சீரிய சிந்தனையும், நேரிய சொல்லும், உயரிய செயலும் கொண்ட ஒருவரின் வாழ்வியல் இந்த மனுக்குலம் மடியும் வரை மறக்கவே முடியாதது. அதுவே ஆகச் சிறந்த ஆளுமையாக அவரை உயர்த்திப் பிடிக்கிறது. அத்தகையோரின் மரணம் சமூகத்திற்கு ஆயிரம் அர்த்தங்களைச் சொல்லுகிறது. நீண்ட காலம் வாழ்வதுதான் நிறைவான வாழ்க்கை என்று நினைப்பவர் மத்தியில், ‘வாழ்க்கையின் பெருமை வாழும் நாள்களில் இல்லை; செய்து முடிக்கும் செயல்களில் இருக்கிறது’ என்பதை இவர்கள் எண்பிக்கிறார்கள்.
பொய்யாமொழி
புலவர் ஐயன் வள்ளுவரின் வாக்கு
‘தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின்
தோன்றாமை நன்று’
(குறள் 236)
என்னும்
குறளில் வெளிப்படும் பொருள், பேராசான் முதுமுனைவர் இறையியலாளர்
தந்தை பெலிக்ஸ் வில்பிரட்
அவர்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் பேருண்மையாகவே இருக்கிறது.
“மனிதனாகப் பிறந்தால் புகழுக்குரிய செயல்களைச் செய்ய வேண்டும்”
என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான். தன் அறிவாற்றலாலும் முழுமையான அர்ப்பணத்தாலும் அளப்பெரிய இறையியல் புலமையாலும் இச்சமூகத்திற்கும் திரு அவைக்கும் மாபெரும் பங்களிப்பு செய்தவர் தந்தை வில்பிரட் அவர்கள்.
இவரது
பிறப்பு மகிழத்தக்கது; வாழ்க்கை புகழத்தக்கது; மரணம் வணங்கத்தக்கது!
அன்பில்
சிறந்த பணியாளனாய், அறிவில் சிறந்த சான்றோனாய், பண்பில் சிறந்த மனிதனாய், பணியில் வியக்கும் பேராளுமையாய் பயணித்த ஒரு நதி தன் மூல தர்மத்தில் முழுமையாய் சங்கமித்திருக்கிறது.
இந்த நதி தடம் பதித்த பாதைகளும் தவழ்ந்து வந்த சூழல்களும் போற்றத்தக்கவையே! இறையியல் பேராசிரியராய், குருமாணவர் பயிற்சியாளராய், மிகச்சிறந்த அறிஞராய், எழுத்தாளராய், இந்நூற்றாண்டின் வியத்தகு இறைவாக்கினராய், தமிழக, இந்திய, ஆசியத் திரு அவையின் மாபெரும் அடையாளமாய் அறியப்பட்ட இந்த ஆளுமை தடம் பதித்தத் துறைகள் ஏராளம்.
தத்துவவியல்,
இறையியலின் கிளைக்கூறுகளான கிறித்தியல், தொகுப்பு இறையியல், திரு அவையியல், விடுதலை இறையியல், பெண்ணிய விடுதலை இறையியல், பல்சமய உரையாடல், கிறித்தவ ஒன்றிப்பு, சூழலியல்,
கலாச்சாரக் கலந்துரையாடல் எனப் பல்வேறு துறைகளில் தடம் பதித்து, மானுட நேயம் கொண்டு மனிதகுல விடுதலைக்காகவும், குறிப்பாக, அடித்தட்டு மக்களின், விளிம்பு நிலை மக்களின் குரலாகத் தன்னை அடையாளப்படுத்தி வீரியமிக்க எழுத்துகளாலும் விடுதலைக் கூறு கொண்ட முழக்கங்களாலும் தன் சிந்தனைகளை உலகெங்கும் விதைத்து வந்த மாபெரும் சாதனையாளர் இவர்.
ஆகவேதான்,
இந்திய ஆயர் பேரவையின் தலைவரும் ஆசிய ஆயர் பேரவைக் கூட்டமைப்பின் தலைவருமான கர்தினால் பிலிப்பு நேரி பெரேரோ அவர்கள், “இறையியலாளர் வில்பிரட் அவர்கள் அறிவின், ஆன்மிக ஞானத்தின் அடையாளம்”
என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிடுகிறார்.
அவ்வாறே,
“இவர் இறையியலில் இமயம் தொட்டவர்; இல்லை, இமயங்கள் பல கண்டவர். உலக
அளவில் பல பொறுப்புகளை வகித்தவர்;
பல சிறப்புகளைப் பெற்றவர்; பல பேர் ஆளுமைகளோடு
தொடர்பில் இருந்தவர்; ஆயினும், மிக மிக எளிமையானவர். அடக்கம் என்னும் உயர்தன்மை ஒருவரை அழியாப் புகழ் நிலைக்குச் சேர்க்கும் என்பதற்கு எடுத்துக் காட்டானவர்” என்று
புகழாரம் சூட்டுகிறார் சிவகங்கை மறைமாவட்ட மேனாள் ஆயர் மேதகு சூசைமாணிக்கம் அவர்கள்.
இந்த
ஞான ஒளி பல விளக்குகளை இச்சமூகத்தில்
ஏற்றியிருக்கிறது என்பதே இவ்வொளி கண்ட பெரும்
பேறு! ஏறக்குறைய முப்பது முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர்களையும், எழுபதிற்கும் மேற்பட்ட முதுகலைப் பட்ட ஆராய்ச்சி மாணவர்களையும் உருவாக்கியிருக்கிறார் என்பதே அதற்குச் சான்று.
அத்தகைய
வரிசையில், தந்தை வில்பிரட் அவர்களின் மாணவரும் தஞ்சை மறைமாவட்ட ஆயருமான மேதகு T. சகாய
ராஜ் அவர்கள், “தந்தை வில்பிரட் அவர்கள் விடுதலை இறையியலின் குரலாகவும், விளிம்பு நிலை மக்களின் தோழனாகவும், ததும்பாத நிறைகுடமாகவும், அமைதியாக வற்றாத இறையியல் நதியாகவும் பயணித்து இறையியலை இயக்கமாகக் கட்டி எழுப்பியவர்” என்று
புகழாரம் சூட்டுகிறார். “தலத் திரு அவை மக்களை மையப்படுத்திய தலத் திரு அவை, விளிம்பு நிலை மக்களை நோக்கிய திரு அவை என்னும் கருத்தியலில் சிந்தனைக் களமும் செயல்பாட்டுத் தளமும் ஒருங்கே கொண்டவர்”
என்று மேலும் குறிப்பிடுகிறார்.
தமிழக,
இந்திய, ஆசியத் திரு அவையின் முகமாக ஒளிர்ந்த தந்தை வில்பிரட் அவர்கள் ஒவ்வொரு சூழலிலும் மக்களின் வாழ்வியலைக் கருவாக, மையமாகக் கொண்டு அம்மக்களின் பண்பாட்டில் வேரூன்றிய இறையியலைக் கட்டமைக்கவே கனவு கண்டார். ஆகவேதான், ஆசியாவுக்கு என்று தனித்துவமான இறையியல் உண்டு என்பதை உலகறியச் செய்தார்.
