news
தலையங்கம்
தமிழ்நாட்டை உலுக்கும் காவல் மரணங்களும் திருமணத் தற்கொலைகளும்!

எல்லை மீறும் எச்செயலும் வன்முறையே! பயங்கரவாதமே! தீவிரவாதமே! நான்கு நபர்களால் வீதிகளில் தொடரும் வன்முறைகள், இன்று கண்ணசைவில் நான்கு சுவர்களுக்குள்ளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவை வன்முறையின், மனித உரிமை மீறலின் உச்சமாகப் பார்க்கப்படுகின்றன.

குடும்ப, சமூக வாழ்க்கையில் சவால்கள் நிறைந்திருப்பது எதார்த்தம். தனியொருவராக அச்சவால்களைச் சந்திக்கின்றபோது தீர்வுகாணத் துணையிருக்க வேண்டியவர்களே இடையூறுகளுக்கு ஆதாரமாகிப் போவதும் பிரச்சினைகளுக்கு உச்சமாகிப்போவதும் வேதனையிலும் வேதனை! அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டில் தொடர்ந்து நிகழ்ந்துவரும் பல துயர நிகழ்வுகளில்வேலியே பயிரை மேய்ந்ததுதான்உச்சக்கட்டமான துயரம்.

தமிழ்நாட்டையே உலுக்கிய சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவிலில் காவலாளி அஜித்குமார் தனிப்படைக் காவலர்களால் கொல்லப்பட்ட நிகழ்வும், வரதட்சணைக் கொடுமைகளால் நிகழ்ந்த ரிதன்யா, கவிதாவின் மரணங்களும் சமூகத்திற்கு உணர்த்தும் பாடங்கள் ஏராளம். உயிரிழந்த கோவில் காவலாளி அஜித்குமாரின் முதல்கட்ட உடற்கூராய்வு அறிக்கையை ஆராய்ந்த மதுரை உயர் நீதிமன்றம், “இது காவல்துறையால் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட குற்றம்; அரசு தனது சொந்தக் குடிமகனையே கொன்றிருக்கிறதுஎனச் சாடியிருக்கிறது.

அஜித்குமாரின் மரணம், நாட்டில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல காவல் மரணங்களை (Custodial deaths) வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளதுடன், காவல் மரணங்கள் தொடர்பாக எந்தக் காவலரும் தண்டிக்கப்படவில்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளது. குறிப்பாக, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் காவல்துறையினரால், பட்டியல் சாதி மக்கள் இன்னும் கூடுதலாக இலக்காக்கப்படுவதையும் புள்ளி விவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

2016 முதல் 2022 (மார்ச் 30) வரையிலான காலத்தில், இந்தியாவில் 11,656 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அத்தகைய மரணங்கள் அதிகம் நிகழும் மாநிலங்களில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளதாகவும், அதாவது, மேற்கூறிய காலகட்டத்தில் இங்கு 2,630 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறே, தமிழ்நாட்டில் 490 நபர்கள்  உயிரிழந்திருப்பதாகவும், தென்னிந்தியாவில் காவல் மரணங்கள் அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாகவும் மேலும் அப்புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

இந்தியா முழுவதும், இதே காலகட்டத்தில் நிகழ்ந்த காவல் மரணங்களுக்கு எந்தவொரு காவல்துறை அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதும், இக்காலகட்டங்களில் காவல் நிலையங்களில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து தமிழ்நாட்டில் 39 நீதி விசாரணைகள் நடத்தப்பட்டும் இந்த வழக்குகள் தொடர்பாக எந்தவொரு காவலர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை, தண்டனை விதிக்கப்படவில்லை என்பதும் அதிர்ச்சியளிக்கிறது.

கைதுசெய்யப்பட்ட நபர்மீது காவல் துறையினர் தமது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், முன்விரோதத்துடன் செயல்படுதல், உடல் - மன ரீதியாகத் துன்புறுத்துதல் போன்றவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. இந்திய அரசமைப்புச் சட்டம் 21, ‘எந்த ஒரு நபரின் உயிரையோ, அடிப்படை உரிமைகளையோ எவரும் பறிப்பது குற்றம்எனச் சுட்டிக்காட்டுகிறது. ஆகவே, காவல்துறையினால் அத்துமீறி நடத்தப்படும் இதுபோன்ற காவல் மரணங்கள் சட்டப்படி குற்றச்செயலாகவே கருதப்படும்.

கைது செய்யப்பட்ட நபருக்கு அவரது கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்பட வேண்டும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவு 56, 57-இன்படி, கைதுசெய்யப்பட்ட நபர் தாமதமின்றி 24 மணி நேரத்திற்குள் நீதிபதியிடம் (மாஜிஸ்ட்ரேட்) ஆஜர்படுத்தப்பட வேண்டும் எனத் தெளிவுபடுத்துகிறது. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டம் 22(1) இன்படி, கைதுசெய்யப்பட்ட எவரும் தங்கள் விருப்பப்படி வழக்கறிஞரிடம் ஆலோசனை பெறவும், மருத்துவரை அணுகவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஆயினும், காவல் மரணங்களை விசாரிப்பதில் நீதித்துறை மெத்தனமாகச் செயல்படுவது நீதிமன்றத்தின்மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையைச் சிதைப்பதாக உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டை உலுக்கிய சாத்தான்குளம் ஜெயராஜ் - பெனிக்ஸ் காவல் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட 9 காவல் அதிகாரிகள் மீதான வழக்கு நான்கு ஆண்டுகளாகியும் தீர்ப்பு நோக்கி அது நகராதது  வருத்தமளிக்கிறது.

மனித உரிமை, மனநல ஆரோக்கியம் என்பன பற்றிச் சிறிதும் கவலையின்றி, காவல்துறையில் தொடரும் இத்தகைய வன்முறைக் கலாச்சாரம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதும், வன்முறைக் கலாச்சாரத்தை விடுத்து, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களைக் கொண்டு, புலனாய்வு நுட்பங்களைக் காவல்துறையினர் மேம்படுத்த வேண்டும் என்பதும், அரசியல், அதிகாரம் மற்றும் சாதிய அழுத்தங்களுக்கு அடிபணியாத வகையில் உண்மை, நேர்மை, நீதி வழியில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் காவல்துறையினர் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக இருக்கிறது.

அவ்வாறே, திருப்பூர் அவினாசி ரிதன்யா மற்றும் கிருபானந்த வாரியாரின் கொள்ளுப்பேத்தி கவிதா ஆகியோரின் வரதட்சணைக் கொடுமையால் நிகழ்ந்த மரணங்கள் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆணாதிக்க மனநிலை, குடும்ப வன்முறை, உடல் ரீதியான துன்புறுத்தல், வற்புறுத்துதல், மன வேதனை, உளவியல் சார்ந்த அழுத்தம், மனித உரிமை மீறல் எனக் குற்றப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. ஆணுக்கு இணையாகப் பெண் கல்வியில் உயர்ந்து சிறந்து விளங்கினாலும், திருமணம் என்னும் பந்தத்தில் சிறுமைப்படுத்தப்படுவதும், வரதட்சணை என்னும் போர்வையில் கொடுமைப்படுத்தப்படுவதும் சமூகத்தின் அவலமாகவே பார்க்கப்படுகிறது.

திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுஎன்னும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன. பல்வேறு கட்டமைப்புகளில் இருந்து விடுபட்டு, முற்போக்குச் சிந்தனைகளில் வளர்ந்து வரும் இச்சமூகம், மீண்டும் வரதட்சணை, பெண்ணடிமைத்தனம், பாலியல் வேறுபாடு, வர்க்கக்கட்டமைப்பு என்னும் அவலங்களில் சிக்குண்டிருப்பது இச்சமூகத்தின் பிற்போக்கு ஆதிக்கத்தையே இன்னும் படம்பிடித்துக் காட்டுகிறது.

குடும்பமும் சமூகமும் சிறந்து விளங்க ஒவ்வொருவரும் ஒழுக்கம், தன்னடக்கம், எளிமை, அமைதி, அனைத்து உயிர்களையும் மதித்தல், பிறர் நலம் காத்தல் மற்றும் தர்மத்தைப் போற்றுதல் என்னும் ஏழு நற்பண்புகளைப் பின்பற்ற வேண்டுமென நம் மூதாதையர் வகுத்துக்கொடுத்த அறநெறி வாழ்க்கை இன்று சிதைந்து போயிருக்கிறது.

