ஒன்றிய பா.ச.க. அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் வெறிச்சோடிக் கிடந்த இந்தியக் குடிகளின் வீதிகள், இன்று வியப்பில் ஆழ்ந்து கிடக்கின்றன.
கும்பி
(வயிறு) எரிந்த போதும் குடல் கருகிய போதும், கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு, இன்று சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பேசுகிறது. இந்தச் சீர்திருத்தம், “நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு வேகம் ஊட்டும்; தொழில் புரிவதை எளிதாக்கி முதலீடுகளை மேலும் ஈர்க்கும்”
என்று கணித்திருக்கிறார் ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடி. இந்த உண்மையைக் கண்டறிய அவருக்கு 12 ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது.
செல்லும்
இடமெங்கும் தமிழ் இலக்கிய மேற்கோள்களைச் சுட்டிக்காட்டும் மோடி ஜி, 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் நாள் தமிழ்நாட்டிற்குத் தேர்தல் பரப்புரைக்கு வந்தபோதும் மறக்காமல் ஒளவையாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டினார். ஆனால், பொருள் உணர்ந்து கூறினாரா? என்பதுதான் பெரும் கேள்விக்குறி.
“வரப்புயர நீர் உயரும்;
நீர்
உயர நெல் உயரும்;
நெல்
உயர குடி உயரும்;
குடி
உயர கோல் உயரும்;
கோல்
உயர கோன் உயர்வான்!”
என்னும்
வரிகளை மேடை முழக்கமாகக் கூறி வந்தாரே தவிர, மக்கள் தங்கள் வாழ்வில் காண வாய்ப்புத் தரவே இல்லை.
நாட்டில்
ஒருசில மாநில வரிகள் தவிர, பிற 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து 2017-ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் இந்த ஜி.எஸ்.டி-யை அறிமுகம் செய்தது
பா.ச.க. அரசு.
கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டின் சிறு-குறு தொழில்கள் மிகவும் நசுக்கப்பட்டு, மக்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு, அவர்களின் அன்றாட வாழ்வியல் தேவையின் பணமதிப்பு உயர்ந்து, குடும்பங்களின் ஆண்டு வருமானம் சிதைந்து, ஏழ்மையும் வறுமையும் முற்றாக அகலாத மண்ணாக மாறிப்போன இந்த நாட்டில், இன்று ஜி.எஸ்.டி.
சீர்திருத்தம் பற்றிப் பேசுகிறார். ஒட்டகத்தை விட்டுவிட்டுக் கொசுவை வடிகட்டிய இவர், பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கு ‘மாட்டின் தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்த கதையாகிப்’
போனார்.
பண
மதிப்பிழப்பு ஒரு பக்கம் வாழ்வைப் பந்தாடுகின்ற போது, ஒன்றிய பா.ச.க.
அரசு, நாட்டில் 5%, 12%, 18%, 28% என
நான்கு விகித ஜி.எஸ்.டி.
முறையைக் கொண்டு வந்தது. வறுமைக்கோடு என்பது வறுமைக் காடாகிப் போனது. முள்செடியில் விழுந்த விதையாகத்தான் முண்டி முளைத்த யாவரும் நெருக்கப்பட்டார்கள்; நசுக்கப்பட்டார்கள். ஏழைகளின் வாழ்க்கை தற்கொலைகளில் தடம்புரண்டது. தலைமையின் பார்வை தவத்தில் ஒன்றித்திருந்தது. அப்போதெல்லாம் வராத ஞானம், எட்டு ஆண்டுகள் கழித்து இன்று அவர்களுக்கு எட்டியிருக்கிறது.
நான்கு
நிலை ஜி.எஸ்.டி.-யில் 12%, 18% ஆகிய நிலைகளை
நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இருநிலை
விகிதமுறையைச் செயல்படுத்தவும், புகையிலை போன்ற தீங்கு விளைவிக்கும் பொருள்கள் மற்றும் ஆடம்பரப் பொருள்கள் மீது மட்டும் 40% வரி
விதிக்கும் புதிய சீர்திருத்தத்தை இன்று வெளியிட்டிருக்கிறது.
ஏறக்குறைய
375 பொருள்கள் மீதான வரிகுறைப்பால் ஏழைகள், நடுத்தர வகுப்பினர், இளைஞர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர் யாவரும் பெரிதும் பலனடைவர் என்றும், மருந்துகள், மருத்துவக் காப்பீடுகள், சமையல் உணவுப்பொருள்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் என அடிப்படைத் தேவைகள்
மீது வரி குறைத்திருப்பதால் இத்தீபாவளி விழா ‘சேமிப்புத் திருவிழாவாக’ அமைந்திருக்கிறது
என்றும் குறிப்பிட்டிருக்கிறார் மோடி.
ஆயினும்,
எட்டு ஆண்டுகள் கழித்து இன்று விழித்துக்கொண்ட ஒன்றிய அரசு, ஜி.எஸ்.டி.
குறைப்பின் மூலம் ‘மக்கள் தங்கள் கனவுகளை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும்’
என்று கொக்கரிக்கிறது. கனவுகள் கருகிச் சிதைந்துபோன பிறகு இன்று ‘கனவுகள் பூர்த்தியாகும்’ என்று
கற்பனை கொள்கிறது.
நவராத்திரியின்
தொடக்கத்தில் “தற்சார்பு தேசம்’ என்னும் இலக்கை எட்ட, மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுக்க அடியெடுத்து வைக்கிறது நம் நாடு” என மோடி கூறுகிறார்.
“நவராத்திரி தொடக்க நாளில் ஜி.எஸ்.டி.
சலுகை அமலாகிறது’
என மகிழ்ச்சியைப் பகிர்ந்த பிரதமர் அவர்களே! எட்டு ஆண்டுகளாக ஜி.எஸ்.டி.
கொடுமையால் மக்களின் தூக்கத்தைக் கெடுத்து, அவர்கள் வாழ்வைச் சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” என்று கேட்கும் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனின் கேள்விக்குப் பதில் இல்லை.
மேலும்,
நடப்பாண்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூபாய் 12 இலட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது ஜி.எஸ்.டி.
குறைப்பையும் கருத்தில்கொண்டால், நடுத்தர வகுப்பினருக்கு இது இரட்டை மகிழ்வு தரக்கூடியதாகும்; இவ்விரு நடவடிக்கைகளால் இந்திய மக்களின் பணம் ரூ.2.5 இலட்சம் கோடி சேமிக்கப்படும் என்று தெரிவித்திருக்கும் ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடியிடம், “இதைத்தானே தொடக்கத்திலிருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்; எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை
எப்போதோ சேமித்திருக்குமே!” என்று விமர்சித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்.
இந்த
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை இந்தியக் குடிமகனாக நாம் வரவேற்றாலும், இது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும்
காலமும் நேரமும் கருத்தாய்க் கணிக்கப்பட வேண்டியிருக்கிறது. 2017-இல் ஜி.எஸ்.டி.
நடைமுறைப்படுத்தப்பட்டதன்
மூலம் புதிய வரலாறு தொடங்கப்பட்டது; ‘ஒரே நாடு-ஒரே வரி’ கனவு நனவானது என்று பெருமைப்படும் ஒன்றிய அரசு, பா.ச.க.
