியது; உறவில்லாத உயிர்களுக்கெல்லாம் ஓடிச்சென்று உதவத்துடிக்கும் உன்னதர்களாக்கியது; வாழ்வின் வலிகளால் சிதையுண்டு, வழி தொலைத்த மக்களுக்கு வாஞ்சையோடு வழிகாட்டும் சமூகப் போராளிகளாக்கியது. அத்தகைய வரிசையில் கிறித்தவர்களின் மறைப்பணியும், மறைப்பணியாளர்களின் இறைப்பணியும் கரையில்லாக் கடலாக வியப்பளிக்கிறது.

இக்கடலில் கலந்த நீர்த்துளிகளில் ஒன்றுதான் இறை ஊழியர் மைக்கில் அன்சால்தோ. மறைப்பணியின் மாண்பினை உணர்ந்து, பன்முகத்தளங்களில் தடம் பதித்து, கல்விப்பணி, மருத்துவப்பணி, சமூகப்பணி, சமத்துவம் காணும் விடுதலைப் பணி.... எனும் தனது பணிகள் தொடர்ந்திட இறைத்துணையுடன் அவர் தொடங்கியகொன்சாகா அருள்சகோதரிகள் துறவற சபைஇன்று தனது சபை நிறுவுநரின் கனவுகளை நனவாக்க, கடந்த 250 ஆண்டுகளாக மேற்கொண்டு வரும் பணிகள் பெரிதும் பாராட்டத்தக்கவை.

1775-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டிலுள்ள செசிலி தீவில் புனித லூயிஸ் தே கொன்சாகா இல்லத்தில் தொடங்கப்பட்டபிரான்சிஸ்குவின் புனித அலோசியஸ் கொன்சாகா சகோதரிகள் சபைஇன்று ஆல்போல் தழைத்து, விருட்சங்களாகத் தன் விழுதுகளைப் பரப்பி இப்பணிகளைத் தொடர்ந்து வருவது இறைத்திருவுளமே.

திருத்தந்தை லியோ, யூபிலி கொண்டாட்டத்தின் நினைவாகத் துறவற சபைகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தபோது, “தங்கள் சபை நிறுவுநர்களின் இலக்குகள் அடிப்படையில் ஒவ்வொருவரும் காலத்தின் அடையாளங்களை முறையாகத் தொடர்ந்து கணிக்கவேண்டும்; அன்றைய காலச்சூழல்களின் தேவைகளுக்கு ஏற்றார்போல் துணிவுடனும் தெளிவுடனும் தங்கள் சபை நிறுவுநர்கள் தூய ஆவியாருக்குப் பதிலளித்து, பணிகளை மேற்கொண்டதுபோல, கடந்த தலைமுறையினரின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, உயர்ந்த இலட்சியங்களைப் புரிந்துகொண்டு, ஒவ்வொருவரும் அவரவர் அருள்கொடைகளை அடையாளம் கண்டு, நம்பிக்கையுடனும் தாராள மனத்துடனும் நற்பணிகளைத் தொடர வேண்டும்; அதற்கு இறைவன் வழங்கிய அருள்கொடைகளைப் பயன்படுத்த வேண்டும்எனக் கேட்டுக்கொண்டுள்ளார் (வத்திக்கான், செப்: 20). அத்தகைய மனநிலையில், சபை நிறுவுநரின் ஆழ்மன உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம் எளிய வாழ்வு, ஆழமான அர்ப்பணம், தன்னலம் துறந்த பணி வாழ்வு, கடின உழைப்பு, இறையன்பில் வேரூன்றிய பக்தி முயற்சி, ஏழை எளிய மக்களின் மேம்பாட்டுக்கான அர்ப்பண வாழ்வு... என்னும் இலக்கு கொண்ட கொன்சாகா அருள்சகோதரிகளின் பணிகள் கிறிஸ்துவின் மனநிலையையும், சபை நிறுவுநரின் கனவுகளையும் அவருடைய ஆழமான ஆன்மிகத்தையும் பிரதிபலிக்கின்றன.