திட்டமிட்ட இவர்களின் வாழ்க்கை திடீரென எழுந்த எதிர்பாராதச் சூறாவளிக் காற்றில் சூறையாடப்பட்டு, பொருளற்றுப் போனதால் ஒவ்வொரு குடிமகனின், குலமகளின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகி இருக்கிறது. உண்மைத் தன்மையற்ற சட்டங்களாலும், போலியான குடும்பப் பாசங்களாலும் சூழப்பட்ட இச்சமூகத்தில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும்நாளைஎன்பது அச்சத்துடனே நகர்கிறது.

மனித உறவுகள் மேம்பட மனம் வளப்பட வேண்டும்என்பார்கள். குடும்பத்திலும் சமூகத்திலும் இன்று மனம் சுருங்கிப்போனதும் இறுகிப் போனதும் பல பேராபத்துகளை ஏற்படுத்துகின்றன. ஆகவே, அனைத்துத் துன்பங்களின் ஆதாரமாக இருக்கும் சுயநலம் விடுக்கவும்உண்மை-பொய்மையின் தன்மை உணரவும், நன்மை-தீமையின் வேறுபாடுகளை அறியவும் விரிந்த பார்வையும் தெளிந்த சிந்தனையும் துணிந்த செயல்பாடும் நாம் கொண்டிருக்க வேண்டும்.

கனவுகளும் கற்பனைகளும் எதிர்கால நல்லெண்ணங்களும் நிறைந்ததுதான் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும். அநீதியை முன்னிறுத்தி, பேராசையில் மையம்கொண்டு, பதவி, புகழில் பாதையமைக்கத் துடிக்கும் ஒவ்வொருவரும் சற்றே சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஆகவே, இளைய தலைமுறையினரின் கனவுகளைச் சிதைத்துவிட வேண்டாம்; அந்தப் பட்டாம் பூச்சிகளின் சிறகுகளை முறித்தெறிய வேண்டாம். ‘உயிர் வழிபாடுதான் உண்மையான, மேன்மையான இறைவழிபாடுஎன்பதை நம் நெஞ்சில் நிறுத்திடுவோம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

 

news
தலையங்கம்
நிலத்தடி நீரும் உழவனின் கண்ணீரும்!

எல்லா உயிரினங்களின் இருத்தலுக்கும் இயக்கத்திற்கும் ஆதாரமாய் என்றும் இருப்பது தண்ணீர். ஆகவேதான், ‘நீரின்றி அமையாது உலகு...’ என்று உணர்த்திய ஐயன் வள்ளுவர், ‘உலகிலுள்ள இயற்கை வளங்களுள் தலையாய இடத்தில் இருப்பது நீர்என்ற பேருண்மையை உலகிற்கு எடுத்துரைத்தார். 

நீருக்கு மாற்று என்பது இல்லை. நமது அன்றாட வாழ்வியல் பயன்பாடு, வேளாண் தொழில், மீன் வளர்ப்பு, தொழில் வளர்ச்சி, புனல்மின் உற்பத்தி, பொழுதுபோக்கு இடங்கள் என எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது இந்த நீரே!

அதிகரித்து வரும் தொழில்வளர்ச்சி, மக்கள்தொகைப் பெருக்கம், காலநிலை மாற்றம், வெப்பநிலை ஏற்றம் எனப் பல காரணங்களால் நீரின் பயன்பாட்டுத் தேவை இன்று அதிகரித்து வருகிறது; நீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஆகவே, குறைந்து வரும் இயற்கை வளங்களில் ஒன்றான நீர் முறையாகச் சேமிக்கப்படவும், பயன்பாட்டிற்கு வழங்கப்படவும் சிறப்பான நீர் மேலாண்மை வழிமுறைகளைக் கண்டறிவது இன்று காலத்தின் கட்டாயம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்திருக்க வாய்ப்பில்லை.

எனவே, நீர்வள மேலாண்மை வழிகளைக் கண்டறிவதும், குறைந்து வரும் நன்னீர் வளம் குறையாது நீர்வளத்தைப் பெருக்குவதும் பாதுகாப்பதும், அவற்றைப் பயன்படுத்தி வேளாண் தொழில் சிறக்க முனைவதும் இன்று அவசியமாகிறது. இருப்பினும், கோடை வெயிலிலும் வறட்சியிலும், இடி, மின்னல், மழையிலும், குளிர் வாடையிலும் காணியே கதி என்று காலம் தள்ளும் உழவனின் தலையில் இன்று மற்றோர் இடி விழுந்திருக்கிறது.

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரிவிதிக்கும் புதிய திட்டத்தை ஒன்றிய பா... அரசு விரைவில் செயல்படுத்தவிருப்பதாக அறிவித்திருக்கிறது. அதாவது, இந்தியா முழுவதும் வேளாண்மைக்காகப் பயன்படுத்தப்படும் நிலத்தடி நீருக்கு, வரிவிதிக்கும் முறையை மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுத்தப்பட இருப்பதாக, அண்மையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீல் தெரிவித்திருக்கிறார்.

நிலத்தடி நீர் வீணாவதையும், தவறாகப் பயன்படுத்தப்படுவதைக் குறைக்கவும் பயனுள்ள நீர் மேலாண்மைக்கான அடிப்படையான திட்டங்களை உருவாக்கவும் ஒன்றிய அரசு முன்வந்திருப்பதாகத் தெரிவிக்கும் நீர்வளத்துறை அமைச்சர், இந்தத் திட்டம் ஏற்கெனவே உள்ள கால்வாய்கள் மற்றும் ஏனைய நீர் ஆதாரங்களிலிருந்து பாசன நீரை வழங்குவதற்காகபாசன நீர் வழங்கும் வலையமைப்பைஏற்படுத்துவதை  நோக்கமாகக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

அதாவது, ஒரு மைய இடத்தில் போதுமான தண்ணீரைச் சேமித்து வைத்து, அங்கிருந்து விவசாயிகளின் பல்வேறு தேவைகளுக்கு ஏற்ப அதைப் பயன்படுத்த இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருப்பதாகவும், ஏறக்குறைய ஒரு ஹெக்டேர் வரை விவசாயிகளின் நீர் பாசனத்திற்கு பொது நீர் தேக்கத்திலிருந்து குழாய்கள் மூலம் இந்த நீர் வழங்கப்பட  உள்கட்டமைப்பை ஏற்படுத்தவிருப்பதாகவும்நாடு முழுவதும் 22 இடங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும், இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு ரூ. 1,100 கோடியை ஒதுக்கியுள்ளதாகவும், கூடுதலாக ரூ. 500 கோடி மற்ற திட்டங்களிலிருந்து வழங்கப்படவிருப்பதாகவும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

நிலத்தடி நீர் வீணாவதைத் தடுப்பதற்காக இந்தத் திட்டம்என்று ஒன்றிய அரசு தெரிவித்திருந்தாலும், இதன் உண்மையான நோக்கம் உழவனை விவசாய நிலத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவதற்காகவே என்பதுபோல தோன்றுகிறது. மிகவும் கடினப்பட்டு நிலத்தடி நீரை மேலே கொண்டு வரும் விவசாயி, அதை வீணாக்க மாட்டார் என்பதை ஏனோ இந்த அரசு அறியாமலிருக்கிறது!

இன்றைய சூழலில், இந்தியாவில் விவசாயத் தொழில் மிகவும் நலிவடைந்ததொரு தொழிலாகவே பார்க்கப்படுகிறது. தொடர்ந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வேளாண் திட்டங்கள், பயிர் பாதுகாப்புத் திட்டங்கள் என்னும் போர்வையில் மோசடிகள், நதிநீர் ஒப்பந்தம் என்னும் தொடரும் ஏமாற்று வேலைகள், பற்றாக்குறையாக வழங்கப்படும் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள்  வழங்கப்படாமை எனப் பல வகைகளிலும் உழவர்கள் இன்று உறிஞ்சி நசுக்கப்படுகிறார்கள்; வஞ்சிக்கப்பட்டுப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

இத்தகைய சூழலில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வைக் கொடுப்பதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு அவர்களின் வயிற்றில் அடிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குடிநீர், வேளாண் பாசன நீர் என்று அடிப்படைத் தேவைகளுக்கான  பொருள்களின்மீது பா... ஆட்சியின் வரிவிதிப்பு என்பது விவசாயியின் வாழ்க்கையில்வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல் இருக்கிறது.

ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கடந்த 2012-ஆம் ஆண்டில்தண்ணீர் கொள்கைஎன்ற பெயரில் விவசாயிகளின் பயன்பாட்டிலிருக்கும் நிலத்தடி நீருக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தபோது, அதற்கு நாடெங்கும் விவசாயிகளிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியதும் அதனால் அத்திட்டம் செயல்பாட்டிற்கு வராமல் போனதையும் ஏனோ இந்த ஒன்றிய பா... அரசு அறியாமலிருக்கிறது.

முதல் கட்டமாக இந்தத் திட்டமானது நிலத்தடி நீரை மையப்படுத்தி ஓர் இடத்தில் சேமித்துவைத்து, அங்கிருந்து விவசாயிகளுக்குத் தேவையான நீரை அவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அப்படிப் பெறக்கூடிய விவசாய நீருக்கு அளவு அடிப்படையிலே வரிவிதிக்கப்படும் என்றும் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டாலும், காலப்போக்கில் தனிநபர் ஒவ்வொருவரும் தங்களுடைய விவசாய நிலத்தில் பயன்படுத்தப்படும் நீருக்கான அளவிடும் இயந்திரம் பொருத்தப்பட்டுக் கணக்கிடப்படும் என்பதும் இத்திட்டத்தில் மறைந்திருக்கும் அதிர்ச்சி தரும் செய்தியாகிறது. ஆகவே, உழவனை வஞ்சிக்கும் இந்தத் திட்டத்தை ஒன்றிய பா... அரசு உடனே கைவிடவேண்டும்.

இன்றைய சூழலில், உழவர்கள் தங்கள் வாழ்வியல் சூழலில் சந்திக்கும் எதிர்வினைகள் ஏராளம். வேளாண் பொருள்களுக்குரிய விலை இல்லை; உரங்கள் கிடைப்பதில்லை; கிடைக்கும் உரங்களுக்கு உயர்ந்து கொண்டே செல்லும் விலைகள்; விவசாயத் தொழிலுக்குத் தேவையான இடுபொருள்கள் வழங்கப்படாமை; தரமற்ற விதைகளை வழங்குவது... என அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம்.

அதிக மழை பொழிந்தால் வெள்ளத்தில் விவசாயம் அழிந்துபோவதும், மழையே பெய்யவில்லை என்றால் வறட்சியில் ஏமாந்து போவதும் உழவர்களின் அன்றாடக் காட்சியாகிப் போனது.

உழவர்களின் நெருக்கடியையும் அன்றாட வாழ்வியல் போராட்டங்களையும் புரிந்துகொள்ளாத இந்த அரசை என்னவென்று சொல்வது? எல்லாவற்றிற்கும் வரி செலுத்தவேண்டும் என நிர்ணயித்துவிட்டு, உழவனின் வேளாண் பொருளுக்கு ஏற்ற விலையை நிர்ணயிக்க முடியாத இந்த அரசு, உழவனை உயிரோடு மண்ணில் புதைப்பதாகவே இருக்கிறது.

விளைபொருள்களுக்குச் சரியான விலை கிடைப்பதில்லை, வேலையாள்கள் கிடைப்பதில்லை, போதிய கடனுதவி கிடைப்பதில்லை எனப் புலம்பலுடன் விவசாயத்தைவிட்டு உழவர்கள் வெளியேறிக் கொண்டிருக்கும் சூழலில், ஒன்றிய அரசின் இத்தகைய செயல்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. மேலும், கிணற்றுப் பாசனத்தை முழுமையாக நம்பியிருக்கும் தென் மாநிலங்களில் இத்திட்டத்தை அரசு முன்னெடுத்து வருவது, இங்கு வேளாண் தொழிலைத் திட்டமிட்டே நசுக்குவதாகக் கணிக்கப்படுகிறது.

நதிகளை இணைக்கவும், மழைநீரை முறையாகச் சேமிக்கவும் முனைப்புக் காட்டாத இந்த அரசின் இத்திட்டம், பசுத்தோல் போத்திய புலியாகவே தோன்றுகிறது.

ஒரு சிறந்த நாட்டிற்கான வரையறையை முன்வைக்கும் வள்ளுவர்,

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்

செல்வரும் சேர்வது நாடு (குறள் - 731)

என்று குறிப்பிடுகிறார். அதாவது, குறையாத விளைபொருளும் தக்க அறிஞரும் கேடில்லாத செல்வம் உடையவரும் கூடி பொருந்தியுள்ள நாடே நாடாகும் என்று கூறும் வள்ளுவர், குறையில்லாத விளைபொருளையே நாட்டின் வளர்ச்சிக்கான முதல் குறியீடாக முன்வைக்கிறார். எனவே, குறையில்லாத விளைச்சலே ஒரு நாட்டின் வளர்ச்சியின் மூல வேராக அமைகிறது.

ஆகவே, ‘ஆணிவேர் அறுபட்டால் மரம் தழைக்காது; வேளாண்தொழில் தடைபட்டால் நாடு செழிக்காதுஎன்னும் பேருண்மையை இனியாவது ஒன்றிய அரசு உணர்ந்திடட்டும்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
ஆங்கிலம்: அகண்ட உலகத்தின் ஆட்சி மொழி!

இந்திய மண்ணில் விடுதலைக் காற்று நம் வீதிகளில் உலா வரும் முன், பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தி மொழியின் வாடை நம் வாசல்களில் வசந்தமாகிட திட்டங்கள் தீட்டப்பட்டன.

1937-இல்பிரீமியர்என்று அழைக்கப்படும் மாகாண முதல்வராக இராஜாஜி பொறுப்பேற்றபோதே, இந்தியாவின் பொதுமொழியாக இந்தி இருக்கவேண்டும் என்பது காந்தியின் விருப்பமாக இருந்திருக்கிறது. காந்தியின் விருப்பப்படி தமிழ்நாட்டில் இந்தியைப் பரப்பவும், தன் ஆட்சிக்காலத்தில் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாகத் திணிக்கவும் தீவிரமாக முற்பட்டவர் மூத்த அறிஞர் இராஜாஜி. இந்தியை இம்மண்ணில் பரவலாக்க ஆசை கொண்ட அவரே, பின்னாளில் தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தபோது, 1962, ஜூன் 16-ஆம் நாள்சுயராஜ்ஜியாஇதழில்பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆங்கிலமே பயிற்று மொழியாக நீடிப்பது நல்லதுஎன்று எழுதினார்.

அவ்வாறே, சுதந்திரத்திற்குப் பின்பு ஓமந்தூரார் ஆட்சியில் மீண்டும் இந்தித் திணிப்பு நடந்த வேளையில், 1948-இல் பெரியார், இந்தியைத் தீவிரமாக எதிர்க்கத் தொடங்கினார். இந்தியை ஒழிக்கக் கங்கணம் கட்டிக்கொண்ட அவர், “எனது இந்தி எதிர்ப்பு என்பதுஇந்தி கூடாதுஎன்பதற்காகவோ, ‘தமிழ் வேண்டும்என்பதற்காகவோ அல்ல; மாறாக, ஆங்கிலம் பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக, தமிழனின் வீட்டு மொழியாக வேண்டும் என்பதற்காகவே. ஆகவே, வீட்டில் உங்கள் மனைவியுடன், குழந்தைகளுடன், வீட்டுப் பணியாளர்களுடன் ஆங்கிலத்திலேயே பேசுங்கள், பேசப் பழகுங்கள், பேச முயலுங்கள்என்று 1969, ஜனவரி 27-ஆம் நாள்விடுதலைஇதழில் எழுதினார்.

இந்திக்கு எதிராக மாணவர் போராட்டம் 1965-இல் பெருந்தீயாக மாநிலம் முழுவதும் பற்றி எரிந்த போது இராஜாஜி, “English ever, Hindi neverஎன்று முழங்கினார். “ஆங்கிலம் இந்தியருக்கு சரஸ்வதி வழங்கிய அருள் கொடைஎன்று வர்ணித்தவர், “ஆங்கிலம் மட்டுமே நாட்டின் ஆட்சி மொழியாகவும், மாநிலங்களின் இணைப்பு மொழியாகவும் இருக்க வேண்டும்என்றும் முழங்கினார். மேலும், இந்த ஒன்றில்தான் தானும் பெரியாரும் ஒரே கருத்தைக் கொண்டிருந்ததாகக்  குறிப்பிட்டார்.

