“சுடும்வரை நெருப்பு
சுற்றும்வரை
பூமி
போராடும்வரை
மனிதன்
நீ
மனிதன்... இறுதிவரை போராடு”
என்றார்
கவிப்பேரரசு வைரமுத்து. இளையோரின்
போராட்ட எழுச்சி அண்மையில் இந்திய மண்ணில், டெல்லி - ஜந்தர் மந்தர் முற்றத்தில் போர்க்குணம்
கொண்டு போர்க்களம் கண்டிருக்கிறது.
தொழில்நுட்ப
ஊடகத் தளத்தில் மலர்ந்து, சிந்தனையில் வளர்ந்து, உறவுகளில் இணைந்து, உலகின் கவனத்தை ஈர்த்த ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’
(CJP) என்பது
என்ன? யார் இவர்கள்? இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? இதன் மறைமுக நோக்கம் என்ன? இவர்களின் அடுத்தகட்ட நகர்வு எத்தகையது? என அரசியல் தளத்தில்
நாம் அறிய வேண்டிய அரிய நுட்பங்கள் பல உள்ளன.
இந்த
‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’
(சி.ஜே.பி.) குறித்து
நாடு தழுவிய அளவில் எழும் பெரும்பாலான எதிர்வினைகளும் விவாதங்களும் ஒரு மிக எளிய எதார்த்தத்தைக் காணத் தவறி விடுகின்றன. சி.ஜே.பி.
என்பது சட்டப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி அல்ல; அது வெறும் பொதுமக்களின் திரளும் அல்ல; ஆனால், பொதுமக்களைக் காட்டிலும் அது எவ்வகையிலும் தாழ்ந்ததும் அல்ல; அது ஒரு குறிப்பிட்ட சமூகமோ, தற்காலிகமாகத் திரண்ட ஒரு கூட்டமோ அல்ல; அது உண்மையில், காலங்காலமாகத் தேங்கிக் கிடக்கும் ஏமாற்றங்கள் மற்றும் ஆவேசங்களின் உறைவிடமாகத் திகழும் ‘உணர்வுகளின் ஒரு பெருங்குவியல்.’
ஓர்
அரசியல் இயக்கமாக உருவெடுப்பதற்கான நீண்ட தூரத்திற்கு அப்பால் அது நின்றுகொண்டிருக்கிறது. துல்லியமாகக் கூறின், அது ஒரு ‘தருணம்’ மட்டுமே! அந்தத் தனித்துவத்தால்தான் அது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறுகிறது. இது ஒரு தற்காலிகத் தருணமாக இருக்கலாம்; ஆனால், அது இந்தியக் குடியரசின் எதிர்காலம் குறித்த ஒரு பேருண்மையின் தரிசனத்தை நமக்கு வழங்குகிறது.
எல்லையற்ற
அதிகாரவாதத் தாக்குதல்களிலிருந்தும், ஒற்றைத்தன்மை வாய்ந்த ஆதிக்கத்திலிருந்தும் இந்தியக் குடியரசை மீட்டெடுக்கக்கூடிய மாற்று ஆற்றலின் அரசியலின் தரிசனம் அது. இதனை ஒரு தற்காலிகத் தேர்தல் அலையாகப் பார்க்காமல், அடித்தளத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒரு ‘நீரோட்டம்’
என்று உணர்ந்தால் மட்டுமே நம்மால் இதன் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
இந்தத்
திடீர் எழுச்சியானது மிகப்பெரிய நாடாளுமன்றப் பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி செய்யும் அரசுகளின் மத்தியில் உருவாகும் ஒரு பரவலான சமூக நெருக்கடியின் கூறாகவே தோன்றுகிறது. அதிகாரத்தின் பலவீனமான உட்பகுதியை வெளிக்கொணரும் பொருட்டு எங்கிருந்தோ திடீரெனத் தோன்றும் போராட்ட இயக்கங்களின் வரலாற்று வரிசையில் இதையும் நாம் சேர்த்தே பார்க்கவேண்டும்.
வரலாற்றின்
பக்கங்களைத் திருப்பிப் பார்த்தால், 1973-74-ஆம் ஆண்டுகளின் குஜராத் மற்றும் பீகார் நவநிர்மாண் இயக்கங்கள், 1983-ஆம் ஆண்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க அசாம் இயக்கம், 2012 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளின் அன்னா ஹசாரே இயக்கம், அண்மையில் நடந்த விவசாயிகளின் தொடர் போராட்டம்... இவை அனைத்தும் அன்றைய காலகட்டத்தில் வீழ்த்தவே முடியாத கோட்டைகளாகத் தோன்றிய வலிமைமிக்க அரசுகளுக்கு எதிராக மிக வெற்றிகரமாகச் சவால் விடுத்தவை ஆகும். நாடாளுமன்றத்தில் பலவீனமாகக் காணப்பட்ட எதிர்க்கட்சிகளின் எல்லைகளையும் தாண்டி, மக்களின் ஒட்டுமொத்த அதிருப்தியை மாபெரும் அரசியல் சக்தியாக மாற்றிய பெருமை இந்த இயக்கங்களுக்கு உண்டு.
மே
16, 2026 அன்று பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடர்புக் கல்வி பயிலும் அபிஜீத் திப்கே என்பவரால் இது தோற்றுவிக்கப்பட்டது. இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அவர்கள் வேலையில்லா இளைஞர்களை ‘கரப்பான் பூச்சிகள்’
எனப் பொருள்படும் வகையில் ஒப்பிட்டுக் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக, அச்சொல்லையே தங்களின் அடையாளமாக மாற்றி, இளையோர் இந்த இயக்கத்தைத் தொடங்கினர்.
இதற்கு
ஒரு நிறுவுநர் இருக்கிறார்; ஆனால், கட்டளையிடும் ‘ஒற்றைத் தலைவர்’ என்று எவரும் இல்லை. இதன் பின்தொடர்பவர்களில் பெரும்பாலானோர் வெறும் சமூக ஊடகப் பார்வையாளர்களே. நடைமுறை அரசியல் செயல்பாடுகளில் குறைவான ஆர்வமுடையவர்களே. அவர்களில் பெரும்பாலோர் குறிப்பிட்ட ஒரு பொது எதிரியை நோக்கியவர்களே. அரசியல் அறிஞர் எர்னெஸ்டோ லக்லாவின் கோட்பாட்டின்படி, இத்தகைய பிரபலமான மக்கள் எதிர்ப்பியக்கங்களின் முதன்மை அடையாளமே ‘பொது எதிரி’ என்பதுதான். வரலாற்றின் மாபெரும் சக்தி வாய்ந்த இயக்கங்கள் அனைத்தும் இத்தகைய மூல ஆற்றலைக் கொண்டே
தொடக்கத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளன.
அதிகார
வர்க்கம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் சூழலில் சி.ஜே.பி.
‘கரப்பான் பூச்சியையே’ தன்னுடைய
அடையாளச் சின்னமாகத் தேர்ந்தெடுத்திருப்பதுதான் இதன் அரசியல் உத்தியைச் சிறப்பானதாக்குகிறது. செர்பிய நாட்டின் புகழ்பெற்ற சிந்தனையாளர் ஸ்ர்தா போபோவிச் வலியுறுத்தியதன்படி, நிலவும் அரசியல் அமைப்பைக் கைப்பற்றுவதற்காக அல்லாமல், அந்த அமைப்பின் குறைகளைக் கிண்டலடிப்பதற்காக ‘கரப்பான் பூச்சியை’
ஒரு சின்னமாக எடுத்துக்கொள்வது நகைச்சுவையும் எள்ளிநகையாடுவதும் வன்முறையற்ற எதிர்ப்பின் மிக முக்கியக் கருவிகள் என்பதற்கான மிகச் சிறந்த உதாரணமாகும்.
வரலாற்றில்
இத்தகைய ‘கிண்டல் அரசியல்’ மரபார்ந்த எதிர்க்கட்சிகள் வெற்றியடையாத இடங்களில்கூட மிக எளிதாக வெற்றி பெற்றிருக்கின்றது. இத்தகைய போராட்ட வடிவங்கள் அதிகாரவாத ஆட்சியாளர்களை ஒரு பெரும் குழப்பத்தில் தள்ளுகின்றன. அந்தத் தீவிரக் கிண்டல் அரசியலை அப்படியே சகித்துக்கொண்டு அனுமதித்தால், ஆட்சியாளர்கள் மக்களின் முன்னிலையில் பலவீனமானவர்களாகத் தோன்றுவார்கள்; மாறாக, அதனை அதிகாரம் கொண்டு ஒடுக்க முற்பட்டால் அவர்கள் கொடூரமானவர்களாகவும், உலக அரங்கில் அபத்தமானவர்களாகவும் காட்சியளிப்பார்கள்.
மிக
முக்கியமாக, இந்தப் போராட்ட முறை இன்றைய இந்தியாவின் உண்மையான அரசியல் எதார்த்தத்தை நமக்கு உணர்த்துகிறது. குறிப்பாக, நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைச் சுற்றி ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்படும் மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களோ அல்லது தற்காலிக நம்பிக்கைகளோ, நாட்டின் இளைஞரிடையே பரவலாகக் காணப்படும் வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பின்மை குறித்த அதிருப்தியை ஒருபோதும் மறைத்துவிட முடியாது.
