திராவிடக் கருத்தியல் ஆழமாக வேரூன்றிய தமிழ் மண்ணில், அறுபது ஆண்டுகளாகக் கோலோச்சிய இருபெரும் துருவங்களான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகளைத் தனித்து எதிர்கொண்டு, தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஈட்டியுள்ள வெற்றி, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மைல் கல்! மக்களாட்சியின் மாண்பினை உலகிற்குப் பறைசாற்றும் வகையில், வன்முறையற்ற முறையில் ‘ஒற்றை விரல் புரட்சி’ வாயிலாகப் புதியதோர் அரசியல் விடியலை ஏற்படுத்திய தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கும், புதிய முதல்வராகப் பொறுப்பேற்கவுள்ள திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கும் எமது வாழ்த்துகள்!
எனினும்,
இந்த வெற்றி வெறும் கொண்டாட்டத்திற்குரியதா? அல்லது ஆழமான அரசியல் ஆய்வுக்குரியதா? என்பதை நடுநிலையோடு அணுக வேண்டியது காலத்தின் கட்டாயம்.
தமிழ்நாடு
சட்டப்பேரவைத் தேர்தல் - 2026 இளைய தலைமுறையின் வீரியமிக்கப் பங்களிப்பால் ஒரு மாபெரும் வாக்குப் புரட்சியைக் கண்டுள்ளது. போராட்டங்கள், வன்முறைகள் மற்றும் குருதி சிந்தும் கலவரங்கள் வாயிலாக உலகெங்கிலும் ஆட்சி மாற்றங்கள் அரங்கேறும் வேளையில், தமிழ்நாடு அமைதியான முறையில் வாக்களிப்பின் மூலம் ஆட்சி-அதிகார மாற்றத்தை நிகழ்த்தியுள்ளது.
இருப்பினும்,
இந்த வெற்றி ‘ஏமாற்றம் தந்த மாற்றமா?’ அல்லது ‘மாற்றம் தரவுள்ள ஏமாற்றமா?’ என்ற வினா அரசியல் அரங்கில் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் இன்றைய உணர்வுநிலை என்பது மகிழ்ச்சி, ஆரவாரம் ஆகியவற்றைத் தாண்டி அதிர்ச்சி, கலக்கம், பேரச்சம் மற்றும் கவலை எனப் பல உணர்ச்சிகளின் கலவையாக
இருக்கிறது. தூய நீர் சுமந்துவரும் நதி, சாயக்கழிவுகள் கலந்துவரும் கால்வாய், பசுமை தந்து தாகம் தீர்த்துவரும் ஆறு, அழுக்கு நிறைந்த கூவம் என யாவற்றையும் உள்வாங்கித்
தன்னுள் கரைத்துக்கொள்ளும் கடலைப் போன்றதொரு விசித்திரமான சூழலில் இன்று தமிழ்நாடு சமூக - அரசியல் களம் நிலவுகிறது.
வெறும்
தரவுகளைச் சேகரித்து விமர்சனப் பார்வையை முன்வைப்பது மட்டுமல்லாமல், சாமானிய மக்களின் அடி மனத்து எண்ணங்களைப் பிரதிபலிப்பதே ஒரு நேர்மையான ஊடகவியலாளனின் அறம். ஆட்சிக் கட்டிலில் அமரப்போகும் த.வெ.க.வின் அரசியல் நிலைப்பாடு, அவர்களின் தேர்தல் உத்திகள், திரைப்பிம்பத்தின் அதீத தாக்கம், அதன் பின்னே இயங்கும் பெரும் முதலாளிகளின் நிழல், ‘தீய சக்தி - கொள்கை எதிரி’ என்ற முழக்கங்கள் மற்றும் இரசிகர் (தொண்டர்) கூட்டத்தின் செயல்பாடுகள் எனப் பல்வேறு பரிமாணங்களை நாம் நுணுகி ஆராயவேண்டும்.
த.வெ.க.வின்
வெற்றி குறித்து குறிப்பிடும் தவத்திரு. திருவடிக்குடில் சுவாமிகள், “உணவில் உப்பு அதிகமானால் ‘உப்பு’ என்று சொல்கிறோம்; குறைவானால் ‘உப்பு’ என்று கேட்கிறோம். இரண்டிலும் எங்கோ ‘தப்பு’ நடந்திருக்கிறது என்பது மட்டும் உண்மை. வெற்றி பெற்றவர்களையும் வாக்களித்தவர்களையும் ஆட்டிசம் குறைபாடுள்ள அழகிய குழந்தைகளாகவே பார்க்கிறேன். ஒதுக்கித் தள்ளவும் முடியாது; பெரிய பொறுப்பை ஒப்படைக்கவும் முடியாது. இவர்களுக்குத் தேவை அரவணைப்புடன் போதுமான சிகிச்சை. ஒரே உடலில் ஒருபுறம் குளிர்ச்சியும், மறுபுறம் வெப்பமும் கொண்ட உணர்வு. மறுபுறமும் குளிரப் போகிறதா? அல்லது சுட்டெரிக்கப் போகிறதா? என் பதை இவர்களது அடுத்தடுத்த செயல்பாடுகளை வைத்தே தீர்மானிக்க முடியும். அறிஞர் அண்ணா தொடங்கி செல்வி ஜெயலலிதா வரையிலான பேராளுமை மிக்கவர்களைப் பார்க்கிறோம். அப்படி ஒருவரின் தேவையுமுண்டு. ஆனால், அவர் திரைத்துறையில் இருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கின்ற தமிழ்நாட்டு மக்களின் பொது அறிவின்மை ஒரு பற்றாக்குறைதான்” என்கிறார்.
சுவாமிகளின்
இக்கருத்து, ஆளுமைமிக்கத் தலைவர்களின் தேவையை வலியுறுத்தும் அதே வேளையில், திரையுலகை மட்டுமே தலைவர்களை உருவாக்கும் தொழிற்சாலையாகக் கருதும் மக்களின் ‘பொது அறிவின்மையை’ மிகக்
கடுமையாகச் சாடுகிறது.
அதேபோல
மூத்த பத்திரிகையாளர் விஜய சங்கர் அவர்களின் எச்சரிக்கை மிகவும் கவனிக்கத்தக்கது: “பினராயி விஜயன்,
மு.க. ஸ்டாலின், மம்தா
பானர்ஜி எனும் மூன்று முக்கிய எதிர்க்குரல்களின் தோல்வி, இந்திய அரசியலை ஓர் அபாயகரமான கட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறது. இனி பா.ச.க.வின் ஆட்டம் அதிகமாகும். இன்று கொண்டாடும் எத்தனை பேர், இந்த அபாயத்தை உணர்ந்திருக்கிறார்கள் என்று தெரியாது. அனுபவம் பல பாடங்களைக் கற்றுத்தரும்” என்கிறார்.
இது தமிழ்நாட்டின் மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஏற்படப் போகும் அச்சுறுத்தலைச் சுட்டிக்காட்டுகிறது.
அவ்வாறே,
“அடுத்து என்ன நடக்கும்... விஜய் தமிழ்நாட்டின் முதல்வராகக் கூட்டணி அமைத்துப் பதவியேற்பார்; அக்கூட்டணியைப் பா.ச.க.
பின்னிருந்து இயக்கும். அவர் வாக்களித்த எந்த உறுதி மொழியையும் அவரை நிறைவேற்றவிடாமல் பா.ச.க.
பார்த்துக்கொள்ளும். இரண்டு மாதம் கழித்து ‘கரூர் வழக்கு’ கையில் எடுக்கப்படும். விஜய்யும் அவர் கூட்டாளிகளும் CBI-யால்
கைது செய்யப்படுவார்கள். பா.ச.க.
நியமிக்கின்ற ஒருவர் பதவியில் இருப்பார். அன்றிலிருந்து பெரும்பாலான எம்.எல்.ஏ.-க்கள் பா.ச.க.-வில்
சேருவார்கள். அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ்நாட்டைப் பா.ச.க.
ஆளும். அறுபது ஆண்டுகளாகப் பார்த்துப் பார்த்து வளர்த்த பயிரை விளையாட்டுப் பிள்ளைகள் வேரோடு பிடுங்கி வீதியில் எறிந்துவிட்டார்கள்; இனி விஷச் செடிகள் மட்டுமே இங்கே வளரும். அவரவர் வீட்டுப் பிள்ளைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள். தமிழினம் தம் அடையாளத்தை இரண்டே ஆண்டுகளில் இழந்துவிடும்” எனும்
ஊடகவியலாளர் லூர்துராஜ் அவர்களின் கணிப்பு இன்னும் அச்சமூட்டுவதாக உள்ளது. இளைய தலைமுறையினரின் உணர்ச்சிவசப்பட்ட முடிவுகள், நீண்ட காலமாகப் பேணிக்காக்கப்பட்ட சமூக நீதிப் பயிரை வேரோடு அழித்துவிடுமோ என்ற குமுறல் இதில் தெரிகிறது.
