மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அளப்பரிய ஆற்றல் அன்று முதல் இன்றுவரை அரசியலுக்கே உண்டு. பிறப்பு முதல் இறப்பு வரை நம் இருத்தலையும் இயக்கத்தையும் வரையறுப்பவை அரசியல். இதை ஆழமாக உணர்ந்ததால்தான் அன்றே கிரேக்கத் தத்துவமேதை அரிஸ்டாட்டில், அரசியல் சார்ந்த ஆட்சிக் கலையை ‘தலைமை அறிவியல்’ (Master Science) என்று வர்ணித்தார். ஆனால், அதன் பொருள் ஏனோ இன்று மாறிப்போனது; எல்லாம் தலைகீழாகிப் போனது.
‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’ என்பது முதுமொழி! ‘அரசியலின்றி எதுவும் அசையாது’ என்பது புதுமொழி. அரசியலே அனைத்தையும் ஆட்டி வைக்கிறது. இதில் ஆழ்ந்த பொருள் பொதிந்து கிடப்பது இன்று புரிகிறது.
மக்கள்
மையம் கொண்ட ஒரு சமூகம், மக்களை மையம் கொண்ட ஓர் அரசியல் இவை இரண்டும் ஒன்றோடொன்று இரண்டறக் கலந்தவை. பிரித்துப் பார்த்தால் பொருள் இல்லை; இவற்றைப் பிரித்துப் பார்க்கவும் இன்று வழியில்லை. ஆகவே, சாமானியனின் வாழ்வியலுக்குச் சதி கொண்டு, விதி எழுதுவது இந்த அரசியலே!
இன்று
அரசியலில் ‘மக்கள் பணி’ என்பது கடந்து, அதிகாரம் என்பதும் ஆட்சிக் கட்டிலில் அமரவேண்டும் என்பதும் முதன்மை பெறுகிறது. அதை அடைவது ஒன்றே அரசியல்வாதிகளின், அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகளின் குறிக்கோளானது. இதற்காக யாவும் சமரசம் செய்யப்படும் என்பதுதான் அதிர்ச்சியூட்டும் எதார்த்தம்.
தத்துவங்கள்,
கொள்கைகள், கோட்பாடுகள், முன்னிறுத்தும் செயல்பாடுகள், மதிப்பீடுகள், அதற்கான நிலைப்பாடுகள்... எனக் கட்சிக்குக் கட்சி வேறுபட்டு வெவ்வேறு துருவங்களில் பயணிப்பவர்கள் கூட ‘அதிகாரம்’,
‘ஆட்சி’, ‘பதவி’ என்பதற்காகக்
கைகுலுக்கிக்கொள்ளும்
நகை முரண் கொண்ட செயல்பாடுகளும் இங்கு அரங்கேறிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியத் திருநாட்டில் ஒன்றிய, மாநிலத் தேர்தல் சூழலில் அவ்வப்போது ஏற்படும் இத்தகைய ‘கூட்டணிகளை’ நாம்
வரம் என்பதா? இல்லை சாபம் என்பதா?
ஒவ்வொரு
கட்சியும் தனிச் சிந்தனையும், தனிக் கொள்கையும், தனிக்கொடியும் உடைய தனித்த கட்சிகள்தாம்; ஆனால், ஏனோ அனைத்தையும் சுயநலத்திற்காக அடகு வைத்துவிடுகின்றன. அது ‘பசுத்தோல் போர்த்திய புலி’ என்பது பலருக்கும் தெரியும். மக்களுக்கு மட்டுமல்ல, தனிக்கட்சிகளின் தலைவர்களுக்கும் தெரியும். ஆயினும், அவர்களின் சுயநலம் மேலோங்கி இருப்பதால் பொதுநலம் மறைந்து போக, பூபாளம் பாடுகிறார்கள். கொள்கை உடைய கட்சிகள் தங்கள் கொள்கைகளை இழந்தபோது என்னவென்று சொல்வது? ஆட்சி அதிகாரத்துக்காகக் கூட்டணி சேரும் கட்சிகள் சுயகொள்கை இன்றிச் செயல்படுவதைப் பார்க்கும்போது மக்களை ‘முட்டாள்கள்’ என்றே
இவர்கள் நினைக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.
நாம்
பல வேளைகளில் சூழ்நிலைக் கைதிகளாகிறோம்; எதையும் முறையாகப் பகுப்பாய்வு செய்து பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் இல்லை. எளிதில் எதையும் மறந்து விடுகிறோம். கூட்டணிகளின் சூட்சுமத்தை நுண்ணறிவு கொண்டு கணிக்க வேண்டிய காலம் இது.
“அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இன்று தனித்த கொள்கை, கோட்பாடுகள் என்று எதுவும் கிடையாது. வாக்கு வங்கி, ஆட்சி அதிகாரம், கட்சி மூலம் ஊழல் பணம் சேர்த்தல், சேர்த்த கறுப்புப் பணத்தை வாக்களிக்க மக்களுக்குக் கையூட்டாகக் கொடுத்தல்... போன்ற செயல்களைத்தான் அனைத்து அரசியல் கட்சிகளும் செய்கின்றன” என்ற
பொது விமர்சனமும் தவிர்க்க இயலாதவை. இதற்கு விதிவிலக்குகள் இருக்கலாம்.
“பெரும் கட்சிகளோடு ஒட்டிவரும் சிறு கட்சிகள் அதிகாரத்தை அள்ளிக் கொடுத்துவிட்டு, இறுதியில் அவர்களின் தொங்கு சதையாகிவிடுகின்றன” என்ற
திரு.பழ.கருப்பையாவின் கூற்றும்
இங்கே நினைவுகூரத்தக்கதே. அநீதிகள் நிகழும் போது உண்மையை உரக்கச் சொல்வதற்குப் பதிலாக, கூட்டணி தர்மம் கண்டு அவர்களுக்குச் சாமரம் வீசும் நிலையே இன்றும் தொடர்கதையாகிறது. இதில் பாரபட்சம் இல்லை; ஒன்றியமோ, மாநிலமோ இதே நிலைதான் கூட்டணிக் கட்சிகள் அனைத்திற்கும்.
ஆட்சியைப்
பிடிக்க ‘கூட்டணி’ என்ற மந்திரத்தை வகுத்துத் தந்தவர் மூதறிஞர் இராஜாஜி. ஆட்சி நல்லாட்சியாக அமையாதபோது
அவரே அதை எதிர்க்கவும் துணிந்தார் என்பதே வரலாறு. தேர்தலுக்கான கூட்டணி என்பதை ஆட்சிக்கான, அநீதிக்கான கூட்டணியாக இன்று மாற்றி விடுகிறார்கள்.
தமிழ்நாட்டின்
2026 சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி, தேர்தல் கூட்டணி ‘சடுகுடு ஆட்டம்’ ஆடத் தொடங்கிவிட்டது. 2023-இல் பா.ச.க.வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறிய அ.தி.மு.க. இன்று சமரசக்
கூட்டணி மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றிய உள்துறை அமைச்சரைச் சந்திக்கும் திடீர் சந்திப்புக்கு ஆயிரம் உள்ளர்த்தங்கள் கணிக்கப்பட்டாலும், இச்சந்திப்பிற்குப் பிறகு ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா, “2026-இல் தமிழ்நாட்டில் தேசிய சனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும் ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்” என்று
கூறிய கூற்றில் பொதிந்திருக்கும் உண்மை எவருக்கும் புரியாதது அல்ல!
இச்சந்திப்பின்
எதிரொலி கூட்டணிதான் என உணர்ந்த அ.தி.மு.க.வினர், “சிறுபான்மையினரும் பா.ச.க.