கத்தோலிக்கத் திரு அவை இவ்வாண்டினை மாபெரும் யூபிலி ஆண்டாகக் கொண்டாடிச் சிறப்பிக்கும் இவ்வேளையில், கொன்சாகா துறவியர் சபை தனது 250-வது யூபிலி ஆண்டைச் சிறப்பிப்பது பெரும் மகிழ்வுக்குரியதே! இவ்வேளையில், இச்சபையின் தலைமை அன்னை அருள்சகோதரி ஞானமணி FSAG, சபை நிர்வாக ஆலோசகர்கள் மற்றும் அருள்சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் வாசகர்கள் சார்பாகநம் வாழ்வுதனது வாழ்த்துகளையும் செபங்களையும் உரித்தாக்குகிறது. இந்த 250-வது யூபிலி விழாக் கொண்டாட்டத்தின் நினைவாக இச்சிறப்பிதழை வெளிக்கொணர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறது.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தமும் பறிபோகும் வாக்குரிமையும்!

வாக்குரிமை என்பது ஒரு சனநாயக நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனு(ளு)க்கும் தேர்தலில், வாக்கெடுப்புகளில் பங்கேற்க இந்திய அரசியலமைப்புச் சட்டம் 326-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகும். உரிமையும் கடமையும் கைகோர்த்திருக்கும் ஒரு சட்ட வரையறை இது. அதாவது, ‘இந்தியக் குடிமகனா(ளா) இருக்கும் ஒவ்வொரு நபரும் பொருத்தமான சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்த ஒரு சட்டத்தின் கீழும் அல்லது அதன் கீழும் நிர்ணயிக்கப்பட்ட தேதியில் 18 வயதிற்குக் குறையாதவராகவும் இந்த அரசியலமைப்பின் கீழே அல்லது பொருத்தமான சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட எந்தவொரு சட்டத்தின் கீழ் வசிக்காமை, மனநிலை சரியில்லாத தன்மை, குற்றம் - ஊழல் அல்லது சட்டவிரோத நடைமுறை காரணமாக, தகுதி நீக்கம் செய்யப்படாமலும் இருந்தால், எந்த ஒரு தேர்தலிலும் வாக்காளராகப் பதிவு செய்ய உரிமையுண்டுஎனத் தெரிவிக்கிறது.

இது குடிமக்களுக்குத் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் சக்தியையும், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் வாய்ப்பையும் அளிக்கிறது. அவ்வாறு வாக்களிப்பதன் மூலமே சனநாயகத்தை வலுப்படுத்தி நல்லாட்சியை உறுதி செய்ய முடியும். ஆகவே, இது வெறும் உரிமை மட்டுமல்ல; மாறாக, நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்யும் ஒரு பொறுப்பும் கூட. மேலும், குடிமக்கள் தங்கள் அரசை அதிக ஈடுபாடு கொண்டு அதைப் பொறுப்புணர்வுடன் வைத்திருக்க இந்த வாக்குரிமை பெரும் பங்காற்றுகிறது.

அவ்வாறே, வாக்காளர் பட்டியல் முறையாக ஆண்டுதோறும் அல்லது தேர்தல் காலங்களிலும் புதுப்பிக்கப்படுவதும், குடிமக்களின் வாக்குரிமை உறுதிப்படுத்தப்படுவதும் தேர்தல் ஆணையத்தின் அடிப்படைக் கடமையாகிறது. இந்தியத் திருநாட்டில் தனித்து இயங்கும் அதிகாரம் படைத்த தேர்தல் ஆணையம் அண்மைக் காலங்களில் ஒன்றிய பா... அரசின் கைப்பாவையாகச் செயல்படுவது மக்களாட்சி தத்துவத்தையும், அதன் மாண்பினையும் சீர்குலைப்பதாகவும், குடிமக்களின் மனசாட்சியைக் கேள்விக்குறியாக்குவதாகவும், வாக்குரிமையை நயவஞ்சகமாகப் பறிப்பதாகவும் இருப்பது பெரும் கவலையளிக்கிறது.

ஆட்டி வைப்பவர் ஆட்டி வைத்தால், ஆடாதார் யார் இருப்பார்?’ என்பதுபோல, அண்மைக் காலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் (Special Intensie Revision-SIR) என்னும் போர்வையில், பல்வேறு திரைமறைவுச் செயல்களைத் தேர்தல் ஆணையம் மேற்கொள்வது மக்களின் சனநாயக உரிமையைக் கேள்விக்குள்ளாக்குவதாகவே  அமைகிறது.