1976-ஆம் ஆண்டு
உரோமை உர்பானியா பல்கலைக்கழகத்தில் தனது 28-வது வயதில் இறையியலில் தங்கப் பதக்கத்தோடு முனைவர் பட்டம் பெற்ற இவர், அகில உலக இறையியல் கழகத்தின் உறுப்பினராகவும், ஆசிய ஆயர் பேரவையின் இறையியல் மன்ற ஆலோசகச் செயலராகவும், பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு ‘வருகைதரு’ பேராசிரியராகவும்,
சிறப்புமிக்க இறையியல் இதழ்களின் ஆசிரியராகவும், 25 -க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியராகவும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளைப் பல்வேறு தளங்களில் சமர்ப்பித்துப் பரிணமித்திருப்பது அவருடைய ஞானவெளிப்பாட்டின் அங்கீகாரமாகவே அடையாளப்படுத்தப்படுகிறது.
இத்தகைய
சிறப்புமிக்க அருள்பணியாளரை, இறையியலாளரை தமிழக, இந்திய, ஆசியத் திரு அவையின் முகத்தை நாம் இழந்திருப்பது ஒட்டுமொத்தத் திரு அவைக்கும் பேரிழப்பாகும்.
“தன் மக்களை முறையாகப் பயிற்றுவித்த பின்பு, தலைவன் அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்வது, தன்னைப் போல புதிய தலைவர்கள் பரிணமிக்க வேண்டும் என்பதற்காகவே!” என்னும் சுவாமி விவேகானந்தரின் கூற்றைப் போல, தந்தை வில்பிரட் என்னும் பேரொளி மறைந்தாலும், அவரால் ஏற்றி வைக்கப்பட்ட ஆயிரமாயிரம் அகல் விளக்குகள் ஒளி வீசிக் கொண்டே இருக்கும் என்பதில் எள்ளளவும் எமக்கு ஐயமில்லை.
தந்தை
வில்பிரட் அவர்களின் ஆன்மா இறைவனில் இளைப்பாறட்டும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்
கல்லால் அரிது! (குறள் - 235)
அதாவது,
‘புகழுடன் வாழ்வது, நிலையான புகழுடன் இறப்பது ஆகிய இவ்விரண்டும் அறிவாளிகளுக்கே கிடைக்கும்; மற்றவர்களுக்குக் கிடைப்பது அரிது’ என ஐயன் வள்ளுவர்
குறிப்பிடும் இக்குறள், மறைந்த பொருளாதார மாமேதை இந்தியத் திருநாட்டின் மேனாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களுக்காகவே எழுதப்பட்டது போன்று எண்ணத் தோன்றுகிறது.
தங்கள்
பெயர் வரலாற்றில் இடம்பெற்றதால் சில ஆளுமைகள் பெருமை கொள்கின்றனர்; ஆனால், சிலருடைய பெயர் வரலாற்றின் பக்கங்களை அணி செய்வதால் வரலாறே பெருமை கொள்கிறது. அத்தகைய வரலாறே பெருமைகொள்ளும் வகையில் இந்த நூற்றாண்டின் தலைசிறந்த ஆளுமையாக வலம் வந்தவர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள்.
தான்
வாழ்ந்த காலத்திலும் இறந்த இச்சூழலிலும் உலகமே வியந்து போற்றும் ஓர் ஒப்பற்ற தலைவராக, மாமனிதராக இவர்
வாழ்ந்திருக்கிறார் என்பதே இந்த ஆளுமைக்குக் கிடைத்த புகழ்; பெரும்பேறு! இவர் தனி ஆளுமை என்பதையும் கடந்து, இவர் ஓர் அடையாளம் (Icon). உலகில்
தலைசிறந்த கல்வி நிலையங்களில், பல்கலைக்கழகங்களில் படித்துப் புலமை பெற்று பேராசிரியராக வலம் வந்த டாக்டர் மன்மோகன் சிங், நேர்மைக்கும் எளிமைக்கும் எடுத்துக்காட்டாகவும் அறிவுக்கும் அடக்கத்திற்கும் மாண்புமிகு அரசியல் அடையாளமாகவும் கணிக்கப்படுகிறார்.
இவர்
அடக்கத்தின் வடிவம். மகத்தான மனிதர்கள் யாவரும் அடக்கமே வடிவாய் வாழ்ந்தவர்களே! அடக்கம் என்ற வேரிலிருந்தே எல்லா நற்பண்புகளும் கிளைபரப்புகின்றன. ‘அடக்கம் உள்ள இதயத்தில்தான் ஆண்டவனும் குடியிருப்பான்’ என்பது
ஆன்றோர் வாக்கு. அடக்கம் பொதுநலத்தின் ஆலயம். முற்றிய கதிர்கள் மட்டுமே தரை நோக்கித் தலைதாழ்த்தும். முதிர்ச்சியும் பக்குவமும் அடைந்த மனமே அடக்கத்துடன் பணிந்து நடக்கும். எனவேதான், “எளிமை, அறிவு மற்றும் பணிவின் உருவமான அவர் நாட்டுக்காக முழு மனத்தோடு பணியாற்றிய ஒப்பற்ற தலைவர்” எனத் தன் இரங்கல் செய்தியில் பதிவு செய்கிறார் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமதி. சோனியா காந்தி.
வர்த்தகத்
துறையில் பொருளாதார ஆலோசகராகப் பதவியைத் தொடங்கிய டாக்டர் மன்மோகன் சிங், நிதித்துறையில் பொருளாதாரத் தலைமை ஆலோசகராகவும், மத்திய நிதித் துறைச் செயலராகவும், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராகவும், திட்டக்குழுவின் துணைத் தலைவராகவும் பதவி வகித்து, படிப்படியாக உயர்ந்து பின்னாளில், இந்தியத் திருநாட்டின் நிதி அமைச்சராக மிளிர்ந்து, இறுதியில் உலகின் மிகப்பெரிய சனநாயகமான இந்தியத் திருநாட்டின் பிரதமராகவும் பணியாற்றியது அவருடைய கண்ணியத்திற்கும் கடின உழைப்பிற்கும் அறிவாற்றலுக்கும் சீரிய சிந்தனைக்கும் தீர்க்கமான முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த பரிசாகவே கருதப்பட்டன.
ஒவ்வொரு
படிநிலைகளிலும் தான் வகித்தது பதவி என்று கருதாமல், அது பொறுப்புமிக்கப் பணி எனக் கருதி முழு மூச்சோடும் முழுமையான அர்ப்பணத்தோடும் அவர் பணியாற்றியது அனைவரையும் வியப்புக்குள்ளாக்குகிறது.
அவருடைய
தனிமனித மதிப்பீட்டு வாழ்வியல், ஆழமான பொருளாதார அறிவு, வெற்றி நிறைந்த அரசியல் பயணம் எனும் மும்முனைத் தளங்களில் இப்பேராளுமையைச் சிந்திக்க விழைகிறேன்.
