உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த 2024 - அமெரிக்கத் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சார்ந்த வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஜனநாயகக் கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸைத் தோற்கடித்ததன் மூலமாக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.
1893 -ஆம் ஆண்டு
கிரோவர் கிளீவ்லேண்டின் வெற்றியில் நிகழ்ந்தது அந்த வரலாறு. அதாவது, தோல்வி அடைந்த ஓர் அதிபர் நான்கு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் போட்டியிட்டு மீண்டும் அதிபரானார். அந்த வரலாறு மீண்டும் அமெரிக்காவில் தற்போது அரங்கேறியிருக்கிறது.
இந்த
வரலாற்றுப் பதிவுடன் 2020 - ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தனது 77 வயதில் போட்டியிட்டு வெற்றி கண்ட தற்போதைய
அதிபர் ஜோ
பைடனின் வயதையும் கடந்து, தனது 78- வது வயதில் அமெரிக்காவின் அதிபர் ஆகிறார் ட்ரம்ப். இதன்
மூலம் அதிக வயதில் அமெரிக்க அதிபராகத் தேர்வானவர் என்ற பைடனின் சாதனையையும் இவ்வெற்றியின் மூலம் முறியடித்திருக்கிறார்.
6.71 கோடி பொதுமக்கள்
வாக்குகளையும், 224 பிரதிநிதிகளின் வாக்குகளையும் பெற்ற கமலா ஹாரிஸைவிட, 7.19 கோடி பொதுமக்கள் வாக்குகளையும், 295 பிரதிநிதிகளின் வாக்குகளையும் பெற்று மிகப்பெரிய வெற்றியைக் கண்டிருக்கும் ட்ரம்ப், அமெரிக்க நாட்டின் 47-வது அதிபராக ஜனவரி 20, 2025 அன்று அரியணை ஏறுகிறார்.
அமெரிக்காவில்
அதிபர் தேர்தல் சற்றே வித்தியாசமானது. புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்க குடிமக்கள் நேரடியாக வாக்களிப்பதுபோலத் தோன்றினாலும், அந்த வாக்குகள் ஒவ்வொரு மாகாணத்திலும் கட்சியின் சார்பாக இருக்கும் தேர்தல்-பிரதிநிதிகளுக்கே (எலக்ட்ரஸ்) கிடைக்கும். அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் மாகாணங்கள் சார்பாக உள்ள ‘செனட்டர்’
எனப்படும் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்தல்-பிரதிநிதிகளின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும்.
மக்கள்தொகை
அதிகம் உள்ள மாகாணங்கள் மட்டும் தேர்தல் முடிவைத் தீர்மானிக்கக்கூடாது என்பதற்காகவும், ஒவ்வொரு மாகாணத்திற்கும் சம பங்களிப்பு இருக்க
வேண்டும்; கறுப்பின மக்களுக்கும், அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இருக்கும் பிற சமூக மக்களுக்கும் சமமான, முறையான பங்களிப்பு இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த வாக்குமுறை அங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.
அதன்
அடிப்படையில் அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில் 535 மக்கள் பிரதிநிதிகள் உள்ள நிலையில், கொலம்பியா மாகாணத்திற்குக் கீழவையில் பிரதிநிதிகள் இல்லாத காரணத்தால் அந்த மாவட்டம் சார்பாகத் தனியாக மூன்று பிரதிநிதிகள் கணக்கிடப்பட்டு, 50 மாகாணங்களுக்குமாக மொத்தம் 538 பிரதிநிதிகள் நியமிக்கப்படுவர். அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களான 270 பேரின் வாக்குகளைப் பெறும் வேட்பாளர் வெற்றி வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்.
மாகாணங்களில்
பொதுமக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெறும் வேட்பாளர் அந்த மாகாணங்களில் உள்ள அனைத்துத் தேர்தல்-பிரதிநிதிகளின் வாக்குகளையும் பெறுகிறார். குறிப்பாக, டெக்ஸஸ் மாகாணத்தில் 56.3 விழுக்காடு பொதுமக்கள் வாக்குகளைப் பெற்ற ட்ரம்ப், அம்மாகாணத்தின் தேர்தல்-பிரதிநிதிகளான 40 நபர்களின் வாக்குகளையும்
பெறுகிறார்.