எதிர்ப்பாளர்களும் கடந்த தேர்தலில் நம்மைப் புறக்கணித்தார்கள்; இந்த முறையும் புறக்கணிக்கப் போகிறார்கள்...” எனப் புலம்பி வருவதும் நம் காதுகளில்
எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
எது
எப்படியோ, வரும் ஏப்ரல் 18-ஆம் நாள் பெங்களூருவில் தொடங்கவிருக்கின்ற பா.ச.க.வின் தேசியச் செயற்குழுக் கூட்டம் ‘மிஷன் சவுத்’ என்ற ஒற்றைக் கருத்தை மையம் கொண்டதாக இருக்கிறது என்பதும் அதிர்ச்சியளிக்கிறது. இக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாகவே உறுதியான ஒரு கூட்டணியை அறிவிக்க வேண்டும் என்பதற்காக நடந்த தீவிரமான ஆலோசனைதான் இச்சந்திப்பு என்றும், இத்துடன் இன்னும் சில தனிக்கட்சிகள் ஒன்றிணையும் என்பதும் அரசியல் விமர்சகர்களால் கணிக்கப்படுகிறது. பா.ச.க.
- அ.தி.மு.க.
கூட்டணி கனிந்திருக்கும் இவ்வேளையில், வரும் ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் மாநிலங்களவை
உறுப்பினர் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்குக் கிடைக்கவிருக்கும் சீட்டுகளைப் பற்றியும், இந்தக் கூட்டணியைச் சிறப்பாக முன்னெடுத்தால் யாருக்கு அதில் ஆதாயம் இருக்கிறது என்பதையும் இவர்கள் கணிக்கத் தவறவில்லை.
இரு
பெரும் திராவிடக் கட்சிகள், திராவிடக் கொள்கை கொண்ட கிளைக் கட்சிகள், தமிழ்த் தேசியம் பேசும் தனித்த கட்சிகள், தமிழ் தேசியக் கூட்டணிக் கட்சிகள், நெடும்பயணம் கண்ட சாதியக் கட்சிகள், நேற்று கண் விழித்த புதிய கட்சிகள்... எனப் பலவும் மதச்சார்பற்ற அரசியல் தளத்தில், பந்தயத்தில் முன்னிருக்கும் சூழலில், பா.ச.க.வின் கணக்கு தனிக் கணக்காகவே அமைகிறது.
மத
அரசியலும், சிறுபான்மையினர் அச்சுறுத்த லும், விவாதத்திற்கு உள்ளாகி வரும் இஸ்லாமியருக்கு எதிரான வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவும், குடியுரிமைச் சட்ட மசோதாவும்... உயிர் நாளமாகக் கொண்ட பாசிச பா.ச.க.
அரசின் கொள்கை கோட்பாடுகளில் மாறுபட்ட கட்சிகளும் மனம் திறந்து தழுவிக்கொள்வது தமிழ்நாட்டின், இந்தியாவின் ஒளிமயமான, சமத்துவச் சகோதரத்துவ, சனநாயக உரிமை கொண்ட எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது. மக்களின் மத நல்லிணக்கத்திற்கும், நாட்டின் மதச்சார்பின்மைக்கும்
சனநாயகத்திற்கும் நிகழவிருக்கும் பேரழிவு கண் முன்னே தோன்றி பெரும் கவலையளிக்கிறது.
அன்று
ஆதரிப்பார் எவருமின்றி, தனித்து நின்ற அரசியல் கட்சிகளோடு, இன்று ஆதாய அரசியல் அகலப் பாய்ந்து, சூழ்ச்சி கொண்ட ஆழியில் கலந்திடும் சூட்சுமத்தைத் தெளிவுற நாம் உணர்ந்தாக வேண்டும்.
உண்மையும்
பொய்மையும் ஒன்றெனக் கலந்து வரும் இச்சூழலில், நல்லவை - அல்லவை வேறுபாட்டை நாம் அறிந்தாக வேண்டும்.
“நன்மை செய்யக் கற்றுக்கொள்பவர்களும்... நீதியை நாடித் தேடுபவர்களும்... ஒடுக்கப்பட்டுள்ளோருக்கு உதவி செய்பவர்களும்... திக்கற்றோருக்கு நீதி வழங்குபவர்களும்... கைம்பெண்ணுக்காக வழக்காடுபவர்களும்... (எசா 1:17) ஆளப்பிறந்தால் வாழத் தகுதியானது நம் நாடு!
ஆயினும்,
‘எங்கள் மக்களுக்குக் கச்சேரிதான் முக்கியம்
கஞ்சிக்
கலயமல்ல. அதனால்தான் நாங்கள்
வார்த்தை
இலைகளில் வாக்குறுதிச் சோற்றை
வாரி
வழங்கும் வள்ளல்களுக்கே வாக்களிக்கிறோம்...
அவர்கள்
வெற்றி பெறுகிறார்கள்;
நாங்கள்
தோற்றுப் போகிறோம்!
தோற்பதற்கான
காரணம்...
பொய்யான
கவர்ச்சிக்குப் பொன்னாடை போர்த்துகிறோம்...
போலிகளின்
பேச்சுக்குப் புகழாரம் சூட்டுகிறோம்...
கடமைக்கும்
சேவைக்கும் கல்லறையைக் கட்டுகிறோம்...
ஊழலுக்கு
விழா நடத்தி ஊர்வலத்தைக் கூட்டுகிறோம்...’
என்று எங்கோ படித்தது நம் நினைவுக்கு வருகிறது.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
“மானுடச் சமுத்திரம் நான் என்று கூவு” என்றார் பாவேந்தர் பாரதிதாசன். இந்த அண்டத்தில் உள்ள அனைத்து உயிரினங்களையும் தானாகப் பாவிக்கிறவனின் பாசக்குரல் இது. ‘நீ என்பது நீயல்ல; குடும்பம், சமூகம், நாடு என்ற எல்லைகளைக் கடந்த இந்தப் பூகோளத்திற்கே அந்த ‘நீ’ தான் பொறுப்பு’ என ஒவ்வொருவரையும் பொறுப்பாளர்களாக மாற்றும் வரிகள் இவை. ஆகவேதான் ஐயன் வள்ளுவரும், ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்...’ என்று பல்லுயிர் நேயம் கொண்டிட வழிகாட்டினார்.
இன்று
அறிஞர்கள், உலகத் தலைவர்கள் கூடும் உலகளாவிய கருத்தரங்குகளின் கருப்பொருளாக இருப்பது இயற்கை நேயம் என்பதே. இன்றைய சுற்றுச்சூழலை எண்ணிப் பார்க்கும்போது, உலக அளவில் யாவரும் கவலை கொள்கிறோம். காலநிலை மாற்றம், வெப்பநிலை ஏற்றம் எனப் பல்வேறு சவால்களைச் சந்திக்கும் இன்றைய சூழலுக்கு முக்கியக் காரணம், இயற்கை வளங்களை முறையாகப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் தவறியதே!
இயற்கை
நமது இருத்தலுக்கான அடித்தளம். அது நமக்குச் சுத்தமான காற்று, நன்னீர், வளமான மண் என எல்லா வளங்களையும்
தருகிறது. ஆயினும், நாம் பொறுப்பற்ற முறையில் அதைச் சுரண்டி வருகிறோம்; இல்லை... சுரண்டி வாழ்கிறோம். “பூமி ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்யப் போதுமானதை வழங்குகிறது; ஆனால், ஒவ்வொரு மனிதனின் பேராசையும் அளவு கடந்திருக்கிறது; அது அழிவைத் தருகிறது”
என்னும் மகாத்மா காந்தியின் வரிகள் இங்கு நினைவு கூரத்தக்கவை.
ஆசை
அளவோடு இருப்பது நல்லது. அழகாக ஓடினால் ஆறு; அளவற்றுப் போனால் வெள்ளம். மிதமாக வீசினால் சுகம் தரும் தென்றல்; அதுவே ஓங்கி அடித்தால் சோகம் வளர்க்கும் சூறாவளி. சிறு நெருப்பு அடுப்பெரிக்கும்; அடங்காப் பெருநெருப்போ ஊரையே அழிக்கும். எல்லைக்குள் இருந்தால் எல்லாம் இன்பம்; எல்லை மீறினால் எதுவும் துன்பம்.
ஆசை
பேராசையாகப் பெருகும் போது ஒருவன் இருப்பதையும் இழந்து நிற்பான். மனிதன் இயற்கையோடு கொண்ட உறவின் இன்றைய சோக நிலை அதுவே. பேராசை கொண்ட போக்கில் அனைத்தையும் அபகரித்ததால் அழிவின் விளிம்பில் விழி பிதுங்கி நிற்கிறான்.