ஆட்சி செய்யும் மாநிலங்களுக்குத் தாராளமாக ஜி.எஸ்.டி.
நிதி வழங்கியதும், மற்ற மாநிலங்களை வஞ்சித்ததும் உலகறிந்த உண்மை. மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு எனப் பல கொள்கைகளுக்கு ஒத்துழைப்புத்
தராத தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுத்ததும் யாவரும் அறிந்த உண்மையே!
பா.ச.க. ஆளும்
மாநிலங்களை வளமாக்கிய பிறகு, இன்று கடை திறந்திருக்கிறது பா.ச.க.
அரசு. மடை திறந்தது போன்ற மாயை கொண்டு, ஜி.எஸ்.டி.
அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவின் வணிக நடைமுறைகள் உலகளாவிய வணிக நடைமுறைக்கு ஏற்றதாக மாறியிருப்பதை மறந்து விடக்கூடாது என மார்தட்டிக் கொண்டாலும்,
வணிகர்களின் அன்றாட வர்த்தக நடைமுறைகளில் ஆயிரம் முரண்பாடுகள் இருந்ததையும் மறுக்க இயலாது. ஜி.எஸ்.டி.
என்ற பெயரில் ஏழைக் குடியானவனின் சுருக்குப்பையில் கை வைத்ததுதான் இந்தப்
பா.ச.க. ஆட்சியின்
வெற்றியின் இரகசியம்.
‘குடிமக்களே கடவுள்’ என்னும் தாரக மந்திரமே ஜி.எஸ்.டி.
குறைப்புக்கான அடிப்படைக் காரணம் என்னும் ஒன்றிய அரசின் கூற்று, இன்று அனைவருடைய நகைப்புக்கும் உள்ளாகிறது. கடவுள்கள் (மக்கள்) காணாமல் போன பின்புதான், இங்கு ஒரு பக்தன் கடவுள்களைத் தேடுகிறான். பல் துலக்கும் பற்பசை முதல், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு ஆக்சிஜன் சிலிண்டர் வரை ஜி.எஸ்.டி.
விதித்தது இந்த அரசு என்பதை மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள். பெண்களின் வருமானம், அவர்களது தன்னிறைவு பேசும் இந்த அரசுதான், அவர்களுடைய அன்றாடத் தேவைக்கான பொருள்கள் மீதும் ஜி.எஸ்.டி.
விதித்ததையும் எளிதில் எவரும் மறக்கமாட்டார்கள்.
‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய்...’ எனப் பெருமூச்சுவிட்டுக் காத்திருந்த சூழலில், இந்தச் சீர்திருத்தத்தின் காலச்சூழலைக் கருத்தில் கொள்ள வேண்டும். எதிர்வரும் பீகார், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளத் தேர்தல்களை நாம் மறந்து விடக்கூடாது.
அன்று,
கி.மு., கி.பி. என்று
இரண்டாகப் பிளவுபட்டது உலக வரலாறு; பா.ச.க.-வின் ஆட்சி வரலாறோ தே.மு., தே.பி. என்றே பிரிகிறது: கடந்த 12 ஆண்டுகால வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பாருங்கள். பா.ச.க
அரசின், அரசியல் தலைவர்களின், ஆட்சிப் பொறுப்பாளர்களின் நடை, உடை, பாவனைகள் தேர்தலுக்கு முன், தேர்தலுக்குப் பின் என்றே வரையறுக்கப்படுகிறது.
எது
எப்படியோ, ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்!
விழித்துக்
கொண்டால் விடியல் நமக்கு;
விவேகம்
கொண்டால் உலகே நமக்கு!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
வழியையும் - வலியையும் ஒருசேர உணர்த்தும் ஓர் ஒப்பற்ற ஆன்மா, சிறுமலர் (little flower) - தூய குழந்தையை இயேசுவின் தெரேசா. ஆயிரம் வழிகள் கண்முன் தோன்றலாம்; அவற்றுள் தேர்ந்து தெளிந்து இறைவழியை அறிவதும், அவ் வழியில் பொதிந்திருக்கும் வலிகளை உணர்வதும், தெய்வீக அன்பின் வெளிப்பாடு என்பதை நிறைவாக உணர்ந்தவர், வாழ்ந்தவர், நமக்கு உணர்த்துபவர் அவர்.
அன்பு
அழகானது; இன்னும் சற்று ஆழமாகச் சிந்திக்கின்றபோது அன்பு மட்டும்தான் பேரழகானது! “கடவுள் அன்பாய் இருக்கிறார்” (1யோவா
4:8); அந்த அன்பு அழகாய் இருக்கிறது; இறை ஆதவனிடமிருந்து ஒளிபெற்றுச் சுடர்விடும் விண்மீன்கள் யாவும் அழகு கொண்டவையே. மானிடர் யாம் அனைவரும் அவர் சாயலில் படைக்கப்பட்டவர் அன்றோ! (தொநூ 1:26-27). ஆகவே, அன்பு உலகில் எங்கும் விரவிக்கிடக்கிறது; உலகம் அழகில் நிறைந்திருக்கிறது.
இந்த
அன்பு, நமது வாழ்வில் இரண்டறக் கலந் திருக்கிறது என்பதை உணர்ந்த ஆதித் தமிழ்க்குடி, தமிழர் வாழ்வியலை ‘அகம்’,
‘புறம்’ என்று
இரு தளங்களாக வரையறைத்திருக்கிறது. இந்த இரண்டிற்குமே அன்பே அடித்தளம் என எடுத்துரைக்கிறது நம் இலக்கியங்கள்.
அன்பு சமூகத்தில் ஆழப்படும்போதும், எங்கும் ஆளப்படும்போதும் உறவுகள் ஊன்றப்படுகின்றன. உறவுச் சமூகம் தழைக்க, அந்த அன்பு ஒவ்வொரு நாளும் பொலிவு பெறவேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரிய வேண்டாமா?
அகத்தின்
அழகை முகத்தில் காணும் ஒரே கணம், ஒரு தாய் தன் குழந்தையோடு கொஞ்சி விளையாடும் மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறது. குழந்தையின் முகமும் தாயின் முகமும் அன்பின் உச்சத்தில் அழகு கொண்டிருக்கும்; அங்கே உண்மையான அன்பின் வடிவங்கள் பிறப்பெடுக்கும்.
அத்தகைய
அன்பை இறையுறவில் கண்டவர் சிறுமலர். இயேசுவின் தூய முகத்தைத் தன் தியான வழிமுறையாய்க் கொண்டு தெய்வீக அன்பைத் தன்வயப்படுத்தியவர்; இறையன்பில் இரண்டறக் கலந்தவர்.