எழுத்தாளர்
சித்தன் எபி அவர்கள் தேர்தலின் பின்னால் இருக்கும் ‘கார்ப்பரேட்’ உத்திகளைத்
தோலுரித்துக் காட்டுகிறார். அவரோ, “கட்சிகளே நேரடியாகத் தேர்தலை எதிர்கொண்ட காலமெல்லாம் மாறிக்கொண்டே வருகிறது; தேர்தல் வல்லுநர்கள், தேர்தல் உத்தியாளர்கள், இன்ஃப்ளூவன்சர், மார்க்கெட்டிங் நிறுவனங்கள், சமூக ஊடக ஊடுருவல்கள் என இது பெரிய
பிரம்மாண்டத் திட்டமாக மாறியிருக்கிறது. யாரை வேண்டுமானாலும் முன்னிறுத்தி எளிய மக்களின் மனத்தை மாற்றிவிட முடியும். ‘மாற்றம்’,
‘ஆயிரம் கோடியை விட்டுட்டு வருகிறார்’,
‘ஒரு தடவை வாய்ப்பு கொடுக்கலாமே’ போன்ற எந்தவித வாக்குறுதியும் கொள்கையும் கோட்பாடும் இல்லாத வார்த்தைகளையே நம் மனத்தில் நம்பிக்கையாக விதைக்கும் பணிகளை அவர்களால் செய்துவிட முடியும்.
முற்றும்
முழுவதுமாக எந்தக் கட்சி அடிப்படையும் இல்லாமல், இப்படியான கார்ப்பரேட் நிறுவனங்களின் இமேஜ் கட்டமைப்பு மூலமாக மட்டுமே மக்களின் மனத்தை ஈர்த்து இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றவர் விஜய் மட்டும்தான். இது ஓர் ஆபத்தான தொடக்கம். எளியோரிடமிருந்தும் கொள்கைகளிடமிருந்தும் கோட்பாடுகளிடமிருந்தும் தேர்தலும் அரசியலும் ஆட்சியும் முழுவதுமாகத் தள்ளிப்போவதன் குறியீடு. TVK is the easiest shortcut for RSS and BJP” என்கிறார்.
ஆகவே, வெறும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மக்களின் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்பது சனநாயகத்தின் வீழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.
இத்தனை
விமர்சனங்களுக்கும் குமுறல்களுக்கும் மத்தியில் நேர்மறையான பார்வையும் நிலவுகிறது. ஆந்திராவின் என்.டி. ராமராவ் மற்றும் தமிழ்நாட்டின் எம்.ஜி.ஆர். போன்ற
பேராளுமைகளைப் போல, கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலேயே ஆட்சியைப் பிடித்திருப்பது மக்களின் ‘மாற்றத்திற்கான’ தாகத்தைக்
காட்டுகிறது. சாதி, மதம், இனம் கடந்து மக்கள் த.வெ.க.வை ஆதரித்திருப்பது ஆரோக்கியமான அறிகுறியாகக்
கருதப்பட்டாலும், அந்த ஆதரவு ஒரு ’திரைப்பிம்பத்திற்கு’ வழங்கப்பட்டதா?
அல்லது ‘திறமையான மேலாண்மைக்கு’ வழங்கப்பட்டதா?
என்பது வருங்காலங்களில்தான் தெரியும்.
த.வெ.க. முன்வைத்த
‘மாற்றம்’ தேர்தலில்
நிகழ்ந்திருக்கிறது. இனி மாற்றம் எங்கும் நிகழும் என்பது நமது நம்பிக்கை. ஆட்சிக் கட்டிலில் அமரும் கட்சி ‘மாற்று அரசியல்’ செய்தாகவேண்டும்; ஆட்சிக் கட்டிலை இழந்த திராவிடக் கட்சிகளும் தங்கள் கட்சியில் மாற்றம் நோக்கிய நகர்வுகளை முன்னெடுத்தாகவேண்டும்.
இறுதியாக,
மக்களின் வாக்கை வெல்வது எளிது; ஆனால், மக்களின் நம்பிக்கையைத் தக்க வைப்பது கடினம். தமிழ்நாட்டின் இருபெரும் சக்திகளை வீழ்த்தி, புதிய சக்தியாக உருவெடுத்துள்ள திரு. விஜய் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும், மாநிலத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் காட்டும் தீவிரத்தில்தான் அவரது உண்மையான வெற்றி அடங்கியுள்ளது. ‘திரைக் கலைஞர்’ என்ற விமர்சனத்தைத் தகர்த்து, ‘விவேகமுள்ள தலைவர்’ என்று அவர் நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
தமிழ்நாடு
ஒரு பொற்காலத்தை நோக்கிப் பயணிக்கிறதா? அல்லது ஓர் இருண்ட காலத்தை நோக்கித் தள்ளப்படுகிறதா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். மாணிக்கவாசகர் வாக்குப்படி, “நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே”
- திருவருள் எதைச் செய்யவிருக்கிறது என்பதை வரலாறு தீர்மானிக்கும்.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
இந்தியக் குடியரசு அதன் அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாக சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மதச்சார்பின்மை ஆகிய உன்னத விழுமியங்களைத் தனது ஆன்மாவாகக் கொண்டுள்ளது. ஆனால், நடைமுறையில் இந்த விழுமியங்கள் ‘தலித் கிறித்தவர்கள்’ எனும் பெரும் சமூகத்திற்கு மட்டும் எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றன.
சாதியப்
பாகுபாட்டின் கோரப்பிடியிலிருந்து விடுபட விழைந்து கிறித்தவத்தைத் தழுவிய தலித் மக்கள், இன்று மதத்தின் பெயரால் அரசமைப்புச் சட்டம் வழங்கும் பாதுகாப்பிலிருந்தும், நீதியின் கரங்களிலிருந்தும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுகிறார்கள்.
அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய ‘சிந்தாதா ஆனந்த்’ வழக்கின் தீர்ப்பு, இந்த வரலாற்று அநீதியை மீண்டும் ஒருமுறை ஆழமாக உறுதிப்படுத்தியுள்ளது.
2026, மார்ச் 24 அன்று
உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோர் கொண்ட அமர்வு, ‘சிந்தாதா ஆனந்த் எதிர் ஆந்திரப் பிரதேச அரசு’ என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பு அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. ‘இந்து, சீக்கியம் மற்றும் பௌத்த மதங்களைத் தவிர, வேறு மதங்களுக்கு மாறும் தலித்துகள், தங்களது அட்டவணைச் சாதி (SC) அந்தஸ்தை
உடனடியாகவும் முழுமையாகவும் இழக்கிறார்கள்’ என்பதே
அந்தத் தீர்ப்பின் சாரம்.
இந்த
வழக்கின் பின்னணி மிகவும் வேதனையானது. இந்து மதத்திலிருந்து கிறித்தவத்திற்கு மாறி பத்து ஆண்டுகள் அருள்பணியாளராகப் பணியாற்றிய சிந்தாதா ஆனந்த், உயர் சாதியினரால் தாக்கப்பட்டார். அவர் தனது சாதியைக் குறிப்பிட்டு இழிவுபடுத்தப்பட்டதாகப் புகார் அளித்தபோது, அவர் கிறித்தவர் என்பதால் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் (SC/ST Act) அவருக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது என நீதிமன்றம் கைவிரித்துவிட்டது.
அதாவது, ஒருவரைத் தாக்குபவர் சாதிய வன்மத்துடன் தாக்கினாலும், தாக்கப்படுபவர் கிறித்தவராக இருந்தால் அந்த வன்மம் சட்டத்தின் பார்வையில் சாதியக் குற்றமாகக் கருதப்படாது என்ற விபரீத தர்க்கம் இங்கே முன்வைக்கப்படுகிறது. சிந்தாதா ஆனந்த்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு,
ஒரு சமூகப் பேராபத்து; இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மதச்சார்பின்மைக்கு விடப்பட்ட பெரும் சவால்!
உச்ச
நீதிமன்றத்தின் இந்த அணுகுமுறை, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவு (சமத்துவம்), 15-வது பிரிவு (மத அடிப்படையிலான பாகுபாடின்மை)
மற்றும் 25-வது பிரிவு (மதச் சுதந்திரம்) ஆகியவற்றிற்கு முற்றிலும் முரணானது. ஒரு நபர் தனது ஆன்மிகத் தேடலுக்காகவோ அல்லது சமூக விடுதலைக்காகவோ ஒரு மதத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, அரசு அவருக்கு வழங்கிய சமூகப் பாதுகாப்பைப் பறிப்பது என்பது மதத்தைத் தேர்வு செய்யும் உரிமையைத் தண்டிப்பதற்குச் சமமாகும்.