மேலும்,
ஒரு சக்திவாய்ந்த பேரரசு சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் வெறும் ஒரு கேலிச் சித்திரத்தைத் தடை செய்வதற்காக ‘தேசியப் பாதுகாப்பு’ என்னும்
காரணத்தை முன்வைக்குமேயானால் அல்லது தனது இணையவழித் தாக்குதல் படையை ஏவி அந்த ‘ட்ரெண்டை’
அவதூறு செய்ய முற்படுமேயானால், அந்த அரசு உள்ளுக்குள் மிகவும் பலவீனமாக அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறது என்றுதான் அர்த்தம். மக்களின் இந்த அடிமட்டக் கோபத்திற்கு இணையான அளவில் இன்னும் தீவிரமாகச் செயல்படவில்லை. இன்ஸ்டாகிராமில் 2.2 கோடிக்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள சி.ஜே.பி.யின் இந்தப் பிரம்மாண்ட வளர்ச்சி, அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்கள் செயல்பாடுகளை ஒருமுகப்படுத்தவும், மக்கள் போராட்டங்களை அரசியல்மயமாக்கவும் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
வெறுப்பும்
கோபமும் மட்டுமே நிலையானதோர் அரசியல் கோட்பாடாக ஒருபோதும் மாறிவிட முடியாது. ஆளும் பா.ச.க.
போன்ற பலமான கட்டமைப்பைக் கொண்ட கட்சிகளை இவர்கள் எதிர்கொள்ள வேண்டுமாயின், வெறும் சமூக ஊடகக் கேலிகளைத் தாண்டி, அடித்தட்டு மக்களின் சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளைப் பேசும் ஒரு நிலையான கொள்கைத்திட்டத்தை வகுக்கவேண்டும்.
எனவே,
வினோத் குமார் சுக்லாவின் புகழ்பெற்ற கவிதை வரிகளான,
‘அவர் என்னை அறிந்திருக்கவில்லை;
ஆனால்,
நான் நீட்டிய கரத்தை அவர்
அறிந்திருந்தார்...
நாங்கள் ஒருவரையொருவர்
தனிப்பட்ட
முறையில் அறிந்திருக்கவில்லை;
ஆனால்,
இருண்ட பாதையில்
ஒன்றாகச்
சேர்ந்து நடப்பதை அறிந்திருந்தோம்’
என்பவை
பரவலாக நிலவும் விரக்தியை எதிர்கொள்வதற்கு, ஒரு புதிய அரசியல் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான இலக்கணத்தை நமக்குக் கற்றுத்தருகிறது.
ஆகவே,
நாம் ஒருவரையொருவர் இன்னும் முழுமையாக அறியாமல் இருக்கலாம்; ஆனால், நாடு எதிர்கொண்டுள்ள இந்தச் சூழலில், நாம் அனைவரும் இணைந்து நேர்மையான பாதையில் நடக்கக் கற்றுக்கொள்வதே இத்தருணம் நமக்குத் தரும் உண்மையான தரிசனமாகும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண்
என்றுரைக்கும் நூல்’
(குறள் 743)
என்றார்
ஐயன் திருவள்ளுவர். அதாவது, உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்கமுடியாத அருமை ஆகிய நான்கும் கொண்டிருப்பதே ’அரண்’ என்று நூலோர் வகுத்திருப்பதாக அரணுக்கு வரையறை தருகிறார்.
ஒரு
நாட்டின் அரசமைப்புச் சட்டம் என்பது வெறும் சட்டப் பிரிவுகளின் தொகுப்போ, ஆவணக் காப்பகங்களில் அழகு சேர்க்கும் பெரும் ஏடோ அன்று; அது அந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களின் கூட்டு மனச்சான்றின் பிரகடனம்; அது சனநாயகத்தின் ஆன்மா!
‘இந்திய மக்களாகிய நாம்...’ என்று கம்பீரமாகத் தொடங்கும் நமது இந்திய அரசமைப்புச் சட்டம், உலக அளவில் மிக நீண்ட, ஆழமான, உன்னதமான விழுமியங்களைக் கொண்ட ஒரு வாழ்வியல் வழிகாட்டி நெறி. தனிமனித மாண்பு, சமூக நீதி, சமத்துவம் ஆகிய மேன்மைமிகு கோபுரங்களின்மீது எழுப்பப்பட்ட இந்தச் சட்டம், அடித்தட்டு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் ‘அரணாக’ உருவாக்கப்பட்டது. ஆயினும், காலத்தின் சுழற்சியில், மாறிவரும் அரசியல் சூழல்களில் இந்த அரணோ ஆளும் வர்க்கத்தின் கைகளில் மாற்றுக்கருத்துகளை ஒடுக்கும் ‘ஆயுதமாக’ உருமாறி வருகிறதோ? என்றதோர் எண்ணம் இன்று உலகளவில் எல்லாரிடத்திலும் எழத் தொடங்கியுள்ளது.
அண்மையில்,
இந்தியாவின் முதன்மைச் சட்ட வல்லுநரும், நாட்டின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்ட முதல் பெண்ணுமான மூத்த வழக்கறிஞர் திருமிகு. இந்திரா ஜெய்சிங் அவர்களின் நேர்காணலும், அவரது ‘The Constitution is my Home’ (‘அரசமைப்புச் சட்டமே எனது இல்லம்’)
என்ற சுயசரிதை நூலும் நம் கேள்விக்குப் புதியதொரு பரிமாணத்தையும் அறிவுசார் செறிவையும் வழங்கியுள்ளன.
அரசமைப்புச்
சட்டம் ஓர் ஆயுதமாக ஆளும் வர்க்கத்தால் பயன்படுத்தப்படும் தற்காலச் சூழல் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “ஆம், அரசமைப்புச் சட்டம் ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதை நாம் அண்மைக்காலமாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால், அதனால்தான் நான் அரசமைப்புச் சட்டத்தை என் வீடாகக் கருதத் தொடங்கியிருக்கிறேன். அரசமைப்புச் சட்டம் என்பது அரசுகளுக்காகவோ, ஆளும் கட்சிகளுக்காகவோ எழுதப்பட்டது அல்ல; அது மக்களுக்காக எழுதப்பட்டது. இப்போது அரசமைப்புச்சட்டத்தை ஆட்சியாளர்களின் பிடியிலிருந்து மீட்டெடுத்து, அதற்குக் கட்டுப்பட்டு, அதனுள் நாம் குடிபுகும் நேரம் வந்துவிட்டது” என்று
குறிப்பிட்டிருக்கிறார்.
இந்தக்
கருத்து, சட்டம் என்பது ஆட்சியாளர்களின் அதிகார மிரட்டல்களுக்கான கருவி அல்ல; மாறாக, அது சாமானிய மக்களின் உரிமைக் கோட்டை என்பதை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.
அரசமைப்புச்
சட்டத்தின் பகுதி III-இல்
(பிரிவுகள் 12 முதல் 35 வரை) பொதிந்துள்ள ‘அடிப்படை உரிமைகள்’
இந்தியக் குடிமக்கள் அனைவரும் அமைதியுடனும் இணக்கத்துடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்கான குடிமைச் சமூக உரிமைகளை முழுமையாக உறுதி செய்கின்றன. தனிமனிதனின் பொருள்சார், அறிவுசார், நன்னெறி மற்றும் ஆன்மிக வளர்ச்சிக்கு இவை இன்றியமையாதவை என்பதால், இவை நாட்டின் ‘அடிப்படைச் சட்டம்’ எனப் போற்றப்படுகின்றன.
இங்கிலாந்தின்
உரிமைகள் மசோதா, அமெரிக்காவின் உரிமைகள் மசோதா மற்றும் பிரான்சின் மனித உரிமைப் பிரகடனம் ஆகியவற்றின் சாரமாகத் திகழும் இந்த அடிப்படை உரிமைகள், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியச் சமூகத்தில் நிலவிய தீண்டாமை, சாதியப் பாகுபாடுகள் மற்றும் சுரண்டல்களை ஒழித்திடும் பெரும் சமூகப் புரட்சிக்கான காரணிகளாக விளங்கின.
‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்; சாதி, மத, பாலின, பிறப்பிடப் பாகுபாடுகளுக்கு இதில் இடமில்லை’
எனும் சமத்துவ உரிமை (பிரிவுகள் 14-18); பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம், அமைதியான முறையில் கூடுதல் மற்றும் சங்கங்கள் அமைக்கும் சுதந்திர உரிமை (பிரிவுகள் 19-22); மனிதக் கடத்தல், குழந்தைத் தொழிலாளர் முறை, அடிமை முறைகளைத் தடுக்கும் சுரண்டலுக்கு எதிரான உரிமை (பிரிவுகள் 23-24); எம்மதத்தையும் வழிபடவும் பரப்பவும் உள்ள சமயச் சுதந்திர உரிமை (பிரிவுகள் 25-28); சிறுபான்மையினரின் மொழி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு கொண்ட கலாச்சார மற்றும் கல்வி உரிமை (பிரிவுகள் 29-30); அடிப்படை உரிமைகள் பறிக்கப்படும்போது உச்ச நீதிமன்றத்தை நாட வழிவகை தந்த அரசமைப்புக்குட்பட்டுத் தீர்வு காணும் உரிமை (பிரிவு 32) எனும் ஆறு தூண்கள்மீது ‘மக்களுக்கான’ இவ்வரண்
அமைக்கப்பட்டுள்ளது.