அவருடைய
‘இயேசுவின் திருமுகத் தியானம்’ ஆழமான பொருள் கொண்டது; நிறைவான அருள் கொண்டது. “ஓ இயேசுவே, உமது
தூய திருமுகத்தை வணங்குகிறேன்; அன்று இறைமையின் இனிமையும் அழகும் கொண்ட உம் திருமுகம் இன்று துயரங்களின் அடையாளமாய் கோரமுகமாய்க் காட்சி தருகிறதே! உருக்குலைந்த உமது இந்த முகத்தில் அளவிட முடியாத உம் அன்பைக் காண்கிறேன். உம்மை அன்பு செய்யத் தீர்மானித்ததுடன், பலரும் உம் திருமுகத்தை அன்பு செய்ய வழிகாட்ட விழைகிறேன். உம் கண்களிலிருந்து வடியும் எண்ணிலாக் கண்ணீர்த்துளிகள் விலைமதிப்பில்லாப் பவளமணிகளாகத் தெரிகின்றன. நான் அவற்றை அள்ளிச் சேர்க்க விரும்புகிறேன். பாவத்தில் வீழ்ந்து கிடக்கும் ஆன்மாக்களை விலை கொடுத்து மீட்பதற்காக, அதைப் பயன்படுத்த விழைகிறேன். என் இதயத்தின் ஆழத்தில் உம் திருமுகத்தைப் பொறித்து வைக்க ஆசைப்படுகிறேன். உமது தெய்வீகத் திருமுகம் என்னை அன்பில் பற்றியெரியச் செய்வதாக. அதுவே வான்வீட்டில் உம்முடைய திருமுகத்தைத் தொடர்ந்து நான் தியானிக்க என்னைத் தகுதி உள்ளவளாக்குவதாக!” என்று செபிக்கிறார். இங்கே ‘அன்புக்கு உண்டோ அடைக்கும்தாழ்’ என்பது
வெள்ளிடைமலையாகிறது.
அன்பைத்
(கடவுளைத்) தன்வயப்படுத்தும் அவரின் தேடல், அவருடைய 15 வயதிலேயே தொடங்குகிறது. பிரான்ஸ் நாட்டின் அலன்சோன் என்ற ஊரில் தொடங்கிய அவருடைய தேடல் பயணம், 16-வது வயதில் கார்மேல் மடம் கண்டு, அருள்வழி கண்டு, இறை மொழி கொண்டு, இயேசுவின் திருமுகம் கண்டு பூரித்துநின்றது. குழந்தை உள்ளம், ஆழ்ந்த தாழ்ச்சி, பலிப்பொருளாகத் தன்னைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கும் மனநிலை, இறையன்பு, இறைநம்பிக்கை... என வளர்நிலை கண்ட
அவருடைய துறவு வாழ்வு, இறை வழியில் சிலுவையின் கொடிய வலி கண்டாலும், மிகுந்த பொறுமையோடும் மகிழ்வோடும் மனவலிமையோடும் அவர் வாழ்ந்து வந்தது துறவு நிலையின் உன்னத அடையாளம்.
கார்மேல்
மடத்தில் சிலுவைகள் நிறைந்த அவருடைய வாழ்வு, ஒரு மறைச்சாட்சியின் வாழ்வுக்கு ஒப்பானதாகவே இருந்தது. “கார்மேல் சபையில் தான் சேர்ந்தது ஆன்மாக்களை மீட்கவும் குருக்களுக்காக மன்றாடுவதற்காகவுமே” என்று
கூறிய அவர், தனது
24-வது வயதில் விண்ணகப் பிறப்படைந்தாலும் அவருடைய ‘ஓர் ஆன்மாவின் சரிதை’
(The story
of a soul) தரும் ‘எளிய வழியானது’
(The little
way) அவரது வாழ்வு கடவுளுக்கு ஏற்ற உன்னதப் பலியாகவும், திரு அவையில் பாவிகளை மனமாற்ற ஆன்மாக்களைச் செதுக்கும் ஒப்பற்ற உளியாகவும் அறியப்படுகிறது. இயேசுவின் எளிய மலராக அறியப்பட்ட அவரோ... ஆண்டவரின் அழகு மலர்த் தோட்டம். ஆகவேதான், “நான் விண்ணகம் சென்று பூமியில் உள்ள யாவர்மீதும் ரோஜா மலர்களை மாரிப் பொழிவேன்”
என்றார்.
கார்மேல்
மடத்தில் நான்கு சுவர்களுக்குள் அடங்கிய அவரது துறவு வாழ்க்கை இன்று மறைப்பணியாளர்களின் பாதுகாவலராகவும், திரு அவையின் மறைவல்லுநர்களில் ஒருவராகவும் திரு அவை அவரை உயர்த்தியிருக்கிறது.
சிறிய
மலராக, சின்ன இராணியாக, இயேசுவின் செல்ல மகளாக விண்ணகத்தில் அவரருகில் அமர்ந்திருக்கும் குழந்தை இயேசுவின் தெரேசா புனித நிலை அடைந்த நூற்றாண்டு விழாவைப் பொருளுள்ள வகையில் கொண்டாட கார்மேல் துறவற சபைகள் ஒன்றிணைந்து வெளிக்கொணரும் இச்சிறப்பிதழ், குழந்தை இயேசுவின் தெரேசா இன்னும் அதிகமாக அறியப்படவும், அவருடைய எளிய வழியைப் பின்பற்றி இயேசுவைப் பலர் அடையவும் பேருதவியாக அமையும் என நம்புகிறேன். இம்முயற்சியில்
எம்மோடு தோள் கொடுத்த அத்துணை நல்லுள்ளங்களுக்கும் சிறப்பாக, யாவரையும் ஒருங்கிணைத்து இச்சிறப்பிதழ் சிறப்பாக வெளிவர பெரும் முயற்சி மேற்கொண்ட அருள்பணி. சேவியர் OCD அவர்களுக்கும்
‘நம் வாழ்வு’ தனது நன்றியை உரித்தாக்குகிறது.
அனைவருக்கும்
நூற்றாண்டு
விழா
நல்வாழ்த்துகள்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
மரியா - பேரருள் களஞ்சியம்! அவர் அருள் மிகப்பெற்றவர் (லூக் 1:28); அருளின் ஊற்று; வளங்களின் வாய்க்கால். அலைகள் மோதும் உலகின், ஆழிப்பெருங் கடலில் ஆதவனைச் சுமந்து வந்த ஓவியமான ஓடம் அவர்!
யோசேப்பைப்
பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட தேன்தமிழ்க் காவியம் தேம்பாவணியில், தன் துணையை அறிந்த போது யோசேப்பு...
‘பாருலகு அளித்துக் காக்கப்
பரமனை
உயிர்க்கும் தாயே!
பேருலகு
உவப்பக் கன்னி
பெயர்கிலள்
பெறுவாள் ஆகில்,
ஈருலகு
இறைஞ்சும் அன்னாள்
என்
மணத் துணைவி ஆமோ!’ (7:72)
என்று
மகிழ்ந்து ஏற்றுக்கொண்டதாய் வீரமாமுனிவர் வடிக்கிறார். முன்பொருநாள் உள்ளம் கலங்கிய கணவரை, இன்று உற்றுநோக்கினால் அவர் மனத்துயர் நீங்கும் என அறிந்த அன்னையின்
உதடுகளில்...
‘உருகிய துணைவனை உருகி நோக்கினள்;
பெருகிய
துயர்செயும் பிணிகள் ஏதையா?
மருகிய
அடிமையா வளைவது எது - என
அருகு
இயைந்து அன்புற அறைந்து இறைஞ்சினாள்!’ (7:83)
என்றே
வீரமாமுனிவர் தீட்டுகிறார். அத்தகைய சிறப்பு மிக்க நம் அன்னை மரியா, நமது வாழ்வின் நம்பிக்கை விளக்காக, இயேசுவை அடையும் இனிய வழியாக நம்முடன் பயணிக்கிறார்.