கருத்து முரண்பட்டு அரசியல் செய்த அன்றைய ஆளுமைகளே, ஆங்கிலம் பொதுமொழியாகவும் அலுவல் மொழியாகவும் நம் வீட்டு மொழியாகவும் வளர வேண்டும் என்று மனதார விரும்பினர். ஆனால், மாநிலங்களை ஒன்றிணைத்து உறவுப் பாலம் அமைக்க வேண்டிய ஒன்றிய உள்துறை அமைச்சர் பிரிவினைவாதியாகவே செயல்படுகிறார். மதத்தையும் மொழியையும் முன்னிறுத்தி அரசியல் செய்யும் பா..., மானுட உலகிற்கே முரண்பட்ட கருத்தியலையே முன் வைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய ஒன்றியத்தில் அனைத்து அதிகாரப்பூர்வ அலுவலகங்களுக்கும் ஆங்கிலம் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என்ற 343-இன் 2-வது விதி, ஒன்றிய அமைச்சருக்கு ஏனோ தெரியாமல் போனது!

அண்மையில், டெல்லியில் நடைபெற்ற அசுதோஷ் அக்னிஹோத்ரி என்னும் ..எஸ். அதிகாரி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “நமது நாட்டில் ஆங்கிலம் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்படுவார்கள்; அத்தகைய சமூகத்தை உருவாக்குவது வெகு தொலைவில் இல்லைஎன்று பேசியிருக்கிறார். அமித்ஷாவின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் இராகுல் காந்தி, “ஆங்கிலம் ஓர் அணை அல்ல; அது ஒரு பாலம். ஆங்கிலம் ஓர் அவமானம் அல்ல; அது ஓர் அதிகாரம் அளிப்பதாகும். ஆங்கிலம் ஒரு சங்கிலி அல்ல; அது சங்கிலிகளை உடைக்கும் ஒரு கருவியாகும்என்று எதிர்வினை ஆற்றியுள்ளார்.

மேலும், “இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதைப் பா..., ஆர்.எஸ்.எஸ். விரும்பவில்லை என்றும் ஏனென்றால், ஏழைக் குழந்தைகள் கேள்விகள் கேட்க, முன்னேற, போட்டியிட அவர்கள் விரும்புவதில்லை என்றும், இன்றைய உலகில் ஆங்கிலம் நம் தாய்மொழியைப் போலவே முக்கியமானது; ஏனெனில், அது வேலைவாய்ப்பை வழங்கும், தன்னம்பிக்கையை அதிகரிக்கும்என்றும் தெரிவித்துள்ளார். மேலும், “இந்தியாவின் ஒவ்வொரு மொழிக்கும் ஆன்மா, கலாச்சாரம், அறிவு உள்ளது. நாம் அவற்றைப் போற்ற வேண்டும். அதே நேரத்தில் ஒவ்வொரு குழந்தைக்கும் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும். உலகத்துடன் போட்டியிடும், ஒவ்வொரு குழந்தைக்கும் சமவாய்ப்பை வழங்கும் இந்தியாவுக்கான வழி இதுதான்எனவும் தெரிவித்துள்ளார்.

நமது நாட்டின் மொழிகள் நமது கலாச்சாரத்தின் ஆபரணங்கள்என்று குறிப்பிட்ட அமித்ஷா, “வெளிநாட்டு மொழிகளைக் கொண்டு இந்தியாவை நாம் கற்பனைகூட செய்ய முடியாதுஎன்றும்,  “காலனித்துவ அடிமைத்தனத்தின் அடையாளமாக உள்ள ஆங்கிலம் உலகம் முழுவதும் வெறுக்கப்படும்என்றும், அரைகுறையான அந்நிய மொழிகள் மூலம் முழுமையான இந்தியா என்ற கருத்தைக் கற்பனை செய்து பார்க்க முடியாதுஎன்றும் தெரிவித்துள்ளார்.

மொழிகள் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கூறுகள் என்று அவர் கருத்துத் தெரிவித்திருப்பது, பா...-வின், ஆர்.எஸ்.எஸ்.-இன் கருத்தியலுக்கு முரண்பட்டிருப்பதை ஏனோ அவர் அறியாமலிருக்கிறார்.

ஒவ்வொரு மொழியும் அவை பேசப்படும் மாநிலத்தின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் கூறுகள் எனப் பேசும் அவர், அந்த மாநிலத்தின் தனிச்சிறப்புக் கொண்ட மொழியை, தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளை அங்கீகரிப்பதில்லை. ‘மும்மொழிக் கொள்கைஎன்ற போர்வையில் அதைச் சிதைப்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தைக் காலனித்துவத்தின் அடையாளமாகவும், மேலைநாட்டு மொழிகள் அரைகுறையானவைகள் என்று குறிப்பிடுவதும் ஒருபுறம் அவருடைய அறியாமையையும், மறுபுறம் பதவி அதிகாரத்தையும் அடையாளப்படுத்துகிறது.

வரம்புமீறிய அதிகாரத்தின் ஆபத்துகள் குறித்து ஆங்கில எழுத்தாளரும் அரசியல்வாதியுமான லார்டு ஆக்டன் கூறிய, “அதிகாரம் தவறு செய்ய முனைகிறது; முழுமையான அதிகாரம் முற்றிலும் தவறு செய்கிறதுஎன்னும் கருத்து இங்கு நினைவு கூரத்தக்கது.

ஆங்கிலம் இன்று உலகளாவியப் பொதுமொழியாக மாறிவருகிறது; உலகில் அதிகம் கற்கப்படும் இரண்டாவது மொழியாகவும் தாய்மொழி பேசுபவர்களைவிட இரண்டாவது மொழி பேசுபவர்கள் ஆங்கிலத்தையே அதிகம் கொண்டிருப்பவர்கள் என்றும் குறிப்பிடப்படுகிறது. 30 நாடுகளிலும், குடியுரிமைக்கான தனி இறையாண்மை கொண்ட 57 நிர்வாகப் பகுதிகளிலும் ஆங்கிலம் பரவியிருப்பதோடு அறிவியல், அரசியல், தொழில்நுட்பம், உலக வர்த்தகம், சுற்றுலா, விமானப் போக்குவரத்து, பொழுதுபோக்கு, இணையம், கணினி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என எல்லாத் தளங்களிலும் இன்று ஆங்கிலம் அடிப்படை மொழியாகப் பரிணமித்திருக்கிறது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல சர்வதேசக் கூட்டமைப்புகளின் அதிகாரப்பூர்வ மொழியாகவும் இருக்கின்றது.

2021- ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலக அளவில் 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் ஆங்கிலம் பேசுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புப் பெற்ற மொழியைஅடிமைத்தனத்தின் குறியீடுஎன்றும், ‘அரைகுறையான மொழிஎன்றும் குறிப்பிடும் ஒன்றிய உள்துறை அமைச்சரை என்னவென்று கூறுவது?

1959, ஆகஸ்டு 7 அன்று இந்தியாவின் ஆட்சி மொழி குறித்து நிகழ்ந்த நாடாளுமன்ற விவாதத்தில், “கால வரம்பின்றி ஆங்கிலம் ஒரு கூடுதல் மொழியாக நீடிக்க வேண்டும்; மக்கள் விரும்பும் வரை ஆங்கிலம் ஒரு மாற்று மொழியாக இருந்திட வேண்டும். இது தொடர்பாக முடிவு செய்யும் பொறுப்பை இந்தி பேசாத மக்களிடமே விட்டுவிட வேண்டும்என்று நேரு வழங்கிய உறுதிமொழியை, இன்றைய ஒன்றிய உள்துறை அமைச்சர் ஏனோ அறியாமலிருக்கிறார்?

இந்தி மொழி அறியாமல், பல்வேறு மொழிகளைப் பேசுபவர்கள் இருக்கும் இந்தியாவில், இந்தியைக் கட்டாயமாக்கி ஆட்சி மொழியாக்கிடத் துடிக்கிறது பா... அரசு. ஆனால், பல்வேறு மொழி வழி மக்கள் தங்கள் தாய் மொழியோடு ஆங்கிலத்தை அறிந்திருக்கும் சூழலில், அதை இணைப்பு மொழியாக்குவதில் இந்த அரசு எந்த ஒரு முனைப்பும் காட்டுவதில்லை.

அகண்ட பாரதத்திற்கு இந்தி அவசியம்என்று முழங்கும் இவர், அகண்ட உலகிற்கு ஆங்கிலம் அவசியமானதாகப் பரிணமித்திருப்பதை, ஏனோ ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
எங்கே போகிறது... நம் மாணவர் சமுதாயம்?