மேலும்,
அண்ணல் அம்பேத்கர் அவர்களால் ‘அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மா’ என வர்ணிக்கப்பட்ட பிரிவு
32 மற்றும் உயர் நீதிமன்றங்களின் பிரிவு 226 ஆகியவற்றின் கீழ் நீதிமன்றங்கள் பேராணைகளைப் பிறப்பித்து, அரசு இயந்திரத்தின் அத்து மீறல்களிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் பேரரணாக விளங்குகின்றன. இவற்றுடன், 2009-இல் சேர்க்கப்பட்ட ‘கல்வி உரிமைச் சட்டம்’
(RTE) சமுதாயத்தின்
விளிம்புநிலைச் சிறுவர்களுக்கான கல்விப்புரட்சியை அதிகார வர்க்கத்தின் பிடியிலிருந்து விடுவித்துள்ளது.
ஆயினும்,
அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வலுவான சட்டப் பாதுகாப்பை வழங்கினாலும், மறுபக்கம், ஆட்சியாளர்களின் கைகளில் ஒடுக்குமுறை ஆயுதமாகவே இருக்கின்றது.
குறிப்பாக,
பிரிவு 19 வழங்கும் பேச்சுரிமை, கருத்துச் சுதந்திரம் ஆகியவை முழுமையானவை அல்ல; நாட்டின் பாதுகாப்பு, பொது அமைதி, ஒழுக்கம் ஆகியவற்றின் பெயரால் அரசு ‘நியாயமான கட்டுப்பாடுகளை’ விதிக்கலாம்
என அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், இந்த ‘நியாயமான’
என்ற சொல் மிகப்பரந்த, தெளிவற்ற அர்த்தங்களைக் கொண்டிருப்பதால், ஆளும் வர்க்கம் தனக்கு எதிரான நியாயமான விமர்சனங்களையும், மாற்றுக் கருத்துகளையும் ‘தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்’ என
முத்திரைக் குத்தி ஒடுக்குவதற்கு இப் பிரிவைப் பயன்படுத்திக் கொள்கிறது.
மேலும்,
விசாரணையோ, குற்றச்சாட்டோ இன்றி ஒருவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்து சிறையில் அடைக்க பிரிவு 22, அரசை அனுமதிக்கிறது. உலகளாவிய தாராளமயச் சனநாயக நாடுகளில் இல்லாத இந்தக் கொடூரமான அம்சம், இந்திய அரசமைப்பில் இடம்பெற்றுள்ளது குடிமைச் சமூக ஆர்வலர்களால் பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.
அரசமைப்புச்
சட்டம் வழங்கியுள்ள அதிகார வரம்புகளைப் பயன்படுத்தி இயற்றப்படும் ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’
(UAPA - Unlawful Activities Prevention Act) போன்ற
கொடூரமான சட்டங்கள், அண்மைக்காலமாகச் சமூகச் செயற்பாட்டாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக ஏவப்படுகின்றன. நீதிமன்றப் பிணை பெறுவதைக் கடினமாக்கும் இத்தகைய சட்டங்கள், தகுந்த நீதித்துறை மேற்பார்வையின்றி, குடிமக்களை நீண்ட காலம் சிறையில் அடைக்கும் ‘அரசியல் ஆயுதமாகவே’
மாறியுள்ளன.
நீதிமன்றங்களின்
நீண்டகாலத் தாமதங்கள், எளிய மக்களுக்குச் சட்ட உதவி கிடைப்பதில் உள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை சட்டம் வழங்கும் பாதுகாப்பைச் சாமானியர்களுக்கு எட்டாக் கனியாக்குகின்றன.
காஷ்மீர்
முதல் கன்னியாகுமரி வரை ‘யாவரும் இந்நாட்டு மக்களே!’ எனும் ஒருமைப்பாட்டுக் கருத்தியலில் காலூன்றிய முண்டாசுக் கவிஞன்,
‘சாதி மதங்களைப் பாரோம் - உயர்
சன்மம்இத்
தேசத்தில் எய்தின ராயினும்
வேதிய
ராயினும் ஒன்றே - அன்றி
வேறு
குலத்தின ராயினும் ஒன்றே!’
என
வேறுபாடுகள் இல்லை, யாவரும் ஒன்றே என்று முழங்கினான்.
நீதியரசர்கள்
ஜான் மைக்கேல் டி’குன்ஹா, சந்துரு போன்றோர் ஒருபுறம், அண்மையில் திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் வழக்கு தொடங்கி அனைத்து வழக்கிலும் சிறுபான்மையினருக்கு எதிராகத் தீர்ப்பு வழக்கும் நீதியரசர் ஜி.ஆர். சுவாமி
நாதன் போன்றோர் மறுபுறம் எனப் பார்க்கும்போது சட்டம் தன் கடமையைச் சரியாகச் செய்கிறதா? என்ற கேள்விதான் எழுகின்றது.
இந்திய
அரசமைப்புச் சட்டம் என்பது தேங்கி நிற்கும் நீரல்ல; அது ஓடும் நதி. அது மக்களுக்கு அரணா? அல்லது ஆட்சியாளர்களுக்கு ஆயுதமா? என்ற கேள்விக்கான விடை, சட்டம் என்ன கூறுகிறது என்பதில் இல்லை; மாறாக, அச்சட்டம் யாருடைய கைகளில் இருக்கிறது மற்றும் நீதித்துறை எவ்வளவு சுதந்திரத்துடன் செயல்படுகிறது என்பதில்தான் இன்று அடங்கியிருக்கிறது.
இறுதியாக,
திருமிகு இந்திரா ஜெய்சிங் அவர்களின் கூற்றுப்படி, அரசமைப்புச் சட்டம் ஆளும் வர்க்கத்தின் அரசியல் சதுரங்கக் களம் அல்ல; அது 140 கோடி மக்களின் வாழ்வுக்கான உன்னத இல்லம். அந்த இல்லத்தின் தூண்களை, அதன் சனநாயகப் பண்புகளை, ஆட்சியாளர்களின் அதிகார ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்டெடுத்துப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் தார்மீகக் கடமையும் ஒவ்வோர் இந்தியக் குடிமகனுக்கும் உண்டு. அதுவே தேசத்தின் இறையாண்மைக்கும் மாண்பிற்கும் நாம் செய்யும் உண்மையான தொண்டாகும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
அண்மைக்கால இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பாக, தமிழ்நாட்டின் தேர்தல் களங்களில் ‘மாற்று அரசியல்’ என்ற சொல் வழக்கு மிக அதிகமாக உச்சரிக்கப்படும் ஒரு கவர்ச்சி சொல்லாடலாக மாறியுள்ளது. ஆனால், நடைமுறை அரசியலின் எதார்த்தம், இந்தச் சொல்லின் ஆன்மாவை முற்றிலும் சிதைப்பதாகவே உள்ளது.
கோட்பாடுகளும்
கொள்கைசார் அர்ப்பணிப்புகளும் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் என்ற காலம் மறைந்து, இன்று ‘அளவுகடந்த இருப்பு’ அதாவது பணபலம், படைபலம், ஊடக ஆதிக்கம் ஆகியவையே ஒரு கட்சியின், அதன் வேட்பாளரின் வெற்றியைத் தீர்மானிக்கும் காரணிகளாக உருவெடுத்துள்ளன.
நடந்து
முடிந்த 2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத வகையில் அரங்கேறிய பணப் புழக்கமும், அதனைத் தொடர்ந்து அரங்கேறும் அன்றாடக் காட்சிகளும் குறிப்பாக, கட்சித் தாவல்களும் நம் சனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கியுள்ளன. இச்சூழலில், நாம் காண்பது மக்கள் நலனை மையமாகக் கொண்ட இறையாண்மைமிக்க ஆட்சியா? அல்லது பெரும் முதலாளிகள் இலாபம் ஈட்டுவதற்காக முதலீடு செய்யும் ஒரு கார்ப்பரேட் வணிகமா? என்பதுதான்.
இந்தியத்
தேர்தல்களில் பணத்தின் ஆதிக்கம் என்பது ஏதோ ஒருசில தொகுதிகளோடு நின்றுவிடுவதில்லை. அது ஒட்டுமொத்த அமைப்பையும் தன்வயப்படுத்திய ஒரு பெரும் நோயாகவே இன்று மாறியுள்ளது. கடந்த 2004 முதல் 2014 வரையிலான நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தன் விவரப் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்ததில், வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு 330% உயர்ந்துள்ளது. பணவீக்கத்தைச்
சரிசெய்து பார்த்தாலும், உண்மை மதிப்பில் இந்த உயர்வு 116% ஆகும். 2014 தேசியத்
தேர்தலில் போட்டியிட்ட முதன்மை வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூபாய் 23.8 இலட்சமாக இருந்தது, இது அன்றைய இந்தியாவின் தனிநபர் வருமானத்தை விட (ரூ. 88,533) சுமார் 27 மடங்கு அதிகமாகும். 2026-இன் தற்போதைய தேர்தல் களங்களில் இந்த இடைவெளி பல மடங்கு அதிகரித்துள்ளது.