ட்ரம்பின்
இந்த வெற்றியை எளிதாக நாம் கடந்து சென்றுவிட முடியாது. இவருடைய வெற்றி மிகப்பெரிய சரிவிருந்து மீண்டு வந்த வெற்றி! 2020 -ஆம் ஆண்டு தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வி
அடைந்த சில தினங்களில் முடிவை ஏற்றுக்கொள்ள மறுத்த ட்ரம்பின் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து கலகம் செய்தனர். அவ்வேளையில் ‘ட்ரம்ப் அரசியலில் இருந்து அப்புறப்படுத்தப்படுகிறார்’ என்றும்,
அவரது அரசியல் வாழ்க்கை சரியத் தொடங்கிவிட்டது, முடிவை நோக்கி நகர்கிறது என்றும் உலக அரசியலே அன்று கணித்தது.
ஆயினும்,
குற்றவியல் வழக்குகள், நீதிமன்றத் தீர்ப்புகள், இரு கொலை முயற்சிகள்... எனத் தன்மேலுள்ள பல தடைகளையும் தாண்டி
இன்று வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார் ட்ரம்ப்.
“பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த தேர்தல் பரப்புரையின்போது அவரது காதை உரசிச் சென்ற துப்பாக்கித் தோட்டா ஓர் அங்குலம் தள்ளிப் பாய்ந்திருந்தால் அமெரிக்க வரலாறே மாறியிருக்கும்” என்கிறார்கள்
அரசியல் விமர்சகர்கள்.
தொடரும்
வழக்குகள், நீதிமன்றத் தீர்ப்புகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரைத் தகுதி நீக்கம் செய்யப் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட
போதிலும், எல்லாச்
சவால்களையும் எதிர்த்துப் போராடி அமெரிக்க வரலாற்றில் அரசியலின் அடி ஆழத்துக்கு அழுத்தப்பட்டு அதிலிருந்து எழும் பீனிக்ஸ் பறவையைப்போல் மீண்டெழுந்த தலைவர் என்ற புதிய வரலாற்றை எழுதியிருக்கிறார் ட்ரம்ப்.
ட்ரம்பின்
இத்தகைய வெற்றியால் அவருடைய அரசியல் வருகை உலக அரசியலில் மிகப்பெரிய அளவில் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா எல்லாரும் குடியேறும் பரந்த நாடாக இருக்கும் தன்மையிலிருந்து மாறி, இனி எல்லைப் பாதுகாப்பில் அதிகக் கவனம் கொண்டிருக்கும். எளிதாக இனி அமெரிக்காவில் எவரும் குடியேற முடியாது. குடியேற்றச் சட்டங்கள் கடுமையாக்கப்படும் எனக் கணிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அதை
மெய்ப்பிக்கும் வண்ணம் தனது வெற்றிக்குப் பின் உரையாற்றிய டொனால்டு ட்ரம்ப், “அமெரிக்காவின் எல்லையை நாம் பாதுகாக்கப் போகிறோம்; அமெரிக்காவின் ஒவ்வொரு தன்மைகளையும் மாற்றி நாட்டைச் சரிசெய்யப் போகிறோம்; இனி நான் ஓய்வெடுக்கப் போவதில்லை. மக்களுக்காகத் தினமும் களம் காணப் போகிறேன். அமெரிக்காவின் பொன்னான காலமாக இனி இது இருக்கப் போகிறது. ‘Make America Great Again’ என்ற கொள்கைக்கு ஏற்றபடி அமெரிக்காவில் ஆட்சி செய்வோம்”
என்று சூளுரைத்திருக்கிறார்.