“இறைவன் கண்களில் விலையேறப்பெற்றவராய்...” (எசா 43:4) விளங்கிய அன்னையைத் தூய்மை, தாய்மை, மேன்மை என்னும் அணிகலன்களால் இறைவன் அழகு செய்தார். அன்னையைத் தனக்கு ஏற்ற இனிய இல்லிடமாய் அமைத்து, மண்ணில் மலர்ந்த மாணிக்கமாய், மாசில்லாக் கன்னிகையாய், மகிமையின் வாசலாய், திரு அவையின் தாயாய், திருத்தூதர்களின் அரசியாய், புதுமைகள் புரியும் புண்ணியக் கரமாய், பரிந்து பேசும் அட்சயப் பாத்திரமாய், அண்டி வந்தோரின் அடைக்கலமாய் இறைவன் நமக்குத் தந்திருக்கிறார்.
அவ்வாறே,
‘உலகம் மூன்றினும் உவமை நீக்கிய
இலயை
மூன்றினும் இழிவு இல் கன்னியாய்,
அலகு
இல் மூன்றினுள் நடுவ மைந்தனை
நிலவு
மூன்றினும் நிறப்ப ஈன்றனள்’
என்கிறது
மற்றோர் இலக்கியப் படைப்பு. அதாவது, இமயம், பூமி, பாதாளம் எனும் மூன்று உலகங்களிலும் ஒப்புமை இல்லாதவர் மரியா என்றும், பாவம், குற்றம், களங்கு எனும் மூன்று களங்கங்களும் இல்லாத தூய கன்னியாய் வாழ்ந்தவர் என்றும், மூன்று பிறப்புகளுக்கும் மேலான இறை மைந்தனை, இயேசுவைத் தன் கருவறையில் தாங்கி, விண்ணவர், தூயவர், மானிடர் எனும் மூன்று நிலைகளுக்கும் ஒளிதரும் நிலவாகப் பிறந்தார் என்றும் பெருமைப்பட எடுத்துரைக்கிறது.
தான்
உற்றுநோக்குபவருக்குக்
குறைதீர்க்கவும், தன்னை உற்றுநோக்குபவருக்கு நிறைவளிக்கவும் அன்னை வீற்றிருக்கும் குறிப்பிடத்தக்க
திருத்தலங்களில் ஒன்று கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னைத் திருத்தலம்!
இந்நாளில்
திருவுடை அணிந்து, திருச்செபமாலை எடுத்து,
அன்னைக்குப் புகழ் மாலை தொடுக்கும் திருத்தலப் பயணிகளாய், அவர் அருள்வரம் பெறும் அன்புப் பிள்ளைகளாய், அவர் பாதம் கூடுவோம்! அவர் புகழைப் பாடுவோம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர் செ. இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
விடுதலை நாடும் வீசும் சனநாயகக் காற்றும் போராட்டங்கள் இன்றிப் பிறப்பதில்லை. உலக வரலாறுகளும் இந்திய விடுதலைப் போராட்ட நிகழ்வுகளும் உணர்த்தும் பேருண்மை இது. தனி மனிதன், சமூகம், நாடு என்னும் முத்தளங்களிலும் யாவருக்கும், அடிப்படை உரிமைகளும் வாழ்வாதாரத் தேவைகளும் கிடைக்கப்பெறுவது பல வேளைகளில் போராட்ட வழிமுறைகளில்தான். இக்கூடும், வீடும், நாடும் விடுதலை வானில் சிறகடிக்க, போராட்டச் சிறகுகள் விரிக்கப்பட வேண்டும் என்பது உண்மையாகிப் போனது.
“ஆபத்துகளை எதிர்கொள்ள விரும்பாதவர்கள் அரிதாகவே வெற்றி பெறுகிறார்கள்” என்றனர்
நம் முன்னோர். எதிர்வரும் தடைகளைத் தகர்த்து மாற்றம் என்னும் இலக்கை முன்வைத்து மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் யாவும் வெற்றிகளையே உறுதி செய்திருக்கின்றன. அதிலும் குறிப்பாக, இளையோர் முன்னெடுக்கும் போராட்டங்கள் வீரியமிக்கதாகி வெற்றிகொண்டதாகவே வரலாறு பதிவு செய்திருக்கிறது. நெப்போலியன் ஹில் என்பவருடைய, “Victory is always possible for the person who refuses to stop
fighting” எனும்
கூற்று சனநாயக மாற்றத்திற்குத் தவிர்க்க முடியாத பல போராட்டங்கள் அவசியம்
என்பதையே வலியுறுத்துகிறது.
அண்மைக்
காலங்களில் நிலவும் நேபாளத்தின் அசாதாரண சூழ்நிலைகளை அறிய, அதன் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.
இந்திய
- கங்கைச் சமவெளியின் வடபகுதியில், இந்திய எல்லையில் உறவு கொண்டுள்ள அண்டை நாடான நேபாளம், இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தளம். ஏறக்குறைய இரண்டு கோடியே 65 இலட்சம் மக்கள் வாழக்கூடிய இந்த நிலப்பரப்பில், இந்துகள் 81%, பௌத்தர்கள் 9%,
இஸ்லாமி யர்கள் 4%, பிராந்தி மக்கள்
3%, கிறித்தவர்கள் 1.5% வாழ்ந்து வருகின்றனர். உலகிலேயே
உயரமான மலைகளைக் கொண்டுள்ள ஒரு நாடு இது; உலகின் உயரமான மலையான எவரெஸ்ட் தீபத்துடனான எல்லையில் காணப்படுகிறது. உலகின் முதல் 10 உயரமான மலைகளில் எட்டு மலைகள் இங்குதான் அமைந்திருக்கின்றன. இமயமலையின் அடிவாரத் தில் இத்தகைய இயற்கை எழில் கொஞ்சும் இந்த நாடு சந்தித்தப் போராட்டங்களும் இயற்கைச் சீற்றங்களும் ஏராளம் ஏராளம்!
14-ஆம்
நூற்றாண்டில் காட்மாண்டு, பதான், பக்தபூர் எனப் பிரிந்து கிடந்த நிலப்பரப்பை, 1768-இல் பிரிதிவி நாராயணன் ஷா என்னும் அரசரால்
வென்றெடுக்கப்பட்டு, நேபாள நாடு நிறுவப்பட்டது. இந்த மன்னனின் படைத் தலைவராக இருந்த ஜங் பகதூர் இராணா, மன்னரின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, 1846 முதல் 1951 வரை ஷா வழி மரபின்
மன்னர்களைக் கைப்பாவையாக வைத்துக்கொண்டு அவரும் அவரது வழி மரபினரும் ஆட்சி செய்து வந்துள்ளனர்.
மீண்டும்
ஷா வழிமரபினர் 1951 முதல் 2008 வரை ஆட்சி செய்த காலத்தில் ஏற்பட்ட பல்வேறு மக்கள் போராட்டங்கள் காரணமாக, 1991-இல் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றி, முதல் சனநாயக தேர்தல் கண்டபோது, அங்கு நேபாள காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது; கிரிஜா பிரசாத் கொய்ராலா பிரதமரானார். மன்னரும் பிரதமரும் கொண்ட “அரசியல் அமைப்புச் சட்ட முடியாட்சியாக” அந்நாடு
விளங்கியது. நன்கு வரையறுக்கப்படாத அதிகாரங்களைத் தம் வசம் வைத்துக் கொண்ட மன்னராட்சி முறையை ஒழிப்பதற்காக நேபாள உள்நாட்டுப் போர்களும் மாவோயிசவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட கலவரங்களும் இம்மண்ணில் ஏராளம்.