மனிதன்
இயற்கையோடு இணைந்து வாழ்ந்த வரை இன்பமாக இருந்தான். என்றைக்கு அவன் இயற்கையைத் தீண்டத் தொடங்கினானோ அன்றிலிருந்தே அவனுக்கு இடையூறுகள் உண்டாகத் தொடங்கிவிட்டன. இயற்கையின் உறவு உண்மையானது; உன்னதமானது; ஆழமானது; சுயநலமற்றது.
“நீங்கள் எந்த வகையான மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறீர்கள் என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும்”
என்று கூறுகிறார் இங்கிலாந்து நாட்டின் பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜேன் குட்டால். ஆகவே, இயற்கையைப் பாதுகாக்க விரும்புகிறோமா அல்லது அழிக்க விரும்புகிறோமா என்பதை இன்று நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.
உலகையே
அச்சுறுத்தும் இந்தக் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த பல முன்னெடுப்புகள் பல வகைகளில்
மேற்கொள்ளப்படுகின்றன.
அவற்றில் ஒன்று மரம் நடுதல். எண்ணற்ற உயிரினங்களுக்கு வாழ்விடத்தையும்
உணவையும் தரும் மரங்கள் அதிக எண்ணிக்கையில் இன்று வளர்க்கப்பட வேண்டும். இத்தகைய முயற்சிகளை மேற்கொள்ள பள்ளிகள் வழிகாட்ட வேண்டும். ஆனால், 2022-இல் ஐக்கிய நாடுகள் அவை நடத்திய ஆய்வில், 70 விழுக்காடு மாணவர்களிடையே காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பள்ளியின் மூலம் ஏற்படுத்தப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. அதேபோல, நூறு நாடுகளின் கல்விக் கொள்கைகளை ஆராய்ந்ததில், 47 விழுக்காடு கல்விக் கொள்கைகளில் காலநிலை மாற்றம் குறித்த பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும் தெரியவருகிறது.
ஆகவே,
அங்கன்வாடி குழந்தைகள் முதல் ஆராய்ச்சி மாணவர்கள் வரை, இயற்கை சூழல் பற்றிய விழிப்புணர்வு கொடுக்க வேண்டியது இன்று அவசியமாகிறது. செடிகள் நடுவது, மரம் வளர்ப்பது, சுற்றுச்சூழல், சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குவது, சூழலியல், நீதி, நிலையான வளர்ச்சித் திட்டக் கொள்கைகள் போன்றவற்றைக் குறித்த விழிப்புணர்வு கொடுப்பது, அதற்கு ஏற்ற செயல் திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்துவது போன்றவற்றைச் செய்திடல் வேண்டும்.
இத்திட்டங்கள்
பள்ளிகளில் தொடங்கி, நாளடைவில் அது வீடுகளில் மலர்ந்து சமூகத்தில் பரந்து விரிய வேண்டும். காய்கறித் தோட்டம், நீர் மேலாண்மை, நெகிழிக் குறைப்பு போன்றவற்றைக் கற்றுத்தரும் தமிழ்நாட்டின் பசுமை பள்ளித் திட்டம் எல்லாப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். ஆகவேதான், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மரம் நடும் இயக்கங்களைத் தீவிரமாக ஊக்குவிக்க வேண்டும் என்ற குரல்கள் இன்று எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன.
நாளைய
உலகின் சிற்பிகள் மாணவர்களே! ஆகவே, நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் மாணாக்கர்களும் இன்று முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இயக்கங்களில் பங்கெடுத்தல், தூய்மை இயக்கங்களை ஏற்பாடு செய்தல், சமூக ஊடகங்களில் விழிப்புணர்வு கொடுத்தல், அதற்கு ஆக்கப்பூர்வமான பணிகளை முன்னெடுத்தல் என மாணவர்கள் இந்தக்
கோடை விடுமுறையைப்
பயனுள்ள வகையில் செலவிட வேண்டும். இப்பூமிப்பந்தில் யாவரும் நலமுடனும் வளமுடனும் வாழ நம்மால் இயன்ற பங்களிப்பைச் செய்ய வேண்டும்.
இயற்கை
நேயம் கொள்வோம்!
இனிய
உலகம் காண்போம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அமைதியைத் தருவதே மதங்களின் முதன்மையான நோக்கம்.
முரணும்
மோதலும் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட
மனிதகுல நலனுக்காகப் பிறந்ததுதான் மதமே தவிர, மனிதர்கள் முரண்படவும் மோதிக் கொள்ளவும் அது ஒருபோதும் காரணியாவதில்லை; ஆயினும், மனிதர்கள் ஏனோ மதத்தால் நம்பிக்கையால் வழிபாடுகளால் முரண்பட்டு மோதிக் கொள்கிறார்கள்!
உண்மை
ஒன்றுதான், அதுதான் பல வடிவங்களில் பார்க்கப்படுகிறது;
ஒளி ஒன்றுதான், வழிகள்தான் வெவ்வேறு என்பதை ஏனோ அவர்கள் அறியாமலிருக்கிறார்கள்!
அன்பு
சார்ந்த பண்புகளை ஒவ்வொருவர் இதயத்திலும் விதைப்பதே மதங்களின் உன்னத நோக்கம். அன்பையே சிந்தித்து, அன்பையே மூச்சுக்காற்றாகச் சுவாசித்து, ஆண்டவனையும் அன்பின் வடிவாகவே தரிசித்து மனிதம் வளர்ப்பதுதான் மதம். ஆகவேதான், சுவாமி விவேகானந்தர், “உலகில் இப்போதிருக்கும் எல்லா மதங்களையும், இனி பிறக்கப் போகும் புதிய மதங்களையும் இரு கை நீட்டி வரவேற்கிறேன்” என்றார்.
“எவரையும் வெறுப்பதல்ல மதத்தின் நோக்கம்; அன்பையும் அமைதியையும் அகிம்சையையும் வளர்ப்பதே
மதம். மதம் மனிதர்களை இணைப்பதற்குத்தானே தவிர, பிரிப்பதற்கில்லை” என்கிறார்
தேசத்தந்தை மகாத்மா காந்தி.
அவ்வகையில்,
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாட்டு மீனவர்கள் இணக்கமாகப் பகிர்ந்துகொள்ளும் கச்சத்தீவில் அமைந்திருக்கும் புனித அந்தோணியார் திருத்தலம் இரு நாட்டு மக்களின், அப்பகுதி மீனவர்களின் நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்ளவும் பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்ளவும் அன்போடு உறவு கொள்ளவும் வழிவகுக்கிறது. இலங்கை யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்டத்தால் திருத்தலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் கச்சத்தீவு - புனித அந்தோணியார் திருத்தலம் நூற்றாண்டு
கடந்து நிற்கும் பழம்பெரும் பாரம்பரியத்தைக் கொண்டது.
இராமநாதபுரம்,
சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய அன்றைய மதுரை கத்தோலிக்க உயர் மறைமாவட்ட எல்லைக்கு உட்பட்ட 280 ஏக்கர் பரப்பளவு கொண்ட இத்தீவு, 1975-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தியா-இலங்கை இரு நாட்டுக் கூட்டு ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கைக்குச் சொந்தமாகும் வண்ணம் இந்திய அரசால் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை... “கச்சத்தீவு மீட்டெடுக்கப்பட வேண்டும், இந்திய-தமிழ்நாடு கடலோர மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய இந்த ஒப்பந்தம் திரும்பப் பெறவேண்டும்...” என்னும் போர்க்கொடி எழுந்து, போராட்டங்கள் தொடர்ந்து, இன்றும் இது தீர்வு காணப்படாத ஒரு தொடர் கதையாகிக் கொண்டிருப்பது பெரும் கவலையளிக்கிறது.