ட்ரம்பின்
இந்த வெற்றியால் அமெரிக்காவின் வளர்ச்சியில் மட்டுமின்றி, உலக வர்த்தகம், பொருளாதாரம், கல்வி, அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, மனிதவளம், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனப் பல தளங்களில் உலகளாவிய
மாற்றங்களும் தாக்கங்களும் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி
பெற்ற அதிபரை வாழ்த்தும் உலக நாடுகளின் தலைவர்களின் வாழ்த்துச் செய்தியும் கூற்றும் இதை உறுதி செய்வதாகவே இருக்கின்றன. பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், “சுதந்திரம், சனநாயகம் உள்ளிட்டவற்றைக் காப்பதோடு, வளர்ச்சி, பாதுகாப்பு, புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் என வரும் காலங்களில்
அமெரிக்கா -பிரிட்டனிடையிலான உறவு சிறப்புற செழிப்படையும்” என
நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், ஆஸ்திரேலிய பிரதமர் அல்பனேசியும் தங்கள் நாடுகளுக்கிடையே மிகப்பெரிய உறவுக் கூட்டணி நிகழும் எனவும், தொடர்ந்து ஒன்றாகப் பணியாற்ற வலுவான கட்டமைப்பை உருவாக்குவதாகவும் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். ஜெர்மனியின் பிரதமர் ஓலா சோர்ஸ், “இரு நாடுகளும் இணைந்து தங்கள் நாட்டு மக்களின் நல்வாழ்வைக் கருத்தில் கொண்ட பணிகளைத் தொடர வேண்டும்”
என அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்தியப்
பிரதமரோ, பாதுகாப்பு, எரிசக்தி, விண்வெளி நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் வலுப்பெறும் வகையில் மீண்டும் இணைந்து பணியாற்றத் தான் காத்திருப்பதாக அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், இந்தியா-அமெரிக்கா இடையிலான உலகளாவிய விரிவான மற்றும் வியூகக் கூட்டாண்மை மேலும் வலுப்பெறுமென எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
தனது
வெற்றியின் மூலம் வரலாற்றுச் சாதனைகள் படைத்திருக்கும் அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை வாழ்த்துவோம். உலக நாடுகளுக்கிடையே அமைதியையும், ஒற்றுமையையும் பேணவும், உலக அளவில் ஒட்டு மொத்த மானுட வளர்ச்சிக்கான முன்னெடுப்புகளில் சிறப்பாகப் பங்காற்றவும் வேண்டுவோம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
‘விடுதலை’ என்னும் மெய்யியல், இறையியல், உளவியல், அரசியல், ஆன்மிகக் கோட்பாடு இன்று சமூகவியல் நிலைப்பாடாக உருமாறியிருக்கிறது. சமூக-அரசியல் தளத்தில் விடுதலை என்பது தனி மனிதனின் தன்னுரிமை மற்றும் அறநெறிப் பொறுப்புகள் என்பதை உணர்த்துகின்றன. விடுதலை - சமூகப் பொருளாதார வாழ்வில் சமத்துவத்திற்கான அறைகூவல்.
“நம் சமுதாயப் பொருளாதார வாழ்வில் இன்னும் எத்தனை காலம் நாம் சமத்துவத்தை மறுக்க முடியும்? கூடிய விரைவில் இந்த முரண்பாட்டை அகற்றாவிடில், ஏற்றத்தாழ்வினால் அவதியுறும் மக்கள் ‘அரசியல் சனநாயகம்’
என்ற கட்டமைப்பை வெடிவைத்துத் தகர்த்து விடுவர்” என்றார் அரசியல் நிர்ணய சபையில் அண்ணல் அம்பேத்கர். “பணக்காரருக்கும் பசித்தவருக்கும் இடையில் பிளவு நீடிக்கும் வரை அகிம்சை சார்ந்த அரசுக்கான சாத்தியம் இல்லை; பணம் படைத்த வர்க்கம் தன் செல்வத்தையும் அதிகாரத்தையும் தாமே முன்வந்து ஏழையுடன் பகிர்ந்து கொள்ளத் தவறினால் வன்முறை மிகுந்த இரத்தப் புரட்சி ஒரு நாள் தவிர்க்க முடியாததாகிவிடும்” என்று
(India of my dreams) குறிப்பிடுகிறார் மகாத்மாகாந்தி. நாடு அரசியல் விடுதலை அடைந்தாலும் மக்களின் சமூக, பொருளாதார விடுதலை அவசியம் என்பதை வலியுறுத்தினார்கள் இந்த மகான்கள்.
நாடுகள்
விடுதலை அடைந்தாலும், மக்கள் ‘உரிமை’,
‘வாழ்வு’ என
வசந்தம் கொண்டாலும் அவர்களின் சமூகச் சிந்தனையில் படிந்துகிடந்த அடிமை, ஏற்றத்தாழ்வு, வறுமை, ஏழ்மை என்ற இருள்சூழ் தன்மைகளைக் கிழித்திடும் விடுதலைச் சிந்தனைகளைப் பரப்பிட உதித்த சூரியன்தான் ‘21 -ஆம் நூற்றாண்டின் சமூகச் சிற்பி’ என அழைக்கப்படும் ‘ஏழைகளின்
பாதுகாவலர்’ குஸ்டாவோ
குட்டியரஸ்.