நீதிமன்றம்
முன்வைக்கும் வாதம் என்னவெனில், கிறித்தவம் மற்றும் இசுலாம் போன்ற மதங்கள் சாதியக் கட்டமைப்பை மதநம்பிக்கை அடிப்படையில் ஏற்பதில்லை என்பதாகும். ஆனால், சமூகம் என்பது இறையியல் கொள்கைகளால் இயங்குவதில்லை; அது நிலப்பரப்பின் எதார்த்தங்களால் இயங்குகிறது. கிறித்தவத்திற்கு மாறிய பிறகும் ஒரு தலித் அதே நிலப்பரப்பில் (சமூகத்தின் பார்வையில் சேரியில்) வசிக்கிறார்; அதே சமூகப் புறக்கணிப்பை எதிர்கொள்கிறார்; அதே தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகிறார் என்பதுதான் நிதர்சனம். 1985-ஆம் ஆண்டின் ‘சூசை எதிர் இந்திய ஒன்றியம்’
வழக்கிலிருந்து
இன்றுவரை, “மதம் மாறிய பிறகும் சாதியப் பாகுபாடு தொடர்கிறது என்பதற்கான அனுபவப்பூர்வமான ஆதாரங்கள் இல்லை” என்று நீதிமன்றம் கூறுவது, எரியும் கொள்ளியை மறைக்கும் செயலே அன்றி வேறல்ல.
உச்ச
நீதிமன்றம் சில மதங்களுக்கு மட்டும் (சீக்கியம், பௌத்தம்) சலுகை வழங்கி, கிறித்தவம் மற்றும் இசுலாத்தை விலக்கிவைப்பது பாரபட்சமானது; இது நீதித்துறையின் முரண்பட்ட நிலைப்பாடுகளைக் காட்டுகிறது. 1956 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்கள் மூலம் சீக்கிய தலித்துகளும், பௌத்த தலித்துகளும் SC அந்தஸ்தைப்
பெற்றனர். இந்த மதங்களும் பிறப்பின் அடிப்படையிலான பாகுபாட்டைத் தத்துவ ரீதியாக எதிர்ப்பவைதான். அப்படியிருக்க, கிறித்தவ தலித்துகளுக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுவது ஏன்?
மேலும்,
‘கைலாஷ் சோன்கர் எதிர் மாயாதேவி’
(1983) வழக்கின்படி, ஒரு தலித் கிறித்தவர் மீண்டும் ‘தாய் மதத்திற்கு’ (இந்து
மதம்) திரும்பினால் அவருக்கு மீண்டும் SC அந்தஸ்து
கிடைக்கும் என்கிறது நீதிமன்றம். இது ‘தண்டனை மற்றும் சலுகை’ என்ற அடிப்படையிலான ஒரு மதமாற்றத் தூண்டலாகவே தெரிகிறது. நீதியை வழங்கவேண்டிய நீதிமன்றம், ஒரு குறிப்பிட்ட மதத்திற்குத் திரும்புவதை ஊக்குவிப்பது, அதன் நடுநிலைமையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.
இந்தியாவில்
சுமார் 2.1 மில்லியன் தலித் கிறித்தவர்கள் உள்ளனர். பல்வேறு ஆய்வுகளின்படி, இவர்களில் 70% பேர் வறுமைக்
கோட்டிற்குக் கீழே வசிக்கின்றனர். இவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பாகுபாடு, இந்து தலித்துகள் எதிர்கொள்ளும் நிலைக்கு இணையாக இருப்பதை ‘சதீஷ் தேஷ் பாண்டே அறிக்கை’
(2008) உறுதிப்படுத்துகிறது.
மேலும், தலித் கிறித்தவர்கள் எதிர்கொள்ளும் சமூகப் பின்தங்கிய நிலை குறித்துப் பல்வேறு ஆணையங்கள் விரிவான அறிக்கைகளைக் கடந்த காலங்களில் வழங்கியுள்ளபோதும் அரசு அலட்சியம் காட்டுவது ஏன்? குறிப்பாக, இரங்கநாத் மிஸ்ரா ஆணையம் (2007), SC அந்தஸ்தை
மதச்சார்பற்றதாக மாற்ற வேண்டும் என்றும், அனைத்து மதங்களிலும் உள்ள தலித்துகளுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்றும் பரிந்துரைத்தது. சச்சார் குழு அறிக்கை (2006), மதம் மாறிய பிறகும் தலித்துகளின் சமூக, பொருளாதார நிலை மாறவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் (NCSC), 2010-ஆம்
ஆண்டில் தலித் கிறித்தவர்களுக்கும் முசுலிம்களுக்கும் SC அந்தஸ்து வழங்க முழு ஆதரவைத் தெரிவித்தது.
இத்தனை
ஆதாரங்கள் இருந்தும், ‘சாதியக் கொடுமை தொடர்வதற்குச் சான்று இல்லை’ என்று கூறுவது தலித் கிறித்தவர்களின் காயங்களில் ஈட்டியைப் பாய்ச்சுவதாகும். இன்றும் தமிழ்நாடு மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் கிறித்தவக் கல்லறைகளில் தனிச்சுவர் எழுப்பப்படுவதும், தேவாலயத் தேர்ப்பவனிகளில் தலித் கிறித்தவர்கள் புறக்கணிக்கப்படுவதும் ஊரறிந்த உண்மை. மதம் மாறியும் சாதி மாறவில்லை என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்றுவேண்டும்?
அரசமைப்புச்
சட்டத்தின் கீழ் பழங்குடியினராக (ST) அங்கீகரிக்கப்பட்ட
ஒருவர் கிறித்தவத்திற்கு மாறினாலும், அவரது பழங்குடி அந்தஸ்து பறிக்கப்படுவதில்லை. ஏனெனில், பழங்குடி என்பது ஓர் இன அடையாளமாகக் கருதப்படுகிறது.
அதேபோல, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) எந்த
மதத்திற்கு மாறினாலும், அவர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்கிறது. ஆனால், தலித் மக்களுக்கு மட்டும் ஏன் இந்த மதத்தாலான வரையறை?
தீண்டாமை என்பது ஒரு மதத்தின் சடங்கு அல்ல; அது ஒரு சமூகக் கறை. அந்தக் கறை மதம் மாறியதாலேயே துடைக்கப்பட்டுவிடும் என்று சட்டம் கருதுவது ஒரு மாயையாகும்.
ஒன்றிய
அரசு 1950-ஆம் ஆண்டின் குடியரசுத் தலைவர் ஆணையில் உள்ள 3-வது பத்தியை நீக்கி, SC அந்தஸ்தை
மதச்சார்பற்றதாக மாற்றவேண்டும் என்பதே எமது கோரிக்கை. அதுவரை காலங்கடத்தாமல், மாநில அரசுகள் தலித் கிறித்தவர்களுக்கு உரிய நீதியை வழங்க முன்வரவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.
தற்போது
OBC பட்டியலில்
உள்ள தலித் கிறித்தவர்களின் மக்கள்தொகையைக் கணக்கிட்டு, அவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ‘உள் ஒதுக்கீடு’
வழங்கவேண்டும்.
இதற்குப் புதிய சட்டங்கள் தேவையில்லை; மாநில அரசே ஓர் அரசாணை மூலம் இதைச் செய்ய முடியும். இது தலித் கிறித்தவர்களின் நீண்டகாலக் கோரிக்கையும் கூட. சமூக நீதியைப் பேசும் அரசுகள் இந்த விளிம்பு நிலை மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டியது தங்கள் தார்மிகக் கடமையே!
தலித்
கிறித்தவர்கள் தங்களது உரிமைகளுக்காகக் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறார்கள். 2004-ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் (WP 180/2004) இன்னும்
ஒரு முடிவுக்கு வரவில்லை. நீதி என்பது தாமதப்படுத்தப்படும்போது அது மறுக்கப்பட்டதாகவே கருதப்படும்.
சாதிய
ஒடுக்குமுறையிலிருந்து
தப்பிக்க ஒரு மனிதன் தேடும் புகலிடம், அவனது சட்டப்படியான உரிமைகளைப் பறிக்கும் சிறைச்சாலையாக மாறக் கூடாது. நீதியின் தராசு மதத்தின் பெயரால் ஒரு பக்கம் சாயக்கூடாது. தலித் கிறித்தவர்களின் உரிமை என்பது வெறும் இடஒதுக்கீடு சார்ந்தது மட்டுமல்ல; அது ஒரு குடிமகனின் அடையாளம் மற்றும் பாதுகாப்பு சார்ந்தது. இந்த நீண்டகால அநீதியைக் களைந்து, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சமத்துவத்தை அனைவருக்கும் உறுதி செய்வதே ஒரு முற்போக்குச் சமூகத்தின் அடையாளமாகும். நம் உரிமையை நாம் அடையும்வரை நாம் போராடுவோம்.
“சில நேரங்களில்
நிதானிப்பவர்களே
நிற்கிறார்கள்;
தோற்பவர்களே
வெல்கிறார்கள்;
அடிபட்டவர்களே
அடிக்கோடிடப்படுகிறார்கள்!”
