news
தலையங்கம்
சனநாயகமா? பணநாயகமா? கேள்விக்குள்ளாகும் இந்தியாவின் எதிர்காலம்!

யாதும் ஊரே யாவரும் கேளிர்என்று உலகளாவிய சகோதரத்துவத்தைப் பறைசாற்றிய புண்ணிய பூமி நம் இந்தியத் திருநாடு. ஆனால், இன்று அது சனநாயகப் பண்புகளின் சிதைவைக் கண்டு விம்மிக்கொண்டிருக்கிறது. இந்திய அரசமைப்பின் முகப்புரை இந்நாட்டை ஒருசமூக நீதி காக்கும் மதச்சார்பற்ற சனநாயகக் குடியரசுஎன்று கம்பீரமாகப் பறைசாற்றுகிறது. ஆனால், அறம் பிறழ்ந்த அரசியல் களமாகவே அது இன்று காட்சியளிக்கிறது. சமகால அரசியல் நகர்வுகள் இந்த அறம் சார்ந்த வரையறைகளைத் தகர்த்து, சனநாயகத்தை வெறும்பணநாயகமாகஉருமாற்றி வருவது வேதனையளிக்கும் எதார்த்தம். 

ஒரு நாட்டின் சனநாயகம் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் செலுத்துவதில் அல்ல; மாறாக, சட்டத்தின் ஆட்சி, ஊடகச் சுதந்திரம், சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் ஊழலற்ற நிர்வாகம் ஆகிய தூண்களால் தாங்கப்பட வேண்டிய கோபுரம்! இன்று அந்தத் தூண்கள் ஒவ்வொன்றாகச் சரிந்து வருவதை உலகளாவியசனநாயகக் குறியீடுகள்வெளிப்படையாகவே தோலுரித்துக் காட்டுகின்றன.

இலண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும்எக்கனாமிஸ்ட் (Economist Intelligence Unit) என்ற அமைப்பின் ஆய்வறிக்கை, இந்தியச் சனநாயகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. 2010-ஆம் ஆண்டில் 8.15 புள்ளிகளுடன்முழுமையான சனநாயக நாடாகத்திகழ்ந்த இந்தியா, 2024-ஆம் ஆண்டில் 7.81 புள்ளிகளாகச் சரிந்து, ‘குறைபாடு உடைய சனநாயக நாடாகஅடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பணத்திற்கும் சனநாயகத்திற்கும் இடையிலான இந்தச் சிக்கலான உறவு, அதிகாரத்தில் இருப்பவர்களின் பேராசையால் மேலும் நஞ்சாகிக் கொண்டிருக்கிறது.

பணம் என்பது இன்று அரசியல் பங்கேற்பிற்குத் தேவையானது என்றாலும், அது கட்டுப்பாடற்ற முறையில் புழங்கும்போது, சனநாயகத்தின் தரத்தையே தரம் தாழ்த்திவிடுகிறது. குறிப்பாக, பெரும் செல்வந்தர்கள் மற்றும் தொழிலதிபர்களின் மறைமுகத் தலையீடு, பொதுநலனைப் புறந்தள்ளிவிட்டு, ஒருசில தனிநபர்களின், சிறு குழுவின் தனிப்பட்ட நலனுக்காகத் தேசிய முடிவுகளை எடுக்கத் தூண்டுகிறது. இது இந்திய ஒன்றிய அரசியலில் அண்மைக்காலங்களில் அதிகமாகவே ஊடுருவியிருக்கிறது.

இன்றைய இந்திய அரசியலின் ஆகப்பெரும் சாபக்கேடாக உருவெடுத்திருப்பதுமக்கள் பிரதிநிதிகளின் விலைபேசப்படும் பண்பு.’ ஒரு கட்சியின் கொள்கைக்காகவும் சின்னத்திற்காகவும் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஆளும் ஒன்றிய பா... அரசு தனது அதிகார பலத்தாலும், பண பலத்தாலும் ஒவ்வொரு மாநிலத்திலும் விலைக்கு வாங்கும் கலாச்சாரம் சனநாயகத்தின் ஆன்மாவையே சிதைத்து வருகிறது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, மக்களின் தீர்ப்பைத் தமக்கு ஏற்றாற் போல மாற்றிக்கொள்ளக் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறுகிறது. இது வெறும் கட்சித்தாவல் அல்ல; வாக்களித்த கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம். மேலும், ஒன்றிய - மாநில அரசுகளின் இணக்கமான கூட்டாட்சித் தத்துவத்திற்குப் பதிலாக, மாநில அரசுகளைக் கவிழ்க்க முனையும் இத்தகையகுதிரைப்பேரங்கள்இந்தியாவை ஒரு சர்வாதிகாரப் பாதையை நோக்கி நகர்த்துகின்றனவே தவிர, வளர்ச்சி நோக்கிய உண்மையான அகண்ட பாரதம் நோக்கி அல்ல. சனநாயகக் குறியீடு சரிவதற்கு இதுவும் ஒரு முதன்மைக் காரணியே!

அவ்வாறே, உலக அரசியல் முதல் - நம் உள்ளூர் அரசியல் வரை, தேர்தல் சனநாயகம் இன்று ஒரு சந்தையாகவே மாறிவிட்டது. ஆட்சிக் காலங்களில் கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு நிதி இல்லை என்று கைவிரிக்கும் அரசுகள், தேர்தல் நேரங்களில் வாக்குகளைப் பெறுவதற்காக அரசு நிதியிலிருந்து ஆயிரக்கணக்கான ரூபாய்களை வாக்காளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்துவது இன்றைய புதுவகையானபணநாயகஅணுகுமுறையாக இருக்கின்றது.

வாக்காளர்களுக்கு உணவு, பரிசுப் பொருள்கள் மற்றும் இலவசங்கள் என்ற போர்வையில் வழங்கப்படும் சலுகைகள் அவர்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கின்றன. அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களைப் பணக்குவியல்களைக் கொண்டு களமிறக்குவதும், தேர்தல் செலவுகள் - தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதும் சனநாயகத்தின் சமத்துவக்கொள்கைக்கு எதிரானது. அதேநேரத்தில், பணம் மட்டுமே தேர்தல் முடிவைத் தீர்மானித்துவிட முடியாது என்பதைக் கடந்தகாலத் தேர்தல்கள் உணர்த்திய பின்பும், நமக்கு வாய்த்த அரசியல்வியாதிகள்திருந்துவதாக இல்லை. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய தேர்தல் ஆணையம் போன்றதன்னாட்சி அமைப்புகண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கத் தவறி, ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலாகச் செயல்படுவது வேதனையிலும் வேதனை!

சனநாயகத்தின் நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள் இன்று பெரும்பாலும் ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கியுள்ளன. உண்மைச் செய்திகளை மறைத்து, பொய்யை உண்மையாக உலாவிட்டு, அதிகார வர்க்கத்தின் புகழ்பாடும் கருவிகளாக ஊடகங்கள் விலைபேசப்படுகின்றன. கேள்வி கேட்கும் துணிவு கொண்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகப் போராளிகள்மீது ஏவப்படும் அடக்குமுறைகள் கருத்துரிமையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

மதச்சார்பற்ற இந்தியாஎன்ற அடையாளத்தைச் சிதைக்கும் வகையில், சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட மதக்கட்டமைப்பை முன்னிறுத்தி, மற்றவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் போக்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கே ஊறு  விளைவிக்கிறது. நீதித்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் நடுநிலையாகச் செயல்பட வேண்டிய தருணத்தில், அவை அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிவது சனநாயகத்தின் வீழ்ச்சியை மேலும் துரிதப்படுத்தவே செய்கின்றன.

உலகளவில் இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக உருவெடுக்க முயன்றாலும், அதன் சனநாயகப் பண்புகள் சிதையும் போது அந்த வளர்ச்சி அர்த்தமற்றதாகிவிடுகிறது. ‘பணநாயகம்என்ற அரக்கன்சனநாயகம்என்ற தேவதையின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், விழிப்புணர்வுள்ள குடிமக்களாக நாம் கேள்வி எழுப்ப வேண்டிய தருணம் இது.

குறிப்பாக, தேர்தல் நிதி மற்றும் பிரச்சாரச் செலவுகள் கடுமையாக முறைப்படுத்தப்பட வேண்டும்; மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறுவதைத் தடுக்கும் சட்டங்கள் இன்னும் வலுப்படுத்தப்படவேண்டும்; அரசு நிறுவனங்கள் (தேர்தல் ஆணையம், சி.பி.., அமலாக்கத் துறை) அரசியல் தலையீடின்றிச் செயல்பட வேண்டும்; தகவல் அறியும் உரிமை மற்றும் பேச்சுச் சுதந்திரம் எவ்வித அச்சமுமின்றிப் பாதுகாக்கப்படவேண்டும் என்பதே ஒரு சாமானியனின் அடிப்படை எதிர்பார்ப்புகளாக இருக்கின்றன.