உழவுத் தொழிலில் நற்பலன் கிடைக்க நாற்று, நாற்றங்கால் இரண்டுமே சிறப்பாக இருக்கவேண்டும். இவற்றுள் ஒன்றின் தன்மை மாறினாலும் நிறைபலன் என்பது எட்டாக்கனியே!

ஒவ்வொரு பள்ளியும் ஒரு நாற்றங்காலே! அங்கு நற்பயிர்கள் நடப்படவும் அல்லது நடப்பட்ட பயிர்கள் யாவும் நன்கு பராமரிக்கப்படவும், நற்பலன் கொடுக்கும் வகையில் அவை யாவும் பண்படுத்தப்படவும் வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். ஆனால், எங்கும் எப்போதும் அது நம் எண்ணம்போல் சீராக, சிறப்பாக அமைவதில்லை.

பள்ளிகளில் நிகழும் அண்மைக்கால நிகழ்வுகளும், அதைத் தொடர்ந்து வெளிவரும் பொதுவெளி ஊடகச் செய்திகளும் பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றன. இன்றைய குழந்தைகளின் வளமான எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.

கடை திறக்கப்பட்டக் கலாச்சாரச் சீரழிவுகளும், கட்டுப்பாடற்றச் சமூகக் கட்டமைப்புகளும் இன்றைய மாணவர் சமூகத்தைப் பெரிதும் சீரழித்துக் கொண்டிருக்கிறதே என்ற குற்றப்பழியுணர்வு நம்மை நாளும் குடைந்து கொண்டிருக்கிறது.

ஆசிரியர்களின் பாலியல் தொந்தரவுகள் ஒருபுறமிருக்க, மறுபுறம் மாணவர் சமுதாயமோ, தங்களுக்குள்ளே சந்திக்கும் கட்டுக்கடங்காத பாலியல் பிரச்சினைகளும் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கின்றன.

கடந்த வாரம், காஞ்சிபுரத்தில் ஒரு பள்ளியில் எட்டு, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்கள் பதினொன்றாம் வகுப்பு மாணவிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்துப் பாலியல் தொந்தரவு செய்து, கைது செய்யப்பட்டுள்ளனர் எனும் செய்தியை எப்படி எடுத்துக்கொள்வது?

உலக அளவில், 13 வயது முதல் 15 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளில் ஏறக்குறைய 50 விழுக்காட்டினர் (150 மில்லியன்) சக மாணவர்களால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாகவும், இந்தியாவில் 2020-ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி 28.9 விழுக்காடு பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாகவும் குறிப்பாக, தென்னிந்தியாவில் 8 முதல் 12 வயதுடைய பெண் குழந்தைகளில் 43.3 விழுக்காட்டினரும், 12 முதல் 14 வயதுடைய பெண் குழந்தைகளில் 22.6 விழுக்காட்டினரும் பாலியல் தொந்தரவுக்கு உட்பட்டதாகவும், 56.6 விழுக்காடு குழந்தைகளுக்குதவறுதலான தொடுதல் (Bad touch) வழியாகப் பாலியல் குற்றங்கள் பள்ளியில் நிகழ்ந்துள்ளதாகவும்யுனிசெப் (UNICEF - United Nations International Children\'s Emergency Fund) எனும் நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.

இராக்கிங், சாதிய உணர்வில் குழுக்களாகச் செயல்படுவது, வன்முறைகளில் ஈடுபடுவது, குடிப்பழக்கம், புகைத்தல் மற்றும் போதைப்பொருள்களுக்கு அடிமையாவது, மாணவர் ஆசிரியர்கள் மீது தொடுக்கும் வன்முறை, ஆசிரியை தன் வகுப்பு மாணவனையே அழைத்துக்கொண்டு தலைமறைவாவது, பிறகு திருமணம் செய்துகொள்வது, ஆண் ஆசிரியர்கள் மாணவியர்மீது கொண்ட பாலியல் சீண்டல்கள், அதைத் தொடரும் வழக்குகள், மாணவ-மாணவியரிடையே மலரும் பாலியக் காதல் உணர்வுகள்... என்ற வரிசையில் இன்று கட்டுப்படுத்த முடியாத நிலையில் மாணவப் பருவத்திலேயே, அதுவும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் பருவத்திலேயே வயது வரம்பு மிஞ்சி நிகழ்ந்திருக்கும் இத்தகைய பாலியல் குற்றங்களுக்கு யார் பொறுப்பாவது? எங்கே போகிறது இந்த மாணவர் சமுதாயம்?

இயற்கையின் படைப்பில் பாலுணர்வு மிகுந்தது மனித இனம் மட்டுமேஎன்கின்றனர் உயிரியல் ஆய்வாளர்கள். அது தக்கப் பருவ நிலைகளில் வளர்நிலை காணவேண்டும். காட்டாற்று வெள்ளம் போல கரைபுரண்டு எழும் பாலுணர்வுகள், அதுவும் மாணவப் பருவத்திலேயே எழுவது உடல்நலத்தின், மனவளர்ச்சியின், அவர்களுடைய உளவியலின் தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. ‘சீரான பாலுணர்வே மனநலத்தின் அடையாளம்என்கின்றது உளவியல் ஆய்வு. இத்தகைய குற்றங்களைச் செய்பவர்களைமனநோயாளிகள்என்று கூறுவதைவிட வேறென்னவென்று கூறுவது?

இக்குற்றச் செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் அன்றாட நிகழ்வுகளும், வாழ்வியல் சூழல்களும், பொழுதுபோக்குச் செயல்பாடுகளும், வளரும் உறவு முறைகளும் நுண்ணியமாகக் கவனிக்கப்பட வேண்டும்.

மனம் போகும் வழியில் கால் போகக்கூடாது என்பதற்காகத்தான் சமூக வாழ்வின் நாகரிகத் தளத்தில் பல கட்டுப்பாடுகளை, அறநெறி வழிமுறைகளை நம் முன்னோர்கள் வகுத்துத் தந்தனர். அவையே உயர்ந்த ஒழுக்கநெறிகளாக நம்மைப் புடமிடுகின்றனஅன்று முதல் இன்றுவரை மனித மனத்தில் எழும் பாலுணர்வுகளை நெறிப்படுத்தும் தளமாக அமைவது நம் குடும்பங்களும் பள்ளிக்கூடங்களுமே!

உடல் சார்ந்த பாலுணர்வைச் சமூகம் சார்ந்த பண்பாட்டுத் தளத்தில் நெறிப்படுத்தி வாழக் கற்றுக்கொள்பவரே நாகரிகம் அறிந்த, ஆளுமை நிறைந்த மனிதர். நமது குழந்தைகளும் நாகரிகம் அறிந்து, ஆளுமை நிறைந்து வளரவே, வாழவே நாம் ஆசைப்படுகிறோம். ஆனால், முறையாகப் பண்படுவதற்கு முன்பே, இன்றைய மாணவப் பருவம் முதிர்ச்சியுற்று, முறைதவறிப் பாலியல் சகதியில் சரிந்து விடுகின்றது. வளரிளம் பருவத்தில் பாலுணர்வு மாற்றங்கள் நிகழ்வது இயற்கை; ஆயினும், பாலுணர்வுச் சிந்தனைகளே மாணவப் பருவத்தின் வாழ்வாகிவிடக்கூடாது.

இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்குபுலனடக்கம்  என்பதன் பொருள் புரிவதில்லை. ஐம்புலன்களையும் நெறிப்படுத்தி வாழும் வாழ்க்கைதான் அறம் நிறைந்தது. எதிலும் வரையறை மீறாமல் வாழ்வதற்குப் பெயர்தான் அறம். மாணவப் பருவத்தில் சீரான பாலுணர்வு கொண்டு, மனநலம் பேணப்பட வேண்டும். மாணவப் பருவம் மட்டுமல்ல, வாழ்வே சிறப்பது மனநலம் பொறுத்தே!

விதை மண்ணுக்குள் மடிவது வளர்நிலை கண்டு நற்பலன் தரவே! விதையை மூடியிருக்கும் மண், விதையை அழுத்துவதற்கன்று; அதனுடைய வளர்ச்சியைத் தடுப்பதற்கன்று; மாறாக, விதை பக்குவப்படுவதற்கே! சமூக ஒழுங்குகளும் ஒழுக்கநெறிகளும் நம்மைப் பண்படுத்துவதற்கே அன்றி, பாலுணர்வுகளைச் சிதைப்பதற்கல்ல என்ற புரிதல் வேண்டும். ஒழுங்குமுறை என்பது தண்டவாளம் போல, வாழ்க்கைப் பயணம் இனிதாக அமைய அவை அவசியமானதன்றோ!