எனும்
இறையன்பு அவர்களின் வரிகள்தான் இங்கு நம் நினைவிற்கு வருகின்றன.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
மணிப்பூர் இனக்கலவரம் தொடங்கி ஏறக்குறைய மூன்று ஆண்டுகளை எட்டப்போகிறது. இந்தியத் திருநாட்டின் ஒரு பகுதி இன்னும் இருண்ட காலத்திலேயே உழன்று கொண்டிருக்கிறது என்பதையே இது உலகுக்கு உரக்கக் கூறுகிறது. அமைதியை மீட்டெடுக்க வேண்டிய ஒன்றிய பா.ச.க. அரசு, வெறும் ‘ஊரடங்கு’ மற்றும் ‘இணைய முடக்கம்’ போன்ற தற்காலிகத் திரைகளைக் கொண்டு மாநிலத்தின் அவலங்களை மறைக்க முயல்கிறதே ஒழிய, வேர்வரை சென்று தீர்வுகாண எள்ளளவும் முன்வரவில்லை. ‘மணிப்பூரில் தீர்க்கப்படாத இன மோதலும் தீவிரமடையும் வன்முறையும்’ என்பது வெறும் செய்தித் தலைப்பு அல்ல; அஃது ஒரு தேசத்தின் மனசாட்சிக்கு விடப்பட்ட அறைகூவல்.
அண்மையில்
ஏப்ரல் 7-ஆம் தேதி பிஷ்ணுபூர் மாவட்டத்தில் ஐந்து வயது சிறுவனும், ஆறு மாதக் கைக்குழந்தையும் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட நிகழ்வு, எஞ்சியிருந்த மனிதநேயத்தையும் சுட்டெரித்துவிட்டது. இக்கொலைகளைக் கண்டித்துப் போராடிய மக்கள்மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் மூன்று உயிர்கள் பலியாகியுள்ளன. துரோங்லோபி கிராமம் முதல் இம்பால் பள்ளத்தாக்கு வரை இன்று எங்கும் இரத்த வாடையும், கண்ணீர்ப் புகைக்குண்டுகளின் நெடியுமே மிஞ்சியுள்ளது. இது அரசு இயந்திரத்தின் அலட்சியத்தையும், பிணக்குவியல்களின் மீது அது நடத்தும் ஓர் அதிகார ஆட்டத்தையுமே காட்டுகிறது.
பா.ச.க. அரசின்
‘நாரி சக்தி’
(பெண் சக்தி) முழக்கங்கள் மணிப்பூர் வீதிகளில் நகைப்புக்குரியதாகிவிட்டன.
‘இதுதான் உங்கள் நாரி சக்தியா?’ எனப் போராட்டக்களத்தில் பெண்கள் எழுப்பும் வினாக்களுக்கு ஒன்றிய அரசிடம் எந்தப் பதிலும் இல்லை. மணிப்பூரின் நிலப்பரப்பு மெய்தி, நாகா மற்றும் குகி என மூன்று பெரும்
இனக்குழுக்களிடையே பிளவுற்று, ஒவ்வொரு சமூகமும் தங்கள் இழப்புகளுக்காகத் தனித்தனியே முழு அடைப்புப் போராட்டங்களை அறிவித்துள்ளன. இது ஒரு மாநிலத்தின் நிர்வாகச் சீர்குலைவை விடவும், சமூக நல்லிணக்கத்தின் மரணத்தையே காட்டுகிறது.
மணிப்பூர்
வன்முறை ஏன் இத்தனை காலம் தணியாமல் நீடிக்கிறது? ஏன் அது இன்றும் பற்றியெரிகிறது? இது குறித்து ஆழ்ந்து சிந்தித்தால், இதன் பின்னணியில் இருக்கும் ஒன்றிய பா.ச.க.
அரசின் மறைமுகத் திட்டங்கள் அதிர்ச்சி நிறைந்த கவலைக்குரியவை. மணிப்பூர் மாநிலத்தின் கனிம வளங்கள் நிறைந்த மலைப்பகுதிகளைப் பெரும் வணிகக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு குறிப்பாக, அதானி குழுமத்திற்குத் தாரை வார்ப்பதற்கான ஒரு திட்டமிட்ட சதி இதனுள் இருக்குமோ என்ற வலுவான ஐயம் எழுந்துள்ளது.
மக்களின்
வாழ்வாதாரத்தை அழித்து, அவர்களை அகதிகளாக மாற்றுவதன் மூலம் நிலங்களைக் கையகப் படுத்துவது எளிது என்பது அதிகார வர்க்கத்தின் கணக்காக இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சித்தாந்தத் திணிப்பும், பிரித்தாளும் சூழ்ச்சியும் இங்கு மெய்தி மற்றும் குகி சமூகங்களுக்கிடையிலான வரலாற்றுப் பிணக்குகளை அரசியல் ஆதாயத்திற்காகத் தூண்டிவிட்டுள்ளன. அமைதிப் பேச்சுவார்த்தை என்ற போர்வையில் காலத்தைக் கடத்துவது, இறுதியில் கார்ப்பரேட் நலன்களுக்காக மாநிலத்தைச் சிதைப்பதற்கே வழிவகுக்கும்.
மணிப்பூர்
வன்முறை என்பது வெறும் இரு சமூகங்களுக்கிடையிலான மோதல் மட்டுமல்ல; அஃது இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர் குறிப்பாக, கிறித்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள ஓர்
எச்சரிக்கை மணி. இது சிறுபான்மையினர் மற்றும் பழங்குடியினர் மீது தொடுக்கப்பட்ட மாபெரும் அச்சுறுத்தல். குகி சமூகத்தினர் பெரும்பான்மையாகக் கிறித்தவ மதத்தைப் பின்பற்றுபவர்கள். கலவரத்தின் தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், கல்வி நிறுவனங்களும் எரிக்கப்பட்டதும், பழங்குடியினப் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டதும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல.
பா.ச.க.வின்
‘ஒரே நாடு, ஒரே கலாச்சாரம்’ என்ற
மேலாதிக்கக் கொள்கைக்கு வடகிழக்கு மாநிலங்களின் பன்முகத்தன்மை பெரும் தடையாக உள்ளது. எனவே, பழங்குடியினரின் தனித்துவமான நில உரிமைகளையும், அவர்களின் மதச் சுதந்திரத்தையும் நசுக்குவதன் மூலம் ஓர் ‘இந்துத்துவ’ வரைபடத்தை
ஒன்றிய பா.ச.க.
அரசு அங்கு உருவாக்க முயல்கிறது.
மணிப்பூரில்
இன்று நடப்பது நாளை ஒட்டுமொத்த இந்தியாவிலும் குறிப்பாக, தமிழ்நாட்டிலும் சிறுபான்மையினருக்கு நிகழலாம் என்பதையே தற்போதைய சூழல் உணர்த்துகிறது. மேலும், இத்தகைய பிரிவினைவாதச் செயல்கள் ஒருபோதும் இனி நிகழாது என்பதற்கான எந்தவித உத்தரவாதமும்
இங்கு இல்லை.
மணிப்பூரில்
நிலவும் சூழலை ஓர் ‘அரசியல் மேலாண்மை’
மூலம் சரிசெய்துவிடலாம் என டெல்லி நினைப்பது
மிகப்பெரிய முட்டாள்தனம். குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தி, பின் அதை நீக்கிவிட்டு, பெயரளவுக்கு ஓர் ‘அதிகாரப் பகிர்வு’ அரசை (மெய்தி முதலமைச்சர் மற்றும் குக்கி-நாகா துணை முதலமைச்சர்கள்) அமைத்திருப்பது ஒரு கண் துடைப்பு நாடகம்.
அடிப்படைப்
பிரச்சினையானது நில உரிமை மற்றும் பழங்குடி நிலை சார்ந்தது. 260-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு, 60,000-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தாத ஓர் ‘உள்ளிருந்து எழும் அமைதி’
(Bottom-up approach) மட்டுமே தீர்வாகும். ஆனால், ஒன்றிய அரசோ நடுநிலையான இடைநிலையாளராகச் செயல்படாமல், ஒரு தரப்பிற்கு ஆதரவாகவும், கார்ப்பரேட்டுகளுக்கு மிகுந்த நம்பிக்கை கொண்டவராகவும் இருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போலாகிறது.
இத்தகைய
சூழலில், மணிப்பூரில் நீடித்த அமைதி நிலவ வேண்டுமானால் நிபுணத்துவ வழிகாட்டுதலுடன் தீர்வு காணவேண்டியது அவசியமாகிறது. முதலாவதாக, நேர்மையான நடுநிலைவேண்டும். அதாவது, ஒன்றிய அரசு தனது அரசியல் இலாபங்களைக் கடந்து, அனைத்துச் சமூகத் தலைவர்களையும் ஒரே மேசையில் அமர்த்த வேண்டும். இரண்டாவதாக, பெரும் வணிக முதலாளிகளின் (கார்ப்பரேட் நிறுவனங்களின்) தலையீடுகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும்.