இந்தியாவின் எதிர்காலம் என்பது எண்ணிமத் தொழில்நுட்ப வளர்ச்சியிலோ அல்லது பிரமாண்டமான சிலைகளிலோ இல்லை; மாறாக, அது கடைக்கோடி ஏழை மனிதனின் வாக்குரிமையும், கருத்துரிமையும் எவ்விதப் பணபலத்திற்கும் அடிபணியாமல், சுதந்திரமாக இயங்குவதில்தான் உள்ளது. பணத்தால் பெறப்படும் அதிகாரம் ஒருபோதும் மக்கள் சேவையைச் செய்யாது. எனவே, பணநாயகத்தைத் தூக்கியெறிந்து, அறம் சார்ந்த சனநாயகத்தை மீட்டெடுப்பதே வரும் தலைமுறைக்கு நாம் செய்யும் ஆகச்சிறந்த கைம்மாறாகும்.

பாரத நாட்டின் எதிர்காலம்

பணத்தின் கைகளில் அல்ல;

பண்பட்ட சனநாயகத்தின்

கைகளில்தான் மிளிரவேண்டும்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
அரசியல் என்பது வாழ்வியல்: தேவை விழிப்புணர்வு

இந்திய நாடு அடிமை நுகத்தடியிலிருந்து விடுபட்டு, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கத் தொடங்கி எண்பது ஆண்டுகளை எட்டுகிறது. இந்த நீண்ட நெடிய பயணத்தில், ‘அரசியல் என்றால் என்ன?’ என்ற வினாவை ஒரு பாமரனிடம் முன்வைத்தால், அவரிடமிருந்து வரும் எதிர்வினை பெரும்பாலும் ஏளனமாகவோ அல்லது ஒவ்வாமை நிறைந்ததாகவோதான் இருக்கும். ‘அரசியல் நமக்கு எதுக்குப்பா?’ என்ற ஒற்றைவரி பதிலுக்குள், சராசரி இந்தியனின் அரசியல் குறித்த விரக்தியும் அறியாமையும் புதைந்து கிடக்கின்றன.

கற்றறிந்தோரையும் சாமானியரையும் ஓரிடத்தில் அமர வைத்து ஒரு குழு விவாதத்தை நடத்தினால், அங்கே அரசியல் என்பது சாக்கடை என்றும், ஊழலின் உறைவிடம் என்றும் வர்ணிக்கப்படுமேயன்றி, அது நம் வாழ்வியலைத் தீர்மானிக்கும் ஆணிவேர் என்ற புரிதல் மிகச் சிலரிடம் மட்டுமே இருக்கும்.

அரசியல் என்பது ஏதோ சட்டசபைகளிலும் நாடாளுமன்றங்களிலும் நடக்கும் வெற்று விவாதங்களோ அல்லது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் திருவிழாவோ அன்று; அது மானுட வாழ்விற்கான நெறிமுறைகளை வகுக்கும் ஓர் உன்னத அமைப்பு. சமூகத்தின் அதிகாரக் கட்டமைப்பை எவர் கையில் ஒப்படைப்பது? என்ற தெளியும், நாட்டின் வளங்களை எவ்வாறு மேம்படுத்துவது? குடிமக்களை எவ்வாறு சமூக - பொருளாதார வாழ்வில் ஏற்றம் காணச் செய்வது? வளங்களை எல்லாருக்கும் எவ்வாறு பகிர்ந்தளிப்பது? எனும் கேள்விகளுக்கு விடைதேடும் களம் அது. புரிதலுடன் எடுக்கப்படும் முடிவுகளின் பலன்கள் கடைக்கோடி மனிதனுக்கும் சென்றடைகின்றனவா? என்பதையும் தீர்மானிக்கும் ஒரு மாபெரும் செயல்முறைதான் அரசியல்.

அரசியல் என்பது நமது வாழ்வின் ஒவ்வோர் அங்கத்திலும் இரண்டறக் கலந்திருப்பது. அரசியலை நமது வாழ்விலிருந்து விலக்கிப் பார்ப்பது அறியாமை. நாம் உண்ணும் உணவின் தரம், குடிக்கக் கிடைக்கும் நீரின் தூய்மை, சுவாசிக்கும் காற்றின் ஆரோக்கியம் என அனைத்தும் அரசியலால் தீர்மானிக்கப்படுகிறது என்றால் நம்பமுடிகிறதா?

ஒரு சாமானியன் வாங்கும் தக்காளி முதல் தங்கம் வரை அனைத்துப் பொருள்களின் விலை உயர்விற்கும், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. எனவே, “அரசியல் என்பது நாம் உண்ணும் உணவிலும், உடுத்தும் உடையிலும், உறங்கும் உறைவிடத்திலும் நிறைந்திருப்பதுஎன்பதை நாம் உணர்ந்தாகவேண்டும். எங்கோ நடக்கும் போரால், இன்று நமது சமையலறையில்அக்கப்போரு (பிரச்சினை) நடக்கிறது

கல்வியும் மருத்துவமும் இன்று வியாபாரமாகிப்போன சூழலில், ‘எல்லாருக்கும் சமமான கல்வி, எல்லாருக்கும் சரியான மருத்துவம்என்ற உன்னத இலட்சியம் அரசியலின் செயல்திட்டமாக இருக்கவேண்டும். வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதும் ஒரு சிறந்த சனநாயக நாட்டின் அரசியல் கடமையாகும். சுருக்கமாகக் கூறினால், அரசியல் என்பது நம் உடைமை; நமது அடிப்படை உரிமை!

ஆட்சி, அதிகாரம், ஆளுகை என்ற பெயரில் முன்னுக்கு வருபவர்களையே நாம் அரசியல்வாதிகள் என்கிறோம். ஆனால், இன்றைய கள நிலவரம் முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. அரசியல்வாதிகளில் ஒரு பெரும் பகுதியினர் கடவுளையும் பக்தியையும் அரசியலின் மைய நீரோட்டத்திற்குள் வலிந்து திணிக்கிறார்கள். கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பற்றி விவாதிக்க வேண்டிய மேடைகளில், இன்று மதவாத முழக்கங்கள் ஓங்கி ஒலிக்கின்றன.

ஒன்றிய, பாசிச பா... அரசும் கட்சியும் இந்திய அரசியலின் திசையைஇந்துத்துவாஎன்ற கருத்தியலை நோக்கித் தீவிரமாகத் திருப்பிக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். வழிகாட்டுதலில் இயங்கும் இக்கட்சி, இந்தியக் கலாச்சாரத்தைஇந்து கலாச்சாரத்தோடுமட்டுமே அடையாளப்படுத்தி, 1922-இல் சாவர்க்கர் வகுத்த கொள்கைகளை நடைமுறைப்படுத்த, அவற்றை அரசியலுக்குள் தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. 2014-ஆம் ஆண்டிற்குப் பிறகு, முந்தைய அரசுகளின் மதச்சார்பின்மையைபோலி மதச்சார்பின்மைஎன்று முத்திரை குத்தி, மதவாத அரசியலை - மதவாத வாழ்வியலை மக்கள் மத்தியில் இன்று விதைத்து வருகிறது.

மதத்தைப் பயன்படுத்தி வாக்குகளைச் சேகரிக்கும் இந்த உத்தி, மக்களைப் பிளவுபடுத்திச் சமூகத்தில் ஒரு பதற்றமான சூழலை உருவாக்குகிறது. இந்தப் பதற்றம் கலவரங்களாக உருவெடுக்கும்போது, மக்கள் தங்கள் அடிப்படை உரிமைகளைப் பற்றிப் பேச மறந்து, உணர்ச்சிவசப்பட்ட அடிமைகளாக மாறுகிறார்கள். ‘கடவுளைக் காப்போம், மதத்தை மீட்போம்என்ற முழக்கங்களுக்கு முன்னால், ‘எங்களுக்கு உணவு வேண்டும், வேலை வேண்டும்என்ற முழக்கங்கள் மங்கிப் போகின்றன. திருப்பரங்குன்றம் நிகழ்வு உணர்த்தும் பாடம் இதுதான்.

இந்தியச் சனநாயகத்தின் அடித்தளமே பன்முகத்தன்மைதான். ஆனால், இன்றைய சூழலில்சனநாயகமும் தேசியமும் முரண்பட்டு நிற்கும் பிம்பம் உருவாக்கப்படுகிறதுஎன்று அரசியல் ஆய்வாளர் சுஹாஸ் பாலிஷ்கர் குறிப்பிடுகிறார். தேசியம் என்பது பன்முகத்தன்மையை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும். ஆனால், இன்று பா... கட்டமைக்கும் புதிய மேலாதிக்கம், மாற்றுக்கருத்துகளுக்கு இடமளிக்காத ஓர் ஒற்றைத் தன்மையை நோக்கி நகர்கிறது; இது சனநாயகத்தின் ஆன்மாவையே சிதைக்கும் செயலாகும்.