இவர்
விடுதலை இறையியல் என்னும் தனது ஆழமான கருத்தியல் வாயிலாக ஒடுக்கப்பட்டவர்களின் வாழ்வில் கிறிஸ்துவின் இருத்தலைப் பற்றிய புதிய பார்வையைத் திரு அவைக்கு அறிமுகப்படுத்தியவர். நீதி, அமைதி, மனித மாண்பிற்கான சிந்தனைகளைத் திரு அவை கடந்து உலக அளவில் வழங்கியதால் ‘ஏழைகளின் திருத்தூதர்’ (Apostle of the Poor) என்றும் அழைக்கப்படுகிறார்.
தென்
அமெரிக்காவின் பெரு நாட்டில் லீமா நகரில் 1928 -ஆம் ஆண்டு ஜூன் எட்டாம் நாள் பிறந்த இவர், டொமினிக்கன் துறவற சபை அருள்பணியாளராகவும், இறையியல் பேராசிரியராகவும், விடுதலை இறையியலின் தந்தையாகவும் அறியப்படுகிறார். 1971-ஆம் ஆண்டு வெளியிட்ட தனது ‘விடுதலை இறையியல்’
(A Theology of Liberation) என்னும்
நூலின் வழியாக இக்கருத்தியலை முன்வைத்து இலத்தீன்-அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் எதிர்கொள்ளும் வறுமை மற்றும் ஒடுக்குமுறையைக் களைவதற்கான திரு அவையின் நிலைப்பாடு மற்றும் செயல்பாடுகள் பற்றித் தெளிவுபடுத்தினார்.
விடுதலை
இறையியல் என்பதை வெறுமனே இறையியல் சிந்தனையில் மலர்ந்த ஒரு புதிய கூடுதல் கருத்தாக்கமாகக் கருதாமல், புதிய இறையியலாக்கச் சிந்தனையாக, செயல்முறையாக வரையறுத்துக் கொடுத்தார். விடுதலை மற்றும் மேய்ப்புப்பணி இறையியல் என்பது செய்முறை அல்லது செயல்முறை இறையியல் (Practical Theology) என்று
உருமாற்றம் பெறவும் வழிகாட்டினார்.
இரண்டாம்
வத்திக்கான் திருச்சங்கத்திற்குப் பிறகு எழுந்த இந்த மாற்றுச் சிந்தனை, இறையியலாளர்கள் மத்தியிலும் திரு அவைப் பணியாளர்கள், சமூகச் சிந்தனையாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, புரட்சியை விதைத்து அவர்களின் மேய்ப்புப்பணியில் ஏழையோரின் நிலைப்பாட்டை முன்னெடுக்க வைத்தது. பல்வேறு அருள்பணியாளர்கள் ஏழைகள், விளிம்புநிலை மக்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக அர்ப்பணத்துடன் பணியாற்றவும் வழிகாட்டியது.
அநீதியைச்
சுட்டிக்காட்டுவதும் உண்மையை எடுத்துரைப்பதும், துணிந்த நேர்கொண்ட பார்வை கொண்டிருப்பதும் ஓர் இறைவாக்கினருக்குரிய அளவுகோல். அத்தகைய பார்வையில் நம் காலத்து இறைவாக்கினராகவே இவர் அறியப்படுகிறார்.