ஆயினும்,
இரு நாட்டு மீனவர்கள் கடல் எல்லைகளை இணக்கமாகப் பகிர்ந்து கொண்டதாலும் உறவு பாராட்டிக் கொண்டதாலும், இரு
நாட்டு மீனவர்கள் சந்தித்து மீன்வலைகளைப் பழுதுபார்க்கவும் உலர்த்திக் கொள்ளவும் சங்கமிக்கும் ஓர் இடமாக இத்தீவு திகழ்ந்ததால் இறை வேண்டுதலுக்கு ஓர் இல்லம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதன் நீட்சியாக உயர்ந்து நிற்பதுதான் பதுவை புனித அந்தோணியாருக்கு நேர்ந்தளிக்கப்பட்ட இந்தத் திருத்தலச் சிற்றாலயம். அன்றைய இராமநாதபுர கத்தோலிக்க இறைச் சமூகத்தால் குறிப்பாக, சீனிகுப்பன் படையாட்சி என்பவரால் இவ்வாலயம் 1905 -ஆம் ஆண்டு கட்டப்பட்டு புனித அந்தோணியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்று இப்பகுதி இலங்கை வசம் இருப்பதால், யாழ்ப்பாண மறைமாவட்டத்தால் புதிய ஆலயம் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
1982-ஆம் ஆண்டு
முதல் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு இந்திய-தமிழ்நாடு மீனவர்களுக்கு குறிப்பாக, இராமேஸ்வரம் தீவில் வாழும் மக்களுக்கு முறையான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இலங்கையில் தொடர்ந்த இனப்படுகொலை காலங்களில் இவ்விழாக் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டதுடன், இரு நாட்டு மீனவர்களும் வழிபாட்டிற்குச் செல்ல அனுமதியும் மறுக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஏறக்குறைய 27 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, 2010-ஆம் ஆண்டு முதல் இவ்விழாவானது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
உலகெங்கும்
பல்வேறு இடங்களில் பல்வேறு சமய விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், கச்சத் தீவில் நிகழும் புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா தனித்துவம் பெற்றது. மூன்று நாள்கள் நடைபெறும் இவ்விழா இந்திய-இலங்கை உறவுக்கு ஒரு தொப்புள்கொடியாக அமைகிறது. இலங்கையில் நிகழ்ந்த போருக்கு முன்னும் போருக்குப் பின்னும் இரு நாட்டு மக்களையும் இணைக்கும் பாலமாக இவ்விழா தொடர்வது வரவேற்கத்தக்கது.
தற்போது,
ஆண்டுதோறும் நிகழும் இவ்விழாவில் இரு நாடுகளைச் சார்ந்த அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், இறைமக்கள் எனப் பெருந்திரளான மக்கள் கூடுவதும், திருப்பலி,
திருச்சிலுவைப் பாதை, திருச்செபமாலை என நிகழ்வுகளில் பங்கெடுப்பதும்
குறிப்பாக, பாக் சலசந்தியின் இருபுறமும் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் தங்கள் உறவினர்களுடன் மீண்டும் இணைவதும் இறந்த உறவுகளை நினைவுகூர்வதும் அவர்களுக்காக இறைவேண்டல் மேற்கொள்வதும் உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்து தங்கள் மனக் காயங்களை ஆற்றிக்கொள்ளவும் பெரும் பங்கு வகிக்கிறது இப்பெருவிழா.
இவ்வாண்டு
ஏறக்குறைய 9,000 மக்கள் கூடிய இக்கச்சத்தீவு
புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா, வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து முதன் முறையாகச் சிவகங்கை மறைமாவட்ட ஆயரும், தமிழ்நாடு ஆயர் பேரவையின் ‘நம் வாழ்வு’ அச்சு ஊடகப் பணியகத்தின் தலைவருமான மேதகு முனைவர் லூர்து ஆனந்தம் அவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு, இப்பெருவிழாவிற்கான கொடியை ஏற்றிவைத்து, திருவிழா சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி இறையாசிரைப் பெற்றுத் தந்ததும் இவ்விழாவில் கலந்துகொண்டு இலங்கைக் கத்தோலிக்க மறைமாவட்டங்களின் நிர்வாகத்தினர், கடற்படை உயர் அதிகாரிகள், அரசுத் தலைவர்கள் எனப் பல முக்கியத் தலைவர்களைச்
சந்தித்ததும் இரு நாட்டு உறவுகளுக்கான அமைதி முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது. இராமேஸ்வரம் தீவிலும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலும் இந்திய-இலங்கை மீனவர் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிவகுக்கும் என்றே கருதப்படுகிறது.
குறிப்பாக,
அண்மையில் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட 40 மீனவர்களின்
விடுதலை தொடர்பாக யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களைச் சந்தித்து மேற்கொண்ட முயற்சிகளும், அதன் விளைவாக அந்த 40 மீனவர்களும் திருவிழா கொடியேற்ற நாளில் வெள்ளிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டதும், இதன் நீட்சியாக இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் இரு நாட்டு ஆயர்களைச் சந்தித்ததும், இப்பிரச்சினைகளுக்குச் சுமூகமான தீர்வு கிட்டும் என்றே நம்பிக்கை அளிக்கிறது.
இவ்விழா
சிறப்புற நிகழ இரு நாட்டு அரசுத் தலைவர்களும் பேராதரவளிப்பதும் கடற்படையினர் ஒத்துழைப்பு தருவதும் பாராட்டத்தக்கதே! இவர்கள் நம் நன்றிக்குரியவர்களே! இவ்விழாவிற்கும் தற்போது மீனவர்களின் விடுதலைக்கும் பேருதவி புரிந்த யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் அவர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்!
இவ்விழாவில்
கலந்துகொள்ள இரு நாட்டு மக்களும் கொண்டிருந்த ஆர்வமும், விழாவில் கலந்துகொண்ட ஈடுபாடும் மெய்சிலிர்க்க வைக்கிறது. மற்ற திருத்தலங்களைப்போல போதிய இடவசதி, தங்குமிடம், அடிப்படைத் தேவைகள், உணவு, குடி நீர் இல்லாதிருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் இங்குக் கூடுவது அவர்களின் மதம் கடந்த மனித நேயத்தையும், வழிபாடு கடந்த வாழ்வியலையும், உறவு கடந்த உள்ள ஒன்றிப்பையும் எண்பிக்கிறது.
இது
ஏதோ கிறித்தவர்களின் ஒரு விழாவாகப் பார்க்கப்படுவதில்லை; மாறாக, இப்பகுதியில் கடல் தாயை நம்பி தங்கள் வாழ்வாதாரத்தைக் கட்டமைத்துக்கொள்ளும் எல்லா மதத்து மீனவர்களும், இக்கடலையும் கடல் தந்த வளங்களையும் ஆதாரமாகக் கொண்ட பல வணிகர்களும் சாதி,
மதம், இனம், மொழி கடந்து ஒன்றுகூடும் இப்பெருவிழாவானது சமத்துவத்தின் கூறாகவும், சகோதரத்துவத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது என்பதே பேருண்மை!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
தாயின் கருவில் நாம் உருவாகும்போதே உயிர்நாடியில் இரண்டறக் கலந்தது நம் தாய்மொழி! நம் செவித்திறன் உணர்வில் முதன்முதலாக ஒலித்ததும் நம் தாய்மொழியே!
ஆகவேதான்,
தாயைப் புறக்கணிப்பதும் தாய்மொழியைப் புறக்கணிப்பதும் மனிதர்கள் செய்யும் பாவங்களிலேயே மன்னிக்க முடியாத பெரும் பாவம் என்பார்கள். இனிமையும் வளமையும் செழுமையும் கொண்ட செம்மொழியாம் ‘தமிழ்’ நாம் பேசும் தாய்மொழியாக வாய்த்தது நமக்குக் கிடைத்த மாபெரும் வரமே!
ஓர்
இனத்தின் தொன்மையான நாகரிகத்தையும் கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களையும் வாழையடி வாழையாக வளர்த்தெடுப்பதும் அடுத்த தலைமுறைக்கு அதைக் கடத்துவதும் அந்த இனத்தை அழியாமல் காத்து வருவதும் அதன் தாய்மொழி ஒன்றுதான். தாய்மொழியே அந்த இனத்தின் முகம், முகவரி, உயிர்நாடி! மொழி அழிந்தால் அந்த இனத்தின் முகம் அழியும்; மொழி தொலைந்தால் அந்த இனத்தின் தனித்துவமான அடையாளங்கள் மறைந்து போகும்.