மூன்றாவதாக,
மலைப்பகுதிகளின் கனிம வளங்களை அதானி போன்ற நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் முயற்சிகளை அரசு உடனே கைவிட வேண்டும். மேலும், மக்களுக்கான பாதுகாப்பும் நீதியும் அங்கு உறுதிப்படுத்தப்படவேண்டும்.
கொல்லப்பட்ட குழந்தைகளின் மரணத்திற்கும், பாலியல் வன்முறைக்கும் காரணமானவர்கள் பாரபட்சமின்றித் தண்டிக்கப்படவேண்டும். சிறுபான்மையினரின் மத அடையாளங்கள் மற்றும்
பழங்குடியினரின் கலாச்சாரப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
மணிப்பூர்
இன்றும் எரிகிறது என்றால், அஃது இந்திய சனநாயகத்தின் ஒரு பகுதி கருகிக் கொண்டிருக்கிறது என்று பொருள். டெல்லியின் செங்கோட்டையில் அமர்ந்திருப்பவர்கள் தங்கள் மௌனத்தைக் கலைத்து, அந்த மக்களின் கதறலுக்குச் செவிசாய்க்காதவரை, வடகிழக்கு இந்தியா ஒருபோதும் அமைதியைக் காணாது.
ஒன்றிய
பா.ச.க. அரசின்
பாராமுகத்தைக் காணும்போது...
‘செய்’ என்பான் அறிவன்!
‘விடு’ என்பான் அறியான்!
அறிவுக்கும்
ஆசைக்கும் இடையில்,
மனம்
சல்லடையாய் சலிக்கின்றது!
தூக்கம்
கெடுத்ததோர் ஆவி,
தூக்கி
எறிய முடியாததொரு பாவி!
எக்காளமிட்டு
இரண்டும் போராட,
நான்
யாருக்கோ சேவை செய்கிறேன்!
எனும்
புதுக்கவிதை வரிகள்தான் நம் நினைவிற்கு வருகின்றன.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலகோருக்கு அறம் போதிக்கும் நாட்டில், தன் சொந்த நாட்டு மக்களே அகதிகளாக அலைவது பெரும் அவமானத்திற்குரியதே!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
இந்திய நாட்டின் சனநாயகப் பேராயத்தில், பிரதிநிதித்துவம் என்பது வெறும் எண்களின் விளையாட்டு அல்ல; அது பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டின் அதிகாரப் பகிர்வுக்கான அறச்சீட்டு. ஆனால், தற்கால அரசியல் சூழலில் ‘தொகுதி மறுசீரமைப்பு’ (Delimitation) எனும் பெயரில் ஒன்றிய பா.ச.க. அரசு முன்னெடுக்கும் நகர்வுகள், இந்திய அரசமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்தின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு பேராபத்தாக உருவெடுத்துள்ளன.
எதிர்வரும்
தொகுதி மறுசீரமைப்பினால் ஏற்படக்கூடிய அரசியல் மாற்றங்கள், தென் மாநிலங்களின் நியாயமான அச்சங்கள் மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பின் அவசியம் ஆகியவை குறித்து ஒரு விமர்சனப் பார்வையை நாம் யாவரும் கொண்டிருக்கவேண்டியது இன்று காலத்தின் கட்டாயமாகிறது.
தற்போது
நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 1971 மக்கள்தொகை புள்ளிவிவரப்படி கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றியமைக்க ஒன்றிய அரசு காட்டும் அதீத ஆர்வம், தென் மாநிலங்களின் அரசியல் இருப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
தற்போதைய
தரவுகளின்படி, 543 ஆக இருக்கும் மக்களவைத்
தொகுதிகளின் எண்ணிக்கை 816 ஆக உயரும் என்று
கணிக்கப்பட்டுள்ளது. இதில் 33% மகளிர்
இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டால், சுமார் 273 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். இது சமூகநீதிப் பார்வையில் வரவேற்கத்தக்க மாற்றமாகத் தெரிந்தாலும், இதன் அடிநாதமாக விளங்கும் ‘அதிகாரப் பகிர்வு’ என்பது முற்றிலும் ஒருதலைப் பட்சமாக வட இந்திய மாநிலங்களை
நோக்கிச் சாய்ந்துவிடும்.
மறுசீரமைப்பிற்குப்
பின், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 272-லிருந்து 408 ஆக உயரும். இந்த
விஸ்வரூப வளர்ச்சியில், இந்தி பேசும் மாநிலங்களின் ஆதிக்கம் நாடாளுமன்றத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ஓங்கப்போகிறது.
உதாரணமாக,
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகள் 120 தொகுதிகளாக உயரும். பீகாரில் இருக்கும் 40 தொகுதிகள் 60 தொகுதிகளாக விரிவடையும். இராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்கள் முறையே 38 மற்றும் 44 தொகுதிகளாகப் பலம்பெறும்.
இத்தகைய
சூழலில், ஒரு தேசியக் கட்சி வட இந்திய மாநிலங்களில்
மட்டும் கணிசமான இடங்களை வென்றாலே, தென்னிந்தியாவின் தயவின்றி ஒன்றியத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் பெரும் அதிகாரத்தைப் (Super-power)
பெற்றுவிடும். இது சனநாயகத்தின் ஆன்மாவான ‘சமமான பிரதிநிதித்துவம்’ என்பதற்குப்
புறம்பானது.
அதாவது,
அதிக மக்கள்தொகையுடைய வட மாநிலங்களில் மட்டும்
வெற்றி பெற்றாலே மக்களவையில் பெரும்பான்மை கிடைக்கும் அபாயம் ஏற்படும். 2011 மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை நடந்தால் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு கடுமையாகப் பாதிக்கப்படும். வட இந்தியாவில் தொகுதிகள்
கணிசமாக உயரும் அதேநேரத்தில், தென் மாநிலங்களில் பெயரளவுக்கே தொகுதிகள் எண்ணிக்கை மாறும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதாக மறுவரையறை அமையும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கெனவே
தெலுங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட ஏழு மாநில முதலமைச்சர்கள், தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்தியதும் குறிப்பிடத்தக்கதே.
1971 மக்கள்தொகை அடிப்படையிலேயே
தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்கள் வலியுறுத்தியதும், தொகுதி மறுசீரமைப்பை மேலும் 25 ஆண்டுகளுக்கு ஒத்தி வைக்கவேண்டும் என முதலமைச்சர் தலைமையிலான
கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், 1971 மக்கள்தொகை அடிப்படையிலேயே மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தவேண்டும் எனும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் நினைவுகூரத்தக்கதே.
கடந்தகால
வரலாற்றின் பின்னணியில், இந்திய விடுதலைப் போராட்டத்திலும் அதற்குப்பின் விடுதலை இந்தியாவின் வளர்ச்சிப் பாதையிலும் தென் மாநிலங்களின் பங்கு ஈடு இணையற்றது. கடந்த ஐந்தாண்டுகளில் குடும்பக் கட்டுப்பாடு, கல்வியறிவு, பெண் கல்வி மற்றும் பொருளாதார மேலாண்மை ஆகியவற்றில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் தேசிய சராசரியைவிட மேலான சாதனைகளைப் புரிந்துள்ளன. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியதன் விளைவாக, இந்த மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. ஆனால், மறுசீரமைப்பு விதிகளின்படி, எங்கு மக்கள்தொகை அதிகமாக இருக்கிறதோ அங்கு அதிகத் தொகுதிகள் ஒதுக்கப்படும். இது நாட்டின் நலன் கருதி மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஓர் அரசியல் தண்டனை அல்லவா!
தமிழ்நாட்டின்
தொகுதிகள் 39-லிருந்து 58 ஆக உயர்ந்தாலும், ஒட்டுமொத்த
நாடாளுமன்ற விகிதாச்சாரத்தில் அதன் ‘வாக்கு வலிமை’
(Voting Power) குறையப்போகிறது
என்பதே உண்மை. அதாவது, வடக்கே 100 தொகுதிகள் கூடும்போது தெற்கே 20 தொகுதிகள் மட்டுமே கூடுமானால், கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தில் தெற்கின் குரல் நசுக்கப்படும்.
தொகுதி
மறுசீரமைப்பிற்கு அடிப்படையான மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் தலைகளை எண்ணும் பணி அல்ல; அது ஒரு சமூகத்தின் சமூக, பொருளாதார நிலையைத் துல்லியமாகப் படம்பிடிக்க வேண்டிய ஆவணம். தற்போது எழுந்துள்ள ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு’ (Caste Census) கோரிக்கை இச்சூழலில் மிக முக்கியத்துவம் பெறுகிறது.
உண்மையான
சமூக நீதி நிலவ வேண்டுமானால், எந்தெந்தச் சமூகங்கள் அதிகாரத்தில் பின்தங்கியுள்ளன? யாருக்குப் பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது? என்ற கள எதார்த்தங்கள் வெளிப்படையாகத்
தெளிவுபடுத்தப்படவேண்டும்.