“கடவுள் உங்களை அன்பு செய்கிறார் என்று எப்படி ஏழைகளிடம் சொல்லமுடியும்?” என்ற ஒற்றைக் கேள்வியில் எழுந்ததுதான் இவருடைய மேய்ப்புப்பணியும், இறையியல் சிந்தனையும். ஏழைகள், ஒடுக்கப்பட்டோரின் சமூகப் பொருளாதார நிலைப்பாட்டை உயர்த்தும் வாழ்வியல் முறையே மீட்பு (Salvation), விடுதலை (Liberation) என்னும் இறையியல் கொள்கையோடு தொடர்புடையது என வலியுறுத்தினார். சமூகப் பொருளாதார
அநீதிகளே மக்களின் ஏழ்மைக்கான அடிப்படைக் காரணங்களாக வரையறுத்தார். இந்த அநீதிகள் அகற்றப்படும் பொழுது கடவுளின் நீதி நிறைந்த இறையரசை (Kingdom of God) மண்ணில்
கட்டி எழுப்ப முடியும் என்று உறுதி
பூண்டார். ஆகவே, விடுதலை இறையியல் என்பது இலத்தீன்-அமெரிக்க நாடுகளிலும், அடிமைச் சூழல் கொண்ட சமூகத்திலும் ஏழைகளின் முன்னேற்றத்திற்கான அழைப்பாக, இறைக் கோட்பாடாக முன்னெடுக்கப்பட்டன.
விடுதலை
இறையியலின் கூற்றுப்படி, “ஒரு நீதியான சமூகத்தை நோக்கி நாம் நகர வேண்டும்; சமூக மற்றும் அரசியல் மாற்றத்தை மக்கள் வாழ்வில் கொண்டுவர வேண்டும்; அடிமைப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட, நசுக்கப்பட்ட தொழிலாளர் வர்க்கத் திற்கு வாழ்வு கொடுக்க வேண்டும். ஏழையாகப் பிறந்த இயேசு, தம்மை ஏழை எளியவரோடும், தாழ்த்தப்பட்டவரோடும், விளிம்புநிலை சமூகத்தோடும் அடையாளப்படுத்தி, அவர்களை மையம் கொண்ட பணிகளை மேற்கொண்டதுபோல, அவருடைய சீடர்களும்-சீடத்திகளும் அத்தகைய பணியில் ஈடுபட வேண்டும்”
என அழைப்பு விடுத்தார்.
ஆகவே,
விடுதலை இறையியல் ‘ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலையை’
வலியுறுத்தும்
ஓர் இறையியல் அணுகுமுறையாகவும், சமூகப் பொருளாதாரப் பகுப்பாய்வுகளில் ஈடுபட்டு ஏழை
மக்களின்மீது சமூக அக்கறை கொண்டு ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் விடுதலை’ என்ற அறைகூவலோடு சமத்துவத்தை நிலைநாட்டும் ஓர் உன்னதக் கோட்பாடாகவும் இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வறுமை
மற்றும் சமூக அநீதிக்கு எதிர்வினை என்னும் சிந்தனையில் மலர்ந்த விடுதலைக் கூறுகளால்தான் அமெரிக்க, ஆப்பிரிக்க நாடுகளில் மலர்ந்த கறுப்பின விடுதலை இறையியல், பெண்ணிய விடுதலை இறையியல், இந்தியத் துணைக் கண்டத்தில் மலர்ந்த தலித் விடுதலை இறையியல், பழங்குடியினர் விடுதலை இறையியல், சூழலியல் விடுதலை இறையியல், தமிழ்த் தேசிய விடுதலை இறையியல் என்ற சிந்தனைகள் தளிர்விட்டிருக்கின்றன. ஏழைகளின் தளத்தில் அவர்களின் பார்வையில் இருந்து விடுதலைக்கான கூறுகளை ஆராய்ந்து, தெளிவான முன்னெடுப்புகளை மறுமலர்ச்சி எண்ணங்களில் எடுக்க வேண்டும் என்பதுதான் இந்த இறையியலின் அடிப்படைக் கூறாக அமைந்திருக்கிறது. இத்தகைய பெரும் மாற்றுச்சிந்தனையைத் திரு அவையிலும், உலக அளவிலும் ஏற்படுத்தியவர் குஸ்டாவோ குட்டியரஸ்.
ஆகவேதான்,
அவருடைய இறுதிச்சடங்குக்கான இரங்கல் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அருள்பணியாளர் குஸ்டாவோ அவர்கள் திரு அவையில் ஓர் உயர்ந்த மனிதர்” என்றும், “மறைபரப்புக்கான கனிகளையும், வளமான இறையியலையும் எவ்வாறு வழங்குவது என்பதன் அடையாளமாக”
இருப்பதாகவும்
புகழாரம் சூட்டினார்.