இராம இராஜ்ஜியம்எனும் கருத்தியல் தலித்துகள், மலைவாழ் மக்கள், ஆதிக்குடிகள் மற்றும் மதச் சிறுபான்மையினரை ஒதுக்கி வைக்கும் ஒரு கட்டமைப்பாகவே அரசியல் கருத்தாளர்கள் கருதுகின்றனர். பள்ளிப் பாடத்திட்டங்களில் இராமாயணத்தைப் புகுத்துவதும், மத அடையாளங்களை முன்னிறுத்துவதும் ஒரு சனநாயக நாட்டிற்கு அழகல்ல.

மேலும், ‘வெறுப்பு அரசியல்என்பது ஆளும் வர்க்கத்தின் நிர்வாக, பொருளாதாரத் தோல்விகளை மூடி மறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு திரை என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ‘தேசியப் பெருமிதம்என்ற பெயரில் தனி முதலாளிகள் பணக்காரர் பட்டியலில் இடம்பெற, ஏழைகள் மேலும் ஏழைகளாக்கப்படுகின்றனர்; அவர்களின் உரிமைகளும் உடைமைகளும்  பறிக்கப்படுகின்றன.

இன்று எங்கெல்லாம் மதவாதம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் தனியார்மயம் துரிதப்படுத்தப்படுகிறது. இது வருவாய் ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து, சமூகத்தில் பெரும் பிளவை ஏற்படுத்தும். வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களிடம், ‘உங்களுக்கு வேலை கிடைக்காததற்குப் பிற மதத்தினரோ அல்லது இடஒதுக்கீடோதான் காரணம்எனும்  நஞ்சு விதைக்கப்பட்டு, அது ஏற்கெனவே எரியும் தீயில் எண்ணெய் வார்க்கிறது.

அண்மைக்காலங்களில், ஒன்றிய - தமிழ்நாட்டு அரசியல் சூழல் கொதிகலன்போல வெப்பம் கொண்டிருக்கிறது; எரிமலைபோல வெப்பம் உமிழ்கிறது; அது நஞ்சாக இருக்கிறது. இந்த நச்சுத்தன்மை வாய்ந்த அரசியல் சூழலில், இளைஞர்கள் தங்களை அரசியல் ரீதியாக வலுப்படுத்திக்கொள்வது காலத்தின் கட்டாயம். அரசியல் புரிதல் என்பது வெறும் கட்சி அரசியலைப் புரிந்துகொள்வது மட்டுமல்ல; மாறாக, அது அரசியல்-பொருளாதாரத்தைப் புரிந்துகொள்வது; நம் வாழ்வியலைப் புரிந்துகொள்வது. நம் வாழ்வைத் தீர்மானிக்கும் அரசியலை நாம் எவ்வளவு தொலைநோக்குப் பார்வையோடு பார்க்கிறோம் என்பதில்தான் நம் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

மதம் என்பதுநம்பிக்கைஎனவும், அரசியல் என்பதுஉரிமைஎனவும் நாம் தெளிவு கொண்டிருக்கவேண்டும். எவர் ஒருவர் மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசாமல், மதத்தையும் இனத்தையும் பேசி வாக்குகளைச் சேகரிக்கிறாரோ, அவரைப்போலி அரசியல்வாதிஎன்று வெளிப்படையாகவே நாம் நிராகரிக்கவேண்டும். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வெறுப்புப் பரப்புரைகளையும், கலகக்காரர்களின் பொய்களையும் பகுத்தறிவு கொண்டு ஆராய வேண்டும்.

பன்முகத்தன்மையே இந்தியாவின் களம்; அதுவே நம் பலம். பிற மதத்தவரை எதிரியாகச் சித்தரிக்கும் அரசியலைப் புறந்தள்ளி, சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் முன்னிறுத்தும் அரசியலைக் கொண்டாடுவோம்.

அரசியல் மதவாதமானால், மக்கள் தங்களை அறியாமலேயே அடிமைகளாகி விடுவார்கள். ஒரு சனநாயக நாட்டில் அரசியல் என்பது மக்களின் குரலாக இருக்கவேண்டும்; அது மதத்தின் முகமூடியாக இருக்கக்கூடாது. பா... முன்னெடுக்கும் இந்தத் தீவிரமான இந்துத்துவக் கருத்தியல், இந்தியாவின் மதச்சார்பற்ற அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் வல்லமை கொண்டது.

விடுதலை என்பது வெறும் அந்நியரிடமிருந்து பெற்ற அதிகாரம் மட்டுமல்ல; அது ஒவ்வொரு குடிமகனும் அச்சமின்றி வாழும் உரிமை; கேள்வி கேட்கும் உரிமை; சமமாக நடத்தப்படும் உரிமை. இந்த உண்மைகளை உணர்ந்து, அரசியலை நமது வாழ்வின் அங்கமாக ஏற்று, பொறுப்புள்ள குடிமக்களாக நாம் மாறவேண்டும்.

மதம் என்பது ஆன்மா தொடர்பானது; அரசியல் என்பது வாழ்வாதாரம் தொடர்பானது. இவை இரண்டும் கலக்கும்போது பிறக்கும் நச்சு, வரும் தலைமுறையையே அழித்துவிடும். ஆகவே, விழிப்படைவோம்! அரசியலில் மதத்தைக் கலப்பவர்களைப் புறக்கணிப்போம்! உண்மையான சனநாயகத்தை நிலைநாட்ட ஒன்றுபடுவோம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
கோடையின் கொடுமை: காலநிலை மாற்றத்தால் கலங்கும் மனிதகுலம்!

இயற்கை அன்னை வழங்கிய கொடைகளை நாம் நுகர்வுப் பொருள்களாக மாற்றியதன் விளைவே, இன்று நாம் அனல் பறக்கும் காற்றையும், கரைபுரண்டோடும் பெரு மழையையும் அறுவடை செய்து கொண்டிருக்கிறோம்.

இலக்கிய உலகில் புகழ்பெற்ற கவிதை வரிகள் இவை:

பின்னர் எழுத்தாளர்கள் மரத்தில்...

இலையற்ற மரங்கள் கூட்டமாக,

துர்நாற்றம் வீசும் கடல்கள்

மோசமான காற்றுக்குக் கீழே.

ஆயிரம் மைல்கள் பெட்ரோலியக் குப்பைகளால்....’

என நீளும் ஐம்பத்திரெண்டு வரிகள் கொண்டபாராளுமன்றம்எனும் அக்கவிதையைப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்துக் கவிஞர் கரோல் ஆன் டஃபி படைத்துள்ளார்.

இது ஆபத்தில் இருக்கும் ஒரு கிரகத்தைப் பற்றி அறிக்கை செய்ய பறவைகள் சபை ஒன்று கூடுவதாகவும், ஒவ்வொரு பேச்சாளரும் வெவ்வேறு சூழலை விவரிப்பதாகவும், அனைத்தும் சேதமடைந்து அழிந்து வருவதை எடுத்துரைப்பதாகவும், இறுதியில் கூட்டம் எந்தத் திட்டமும் இல்லாமல் முடிவடைவதாகவும் பொருள்பட அமைக்கப்பட்டுள்ளது.

காலநிலை நெருக்கடிக்கு எதிரான அரசியல் அமைப்புகளின் மந்தநிலையை இக்கவிதை வன்மையாகச் சாடுகிறது. பறவைகளின் கூட்டத்தைப் பாராளுமன்றமாக உருவகப்படுத்தும் இக்கவிதை, நெகிழிக் கழிவுகள் மற்றும் உருகும் பனிப் பாறைகள் போன்ற இயற்கையின் அழிவைச் சாட்சியங்களாக முன்வைக்கிறது. மனிதர்கள் அமைதியாக இருக்கும்போது, பாதிக்கப்பட்ட பறவைகள் தங்கள் குரல் வழியே உலகின் தோல்வியை அம்பலப்படுத்துகின்றன. இவ்வளவு எச்சரிக்கைகள் இருந்தும், உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் உலகம் அமைதியான முறையில் அழிவை நோக்கிச் செல்வதை இக்கவிதை துயரத்துடனே பதிவு செய்திருக்கிறது.