எளிய
தோற்றம், ஈரமுள்ள இதயம், இனிய உடல் மொழிக்கூறு, அன்பான வார்த்தைகள், அமைதியான உரையாடல், ஆழமான சிந்தனை, கருத்துச் செறிவுமிக்க பேருரைகள், தீர்க்கமான முன்னெடுப்புகள்... இத்தகைய மதிப்பீடுகளின் வரிசையில் ஒருபோதும் தளும்பாத நிறைகுடமாகவே அவர் வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
எவரையும்
கடிந்துகொள்ளாத இவர், கடைநிலை ஊழியரிடமும் கனிந்த இதயத்துடன் உறவாடுவதும் உரையாடுவதும் தன் ஆளுமையின் தனிச்சிறப்பாகவே கொண்டிருந்ததும், பேச்சிலும் செயலிலும் தன்னால் எவரும் ஒருபோதும் காயப்பட்டு விடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்ததும் பெரிதும் போற்றத்தக்கதே!
இந்த
ஆளுமையின் பொருளாதார அறிவு உலகையே வியப்புக்குள்ளாக்குகிறது. இந்தியாவின் பொருளாதார ஏறுமுகத்திற்கான ஆதாரப் புள்ளி இவர் என்றால் அது மிகையாகாது. 1971 - இல் இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகப் பொறுப்பு வகித்த காலத்திலும், 1982 முதல் 1985 வரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த காலத்திலும் இந்தியப் பொருளாதாரத்தைப் புதைகுழியிலிருந்து மீட்டெடுத்த பொருளாதார மாமேதையாகப் புகழப்படுகிறார்.
1991-ஆம் ஆண்டு,
இந்திய வரலாற்றின் பொருளாதார ஏற்றத்திற்கான முக்கிய ஆண்டு. அன்றைய பிரதமர் பி.
வி. நரசிம்மராவும், டாக்டர் மன்மோகன் சிங்கும் இக்கட்டான இந்திய நிதி நெருக்கடியில் இருந்து இந்நாட்டை மீட்டவர்கள் என்றால், அப்பெருமை அவர்களையே சாரும். டாக்டர் மன்மோகன் சிங் அவர்களின் கூர்மையான சிந்தனைத் தெளிவு பல பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு
வழிவகுத்தது; பிற நாடுகளின் முதலீடுகளைக் கவர்ந்திழுத்தது. இந்தியாவை உலகின் ஐந்தாவது மாபெரும் பொருளாதாரத் தன்னிறைவு கொண்ட நாடாக உயர்த்தியது.
“டாக்டர் மன்மோகன் சிங்கின் பொருளாதாரச் சிந்தனையும் செயல்பாடுகளும் இந்திய நாட்டினுடைய பொருளாதார வளர்ச்சிக்காக மட்டுமின்றி, உலக அளவிலும் பல்வேறு பலன்களை அளித்துள்ளது” என்று
புகழாரம் சூட்டுகிறார் இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அவ்வாறே, இந்தியாவுக்கான பிரிட்டன் தூதர் லின்டி கேமரூன், “தனது துணிச்சலான பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் நலன்களை மன்மோகன் சிங் முன்னெடுத்துச் சென்றவர். சிறந்த பிரதமராக, நிதி அமைச்சராக, உலக அளவில் சிறந்த அரசியல் தலைவராக மதிக்கப்பட்டவர்” எனக்
குறிப்பிடுகிறார்.
மேலும்,
ஒன்றிய அரசின் முதன்மை அமைச்சர் மோடி அவர்கள்,
“போராட்டங்களைக் கடந்து எவரும் உயர்ந்த நிலையை எட்ட முடியும் என்பதற்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் வாழ்க்கை அடுத்தத் தலைமுறைக்குப் பெரும் பாடமாக அமையும். பிரதமராக நாட்டின் வளர்ச்சிக்கு அவர் வழங்கிய பங்களிப்பு எப்போதும் நினைவில் கொள்ளப்படும்” என
நினைவு கூருகிறார்.
டாக்டர்
மன்மோகன் சிங் அவர்களின் மறைவு தனிப்பட்ட இழப்பாகச் சிலருக்கு அமைந்தாலும், நம் நாட்டிற்கும் உலகிற்கும் பேரிழப்பே! அவரது இழப்பை நிரப்புவது மிகவும் கடினம். பொருளாதாரம், அரசியல் எனப் பல தளங்களில் அவரது
ஆலோசனைகளைக் கேட்க கட்சி பாகுபாடின்றி பறவைகள் போல் பலரும் கூடிய ஆலமரம் இன்று சாய்ந்துவிட்டது. ஆயினும், வாஞ்சையோடு தழுவிக்கொண்ட வரலாறு இத்தகைய பேராளுமையால் பெருமை கொள்கிறது.
எளிமை,
உயர்கல்வி, விடாமுயற்சி, கடின உழைப்பு, வெற்றி, உயர்வு, மேன்மை, நேர்மை, நிர்வாகம், சீரிய சிந்தனை, தொலை நோக்குப் பார்வை, பொருளாதாரம், அரசியல், அறிவியல், அறநெறி வாழ்வியல் எனப் பல படிநிலைகளில் இந்நூற்றாண்டின்
குறியீடாக முன்னிருக்கும் டாக்டர் மன்மோகன் சிங் இன்றைய இளையோர் படிக்க வேண்டிய பேராளுமையே!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
என் இனிய நம் வாழ்வு வாசகப் பெருமக்களே!
உங்கள் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இந்திய,
தமிழ்நாடு கத்தோலிக்கத் திரு அவைக்கும் தமிழ்க்கூறும் நல்லுல கிற்கும் இவ்வாண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆண்டாக
அமைகிறது. இத்தளங்களில் சமூக - அரசியல் - ஆன்மிக - வாழ்வியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தமிழ்நாடு திரு அவையின் ஒப்பற்ற வார இதழ் நல்லவர்களின் நாடித்துடிப்பு ‘நம் வாழ்வு’ தன் பொன் விழாவிற்குள் அடியெடுத்து வைக்கிறது. தமிழ் இதழியல் மற்றும் திரு அவை அச்சு ஊடகத் துறையில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய தருணம் இது!
பொன்விழா
ஆண்டின் மகிழ்ச்சியான இத்தருணத்தில் இவ்விதழின் முதன்மை ஆசிரியர் என்ற முறையில் என் எண்ணங்களில் எழுவது - நன்றி, வியப்பு, எதிர்நோக்கு என்னும் மும்முனைக் கூறுகளே!
50 ஆண்டுகாலப்
பயணம் என்பது எளிதானது அல்ல; இதற்கான ஆதாரமாய் அமைந்து, விதையிட்டு, தளிர் கண்டு, பூத்துக் குலுங்கும் நிலை கண்டு, காய்த்துக் கனி தரும் இன்றைய சூழலில், இவ்விதழின் கடந்து வந்த பாதைகளைச் சற்றே பின்னோக்கிப் பார்ப்பதே சாலச்சிறந்தது எனக் கருதுகிறேன்.
தனிமனிதனையும்
சமூக நலனையும் முன்னிறுத்தி, மாறி வரும் காலச்சூழலுக்கு ஏற்றவாறு தனித்துவமான ஆளுமைகளாக ஒவ்வொருவரையும் உருவாக்கவும் இன்றைய சமூக- அரசியல் சூழலில் சம நீதியும் சமூக
நீதியும் கொண்ட சமத்துவச் சமுதாயத்தைப் படைக்கவும் தமிழ்நாடு திரு அவையால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் ஏராளம். அத்தகைய முயற்சிகளில் முத்தாய்ப்பாய் அமைந்திருப்பது அச்சு ஊடகப் பணியகத்தின் ‘நம் வாழ்வு’ வார இதழ் என்றால் அது மிகையாகாது.