அவ்வாறே,
இந்தியத் திரு அவையும், “குஸ்டாவோ அவர்களின் கருத்துகள் திரு அவையின் பணியினை ஆழமாக வடிவமைத்துள்ளன” என்றும்,
“ஒன்றிப்பு மற்றும் பணிக்கான புதுப்பிக்கப்பட்ட புரிதலுக்கு வழிவகுத்ததுடன் இரக்கமுள்ள, நீதியுள்ள உலகிற்காக உழைக்க எண்ணற்றவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கும்” என்றும்
புகழாரம் சூட்டுகிறது.
திரு
அவை சமூக நீதியை முன்னிலைப்படுத்திய மேய்ப்புப்பணியை மேற்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த
அருள்பணியாளரான ‘விடுதலை இறையியலின் தந்தை’ குஸ்டாவோ அவர்கள் தனது 96-வது வயதில் (அக்டோபர் 22, 2024) மறைந்தாலும், அவருடைய கருத்தியல் காலத்தால் அழியாத கருவூலம். சாதி, சமயம், இனம், வர்க்கம், நாடு, பாலினம் எனும் அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட இச்சமூக அமைப்பைத் தகர்த்து சமத்துவமும், சகோதரத்துவமும் கொண்ட ஏற்றத்தாழ்வற்ற புத்துலகம் படைக்க பல புரட்சியாளர்களைத் திரு அவையிலும்,
சமூகத்திலும் இக்கருத்தியல் தொடர்ந்து உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
சமத்துவ விடியல்
தூரமில்லை;
சமதர்மம் தழைக்கும்
வானமே
எல்லை!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
2021-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-லிருந்து தமிழ்நாட்டு அரசியல் மேடையில் சர்ச்சைக்குரிய ஒரு கதாபாத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் இரவீந்தர நாராயண இரவி எனப்படும் தமிழ்நாடு ஆளுநர் R.N. இரவி. ‘பாவம்’ என்று இவர்மீது பரிதாபப்படுவதா, இல்லை... ‘ஏன் இப்படிச் செய்கிறார்?’ என்று இவர்மீது கோபப்படுவதா? ஒன்றும் புரியவில்லை.
ஒரு பொம்மை வேகமாக இயங்குவதற்குத் தொடர்ந்து சாவி கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு சாவி கொடுக்கப்பட்டவுடன் பொம்மை அதிவேகமாக இயங்கும்; அதன் பிறகு சற்றே மெதுவாக நிலைத்தன்மை அடையும். அது மீண்டும் சாவி கொடுக்கப்பட்டவுடன் வேகமாக இயங்கத் தொடங்கும். இதுவே தொடர்கதையாகும். அவ்வப்போது டெல்லி சென்று வரும் ஆளுநரின் கதையும் அப்படியாகத்தான் இருக்கிறது.
சிலருக்கு ‘தொட்டதெல்லாம் துலங்கும்’ என்பார்கள். பாவம், இவருக்குத் தொட்டதெல்லாம் தொடக்கத்திலிருந்தே சர்ச்சையாக வெடிக்கிறது. திருவிளையாடலில் வரும் தர்க்கக் காட்சியில் தருமி கேட்கும் ‘சேர்ந்தே இருப்பது?’ என்ற கேள்விக்கு இன்றைய நவீன விடையாக ‘ஆளுநரும் - சர்ச்சைகளும்’ என்றுதான் பதில்கூற வேண்டியிருக்கிறது.
சென்னை, தூர்தர்ஷன் (டிடி தமிழ்) தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழாக் கொண்டாட்டத்துடன் நடைபெற்ற ‘இந்தி மாதக் கொண்டாட்டம்’ நிறைவு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாடு ஆளுநர் அண்மையில் கலந்துகொண்டபோது, அவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தைகள் புறக்கணிக்கப்பட்டது தற்போது தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையாகவும், பேசுபொருளாகவும் இருக்கிறது. இதற்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்களும், தமிழ் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆளுநரைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதும் நினைவிருக்கலாம்.