இவ்வாண்டு 2026 - உலகம் இதுவரை கண்டிராத ஒரு வெப்பமான கோடை காலத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கிறது என அறிவியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இது வெறும் யூகத்தின் அடிப்படையில் வந்த செய்தி அல்ல; மாறாக, அறிவியல்பூர்வமான தரவுகளின் வெளிப்பாடு. மனிதகுலம் தனது வரலாற்றில் ஒரு மிக முக்கியமான, ஆபத்தான கால கட்டத்தை எட்டியுள்ளதாக உலக வானிலை ஆய்வு மையங்களின் அண்மைக் காலத் தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

இங்கிலாந்து வானிலை ஆய்வு மையத்தின் ஆய்வுப்படி, 2026-ஆம் ஆண்டு தொழில்துறைக்கு முந்தைய காலத்தை விட (1850-1900), 1.340C முதல் 1.580C வரை அதிக வெப்பமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு நிலவிய 1.550C என்ற உச்சக்கட்ட வெப்ப நிலையைவிட இது சற்றே குறைவாகத் தோன்றினாலும், 2023 முதல் 2026 வரையிலான நான்கு ஆண்டுகள் தொடர்ந்து 1.40C  என்ற அபாய எல்லையைத் தாண்டியிருக்கிறது என்பதுதான் கவனிக்கப்பட வேண்டிய உண்மை.

இதற்கு முன்பு உலக வெப்பநிலை, 1.30C-ஐத் தாண்டியதே அரிதான ஒன்றாக இருந்தது; ஆனால், இன்று பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்கான 1.50C என்ற எல்லையை நாம் நெருங்கிவிட்டோம்எனும் காலநிலை விஞ்ஞானி ஆடம் ஸ்கைஃப்பின் கூற்று இங்கே கூர்ந்து கவனிக்கத்தக்கது!

மேலும், பூமி வெப்பமடையும் வேகம் முன்னெப்போதையும்விட இப்போது இரட்டிப்பாகியுள்ளதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 1970  முதல் 2015 வரை உள்ள ஆண்டுகளில் 0.20C என்ற அளவில் உயர்ந்து வந்த வெப்பம், கடந்த 10 ஆண்டுகளில் 0.350C என்று அதிரடி வேகத்தில் உயர்ந்து வருகிறது எனும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மத்திய மற்றும் கிழக்கு வெப்ப மண்டலப் பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு நீர் அசாதாரணமாக வெப்பமடைவதால் வகைப்படுத்தப்படும்எல் நினோ (El Nino) போன்ற இயற்கை மாற்றங்கள் உலகளாவிய வானிலை மாற்றத்திற்கும் குறிப்பாக, ஆசிய, ஆஸ்திரேலியாவில் வறட்சி ஏற்படுவதற்கும், தென் அமெரிக்காவில் கனமழை பொழிவதற்கும் காரணமாக ஒருபுறம் இருந்தாலும், புதைபடிவ எரிபொருள்களை (Fossil Fuels) இடைவிடாது எரிப்பதன் மூலம் நாம் வளிமண்டலத்தில் உருவாக்கியுள்ளகார்பன் போர்வைதான் இத்தனை பேரழிவிற்கும் முதன்மையான  காரணமாகக் குறிப்பிடப்படுகின்றது. “இதே வேகம் தொடர்ந்தால் 2030-க்குள் நாம் 1.50C என்ற இலக்கை நிரந்தரமாகத் தாண்டிவிடுவோம்என்று எச்சரிக்கின்றார் விஞ்ஞானி ஸ்டீபன் ரஹ்ம்ஸ்டோர்ஃப்.

மேலும், வெப்பம் என்பது வெறும் அசாதாரணமான சூழல் மட்டுமல்ல; அது ஓர் உயிர்க்கொல்லியும்கூட. இதனால் விவசாய நிலங்களிலும், கட்டுமான இடங்களிலும் வெயிலின் தாக்கத்தால் மக்கள் வேலை செய்ய முடியாமல் போகிறது. அவ்வாறே, ‘தி லான்செட்எனும் இதழின் 2025-ஆம் ஆண்டு அறிக்கை, “உலகளவில் வெப்பம் காரணமாக நிமிடத்திற்கு ஒரு நபர் உயிரிழக்கிறார்; 1990-களுடன் ஒப்பிடும்போது வெப்பம் தொடர்பான மரணங்கள் 23% அதிகரித்துள்ளனஎன்று அதிர்ச்சியூட்டும் உண்மையைப் பகிர்ந்துள்ளது.

எனவே, காலநிலை மாற்றம் என்பது ஏதோ அரசுகள் மட்டுமே தீர்க்கவேண்டிய பிரச்சினை அல்ல; மாறாக, ஒவ்வொருவரும் தமது அன்றாட வாழ்வியல்  முறையிலும் சில மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும். சிறப்பாக, மக்களின் நுகர்வு வெறி தணியவேண்டும். குளிர்சாதனப் பெட்டிகள், சொகுசு வாகனங்கள் ஆகியவற்றின் அதிகப்படியான பயன்பாடு வளிமண்டலத்தில் வெப்பத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது என்ற புரிதல் நமக்கு வேண்டும். மரங்களை வெட்டிவிட்டு அடுக்கு மாடி வீடுகளை நாம் உருவாக்கி வருவதால், நகரங்கள் வெப்பத் தீவுகளாக மாறிவருகின்றன. நம்மைச் சுற்றி நாம் மேற்கொள்ளும் இயற்கைச் சீரழிவுகளில் உச்சமானது, கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் காடுகளை அழிப்பதுதான். அதனால் பூமியின்கார்பன் சின்ங்ஸ் (Carbon Sinks) எனப்படும் இயற்கை வடிகட்டிகளை நாம் பெரிதும் இழந்து வருகிறோம்.

2026-கோடையின் தாக்கத்திலிருந்து தப்பிக்கவும், எதிர்காலப் பேரழிவைத் தடுக்கவும் சில போர்க்கால நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டாக வேண்டும். அரசின் நிர்வாகச் செயல்பாட்டில் குறிப்பாக, எரிசக்தி மாற்றம் இன்றியமையாதது. அதாவது, புதைபடிவ எரிபொருள்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நிறுத்திவிட்டு, சூரியசக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு நாம் மாறவேண்டும். அவ்வாறே, பசுமைத் திட்டங்களை எங்கும் செயல்படுத்தவேண்டும். குறிப்பாக, நகரங்களில் நுண் காடுகளை (Miyawaki Forests) உருவாக்கி வெப்பத்தைக் குறைக்கவேண்டும்.

அரசு மட்டுமல்ல, ஒவ்வொரு தனிமனிதனும் முன்னெச்சரிக்கை வழிமுறைகளில் கவனம் கொண்டிருக்கவேண்டும். குறிப்பாக, நீர் மேலாண்மை என்பது மிக அவசியமானது. நீரை எங்கும் சிக்கனமாகப் பயன்படுத்துவதும், அதேவேளையில் கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதும் இன்றியமையாதது. காலந்தோறும் நாம் முழங்கிக்கொண்டிருக்கும், ‘வீட்டுக்கொரு மரம்என்பது செயலாக்கம் பெறவேண்டும். ஒவ்வொரு வீடும் குறைந்தது ஒரு மரத்தையாவது நட்டு வளர்ப்பது, வருங்காலத் தலைமுறைக்கு நாம் தரும் பெரும் கொடை!

பூமி வெப்பமடைவது என்பது வெறும் அறிவியல் எச்சரிக்கை மட்டுமல்ல; மாறாக, அது நமது வாசற்படியில் வந்து நிற்கும் மரணத்தின் எச்சரிக்கை. “பூமி எவ்வளவு விரைவாக வெப்பமடைகிறது என்பது, நாம் கார்பன் வெளியேற்றத்தை எவ்வளவு விரைவாகப் பூஜ்ஜியத்திற்குக் கொண்டு வருகிறோம் என்பதைப் பொறுத்தே அமையும்என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 2026-ஆம் ஆண்டின் இந்தக் கடுமையான வெப்பம் நமக்கு விடுக்கும் கடைசி எச்சரிக்கை மணி இதுவே.

இயற்கையோடு இயைந்த வாழ்வைத் தொலைத்துவிட்டு, செயற்கை நுகர்வுகளில் இன்பம் காணும் மனிதகுலம், இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில்...

கடைசி மரமும் வெட்டுண்டு

கடைசி நீரும் விசமேறி

கடைசி மீனும் பிடிபட

அப்போதுதான் உறைக்கும்

பணத்தைத் தின்ன முடியாது என்று

எனும் கவிஞர் இளைய பாரதியின் வரிகள்தான் நம் கோர வாழ்வியலை உணர்த்தும் வலிமிகுந்த உண்மையாகும். தாள முடியாத புவி வெப்பத்தினால், ஒரு புழுவைப்போலத் துடித்து வதங்கும் அவல நிலையை இன்று நாம் எங்கும் காண்கிறோம். “நீர் நெருக்கடியும் புவி வெப்பமயமாதலும் உலகை எதிர்நோக்கியிருக்கும் இரு பெரும் பேரழிவுகள்என்று 1990-களிலேயே ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச் சூழல் அமைப்பு (UNEP) எச்சரிக்கை மணி அடித்தது.

சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் சமர்ப்பித்த ஆய்வு முடிவுகள், இந்தப் பேராபத்துகள் இந்தியாவைச் சூழ்ந்து நிலைகுலையச் செய்யத் தொடங்கிவிட்டதை உறுதிப்படுத்துகின்றன. அதிலும் குறிப்பாக, தமிழ்நாடு இன்று இந்த நெருக்கடியின் பிடியில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கிறது.

இதே நிலை நீடித்தால், நச்சுப்புகை சூழ்ந்த ஆகாயத்தையும், தகிக்கும் புவி வெப்பத்தையும், வறண்ட நிலத்தையும், சீர்குலைந்த சுற்றுச்சூழலையும் மட்டுமே நாம் எதிர்காலச் சந்ததியினருக்குச் சொத்தாக விட்டுச் செல்ல நேரிடும். பசுமையற்ற அந்தப் பாலைநிலம், நமது வாரிசுகளின் வாழ்க்கையை ஒரு தீராதத் துயரமாக மாற்றிவிடும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய கொடூரச் செயல், ஒரு மாபெரும் சமூகக் குற்றமே!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
தொடரும் அவலம்! மானுட மாண்பு காண்பது எப்போது?

21-ஆம் நூற்றாண்டு - அறிவியல் தொழில்நுட்பத்தின் உச்சம், விண்வெளிப் பயணங்கள், செயற்கை நுண்ணறிவு என மானுடம் தன்னை ஒரு நாகரிகமடைந்த சமூகமாகப் பறைசாற்றிக்கொள்ளும் காலம். ஆனால், இந்தநாகரிகமுகமூடிக்குப் பின்னால், மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமையும், சாக்கடைக் குழிகளில் மனித உயிர்கள் கருகும் அவலமும் இன்றும் தொடர்வது நம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் ஒரு பெரும் வினாவாகும். இந்திய ஒன்றிய அரசின் அண்மைக்காலத் தணிக்கை அறிக்கைகளும், சமூக ஆய்வுகள் வெளிப்படுத்தும் புள்ளிவிவரங்களும் நாம் இன்னும் கற்கால மனநிலையிலேயே உழன்று கொண்டிருக்கிறோம் என்பதையே தோலுரித்துக் காட்டுகின்றன.

ஒன்றிய அரசு அண்மையில் வெளியிட்ட சமூகத் தணிக்கை அறிக்கையின்படி (Social Audit 2025), சாக்கடைக் கழிவுகளைச் சுத்தம் செய்யும்போது நிகழும் மரணங்களில் 90 விழுக்காட்டிற்கும் அதிகமானவை, எவ்விதப் பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி தொழிலாளர்கள் பணிபுரிந்ததாலேயே நிகழ்ந்துள்ளன. அவ்வாறே, 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த 54 மரணங்களை ஆய்வு செய்ததில், 47 நிகழ்வுகளில் அவர்களுக்கு எவ்வித இயந்திரச் சாதனங்களும் வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது. இறந்த தொழிலாளர்களில் ஐவருக்கு மட்டுமே கையுறைகளும், ஒரே ஒரு நபருக்கு மட்டுமே காலணிகளும் இருந்துள்ளன. மிக முக்கியமாக, 27 நிகழ்வுகளில் அத்தொழிலாளர்களிடம் ஒப்புதல்கூடப் பெறப்படவில்லை.

மேலும், 1993 முதல் இன்று வரை 1,035 பேர் இத்தகைய அபாயகரமான துப்புரவுப் பணியின்போது உயிரிழந்துள்ளனர். இதில் 948 குடும்பங்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியது. இது வெறும் புள்ளிவிவரம் அல்ல; அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தால் அநியாயமாகக் கொல்லப்பட்ட மனித உயிர்களின் பட்டியல்.

இந்தியாவில் துப்புரவுப் பணி என்பது வெறும் தொழிலாளர் நலன் சார்ந்த சிக்கல் மட்டுமல்ல; அது ஆழமாக வேரூன்றிய சாதியக் கட்டமைப்பின் ஒரு நீட்சி என்பதை நாம் புரிந்தாக வேண்டும். ‘துப்புரவுத் தொழிலாளிஎன்ற சொல்லாடலுக்குப் பின்னால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மட்டுமே இப்பணியைச் செய்யவேண்டும் என்ற எழுதப்படாத விதி, இன்றும் நிலவுவது பேரபத்தமானது.

மனுதர்மம்போதித்த படிநிலைச் சமூகம், மனிதர்களை அவர்கள் பிறப்பின் அடிப்படையில்தூய்மையானவர்கள்என்றும், ‘தீண்டத்தகாதவர்கள்என்றும் பிரித்து வைத்தது. அந்த இழிவான மனநிலைதான், நவீன காலத்திலும் ஒரு சக மனிதனை மலம் நிறைந்த குழிக்குள் இறங்கச் சொல்லும் துணிவைத் தருகிறது. சாக்கடைக் குழிக்குள் இறங்குபவன்தீண்டத்தகாதவன்என்றும், அவனது மரணம் வெறும் செய்தியாகக் கடந்து போகவேண்டிய ஒன்று என்றும் கருதும் மனநிலை நிலவும் வரை, சட்டம் மட்டும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்றத்தையும் தந்துவிடாது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்

                                                  (குறள் 972)

என்றார் ஐயன் வள்ளுவர். பிறப்பினால் அனைவரும் சமம்; ஆயினும், செய்கின்ற தொழில்களால் உயர்வு-தாழ்வு வேறுபாடுகள் இல்லை; மாறாக, செய்யும் தொழிலில் காட்டுகிற திறமையில் மட்டுமே வேறுபாடு காணமுடியும், காண வேண்டும் என்பதை நாம் உணர்ந்ததாகவேண்டும்.

படித்த மேதாவிகள் வாழும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளிலும், அரசு அலுவலகங்களிலும் இன்றும் சாக்கடை அடைப்பை நீக்க இயந்திரங்களைவிட மனிதர்களையே தேடுவது எத்தகைய நாகரிகம்? மனிதக் கழிவுகளைக் கைகளால் அள்ளும் கொடுமை சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தாலும், நாட்டின் பல பகுதிகளில் அது இன்னும் நடைமுறையில் உள்ளதே! குறிப்பாக, கிராமப் புறங்களில் உலர்ந்த கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் பணியில் பெண்கள் இன்றும் ஈடுபடுத்தப்படுவதும், அவர்கள் மூங்கில் கூடைகளில் மனிதக் கழிவுகளைச் சுமந்து செல்லும் காட்சியும் இந்திய சனநாயகத்தின் மீது பூசப்பட்ட கரி என்பதை மறந்துவிடக்கூடாது.

உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் பெண்கள் இப்பணியைச் செய்ய மறுத்தால், அவர்கள் ஊரை விட்டு வெளியேற்றப்படுவதும், வன்முறைக்கு ஆளாவதும் தொடர்கதையாகிறது. கல்வி கற்றும் பட்டதாரி இளைஞர்கள் கூடத் தங்கள் சாதியின் காரணமாகத் துப்புரவுப் பணிக்குத் தள்ளப்படும் அவலத்தை, மனித உரிமை கண்காணிப்பகத்தின் (Human Rights Watch) அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

நான் வங்கியியல் பயின்றவன்; ஆனால், பஞ்சாயத்து நிர்வாகம் என்னைக் கழிப்பறையைச் சுத்தம் செய்ய சொன்னது; ஏனெனில், நான் இந்தச் சமூகத்தைச் சேர்ந்தவன்என்ற கைலாஷ் போகர்ஜி போன்ற இளைஞர்களின் வாக்குமூலம் நம் கல்வி முறையையும், சமூக அறத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. 2014-ஆம் ஆண்டு மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கைலாஷின் நிகழ்வு, இந்தியாவில் கையால் மலம் அள்ளுவதும், அது சாதி அடிப்படையிலான பாகுபாடு தொடர்பானது என்பதையும் தோலுரித்துக் காட்டுகிறது. பல சட்டத் தடைகள் இருந்தபோதிலும், இந்த மனிதாபிமானமற்ற நடைமுறை இன்றும்  தொடர்கிறது என்பதும், அது சாதிப் படிநிலைகளில் வேரூன்றி உள்ளூர் அதிகாரிகளால் நிலைநிறுத்தப்படுகிறது என்பதும் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன.