தமிழ்நாடு
ஆயர் பேரவையின் முதல் ஊடகக் குழந்தையாய்ப் பிறந்து, எல்லாருடைய கரங்களிலும் தவழ்ந்து, இன்றும் அது தொடர்ந்து வீறுநடை போட்டுக் கொண்டிருப்பது பெருமைக்குரியதே. இப்பயணத்தில், அருள்பொழிந்து துணையிருந்த மூவொரு இறைவனுக்கு முதல் நன்றி. மேலும், முன்நின்ற ஆயர்கள், பேராயர்கள்
குறிப்பாக இந்நிறுவனத்தின் மேனாள் தலைவர்கள், முதன்மை ஆசிரியர்கள், துணை ஆசிரியர்கள், ஆசிரியர் குழு உறுப்பினர்கள், வெளியீட்டுச் சங்க உறுப்பினர்கள், மறைமாவட்டப் பொறுப்பாளர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், கவிஞர்கள், நலவிரும்பிகள், வர்த்தக நிறுவனத்தார், வாசகர்கள், சந்தாதாரர்கள் என்னும் நீண்ட பட்டியலில் இடம்பெறும் உங்கள் ஒவ்வொருவரையும் நன்றி நிறைந்த உள்ளத்தோடு நினைத்துப் பார்க்கிறேன்.
இந்த
நன்றி உணர்வில் என்னில் மிகுந்திருப்பது வியப்பே! என்னே மாபெரும்
சாதனை இது! கிறிஸ்துவின் இறையாட்சி மதிப்பீடுகளான அன்பு, நீதி, நேர்மை, சமத்துவம், சகோதரத்துவம், உரிமைக்கான குரல், விடுதலை முழக்கம், சமநீதி என்னும் சமூக வாழ்வியலின்
மேலான விழுமியங்களை முன்வைத்து இவ்விதழ் பயணித்து
வந்திருப்பது மிகப்பெரிய வியப்பு! எச்சூழலிலும் எவ்விதச் சமரசமும் இன்றி நிலைப்பாட்டில்
உறுதித்தன்மையும் இலக்கில் கூர்மையும் கொண்டு இவ்விதழ் பயணித்து வந்திருப்பது மற்றொரு
வியப்பே!
சிறு
விதையாய் தன் தொடக்கத்தைக் கொண்டிருந்த ‘நம் வாழ்வு’ வார
இதழ், இன்று ஆலமரமாய்த் தழைத்தோங்கி, தமிழ்நாடு கடந்து, இந்தியா முழுவதும் பரந்து,
உலகளவிலும் சிறந்து விளங்குவது தமிழ்க்கூறும் நல்லுலகிற்குச் சான்றாகவே அமைகிறது. இதுவும்
மற்றொரு மாபெரும் வியப்பே! இத்தகைய வியப்புக்குரிய சூழலில் ‘கூர்முனைப் புரட்சியால்
சீர்மிகு உலகு செய்ய முடியும்’ என்னும் ஆழமான நம்பிக்கையோடும் உறுதிப்பாட்டோடும் அடியேனும் இப்பயணத்தில் இணைய
இறைவன் வழங்கியுள்ள இந்த மாபெரும் வாய்ப்புக்காக நன்றி கூறுகிறேன்.
நன்றியும்
வியப்பும் கலந்த இத்தருணத்தில் தொடர்ந்து எம்மை ஆட்கொள்வது எதிர்நோக்கே! இச்சூழலில்,
“எதிர்நோக்கு ஏமாற்றம் தராது” (உரோ 5:5) என்னும் பவுலடியாரின் வார்த்தைகளும்,
இதே தலைப்பில் வெளிவந்த திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்களின் சுற்று மடலும் எமக்கு ஆழமான நம்பிக்கையைத் தருகிறது. “எதிர்காலம் எதைக் கொணரும்
என்பதை நாம் அறியாமல் இருந்தாலும், நம் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வரவிருக்கும் நற்காரியங்களின்
விருப்பமாகவும் எதிர்பார்ப்பாகவும் எதிர்நோக்கு குடிகொண்டிருக்கிறது” என்னும் திருத்தந்தையின்
கூற்று, விடியல் நன்மைத்தனங்கள் நிறைந்ததாக அமையும் என்ற மகிழ்ச்சியான அருள் நிறைந்த
செய்தியைத் தருகிறது. விடியும் பொழுதில் நன்மைத்தனங்கள் நிறைந்து நம் வாழ்வின் எதிர்காலம்
செழுமை மிக்கதாக இன்னும் பல ஏற்றங்கள் காணக்கூடியதாக அமையும் என்ற நம்பிக்கையை இந்த
எதிர்நோக்கு தருகின்றது.
இவ்வேளையில்,
மூன்று செய்திகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறேன். ஒன்று, பொன்விழா நிகழ்வு மதுரை
உயர் மறைமாவட்ட இதழாக இருந்த ‘கத்தோலிக்கு சேவை’ என்னும்
இதழை இடைநிறுத்தம் செய்து மலர்ந்த ‘நம் வாழ்வு’ என்னும்
இக்குழந்தைக்கு அது பிறந்த இடத்திலேயே விழா எடுப்பது சிறந்தது எனக் கருதுகிறோம். ஆகவே,
இம்மாதம் 22-ஆம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு, மதுரை - ஞான ஒளிவுபுரம், புனித தே
பிரித்தோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஆயர்கள் அனைவரும் கூடும் மாபெரும் விழா
நிகழவிருக்கிறது. ‘நம் வாழ்வு’ வெளியீட்டுச் சங்கத்தின் தலைவரும்,
சிவகங்கை மறைமாவட்ட ஆயருமான மேதகு முனைவர் லூர்து ஆனந்தம் அவர்களின் பெயரால் இவ்வரலாற்றுச்
சிறப்புமிக்க விழாவிற்கு உங்கள் ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றேன்.
இரண்டாவதாக,
இப்பொன்விழா ஆண்டின் முத்தாய்ப்பாக இவ்விதழ் எண்ணிமத் (Digital)
தொழில்நுட்பத்தில் முழுமையாகத் தடம் பதிக்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப அவ்வப்போது
வலைதளங்களில் உலாவந்த இந்த இதழ், இன்று எண்ணிமத் தொழில்நுட்ப உதவியுடன் எல்லா ஊடகத்
தளங்களிலும் தடம் பதித்து உலகெங்கும் வாழும் தமிழர்களை உடனுக்குடன் சென்றடையவிருக்கிறது.
ஆகவே, புதிய தொழில்நுட்பத்துடன் namvazhvu.co.in என்னும் புதிய இணையதளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
மூன்றாவதாக,
தமிழ்நாடு திரு அவையின் அச்சு ஊடகப் பணித்தளத்தின் எதிர்கால வளர்ச்சியைக் கண்முன் கொண்டு
புரவலர் திட்டத்தைப் பரவலாக்கும் விதமாக ‘நம்(ன்)கொடை நம் வாழ்வுக்கு’ என்னும் சொற்பதத்தை முன்வைத்து நன்கொடையாளர்களை வரவேற்கிறோம்.