‘திராவிடம்’ என்பது தமிழைக் குறிக்கும் சொல்லாகப் பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வருவதும், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்பன திராவிட மொழிகளின் குடும்பம் என்பதும் ஆய்வுப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட பேருண்மை. திராவிட மொழிகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட இராபர்ட் கால்டுவெல், ‘திராவிட அல்லது தென்னிந்திய குடும்ப மொழிகளின் ஒப்பியல் இலக்கணம்’ (Comparative grammar of the Dravidian or South Indian family of languages) என்னும் தனது நூலில் குறிப்பிடும் வரலாற்றுப் பதிவு இது. 1856-இல் இந்நூல் வெளியிடப்பட்ட பின்னரே இச்சொல் பரவலாகத் திராவிட இனக் குடும்பத்தை ஆழமாகக் குறிப்பிடத் தொடங்குகிறது என்கிறார்கள் மொழி வல்லுநர்கள்.
தென்னிந்தியாவில் பேசப்படும் இந்தத் திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழ் தவிர்த்த ஏனைய மொழிகள் பெருமளவு வடமொழிச் சொல் கலப்பிற்கு உட்பட்டு மாற்றம் அடைந்துவிட்டன. ஆயினும், தமிழ் மட்டுமே திராவிடச் சொற்களுடன் பேசப்படக்கூடிய மொழியாக இன்றும் இருந்து வருகிறது. தனித்து நின்று வளம் சேர்க்கும் இத்தாய்மொழி, செம்மொழியாக உயர்ந்திருப்பது இதன் பெரும் அடையாளம்.
‘திராவிடர்’ என்னும் சொல் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி ஒன்றைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும் சொல்லாடலாகும். இந்திய மண்ணில் வடக்கே வாழும் மக்கள் பேசும் இந்தோ-ஆரிய மொழிகளுடன் அடிப்படையில் எந்தத் தொடர்பும் இல்லாத மொழிக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்த மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படுவதை மொழி வல்லுநர்கள் கண்டறிந்தார்கள். அடிப்படையில் தனி இனமாக உருவெடுத்த அந்த இனத்தை ‘திராவிடர்’ என அடையாளப்படுத்தினர். ஆதிக் குடிகளாக அவர்கள் அறியப்பட்டார்கள். ஆகவே, ‘திராவிடம்’ என்ற சொல் ஆதித் தமிழ் குடியின் அடையாளம்; இது கூட்டுக் குடும்பத்தின் அடையாளம். தமிழ் மொழி தன் குழந்தைகளை வாஞ்சையோடு அரவணைத்துக் கொண்டதன் பெரும் அடையாளம்-திராவிடம்.
தமிழ்நாட்டு மண்ணில் தனித்தமிழ் இயக்கங்கள் பல தோன்றினாலும், திராவிடக் குடும்பத்தின் பண்பாடும், கலாச்சாரமும், மொழி ஒற்றுமையும் இம்மண்ணில் உயர்ந்தே நிற்கிறது. ‘திராவிடம்’ என்ற சொல்லாடலையும், கால்டுவெல் என்னும் மொழிப் புலமைகொண்ட ஆளுமையையும் ஏற்றுக் கொள்ள முடியாத ஆரியமும், ஆரிய சித்தாந்தம் கொண்டவர்களும் திராவிடக் கருத்தியலைச் சிதைக்க மேற்கொண்ட போராட்டங்கள் நேற்று இன்று அல்ல; இது வரலாறு கண்ட நிகழ்வு. தமிழ் நாட்டின் ஆளுநர் அதன் நீட்சியாகவே இன்று நிற்கிறார். ஒன்றிய அரசுக்குக் கீழ் செயல்படும் நிர்வாக அதிகாரியான இவர், தன் எஜமான் இட்டக் கட்டளையைக் கருத்தாய்ச் செய்து வருகிறார்.