வெறும் மாநிலம் வாரியாக, பகுதி வாரியாகத் தொகுதிகளைப் பிரிப்பது மட்டும் போதாது; அந்தத் தொகுதிகளுக்குள் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரல் ஒலிக்கின்றனவா? என்பதும் உறுதி செய்யப்படவேண்டும். சாதிவாரிக் கணக்கெடுப்பைத் தட்டிக் கழித்துக்கொண்டு, வெறும் எண்களை மட்டும் வைத்துத் தொகுதி மறுசீரமைப்பு செய்வது என்பது, ஆதிக்க சக்திகளின் அதிகாரத்தை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு கருவியாகவே அமையும்.
இந்திய
அரசமைப்புச் சட்டம் ‘இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்’
என்கிறது. ஆனால், 816 தொகுதிகளாக நாடாளுமன்றம் விரிவடையும்போது, மாநிலக் கட்சிகளின் முக்கியத்துவம் குறைந்து, தேசியக் கட்சிகள் வட இந்தியாவை மட்டும்
மையப்படுத்தித் தங்கள் அரசியலை வடிவமைக்கும் அபாயம் உள்ளது.
கேரளா
(30 இடங்கள்), தமிழ்நாடு (59 இடங்கள்) எனத் தொகுதிகள் அதிகரித்தாலும், 120 இடங்களைக் கொண்ட உத்தரப்பிரதேசமும், 60 இடங்களைக் கொண்ட பீகாரும் இணைந்து எடுக்கும் முடிவுகளே தேசத்தின் தலையெழுத்தை மாற்றும் சட்டங்களாக மாறும். நிதிப்பகிர்வில் ஏற்கெனவே தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அரசியல் அதிகாரத்திலும் இத்தகைய ஏற்றத்தாழ்வு ஏற்படுவது கூட்டாட்சித் தத்துவத்தைச் சவக்குழிக்குள் அனுப்புவதற்குச் சமம்.
தொகுதி
மறுசீரமைப்பு என்பது தொழில்நுட்ப ரீதியான ஒரு நடைமுறை மட்டுமல்ல; அது இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காக்கும் ஒரு புனிதமான பொறுப்பு. வெறும் மக்கள்தொகையை மட்டுமே அளவுகோலாகக் கொள்ளாமல், மாநிலங்களின் ஜி.டி.பி.
பங்களிப்பு, கல்வியறிவு மற்றும் சமூக மேம்பாட்டுச் சாதனைகளையும் கருத்தில் கொண்டு ஒரு ‘புதிய விகிதாச்சாரத்தை’ உருவாக்க
வேண்டியது காலத்தின் கட்டாயம்.
அதிகாரப்
பரவலாக்கமே ஓர் ஆரோக்கியமான சனநாயகத்திற்கு அழகு. அதிகாரம் என்பது வடக்கே மட்டும் குவியுமானால், அது இந்தியாவின் ஒருமையைச் சிதைக்கும் ‘அரசியல் நிலநடுக்கத்திற்கு’ வழிவகுக்கும்.
தென் மாநிலங்களின் கவலையைப் போக்கி, அனைத்து மாநிலங்களுக்கும் சமமான அதிகாரப் பகிர்வை உறுதி செய்யும் வகையிலே இந்த மறுசீரமைப்பு அமையவேண்டும். இல்லையேல், நாடாளுமன்றத்தின் பலம் 816 ஆக உயர்ந்தாலும், சனநாயகத்தின்
பலம் பூஜ்ஜியமாகவே இருக்கும். “வடக்கு வாழும்; தெற்குத் தேயும்!” என்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்று உண்மையாகிவிடும்.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
மானுட வரலாற்றில் ‘வாக்குரிமை’ என்பது வெறும் காகிதத்தில் பொறிக்கப்பட்ட அடையாளமல்ல; அது பல நூற்றாண்டுகாலப் போராட்டங்கள், தியாகங்கள் மற்றும் குருதி சிந்திய புரட்சிகளின் வாயிலாகப் பெறப்பட்ட ஒரு பேராற்றல். ‘மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் மக்களாட்சி’ எனும் உன்னதத் தத்துவத்தின் உயிர்நாடிதான் இந்த வாக்குப்பதிவு.
ஒரு
நாட்டின் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் எதிர்காலப் போக்கைத் தீர்மானிக்கும் அதிகாரச் சீட்டுதான் ஒவ்வொரு குடிமகனின் கையிலும் இருக்கும் அந்த ஒரு வாக்கு. ஆனால், இன்றைய நவீன உலகில், அரசியலில் நிலவும் ஏமாற்றங்களினால், அக்கறை கொள்ளாத தன்மையுடன் எந்தவித ஈடுபாடும் ஆர்வமும் இல்லாது பலர் இந்தத் தார்மீகக் கடமையிலிருந்து விலகி நிற்பது கவலையளிக்கிறது. அதுவே சனநாயகத்தின் எதிர்காலத்திற்கு விடப்படும் மிகப்பெரிய சவால்.
ஆங்கிலேயர்களின்
காலனித்துவ ஆட்சியில், வாக்குரிமை என்பது சொத்து வைத்திருப்பவர்களுக்கும், மேல்தட்டு வர்க்கத்தினருக்கும் மட்டுமேயான ஒரு சலுகையாக இருந்தது. 1861-ஆம் ஆண்டு இந்திய கவுன்சில் சட்டம் தொடங்கி, 1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் வரை, வாக்குரிமை என்பது மிகக் குறுகிய வட்டத்திற்குள்ளேயே முடங்கிக் கிடந்தது.
1947-இல் இந்தியா
விடுதலை பெற்றபோது, நமது அரசியல் சாசனச் சிற்பிகள் சாதி, மதம், இனம், பால் மற்றும் பொருளாதார நிலை என அனைத்துப் பாகுபாடுகளையும்
தகர்த்து, ‘அனைவருக்கும் வாக்குரிமை’ எனும்
மாபெரும் உரிமையை வழங்கினர். 1951-52-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற முதல் பொதுத்தேர்தல், இந்தியத் திருநாட்டின் சனநாயகப் பாரம்பரியத்தின் மறுமலர்ச்சியாகவே அமைந்தது.
‘நாடுகாப்பார் யாரே இந்தியத் திருநாட்டை?
மக்களாட்சி
என்னும் மாண்புடைய கோட்டையினை
வாக்கினால்
காப்பார் குடிமக்கள்!’
என்ற
கவிஞரின் வரிகளுக்கேற்ப, நமது முன்னோர் நமக்குப் பெற்றுத் தந்த இந்த உரிமை, வெறும் கடமையல்ல; மாறாக, அது ஒரு பெரும் கொடையே!
வாக்குப்பதிவு
என்பது வெறும் தலைகளை எண்ணும் முறையல்ல; மாறாக, அது ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களின் குரலை அதிகார மையங்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு வலிமையான கருவியே. வரலாற்றில் அமெரிக்காவின் குடிமை உரிமைப் போராட்டங்கள் முதல், பெண்களின் வாக்குரிமைக்கான ‘சஃப்ரஜெட்’
(Suffragette) இயக்கங்கள்
வரை அனைத்தும் உணர்த்துகின்ற பாடம்: ‘உனக்கான நீதியைப் பெற உனது வாக்கே உனது ஆயுதம்’ என்பதுதான்.
சமூகத்தில்
நிலவும் அநீதி, நாட்டின் வீழ்ச்சி, வீணாகும் செல்வங்கள் இவை குறித்த கவலை கொண்டு மக்களின் சமூக உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில்,
‘எங்கே உண்மை என் நாடே?
ஏனோ
மௌனம் சொல் நாடே?’
என
நாட்டில் நிலவும் உண்மை நிலை, ஏமாற்று வேலைகள் மற்றும் மௌனத்தைப் பற்றிக் கேள்வி எழுப்பியவர் ‘மக்கள் கவிஞர்’ என அறியப்பட்ட பட்டுக்கோட்டை
கல்யாணசுந்தரம். இவர் எந்தவொரு குறிப்பிட்ட
கட்சிக்காகவும் நேரடியாகப் பிரச்சாரப் பாடல்களை எழுதியவர் அல்லர்; மாறாக, பகுத்தறிவுடன் வாக்களித்தல், சமூகநீதி, தவறான தலைவர்களுக்கு எதிரான விழிப்புணர்வு, சுரண்டலுக்கு எதிரான எச்சரிக்கை, ஊழலை - ஊழல் அரசியல்வாதிகளைக் கேள்விக்குட்படுத்துதல், சுயமரியாதையை ஊக்குவித்தல் போன்ற நலமான தேர்தலுக்கும், சனநாயகத்திற்கும் அவசியமான விழுமியங்களைத் தனது கவிதைகளிலும் திரைப்படப் பாடல்களிலும் வலுவாக வலியுறுத்தியவர். தங்களுக்காக உழைக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் உழைக்கும் வர்க்கத்திற்கே உண்டு என்பதை உறுதிபடக் கூறியவர்.