இத்திட்டத்தால் நீங்கள் மாதந்தோறும் வழங்கும் உங்களால் இயன்ற பொருள் உதவி, இந்த ஊடகப்
பணியின் எதிர்கால வளர்ச்சியைச் செழுமை அடையச் செய்யும் என நம்புகிறோம். எனவே, இப்பொன்விழா
நிகழ்விற்கும் எதிர்வரும் காலங்களில் இவ்விதழ் இன்னும் பொலிவோடு உங்களை வந்தடையவும்
தாராள உள்ளத்தோடு பொருள் உதவி தந்து இவ்வூடகப் பணியைத் தாங்கிட அன்போடு வேண்டுகிறேன்.
பொன்விழா
நிகழ்வுக்காகவும், இவ்வாண்டில் நாம் முன்னெடுக்கும் திட்டங்கள், செயல்பாடுகள் சிறப்புற
அமையவும் உங்கள் செபங்களில் எம்மையும் நினைவுகூருங்கள்.
வாருங்கள்...
புத்துலகு படைப்போம்!
பொன்விழா ஆண்டில்...
கூர்முனைப் புரட்சி செய்வோம்!
சீர்மிகு உலகமைப்போம்!!
அன்புத் தோழமையில்,
அருள்முனைவர் செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
இயேசு பிறப்பு விழா-2025 யூபிலிக் கொண்டாட்டம்
என் இனிய
‘நம்
வாழ்வு’ வாசகப் பெருமக்களே!
உங்கள் ஒவ்வொருவருக்கும்
கிறிஸ்து
பிறப்பு
விழா நல்வாழ்த்துகள்!
‘மார்கழிக் குளிரில் மங்களம் இசைக்க
மாமரியின்
மடியினிலே மாணிக்கம் பிறக்க
மனுவுரு
வான தேவ மைந்தன்
மாடடைக்
குடிலில் மலர்இதழ் விரித்தார்!
அகமும்
புறமும் அருள்நிலை தெளிந்து
நிறை
குடமான திருக் கோவிலாக
மாடடைக்
குடிலும் தீவனத் தொட்டியும்
மாட்சியில்
ஒளிர்ந்தது மாபரன் பிறந்ததால்!’
என்கிறது
‘திருக்குடும்பத் திருக்காவியம்.’ மாசில்லா மனுவுரு பிறந்து, மாட்டுக் கொட்டிலும் தீவனத் தொட்டியும் பேரொளியின் மாட்சியில் ஒளிரும் இத்திருநாளின் அருளும் ஆசிரும் உங்கள் ஒவ்வொருவருடைய உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிறைந்திட வாழ்த்துகிறேன்.
கிறிஸ்து
பிறப்பு விழா - அன்பின் விழா; பகிர்வின் விழா; இது ஓர் உறவின் விழா. ஆகவே, இவ்விழா
அன்பு - பகிர்வு - உறவு என்னும் முக்கோண உறவுத் தன்மையை வெளிப்படுத்துகிறது.
அன்பாய்
விளங்கும் கடவுள் (1யோவா 4:8), அந்த அன்பை ஆழமாக எண்பிக்க வார்த்தையாம் தம் மகனை (யோவா 1:1) அன்பாய் மனுவுரு எடுக்கச் செய்கிறார் (யோவா 3:16). அன்பு இங்கே உருவம் பெறுகிறது; அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த அன்பு, மண்ணகத்தை முத்தமிட தந்தையாம் கடவுளின் எண்ணத்தில் உதித்தது பகிர்தலே! தம் மகனை இவ்வுலகோடு பகிர்ந்துகொண்டார். எங்கெல்லாம் அன்பு ஆழப்படுகிறதோ அங்கே பகிர்தல் பரிணாமப்படுகிறது. அன்பு பகிரப்படுவதால் உறவு உறுதி பெறுகிறது. கிறிஸ்து பிறப்பு விழா வெளிப்படுத்தும் பேருண்மை இது!
திரு
அவையில் மூன்று வெவ்வேறு தருணங்களில் யூபிலி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வோர் ஆயிரம் ஆண்டிலும் மாபெரும் யூபிலி விழாவும் இரக்கத்தின் யூபிலி ஆண்டு கொண்டாடப்பட்டதுபோல, ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ப யூபிலி விழாக்களும் மற்றும் ஒவ்வொரு 25-வது ஆண்டிலும்
யூபிலி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
கிறிஸ்து
பிறப்பு விழாக்களில் இந்த ஆண்டு, யூபிலி-2025-ஆம் ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக 2023-ஆம் ஆண்டை ‘சங்க ஏடுகளைக் கற்றறியும்’ கற்றல்
ஆண்டாகவும், 2024-ஆம் ஆண்டை ‘இறைவேண்டல் ஆண்டாகவும்’ கொண்டாடிய
நாம், இந்த 2025-யூபிலி ஆண்டை ‘திருப்பயண ஆண்டாக’ கொண்டாடி, ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற
மையக்கருத்தில் சிந்திக்க அழைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகவே, “எதிர்நோக்கு என்னும் நெருப்பை நாம் தொடர்ந்து பற்றி எரியச் செய்ய வேண்டும்; எதிர்நோக்கு என்னும் திரியை அணையாமல் பிடித்துக்கொள்ள வேண்டும்”
என்கிறார். இந்தக் கிறிஸ்து பிறப்பின் யூபிலி ஆண்டில் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடவும், அவரை முழுமையாக அறியவும்-அறிவிக்கவும் அன்பு செய்யவும்-அண்டி வரவும் முயல்வோம். அவ்வாறே, திரு அவையைக் கொண்டாடவும் ஒவ்வொருவரும் நமது கிறித்தவ வாழ்வை, திருமுழுக்கு அழைப்பைக் கொண்டாடவும், ஒருங்கிணைந்த திரு அவையாகப் பயணிக்கவும் முயன்றிடுவோம்.
ஆகவே,
அடையாள முறையில் இந்த யூபிலி ஆண்டைக் கொண்டாட உரோமைக்குத் திருப்பயணம் மேற்கொண்டு தூய பேதுரு-பவுல், தூய யோவான் இலாத்தரன், தூய
கன்னி மரியா, உரோமை நகருக்கு வெளியே உள்ள தூய பவுல் என நான்கு
பேராலயங்களின்
கதவுகள் திறக்கப்பட்டு, அதன் வழியே கடந்து செல்லும் திருப்பயணத்தை முன்னெடுக்க அழைப்பு விடுக்கிறார் திருத்தந்தை.
மேலும்,
கிறிஸ்து பிறப்பு விழாவில் பல அடையாளங்கள் நமக்கு
முன்வைக்கப்படுகின்றன.
இடையர்களுக்குத் தோன்றிய ஆண்டவருடைய தூதர், “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்
(லூக் 2:12). பெத்லகேமில் பிறந்த குழந்தை இயேசு, மீட்பை எதிர்நோக்கிக் காத்திருப்போருக்கு இறைவன் அருளிய மாபெரும் அடையாளம். கடவுளின் அன்புக்கும், அவரது இரக்கத்திற்கும், உடனிருப்பிற்கும் இக்குழந்தை
அடையாளமாக முன்வைக்கப்படுகிறது. அவ்வாறே, நமது குடும்பங்களிலும் நம் குழந்தைகள் அடையாளங்களாக இருக்கின்றனர். அவர்கள் நம்பிக்கையின், மகிழ்ச்சியின்,
அன்பின், உறவின், எதிர்நோக்கின் அடையாளங்கள். இவர்கள் குடும்ப நலனையும் சமூகத்தின் நலனையும் ஒட்டுமொத்த உலகின் நலனையும் குறித்துக்காட்டும் உன்னத அடையாளங்கள்.