2015 செப்டம்பர் 20 அன்று,
நேபாள அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்த பிறகு, இராம் பரன் யாதவ் புதிய அதிபராகப் பொறுப்பேற்றார்; சமயச்சார்பற்ற “சனநாயகக் கூட்டாட்சிக் குடியரசு”
என அந்நாடு அறிவிக்கப்பட்டது.
பல்வேறு
போராட்டங்களைச் சந்தித்த நேபாளம், பொருளாதார வளர்ச்சியின்றி உலகில் மிகவும் ஏழை நாடுகளின் பட்டியலில் இன்று முன் நிற்கிறது. மக்கள்தொகையில் 38 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கின்றனர். வேளாண்மை மற்றும் சுற்றுலாத் துறையையே நம்பியிருக்கும் இந்நாட்டின் பொருளாதாரம் மிகவும் சரிந்து கிடக்கிறது.
ஒவ்வொரு
நாட்டிலும் பொருளாதாரச் சீரழிவிற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுவது ஊழல். நேபாளம் இதில் விதிவிலக்கல்ல. நேபாள கம்யூனிஸ்ட் கட்சி, ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மற்றும் நேபாள காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மேற்கொண்ட கூட்டணி ஆட்சியில், நேபாள பிரதமராக கே.பி. சர்மா
ஓலி பதவி ஏற்றதிலிருந்து அரசின் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்று வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இத்துடன்,
செப்டம்பர் 4 அன்று, 26 சமூக வலைதளச் செயலிகளுக்கு நேபாள அரசு தடை விதித்தது. You tube,
இன்ஸ்டாகிராம், facebook உள்ளிட்ட 26 சமூக வலைதளங்கள் மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுப் பதிவு செய்யப்படாததால் அவற்றைத் தடை செய்வதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் சமூக வலைதளங்களைத் தணிக்கைக்கு உட்படுத்தவே இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதாகப் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் குறிப்பாக, இளையோறும் எண்ணினார். “சமூக ஊடகத்தளங்களைத் தடை செய்யும் நோக்கம் அரசுக்கு இல்லை; அவற்றை முறைப்படுத்துவதே அரசின் நோக்கம்” என அரசு தெரிவித்ததுடன்,
இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் சமூக வலைதளச் செயலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகவும் அரசு அறிவித்தது.
சமூக
வலைதளச் செயலிகளை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் உறுதியளித்தது. அரசுக்கு ஒத்துழைப்பு தந்து இளைஞர்கள் போராட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தது. ஆனால், சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க கோரி ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சீருடையுடன் வீதிகளில்
இறங்கி, போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். குறிப்பாக, தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பெருந்திரளான இளைஞர்கள் தேசியக்கொடியையும் அரசுக்கு எதிரான பதாகைகளையும் கையில் ஏந்தி முழக்கமிட்டது போராட்டத்தின் தீவிரத்தை வெளிக்காட்டியது.
‘நே’ என்றால்
(புனித), ‘பாள்’ என்றால்
(குகை) எனப் பொருள்படும் வகையில் “புனித குகை”யாக விளங்கிய இந்நாடு, இன்று வன்முறை தீவிர மடைந்து, “பெரும் புகை”யால் சூழ்ந்திருக்கிறது. நாடு கலவரப்பூமியாய்ப் போர்க்களமாய்க் காட்சியளிக்கிறது.
நேபாள
அரசுத்துறைச் செயலகங்கள், கட்சி அலுவலகங்கள், பொதுச் சொத்துகள், தனியார் வாகனங்கள் என யாவும் தீயிடப்பட்டதும்,
போராட்டக்காரர்களால் சேதப்படுத்தப்பட்டதும், இளையோரின் கோபத்தையும் ஊழலுக்கு எதிரான மக்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது.
இலங்கை,
வங்கதேசம், நேபாளம் என இந்தியாவைச் சுற்றி
இருக்கும் அண்டை நாடுகள் யாவும் ஊழலுக்கு எதிரான போராட்டத்திலும் கருத்துரிமை தடைக்கு எதிரான போராட்டத்திலும் வீரியம் கொண்டு, அது மக்கள் போராட்டமாக, இளையோர் முன்னெடுக்கும் உரிமைக்கான போராட்டமாக உருவெடுத்திருக்கிறது. இந்த அதிர்வலைகள் நாளை இந்தியாவிலும் இளையோர் மத்தியில் புதிய இந்தியா படைக்கக் கருத்துரிமை பிறக்க எழுச்சிக்கொள்ளச் செய்யும் என்ற நல்லெண்ணமும், அதே வேளையில் ஐயமும் நம் கண்முன் நிற்கிறது. ஆயினும், ஒன்றிய மாநில ஆட்சியாளர்கள் ஊழல் தவிர்த்து ஆட்சி செய்யவும், இளையோரின் வளமான தொழில்நுட்பத் திறனைப் பல தளங்களில் பயன்படுத்திக்கொள்ளவும்
முன்வர வேண்டும்.
ஊழல்
நிறைந்து, மக்கள் உரிமை இழந்து வாழும் நேபாள அரசியல் சூழ்நிலையைக் காணும்போது,
கொலைமேற்கொண்
டாரிற் கொடிதே அலைமேற்கொண்
டல்லவை
செய்தொழுகும் வேந்து - (குறள் 551).
என்னும்
குறளில், ‘மக்களை வருத்தி அலைக்கழிப்பதையே தொழிலாகக் கொண்டு தீமைகள் செய்து ஆண்டு வரும் அரசன், கொலைத்தொழில் செய்வோரைவிடக் கொடியவன் என்று கருதப்படுவான்’ என்னும்
வள்ளுவரின் வாக்கே நம் எண்ணத்தில் எழுகிறது.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
கடந்த வாரம், உள்ளூர் தொடங்கி உலகளாவிய ஊடகங்கள் வரையிலும் எதிரொலித்த செய்தி, சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு’ (Shanghai Cooperation Organisation - SCO) பற்றியதாகும். சீனா, இந்தியா, இரஷ்யா, பாகிஸ்தான் உள்ளிட்ட 20 நாட்டுத் தலைவர்கள் கூடிய இந்த மாநாடு, அமெரிக்காவின் அதிபர் டிரம்ப் அறிவித்திருக்கும் புதிய பொருளாதாரக் கொள்கையால் உலக அரங்கில் பெரும் ஊடக வெளிச்சம் பெற்றிருந்தது.
1996-இல் சீன
மக்கள் குடியரசு, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், இரஷ்யா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளும் ஒன்றுசேர்ந்து ஏற்படுத்திய இந்த அமைப்பு 2001, ஜூன் 15 அன்று அண்டை நாடுகளோடு ஒன்றிணைந்து பரஸ்பர பாதுகாப்பு, அரசியல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்காக இந்த முயற்சியை முன்னெடுத்தது. அவ்வாண்டு உஸ்பெக்கிஸ்தானும்,
2003, செப்டம்பர் 19 அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தானும் இந்த அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்டன. ஆயினும், 2017, ஜூன் 9 அன்று அஸ்தானாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க மாநாட்டில்தான் இந்தியாவும் பாகிஸ்தானும் முழு உறுப்பினர்களாக அதிகாரப்பூர்வமாக இவ்வமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்டன.