ஆகவேதான்,
“மக்கள்தொகையில் வலிமை வாய்ந்த பெரும்பான்மையோரிடையே சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள், அந்தப் பெரும்பான்மையில் கலந்து, காலப்போக்கில் கரைந்து விடாது, தங்களது அடையாளத்தைக் காப்பதற்கு, அவர்களுக்கு இருக்கும் ஒரே கவசம் மொழிதான். அவர்கள் தங்கள் மொழியுடன், பண்பாட்டுப் பாரம்பரியத்துடன் தொடர்பு அற்றுப்போகாது வாழ வேண்டும். இதற்கான தேவைகளில் தலையாயது தமிழறிவு, அதன்வழி தமிழ்க்கலை, தமிழ் இலக்கிய வாழ்வோடு தொடர்பு” என்கிறார் அறிஞர் வா.செ. குழந்தைசாமி.
உலகம்
ஏற்றுக்கொள்ளும் பேருண்மை இது! தாய்மொழியைப் பயன்படுத்துபவர்கள் உள்ளவரைதான் ஒரு மொழி வாழும், வளரும். அடுத்த தலைமுறைக்கு முறையாக வழங்கப்படாத மொழிகள் யாவும் வழக்கொழிந்து போகும். இன்றைய அரசியல் சூழலும், ஒன்றிய அரசின் ஆட்சியாளர்களின் திட்டங்களும் ‘மெல்லத் தமிழினிச் சாகும்’ என்னும் பாரதியின் கூற்றை எண்பித்து விடுமோ என்றே அச்சம்
கொள்ளச் செய்கிறது.
மதத்தைக்
கையில் எடுத்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றிவரும் ஒன்றிய பா.ச.க.
அரசு, இன்று மொழியைத் துணைக்கு அழைத்துக் கொண்டது. இந்தியப் பிரதமர் செல்லும் இடமெல்லாம் ‘தமிழ் தொன்மையானது’, ‘இனிமையானது’, ‘இலக்கிய
நயமானது’, ‘இது
ஒரு மூத்த மொழி’ என்றெல்லாம் புகழ் பாடி ஆட்சிக் கட்டிலில் அமர வழி வகுத்துக்கொண்டு, இன்று இம் மொழிக்கு ஊறு விளைவிக்கும் திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறார். இவ்வேளையில்...
‘உன்னை
மொழிகளுக்கெல்லாம்
முதல்
மொழி என்றார்...
அதனால்
உன்னை
முதலாகப்
போட்டு
வியாபாரம்
தொடங்கி விட்டார்!’
எனும்
கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
தமிழின்
சிறப்பைப் பற்றிப் பேசும் பிரதமர், காசி தமிழ்ச்சங்க விழா எடுக் கும் பா.ச.க.
அரசு எனத் தமிழுக்கு ஆதரவாக இருப்பது போன்ற தோரணையில், இவர்கள் தமிழின் தொன்மையை அழிக்கும் திட்டங்களைத் திரைமறைவில் தீட்டுவது அதிர்ச்சியளிக்கிறது.
இருமொழிக்
கொள்கையை உயிர் நாடியாகக் கொண்ட தமிழ் மண்ணில், தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நாடெங்கும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
பழம்பெரும்
நாகரிகத்தின் மூத்த மொழியான தமிழ்மொழி, நம் தாய் மொழியாகவும் இணைப்பு மொழி ஆங்கில மொழியாகவும் இருக்கும் இச்சூழலில், மூன்றாம் மொழியின் அவசியம் தான் என்ன? என்ற அடிப்படைக் கேள்வி நமக்கு எழுகிறது.
மும்மொழிக்
கொள்கை என்பது தாய்மொழி அல்லது வட்டார மொழி, ஆங்கிலம், வேறு ஓர் அயல் மொழி, அதாவது மற்றோர் இந்திய மொழி இந்தக் கொள்கையின் அடிப்படையில்தான்
கட்டமைக்கப்படுகிறது.
வேலைவாய்ப்புகளையும் பொருளாதார வாய்ப்புகளையும் மாணவர்கள் பெருக்கிக்கொள்வதற்கு மாநிலங்களின் ஆட்சி மொழியையும், ஒன்றிய அரசின் இரண்டு ஆட்சி மொழிகளையும் பயில வேண்டும். அத்துடன் நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாரம்பரியத்தையும் பின்பற்றுவதற்கு மற்றொரு மொழியையும் படிக்க வேண்டும் என்ற நிலையில்தான் நாளை இது கட்டாயமாக்கப்படும்.
தமிழ்
நமது தனித்த அடையாளம். மொழி வாரியாக அமைந்திருக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான அடையாளங்கள் மேம்பட்டு இருக்கின்றன. அத்தகைய மாநில ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வகையில் இருக்கிற வேறு எந்த மொழியும் இங்கு அவசியம் இல்லை. தமிழ்நாட்டு மாணவர்களின் வேலைவாய்ப்பிற்கு ஆங்கிலம் போதும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் நாம் பின்பற்றி வரும் இருமொழிக் கொள்கை.
மும்மொழிக்
கொள்கையைத் திணிப்பதன் நோக்கம் என்ன? தமிழ்மொழியால் நாம் நம் மாநிலத்திற்குள் அடையாளப்படுத்தப்படுகிறோம்;
ஆங்கில மொழியால் நாம் உலக அளவில் அடையாளப்படுத்தப்படுகிறோம்.
வேறு ஏதேனும் ஓர் இந்திய மொழி எனக் குறிப்பிடும் இம்மும்மொழிக் கொள்கை, பிறகு இந்தியன் என அடையாளப்படுத்தப்படுவதற்கு இந்தி மொழி அவசியம் எனச் சட்டம் இயற்றாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இத்தகைய
சூழலில் மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது மாநில உரிமையைப் பறிப்பதாகும். கல்வி என்பது மாநிலப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு ஒத்திசைவுப் பட்டியலுக்குச் சென்றிருக்கிறதே தவிர, மத்திய அரசுப் பட்டியலில் கல்வி இல்லை. மத்திய அரசுப் பட்டியலில் கல்வி முழுமையாக இருப்பதைப்போல மாநில உரிமைகளின்மீது எதேச்சதிகாரம் கொண்டிருப்பது மொழிக்கொள்கையின் ஆணிவேரில் அமிலத்தை ஊற்றுவதற்குச் சமமாகும்.
இந்தியாவின்
பொதுமொழி (Common Language) இந்தி
என்கிறது அரசமைப்புச் சட்டம். மாநில மொழிகள் அனைத்தும் வட்டார மொழிகள் எனப்படுகின்றன. இந்தி உள்பட எந்த மொழியும் இன்று தேசிய மொழி (National Language) இல்லை
என்பதே எதார்த்தம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இந்தி வட மாநிலங்களில் பொது
மொழியாக இருக்கிறதே தவிர, அது தேசிய மொழியாக இன்றுவரை வரையறுக்கப்படவில்லை. Hindi may be a common language in the Northern
part of India, but not the National Language.
ஆட்சிமொழி
குறித்து நாடாளுமன்றக் குழு அறிக்கையின்மீது விவாதம் நடந்தபோது, நேரு குறுக்கிட்டு, “இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி திணிக்கப்படமாட்டாது” என்று
1959, ஆகஸ்டு 7 அன்று வழங்கிய இந்த உறுதிமொழி இன்றுவரை
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. தங்கள் தாய்மொழியோடு ஆங்கிலம் ஒரு கூடுதல் மொழியாக நீடிக்க வேண்டும், ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாகவோ அல்லது கூடுதல் மொழியாகவோ மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்வது குறித்து முடிவு செய்யும் பொறுப்பை இந்தி பேசாத மக்களிடம் விட்டுவிட வேண்டும் என்பதுதான் நேரு வழங்கிய உறுதி மொழியின் உட்பொருள்.
அப்படி
இருக்க, ஒன்றிய பா.ச.க.
அரசு தற்போது இந்தியை வலியத் திணிப்பதும் மற்ற மொழிகளின் மீது பாரபட்சம் காட்டுவதும் ஏன்? இந்தி மொழித் திணிப்பால் தமது தாய்மொழிகளை இழந்த வட மாநிலங்களின் நிலை
நமக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதே நம் ஆதங்கம்.