ஆகவே,
கருவில் உருவாகும் தருணம் முதற்கொண்டு குழந்தைகள் பாதுகாக்கப்படவும் அன்பு செய்யப்படவும் அரவணைக்கப்படவும் ஏற்றுக்கொள்ளப்படவும் உறுதியேற்போம். குழந்தைகள் கொடுமைப்படுத்தப்படுவதும், பட்டினியால் மடிவதும், அடிமைப்படுத்தப்படுவதும், வன்முறைக்குப் பலியாவதும், கடத்தப்படுவதும், பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. இத்தகைய செயல்கள் தொடரும் சூழலில், இதை நினைக்கும்போதே குழந்தையாக மனுவுரு எடுத்துள்ள கடவுளின் முன்பாக நாம் வெட்கப்பட வேண்டும்.
விண்மீன்
மற்றோர் அடையாளம். இயேசுவை நோக்கி யாவரையும் அழைத்து வரும் ஓர் அடையாளம். கிறிஸ்துவை ஆவலாய்த் தேடுபவரையும், அறியாதிருப்போரையும் அவரை நோக்கி அழைத்துவர விண்மீன்களாகச் செயல்படுவோம். இது மதமாற்றத்திற்காக அல்ல; மாறாக, மனமாற்றத்திற்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் உலக மாற்றத்திற்குமான ஒரு வழிகாட்டல்.
இந்த
விண்மீன் நிற்கும் இடம் இயேசு பிறந்த இடம். வீடுகளில் விண்மீனை அலங்கரிக்கும் நாம், இயேசு இங்கே பிறந்திருக்கிறார் என்பதையே பிறருக்கு அறிவிக்கிறோம். நம் இல்லத்தில் பாலன் பிறந்திருக்கிறார் என்பதை அறிவிக்கும் நாம், நம் உள்ளத்திலும் அவர் பிறந்திருக்கிறார் என்பதை உரக்கச் சொல்ல வேண்டும். அதற்கு அந்த விண்மீன் நம் தலையின்மீது வந்து நிற்க வேண்டும். நம் உள்ளத்திலும் அவர் பிறக்க வேண்டும். ஒளியால் நாம் நிறைந்திட வேண்டும். தாய்மடி
கண்ட இந்த உலகின் ஒளி உங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் இறையருளால் ஒளிர்விக்க வாழ்த்துகிறேன்.
மீண்டும்
உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
மதம் - மனித குலத்தைப் பண்படுத்திய நாகரிகத்தின் அடையாளம் எனப் பெருமைகொள்வது ஒருபுறம்; அதுவே உலகமெங்கும் அமைதியற்ற சூழலை உருவாக்கிய காரணி என்பது மற்றொருபுறம். மதம் மனிதனைப் பண்படுத்தி, இதயத்தை ஈரமாக்கும் என்பதைக் கடந்து, அது இரத்தத்தில் கலந்து இன்று வகுப்புவாதத்தை வளர்க்கிறது.
உலகப்
போர்களில் சிந்தப்பட்ட மனித இரத்தத்தைவிட மதச் சண்டைகளில் சிந்திய இரத்தமே அதிகம் என்பார்கள். அதற்கு நம் இந்தியாவே சான்று. மத அடிப்படையில் நாட்டுப்
பிரிவினையில் நாம் இழந்தது ஐந்து இலட்சம் உயிர்கள். ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்து, இஸ்லாமியர்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்து உயிரைக் கையில் பிடித்தபடி அகதிகளாக இடம்பெயர்ந்த சோகநிகழ்வை இன்றைய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் கசப்பான படிப்பினைகள் தந்த பாடம்தான் இந்தியாவை மதச்சார்பற்ற அரசு நடக்கும் மண்ணாக மாற்றியது. மதச்சார்பின்மையும் சனநாயகமும் இந்தியா என்ற தேசிய நாணயத்தின் இரண்டு பக்கங்களாக அமைந்திருப்பதுதான் நாம் பெருமிதம் கொள்ளவேண்டிய அரசியல் சாதனை!
அந்த
அடிப்படையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றிருக்கும் ‘மதச்சார்பின்மை’ (Secularism), ‘சமநிலைச் சமுதாயம்’
(Socialism) ஆகிய
வார்த்தைகளை நீக்க உத்தரவிடுமாறு பா.ச.க.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியசுவாமி, சமூகச் செயல்பாட்டாளர் பல்ராம் சிங், வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய ஆகியோரால் தொடரப்பட்ட
மனுக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி பி.வி. சஞ்சய்
குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து அண்மையில் தீர்ப்பளித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.
சுதந்திரக்
காற்றில் சுவாசம் காண குடியானவனின் கடைசி நம்பிக்கை நீதித்துறையே! அவ்வப்போது தீர்ப்புகளில் இந்நம்பிக்கை சிதைவது போன்று தோன்றினாலும், குறிப்பிடத்தக்க சில வழக்குகளில் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிபட எண்பித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அரசமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை நாடெங்கும் சிறப்பிக்கும் இத்தருணத்தில் இந்தத் தீர்ப்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பாகவே கவனிக்கப்படுகிறது.
அயோத்தியின்
பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து மேலும் பல இஸ்லாமியர்களின் மசூதிகள்மீது ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும், பா.ச.க.
அரசும் விரும்பத்தகாத நிகழ்வுகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமைகிறது.
மதச்சார்பின்மை
- என்பது வெவ்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட
குடிமக்கள் யாவரையும் பாரபட்சமின்றிச் சமமாக நடத்துவதாகும். அந்த வகையில், இது விடுதலை இந்தியாவின் தனி முதல் கடமையைப் பிரதிபலிக்கிறது. ஆயினும், கடந்த பத்து ஆண்டுகளாகப் பா.ச.க.
ஆட்சியில் இது தொடர்பான சர்ச்சைகள் அவ்வப்போது எழுவது தொடர் கதையாகிக் கொண்டே இருக்கிறது.
அயோத்தியின்
இராமர் கோவில் பிரச்சினையைப் போலவே, உத்தரப் பிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடம் சர்ச்சைக்குரியதாகவும் அங்குப் பாரம்பரியமிக்க ஹரிஹர கோவில் பிரதானமாக இருந்ததாகவும் 1529 - இல் முகலாயப் பேரரசர் பாபர் கோவிலைப் பகுதியாக இடித்து மசூதியைக் கட்டியதாகவும் ஒரு ‘வரலாறு’ கட்டமைக்கப்பட்டு தேசமெங்கும் பரப்பப்படுகிறது.
‘வரலாறு’ என்பது ஆவணப்படுத்தப்பட்ட உண்மைத்தரவுகளின் தொகுப்பு. ஆனால், பா.ச.க. தரவுபடுத்தும்
தொகுப்பில் உண்மைகளுக்கு ஒருபோதும் இடமிருந்தது இல்லை. அனைத்துமே உறுதித்தன்மையற்ற, கற்பனை கலந்த செய்திகளையே உலாவ விட்டுக் கொண்டிருக்கிறது. ‘கூறப்படுவதாகவும்... சொல்லப்படுவதாகவும்... நம்பப்படுவதாகவும்... கணிக்கப்படுவதாகவும்...’ என அனைத்துமே ‘தாகவும்...’