வணிகமயமாகிப்போன இன்றைய வாழ்வியல் தளத்தில் யாவும்நுகர்வுஎன்றே நோக்கம் கொண்டதாகிப் போனதாக மனிதன் நினைக்கின்றான். இன்றைய மாணவப் பருவமும் அதற்கு இரையாகி விட்டது. இழிந்த கலாச்சார வெளிச்சத்தை நோக்கிப் படையெடுத்துப் பாழாகும் விட்டில்பூச்சிகளாகிப் போகின்றனர்.

மாணவச் செல்வங்களே! நம்மை நாமே முழுமையாக உணரும்போதுதான், மற்றவர்களால் சிறிதேனும் சரியாகப் புரிந்துகொள்ளப்படுவோம்! ஒழுக்கநெறி எனும் வேலிகளைத் தாண்டும்போது வெள்ளாடுகளுக்குக் கொண்டாட்டமாகத்தான் இருக்கும். ஆனால், பின்னொரு நாளில், எங்கே வெட்டப்பட்டு விழுந்து கிடக்கும் என்பதை அவை அறிவதில்லை.

மாணவப் பருவத்தின் ஆற்றலை உணருங்கள்; நாளைய உலகில் அது உங்களை வானளாவ உயர்த்திவிடும். ஆகவே, “மாணவர்களே! உங்கள் மாணவப் பருவத்தை உங்களிடமிருந்து எடுத்து விடாதீர்கள்எனும் கவிஞர் வைரமுத்துவின் வரிகள்தான் இப்போது இங்கே நம் நினைவுக்கு வருகின்றன!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
ஒற்றை இலக்கும் ஓராயிரம் திட்டங்களும்!

உன்னதமான சமூக மாற்றங்களை முன்வைத்து, அதை மக்களிடம் முன்னெடுத்துச் செல்லும் முனைப்போடு பிறந்த இயக்கங்கள் அனைத்தும் இன்று தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் காலநீரோட்டத்தில் கரைந்து செயலற்றுப் போய்விட்டன. கட்சி அரசியலில் இன்று கைம்மாறு கருதாத, சுய இலாபம் தேடாத, தன்னலமற்ற, உயர் மதிப்பீடுகள் கொண்ட மனிதர்களைத் தேடிப்பிடிப்பது என்பது எளிதான செயலன்று. 

ஒருபுறம், ஒவ்வொரு கட்சியும் ஆட்சி நாற்காலியில் அமரும் பேராசை கொண்டிருப்பதும், அதே நோக்கத்திலேயே கூட்டணியைக் கட்டமைப்பதும் தமிழ்நாடு அரசியலில் இன்று அன்றாடங்காட்சியாகிப் போனது. மறுபுறமோ, பதவி தரும் சுகங்களுக்கு எதையும் தியாகம் செய்யத் தயாராகிவிட்ட மலிவான மனிதர்களின் அதிகார வேட்டைக்களமாக மாறி நிற்கிறது இன்றைய தமிழ்நாடு அரசியல் களம். இங்கே தன்னலமற்ற தலைவர்களையும், பொதுநலம் கொண்ட தொண்டர்களையும் காண்பது அரிது. அது கண்ணுக்கு எட்டிய தொலைவில் தென்படும் கானல் நீராகிப்போனது.

இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் சம நீதியும் சம உரிமையும் சம வாய்ப்பும் தொடர்ந்து வழங்கப்படவும், எல்லா மக்களும் தங்கள் விருப்பப்படி வளமான வாழ்வை அமைத்துக்கொள்ள முழுமையான வாய்ப்புகள் வழங்கப்படவும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரப் பண்பாட்டின் கூறுகளால் ஒன்றிணைந்திருக்கும் இந்திய நாடு, மாநிலங்களின் தனித்துவத்தைக் காக்கவும், பேணி வளர்க்கவும் திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதையும், அதற்குத் தடையாக இருக்கும் எதிர்மறைச் சிந்தனைகளும், உருவாக்கப்படும் கொள்கைகளும், திட்டமிட்டுக் கட்டமைக்கப்படும் கோட்பாடுகளும் அகற்றப்படவும் கொண்டிருந்த இலக்குகள் எல்லாம் இன்று கேள்விக்குள்ளாகிப் போயின.

காலமாற்றத்திற்கேற்ப கோலம் மாறும்; கோல மாற்றத்திற்கு ஏற்ப கொள்கை மாறும்என்பதுதான் இன்று எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இலக்கணமாகிப் போனது! ஆகவே, ஆட்சியைக் கைப்பற்றவேண்டும் என்பதே ஒற்றை இலக்காகிப் போனது. அதற்காக எதையும் சமரசம் செய்யும் நிலைக்கு இன்று எல்லாக் கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டிருக்கின்றன; கூட்டணி பேரத்திற்குத் தங்கள் கதவுகளைத் திறந்து வைத்திருக்கின்றன.

2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் அதிவேகத்தில் சூடு பிடித்திருக்கிறது. அண்மையில் ஜூன் 9 அன்று மதுரை வந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா, “டெல்லியைப் போலவே 2026-இல் தமிழ்நாட்டிலும் பா... - .தி.மு.. கூட்டணி ஆட்சி மலரும்என்றும், “தமிழ்நாட்டில் 2026 சட்ட சபைத் தேர்தல் ஒவ்வொரு பா... தொண்டர்களுக்கும் முக்கியமான களம்என்றும் கூறியதுடன், “நாட்டின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் என் சிந்தனை தமிழ்நாட்டில்தான் இருக்கும்என்றும் தெரிவித்திருக்கிறார்.

பா...வுடன் ஏற்பட்டிருப்பது கூட்டணி மட்டுமே தவிர, கூட்டணி ஆட்சியில்லைஎனவும், “இதுவே கட்சியின் நிலைப்பாடுஎன்றும் திரு. எடப்பாடி பழனிச்சாமி தெளிவுபடுத்தினாலும், “தமிழ்நாட்டில் 2026-இல் .தி.மு.. - பா... கூட்டணி அமையும்என்று அமித்ஷா அறிவித்தது எடப்பாடி உள்ளிட்ட .தி.மு.. மூத்த தலைவர்கள் தொடங்கி, .தி.மு..வின் மாவட்ட நிர்வாகிகள் வரை அக்கட்சியில் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ‘தங்களிடம் கலந்தாலோசிக்காமல் அமித்ஷாவிடம் திரு. எடப்பாடி பழனிச் சாமி உறுதி ஏதும் கொடுத்திருப்பாரோ?’ என்று .தி.மு.. மூத்த நிர்வாகிகள் ஐயம் கொள்ளத் தொடங்கினர். பா...வுடனான கூட்டணியைக் கூட ஓரளவிற்கு .தி.மு.. தொண்டர்கள் ஒப்புக்கொண்டாலும், கூட்டணி ஆட்சி என்பதை ஏற்கவே மாட்டார்கள்.

இருப்பினும், “ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓரணியில் திரண்டால்தான் தி.மு..வை வீழ்த்த முடியும்; பொது எதிரியான தி.மு..வை வீழ்த்த வேண்டும் என்பதற்காகப் பங்காளிச் சண்டைகளை ஓரமாக வைத்துவிட்டு, தேசிய சனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்படுகிறோம். அதுபோல, தி.மு.. ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர நினைக்கும் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரளவேண்டும்என அழைப்பு விடுத்திருக்கிறார் டி.டி.வி. தினகரன்.

ஆயினும், “அமித்ஷாவின் வருகை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தாதுஎன்றும், “கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காகப் பிரதமர் மோடி அவர்கள் எட்டுமுறை தமிழ்நாடு வந்த போதிலும் ஒரு தொகுதியைக் கூட அக்கூட்டணி கைப்பற்றவில்லை; ஆகவே, உள்துறை அமைச்சர் தமிழ்நாட்டை நோக்கி மேற்கொள்ளும் பயணத்தால் எந்த ஒரு பாதிப்பும் நிகழாது. அது எந்தவோர் அதிர்வு அலையையும் ஏற்படுத்தாதுஎன்றும், மேலும், “.தி.மு.., பா...வைக் கபளீகரம் செய்து, அந்த இடத்தில் பா...வைக் கொண்டு வருவதுதான் அமித்ஷாவின் ஒற்றை இலக்குஎன்றும் தி.மு.. பொதுச்செயலாளர் திரு. ஆர்.எஸ். பாரதி கூறியிருக்கிறார்.