இந்தியாவில் மலம் அள்ளும் கொடுமையை ஒழிப்பதற்காகப் பல ஆண்டுகளாகப் பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. 1993-ஆம் ஆண்டின் மலம் அள்ளுவோர் வேலைவாய்ப்பு மற்றும் உலர் கழிப்பறை கட்டுமானத் தடைச்சட்டம், மலம் அள்ளும் தொழிலைக் குற்றமாக்குவதற்கான முதல் முயற்சியாகும்; இருப்பினும், இது முறையாக நடைமுறைப்படுத்தப்படாதது கவலைக்குரியதே. அவ்வாறே, 2013-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டமனிதக் கழிவுகளைக் கைகளால் அள்ளுதல் தடை மற்றும் அவர்களுக்கான மறுவாழ்வு செய்தல் சட்டம் (PEMSR Act) இப்பணியை முற்றிலும் தடை செய்தது. ஆனால், இன்றும் கள நிலவரம் வேறாக உள்ளது. அரசு அதிகாரிகள் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்காமல், ஒப்பந்த முறையில் தொழிலாளர்களைத் திரட்டி, அவர்களுக்கு எவ்விதப் பயிற்சியும், பாதுகாப்பு உபகரணங்களும் வழங்காமல் மரணக் குழிகளுக்குள் தள்ளுகின்றனர்.

மேலும், 2013-ஆம் ஆண்டின் மலம் அள்ளுவோர் மறுவாழ்வுச் சட்டம், அவர்களுக்கான பண உதவி, வீட்டு வசதி, கல்வி மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆணையிட்டதுடன், ஒன்றிய அரசுநமஸ்தேபோன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும், அவை முழுமையாகச் சென்றடையவில்லை என்பதே எதார்த்தம்.

குஜராத்தின் தாரத் நகரில், 23 வயதே ஆன உமேஷ் பாமினியா சாக்கடையைச் சுத்தம் செய்யும் போது உயிரிழந்தார். அவர் உயிரிழந்த பத்து நாள்களில் அவரது மகன் பிறந்தான். அஞ்சனா என்ற அவருடைய மனைவி தன் கைக்குழந்தையுடன்என் குழந்தையை இனி எப்படி வளர்ப்பேன்?” என்று கேட்கும் கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை. அதேபோல், சென்னையில் தொழிற்சாலை ஒன்றில் சாக்கடை சுத்தம் செய்ய சென்று மூச்சுத்திணறி உயிரிழந்த மோசஸின் மனைவி அன்னம்மா, தன் கணவர் இப்பணியைச் செய்கிறார் என்பதே தெரியாமல் வாழ்ந்திருக்கிறார். “என் பிள்ளைகளிடம் அவர்களின் தந்தை மலக்குழியில் இறந்து போனார் என்று எப்படிச் சொல்வேன்?” என்ற அன்னம்மாவின் கதறல், இந்தச் சமூகம் அந்தத் தொழிலாளர்களுக்கு இழைத்த மாபெரும் துரோகத்தின் சாட்சியே (26 October 2023, BBC News).

நாடெங்கும் எதிரொலிக்கும் இந்த அவலக் குரல்கள் மறைய, சாக்கடை மற்றும் கழிவுத் தேக்கங்களைச் சுத்தம் செய்யும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவது இனி 100 விழுக்காடு நிறுத்தப்படவேண்டும். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் நவீன இயந்திரங்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். மேலும், இப்பணியிலிருந்து விடுபடுபவர்களுக்குக் கௌரவமான மாற்றுத்தொழில், கல்வி மற்றும் வீட்டு வசதி வாய்ப்புகளை அரசு வழங்கிடவேண்டும். பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளர்களைப் பணியில் ஈடுபடுத்தும் அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்படுவதுடன், தூய்மைப் பணி ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கடமை என்ற பிற்போக்குச் சிந்தனையைப் பாடப்புத்தகங்கள் முதல் பொதுவெளிகள் வரை நாம் வேரறுக்கவேண்டும்.

இறுதியாக, மானுட மாண்பு என்பது அனைவருக்கும் சமமானது; ஒருவர் தன் வயிற்றுப் பிழைப்புக்காகச் சகமனிதனின் கழிவை அள்ளும் நிலையும், நச்சு வாயுவில் மூச்சுத்திணறிச் சாகும் அவலமும் நீடிக்கும் வரை, நாம் நம்மைநாகரிகமடைந்த சமூகம்என்று அழைத்துக்கொள்ளும் தார்மிக உரிமையை இழந்துவிடுகிறோம். இவ்வேளையில்,

தினம் மாறும் உலகில்

நிறம் மாறும் மனிதர்கள்;

காயங்கள் ஆற

காட்சிகள் மாறவேண்டும்!’

எனும் புதுக்கவிதைதான் நினைவுக்கு வருகின்றது.

துப்புரவுத் தொழிலாளர்களின் மரணம் என்பது விபத்தல்ல; அது ஒரு சமூகப் படுகொலை! இந்நிலை மாற, இந்த இழிநிலையைத் துடைக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்ஒன்றிணைவோம்! சமத்துவச் சமுதாயம் படைப்போம்!!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
நல்லகண்ணு எனும் செந்நிறச் சுடர்! கொள்கைக் குன்றின் ஒரு நூற்றாண்டுப் பயணம்! (சிறப்புத் தலையங்கம்)

எண்ணும் எழுத்தும் இரு கண் என்பர் - வாழ்வில்

எளிமையும் தியாகமும்நல்ல கண்ணுஎன்போம்!

தமிழ்நாட்டு அரசியல் வானில் ஒரு நூற்றாண்டு காலம் அப்பழுக்கற்ற நேர்மையோடும், சமரசமற்ற உறுதிப்பாட்டோடும் சுடர்விட்டுக் கொண்டிருந்த ஒரு மாபெரும் ஒளி அணைந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர், தகைசால் தமிழர், தோழர் ஆர். நல்லகண்ணு அவர்களின் மறைவு என்பது, ஒரு தனிமனிதரின் முடிவு அல்ல; அது நேர்மையெனும் அறத்தின் ஒரு சகாப்தம் நிறைவுற்ற தருணம்.

1925-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26-ஆம் நாள், தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தின் செம்மண்ணில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளிக்காலத்திலேயே இந்தியத் தேசத்தின் விடுதலைக் கனலை நெஞ்சில் சுமந்தார். தனது 15-வது வயதிலேயே பொதுவுடைமைக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு, 18-வது வயதில் முறைப்படி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அன்று அவர் ஏந்திய செங்கொடி, அவர் இறுதி மூச்சுவரை ஒருபோதும் தாழ்ந்ததில்லை என்பதே பேருண்மை.

சுதந்திரப் போராட்டக் காலத்திலும், அதன் பின்னரும் திரு. நல்லகண்ணு அவர்கள் சந்தித்த அடக்குமுறைகள் கல்நெஞ்சையும் கரைக்கக்கூடியவை. 1949-இல் தலை மறைவு வாழ்க்கையில் இருந்தபோது, காவல்துறையினரால் சுற்றி வளைக்கப்பட்டார். ‘மலை உச்சியிலிருந்து கீழே உருட்டி விடுவோம்என்று மிரட்டியபோதும், சக தோழர்களைக் காட்டிக்கொடுக்க மறுத்த மாவீரன் இவர்!

ஆத்திரமடைந்த காவல்துறை அதிகாரி, இவரது கையில் விலங்கிட்டு, தலைகீழாகத் தொங்கவிட்டு, மீசையையும் கன்னத்தையும் தீயிட்டுக் கொளுத்திய அந்த வன்முறைச் செயல், இவர் மீசை வளர்க்காததற்கான வரலாற்றுச் சாட்சியானது. நெல்லை சதி வழக்கில் சேர்க்கப்பட்டு, தன் இளமையின் ஏழு ஆண்டுகளைச் சிறைக்கதவுகளுக்குப் பின்னே கழித்தபோதும், ‘மக்களுக்காகத் தியாகம் செய்வதில் ஒரு பேரின்பம் உண்டுஎன்று கொண்ட கொள்கையில்  பாறையென உறுதியாக நின்றார்.

நல்லகண்ணு போன்ற தலைவர்கள் ஒருமுறை கூட தேர்தலில் வெற்றி பெறவில்லையேஎன்பது அரசியல் விமர்சகர்களின் கசப்பான ஆதங்கமாக இருக்கலாம். 1967, 1977 சட்டமன்றத் தேர்தல்களிலும், 1999 மக்களவைத் தேர்தலிலும் களம் கண்டார். ஆனால், வெற்றி கைகூடவில்லை. உண்மையில் தோற்றது நல்லகண்ணு அல்ல; தகுதியான ஒரு தலைவனை அடையாளம் காணத் தவறிய சமூகமே!

சாதியப் பிடிப்புகளும் பணபலமும் தாண்டவமாடும் தேர்தல் அரசியலில், கொள்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்ட ஒரு துறவிக்கு இடமில்லாமல் போனது காலத்தின் முரண். இருப்பினும், சட்டப்பேரவைக்குச் செல்லாமலேயே தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றிய பல போராட்டங்களை இவர் முன்நின்று நடத்தினார்.