தமிழ்நாட்டில்
இருமொழிக் கொள்கையால் தமிழ்நாடு உயர் கல்வி முதல் பொது சுகாதாரம் வரை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையில் படித்தவர்களில் 99 விழுக்காட்டினர் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் திறம்படப் பணியாற்றுகின்றனரே! பிறகு எதற்கு மும்மொழிக் கொள்கை?
ஆகவே,
அரசியல் ஆதாயத்திற்காக மும்மொழிக் கொள்கையைச் சுமந்து வரும் ஒன்றிய அரசு அதைக் கைவிட வேண்டும். இருமொழிக் கொள்கையிலேயே சிறப்புற்று விளங்கும் நம் வாழ்வியலுக்கு மும்மொழிக் கொள்கை ஒவ்வாததும் தேவையற்றதும் என்றே கருதுகிறேன்! ‘விடுதலை வானில் பறந்திட எனக்குச் சொந்த சிறகுகள் இருக்க, இரவல் சிறகுகள் எனக்கு ஏன்?’ என்றே கேட்கத் தோன்றுகிறது.
இவ்வேளையில்...
‘தனித்தன்மை விடு
என்
கூடவே இரு
என்கிறான்...
அவன்
இறக்கைகளில்
நான்
பறப்பது எப்படி?’
என்ற
ஈழத்துக் கவிஞன் காசி ஆனந்தனின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
திரு அவைக்குப் புனிதர்களை அள்ளித் தந்த புண்ணிய பூமி பிரான்ஸ். மரியன்னையின் காட்சிகளால், அருள் நிறைந்த திருத்தலங்களால் புனிதம் தளும்பும் இப்புண்ணிய பூமியிலிருந்து எண்ணற்ற புனிதர்கள் திரு அவையை அலங்கரித்திருக்கிறார்கள். புனித பெர்னார்டு, ஜோன் ஆப் ஆர்க், புனித லூயி, புனித வின்சென்ட் தே பவுல், புனித பிரான்சிஸ் சலேசியார், புனித ஜான் மரிய சாந்தாள், புனித லூயி தே மாண்ட்போர்ட், புனித கத்தரின் இலபோரே, புனித பெர்னதெத், புனித மார்கிரேட் மேரி அலகோக், புனித ஜான் மரிய வியான்னி, குழந்தை இயேசுவின் புனித தெரசாள்... என அதன் பட்டியல் நீள்கிறது.
அவ்வாறே,
பிரான்ஸ் நாடு - தமிழ்நாடு திரு அவைக்கும் எண்ணற்ற
மறைப்பணியாளர்களைத் தந்திருக்கிறது. வணக்கத்திற்குரிய மில்கியோர் தே மரியோன் பிரசியாக்,
அருள்தந்தை லூயி சவீனியன் துப்புயி, அருள்தந்தை லூயி இரவேல், அருள்தந்தை அதிரியான் கௌசானல் எனத் தொடரும் இப்பட்டியலில் இறை ஊழியர் அருள்தந்தை லூயி மரி லெவே தமிழகம் போற்றும் தவிர்க்க முடியாத மறைப்பணியாளர்.
தந்தை
லூயி லெவே இந்தியாவில்
தம் குருத்துவப் பயிற்சிக் கால முதல் 65 ஆண்டுகள் மறைப்பணி செய்து அதிலும் குறிப்பாக, மறவ நாட்டுப் பகுதியில் ஆண்டாவூரணி, சருகணி, இராமநாதபுரம் பங்குத்தளங்களில் 52 ஆண்டுகள் திறம்படப் பணியாற்றி, மக்களை இறை ஞானத்திலும் இறை நம்பிக்கையிலும் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டிலும் வளர, உயர வழிகாட்டினார்.
பங்குப்
பணி, சமூகப் பணி, கல்விப் பணி என விரியும் தந்தை
லெவேயின் ஆன்மிகமும் அவரது பணித்தள வாழ்வியலும் நமக்கு மிகப்பெரிய அறநெறிப் பாடங்கள். தந்தையின் வாழ்வியல் கூறுகளை, அவர் வாழ்ந்த புண்ணிய பூமியிலிருந்தும் அவர் உருவாக்கிய பல பேராளுமைகளின் அனுபவங்களிலிருந்தும்
அறிந்தவன் என்ற வகையில் பெரும் மகிழ்வடைகிறேன்.
“பெற்றோர், ஞானப்பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கும் அடுத்தத் தலைமுறைக்கும் கொடுக்கும் மதிப்புமிக்க சொத்து என்பது, தங்கள் மூதாதையரிடமிருந்து தாங்கள் பெற்ற ‘நம்பிக்கை’
என்னும் செல்வத்தைக் குறைவின்றி அவர்களுக்கு வழங்குவதே!” என்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். அத்தகைய எண்ணத்தில் சிவகங்கை மறைப்பணித்தளத்தில் தந்தையின் பணிவாழ்வைத் தங்கள் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் முந்தைய தலைமுறை வழங்கியதும் வழங்கி வருவதும் தனிச்சிறப்புக்குரியது.
தந்தையின்
விண்ணகப் பிறப்பு (மார்ச் 21, 1973) அரை நூற்றாண்டு காலம் கடந்தாலும், பொன்விழா காணும் ‘நம் வாழ்வு’ வார இதழ் தனது தொடக்கக் காலங்களிலேயே குறிப்பாக, 1978-79 -களில் தந்தையின் மறைப்பணி வாழ்வின் சிறப்புகளைக் கட்டுரைகளாக வடித்திருக்கிறது என்பது தனிச்சிறப்பு.
“எவரிடத்தில் விருப்பும் வெறுப்பும் இல்லையோ, அவரே உண்மையான துறவி, இறைத் தொண்டன்; ஆசையும் தேவையுமற்ற நிலையில் ஒரு மனிதருக்குள் நிகழும் மாற்றமே துறவு வாழ்வு; உறவுப் பந்தங்களிலிருந்து விலகி நிற்பதும், உலகப் பற்றுகளை விலக்கி நிற்பதும் துறவு வாழ்வின் அடிப்படைக் கூறுகள்” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
பிரான்ஸ்
நாட்டிலிருந்து மதுரை மறைப்பணித்தளம் நோக்கிய அவரது பார்வை துறவு வாழ்வின் மேன்மையை எடுத்துக்கூறுகிறது. இளம் வயதிலேயே தந்தையை இழந்திருந்தாலும், அவ்வேளையில் நோய்வாய்ப்பட்டிருந்த அன்புத் தாயைப் பிரிந்து, உறவுகளைத் துறந்து இந்தியா நோக்கி, தன் பயணத்தில் விழிகளைப் பதித்தது போற்றத்தக்கது. தாய்மண்ணிலிருந்து விடைபெறும் முன் அன்னை மரியா பெர்னதெத்துவுக்குக் காட்சி கொடுத்த லூர்து நகர் மசபியேல் குகைக்குச் சென்று முழந்தாள்படியிட்டு அன்னையையும் அவரது அன்பு மகனையும் பற்றிக்கொண்ட வாழ்வு...
‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக
பற்று விடற்கு’
(குறள் 350)
என்னும்
வள்ளுவரின் வாக்கை உறுதிப்படுத்துவதாகவே அமைகிறது.
இயேசுவின்
சீடத்துவமும் அவரது குருத்துவமும் தனித்துவம் வாய்ந்தவை. “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு,
என்னைப் பின்பற்றட்டும்” (மத்
16:24) என்கிறார் இயேசு. இயேசுவின் சீடத்துவம் என்பது சுயநலம் துறப்பதாகும்; தன் நலனிலும் தன்னைச் சார்ந்தவர் நலனிலும் மட்டுமே நாட்டம்கொள்ளும் சாதாரண உலக வாழ்வைத் துறந்து, உலகம் முழுவதையும் தன் உறவாக ஏற்று, எல்லா உயிர்களின் நலனுக்காகவும் செயல்படும் பெருவாழ்வின் பேரருளில் கரைந்து போவதாகும். தந்தை லெவேயின் வாழ்வு இக்கூற்றுக்கு முற்றிலும் சான்று பகர்கிறது.