தேர்தல்
ஆணையம் விதிக்கும் செலவு வரம்புகளுக்கும், களத்தில் கட்சிகள் செய்யும் நேரடிச் செலவுகளுக்கும் இடையே எவ்விதத் தொடர்பும் இருப்பதில்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (1954)-இன் விதிகளை முற்றிலுமாக மீறி, கோடிக்கணக்கான பணம் தேர்தல்களில் இறைக்கப்படுகின்றன. குறிப்பாக, வெற்றிபெறும் வாய்ப்புள்ள வேட்பாளர்கள், சாதாரண வேட்பாளர்களைவிடச் சராசரியாக 20 மடங்கு அதிகச் சொத்து மதிப்புடையவர்களாக இருக்கிறார்கள்.
தேர்தல்
களத்தில் பணத்தின் செல்வாக்கு என்பது வாக்காளர்களின் வாக்குத் தெரிவை நேரடியாக மாற்றியமைக்கும் பேராபத்தாக உருவெடுத்துள்ளது. புள்ளிவிவரங்களின்படி, தேர்தல் களங்களில் கொடுக்கப்படும் பணம் சுமார் 15.83% வாக்காளர்களின் வாக்குத்
தெரிவை நேரடியாகத் தீர்மானிக்கிறது. இதில் பெண் வாக்காளர்களைவிட ஆண் வாக்காளர்களே பணத்தின் செல்வாக்கிற்கு அதிகம் ஆட்படுகிறார்கள்.
இங்கே,
வாக்கிற்குக் காசு வாங்கும் வாக்காளர்கள் தாங்களாகக் கேட்காமல் கட்சிகள் கொடுக்கும்போது ‘இயல்பாக’ பெற்றுக்கொள்பவர்கள் எனவும், தேர்தல் களச்சூழலைப் பயன்படுத்தி, வேட்பாளர்களிடமிருந்தோ அல்லது இடைத்தரகர்களிடமிருந்தோ பணத்தைக் கோரிப் பெறுபவர்கள் எனவும் இருவகையாகப் பிரிக்கப்படுகிறார்கள். மாற்றுக்கருத்துகளாலும், நலமான விவாதங்களாலும் ஈர்க்கப்படவேண்டிய வாக்காளப் பெருமக்கள், இன்று தற்காலிகப் பணப் பயன்களுக்காகத் தங்களின் ஐந்தாண்டு கால எதிர்காலத்தையே அடகுவைக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது சட்டவிரோதச் செயல் மட்டுமல்ல; ஒரு சமூகத்தின் கூட்டுத் தார்மீக வீழ்ச்சி.
தேர்தலுக்கு
முன் வாக்கிற்குக் காசு கொடுக்கும் வேட்பாளர்கள், தேர்தலுக்குப் பின் தங்களின் ‘முதலீட்டை’
அசுர வேகத்தில் திரும்பப் பெற முனைகிறார்கள். அண்மைக்காலங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விலை பேசப்பட்டு, கட்சி மாறும் ‘குதிரைப்பேர’ கலாச்சாரம்
தமிழ் நாட்டிலும், அதன் அண்டை மாநிலங்களிலும் அதிகம் அரங்கேறி வருகின்றது.
கட்சித்தாவல்
தடைச்சட்டம் போன்ற சட்டக் கட்டமைப்புகள் இருந்தபோதிலும், ஆளும் வர்க்கமும் அதிகார மையங்களும் அச்சட்டங்களின் துளைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. மக்கள் ஒரு குறிப்பிட்ட கொள்கைக்காகவும், கட்சியின் சின்னத்திற்காகவும் வாக்களித்து ஒருவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், அவரோ தன் சுய இலாபத்திற்காக மக்கள் அளித்த வெற்றியை விற்று, வேறொரு முகாமிற்குத் தாவுகிறார். இது ஒட்டுமொத்தச் சனநாயகக் கோட்பாட்டையும் கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.
ஆகவே,
உண்மையான மாற்று அரசியலுக்குத் தேவைப்படுவது அர்ப்பணிப்பா? அல்லது அளவு கடந்த இருப்பா? என்ற கேள்வி இன்று தமிழ்நாட் டில் எல்லாருடைய மனத்திலும் எழத்தொடங்கியுள்ளது. காரணம், அர்ப்பணிப்பு இங்கே முற்றிலும் ஓரங்கட்டப்பட்டு, அளவுகடந்த இருப்பே அடிப்படை அலகாக முன்னிறுத்தப்படுகிறது.
இந்திய
அரசியலில் சில கட்சிகளில் வேட்பாளர் தேர்வைக் கட்சியின் உயர்மட்டக் குழு தீர்மானிக்கிறது. பல நேரங்களில் தேர்தல்
சீட்டுகள் பெரும் பணக்காரர்களுக்கு விற்கப்படுகின்றன. இதனால் எளிய பின்னணியைக் கொண்ட மக்களுக்காக உழைக்கின்றவர்கள் தேர்தல் அரசியலில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்படுகிறார்கள்.
ஒரு
வேட்பாளர் தனக்குச் சாதகமாகக் களச் சூழலை மாற்றியமைக்க, தன்வசம் உள்ள ‘அளவு கடந்த இருப்பை’ காட்ட வேண்டியுள்ளது. ஆடம்பரப் பேரணிகள், பிரம்மாண்ட விளம்பரங்கள், சமூக ஊடகப் பக்கங்களை விலைக்கு வாங்குதல் என அனைத்தும் பணத்தால்
மட்டுமே சாத்தியமாகிறது. இதன் விளைவாக, மக்கள் பணி என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு, சுயநிதி பங்களிப்புச் செய்யக் கூடிய பண முதலைகளின் புகலிடமாக
நாடாளுமன்றமும் சட்டமன்றமும் மாறுகின்றன.
பணமே
அரசியலையும் அதன் அதிகாரத்தையும் தீர்மானிக்கும் பட்சத்தில், அங்கு விளையும் ஆட்சி ஒருபோதும் ‘மக்கள் நல்வாழ்வுக்கான ஆட்சியாக’
இருக்க முடியாது. அது முற்றிலும் ஒரு ‘வணிக முதலீடாகவே’ மாறும்.
ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் முதலீடு செய்யும் முதலாளி எவ்வாறு இலாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொள்வாரோ, அதே போலத் தேர்தலுக்காக ரூ. 50 கோடியும், ரூ.100 கோடியும் செலவழிக்கும் வேட்பாளர், ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தவுடன் தன் முதலீட்டைவிடப் பல மடங்கு இலாபம்
ஈட்டவே முயல்வார்!
இதன்
விளைவாக, அரசின் திட்டங்களும் டெண்டர்களும் ஏழை எளிய மக்களின் நலனுக்காக வகுக்கப்படாமல், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், வேட்பாளரின் சொந்தத் தொழில்களுக்கும் சாதகமாக வளைக்கப்படும். உட்கட்டமைப்புத் திட்டங்கள், சாலை மேம்பாடு, பொதுப்பணித்துறைச் செயல்பாடுகள்
என அனைத்திலும் முறைகேடுகள் மலிந்து, தரம் குறைந்த திட்டங்களே செயலாக்கம்பெறும். ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் தங்களை எளிய மக்களின் பிரதிநிதியாகக் கருதாமல், தங்களின் சொத்துகளைப் பாதுகாக்கும் மேல்தட்டு வர்க்கமாகவே தங்களைக் கருதுவர்.
மேனாள்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஆர்.கே. திரிவேதி குறிப்பிட்டதுபோல, “தேர்தலில் வெற்றி பெறும் வாய்ப்பு என்பது செலவழிக்கப்படும் பணத்தின் அளவிற்கு நேர் விகிதத்தில் உள்ளது என்ற விதியை அரசியல் கட்சிகள் கண்டறிந்துள்ளன. இது நாட்டின் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் மட்டங்களைச் சீரழிக்கும் என்பது பற்றி அவர்களுக்கு எவ்விதக் கவலையும் இல்லை.”
பேரதிர்ச்சி
தரும் இந்தச் சீரழிவிலிருந்து நமது சனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டுமெனில், போர்க்கால அடிப்படையில் நாம் சில இலட்சிய மாற்றங்களைச் செய்தாகவேண்டும். அரசியல் கட்சிகளின் வரவு-செலவுக் கணக்குகள், தேர்தல் பத்திரங்களின் உண்மைத் தன்மை ஆகியவை உடனுக்குடன் மக்கள் பார்வைக்கு வைக்கப்படவேண்டும்; வாக்கிற்குக் காசு கொடுக்கும் வேட்பாளர்களையும், வாங்கும் வாக்காளர்களையும் உடனடியாகத் தகுதி நீக்கம் செய்யவும், வெற்றிபெற்ற பிறகு பணத்திற்காக விலைபோகும் உறுப்பினர்களையும், முறையான காரணமின்றி தானாக முன்வந்து பதவியைத் துறக்கும் உறுப்பினர்களையும் மீண்டும் போட்டியிடாதவாறு தடைசெய்யும் அளவிற்குக் கடுமையான தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அனைத்திற்கும் மேலாக, தங்களின் வாக்கு என்பது ஒரு நாட்டின் ஐந்தாண்டு காலத் தலையெழுத்து என்ற விழிப்புணர்வு மக்களிடையே விதைக்கப்படவேண்டும்.
இறுதியாக,
சனநாயகம் என்பது சாமானிய மனிதனின் கையில் இருக்கும் மிக உயரிய அதிகாரம். அந்த அதிகாரத்தை ஒருசில தாள்களுக்காகவும், தற்காலிகப் பரிசுப் பொருள்களுக்காகவும் விற்கும் சமூகம், ஒருபோதும் தன் உரிமைகளைக் கோரிப் போராட முடியாது. இவ்வேளையில்,
‘முடிவுகள் வந்த பின்னரே
வாழ்க்கைத்
தேர்வின்
வினாத்தாள்
முன் வைக்கப்படுகிறது!’