திரு. ஆர்.எஸ். பாரதியின் கருத்திற்கு எதிர்வினையாற்றிய பா... தேசிய மகளிர் அணித் தலைவர் திருமதி. வானதி சீனிவாசன், “.தி.மு.. - பா... கூட்டணி ஏற்பட்டுவிட்டது; அதில் பா...வும் இணையப் போகிறது என்று தெரிந்தவுடன் தி.மு..வுக்குப் பெரும் அச்சம் வந்துவிட்டது. அந்த அச்சத்தின் விளைவுதான் ஆர்.எஸ். பாரதியின் பேச்சுஎன்கிறார். மேலும், .தி.மு.. - பா... கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணைய இருப்பதாகவும், அப்போது தி.மு.. எந்த அளவுக்கு மிரளப் போகிறது என்பதையும்  தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மண்ணில் குறிப்பாக, இன்றைய சூழலில் எப்படியும் உறுதியாகக் காலூன்றிட வேண்டும் என்ற ஒற்றை இலக்குடன் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் பா... கட்சியின் நோக்கத்தை உணர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன், “தி.மு.. கூட்டணி என்பது இடதுசாரிச் சிந்தனைகள் உள்ள அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து உருவாக்கி இருக்கிற ஒரு கூட்டணி. மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில், மதச்சார்பின்மை என்கிற கருத்துகளில் உடன்பாடு உள்ளவர்களால் மட்டும்தான் இந்தக் கூட்டணியில் இணைய முடியும். மதச்சார்பின்மையை முன்னிறுத்துகிற ஓர் அரசியல் கூட்டணி, இந்தியாவிலேயே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணிதான் என்பதை அடித்துச் சொல்ல முடியும்என உறுதிபடக் கூறியுள்ளார்.

இம்மண்ணினுடைய தத்துவம், கோட்பாடு, பொதுநலம், சமூக உறவு, வழிபாடு, இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் என யாவற்றையும் காவி மயமாக்கத் துடிக்கும் பா... அரசு, எப்படியும் இத்தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற வேண்டும் என்று திட்டம் கொண்டிருக்கிறது. அதற்காகக் கூட்டணி உறவுகள், சமரசப் பேச்சுகள், தொண்டர்கள் சந்திப்பு எனக் களப்பணிகளை முன்னெடுக்கும் பா...வுடன் அவர்களின் ஊடகத் தொழில்நுட்பப் பிரிவு திறம்படப் பணியாற்ற முடுக்கி விடப்பட்டிருக்கிறது. ஆகவே, இந்த ஊடகத் தொழில்நுட்பப் பணிக்குழு, பா...வின் சாதனைகளைப் பட்டியலிடுவதற்குப் பதிலாக, மற்ற கட்சிகளின் செயல்பாடுகளை, கொள்கைகளை, தலைவர்களின் பேச்சுகளை விமர்சித்துப் பதிவிடுவதையே முதன்மையான நோக்கமாகக் கொண்டிருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

ஆகவே, எப்படியும் அதிகாரத்தைக் கையில் பெறவேண்டும் என்னும் ஒற்றை நோக்குடன் ஓராயிரம் திட்டங்களோடு தேர்தல் பந்தயத்தில் ஓடத் தயாராகிக் கொண்டிருக்கிறது பா...

அரசியல் கட்சிகளின் தலைமையின் பலவீனத்தைப் பயன்படுத்தி ஆதாயம் தேடும் திட்டம், வெளிப்படையாகப் பகிரங்கப்படுத்த முடியாத பணிகளுக்காகக் கிரிமினல் குற்றவாளிகளை அரவணைக்கின்ற திட்டம், முன்னிலையில் இருக்கும் கட்சியின் வாக்குகளைப் பிரிப்பதற்காகப் பல சிறு கட்சிகளை மறைமுகமாக ஆதரிக்கும் இரகசியக் கூட்டணித் திட்டம், மற்ற கட்சித் தலைவர்கள் பகிரும் எல்லாக் கருத்துகளுக்கும் பொதுத்தளங்களிலும் ஊடகத் தளங்களிலும் சமூக வலைதளங்களிலும் உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும் என்கின்ற திட்டம்... எனப் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஆயினும், வாக்குச்சீட்டின் வலிமை அறியாமல், தவறான மனிதர்களை ஆட்சி நாற்காலையில் அமரச் செய்து ஏழ்மையையும் வறுமையையும் பொய்மையையும் ஏமாற்றத்தையும் அரவணைத்துக் கொண்ட பாமர மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது நம் அனைவருடைய கடமை.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்

news
தலையங்கம்
முற்றும் முரண்பாடு: யாரேனும் சொல்லுங்களேன்!

தமிழர் வாழ்வும் வாழ்வியலும் நாளுக்கு நாள் மிகவும் சிக்கலாகிக் கொண்டே வருகிறது. மரபார்ந்த நம் மண்ணின் இலக்கிய, பண்பாட்டு, கலாச்சார விழுமியங்கள் பறிபோய்க் கொண்டே இருக்கின்றன. காலங்காலமாக நம் மூதாதையர்களால் வளர்த்தெடுக்கப்பட்டுக் கட்டிக்காக்கப்பட்ட பண்பாட்டு விழுமியங்கள், திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்ட அரசியல் அரங்கேற்றத்தால் களவாடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. நாம் விழித்துக்கொள்ள வேண்டிய தகுந்த தருணம் இதுவே!

பொய்மையும் போலித்தனமும் நிறைந்த மனிதர்களே புன்னகை முகம் போர்த்தி, அதிகார ஆளுமைகளாய் நம் சமூக வீதிகளில் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். உண்மை உறங்காதெனினும், உண்மையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு, பொய்மையை உலாவ விடுகின்றனர்பொய்மையை மீண்டும் மீண்டும் கூறும்போது, அது உண்மையாகிவிடும் என்ற தவறான எண்ணம் அவர்களின் கருத்தியலாகிப் போனது. ஆகவே, சமுதாயத்தின் எல்லாத் தளங்களிலும் சந்தர்ப்பவாதிகளின் சாகசங்களையே நம்மால் காணமுடிகிறது.

பண்பற்றவனாயினும் பணம் படைத்தவன் வார்த்தையே வேதமாகிப் போகிறதுஎன்னும் கூற்று பல வேளைகளில் இங்கு, இன்று உண்மையாகிப் போகிறது. அரசியல் என்னும் நாடக மேடையில் கற்றறிந்தவர்போல் சிலர் இருந்தாலும், அவர்களின் கடைச்சரக்கு மிகவும் மலிவானதாகத்தான் இருக்கிறது. என்ன செய்வது? இவர்கள் ஆளுகின்றபோது நாம் வாழ்கின்றோம் என்று அங்கலாய்ப்பதைத் தவிர!

ஆயினும், உண்மையை நாம் உரக்கக் கூறவேண்டும். பொய்யாமொழி, தமிழ்மறை, உலகப் பொதுமறை எனும் சிறப்புக் கொண்ட திருக்குறள் ஒரு தொன்மையான தமிழ்மொழி அற இலக்கியம் என்பது உலகறிந்த பேருண்மை.

அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று பகுப்புகளைக் கொண்ட மானுட வாழ்வியல் நூல் அது! மாந்தர்தம் அக வாழ்வில் (சு)மூகமாகக் கூடி வாழவும், புற வாழ்வில் இன்பமுடனும் இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்கும் வாழ்வியல் நூலிது.

வாய்மை, கருணை, அன்பு, பொறுமை, சுய கட்டுப்பாடு, நன்றியுணர்வு, கடமை, சான்றாண்மை, ஈகை, விருந்தோம்பல், இல்வாழ்க்கை, நலம், ஒழுக்கவியல், பரத்தமையோடு கூடாமை, கல்லாமை, மது உள்ளிட்ட போதைப்பொருள்களையும் சூதாடுவதையும் தவிர்த்தல், நட்பு, கூடாநட்பு, கூடா ஒழுக்கங்களை விலக்குதல், தனிநபர் ஒழுக்கம், ஆட்சியர் ஒழுக்கம், அமைச்சர்களின் பண்பு, சமூகநீதி, அரண், போர், கொடியவருக்குத் தண்டனை, கல்வி, உழவு போன்ற அரசியல் சமூகக் கருப்பொருளை உள்ளடக்கிய அறநெறிகளை விளக்குவதால், “அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்நூல், பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றதுஎன்றுஇந்திய இலக்கியங்களின் கருத்துக் களஞ்சியம்என்னும் நூலில் குறிப்பிடுகிறார் மோகன்லால் எனும் இலக்கிய ஆய்வாளர்.