எளிமைக்கு ஓர் இலக்கணம் இவர். இவருடைய எளிய வாழ்க்கை நவீன காலத்து அரசியல்வாதிகளுக்கு ஒரு பெரும் பாடம். இன்று பஞ்சாயத்துத் தலைவர் கூட சொகுசு காரில் வலம் வரும் வேளையில், 13 ஆண்டுகள் ஒரு பேரியக்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்தும், ஒரு சிறிய வாடகை வீட்டிலேயே தன் வாழ்நாளைக் கழித்தவர் இவர்.

தனது 80-வது பிறந்த நாளின்போது கட்சித் தொண்டர்கள் அன்பளிப்பாக வழங்கிய ஒரு கோடி ரூபாயை அப்படியே கட்சிக்கே திருப்பிக் கொடுத்தவர் இவர். 2022-இல் தமிழ்நாடு அரசு வழங்கியதகைசால் தமிழர்விருதையும், அதன் பத்து இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையையும் பொதுநிதிக்கே வழங்கிய இந்தப் பெருந்தன்மைதனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்என்ற சங்கத் தமிழ் வரிகளுக்குச் சான்றாக அமைந்தது.

தோழர் நல்லகண்ணு அவர்களின் மறைவுச் செய்தி கேட்டதும் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அனைவரும் கட்சிப் பாகுபாடின்றித் தங்கள் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்தனர். தமிழ்நாட்டு முதல்வர் மு.. ஸ்டாலின் அவர்கள் விடுத்த செய்தியில், “எனக்கு ஒரு கண்ணில் பார்வை இல்லை என்றாலும், அகத்தில் மற்றொரு கண் இருக்கிறது. அதுதான் நல்லகண்ணுஎன்று முத்தமிழறிஞர் கலைஞரால் போற்றப்பட்ட மகத்தான தலைவர் மறைந்தது பெரும் துயரத்தை அளிக்கிறதுஎன்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “கொள்கைக் கனல் அகத்துளே தீயாய் மூண்டு தகிக்க, முகத்திலே புன்னகையுடன் அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை இவர். அவர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமையே. தமிழினத்தின் ஈடு இணையற்ற தியாகச் சுடரான தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும்என்று முதல்வர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை, “தமிழ்நாட்டு அரசியலில் அரிதாகிப்போன நேர்மை மற்றும் தூய்மையின் வரலாற்றுச் சாட்சியாகத் திகழ்ந்தவர் நல்ல கண்ணு; அவரது மறைவு சமூக நீதிக்கான போராட்டங்களுக்குப் பேரிழப்புஎன்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, “எங்கள் இயக்கத்தின் இதயம் நின்றுவிட்டது; கடைசி மூச்சு வரை செங்கொடி ஏந்திய ஒரு மாபெரும் போராளியை இழந்து தவிக்கிறோம்என்று இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

அரசியல் போராட்டங்களுக்கு அப்பால், அவருடைய வாழ்க்கை இயற்கையோடு இயைந்த போராட்டமாக இருந்தது; தமிழ்நாட்டின் இயற்கை வளங்களைக் காப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டார். தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையைத் தடுக்க, 80 வயதைக் கடந்த நிலையிலும் அவரே நேரில் நீதிமன்றத்திற்குச் சென்று வாதாடித் தடை பெற்றார். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானப் போராட்டமாகட்டும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கமாகட்டும், நல்லகண்ணுவின் குரல் எப்போதும் முதல் குரலாக ஒலித்தது.

பார்வை ஒரு கண்ணில் குறைந்தாலும், அகக்கண் கொண்டு மக்கள் நலனைக் காண்பவர்என்று போற்றப்பட்ட நல்லகண்ணுவின் 101 ஆண்டுகாலப் பயணம் இன்று முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால், அவர் விட்டுச் சென்ற நேர்மை, எளிமை, தூய்மை மற்றும் தியாகம் ஆகிய விழுமியங்கள் தமிழ்நாட்டு அரசியலின் திசைக் காட்டியாக என்றும் நிலைத்திருக்கும். அதிகாரத்தின் நிழல்படாத, ஆடம்பரத்தின் வாடை தீண்டாத ஒரு மகத்தான மனிதரைத் தமிழ்நாடு இன்று இழந்து நிற்கிறது. அவரது மறைவு ஒரு வெற்றிடத்தை உருவாக்கியிருக்கலாம்; ஆனால், அவர் விதைத்த கொள்கைகள் ஆயிரமாயிரம் புதிய நல்ல கண்ணுகளை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. அவரது உடல் அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்கப்படும் வேளையில், ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் அவருக்குச்செவ்வணக்கம்செலுத்துகிறது. இவ்வேளையில்,  

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் 236)

எனும் ஐயன் வள்ளுவரின் வாக்கே நம் சிந்தையில் எழுகின்றது.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
அறம் கொண்ட மானுட வாழ்வு: இயற்கை நுண்ணறிவிலா? செயற்கை நுண்ணறிவிலா?

மானுட நாகரிகம் தன் பரிணாம வளர்ச்சியில் எண்ணற்றத் தொழில்நுட்பப் புரட்சிகளைக் கண்டுள்ளது. சக்கரம் முதல் நீராவி இயந்திரம் வரை, மின்சாரம் முதல் இணையம் வரை ஒவ்வொன்றும் மனித வாழ்வியலை மறுசீரமைத்துள்ளன; அடுத்தடுத்த தலைமுறைகளின் மாற்றங்களால் ஏற்படுகின்ற பரிணாமப் புரட்சியை விதைத்துள்ளன.

ஆனால், இன்று நாம் நின்றுகொண்டிருக்கும்செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) என்னும் தளம், முந்தைய கண்டுபிடிப்புகளைக் காட்டிலும் அறநெறி சார்ந்தும், வாழ்வியல் சார்ந்தும் பல வினாக்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக, மானுடத்தின் அறநெறி வாழ்வுக்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் இன்றைய தேவை இயற்கை நுண்ணறிவா? செயற்கை நுண்ணறிவா? என்ற கோணத்தில் தர்க்கமும் கருத்துப் பரிமாற்றமும் கற்றறிந்தோர் அவைகளில் நிகழ்ந்து கொண்டும் இருக்கின்றன. ஒருபுறம், பொருளாதார மேம்பாட்டிற்கானமந்திரக்கோலாகஇது பார்க்கப்படும் வேளையில், மறுபுறம் மனிதனின்இயற்கை நுண்ணறிவு (Natural Intelligence) மழுங்கடிக்கப்படுகிறதா? என்ற அச்சமும் இயல்பாகவே நம்மில் எழுகிறது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற உலகளாவிய AI உச்சிமாநாடு, இந்த விவாதத்திற்குப் புதிய பரிணாமத்தை வழங்கியுள்ளது.

பொருளாதார மேம்பாட்டைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவு என்பது தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது. அதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லை. டெல்லியில் நடைபெற்றகார்னகி-அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண் டேஷன்நிகழ்வில் உரையாற்றிய பிரிட்டனின் மேனாள் பிரதமர் ரிஷி சுனக், இந்தியாவின் நிலையை மிகவும் நேர்மறையாகக் கணித்துள்ளார். அதாவது, “இந்தியா செயற்கை நுண்ணறிவில் முன்னிலை வகிப்பதற்கும், அதனைச் சமூகத்தில் பெருமளவில் பயன்படுத்துவதற்கும் மிகச்சரியான நிலையில் உள்ளதுஎன்றும், “மேற்கத்திய நாடுகளில் AI குறித்த அச்சமும், வேலைவாய்ப்பு இழப்பு பற்றிய கவலையும் நிலவும் சூழலில், இந்தியாவில் பெரும் வியப்பூட்டும் வகையில் நம்பிக்கையும் உற்சாகமும் இருப்பதை என்னால் காண முடிகிறதுஎன்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் சுட்டிக்காட்டியபடி, இந்தியாவின்எண்ணிமப் பொதுக் கட்டமைப்பு (டிஜிட்டல்) என்பது AI தொழில்நுட்பத்தைக் கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு செல்வதற்கானபரவலாக்கப் பாதைகளாகஅமைந்துள்ளன. ஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்குத் தொழில்நுட்பம் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அந்தத் தொழில்நுட்பம் எத்தகைய அடித்தளத்தில் கட்டமைக்கப்படுகிறது என்பதே பெரும் கேள்வி.

பொருளாதாரத் தரவுகளைத் தாண்டி, ஒரு தனி மனிதனின், சமூகத்தின், நாட்டின்அறநெறி வாழ்வுஎன்பது அந்தந்தத் தளங்களில் அதன் நேர்மையிலும், நிர்வாகத் திறனிலும் அடங்கியுள்ளது. டெல்லியில் நடந்தேறிய AI உச்சி மாநாடு குறித்து ஒன்றிய பா... அரசு பெரும் வெற்றியென முழங்கினாலும், உண்மையில் அம்மாநாடு இந்தியாவிற்கு வழங்கிய பிம்பம் சற்று கவலையளிப்பதாகவே உள்ளது என்கின்றனர் பல தொழில்நுட்ப வல்லுநர்களும்  முதலீட்டாளர்களும். மூத்த இதழியலாளர் வீர் சங்வி தனது வலைதள பக்கத்தில் (virsanghvi.com, பிப். 19, 2026, 3:35 pm) பதிவிட்டுள்ள விமர்சனக் கட்டுரையில் இந்த மாநாட்டைத்தலைகுனிய வைத்த நிகழ்வுஎன்று சாடுகிறார்.