முதல் கட்டமாக, பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், 7.24 கோடி வாக்காளர்கள் அடங்கிய வரைவு வாக்காளர் பட்டியலைக் கடந்த ஆகஸ்டு 1-ஆம் தேதி வெளியிட்டது. ஒரு மாத காலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தப் பணிகளுக்குப் பிறகு, இறுதி வாக்காளர் பட்டியலை செப்டம்பர் 30-ஆம் நாள் வெளியிட்டது. அந்த வரைவு வாக்காளர் பட்டியலில், 21.53 இலட்சம் பேர் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்; 3.66 இலட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.

பீகாரைத் தொடர்ந்து, இரண்டாம் கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இம்மாநிலங்களில் வாழும் 51 கோடி வாக்காளர்களின் பெயர்கள் சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்கு உட்படுத்தப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம் ஆகிய நான்கு மாநிலங்களில் அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் ஒன்பதாவது வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியாகும். கடந்த 2002-2004 - ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, ஏறக்குறைய 21 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பணி தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

இந்த இரண்டாம் கட்ட வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி நவம்பர் 4-ஆம் தேதி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கும்  தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், “இரண்டாம் கட்டத் திருத்தப் பணியில் தகுதியுள்ள எந்த ஒரு வாக்காளர் விடுபடாததும், எந்த ஒரு தகுதியற்ற வாக்காளர் சேர்க்கப்படாததும் உறுதிப்படுத்தப்படும்என்று தெரிவித்திருக்கிறார்.

மத்தியில் ஆளும் ஒன்றிய பா... அரசு இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை மேற்கொள்வது பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்டிருப்பதாக ஊடகங்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் விமர்சிக்கும் சூழலில், நாமும் சற்று விழிகளை விசாலப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கிறது.

மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் இந்தச் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தச் செயல்பாட்டில்  விழிப்புடனிருந்து கடமையாற்ற வேண்டியுள்ளது என்றும், சனநாயகம் வழங்கியுள்ள மக்களின் அடிப்படை உரிமையான வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய பெரும் கடமையும் பொறுப்பும் ஒவ்வொருவருக்கும் இருப்பதாகவும் தமிழ்நாடு முதலமைச்சர்  தெரிவித்திருக்கிறார். அவ்வாறே, “உழைக்கும் மக்கள், பட்டியலினத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டவர்களின் பெயர்களை இதன் மூலமாக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் பா...-வும் அதன் கூட்டணிக் கட்சிகளும்  வெற்றி பெற்றுவிடலாம் எனக் கணக்குப் போடுகிறார்கள்என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

மேலும், சிறப்புத் தீவிரத் திருத்தத்திற்காக தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் முடக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். கடந்த சனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 6,36,12,950 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3,11,74,027 ஆகவும், பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3,24,29,083 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை 9,120 ஆகவும் இருந்தது.

ஆனால், ஒவ்வொரு காலாண்டுப் பருவத்திலும் பெயர்சேர்ப்பு, நீக்கப் பணிகள் இணையதளம் வழியாக மேற்கொள்ளப்பட்டு வருவதால், ஒட்டுமொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதன்படி, இதுவரை ஐந்து இலட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் வாக்காளர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6.41 கோடியாக உயர்ந்துள்ளது.

நவம்பர் 4-ஆம் தேதி தொடங்கும் இந்தக் களப்பணியில் 77,000 பேர் ஈடுபட்டுள்ளனர் என்றும், இது ஒருமாத காலம் தொடரப்பட்டு, டிசம்பர் 9-ஆம் நாள் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதன் அடிப்படையில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கான படிவங்கள் பெறப்படும்; அதன் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி ஏழாம் நாள் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

வாக்காளர் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதில் நமக்கு இருவேறு கருத்துகள் இல்லை. ஆயினும், அதை அவசர அவசரமாகச் செய்யாமல், நடைமுறைச் சிக்கல்களைக் களைந்து, தெளிவாகத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே நம்முடைய விருப்பம். 2026, ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் தேர்தல் வரவிருக்கும் சூழலில், அவசரக்கோணத்தில் கடமைக்காக இதைச் செய்வதும், தங்கள் வசதிக்காக இதை மாற்றுவதும் மக்களின் உரிமையைப் பறிப்பதாகவே பார்க்கப்படுகிறது.