எனும்
கவிஞர் தமிழகனின் ‘கருப்பு நதி’ கவிதைதான் நினைவுக்கு வருகிறது. ஆகவே, தமிழ்நாட்டிற்கு இன்று தேவைப்படுவது ‘அளவுகடந்த இருப்பை’ காட்டி மக்களை ஏமாற்றும் தற்காலிக அரசியல் அல்ல; மாறாக, எளிய மக்களின் வலியை உணர்ந்து, அவர்களுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணிக்கும் தூய கொள்கை கொண்ட மாற்று அரசியல் மட்டுமே! பணபலம் வெல்லும் என்ற மாயையை மக்கள் தங்களின் வாக்குரிமையின் மூலம் உடைத்தெறியாத வரை, சனநாயகம் என்பது பணக்காரர்களின் முதலீட்டுப் பெட்டியாகவே என்றும் நீடிக்கும் என்பது தவிர்க்க இயலாததே!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
இந்தியத் துணைக்கண்டத்தின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒற்றைத்தன்மை கொண்ட கலாச்சார மேலாதிக்கத்தை நிலைநிறுத்தத் துடிக்கும் ஒன்றிய அரசின் அதிகாரக் கரங்கள், மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டின் கல்விச் சுவர்களில் மோதி நிற்கின்றன.
மே
மாதத்தில், கல்விக்கூடங்கள் கோடை விடுமுறையில் அயர்ந்திருந்த வேளையில், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) விடுத்த அந்த ஐந்து பக்கச் சுற்றறிக்கை, ஒரு நிர்வாக அறிவிப்பு மட்டுமல்ல; அது பன்மொழிச் சமூகம் ஒன்றின்மீது தொடுக்கப்பட்ட பண்பாட்டுத் தாக்குதலாகும்.
2026 ஜூலை 1 முதல்
ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கட்டாயம் மூன்று மொழிகளைக் கற்க வேண்டும் என்றும், அதில் குறைந்தது இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்கவேண்டும் என்றும் அந்த ஆணை கட்டளையிடுகிறது. ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தாலும், அது அந்த இரண்டு இந்திய மொழிகளின் கணக்கில் வராது என்பதுதான் இந்தச் சூழ்ச்சியின் உச்சம். மேலோட்டமாகப் பார்க்கையில், ‘அதிக மொழிகளைக் கற்பது அறிவு வளர்ச்சிக்கு உதவும்’ எனும் பொதுவான வாதத்தை முன்வைக்கும் இந்தத் திட்டம், அதன் உட்புறத்தில் இந்தி ஆதிக்கத்தை ஊடுருவச் செய்யும் ஒரு நச்சு வேராகும்.
நிர்வாக
ரீதியான ஒரு சாதாரண மாற்றமாகத் தோற்றமளிக்கும் இச்செயல்பாட்டின் பின்னணியில், இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒற்றைத்தன்மை கொண்ட ‘இந்தி-இந்து-இந்துஸ்தான்’ எனும்
கருத்தியலைத் திணிக்கும் ‘காவித் திட்டத்தின்’ நீண்ட
நிழல் படிந்திருப்பதை நாம் உணரத் தவறக்கூடாது. இது வெறும் கல்விக்கொள்கை அல்ல; இது மொழிவழித் தேசியங்களை நசுக்கும் ஓர் அதிகாரக் கொள்கை.
தமிழ்நாட்டின்
மேனாள் முதல்வர் மு.க. ஸ்டாலின்
அவர்கள் சுட்டிக்காட்டியது போல, இது மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்ட ‘மொழித் திணிப்பே!’ தென்னிந்திய மாநிலங்களில் வாழும் ஒரு மாணவன், தன் தாய்மொழி மற்றும்
ஆங்கிலத்திற்குப் பிறகு, மூன்றாவது மொழியாக எதைத் தேர்ந்தெடுப்பான்? ஆசிரியர் பற்றாக்குறை, பாடப்புத்தகக் கட்டமைப்பு, தேசிய அளவில் நிலவும் இந்திச் சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால், அந்தத் தெரிவு இயல்பாகவே இந்தியை நோக்கியே தள்ளப்படும். ஆனால், இதே கேள்விக்கு மறு பக்கம் என்ன பதில்? இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மாணவர்கள் தமிழ், தெலுங்கு அல்லது மலையாளத்தைக் கற்கவேண்டிய கட்டாயம் உண்டா? இல்லவே இல்லை. அங்குள்ளவர்கள் சமஸ்கிருதத்தையோ அல்லது வேறு ஏதேனும் வட இந்திய மொழியையோ
தேர்ந்தெடுத்துக் கொள்வதன் மூலம், இந்த விதியை மிக எளிதாகக் கடந்து விட முடியும். இந்த ‘சமநிலையற்ற தன்மை’தான் தமிழ்நாட்டின் கோபத்திற்குக் காரணம். சட்டப் புத்தகத்தில் சமமாகத் தோன்றும் இந்த விதி, நடைமுறையில் தென்னிந்திய மாணவர்கள்மீது மட்டும் கூடுதல் சுமையை ஏற்றுகிறது.
மொழி
என்பது யாவருக்கும் அடையாளம்; அது நம் முகம்; முகவரி. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்த வரை மொழி என்பது வெறும் பாடத் திட்டம் அல்ல; அது ஒரு வரலாற்றுத் தழும்பு. 1937-இல் இராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்தியைத் திணிக்க முயன்றபோதுதான், இந்த மாநிலத்தின் சுயமரியாதை உணர்வு பீறிட்டுக் கிளம்பியது. பெரியார் ஈ.வெ. இராமசாமி
அவர்களின் தலைமையில் தாளமுத்து, நடராசன் போன்றோர் தங்கள் இன்னுயிரைத் தந்து காத்த மொழிப்போர் வரலாறு நம் இரத்தத்தில் ஊறியுள்ளது.
1965-இல் மாணவர்கள்
நடத்திய அந்த மாபெரும் அறப்போர், லால் பகதூர் சாஸ்திரி போன்ற அன்றைய தலைவர்களையே பணிய வைத்தது. “இந்தி பேசாத மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாக நீடிக்கும்” என்ற
நேருவின் வாக்குறுதி ஒரு சட்டப் பாதுகாப்பாகப் பெறப்பட்டது. 1968-இல் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் இயற்றப்பட்ட ‘இருமொழிக் கொள்கை’
(தமிழ் மற்றும் ஆங்கிலம்) கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலங்களில் ஒன்றாக உயர்த்தியுள்ளது. உலக வெளியில் நம் மாணவர்கள் போட்டியிட ஆங்கிலமும், நம் பண்பாட்டு வேர்களைக் காக்கத் தமிழும் போதுமானவை என்பதைத் தமிழகத்தின் வளர்ச்சி எண்கள் உரக்கக் கூறுகின்றன.
ஆயினும்,
ஒன்றிய பா.ச.க
அரசு முன்வைக்கும் தேசியக் கல்விக் கொள்கை, ‘மாணவர்களுக்குத் தெரிவு செய்யும் சுதந்திரம் இருக்கிறது’ என்று
வாதிடுகிறது. ஆனால், நடைமுறைச் சிக்கல்களை ஆராய்ந்தால் அந்தச் சுதந்திரம் ஒரு மாயை என்பது நன்கு புரியும். ஒரு தனியார் பள்ளியில் 50 மாணவர்கள் ஒன்பது வெவ்வேறு மொழிகளைத் தேர்ந்தெடுத்தால், ஒன்பது
ஆசிரியர்களை நியமிக்க அந்தப் பள்ளி முன்வருமா?
நிச்சயமாக
வராது. அங்கே ஏற்கெனவே ‘தட்சிண பாரத இந்தி பிரச்சார சபா’ போன்ற அமைப்புகள் மூலம் இந்தி ஆசிரியர்கள் எளிதாகக் கிடைப்பார்கள். மத்திய அரசு இந்தி ஆசிரியர்களை நியமிக்க நிதி ஒதுக்கும்; ஆனால், தமிழ் ஆசிரியர்களை வடமாநிலங்களில் நியமிக்க அதே ஊக்கத்தைக் காட்டாது. விளைவாக, ‘வேறு வழியின்றி’
மாணவர்கள் இந்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாக்கப்படும். ஆகவே, இது ஒரு ‘கட்டமைப்புச் சார்ந்த விபத்து’(Structural Accident) அல்ல;
மாறாக, மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ‘கட்டமைப்புச் சார்ந்த திணிப்பு’
(Structural Imposition) இது.
இந்த
மொழித் திணிப்பு வெறும் கல்விக் கொள்கையோடு நிற்கவில்லை. இது ஒரு நிதி ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுவது வெட்கக் கேடு! தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ரூ. 2,152 கோடி நிதி, ‘சமக்ர சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி கிடையாது என்பது கூட்டாட்சித் தத்துவத்திற்கே எதிரானது. ஒரு மாநிலத்தின் கல்வி உரிமையை, நிதியைக் கொண்டு விலை பேசுவது, ஆரோக்கியமான சனநாயகத்திற்கு அழகல்ல.