என்ற உறுதியற்றத் தன்மையைக் கடந்த ஒரு நூற்றாண்டாக அது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.
இத்தகைய
சூழலில், ஞானபாதி மசூதி - காசி விஸ்வநாதர் உள்பட பல்வேறு வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான பல வழக்குகளில் இந்துகள்
தரப்பில் வாதாடிய உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், சங்கப்பரிவாரங்கள் சமர்ப்பித்த ‘ஆவணங்களின்’ அடிப்படையில்
மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டிருப்பதும், அது தொடர்பாக எழுந்த வன்முறைச் சம்பவங்களும் துப்பாக்கிச் சூடுவரை சென்றிருப்பதும் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. யோகி ஆதித்யநாத் ஆட்டுவிக்கும் காவல்துறையின் செயல்பாடுகளும், அதன் பின்விளைவாக நிகழ்ந்த உயிர்ப்பலிகளும் மிகுந்த வேதனை அளிக்கின்றன.
நாட்டில்
உள்ள ஒவ்வொரு மசூதியிலும் ஆய்வு மேற்கொள்ள முயலும் பா.ச.க.,
ஆர்.எஸ்.எஸ்.-சின் செயல்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. இவ்வாறு, ஒவ்வொரு மசூதியிலும் ஆய்வுகள் மேற்கொள்ளத் தொடங்கினால் அதன் முடிவுதான் என்ன? பல சமணக் கோவில்கள்,
புத்த விகாரைகள் இந்து கோவில்களாக மாற்றப்பட்ட செய்திகளும் இங்கு ஏராளம். அவற்றையும் தோண்டிப் பார்க்க அந்தந்த மதத்தினர் களத்தில் இறங்கினால் இந்துத்துவ
வாதிகளின் பதில் என்னவாக இருக்கும்? தொடரும் இந்த ‘பெரும்பான்மைவாதிகளின்’ அட்டூழியங்கள்
சிறுபான்மையினரின் மனங்களில் பாதுகாப்பற்ற உணர்வையே பரிணமிக்கச் செய்கிறது.
“நாட்டின் மத வன்முறையைத் தூண்டும்
செயல்களை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும்; இஸ்லாமியர்களைச் சமமாக நடத்த வேண்டும்”
எனத் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃப்ரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
“மக்களைச் சாதி அடிப்படையிலும் மத அடிப்படையிலும் பிளவுபடுத்தும்
அனைத்து முயற்சிகளையும் பிரதமர் மேற்கொண்டு வருகிறார்\" என்று இந்தத் தேசத்தின் முதன்மை அமைச்சரை நோக்கி விரலை நீட்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே, “எல்லாச் சூழலிலும் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்”
என மதம் கடந்து மனிதநேயத்துடன் வாழ மக்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
“இராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, நாட்டில் உள்ள ஒவ்வொரு மசூதியிலும் அங்கு ஏற்கெனவே கோவில் இருந்ததாகக் கூறி ஆய்வுகள் நடத்த பா.ச.க.
முயற்சிக்கிறது. ஆனால், பா.ச.க.-வினர் இரட்டை வேடம் அணிந்து ஒற்றுமையைப் பாதுகாப்பதுபோல் நடித்து வருகின்றனர்\" என்று கார்கே மேலும் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இச்சூழலில்,
சாம்பல் மாவட்ட நீதிமன்றம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்வதற்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். மேலும், அங்கு நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் அரோரா தலைமையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.
அதிகாரி அமித் மோகன் பிரசாத், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்.
அதிகாரி அரவிந்த் குமார் ஜெயின் ஆகிய மூன்று நபர்கள் கொண்ட விசாரணை ஆணையத்தை அறிவித்திருக்கிறார் உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல்.
அனைத்துப்
பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ‘மசூதி-மந்திர்’ மட்டுமே இந்தத் தேசத்தின் தலையாயப் பிரச்சினை என மக்களை மூளைச்சலவை
செய்யும் பா.ச.க.வின் அரசியல் அநாகரிகத்தை நாம் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. இது மேலும் தொடரும் பட்சத்தில், நாம் இதுகாறும் கட்டிக் காத்து வந்த நாட்டின் பன்முகத் தன்மைக்கும் மதச்சார்பின்மைக்கும் பேராபத்து என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.
இன்று
‘மசூதி-மந்திர்’ எனத் தொடங்கும் இப்பிரச்சினை, நாளை ‘தேவாலயம்-மடாலயம்’ எனக் கட்டமைக்கப்பட்டு
நாமும் உள்ளிழுக்கப்படுவோம். எனவே, தற்போதைய நிகழ்வுகளை ‘இது முஸ்லிம்களுக்கானது’ என்று
நாம் வாளாவிருக்க முடியாது. ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கும் பேரச்சத்தையும் கலக்கத்தையும் உண்டு பண்ணக் காத்திருக்கும் பரிவாரங்களின் ஒரு செயல் திட்டமாகவே இதை நாம் எண்ண வேண்டும். மீறியும் நாம் இதை வேடிக்கை பார்த்தால்...? ‘இன்று உனக்கு; நாளை எனக்கு’ என்ற கதைதான்.
இன்று
இந்திய மக்கள்தொகையில் 14.2% இஸ்லாமியர்களும், 2.38% கிறித்தவர்களும், 1.3% சீக்கியர்களும்
இருக்கின்றனர் என்கிறது 2011-ஆம் ஆண்டின் புள்ளி விவரம். இப்படியிருக்க வெறும் 20 விழுக்காட்டினராக, அதாவது ஐந்தில் ஒரு பங்கினராக இருக்கும் மதச்சிறுபான்மையினரைத்தான் பெரும்பான்மையினரின் பகையாகக் காட்டுகின்றன பரிவாரங்கள்.
பல்வேறு
வண்ணங்களும் வாசங்களும் நிறைந்த அழகிய ஒரு நந்தவனம் நம் இந்தியச் சமுதாயம். இதில் வகுப்புவாத களைகள் மண்டிவிடாமல் பாதுகாப்பதும் பராமரிப்பதும் பன்மையில் ஒருமை காணுவதும் நம் முதல் கடமை.
‘மதச் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும்’
என்னும் அரசமைப்புச் சட்டம் பா.ச.க.வின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.
‘ஆலய மணி ஓசையும்
மசூதியின்
அழைப்பொலியும்
காற்றில்
கரைந்து
சங்கமிக்கும்
அர்த்தம்
இவர்களுக்கு
எப்போது விளங்கும்?’
என்னும்
அப்துல் ரகுமானின் கவிதை வரிகள் இங்கு நினைவுக்கு வருகின்றன. இந்தப் பிரிவினைவாதிகளுக்கு இக்கவிதையின் அர்த்தம் நன்கு விளங்கும். ஆனால், அவர்களோ கேளாக் காதினர்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
தத்துவப் பேராசிரியராய் பரிணமித்து, திரு மறைப் போதகராய் பயணித்து, இன்று திரு அவையின் மேய்ப்பனாய் உயர்ந்து நிற்கிறார் மேதகு ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள்.