பீகாரில் நடத்தேறிய சதித்திட்டங்கள் தமிழ்நாட்டிலும் நடக்கக்கூடாது; அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்பதே நமது எண்ணம். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இதை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்.

பசுத்தோல் போர்த்தி வரும் புலிபோல நயவஞ்சகத் திரைமறைவுத் திட்டங்களைச் சுமந்து வரும் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணியில் குடிமக்களாகிய நாம் நமது உரிமையையும், நம் உடன் வாழும் சகோதர-சகோதரிகளின் உரிமைகளைப் பேணுவதிலும், அதை நிலைநாட்டுவதிலும் விழிப்புடன் செயல்படுவோம்!

வாக்கு எங்கள் பிறப்புரிமை - நாட்டின் வளர்ப்

போக்கு எங்கள் பெருங்கனவு!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
சமூகம் தழைக்க சமநீதி கிடைக்க வேண்டும்! மூன்றாம் பாலினத்தவருக்கான சமவாய்ப்புக் கொள்கை!

சமூகநீதிஎனும் சொல்லாடல் சந்தை சரக்குபோல இன்று எங்கும் மலிவாகிப்போனது; அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் எத்தகைய வேறுபாடுமின்றி மேடைகள் தோறும் இக்கருத்தைக் கையாள்கின்றன; காதுகளில் அன்றாடம் இது எதிரொலிக்கிறது. ஆயினும், சமூகநீதி என்றதும் சிலர் முகம் மலர்வதும், சிலர் முகம் சுளிப்பதும், சிலர் மிகவும் கவனத்தோடு பொருள், பதம் தேடி கையாள்வதும், இன்னும் சிலர் அமைதி காப்பதும் வாடிக்கையாகிப் போனது.

இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 14-18 - மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதைத் தடைசெய்து, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று அனைவருக்குமான சமத்துவத்தை உறுதிசெய்கிறது. மேலும், அரசின்கீழ் உள்ள எந்தவோர் அலுவலகத்திலும் வேலைவாய்ப்பு அல்லது நியமனங்களில் அனைத்துக் குடிமக்களுக்கும் சமவாய்ப்புகள் உள்ளன; ஆகவே, மதம், இனம், சாதி, பாலினம், வம்சாவளி, பிறந்த இடம் அல்லது வசிக்கும் இடம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்பட முடியாது என்றும்பள்ளிகள், கடைகள், உணவகங்கள், ஓட்டல்கள், கிணறுகள், சாலைகள் மற்றும் அரசால் பராமரிக்கப்படும் குளியல்தளங்கள் போன்ற பொது ஓய்வு விடுதிகளில் குடிமக்கள் சமமான அணுகலைப் பெறுகின்றனர் என்றும் இந்திய அரசமைப்புச் சட்டம் தெளிவுபடுத்துகிறது.

இவ்வாறு, சமமான பாதுகாப்பையும், பொது இடங்களுக்குச் சமமான அணுகலையும், அரசின் கீழ் வேலைவாய்ப்புகளில் சமவாய்ப்பையும் உறுதி செய்து, யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்லர்; எல்லாரும் சமமானவர்கள், எல்லாரும் உரிமைக் குடிமக்கள், ‘எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்என்று கூறப்பட்டாலும், நடைமுறையில் ஆயிரமாயிரம் வேறுபாடுகளைக் கொண்டிருப்பது வேதனையளிக்கிறது.