ஏறக்குறைய
20 நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பு, இன்று புவி சார்ந்த மக்கள்தொகையின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய கூட்டமைப்பாகத் திகழ்கிறது. உலக மக்கள்தொகையில் 40% கொண்டுள்ள இவ்வமைப்பு,
உலக ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% பங்கு வகிப்பது
வியப்பளிக்கிறது. பாதுகாப்பு, அரசியல், பொருளாதார ஒத்துழைப்பு என முன்னெடுக்கப்பட்ட இந்த அமைப்பு,
இன்று போக்குவரத்து, ஆற்றல் மற்றும் தொலைத்தொடர்பு சார்ந்த இருபதுக்கும் மேற்பட்ட பெரிய திட்டங்களைப்
பரஸ்பர ஒப்பந்தத்தில் உள்ளடக்கிய வளர்ச்சி நிலைகளை முன்னெடுக்கிறது.
இந்தியா,
இரஷ்யா, சீனாமீது கடுமையான இறக்குமதி வரி விதித்துள்ள அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கையின் பின்னணியில், இந்த நாடுகளின் கூட்டமைப்பு தங்கள் உறவுகளை வலுப்படுத்தவும் அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக உறுதியான நிலைப்பாடு எடுக்கவும் ஒன்றுகூடுவதாகக் கணிக்கப்பட்டது. அதில் உண்மை இருந்தபோதிலும், இந்தியப் பிரதமர் இந்தியா எதிர்கொள்ளும் பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதம் பற்றி உரையாற்றியிருக்கிறார்.
‘பயங்கரவாதம்’ என்பது
ஓர் அரசியல் நோக்கத்திற்காகப் பயத்தை உருவாக்கும் வகையில் வன்முறையைப் பயன்படுத்துவது என்றும், ‘பிரிவினைவாதம்’ என்பது
ஒரு குறிப்பிட்ட குழு, தான் வசிக்கும் பகுதியிலேயே ஒரு புதிய தேசத்தை உருவாக்க முயற்சிப்பது என்றும், ‘தீவிரவாதம்’ என்பது
ஒரு நாட்டின் அரசியல் அமைப்பின் முக்கிய அணுகுமுறைகளுக்குப் புறம்பாக வெறுப்புப் பிரச்சாரங்களையும் தீய எண்ணங்களையும் விதைக்கக்கூடிய செயல் என்று நாம் பொருள் கொண்டாலும், வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டதுபோலத் தோன்றும் இவை மூன்றும், அடிப்படையில் ஒன்றோடு ஒன்று நெருங்கியத் தொடர்புடையவையே!
அண்மையில்,
பகல்காமில் மிகக் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை இந்தியா எதிர்கொண்ட சூழலில், “பயங்கரவாதம் என்பது தனியொரு நாட்டின் பாதுகாப்புக்கான அச்சுறுத் தல் மட்டுமல்ல; மாறாக, அது அனைத்து மனிதகுலத்திற்குமான சவால். எனவே, அதை எதிர்த்துப் போராடுவதில் அனைத்து நாடுகளுக்கிடையே ஒற்றுமை என்பது மிக முக்கியமானதாக அமைகிறது”
என்று இம்மாநாட்டில் இந்தியப் பிரதமர் வலியுறுத்தியிருக்கிறார்.
“பகல்காம் தாக்குதலால் ஏராளமான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை இழந்திருக்கிறார்கள்; பல குழந்தைகள் ஆதரவற்றவர்களாக
ஆக்கப்பட்டிருக்கிறார்கள்.
இந்தத் தாக்குதல் இந்தியாவின் மனச்சாட்சியின் மீதான தாக்குதல் மட்டுமல்ல; மாறாக, மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்டுள்ள நாட்டுக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் விடுக்கப்பட்ட வெளிப்படையான சவால்” என்றும் தெரிவித்திருக்கிறார்.
பயங்கரவாதத்திற்கு
உலகளாவிய அளவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென அழைப்பு விடுக்கும் இந்தியப் பிரதமர், நம் நாட்டிற்கு உள்ளேயே ஒரே மதம், ஒரே இனம், ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல் எனப் பன்முகம் சிதைத்து, ஒருமையை நோக்கி நாட்டை இழுத்துச் செல்வதையும், இந்து இராஜ்ஜியத்தை, இராம இராஜ்ஜியத்தைக் கட்டியே தீரவேண்டுமெனத் துடிதுடிக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க.
கொள்கைகளில் ஒருவகைப் பிரிவினைவாதம் இருப்பதை ஏனோ? அவர் அறியாமலிருக்கிறார்.
“மானுடத்தை நேசிப்பதில் நாங்கள் எவருக்கும் குறைந்தவர்கள் இல்லை; எங்களுக்கு எவரிடத்தும் தனிப்பட்ட பகைமை இல்லை; நாங்கள் மனித வாழ்வை விவரிக்க இயலாத புனிதமானதாகக் கருதுகிறோம்; மனிதகுலத்திற்குச் சேவை செய்வதில் எங்கள் உயிரையும் தியாகம் செய்வதால் மற்றவர்களை விட நாங்கள் உயர்ந்தே நிற்கிறோம்” என்ற
பகத்சிங்கின் வார்த்தைகள், இந்திய மண்ணில் பன்முகத் தன்மையில் பழகி வாழும் பலருக்கு வாழ்வியல் பாடமாக இருப்பதைச் சிறுமைச் சிந்தனை கொண்டவர்கள் ஏனோ அறியாமலிருக்கிறார்கள்.
வெளிநாட்டு
அச்சுறுத்தலைப் பற்றிப் பேசும் இந்தியப் பிரதமர், உள்நாட்டிலேயே சிறுபான்மையினர், அச்சுறுத்தலில் வாழ்வதை ஏனோ அறியாமலிருக்கிறார். இதுவரை இந்தியா சந்தித்த உள்நாட்டு அச்சுறுத்தல்களில், இன்று சிறுபான்மையினர் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் தான் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது.
இந்துகள்
அல்லாதோர், மதத்தாலும் இனத்தாலும் சிறுபான்மையினர் எனக் கட்டமைக்கப்பட்டுக் குறிவைக்கப்படுவதையும் அன்றாடம் அவர்கள் அச்சுறுத்தலைச் சந்தித்து வருவதையும் ஏனோ அவர் அறியாமலிருக்கிறார். இந்திய நாட்டில் சமூக வாழ்விலும் பொருளாதார நிலைப்பாட்டிலும் எல்லா வகுப்பினரும் இன்று அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர். ஆதிக் குடியினர், நிலவுடைமையில் உரிமை கொண்ட பூர்வக் குடிமக்கள், ஏழை விவசாயிகள், சிறு-குறு தொழில் செய்வோர் என யாவரும் இன்று
சமூகப் பொருளாதார அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கின்றனர். சமூகத்தின் அடிவேர்களில் இன்று விஷம் பாய்ச்சப்படுகின்றது.