ஒரு
குழந்தை தன் தாய்மொழியில் கல்வி கற்பது என்பது உலகளாவிய மனித உரிமை. மும்மொழிக் கொள்கை என்பது ஏற்கெனவே சமூகப் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள கிராமப்புற மாணவர்களுக்குக் கூடுதல் சுமையைத் தருகிறது. ஒரு புதிய மொழியைக் கற்பதற்கான ‘அறிவாற்றல் திறன்’ குழந்தைகளுக்கு உண்டு எனும் வாதம், அந்த மொழியைக் கற்பதற்கான சூழலும், வளங்களும் இல்லாத ஏழை மாணவர்களுக்குப் பொருந்தாது. ஆங்கிலம் மற்றும் தாய்மொழிக் கல்வியே ஒருவரைச் சிறந்த குடிமகனா(ளா)கவும், உலகக்
குடிமகனா(ளா)கவும் மாற்றப்
போதுமானது.
ஒன்றிய
பா.ச.க அரசு இந்தியைத் திணிப்பதில் இவ்வளவு முனைப்புக் காட்டுவதன் பின்னணியில் ஓர் ‘ஒற்றைப் பண்பாட்டு’
அரசியல் மறைந்துள்ளது. பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், ஒரு மொழியை மட்டும் உயர்த்திப் பிடித்து ‘ஒரே நாடு, ஒரே மொழி’ என்பதன் மூலம் மற்ற மாநிலங்களின் தன்னாட்சி உரிமையைப் பறிக்க முடியும் என்பதே அவர்களின் கணக்கு. இந்தியா என்பது ஒற்றைக் கல்லால் ஆன தூண் அல்ல;
அது பல வண்ணக் கற்கள்
இணையும் ஓர் அழகிய ஓவியம். தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பது மற்ற மொழிகளின் மீதான வெறுப்பினால் அல்ல; மாறாக, தன் அடையாளத்தைச் சிதைக்கும் ஆதிக்கத்திற்கு எதிரான தற்காப்பு அரண் என்பதே உண்மை.
தன்னார்வமாக
ஒரு மொழியைக் கற்பதை யாரும் தடுக்கவில்லை; ஆனால், கட்டாயமாகத் திணிப்பதை எக்காலத்திலும் ஏற்க முடியாது. ‘தமிழே எமது உயிர்; ஆங்கிலமே எமது இணைப்பு மொழி’ எனும் எமது தெளிவான நிலைப்பாடு, வெறும் உணர்ச்சியல்ல; அது அறிவியல்பூர்வமான, வளர்ச்சிகரமான கொள்கை. ஆகவே, மத்திய அரசு தன் பிடிவாதத்தைக் கைவிட்டு, மாநிலங்களின் உரிமைகளை மதிக்க வேண்டும்.
கல்வியின்
பெயரால் வரும் இந்தக் காவிக் கொள்கையை தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை வீழ்த்தும் என்பதே எமது எதிர்நோக்கு. 1965-இன் நெருப்பு இன்னும் அணையவில்லை என்பதையும், மொழிப்போர் என்பது இனப்போர் என்பதையும் ஒன்றிய ஆட்சியாளர்கள் நன்கு உணர வேண்டிய தருணம் இது. நம் மொழி, நம் உரிமை, நம் அடையாளம் - இதில் சமரசத்திற்கு என்றுமே இடமில்லை!
தாய்மொழி
காப்போம்! மாநில உரிமை மீட்போம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் தலைமுறை மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. பல்லாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இருபெரும் துருவங்களைச் சுற்றியே சுழன்று கொண்டிருந்த மாநில அரசியல், இன்று ஒரு புதிய திசையை நோக்கித் திரும்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் திரு. ச. ஜோசப் விஜய், மக்களின் பேராதரவுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருப்பது ஒரு சாதாரண அதிகார மாற்றம் மட்டுமல்ல; அது ஒரு தலைமுறை மாற்றத்தின் வெளிப்பாடே!
இந்தத்
தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டின் வாக்காளர்களுடைய அறிவார்ந்த
முதிர்ச்சியைப் பறைசாற்றுகின்றன என்று ஒருசாராரும், கல்வியறிவு பெற்ற மாநிலமாக இருந்தாலும் மக்கள் தெளிவற்றே இன்னும் உள்ளனர் என்ற விமர்சனம் மறுபுறம் எழுந்தாலும், ஒரு கட்சிக்குத் தனிப்பெரும்பான்மையை வழங்கி, ‘அதிகார மதம்’ தலைக்கேற அனுமதிக்காமல், அதேசமயம் ஒரு புதிய மாற்றத்திற்கு வழிவகுக்கும் வகையில் த.வெ.க.வைத் தனிப்பெரும் கட்சியாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளது பெரிதும் வியப்பளிக்கிறது. இந்தத் தொங்கு சட்டசபை போன்ற சூழலிலும், தமிழ்நாட்டில் முன்னெப்போதும் கண்டிராத ஒரு நாகரிக அரசியல் பண்பாடு வெளிப்பட்டிருப்பதாகவும் கருதப்படுகிறது.
மாநிலத்தின்
நலன் கருதியும், மதச்சார்பற்ற கொள்கைகளைக் காக்கும் பொருட்டும், இந்தியக் கம்யூனிஸ்ட் (CPI), மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் (CPI-M), விடுதலைச்
சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.)
மற்றும் இந்திய யூனியன் முசுலிம் லீக் (IUML) ஆகிய
கட்சிகள் த.வெ.க.
ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதுடன், ஆட்சியிலும் பங்குபெறுவது அரசியல்
தளத்தில் ஒருபுறம் பெரிதும் பாராட்டப்படுகிறது. மறுபுறம், தி.மு.க.-வுடனான தங்களின் நீண்டகால உறவைத் தொடர்ந்துகொண்டே அதேசமயம், தமிழ்நாட்டில் பா.ச.க.
போன்ற சக்திகள் குழப்பத்தைப் பயன்படுத்தி ஊடுருவுவதைத் தடுப்பதற்காக எடுக்கப்பட்ட இந்த முடிவு பல விமர்சனத்திற்கும் உள்ளாகியிருக்கிறது.
இந்தச்
சூழலில், ஒவ்வொரு கட்சியின் செயல்பாடுகளையும் நாம் சற்றே சீர்தூக்கிப் பார்க்கவேண்டும். த.வெ.க.
அரசுடன் அமைச்சரவையில் பங்கெடுக்காமல், வெளியே இருந்து ஆதரவளிப்பதாக வி.சி.க.வும் இடதுசாரிகளும் அறிவித்தபோதும், ‘ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு’ என்று வி.சி.க.
முன்பு முழங்கியது போலவே, மாநில உரிமைகளுக்காக தி.மு.க. அணியிலேயே
நீடிப்போம் என்றதுடன், இன்று அமைச்சரவையில் பங்கெடுத்திருப்பது பெரிதும் விமர்சிக்கப்படுகிறது.
ஆயினும்,
த.வெ.க.வுக்கு
ஆதரவளிக்க காங்கிரஸ் முன்வந்த போதிலும், அவர்கள் விதித்த நிபந்தனைகள் பெருமளவில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளன. பா.ச.க.வை எதிர்க்கவேண்டும் என்ற நிபந்தனை
அவசியமானது என்றாலும், அமைச்சரவையில் இடம் கோரியது அவர்களின் அதிகார வேட்கையையே காட்டுகிறது என்றே விமர்சிக்கப்படுகிறது. 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் ஆட்சியதிகாரத்தை இழந்த நிலையில், முதுகில் குத்திவிட்டு அணிமாறிச் சென்றார்கள் என்ற விமர்சனத்திற்கு காங்கிரஸ் ஆளாகியுள்ளது. தி.மு.க.விடம் நாகரிகமான முறையில் விடைபெறாமல் சென்ற அவர்களின் அணுகுமுறை முதிர்ச்சியற்ற அரசியலின் வெளிப்பாடே!
எடப்பாடி
பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. இன்று சிதறுண்டு
கிடக்கிறது. உட்கட்சிப் பூசல்களும், எடப்பாடியார் தலைமைக்கு எதிரான போக்கும் அக்கட்சியைப் பலவீனப்படுத்தியுள்ளன. சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிந்து சென்று விஜய்க்கு ஆதரவளிக்கும் சூழல் உருவானால், அது அ.தி.மு.க.-வின் அடித்தளத்தையே
அசைத்துவிடும். மதவாதத்தைச் சுமந்துவரும் கட்சிகளை தமிழ்நாட்டில் மக்கள் என்றும் நிராகரிப்பார்கள் என்பதை அ.தி.மு.க. உணரத் தவறியதன்
விளைவே இந்தத் தோல்வி.
மேலும்,
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதை என்பது கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நீதியை உள்ளடக்கிய ‘திராவிட மாடல்’ வளர்ச்சியாகவே இருந்து வந்துள்ளது. விஜய் தலைமையிலான புதிய அரசு, இந்த முற்போக்கான திட்டங்களைச் சிதைக்காமல் தொடரவேண்டும் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
தமிழ்நாடு
இன்று தேசிய அளவில் மனிதவள மேம்பாட்டில் சிறந்து விளங்குவதற்குத் திராவிட இயக்கங்கள் அமைத்துக் கொடுத்த வலுவான அடித்தளமே காரணம் என்றால் அது மிகையல்ல. விஜய் அரசு இந்த வளர்ச்சிப் பாதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டுமே தவிர, அதைச் சீர்குலைத்துவிடக் கூடாது.