எல்லாரும் சமம்எனும் சமத்துவச் சமூகத்தில், பிறகு எப்படி மையம் - விளிம்புநிலை, உயர்வு - தாழ்வு, வறுமை - வளமை என்ற வேற்றுமை எழுந்தது? மானுடச் சமூகம் இன்று, சமூக - பொருளாதார - அரசியல் - வாழ்வியல் தளங்களில் முரண்பட்டுக் கிடப்பது வெள்ளிடைமலை. இத்தகைய முரண்பாடு கொண்ட வேற்றுத் தளங்களால் ஒருசாராரின் இருத்தலும் வாழ்வியலும் கவலைக்குள்ளாகி, அடிப்படை உரிமைகள் சார்ந்த பல கேள்விகளைச் சமூகத்திற்கு முன்வைக்கின்றன.

விளிம்புநிலை மக்கள் யார்? ஏன் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டனர்? அத்தகைய மக்களுக்கு முன்னுரிமை தர வேண்டாமா? சமத்துவம் - சமபங்கு - சமூகநீதி என்பதெல்லாம் எப்போது பிறக்கும்? என ஆயிரம் கேள்விகள் எழும்புகின்றன.

சமத்துவமும் சமபங்கும் கைகோர்க்கும் இடம்தான் சமூகநீதி (கொ)ண்ட சமூகம் என்பதை நாம் உணரவேண்டும். சமத்துவம் (Equality), சமபங்கு (Equity) எனும் இரு சமூகத்தின் அறிவியல் கோட்பாடுகளும் சற்றே வேறுபட்டு நிற்கின்றன. சமத்துவம் என்பது தனிமனிதத் தேவைகளை, உரிமைகளைத் தனிப்பட்டவிதமாகக் கருதாது அனைவருக்கும் சமமாக, பொதுவான நலன்களை முன்வைக்கின்றது. சமபங்கு என்பது சமூகப் பிரிவுகளில் எல்லாருக்கும் எல்லாமும் சமமாகக் கிடைக்கவேண்டும் என்பதை உறுதி செய்கிறதுஇதையேகடையருக்கும் கடைத்தேற்றம்என்ற ஜான் ரஸ்கினின் தத்துவமும், அதிலிருந்து பிறப்பெடுத்த காந்தியின் சர்வோதயச் சமுதாயக் கொள்கையும் வலியுறுத்துவது.

இத்தகைய பின்னணியில், உரிமைக்காகவும் வாழ்வாதாரத்திக்காகவும் ஏன்... தங்கள் இருத்தலுக்காகவுமே போராடும் ஒரு சமூகம்தான்திருநங்கை, ‘திருநம்பிஎனும் மூன்றாம் பாலினத்தவர்.

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு அதிகார அரியணை அவர்களிடமிருந்து அகன்றுவிடாதவண்ணமிருக்க முதலில் அன்றாடம் கூட்டணி அரசியல் செய்திட வேண்டும். இரண்டாம் நிலையில் இட ஒதுக்கீடு, இலவசம், கடனுதவி, சமூகநீதி என அலுவலக அரசியல் செய்திட வேண்டும். மூன்றாவதாக, உழவரின் போராட்டம், மீனவரின் வாழ்வுரிமைப் போராட்டம், நெசவாளியின் வாழ்வாதாரப் போராட்டம், துப்புரவுப் பணியாளர்களின் பணிநிரந்தரப் போராட்டம், ஓட்டுநர்களின் ஊதியப் போராட்டம், கனரக வாகனங்களின் சுங்கச் சாவடி வரிக்கு எதிரான போராட்டம் எல்லாம் பேச்சுவார்த்தை அரசியல் செய்திட வேண்டும். அதைக் கடந்துதான் மூன்றாம் பாலினத்தவர் வாழ்வுரிமை, மாற்றுத்திறனாளிகளின் பணிநியமன உரிமை எல்லாம்.

இத்தகைய சூழலில், தனது பாலின அடையாளம் காரணமாக உத்தரப்பிரதேசம் மற்றும் குஜராத்தில் உள்ள இரு கல்வி நிறுவனங்களில் வேற்றுமை பாராட்டி, தன்னை ஆசிரியர் பணியிலிருந்து நீக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ராகஜோன் கௌஷிக் என்ற திருநங்கை மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் ஜே. பி. பார்திவாலா, ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுதாரர் பணிநீக்கம் செய்யப்பட்டது குற்றம் எனத்  தீர்ப்பளித்ததுடன், அவ்விரு பள்ளிகளும், இரு மாநில அரசுகளும் தலா ஐம்பதாயிரம் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளனர்.