ஒரு
மனிதனுக்கு முகவரி தருபவை மூன்று: ஒன்று, அவன் பிறந்த நாடு (Nationality); இரண்டு,
அவன் பிறந்த ஊர் (Place of Birth); மூன்று,
அவன் பிறந்த குடும்பம், அவன் பிறந்த வீடு (House of Birth / Ancestral Clan). அதாவது, அவனுடைய
பெற்றோர், அவன் யாருடைய பிள்ளை என்ற அடையாளம். இவற்றில் ஒன்று தவறினாலும் முகவரி சிதைந்து விடும்.
ஆபிரகாமை
அழைத்த இறைவன், “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல்”
(தொநூ 12:1) என்கிறார். இது முற்றிலுமாகத் தன் சொந்த முகவரியைத் துறந்து, புது முகவரியை நோக்கி மேற்கொள்ளும் பயணம். நம்பிக்கையோடு பயணம் மேற்கொண்ட ஆபிரகாமுக்கு, அங்கு புதிய நாடு, புதிய உறவு, புதிய வாழ்விடம் (கூடாரம்) வழங்கப்பட்டன. ஆண்டவர் அவருக்கு நிறைவான ஆசி வழங்கினார்; அவரைப் பெரிய இனமாக்கினார்; அவர் பெயரைச் சிறப்புறச் செய்தார். அவரோ பல தலைமுறையினருக்கும் ஆசியாக விளங்கினார்.
நம்பிக்கையின் மாபெரும் தந்தை ஆனார்.
தந்தை
லெவேயின் வாழ்வும் ஆபிரகாமின் வாழ்வைப் போன்றதே! தன் சொந்த மண்ணையும் மக்களையும் உறவையும் உடைமையையும் விட்டு விட்டு இறைவன் விதைத்த இறையழைத்தலின் மாண்பினை உணர்ந்து, அனைத்தையும் துறந்து, இயேசு சபையினரின் மதுரை மறைப்பணித்தளம் நோக்கி அவர் மேற்கொண்ட பயணம் அவரை மறவ நாட்டில் நம்பிக்கையின் தந்தையாக உயர்த்தியது.
‘ஓ சேசுவே, அன்பின்
அரசே!
உமது அன்புள்ள
இரக்கத்தை
நம்புகிறேன்!’
என்று
அவருடைய உதடுகள் உச்சரித்த இந்தச் செபம், இன்றும் இப்பகுதியில் செபிக்கப்படாத வீடுகள் இல்லை; உச்சரிக்காத உதடுகள் இல்லை.
எளிய
மறைக்கல்வி, ஆழமான பக்தி, இடைவிடாத இறை வேண்டல், விரல்களை விட்டு விடை பெறாத செபமாலை, எளிமையான உடை, மறவ நாட்டில் மறைச்சாட்சியான அருளானந்தரின் செந்நீர் தியாகத்தை உணர்த்தும் சிவப்பு நிறக்கச்சை, முதுமையில் தன்னைத் தாங்கிப் பிடிக்கும் ஊன்றுகோல், அருளே உருவான திருமுகம், அன்பும் பரிசும் அமைதியும் மகிழ்வும் தரும் கிறிஸ்துமஸ் தாத்தாவை நினைவூட்டும் வெண்ணிறத் தாடியோடு கூடிய ‘தாத்தா சாமி’யின் உதவும் எண்ணம், ‘ஏழைப் பங்காளனாய்’ மக்களோடு
மக்களாக வாழ்ந்த எளிமையான வாழ்வு என இவருடைய ஒட்டு
மொத்த வாழ்வும் வாழ்வியலும் இறைநம்பிக்கையிலும், அது பிறப்பெடுக்கும் ஆன்மிகத்திலும், அது செயலாக்கம் பெறும் மக்கள் பணியிலும் மையம்
கொண்டிருந்தது.
மேற்கே
உதித்த இந்தச் சூரியன், கிழக்கு நோக்கிப் பயணித்து, இம்மறவ நாட்டின் இருளகற்றி மக்கள் வாழ்வில் இறை ஒளி ஏற்றியதே, இம்மேற்கத்திய சூரியனின் புகழ் இன்றும் ஓங்கியிருக்கக் காரணம். மண்ணுலகில் மறைந்த இச்சூரியன் விண்ணுலகில் இன்றும் ஒளி வீசிக்கொண்டிருக்கும் என்பதே எமது நம்பிக்கை. இவ்வொளியை மீண்டும் நாம் தரிசிப்போம் என்பதே எமது எதிர்நோக்கு. தனது அர்த்தமுள்ள அர்ப்பண வாழ்வால், கிறிஸ்துவின் சீடத்துவத்திற்குப் பெருமை சேர்த்து, தன் எடுத்துக்காட்டான வாழ்வால் குருக்களுக்கு உன்னத மாதிரியாய் முன்னிற்கும் தந்தை லூயி லெவே, புனிதரின் திருக்கூட்டத்தில் அணிசெய்யப்பட வேண்டும் என்பதே எமது செபம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
உறவுச் சமூகங்களைக் கட்டியெழுப்புபவள் பெண்; இப்பூமிப்பந்தை அன்பிலும் அறிவிலும் உறவிலும் வாழ்விலும் வளப்படுத்துபவளும் அவளே. அப்பெண்ணின் பெருமையைப் போற்றும் இந்நாளில் மகளிர் அனைவருக்கும் பெண்கள் தின நல்வாழ்த்துகள்!
ஆண்டுக்கு
ஒருமுறை அல்ல, அன்றாடம் நினைத்து நாம் பெருமைப்பட வேண்டிய உறவு பெண்ணினம். ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி!’ என்னும் பாரதியின் வைர வரிகள் உயிர்பெற்றெழும் இச்சூழலில், பட்டங்கள் ஆள்வதில் பார்போற்ற உயர்ந்து வரும் பெண் சமுதாயம், சட்டங்கள் செய்வதிலும் மேன்மை கண்டிட அவர்களின்
திறமையை அறிந்து, பெருமையைப் பகிர்ந்து, தடங்கள் பதித்திட வாழ்த்திடும் நன்னாளே இப்பொன்னாள்!
பெண்ணிய
விடுதலையை முன்வைத்து, அவள் கொண்ட அடிமை இருள் போக்க, ஆண்-பெண் சமத்துவச் சமுதாயத்தைப் படைக்க, ஓங்கி ஒலித்ததே இந்த வரிகள். பெண் விடுதலையே சமூக விடுதலை; பெண் விடுதலையே நாட்டு விடுதலை; பெண் விடுதலையே மானுட விடுதலை என முழங்கிய இந்த
வரிகள், பெண்-சமூகத்தின் கண் எனவும், பெண் சக்தி கொண்டவள் எனவும் பறைசாற்றின. ஆகவேதான், கவிமணி தேசிக
விநாயகம் பிள்ளை, ‘மங்கையராய்ப் பிறப்பதற்கு நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா!’ என்று பாடினார். பெண்மையின் பெருமை கண்ட பாரதி...
‘பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை
வெல்க என்று கூத்திடு வோமடா!
துன்பம்
தீர்வது பெண்மயி னாளடா!
சூரப்
பிள்ளைகள் தாயென்று போற்றுவோமடா!
பெண்ண
றத்தினை ஆண் மக்கள் வீரந்தான்
பேணு
மாய்ற் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக்
காக்கும் இரண்டிமை போலவே
காத
லின்பத்தைக் காத்திடு வோமடா!
உயிரைக்
காக்கும், உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக்
குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு
னும்இந்தப் பெண்மை இனிதடா!
ஊதுக்கொம்புகள்;
ஆடு களி கொண்டே!
‘போற்றி தாய்’ என்று தாளங்கள் கொட்டடா!
‘போற்றி தாய்’ என்று பொற்குழ லூதடா!
அன்ன
மூட்டிய தெய்வ மணிக் கையின்
ஆனை
காட்டில் அனலை விழுங்குவோம்!