“நான் தவறு செய்யமாட்டேன்; மற்றவர்களைத் தவறு செய்யவிடமாட்டேன்” என்று
முழங்கிய விஜய், நிர்வாகத்தில் ஒளிவுமறைவற்றத் தன்மையையும் நேர்மையையும் நிலைநாட்டவேண்டும் என்றே மக்கள் விரும்புகின்றனர். வெறும் பரப்புரைகளால் மட்டுமே மக்களைத் திருப்திப்படுத்திவிட முடியாது; களப்பணியும் நேர்மையான செயல்பாடுகளுமே நிலைத்து நிற்கும் ஆட்சியைத் தரும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது.
இந்தப்
புதிய ஆட்சியின் தற்போதைய ‘தேன்நிலவுக் காலங்களின்’ மகிழ்ச்சியில்
‘ஏன் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள்?’ என்ற கேள்வியையும் நாம் மறந்துவிடக்கூடாது. பாரம்பரியக்
கட்சிகள் மற்றும் இயக்கங்கள் மக்களை குறிப்பாக, இளைய தலைமுறையை நெருங்கத் தவறிவிட்டனவோ என்பதையும் மீளாய்வு செய்து பார்க்கவேண்டியுள்ளது. மேடைப்பேச்சுகளும், பழைய முழக்கங்களும் இன்றைய எண்மத் தொழில்நுட்பத் (டிஜிட்டல்) தலைமுறைக்கு உவப்பானதாக இல்லை என்பதையும் நாம் புரிந்தாகவேண்டும்.
த.வெ.க.வினர்
வீடு வீடாகச் சென்று, ஒவ்வொரு குடும்பத்தையும் உணர்வுப்பூர்வமாக நெருங்கியதே அவர்களின் வெற்றியின் இரகசியம் என்றும் கணிக்கப்படுகிறது.
அறிவார்ந்த
வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களைத் தி.மு.க.
அரசு கொண்டு வந்த போதிலும், அதை மக்களிடம் முறையாகக் கொண்டு சேர்க்கத் தவறியதும், அடிமட்ட அளவில் நடந்த ஊழல்களுமே அதிருப்திக்குக் காரணமாயின என்றும் விமர்சிக்கப்படுகிறது.
அதேசமயம்,
சாதி அரசியலைத் தவிர்த்துவிட்டு ஓர் அமைதிக் கிளர்ச்சி மூலம் மக்கள் மதவாதத்தையும் சாதியப் பாகுபாட்டையும் தேர்தல் பணப் புழக்கத்தையும் நிராகரித்திருக்கிறார்கள் என்பதே உண்மை!
தமிழ்நாட்டிற்கு
இன்று தேவைப்படுவது, தனிநபர் துதிபாடும் அரசியலோ அல்லது வசைபாடும் அரசியலோ அல்ல; மாறாக, மாநில நலம் சார்ந்த நிலைப்பாடும் நாகரிக அரசியலுமே! வாரிசு அரசியல் என்பது இந்தியச் சமூக அமைப்பில், ஒன்றிய, தமிழ்நாட்டு அரசியல் சூழலில் தவிர்க்க முடியாதது. ஆனால், வாரிசாக வருபவர் தகுதியோடும், மக்களுக்கான சேவை மனப்பான்மையோடும் வருகிறாரா? என்பதே கேள்வி. வாரிசு என்பதற்காக மட்டுமே ஒருவரைக் கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் எதிர்ப்பதும் நலமான அரசியலாகாது.
விஜய்
முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு மேனாள் முதலமைச்சரையும், அரசியல் முன்னோடிகளையும் சந்தித்தது ஒரு நல்ல அரசியல் பண்பின் வெளிப்பாடே. இத்தகைய நாகரிகமான அணுகு முறைகள் தொடரவேண்டும் என்பதே மக்கள் விருப்பம்.
ஆளுங்கட்சியும்
எதிர்க்கட்சியும் நிறை மரியாதையுடன் செயல்படுவதே ஓர் ஆரோக்கியமான மக்கள் அரசியலுக்கு அழகாகும்.
தமிழ்நாட்டு
மக்கள் த.வெ.க.மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். கோட்-சூட் அணிந்து நவீனத்துவத்தின் அடையாளமாகப் பதவியேற்ற விஜய், தமிழ்நாட்டின் தொன்மையான கலாச்சாரம், பண்பாடு, மரபுகளைக் காக்கவேண்டும்; கல்வி, மருத்துவம் மற்றும் தொழில் துறைகளில் உண்மையான நவீனத்துவத்தைக் கொண்டுவர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். முற்போக்கான திட்டங்களைத் தொடர்வதும், மாநில உரிமைகளுக்காக உறுதியாக நிற்பதுமே அவருக்கு ஆதரவளித்த கட்சிகளுக்கும் மக்களுக்கும் அவர் செய்யும் உண்மையான கைம்மாறு.
இறுதியாக,
மாநிலத்தின் வளர்ச்சி என்பது வெறும் புள்ளி விவர எண்களில் அல்ல; மாறாக, அது எளிய மக்களின் புன்னகையில் இருக்கிறது. தமிழ்நாடு மக்கள் நலம் சார்ந்ததொரு மாநிலமாகவும், இந்தியாவிற்கே வழிகாட்டும் நாகரிக அரசியலின் தளமாகவும் திகழவேண்டும்.
புதிய
அரசு மக்களின் நம்பிக்கையைக் காத்து, சமத்துவத்தையும் சமூக நீதியையும் என்றும் நிலைநிறுத்தட்டும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
இன்றைய இந்திய அரசியலிலும், உலகளாவிய சமூகக் கட்டமைப்பிலும் ‘சமூக ஊடகங்கள்’ என்பது வெறும் தகவல் பரிமாற்றக் கருவியாக மட்டும் இல்லாமல், பொதுமக்களின் எண்ண ஓட்டத்தை வடிவமைக்கும் ஒரு சக்திவாய்ந்த தொழிற்சாலையாக உருவெடுத்துள்ளது என்றால் அது மிகையல்ல!
முன்பெல்லாம்,
ஒரு தலைவரின் தகுதி என்பது அவரது களப்பணி, தியாகம் மற்றும் கொள்கை விளக்கக் கூட்டங்கள் வாயிலாகத் தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இன்று ‘மெய்நிகர் போராளிகள்’
(Virtual Warriors) எனப்படும்
எண்ணிமத் தொழில்நுட்பப் (டிஜிட்டல்) போராளிகள், ஒரு தனிமனிதனை ஒரே இரவில் மகாத்மாவாகவும், அடுத்த இரவிலே துரோகியாகவும் சித்தரிக்கும் வல்லமையைப் பெற்றுள்ளனர். இந்த மெய்நிகர் போர்வீரர்கள் கட்டமைக்கும் பிம்பங்கள் எவ்வளவு தூரம் உண்மையானவை? அவர்களின் சமூக-அரசியல் பொறுப்புணர்வு என்ன? என்பது குறித்த ஓர் ஆழமான விமர்சனப் பார்வையை நாம் கொண்டிருக்க வேண்டியது இன்று காலத்தின் கட்டாயமாகிறது.
யார்
இந்த மெய்நிகர் போராளிகள்? இவர்கள் ஓர் அரசியல் ஆளுமையை முன்னிறுத்துவதற்காக இணையதளங்களில் திட்டமிட்டுச் செயல்படும் ஒத்த நோக்கம் கொண்ட ஒரு குழு, ஓர் அமைப்பு. தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும்,
தமிழ்நாட்டின் இன்றைய முதல்வருமான மாண்புமிகு ஜோசப் விஜய் அவர்கள், தனது இரசிகர்களை வெறும் ‘இரசிகர்கள்’ என்று
அழைப்பதை விடுத்து, அவர்களை ‘மெய்நிகர் போராளிகள்’
என்று தனது பதவியேற்பு விழாவில் அறிவித்தபோது, இந்தச் சொல் இன்று சமூக-அரசியல் தளத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.
இவர்கள்
சமூக ஊடகங்களான யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்றவற்றில் தங்களின் தலைவருக்காக ஒரு தற்காப்பு அரணாகச் செயல்பட்டவர்கள்; இன்றும் செயல்படுபவர்கள். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை முறியடிப்பதும், தங்களின் தலைவரை ஒரு குறையற்ற ஆளுமையாகக் காட்டுவதுமே இவர்களின் முதன்மையான பணி.
இன்றைய
இளைஞர்கள் ‘காட்சி அடிமைகளாக’
(Visual Addicts) மாறிப்போயினர்.
வாசிப்புப் பழக்கம் குறைந்து, வெறும் 30 வினாடி ‘ரீல்ஸ்’
(Reels) மற்றும்
‘ஷார்ட்ஸ்’ (Shorts) மூலம் உலகத்தைப்
புரிந்துகொள்ள முயலும் தலைமுறை இது. இந்தப் பலவீனத்தை மெய்நிகர் போராளிகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
ஒரு
திரைப்பட நட்சத்திரத்தின் திரையில் தோன்றும் ஆவேசமான வசனங்கள், ஏழைகளுக்காக அவர் சிந்தும் கண்ணீர், அநீதியைத் தட்டிக்கேட்கும் சண்டைக் காட்சிகள் போன்றவை நடைமுறை வாழ்க்கையிலும் அவர் அப்படியே இருப்பார் என்ற ஒரு மாயையை உருவாக்குகின்றன.