மேலும், மூன்றாம் பாலினத்தவர் குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் கொண்டுள்ள மெத்தனப் போக்கால் 2019-ஆம் ஆண்டின் மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், 2020 -ஆம் ஆண்டின் மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள்  பாதுகாப்பு விதிமுறைகள் ஆகியவை பயன்பாட்டில் இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் கடிந்துகொண்டதுடன், அவர்களுக்குச் சமவாய்ப்பு கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்

அவ்வாறே, ஒவ்வொரு மாநிலத்திலும் யூனியன் பிரதேசத்திலும் மூன்றாம் பாலினத்தவருக்கு நல வாரியம் அமைக்கப்பட வேண்டும்; மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்குப் பாதுகாப்புப் பிரிவு ஏற்படுத்தப்பட வேண்டும்; இவ்விதிமுறை மீறலைத் தெரிவிக்க நாடுதழுவிய அளவில் கட்டணமில்லாத் தொலைப்பேசி எண் உருவாக்கப்பட வேண்டும்; புகார்களைப்பெற அதிகாரி நியமிக்கப்பட வேண்டும் எனவும், மூன்றாம் பாலினத்தவருக்கான சமமான வேலைவாய்ப்புகள் மற்றும் மருத்துவச் சேவையை உறுதி செய்வதற்காக, சமவாய்ப்புக் கொள்கையை வகுப்பது தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆஷா மேனன் தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது. விரைவில் அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கவும், அவ்வறிக்கை கிடைத்த மூன்று மாதங்களில் சமவாய்ப்புக் கொள்கையை  மத்திய அரசு வெளியிட வேண்டும் என்றும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவு உச்ச நீதிமன்றத்திற்கு அளித்துள்ள தனி அதிகாரத்தைப் பயன்படுத்தி, கடுமையான தீர்ப்பையும் வழிகாட்டுதலையும் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாலின உறுதிப்படுத்தல் அல்லது அறுவை சிகிச்சை தலையீட்டிற்கு மூன்றாம் பாலினத்தவர் தங்கள் முதலாளியின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தது, அவர்களின் தனிப்பட்ட சுயாட்சியை உச்ச நீதிமன்றம் நிலைநிறுத்தியுள்ளது. அவ்வாறே, மூன்றாம் பாலினத்தவர் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-இன்படி, பிறப்புச் சான்றிதழ்களில் தங்கள் பெயரையும் பாலினத்தையும் மாற்றிக்கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு என்பதை கர்நாடக உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

இத்தகைய சூழலில், அரசு தற்போது மூன்றாம் பாலினத்தவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியுள்ளது. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் தொடங்கப்பட்டஸ்மைல் திட்டம் -The SMILE (Support for Marginalized Individuals for Livelihood and Enterprise) கல்வி, திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளுக்கான நிதி உதவி மூலம் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆதரவை வழங்குகிறது. மேலும், அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்டங்களை அணுகுவதற்கான மூன்றாம் பாலினத்தவருக்கான அதிகாரப் பூர்வ இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அவ்வாறே, மாற்றுத்திறனாளி ஓய்வூதியத் திட்டத்தில் மூன்றாம் பாலினத்தவர் இப்போது சேர்க்கப்பட்டுள்ளனர்.

அடிமேல் அடிவைக்கும்போது அம்மியும் நகரும் என்பது போலத்தான், நமது உரிமைக்கான குரலும் பதிவும். சமநீதியும் சமூக நீதியும் பேசும் நாம், நம்முடன் வாழும் மூன்றாம் பாலினத்தவர்களின் குரலைக் கேட்காமலிருப்பதும், அவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுக்காமல் இருப்பதும், அவர்களைச் சக மனிதர்களாக மதிக்காமலிருப்பதும் சமூகக் குற்றம் மட்டுமல்ல, சமூகப் பெரும் பாவமும் கூட.

இவர்களை மாண்புடன் மதிப்போம்; மனித நேயத்துடன் காப்போம். ஏனெனில், யாவரும் இந்நாட்டு மன்னர்களே!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்