இவரின்
குருத்துவப் பணி வாழ்வின் ஏற்றங்களைக் காணும்போது இறவாக் காவியம் படைத்த கண்ணதாசனின்...
‘தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே !
சத்திய
வேதம் நின்று நிலைத்தது
தரணி மீதினிலே!
எத்தனை
உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை
நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!’
என்னும்
வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
தத்துவ
ஞானத்தில் தனிப்பெரும் புலமை கொண்டு, தன்னிலை அறிவதில் புத்தொளி கண்டு, தர்க்க விவாதத்தில் தனித்துவம் படைத்து, கற்ற கல்வியைக் கடையனுக்கும் புகுத்தி, மனித மாண்பை மாண்புறச் செய்ய, ‘மாற்றமே உன்னில் மானுட ஏற்றம்’ என்னும் தாரக மந்திரத்தோடு சென்னை - பூவிருந்தவல்லி திரு இருதயக் குருமடத்தில் உதவி இல்லத்தந்தையாய், ஆசானாய், நண்பனாய், வழிகாட்டியாய், ஆன்ம குருவாய் பயணித்து, மாணவர் உள்ளத்தில் எழும் அறியாமை இருளகற்றி சிந்தனைச் சுடர் ஏற்றியவர் புதிய ஆயர் அம்புரோஸ் அவர்கள்.
தத்துவ
நடைபயின்ற இவ்வித்தகர், தன்னிலே தனித்துவம் கொண்டதனால் தனது பணி வாழ்வில் பல ஏற்றங்கள் கண்டார்.
மறைமாவட்ட முதன்மைக் குருவாக, பேராலயப் பங்குப்பணியாளராக, கல்வி நிறுவனங்களின் இயக்குநராகப் பயணித்த இவரை, இந்தியத் திரு அவை தனக்கெனச் சொந்தம் கொண்டாடிக் கொண்டது. இந்தத் தத்துவப் போதகரைத் திரு அவையின் திருத்தூது மறைப் போதகராக வாரி அணைத்துக்கொண்டது அகில உலகத் திரு அவை. இத்தகைய அருள் நிறைந்த பயணத்தில், இவர் கொண்ட பன்முகத்தன்மைக்கும் பரந்துபட்ட பணித்தள அனுபவத்திற்கும் நிறைந்த ஞானத்திற்கும் கிடைத்த அங்கீகாரமே இந்த ஆயர் பணி.
திருத்தந்தையின்
இந்திய மறைத்தூதுப் பணியகத்தின் தேசிய இயக்குநராகவும் இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் மறைபரப்புப் பணிக்குழுச் செயலராகவும் இவர் ஆற்றி வரும் பணிகளை அங்கீகரிக்கும் வண்ணம் அண்மையில் பிராந்திய பொறுப்பாளர்கள் கூடிய அமர்வில் திருத்தந்தையின் திருத்தூதுப் பணிக்கழகத்தின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தியத் திரு அவையின் நம் மறைபரப்புப் பணிக்குக் கிடைத்த மணிமகுடமே!
எளிய
தோற்றமும், இனிய புன்முறுவலும், கனிந்த உள்ளமும் கொண்ட புதிய ஆயர் அவர்கள், தன் ஆயர் பணிவாழ்வின் இலச்சினையாக ‘இரக்கமும் எதிர்நோக்கும்’ என்னும்
விருதுவாக்கைக் கொண்டிருப்பது,
அவர் மேற்கொண்டிருந்த பணிகளையும், இனி ஆற்றவிருக்கும் பணித்தள முன்னெடுப்புகளையும் கூர்மைப்படுத்துகிறது.
‘அன்பாய்’ இருக்கும் கடவுளின் திருப்பெயருக்கான பட்டியலில், கடவுளின் திருப்பெயர் ‘இரக்கம்’
- அதாவது, “The Name of God is Mercy” என்கிறார் கர்தினால்
வால்டர் கஸ்பார். “கிறிஸ்துவின் அன்பு, தந்தையாம் கடவுளின் இரக்கத்தை வெளிப்படுத்துகிறது; அவரே இரக்கமிகு தந்தையின் திருமுகம்”
என்றும் (இயேசுவின்
திரு இருதயப் பெருவிழா மறையுரை, 2014), “அந்த இயேசுவின் திறந்த இதயம் நமக்குமுன் சென்று, நிபந்தனையின்றி அவருடைய அன்பையும் நட்பையும் நமக்கு வழங்கவே நமக்காகக் காத்திருக்கிறது” என்றும்
(அவர் நம்மை அன்பு செய்தார்: Dilexit Nos, no.1)
குறிப்பிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்தக் கனிந்த, இரக்கம் நிறைந்த இயேசுவின் முகமாய், முகவரியாய்த் தன்னை அடையாளப்படுத்த முன்வருகிறார் புதிய ஆயர்.
‘எதிர்நோக்கு’ என்பது
தனிமனித மற்றும் சமூக மாற்றத்தையும், புதிய நாளுக்கான நிறைவாழ்வின் விடியலையும், ஆழ்ந்த பொருள் கொண்ட ஆன்மிக வாழ்வையும் கட்டமைக்கும் அடித்தளம். ஆகவேதான் தூய பவுல், “எதிர்நோக்கு கொண்டோர் மிகுந்த துணிச்சலோடு செயல்படுவர்; அங்கே தூய ஆவி சார்ந்த திருப்பணிகள் மாட்சி பொருந்தியதாயிருக்கும்...” என்று குறிப்பிடுகிறார் (2கொரி 3:8-12).
அவ்வாறே
தனது வேலூர் மறைப்பணித்தளத்தில் புதிய பரிணாமத்தை, மக்களின் ஏற்றமிகு வாழ்வை, புதிய விடியலை, மறுமலர்ச்சி காணும் திரு அவையை உருவாக்கிட எதிர்நோக்கை
இலக்காகத் தீட்டியிருக்கிறார் நம் புதிய ஆயர். இரக்கம், எதிர்நோக்கு எனும் இவ்விரு மதிப்பீடுகளைத் தன் பணித்தள விருதுவாக்காகக் கொண்டிருக்கும் ஆயரின் பணி சிறந்தோங்க, செழித்தோங்க வாழ்த்துவோம்!
இத்தகையோர் இருப்பதனால்தான் நானிலம் நலம் பெற்றிருக்கிறது என்று எண்ணும்போது...
‘கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான்
உண்டிவ் வுலகு’
(குறள் 571)
எனும்
ஐயன் வள்ளுவரின் வார்த்தையே நம் எண்ணத்தில் நிழலாடுகிறது. அதாவது, இந்த உலகம் ‘அன்பு, இரக்கம் இணைந்த கண்ணோட்டம்’ எனப்படுகிற
பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது என்கிறார். ஆகவே, அன்பினாலும்
இரக்கத்தாலும் தூண்டப்பட்ட புதிய ஆயரின் வாழ்வும், எதிர்நோக்கினால் கட்டமைக்கப்பட்ட புது விடியலுக்கான பணிகளும், மூவொரு இறைவனின் வல்லமையால், அன்னையின் பரிந்துரையால் நல்லாயன் வழியில் சிறப்புற அமைந்திட வாழ்த்தி செபிப்போம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்