ஆகவே,
வறுமை, கல்வி, சுகாதாரம், காலநிலை மாற்றம் மற்றும் மனித உரிமைகள் போன்ற தலையாய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விரும்பும் ஒரு குடிமகன், அதற்கான முதல்படியைத் தேர்தல் களத்திலேயே எடுத்து வைக்கிறான். நாம் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும், நமது விழுமியங்களைப் பிரதிபலிக்கும் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஒரு வாய்ப்பாகும்.
ஆனால்,
இந்திய அரசியலில் உள்ளூர் தேர்தல் முதல் ஒன்றியத் தேர்தல் வரை ஆகப்பெரிய சாபக்கேடு ‘சாதிவாரியான வாக்குப்பதிவு’ ஆகும்.
வேட்பாளரின் தகுதி, தொலைநோக்குப்பார்வை மற்றும் நேர்மை ஆகியவற்றைக் காட்டிலும், ‘இவர் எனது சாதியைச் சார்ந்தவரா?’ என்று பார்க்கும் குறுகிய மனப்பான்மை இன்னும் பல இடங்களில் வேரூன்றி
இருக்கிறது. ‘சாதி இரண்டொழிய வேறில்லை’
என்ற ஒளவையின் வாக்கை மறந்த சமூகமாக நாம் மாறிவிடக் கூடாது. ஒரு தலைவர் என்பவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டும் சொந்தமானவர் அல்லர்; அவர் ஒட்டுமொத்த தேசத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் பொறுப்பானவர். ‘Casting their vote’ (வாக்கினைச்
செலுத்துதல்) என்பது சனநாயகக் கடமை; ஆனால், ‘Voting their caste’ (சாதி
பார்த்து வாக்களித்தல்) என்பது சனநாயகத்தின் சிதைவு. சாதி எனும் இருளைத் தாண்டி, திறமை எனும் ஒளியைத் தேடி நமது வாக்குகள் பயணிக்க வேண்டும்.
தேர்தல்
அரசியலில் ஒரு முக்கியப் பிரச்சினையாக விளங்கும் சாதி, வர்க்கப் பாகுபாட்டை நாம் அகற்றுவோம். வாக்காளர்கள் நாம் நேர்மையாக இருக்கவேண்டும்; எவ்வகைப் பேராசைக்கும் ஆட்கொள்ளப்படக்கூடாது. மேலோட்டமான அரசியல் சொல்லாடல்களால் ஈர்க்கப்படாமல், நாம் விமர்சன ரீதியாகச் சிந்தித்துச் சமூக மேம்பாட்டிற்காக வாக்களிப்போம்!
இன்றைய
இளையோரே, முதன்முறை வாக்காளர்களே, வீறுகொண்டு எழுந்து வாருங்கள்! நாட்டின் ‘புதிய விடியலின்’
தூதுவர்கள் நீங்கள். 1988-ஆம் ஆண்டு 61-வது அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் வாக்குரிமை வயது பதினெட்டாகக் குறைக்கப்பட்டது. இது இளையோரின் சக்தியை அங்கீகரிப்பதற்கே.
இளையோரே,
உங்கள் கண்களில் எதிர்காலத்தைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். தற்காலிக இலவசங்களுக்கோ அல்லது கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுக்கோ மயங்காமல், அடுத்த பத்து - இருபது ஆண்டுகளுக்கான இந்தியாவின் வளர்ச்சியை, தமிழ்நாட்டின் வளர்ச்சியை யார் முன்னெடுப்பார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
‘புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும்
உலகத்தை வேரோடு சாய்ப்போம்!
பொதுவுடைமைக்
கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்;
புனிதமோடதை
எங்கள் உயிரென்று காப்போம்!
இதயமெலாம்
அன்பு நதியினில் நனைப்போம்;
இது
எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்!’
என்ற
புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை நெஞ்சில் ஏந்தி, உங்கள் வாக்கைச் செலுத்துங்கள். சாதி, மதப் பிரிவினைகள், மோதல்கள் அற்ற, சமத்துவமிக்க, அன்பான சமுதாயத்தை உருவாக்கும் எண்ணமுடன், பொதுவுடைமை மற்றும் மனிதநேயம் தழைத்தோங்கும் புதிய
சமுதாயத்தை நீங்கள் படைக்கவேண்டும். உங்கள் மௌனம் சில வேளைகளில் தகுதியற்றவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற வழிவகுத்துவிடும். எனவே, உங்கள் ‘வாக்கு’ என்பது உங்கள் ‘வாழ்க்கை’
என்பதை உணருங்கள்.
ஒரு
சிறந்த தலைவன் என்பவன் அதிகாரத்தைத் தன்வயப்படுத்துபவன் அல்லன்; மாறாக, அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பவன். சமூகத்தில் நிலவும் பாகுபாடுகளைத் தகர்த்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்பவனே உண்மையான தலைவன்.
அடுத்த
தேர்தலை மட்டும் சிந்திக்காமல், அடுத்த தலைமுறையைப் பற்றிச் சிந்திக்கக்கூடிய தொலைநோக்குச் சிந்தனையும், ஊழலற்ற வெளிப்படைத்தன்மை கொண்ட நேர்மையான நிர்வாகத்தை வழங்குவதையும், மாநிலங்களின் உரிமைகளையும் பன்முகத்தன்மையையும் மதிக்கக்கூடிய கூட்டாட்சித் தத்துவம் கொண்டவரையும், விளிம்புநிலை மக்களின் வலியுணர்ந்து செயல்படும் மனிதாபிமானம் உள்ளவரையும் இனம் காண வேண்டும். இது இளையோருக்கான அறிவுரை மட்டுமல்ல, நம் அனைவருக்குமான சிந்தனை.
நாம்
வாக்களிக்கத் தவறும்போது, நம்மைப் பாதிக்கப்போகும் கொள்கைகளைத் தீர்மானிக்கும் உரிமையை நாம் இழந்துவிடுகிறோம். குறைவான வாக்குப்பதிவு என்பது ஒரு சிறிய குழுவோ அல்லது ஆதிக்கக் கருத்தியல் கொண்ட அமைப்புகளோ ஒட்டுமொத்த மக்கள் மீதும் தங்கள் அதிகாரத்தைத் திணிக்க வழிவகுக்கும்.
‘நல்லார் ஒருவருக்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல்
எழுத்துப்போல் காணுமே
அல்லாத
ஈயார்க்குச் செய்த உபகாரம்...’
என்ற
மூதுரைக்கேற்ப, தகுதியான ஒருவரைத் தேர்ந்தெடுக்க நாம் தவறுவது சனநாயகத்திற்குச் செய்யும் துரோகமாகும். சில நேரங்களில் ‘எனது ஒரு வாக்கா மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது?’ என்று நினைக்கின்றோம்; ஆனால், கடலில் சேரும் ஒவ்வொரு துளியும்தான் பெருங்கடலை உருவாக்குகிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது!
ஆகவே,
வாக்குப்பதிவு என்பது வெறும் ஐந்து நிமிடச் சடங்கல்ல; அது நாட்டின் ஐந்தாண்டு கால விதியைத் தீர்மானிக்கும் ஒரு புனிதமான பொறுப்பு. இந்தியக் குடிமகனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் இது ஒரு பிறப்புரிமை. அரசியல் சாசனத்தின் 324 முதல் 329 வரையிலான பிரிவுகள் நமக்கு வழங்கியுள்ள இந்தப் பாதுகாப்பை நாம் முழுமையாகப் பயன்படுத்தவேண்டும்.
வரும்
தேர்தலில் அச்சமின்றி, ஆசை வார்த்தைகளுக்கு அடிமையாகாமல், சாதி-மதப் பாகுபாடுகளைக் கடந்து, நாட்டு நலனை மட்டுமே முன்னிறுத்தி வாக்களிப்போம். சனநாயகம் என்பது வெறும் வாக்குகளில் இல்லை; அது விழிப்புணர்வுள்ள குடிமக்களின் பங்களிப்பில் இருக்கிறது.
நமது
வாக்கு... நமது வலிமை!
நாளும்
அதுவே நமது உரிமை!
நானிலம்
போற்றும் சனநாயகக் கடமை!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
ஒரு சனநாயக நாட்டின் ஆன்மா என்பது அதன் தேர்தல் முறையில்தான் குடிகொண்டுள்ளது. அந்தத் தேர்தல் முறையைத் தூய்மையாகவும் நடுநிலையாகவும் நிர்வகிக்க வேண்டிய தலையாய பொறுப்பு இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. வரலாற்றில் ஒரு காலத்தில், நீதித்துறையை விடவும் மக்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்த ஒரு நிறுவன அமைப்பு, இன்று தனது தார்மிகக் கண்ணியத்தை இழந்து, ஆளுங்கட்சியின் ஒரு துணைப் பிரிவாக மாறி வருகிறதோ என்ற அச்சம் நாட்டு மக்கள் உள்ளத்தில் மேலோங்கியுள்ளது.