ஏழை-பணக்காரர் என்ற சமூகப் பிரிவினைவாதம் இன்று பா.ச.க.
ஆட்சியில் உச்சம் தொட்டிருப்பது பெரிதும் வேதனையளிக்கிறது. “இன்றைய ஆட்சியானது, அடிப்படையில் தரகர் கூட்டத்தின் ஆட்சியாகிவிட்டது. அரிய சிறப்புடைய நிலத்தையும் கனிம வளத்தையும் மனித வளத்தையும் அதிக ஏலத்தொகைக்குக் கேட்கும் எவருக்கும் விற்கத் தயாராகிவிட்டனர்; இந்த ஆட்சியாளர்கள் உடனடி அற்ப நலன்களுக்காக எதையும் செய்யத் துணிந்துவிட்டனர்; எந்தக் கொள்கையையும் கைகழுவ இவர்கள் தயார்; எந்த முதலீட்டாளரையும் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கத் தயாராகி விட்டனர்; உள்நாட்டுச் சந்தையைச் சிறிது சிறிதாக அவர்களுக்கு வெட்டிக் கூறு போட்டுக் கொடுக்கத் தயாராகிவிட்டனர். இயற்கை வளங்கள் யாவற்றையும் தாரைவார்க்கத் தொடங்கிவிட்டனர்; அரிதினும் அரிதான நகர்ப்புற நிலங்களில் நீண்ட காலம் பயன்பாட்டு உரிமையை வழங்க முன் வந்துவிட்டனர்” என்று
அன்று சீனாவின் நிலைமையை வில்லியம் ஹிண்ட்டன் தன்னுடைய ‘சோசியலிசத்தில் வர்க்கப் போராட்டம்’
என்ற நூலில் குறிப்பிட்டது, இந்திய மண்ணில் பா.ச.க.வின் ஆட்சி தொடங்கிய நாளிலிருந்து முற்றிலும் ஒன்றித்துப் போய்விட்டது.
வெளிப்புறப்
பயங்கரவாதத்தைக் கண்டு பதபதைக்கும் பாரதப் பிரதமர், பிரிவினைவாதத்தால் உள்நாட்டில் கூறுபோடப்படும் சமூக, பொருளாதார, வாழ்வியல் கட்டமைப்பைச் சரிசெய்வதைப் பற்றி எந்த மன்றத்தில் மனம் திறக்கப் போகிறார்?
‘அகிலத்தின் பார்வையில்
அர்த்தநாரியாய்
அறிவித்துக் கொண்டாலும்
உள்ளுக்குள்
இருக்கத்தான் செய்கிறது
ஊர்த்தவ
தாண்டவ வன்மம்!’
என்ற
கவிஞர் சுமதி பெனடிக்ட் அவர்களின் வரிகள்தான் எனக்கு இங்கு நினைவுக்கு வருகின்றன.
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
நாடாளுமன்றம்-சட்டமன்றம் என்ற அடித்தளத்தின்மீது கட்டப்பட்டதுதான் மக்களாட்சி எனும் மாளிகை. அம்மாளிகையின் உயர் காவலர்களாக இருப்பவர்களே குடியரசுத் தலைவரும் துணைத் தலைவரும்!
இந்திய
நாட்டின் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு இன்னும் சில தினங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. 14-வது குடியரசுத் துணைத் தலைவராக இருந்த திரு. ஜெகதீப் தன்கரின் பதவிக்காலம் வரும் 2027 ஆகஸ்டு வரை உள்ள நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி அவர் கடந்த ஜூலை 21-ஆம் தேதி திடீரெனப் பதவி விலகினார்.
அடிப்படையில்
திரு. ஜெகதீப் தன்கரின் பதவி விலகலே ஆயிரம் கேள்விகளை மக்கள் மன்றங்களில் எழும்பியிருப்பது ஒருபுறம்; மறுபுறம், இந்தியச் சனநாயகமும் அரசமைப்புச் சட்டமும் பெரும் தாக்குதலுக்குள்ளாகி வரும் இக்கட்டான இச்சூழலில், நாட்டின் இந்த உயர் பதவிக்குச் சனநாயக மாண்புடைய ஒருவர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டிவந்த சூழலில், அவையையும் எதிர்க்கட்சிகளையும் ஒருசேர அணைத்துச் செல்லக்கூடிய ஓர் ஆளுமையைப் பா.ச.க.
தேடிக் கொண்டிருந்தது. அந்தக் கோணத்திலும் தமிழ்நாட்டின் எதிர்வரும் தேர்தலைக் கணக்கில் கொண்டும் தமிழர் ஒருவருக்கு வாய்ப்பளிப்பது நல்லது என ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க.
மேல்மட்டக் குழு கலந்து ஆலோசித்ததன் பேரில் தற்போது மகாராஷ்டிரா ஆளுநராக உள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த திரு. சி.பி. இராதாகிருஷ்ணன்
போட்டியிடுவார் என பா.ச.க. அறிவித்தது.
எதிர்வரும்
தமிழ்நாடு அரசியலை மையப்படுத்தி பா.ச.க.
வின் திட்டங்களுக்கு இவர் கைகொடுப்பார் என்ற எண்ணத்திலும், அப்துல் கலாமுக்குப் பிறகு தமிழர் ஒருவருக்கு உயரிய பொறுப்பை பா.ச.க.
வழங்கியிருக்கிறது என்று இனி தமிழ்நாட்டில் முழக்கம் செய்யலாம் என்பதாலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை துணைக் குடியரசுத் தலைவராக்க பா.ச.க.
திட்டம் தீட்டியிருக்கிறது.
இந்தக்
களச்சூழலை நன்கு முன்னுணர்ந்த ‘இந்தியா’ கூட்டணி, தமிழ்நாட்டிலிருந்தோ அல்லது தென்னிந்தியப் பகுதிகளிலிருந்தோ சரியான போட்டியாளரை
முன்னிறுத்த வேண்டுமெனத் தெலுங்கானாவைச் சேர்ந்த உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு. பி. சுதர்சன் ரெட்டியை அறிவித்துள்ளது. இவர் நாட்டின் புகழ்பெற்ற முற்போக்கான நீதிபதிகளில் ஒருவர்; ஆந்திர உயர் நீதிமன்றம் குவாஹாட்டி உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி என நீண்டகாலச் சட்ட
அனுபவம் கொண்டவர். சமூகப் பொருளாதார அரசியல் ரீதியில், நீதியின் நிலையான மற்றும் துணிச்சல்மிக்க பாதுகாவலராகச் செயல்பட்டவர்; ஏழைகளின் ஆதரவாளர். தனது பல்வேறு தீர்ப்புகளின் வாயிலாக ஏழைகள் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பை உறுதி செய்தவர். அரசமைப்புச் சட்ட நீதிமன்றங்களில் 16 ஆண்டுகளுக்கும் மேல் பதவி வகித்துள்ளவர்.
இந்திய
அரசமைப்புச் சட்டப்படி, குடியரசுத் துணைத் தலைவரை மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் இணைந்து தேர்வு செய்வார்கள். மக்களவையில் தற்போது 542 உறுப்பினர்கள் உள்ளனர்; ஓர் இடம் காலியாக உள்ளது. அதேபோல மாநிலங்களவையில் 239 உறுப்பினர்கள் உள்ளனர்; அங்கு ஆறு இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பா.ச.க.
தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மையும் உள்ளது. ஆகவே, இந்தக் கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்பது ஒருபுறம் உறுதியாகியுள்ளது. ஆயினும், சனநாயகப் பேரவைகளின் செயல்பாடுகளை வைத்துதான் குடியாட்சியின் பெருமையும் சிறுமையும் அமைகின்றன என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது.
சுதந்திரமாகச்
செயல்பட்டு, இந்திய மக்களாட்சியைப் பாதுகாக்க வேண்டிய தன்னாட்சி அமைப்புகள் அனைத்தும் பா.ச.க.வின் துணை அமைப்புகளாக மாற்றப்பட்டு அரசமைப்புச் சட்டமே இன்று பேராபத்தில் சிக்கியுள்ளது. இத்தகைய சூழலில் “இந்தியாவின் அடிப்படைக் கொள்கைகளான மதச்சார்பின்மை, கூட்டாட்சிகள், சமூகநீதி மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட ஒருவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதை வரவேற்கிறேன்; அவருக்குத் தி.மு.க.
அரசு முழு ஆதரவையும் அளிக்கிறது” என
சுதர்சன் ரெட்டியை ஆதரித்துச் செய்தி வெளியிட்டிருக்கிறார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
“சுதந்திரமாக அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கக்கூடிய ஒருவரைத்தான் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர, அவருக்குத் தமிழர் என்ற அடையாளத்தைப் பயன்படுத்துவதால் எந்தப் பயனுமில்லை” என்கிறார்
தொல். திருமாவளவன். சுதர்சன் ரெட்டியை ஆதரிப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்த உடனேயே தேசிய சனநாயகக் கூட்டணி வேட்பாளரான சி.பி. இராதாகிருஷ்ணனை
ஆதரிக்கப்போவதாக ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அவ்வாறே, அம்மாநில எதிர்க்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் பா.ச.க.
வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
தேசிய
சனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் தேர்வில் ஆர்.எஸ்.எஸ்., பா.ச.க.,
மோடி, அமித்ஷாவின் திரைமறைவுத் திட்டங்கள் நன்றாகவே புலப்படுகின்றன. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திலிருந்த ஒருவரைத் தேர்ந்தெடுப்பதன் வாயிலாக, அந்த இயக்கத்தைத் திருப்திபடுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்பதால், அவரைக்காட்டி தமிழ்நாட்டில் வாக்கு வங்கியைப் பெருக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார்கள்; ஆட்சி மாற்றதிற்கு வழி தேடியிருக்கிறார்கள். பாவம் அவர்! தமிழ்நாடு மீன்களைப் பிடிக்க பா.ச.க. போட்ட
தூண்டிலில் மாட்டப்பட்டுள்ள புழு என்பதை அறிந்திருக்கிறாரோ என்னவோ தெரியவில்லை!
பா.ச.க. பல
வேளைகளில் தன் தலைவர்களைத் தேவைக்குப் பயன்படுத்திக்கொண்டு பின் பாராமுகமாய்ப்போன கதைகள் ஏராளம். அத்வானி தொடங்கி அண்மையில் மறைந்த நாகலாந்து மாநிலத்தின் மேனாள் ஆளுநர் இல. கணேசன் வரைக்கும் அது தான். அவ்வாறே, குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலின் தேசிய சனநாயகக் கூட்டணி வேட்பாளர் சி.பி. இராதாகிருஷ்ணனின்
எதிர்காலத்தைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும்.
இந்தச்
சூழலில், தமிழ்நாடு வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாட்டு மக்களின் எண்ணங்களில் இடம்பிடிப்பதற்காக தமிழ்நாட்டைப் பெருமைப்படும் வகையில் பேசிச் சென்றிருக்கிறார். புண்ணிய பூமியான தமிழ் மண்ணில் தமிழ்மொழியில் பேச முடியாதது வருத்தம் அளிப்பதாகவும், இந்தத் தமிழ்
மண் வரலாறு, வீரம், பண்பாடு, கலாச்சாரம் நிறைந்தது என்றும், இந்த மண்ணை தான் வணங்குவதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அண்மைக் காலங்களில் இவர்கள்தாம் தமிழ்நாட்டின் வளர்ச்சியிலும், பொருளாதார மேம்பாட்டிலும், மொழிக்கொள்கையிலும், சிறுபான்மையினர் நலனிலும், கீழடி ஆய்விலும் பெரும் தடைகளைப் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்
என்பதை மக்கள் அறிவார்கள்.
தமிழரான
ஐயா அப்துல் கலாமைக் குடியரசுத் தலைவராக உயர்த்தியதும் தேசிய சனநாயகக் கூட்டணிதான்; தற்போது அது மீண்டும் இந்த மண்ணைப் பெருமைப்படும் வகையில் சி.பி. இராதாகிருஷ்ணனைக்
குடியரசுத் துணைத் தலைவருக்குப் பரிந்துரை செய்ததன் வழியாக, தமிழ் மண்ணின் பெருமையையும் தமிழ்மக்களின் உணர்வுகளையும் உணர்வுப்பூர்வமாக பா.ச.க.
மதிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
கடந்த
தேர்தலில் பா.ச.க.
18% வாக்குகளையும், அ.தி.மு.க 21% வாக்குகளையும் பெற்றுள்ளன;
அவை இரண்டும் சேர்ந்தால் தி.மு.க.வை எளிதில் வீழ்த்திவிடலாம்
என்ற மாபெரும் திட்டத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
“தேசிய சனநாயகக் கூட்டணி என்பது வெறும் அரசியல் கூட்டணி அல்ல; மாறாக, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் முன்னேற்றம் அடையச் செய்யக்கூடிய கூட்டணி” என்று வர்ணித்திருக்கிறார்.
ஆனால்,
இறுதியில் அவருடைய பேருரையோ, “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வை வேரோடு பிடுங்கி
எறிய, ஆட்சி மாற்றத்தை உருவாக்க ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வெற்றிக்கான மாற்றத்தை உருவாக்கவேண்டும்” எனப்
பா.ச.க. தொண்டர்களை,
வாக்குச் சாவடி நிர்வாகிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். மக்கள் மன்றத்தில், அவர்களுடைய மனத்தில் மாற்றத்தை அல்ல; மாறாக, வாக்குச்சாவடியில் மாற்றத்தை எதிர்நோக்கி இருப்பதன் உள்நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அண்மைக்காலங்களில்
இவர்களின் இத்தகைய செயல்பாடுகளைத்தான் இராகுல் காந்தி தெளிவாகவே வெளிப்படுத்திக் கொண்டு வருகிறார். ‘மாற்றம்’ மக்கள் மனத்தில் வரவேண்டுமே தவிர, மக்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடியில் அல்ல! முறைகேடுகள் நடக்காத தேர்தலை இனி நாம் காணக்கூடும் என்ற நம்பிக்கை காலப்போக்கில் பொய்த்துப்போய்விட்டது. அதிகார பலம், பண பலம், அடியாள்
பலம் இவை மூன்றும்தான் தேர்தல் வெற்றியைத் தேடித்தரும் என்றால், உண்மையான சனநாயகம் எப்படி உயிர்வாழும்?
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்