செயற்கை நுண்ணறிவைக் கொண்டாடும் ஒரு மாநாட்டில், அடிப்படைஇயற்கை நுண்ணறிவு (Natural Intelligence) மற்றும் பொது நிர்வாகத் திறன் பற்றாக்குறையாக இருந்ததை அவர் சுட்டிக்காட்டுகிறார். மாநாடு நடந்த இடத்தில் நிகழ்ந்த திருட்டுகள், வைஃபை (Wi-Fi) குளறுபடிகள் மற்றும்டிஜிட்டல் இந்தியாஎன்று முழங்கிக்கொண்டே யூ.பி.. (UPI) பரிவர்த்தனைகளை மறுத்து, கூப்பன்களை வற்புறுத்தியது போன்றவை ஒரு தொழில்நுட்ப வல்லரசிற்கு அழகல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

மிக முக்கியமாக, ‘கல்கோட்டியாஸ்போன்ற கல்வி நிறுவனங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு ரோபோ நாயைத் தாங்களே கண்டு பிடித்ததாகக் கூறி ஏமாற்ற முயன்றது, நம் நாட்டின்ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுதுறையில் நிலவும் அறநெறி வீழ்ச்சியையே காட்டுகிறது. குறுக்கு வழியில் புகழ்பெறத் துடிக்கும் இத்தகைய மனநிலை, செயற்கை நுண்ணறிவைவிட ஆபத்தானது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

அறநெறி வாழ்வு என்பது சக மனிதனை மதிப்பதில் தொடங்குகிறது. டெல்லி மாநாட்டின் போது வெளிநாட்டுத் தலைவர்களுக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கும் அளிக்கப்பட்ட முக்கியத்துவம், சாதாரண குடிமக்களின் நலனை முற்றிலும் புறந்தள்ளியுள்ளது. சாலைகள் மூடப்பட்டதால் முடங்கிய போக்குவரத்து, ஒரு தொழில்நுட்ப மாநாட்டின் வெற்றியை விடவும் நிர்வாகத்தின் தோல்வியையே உலகிற்குப் பறைசாற்றியது. வீர் சங்வி குறிப்பிட்டது போல, 30 நிமிடப் பயணத்தை 5 மணி நேரமாக மாற்றும் நிர்வாகத் திறமையின்மைநுண்ணறிவுஎன்ற சொல்லுக்கே முரணானது.

செயற்கை நுண்ணறிவு, தொழிலாளர் சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது திண்ணம். ஆனால், சில வேலைகள் மறையும்; பல வேலைகள் மறுவடிவமைப்பு செய்யப்படும் என்பதே நம் கண்முன் நிற்கும் கள எதார்த்தம். ரிஷி சுனக் குறிப்பிட்டது போல, இந்த மாற்றத்தைத் தடுப்பது மட்டுமல்ல ஓர் அரசின் பணி! மாறாக, மக்கள் புதிய பணிகளைத் தன்னம்பிக்கையுடன் மேற்கொள்ளமறுதிறன்பயிற்சியும், கல்விச் சீர்திருத்தமும் வழங்கவேண்டும் என்பதே!

இங்கேதான் அறநெறி சார்ந்த கேள்வி எழுகிறது. தரம் குறைந்த கல்வி நிறுவனங்கள் விளம்பரங்களை மட்டுமே நம்பி அப்பாவிப் பெற்றோர்களை ஏமாற்றிப் பணம் ஈட்டும் சூழலில், உண்மையானஅறிவாற்றல் மேம்பாடுஎன்பது பலருக்கு எட்டாக் கனியாகவே இருக்கும். கல்வி என்பது வெறும் வணிகமாக மாறும்போது, அங்கு இயற்கை நுண்ணறிவு மரித்துப்போகிறது.

ரிஷி சுனக் தனது உரையில் ஓர் ஆழமான தத்துவார்த்தக் கருத்தைப் பதிவிட்டுள்ளார். கூரை மேலிருந்து முழங்கப்பட வேண்டிய பேருண்மை அது. அதாவது, “செயற்கை நுண்ணறிவிடம் மிகுதியானஅறிவு (Knowledge) இருக்கலாம்; ஆனால், அறிவு என்பதுஞானம் (Wisdom) அல்ல என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாதுஎன்கிறார் ரிஷி சுனக். இது அறிவை விடவும் ஞானமே  மிக முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது. ஆகவே, தொழில்நுட்ப வளர்ச்சியின் மையத்தில் எப்போதும் மனிதனின் முடிவெடுக்கும் திறனே இருக்க வேண்டும்.

இயற்கை நுண்ணறிவு என்பது தகவல்களைச் சேகரிப்பது மட்டுமல்ல; அது சரியான நேரத்தில், சரியான முறையில் அறநெறிக் கோட்பாடுகளுடன் அந்தத் தகவலைப் பயன்படுத்துவதாகும். ஓர் இயந்திரம் தரவுகளை ஆராயலாம்; ஆனால், அதனால்அன்புசெலுத்த முடியாது; ‘இரக்கம்காட்ட முடியாது; ‘நேர்மைபேண முடியாது; ‘ஞானத்துடன்முடிவெடுக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

 அறிவு என்பது கற்றல், அனுபவம் மற்றும் தகவல்களைச் சேகரிப்பதன் மூலம் கிடைப்பது. ஒரு மருத்துவர் நோயைக் குணப்படுத்தும் முறையை அறிந்திருப்பது அறிவு; ஒரு பொறியாளர் விண்ணை முட்டும் கட்டடத்தை எழுப்பும் நுட்பத்தைப் புரிந்திருப்பது அறிவு; ஒரு கணினி வல்லுநர் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவது அறிவு. இவை அனைத்தும் உலகியல் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவையே! அறிவு என்பது இருபுறமும் கூர்மையுள்ள கத்தி போன்றது. அதைக்கொண்டு அறுவை சிகிச்சை செய்து உயிரைக் காப்பாற்றவும் முடியும்; அதே கத்தியைக் கொண்டு உயிரைப் பறிக்கவும் முடியும். ஆனால், ஞானம் என்பது வெறும் மூளை சார்ந்தது அல்ல; மாறாக, அது இதயம் மற்றும் அறம் சார்ந்தது. ஒரு செயலால் தனக்கு இலாபம் கிடைக்குமா? என்று பார்ப்பது அறிவு; அந்தச் செயலால் பிறருக்குப் பாதிப்பு ஏற்படுமா? என்று சிந்திப்பது ஞானம். அறிவுஎப்படி?’ (How) என்பதை விளக்கும்; ஞானம்ஏன்?’ (Why) என்பதை உணர்த்தும்.

எனவே, மானுடத்தின் எதிர்காலம் என்பது செயற்கை நுண்ணறிவைத் தூற்றுவதிலோ அல்லது இயற்கை நுண்ணறிவை முற்றிலுமாக மறப்பதிலோ இல்லை; மாறாக, இவை இரண்டையும்அறநெறிஎன்னும் நூலால் இணைப்பதிலேயே உள்ளது. பொருளாதார மேம்பாட்டிற்குச் செயற்கை நுண்ணறிவை ஒரு கருவியாகப் பயன்படுத்தலாம்; ஆனால், அந்தப் பொருளாதாரத்தை வழிநடத்தும்அறநெறிஎன்பது மனிதனின் இயற்கை நுண்ணறிவிலிருந்தே வரவேண்டும்.

இதுவே டெல்லி மாநாடு நமக்குக் கற்றுத்தந்த பாடம். எவ்வளவு சிறந்த தொழில்நுட்பம் கைவசம் இருந்தாலும், அடிப்படை நேர்மையும், நிர்வாகத் திறனும், குடிமக்கள் மீதான அக்கறையும் இல்லையெனில் அது வெறும்செயற்கைஅலங்காரமாகவே முடியும். மானுடத்தின் அறநெறி வாழ்வு சிறக்க, இயந்திரத்தின்அறிவைவிடவும், மனிதனின்ஞானமேஇன்றைய தலையாயத் தேவை.

தரவுகள் யாவும் அறிவாகும் - அதைத்

தர்மம் காக்கப் பயன்படுத்துதல் ஞானமாகும்!

பெருகும் கணினி அறிவிலும் - என்றும்

பேணும் மனிதநேய ஞானமே மேலானது!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்