இத்தகைய
சூழலில், தேர்தல் ஆணையத்தால் தொடர்ந்து சுதந்திரமாக இயங்க முடியுமா? என்பது மட்டுமல்ல; மாறாக, மக்களிடையே அது நம்பிக்கையைத் தொடர்ந்து பெறமுடியுமா? என்பதுதான் நம்மிடம் எழும் அடிப்படைக் கேள்விகள். காரணம், அந்த நம்பிக்கை சிதைந்துவிட்டால், இனி ஆணையம் நடத்தும் அனைத்துத் தேர்தல்களும் வெறும் இயந்திரத்தனமான சடங்குகளாகவே மாறிவிடும்.
அண்மைக்காலமாகத்
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் நாடெங்கும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. கேரளத்தில் பா.ச.க.
கட்சியின் முத்திரையுடன் கூடிய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வக் கடிதம் வெளியான விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை வெறும் ‘கவனக்குறைவால் நேர்ந்த பிழை’ என்று கூறி ஆணையம் கடந்து செல்ல முயல்கிறது. ஆயினும், ஓர் அதிகாரியைப் பணிநீக்கம் செய்வதன் மூலம் இந்த விவகாரம் முடிந்துவிட்டதாகவும் நாம் கருத முடியாது.
ஒரு
நாட்டின் சனநாயக நிறுவனங்கள் ஒரே நாளில் சரிந்துவிடுவதில்லை; மாறாக, சிறிய தவறுகள், சந்தேகத்திற்குரிய சில முடிவுகள், தற்காப்புத் தொனியிலான விளக்கங்கள் என இவை யாவும்
ஒவ்வொன்றாகச் சேரும்போதுதான் ஒரு மாபெரும் நிறுவனத்தின் வீழ்ச்சி தொடங்குகிறது. கேரள விவகாரம் என்பது ஒரு தனித்த தவறல்ல; மாறாக, தேர்தலின் நேர்மையைப் பாதுகாக்கும் ஓர் அமைப்பின்மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைத் தொடர்ந்து கேலிக்குள்ளாக்கும் செயலே!
அவ்வாறே,
கடந்த 2024 மக்களவைத் தேர்தலின்போதும், தேர்தல் ஆணையம் கையாண்ட விதம் பல்வேறு முரண்பாடுகளைக் கொண்டிருந்தது. முதல்கட்டத் தேர்தல் முடிந்து இறுதி வாக்குப்பதிவு விழுக்காட்டை அறிவிக்க ஆணையம் 11 நாள்கள் எடுத்துக்கொண்டது. நவீன எண்ணிமத் (டிஜிட்டல்) தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இக்காலத்தில், சண்டிகர் போன்ற சிறிய தொகுதிகளில் கூட இறுதித் தரவுகளை வெளியிட ஐந்து நாள்கள் ஆனது ஏன் என்பது புரியாத புதிர்.
மேலும்,
‘வோட் ஃபார் டெமாக்ரசி’
(VfD) போன்ற
அமைப்புகள் நடத்திய ஆய்வில், தற்காலிக வாக்குப்பதிவு விழுக்காட்டிற்கும் (Provisional Data),
சில நாள்கள் கழித்து வெளியிடப்பட்ட இறுதி விழுக்காட்டிற்கும் இடையே சுமார் 5 கோடி வாக்குகள் (4,65, 46,885) வித்தியாசம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வித்தியாசம் அதிகமாக இருந்த மாநிலங்களில் ஆளுங்கட்சியான பா.ச.க.
அல்லது தேசிய சனநாயகக் கூட்டணி வியக்கத்தக்க வகையில் குறிப்பாக, ஆந்திரா மற்றும் ஒடிசாவில் அதிக இடங்களை வென்றுள்ளது.
அவ்வாறே,
சனநாயகச் சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) 2024 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையில், மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், 538 தொகுதிகளில் பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. சுமார் 5.89 இலட்சம் வாக்குகளில் இத்தகைய முரண்பாடுகள் இருப்பது தேர்தலின் வெளிப்படைத்தன்மையை, அதன் உண்மைத் தன்மையை, ஏன் அதன் கண்ணியத்தையே கேள்விக்குள்ளாக்குகிறது.
தேர்தல்
ஆணையத்தின் தலைமைப் பொறுப்புக்கான நபரை நியமிக்கும் முறையில் கொண்டுவரப்பட்ட மாற்றம் (தலைமை நீதிபதிக்குப் பதிலாக ஓர் அமைச்சரைச் சேர்த்தது) இந்த அமைப்பை ஒன்றிய பா.ச.க.
அரசு, ஓர் ‘அரசுத் துறை’
(Government
Department) போல
மாற்றியுள்ளது. கடந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் உள்ளிட்ட ஆளுங்கட்சித் தலைவர்கள்மீது 110-க்கும் மேற்பட்ட வெறுப்புப் பேச்சுகள் மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்கள் எழுந்தபோதிலும், அவர்கள்மீது ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது
நாடெங்கும் நடைபெற்று வரும் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி (Special Intensive
Revision - SIR), பல
இலட்சம் வாக்காளர்களைக் குறிப்பாக, சிறுபான்மையினர் மற்றும் தலித் சமூகத்தினரைப் பட்டியலிலிருந்து நீக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. ‘சட்ட விரோதக் குடியேறிகளை’ நீக்குவதாகக்
கூறப்படும் இந்த நடவடிக்கை, ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை இலக்கு வைப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.
இத்தகைய
கோணத்தில்தான் தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவியிலிருந்து நீக்கும் கோரிக்கையை நாம் உற்று நோக்கவேண்டும். இது வெறும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை அல்ல; மாறாக, தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஓர் அரசமைப்பு தனது நேர்மையை இழந்துவிட்டது என்பதற்கான உறுதியான எதிர்வினையாகும். சாதாரண நிர்வாகச் சீர்திருத்தங்கள் இனி போதுமானதாக அமையாது என்ற நிலையையே இது சுட்டிக்காட்டுகிறது.
தேர்தல்
ஆணையம் தனது அதிகாரத்தை அச்சத்தின் மூலமோ அல்லது சட்டத்தின் மூலமோ பெறுவதில்லை; அது நடுநிலையானது என்ற மக்கள் நம்பிக்கையிலிருந்தே அந்த அதிகாரம் பிறக்கிறது. அந்த நம்பிக்கை பலவீனமடையும்போது, அதன் ஒவ்வொரு நடவடிக்கையும் சந்தேகத்தையே எழுப்புகிறது. ‘ஒருமுறை இழந்த நம்பிக்கையை மீண்டும் பெறுவது எளிதல்ல’ எனும் கூற்று, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கும் பொருந்தும்.
அவ்வாறே,
சில ஊடகங்கள் இச்செய்தியை ஆராயத் தயக்கம் காட்டுவதும், நிறுவனத்தைச் சீர்குலைக்கவேண்டாம் என்று கருத்துத் தெரிவிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கதே. தேர்தல் ஆணையத்தைப் பாதுகாப்பது ஊடகங்களின் வேலையல்ல; அதன் செயல்பாடுகளைச் சுதந்திரமாக ஆய்வு செய்து மக்களுக்கு உண்மையை உரக்கக் கூறுவதே முறையான அறம் செறிந்த செயலாகும்.
இறுதியாக,
தேர்தல் என்பது வெறும் இயந்திரத்தனமான வாக்குப்பதிவு அல்ல; மாறாக, அது குடிமக்கள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு சிறப்பான வாய்ப்பு. தேர்தல் ஆணையத்தின் ஒளிவுமறைவற்ற போக்கும், ஆளுங்கட்சிக்குச் சாதகமாக விதிகளை வளைக்கும் தன்மையும் அரசமைப்புச் சட்ட சனநாயகத்தின் வேரிலேயே கைவைப்பதாக உள்ளது.
இன்று
இந்தக் கேள்விகளை நாம் எழுப்பத் தவறினால், எதிர்வரும் காலங்களில் தேர்தல் என்பது ஒரு சடங்காகவே மாறிவிடும். ஐந்து கோடி வாக்கு முரண்பாடு என்பது அடுத்த தேர்தலில் பத்து கோடியாகவும் உயரக்கூடும். இந்தியாவை ஒரு ‘பெயரளவு சனநாயகம்’
என்ற நிலைக்குத் தள்ளும் அபாயம் நம் கண்முன்னே தெரிகிறது.
ஆகவே,
தேர்தல் ஆணையம் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொண்டு, வெளிப்படைத்தன்மையுடனும் பொறுப்புடனும் செயல்படவேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையெனில், சனநாயகத்தின் காsவலர்களாக அல்ல; மாறாக, அதற்குப் புதைகுழி தோண்டி கல்லறை கட்டியவர்களாகவே வரலாறு தன் பக்கங்களில் இவர்களைப் பதிவு செய்யும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ. இராஜா @ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்