என்று
பெண்மையின் பெருமையை ‘போற்றி தாய்’ எனப் பாடினான். உயிர்களை உருவாக்கி, நல்வழிப்படுத்தி உலகை மேன்மையுறச் செய்வதே பெண்ணுக்குரிய அறம் என்றும், வாழ்வில் இன்பத்தைப் பெருக்கி உலகை உய்விப்பதுதான் பெண்மையின் மேன்மை எனவும் கண்டு ‘பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா’ என்று
பரவசம் பொங்கப் பாடினான் அந்த முண்டாசுக் கவிஞன்.
“பெண் - மகளாகத் தோன்றி, மனைவியாக வாழ்ந்து, தாயாகத் தொண்டு செய்து, தெய்வமாகக் காட்சி தருபவள்” என்றார் திரு.வி.க. பெண்ணின்
ஏழு வகைப் பருவங்களான பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம் பெண் எனும் வளர் பருவ நிலைகளில் எந்த நிலையில் இருந்தாலும், தாயாகவும் தாய்மையாகவும் பார்க்கப்படுகிறாள். தான் பெற்ற குழந்தையில் தன் தாயைப் பார்க்கும் சமூகம் இது; பெண்மையின்
தாய்மைக்கு உலகில் ஈடு இணையில்லை.
உலகத்தின்
எல்லா மொழிகளிலும் மிக அழகான சொல்லாடல் ‘அம்மா’ என்பதுதான். உலகைப் படைத்த இறைவன் எல்லா இடங்களிலும் எல்லா உயிர்களிலும் உடனிருக்கவே தாயைப் படைத்தான் என்பது சீனப் பழமொழி. ஆகவே, தாயும் தெய்வமும் தனித்தனி வடிவங்கள் அல்ல; தாயும் தெய்வமும் ஒன்றே! இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் நம்முடைய தாயில் தரிசனம் தருகிறார்.
அன்பின்
அழகுதான் உண்மையிலேயே அழகு; அது தாய்மையில் பொதிந்து கிடப்பதால்தான் பெண் அழகுள்ளவளானாள். தாய் அன்பின் வடிவம். ஒரு தாய் தன் குழந்தையோடு கொஞ்சி விளையாடும் மகிழ்ச்சியை எங்கேனும் நாம் கண்டால், அங்கே நாம் உண்மையான அன்பின் வடிவத்தைக் கண்டுகொள்கிறோம்.
தாயை
வேறு எந்த மொழியிலும் விளக்கினாலும் கிடைக்காத உள்பொருள் தமிழில் ‘அம்மா’ என அழைக்கும்போது ஆழமாகப்
பொருள்படுகிறது. தாய் தன்னுடைய குழந்தைக்கு உயிர் கொடுக்கிறாள். கருவில் உயிர் கொடுத்தவள், அந்த உயிர் உறைவதற்கு மெய் (உடல்) கொடுக்கிறாள். பத்து மாதம் சுமந்த பின்பு அதை உலகத்தில் உயிர் மெய்யாய் உலவ விடுகிறாள். இப்பேருண்மையை உணர்த்தவே உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் குவிந்து ‘அம்மா’ என அழைக்கப்படுகிறாள் என்கிறது தமிழ்
மரபு.
உலகில்
தாய் அன்புக்கு ஈடு இணையில்லை; தாய் அன்பு கலப்படமற்ற அன்பு. நிறைவான அன்பையும் தன்னலமற்ற உணர்வையும், பிறர் நலம் கொண்ட உழைப்பையும் தாய் ஒருவரிடம் மட்டுமே நாம் காண முடியும்.
“மேலை நாடுகளில் பெண் ஒருவரால் மனைவியாகப் பார்க்கப்படுகிறாள். ஆனால், கிழக்கில் அவள் எப்போதும் தாயாகவே போற்றப்படுகிறாள். இந்தியாவில் பெண் என்பவள் நம் கண்களுக்குத் தரிசனம் தரும் தெய்வம். அவள் தன் முழு வாழ்க்கையையும் தாய்மைக்கே அர்ப்பணிக்கிறாள்” என்கிறார்
சுவாமி விவேகானந்தர். அவ்வாறே, “என்னுடைய எல்லா நல்ல குணங்களுக்கும் நான் என் தாய்க்குக் கடன்பட்டவன்” என்கிறார்
ஆபிரகாம் லிங்கன்.
பூ
- அரும்பாகி, மலராகி, கனியாய்க் கனிவது போல் பெண்ணுக்கும் வாழ்வில் பெண்மை, தாய்மை, இறைமை என மூன்று நிலைகள்
இருக்கின்றன. பெண்மைக்குள் தாய்மை மலர்ந்தால் இறைமை தானாய் மலரும் என்கிறது சமூகம். சாலையோரம் கிடைக்கும் ஒரு கல்லுக்கு மதிப்பொன்றும்
இல்லை; ஆனால், அது ஒரு சிற்பியின் கையில் பட்டு அழகுச் சிலையாகும்போது அதற்குத் தனி மரியாதை இருக்கிறது. அச்சிலை கோவிலின் கருவறையில் வைக்கப்படும்போது தொழுகைக்குரிய தெய்வமாகிறது. பெண்ணும் ஒரு கல்லைப் போன்றவளே. மங்கையாக அவள் மணம் முடிக்கின்றபோது, இல்லற வாழ்க்கையில் அவள் சிற்பமாகச் செதுக்கப்படுகிறாள்; அங்குத் தாயாகும்போது குடும்பம் என்னும் கோவிலின் கருவறைக்குள் அவள் கடவுளாக்கப்படுகிறாள்.
உலகத்தின்
எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள்கூட துறக்க முடியாத உறவு தாயின் உறவு என்பார்கள். ஒரு துறவியை அவரைப் பெற்ற தந்தையைச் சந்திக்க நேர்ந்தால் தந்தைதான் அந்தத் துறவியின் கால்களில் விழுந்து வணங்க வேண்டும் என்றும் ஆனால், தாய் சந்திக்க நேர்ந்தால் துறவி அவருடைய திருவடிகளில் விழுந்து தொழ வேண்டும் என்பதும் சில மதங்களில் மரபு. தந்தைக்கு இல்லாத மதிப்பை இந்தச் சமூகம் தாய்க்குத் தந்திருக்கிறது.
‘தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது’ என்றார்
நபிகள் நாயகம். ‘அன்னையரை மேன்மைப்படுத்துவோர் செல்வம் திரட்டி வைப்போருக்கு ஒப்பாவர்’
என்கிறது சீராக்கின் ஞான நூல் (3:4). ஆகவேதான், ‘ஒரு மனிதனின் அழிக்க முடியாத பாவங்களில் ஒன்று தாயையும், தந்தையையும் புறக்கணிப்பது’ என்கிறது
திருக்குர்-ஆன்.
இன்று
பெண்மை வஞ்சிக்கப்படுகிறது; உதாசீனப்படுத்தப்படுகிறது; புறந்தள்ளப்படுகிறது; பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகிறது. பெண்ணியம் மாண்பு பேணப்படப் போதிய சட்ட திட்டங்கள் இருந்தபோதிலும், குற்றங்களுக்கான தண்டனைகள் தீவிரப்படுத்தப்படாத வரையிலும் ஆயிரம் பாரதிகள் பிறந்தாலும் சமத்துவம் காண்பது சவாலே! அது பெரும் சவாலே!
பாலியல்
ரீதியாகப் பெண்மை சீண்டப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்; அன்னையர்கள் அனாதையாவதைச் சமூகம் தடுக்க வேண்டும்.
“எங்கள் வீட்டின் பெயர்
‘அன்னை இல்லம்’
அன்னை
இருப்பதோ அனாதை இல்லம்”
என்னும்
புதுக்கவிதை, இன்றைய உறவுச் சமூகத்தின் அவலத்தை எடுத்துக் கூறுகிறது.
தாயைப்
போற்றுவோம்; அவள் கொண்ட தாய்மையைப் புகழ்வோம்; அவளின் பெண்மையின் பெருமையைப் பறைசாற்றுவோம். இவ்வேளையில்,
‘அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே
அம்மாவை
வணங்காமல் உயர்வில்லையே!’
என்னும்
வாலியின் வைர வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன. பெண்மை வாழ்கவே!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்