தமிழ்நாடு அரசு விழாக்களில் பிற மொழிப் பாடல்களைத் தவிர்க்கும் வகையிலும், சமயச் சார்பற்ற அரசின் நோக்கிற்கு ஏற்ப சமயச் சார்பினைத் தவிர்க்கும் வகையிலும் தமிழ் வாழ்த்துப் பாடல் ஒன்றினை அறிமுகப்படுத்த அண்ணா விரும்பினார். இது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் பிறந்த தமிழறிஞர் பேராசிரியர் பெ. சுந்தரம்பிள்ளை எழுதிய ‘மனோன்மணியம்’ என்னும் நாடக நூலில் அமைந்த ‘நீராருங் கடலுடுத்த’ எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலும், கரந்தை கவியரசுவின் ‘வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே’ என்னும் பாடலும் பரிந்துரை செய்யப்பட்டபோது, ‘நீராரும் கடலுடுத்த’ என்னும் பாடல் தேர்வு செய்யப்பட்டு, அண்ணாவின் மரணத்திற்குப் பிறகு 1970, மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தன்று சென்னையில் நடைபெற்ற திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் இப்பாடல் பாடப்பட்டு, ‘இனிமேல் அரசு விழாக்களில் பாட வேண்டும்’ என அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களால் அறிவிக்கப்பட்டது. பின்பு 1970, ஜூன் 17 அன்று அது அரசாணையாக வெளியிடப்பட்டு, நவம்பர் 23 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்பாடலுக்கு அழகுற இசை அமைத்துப் பெருமை சேர்த்தவர் இசை மாமேதை எம்.எஸ். விஸ்வநாதன் அவர்கள்.
தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக எந்த ஆட்சி அமைந்தாலும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அரசு விழாக்களிலும், அரசு சார்பு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களின் விழாக்களிலும் பாடப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தாக அமைந்த இப்பாடலை 2021 -ஆம் ஆண்டு டிசம்பர் 17 அன்று இன்றைய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மாநிலப் பாடலாக அறிவித்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு துவங்குவதற்கு முன்பு கட்டாயம் பாடப்பட வேண்டும் என அரசாணை பிறப்பித்தார்.
மாநிலப் பாடல் என்பது தேசிய கீதத்திற்குச் சமமாக, சிறப்பும் மதிப்பும் வாய்ந்தது. மாநில உணர்வுகளுக்கு மதிப்பளித்து சாதி, சமய வேறுபாடு இன்றி மக்களை ஒன்றுபடுத்துவதில் மாநிலப் பாடல்களின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிடக் கூடாது. ஆயினும், உலகெங்கும் வாழும் தமிழரின் அடையாளமாகவும், பெருமையாகவும் பேசப்படும் இப்பாடல் அவ்வப்போது ஆரிய சித்தாந்தத்தால் சீண்டப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
புனித தேவசகாயம் அவர்கள் 2022 -ஆம் ஆண்டு மே 15 -ஆம் நாள் புனிதராக உயர்த்தப்பட்ட திருச்சடங்கில் உரோமையில் உலகளாவிய கத்தோலிக்கத் திரு அவையின் முன்பாகத் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது நமக்குப் பெருமை. ஆயினும், 2018 -ஆம் ஆண்டு ஜனவரி 24 -ஆம் நாள் சென்னையில் பேராசிரியர் ஹரிஹரன் எழுதிய தமிழ் - சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்ததும் காட்சியானது; இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அவ்வாறே ‘திராவிடம்’ என்ற சொல்லை நீக்கி தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். தமிழ்நாட்டையும், தமிழ் நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஆளுநரின் ஒவ்வொரு சர்ச்சைக்குப் பிறகும் அந்தக் கருப்பொருள் மிகப்பெரும் அளவில் பேசு பொருளாக இருப்பது கண்கூடாகிறது. இதுவும் அப்படித்தான். கடந்த சில நாள்களாகத் தமிழ்த்தாய் வாழ்த்து உலகமெங்கும் மீண்டும் மீண்டும் பாடப்படுவதும், பகிரப்படுவதும் இப்பாடலின் மேன்மையை இன்னும் உரக்கச் சொல்கிறது. ஆரியப் படையில் பல இரவிக்கள் வந்தாலும், மொழி-அடையாள விமர்சனங்கள் தந்தாலும் தமிழும் தமிழினமும் ஒருபோதும் தாளாது; என்றும் வீழாது!
இவ்வேளையில்,
‘எழுத்தும் நீயே, சொல்லும் நீயே!
பொருளும் நீயே, பொற்றமிழ் தாயே!
அகமும் நீயே, புறமும் நீயே!
முகமும் நீயே, முத்தமிழ் தாயே!
உனக்கு வணக்கம் தாயே,
என்னை உலக மாந்தராய் உய்யச் செய்வாயே!’
என்னும் கவிஞர் வைரமுத்துவின் வரிகள்தான் நம் நினைவுக்கு வருகின்றன.
அன்புத் தோழமையில்,
அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்
முதன்மை ஆசிரியர்