“பொய்கள் ஒருமுறை சொல்லப்பட்டால் அது பொய்; ஆயிரம் முறை சொல்லப்பட்டால் அது உண்மை” என்ற கோயபல்ஸ் தத்துவத்தின் நவீன வடிவமே இந்த மெய்நிகர் பிம்பக் கட்டமைப்பு. ‘நாசி’ ஆட்சியாளர்கள் குறிப்பாக, நாசி - ஜெர்மனியின் பிரச்சார அமைச்சராக இருந்த ஜோசப் கோயபல்ஸ் இத்தகைய தந்திரங்களைப் பயன்படுத்தி ஹிட்லரை அனைத்து ஆற்றலும் கொண்ட பேராளுமையாகக் காட்டினார்; எதிரிகளைத் தேசத் துரோகிகளாகச் சித்தரித்தார்.
தமிழ்நாட்டின்
முதல்வர் ஜோசப் விஜய் ஆளுமைத்திறன் கொண்டவராகவே இருந்தாலும், இதுவரை உண்மை வாழ்க்கையின் சமூக - அரசியல் வாழ்வியல் தளத்தில் எவ்வித நிர்வாக அனுபவமும் இல்லாதபோது, திரையில் அவர் காட்டும் பிம்பத்தை வைத்து மட்டுமே ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகத் தகுதியானவர் என்று மக்கள் நம்பவைக்கப்படுவது சனநாயகத்தின் மிகப்பெரிய சரிவாகும்.
‘இந்தியா ஒளிர்கிறது’, ‘குஜராத்
மாடல்’ எனும்
முழக்கங்கள் வாயிலாக இந்திய அளவில் பிரதமர் மோடியும், ‘மாற்றம் வேண்டும்’,
‘எல்லாவற்றையும் விட்டுவிட்டு நான் வருகிறேன்’
எனும் முழக்கங்கள் வாயிலாக, தமிழ்நாடு அளவில் தற்போது விஜய் அவர்களும் இந்த மெய்நிகர் போர்வீரர்களின் பலத்தை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளனர்.
2014-இல் நரேந்திர
மோடியின் வருகையின்போது ‘தகவல் தொழில்நுட்பப் பிரிவு’
(IT Wing) என்பது
ஒரு புதிய ஆயுதமாக அறிமுகமானது. ‘குஜராத் மாடல்’ என்பது ஒரு வளர்ச்சிக்கான குறியீடாகச் சித்தரிக்கப்பட்டு, சமூக ஊடகங்கள் வழியாக அது இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டது. அதே வழிமுறையை இன்று தமிழ்நாட்டில் முதல்வர் ஜோசப் விஜய் கையாண்டுள்ளார்.
2026 - தமிழ்நாடு சட்டமன்றத்
தேர்தலில், விஜய் மிகக் குறைவான நாள்களே நேரடியாகக் களப்பணியாற்றினார். ஆனால், திரைக்குப் பின்னால் இருந்த 85,000 இரசிகர் மன்றங்களும், ஆயிரக்கணக்கான மெய்நிகர் போராளிகளும் இடைவிடாது உழைத்தனர். மதுரையில் ஒரு சாதாரண இறைச்சிக் கடை உரிமையாளரான மதார் பதுருதீன், எவ்வித அரசியல் பின்னணியும் இன்றி செல்வாக்குமிக்க ஜாம்பவான்களை வீழ்த்த முடிந்தது என்றால், அதற்குப் பின்னால் இருந்த ஒரே சக்தி சமூக ஊடகங்களில் கட்டமைக்கப்பட்ட விஜய்யின் பிம்பம் மட்டுமே!
ஊடக
நேர்காணல்கள், நேரடிப் பத்திரிகையாளர் சந்திப்புகள் என எதுவுமே இல்லாமல்,
மக்களின் கேள்விகளுக்கு நேரடியாகப் பதிலளிக்காமல், ஒருவழிப் பாதையாகச் சமூக ஊடகங்களில், திரைகளில் மட்டுமே உரையாற்றுவது ஒரு தலைவரை வியக்கத்தக்கவராகவும் தெய்வீகமானவராகவும் காட்டக்கூடியது. விஜய் இதையே செய்தார். அவரது ஒரு ‘செல்ஃபி’ வீடியோ 24 மணி நேரத்தில் 90 மில்லியன் பார்வைகளைப் பெறுவது என்பது ஒரு தன்னிச்சையான நிகழ்வு அல்ல; அது திட்டமிடப்பட்ட ஓர் எண்ணிமத் தொழில்நுட்ப (டிஜிட்டல்) மேலாண்மை.
இங்கே,
மெய்நிகர் போராளிகளின் சமூக-அரசியல் பொறுப்புணர்வும் உண்மைத்தன்மையும் கேள்விக்குள்ளாக்கப்படுவது தவிர்க்க இயலாதது. இவர்களின் மிகப்பெரிய ஆபத்தே அவர்களின் ‘உண்மைத்தன்மை’ இன்மைதான்.
ஒரு தலைவரைப் பற்றி வரும் எதிர்மறையான செய்திகளைத் தகர்ப்பதற்கும், போலியான வெற்றிக் கதைகளைப் பரப்புவதற்கும் இவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்ட அல்லது தீவிரமாக மூளைச்சலவை செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் முன்வைக்கும் வாதங்களில் தர்க்கத்தைவிட உணர்ச்சிவசப்படுதலே அதிகமாக இருக்கும்.
“தொடர்பு கொள்வதில் உள்ள மிகப்பெரிய சிக்கல் என்னவென்றால், அது நடந்துவிட்டது என்ற மாயைதான்”
என்கிறார் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. மெய்நிகர் போராளிகள் மக்களுக்கும் தலைவருக்கும் இடையே ஒரு நேரடித் தொடர்பை ஏற்படுத்துவதாகக் கூறினாலும், உண்மையில் அவர்கள் ஒரு திரையையே உருவாக்குகிறார்கள். அந்தத் திரைத் தலைவரின் குறைகளை மறைத்து, மிகைப்படுத்தப்பட்ட நிறைகளை மட்டுமே காட்டுகிறது.
தேர்தல்
களத்தில் வெற்றி பெறுவது ஒரு கலை என்றால், ஆட்சி செய்வது ஒரு பொறுப்பு. ‘ஜோசப் விஜய் எனும் நான்...’ என மெய்நிகர் போராளிகள்
ஒருவரை அரியணையில் அமர்த்தலாம்; ஆனால், அந்த இருக்கையில் அமர்ந்திருப்பவர் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றால், அதே சமூக ஊடகங்கள் அவரை வீழ்த்தவும் தயங்காது என்பதையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
மெய்நிகர்
உலகம் என்பது ஒரு கண்ணாடி மாளிகை போன்றது. அது அழகாகத் தெரிந்தாலும், உண்மையான வெயிலின் வெப்பத்தையோ அல்லது மழையின் குளிர்ச்சியையோ அது தராது. ஒரு தலைவரின் தகுதியைத் தீர்மானிக்க வேண்டியது அவரது கொள்கை அறிக்கைகளும், களப்பணிகளுமே தவிர, அவரது யூடியூப் பார்வைகளோ அல்லது இன்ஸ்டாகிராம் தொடர்பாளர்களோ அல்ல.
“நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு வகையில் எனக்கு மேலானவன்; அவரிடமிருந்து நான் நிறையவே கற்றுக்கொள்கிறேன்” என்றார்
இரால்ப் வால்டோ எமர்சன். இன்றைய இளையோர் மெய்நிகர் திரைகளைக் கடந்து, உண்மையான அரசியலைக் கற்கவேண்டும். மெய்நிகர் போராளிகள் கட்டமைக்கும் பொய்ப் பிம்பங்களில் வீழ்ந்து கிடக்காமல், ஒரு தலைவரின் உண்மைத் தன்மையை உரசிப் பார்க்கும் அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது இளையோருக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே!
வெற்றி
என்பது ஒரு தொடக்கமே தவிர முடிவல்ல. திரை ஈர்ப்பு கொண்ட திரு. விஜய் போன்ற புதிய தலைவர்களுக்கும், அவர்களது மெய்நிகர் போராளிகளுக்கும் இருக்கும் சவால் இனிமேல்தான் தொடங்குகிறது. எண்ணிமத் தொழில்நுட்ப (டிஜிட்டல்) உலகில் கிடைத்த வெற்றி, உண்மை உலகப் பிரச்சினைகளான வேலையின்மை, விலைவாசி உயர்வு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு போன்றவற்றில் எதிரொலிக்கிறதா என்பதை வரலாறு உற்று நோக்கும். மெய்நிகர் போர்வீரர்கள் வெறும் பிம்பங்களை மட்டுமே உருவாக்குபவர்களாக இல்லாமல், சமூக மாற்றத்திற்கான உண்மையான தூதர்களாக, இறைவாக்கினர்களாக, சமூகப் போராளிகளாக, களப் பணியாளர்களாகக் களமாட வேண்டிய தருணம் இது!
ஆகவே,
உள்ளத்தில் உரக்கக் கூறுங்கள்...
பொய்’மை’ மறுநாள்
மிளிராது;
உண்’மை’ நெடுநாள்
உறங்காது!
பொய்மை
மறைத்தாலும் உண்மை அழியாது;
சங்காய்
முழங்கும் அதன் குரல் அடங்காது!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்