மதச்சார்பற்ற தன்மையினாலும், அனைவருக்குமான பொதுஅறங்களைக் கூறுவதாலும் அனைத்து மக்களாலும் பெரிதும் போற்றப்படும் உன்னத இலக்கியமாகத் திருக்குறள் பார்க்கப்படுகிறது. எல்லா நூல்களிலும் காணப்படும் அனைத்துச் சிறந்த அறங்களையும் தேர்ந்தெடுத்து எல்லாரும் ஏற்றுக் கொள்கின்ற வகையில் பொதுப்படையாகத் திருவள்ளுவர் வழங்கி இருப்பதால் பரிமேலழகர், “எல்லா நூல்களிலும் நல்லன எடுத்து, எல்லார்க்கும் பொதுப்படக்  கூறுதல் இவர்க்கு இயல்புஎன்று வள்ளுவருக்குப் புகழாரம் சூட்டுகிறார்.

மேலும், திருக்குறளின் மேன்மையைக் குறிப்பிடுகையில்சங்ககாலத் தமிழரிடையே காணப்பட்ட குற்றங்களையும் குறைகளையும் மறுத்துரைத்து, அவர்தம் பண்பாட்டு முரண்களைத் திருத்தியும் பிழைபட்ட வாழ்வியலை மாற்றியும் தமிழ்க் கலாச்சாரத்தினை நிரந்தரமாக வரையறை செய்த நூலாகத் திருக்குறள் திகழ்கிறதுஎன்கிறார்உலகத் தமிழ் இலக்கிய வரலாறுஎனும் நூலில் பேராசிரியர் தமிழண்ணல்.

வள்ளுவர் வழங்கிய திருக்குறள் வாழ்வியல் அறம் பேசும் ஓர் இலக்கண நூல். அறம் அனைவருக்கும் பொதுவானது என்ற சிந்தனையில் அறத்தை மையமாக வைத்தே இந்நூல் இயற்றப்பட்டதால் திருக்குறள்அறம்என்ற பெயராலும் வழங்கப்படுகிறது என்கின்றனர் தமிழ் அறிஞர்கள்ஆகவேதான், நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி, “அறவாழ்விற்கான தன்னிகரில்லா நூல் இதுதான்; வள்ளுவரின் பொன்மொழிகள் என் ஆன்மாவை ஊடுருவியவைஎன்றும், “குறள் தமிழ்மொழிக்கு ஓங்கி நிற்கும் ஒரு புகழாரம்என்று ஆங்கிலிக்க அருள்பணியாளர் ஜான் இலாசரஸ் என்பவரும், “உலகின் அனைத்துத் தலைசிறந்த ஆராய்ச்சிச் சிந்தனைகளின் ஒட்டுமொத்த தொகுப்பே திருக்குறள்என்று அமெரிக்கக் கிறித்தவ அருள்பணியாளர் இம்மான்ஸ் . வைட் என்பவரும் புகழாரம் சூட்டுகின்றனர். “தமிழின் தலையாய நூலான திருக்குறள் மனித சிந்தனைகளின் தூய்மையான வெளிப்பாட்டின் உச்சம்என்று வர்ணிக்கிறார் பிரெஞ்சு மொழியில் இதனை மொழிபெயர்த்த .எஸ். ஏரியல்.

தமிழரின் இலக்கிய அடையாளமாய், வாழ்வியல் அறம் பேசும் பண்பாட்டுக் களஞ்சியமாய், மானுடச் சமூகத்தின் பொதுமறை பேசும் இலக்கண நூலாய் சிறப்புப் பெற்றிருக்கும் திருக்குறளைச் சனாதனத் தர்மத்தின் வழியில் அடையாளப்படுத்த முயல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி. அண்மையில் சென்னகரை சுப்பிரமணியன் எழுதியவள்ளுவத்தில் மெய்ஞானம்என்னும் நூலைத் திருச்சியில் வெளியிட்டுப் பேசிய தமிழ்நாடு ஆளுநரின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஆளுநரின் பேச்சை அப்படியே மேற்கோள்காட்ட விழைகிறேன்: “உலகின் பல நாடுகள் ஆட்சியாளர்களாலும் இராணுவத்தாலும் கட்டமைக்கப்பட்டவை. ஆனால், பாரதம் ரிஷிகளாலும் துறவிகளாலும் சனாதன தர்மத்தாலும் உருவான நாடு. அதனால் உலக அளவில் பாரதம் தனித்துவம் பெற்ற நாடாகத் திகழ்கிறது. மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் தர்மம் ஒன்றுதான்; அது சனாதன தர்மம் மட்டும்தான்! பாரதம், தர்மம் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை; தர்மம் அழிந்தால் நாடு அழிந்து விடும். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்என்ற எண்ணம் எல்லார் மனத்திலும் உருவாகக் காரணமாக இருப்பவை கோவில்கள். அத்தகைய தெய்வீக உத்தரவுகள் நிறைவேற்றப்படும்போது நாடு தெய்வீகத் தேசமாக ஒளிரும். திருக்குறள் ஓர் ஆன்மிகப் புத்தகம்; சில அரசியல் சிந்தனையாளர்கள் ஆன்மிகத்திலிருந்து திருக்குறளைப் பிரித்துப் பார்க்கிறார்கள். சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர் (‘தி இந்து தமிழ் திசை, பக். 10) என்று பேசியிருக்கிறார் தமிழ்நாடு ஆளுநர்.

எப்போதும் முரண்பட்ட கருத்துகளையே விதைத்துவரும் ஆளுநரின் இப்பேச்சு, இன்று முரண்பாடுகளின் உச்சநிலையை எட்டியிருக்கிறது. நாட்டின் கட்டமைப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறார்; அனைத்து மதங்களின் தர்மமும்சனாதன தர்மம்ஒன்றையே வலியுறுத்துவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்; ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்என்ற பேருண்மை இந்திய ஒற்றுமை, சகோதரத்துவ உணர்வு அடிப்படையில் மலர்ந்ததாக அல்லாமல் கோவில்களே இத்தகைய உணர்வைத் தருவதாகப் பிதற்றியிருக்கிறார்; எல்லாவற்றிற்கும் மேலாக சனாதன தர்மத்தின் மிகப்பெரிய துறவி திருவள்ளுவர் என இந்துத்துவா சிந்தனைகளைச் செலுத்தித் திருவள்ளுவரை ஓர் இந்துத் துறவியாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.

பொதுவெளியில், மேடை விழாக்களில் பேசுவதற்காக மட்டுமல்ல, தனிப்பட்ட விதத்திலும் அவருக்கு இத்தகைய சிந்தனை எதார்த்தமாக எழுவது வன்மையாகக்  கண்டிக்கத்தக்கது. ஆயினும், இத்தகைய மேடைப்பேச்சுகள் கட்டமைக்கப்பட்ட கலாச்சாரத்திரிபாகவும் திருடாகவுமே அனைவராலும் பார்க்கப்படும். ஆகவே, இத்தகைய செயல்பாடுகளையும் முரண்பாடுகள் கொண்ட பேச்சுகளையும் ஆளுநர் அவர்கள் தவிர்ப்பது நல்லது.

தமிழ் சிந்தனையாளர்கள், இலக்கியவாதிகள், தமிழ் ஆய்வாளர்கள் என யாவரும் அவ்வப்போது ஆளுநரின் முரண்பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்கு எதிர்வினை ஆற்றினாலும் அதுசெவிடன் காதில் ஊதிய சங்காகவேஇருக்கிறது.

ஆளுநர் மட்டுமல்ல, தமிழர் மரபை, பண்பாட்டை, கலாச்சாரத்தை, இலக்கிய வளமையைத் திரித்துப் பேசுவதும் மறுத்துக் கூறுவதும் அன்றாடச் செயல்பாடாகக் கொண்டிருக்கும் பலருக்கு இத்தகைய எச்சரிக்கையும் கண்டனமும் அவர்களின் காதுகளுக்கு எட்ட வேண்டும் என்று நாம் எண்ணினாலும், அது பல வேளைகளில்கேட்கச்  செவியுள் ளோர் கேட்கட்டும்என்றே நாம் நிலைப்பாடு எடுக்க வேண்டியதாக அமைகிறது.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்