என் இனிய வாசகப் பெருமக்களே,
உங்கள்
பேராதரவிற்கு மிக்க நன்றி! இரு மாதங்கள், அதாவது 60 நாள்கள் - அறுபதாயிரம் வாசகர்கள் என வளர்நிலை நோக்கி
நகர்ந்துகொண்டிருக்கிறது
‘நம் வாழ்வு’ மின்னஞ்சல் நாளிதழ் (E-Newspaper).
‘நம் வாழ்வு’
- வார இதழ், ‘கல்விச் சுரங்கம்’
- மாணவர் மாத இதழ், ‘நம்
வாழ்வு’ பதிப்பகம்
- மாதம் ஒரு நூல்... எனப் பயணித்த தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகம், இன்று உலகம் எண்ணிமத் தொழில்நுட்பத்தில் பயணிக்கும் இச்சூழலில், காலத்தின் அறிகுறிகளைக் கருத்தாய்க் கணித்து, அதன் இலக்கைச் சற்றே கூர்மைப்படுத்தி, எண்ணத்தை ஆழமாய்த் தெளிவுபடுத்தி ஐம்பது ஆண்டுகாலக் கனவை இன்று நனவாக்கியிருக்கிறது.
மிகப்பெரிய
பொருள்செலவில் அச்சகம் நிறுவப்பட்டு, விலைவாசி விண்ணை முட்டி நிற்கும்
இக்காலத்தில், அன்றாட நாளிதழாக அச்சிட்டு, நாள்தோறும் பரவலாக்கம் என்பது பெரும் சவாலே. ஆயினும், இறைவன் தந்த மாபெரும் கொடை, வளர்ந்து வரும் எண்ணிம அறிவியல் தொழில்நுட்பம். இது கடவுள் தந்த களம்; காலம் தந்த தளம்!
செய்திகளை
உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் தொழில்நுட்பம் வந்த பிறகு, அதற்கான வாய்ப்புகள் கனிந்த பிறகு, நமது அச்சு ஊடகப் பணியின் செயல்பாட்டையும் பயன்பாட்டையும் சுய ஆய்வும் கள ஆய்வும் செய்ததன்
வெளிப்பாடுதான், ‘எண்ணிமத் தொழில்நுட்பத்தில் நாம் தடம் பதிக்கவேண்டும்’ என்ற
சிந்தனை. அதன் அடிப்படையில், அச்சு ஊடகப் பணியகத்தின் அத்தனை பிரிவுகளும், புதிய வலைதளம், ‘நம் வாழ்வு’ செயலி, சமூக ஊடகங்களின் பயன்பாடு, ஃபிளிப் புக் (மின்னணுப் புத்தகம்), சந்தாதாரர்களின் தரவுகளைப் பாதுகாக்கும் மென்பொருள், மின்னஞ்சல் வழியாகப் பகிரப்படும் வார இதழ், உயர் தொழில்நுட்ப வடிவமைப்பு, மாதா தொலைக்காட்சி மூலம் பரவலாக்கம் என எண்ணிமத் தொழில்நுட்பத்தின்
அனைத்துத் தளங்களிலும் பயணிக்கத் தொடங்கியுள்ளது.
இத்தகைய
தொழில்நுட்பம் கைகூடிய பிறகு திரு அவைச் செய்திகள், திருத்தந்தையின் முழக்கங்கள், உலக அமைதிக்கான அவருடைய கருத்துகள், உலகளாவிய
அளவில் கிறித்தவர்களின் நிலைப்பாடு, அவர்களின் வாழ்வியல் முறை, சந்திக்கும் எதிர்வினைகள், ஆசிய-இந்திய- தமிழ்நாட்டின் இன்றைய அரசியல் சூழலில் கிறித்தவர்கள், சிறுபான்மையினர் அறிய வேண்டிய தரவுகள் என யாவற்றையும் உடனுக்குடன்
வழங்குவது காலத்தின் கட்டாயமானது.
புத்தக
வாசிப்பு, பத்திரிகை
வாசிப்பு, வார-மாத இதழ்களைப் புரட்டுவது என்னும் நமது அன்றாடப் பழக்கத்தை இன்றைய இளைய தலைமுறையினரிடம் காண்பது அரிதாகிப் போனது. அதேவேளையில், எண்ணிமத் தொழில்நுட்பம் அவர்களைச் சூழ்ந்துகொண்டதும், அதுவே உலகமென அவர்கள் கருதிக்கொண்டதும் காலமாகிப் போனது. அவர்களையும் வாசிப்பவர்களாக மாற்றவேண்டும், அரசியல்-ஆன்மிக-சமூகச் சிந்தனைகளில் நாட்டம் கொண்டவர்களாக வளர்க்கவேண்டும், மாண்புமிக்க மானுடச் சமூகத்தின் உலகச் சிந்தனைகளை உள்வாங்கவேண்டும் என்னும் எண்ணத்தில் பிறந்ததுதான் ‘நம் வாழ்வு’ மின்னஞ்சல் நாளிதழ்.
இது
இளையோருக்கும் இன்றைய தலைமுறையினருக்கும் கத்தோலிக்கக் கிறித்தவருக்கும்... ஏன், யாவருக்கும் பயன்படும் காலப் பெட்டகம்! இது உலகெங்கும் வாழும் தமிழ்க் கத்தோலிக்கக் கிறித்தவர்களின் சமூகத்தளத்திலும், ஊடக உலகத்திலும் நாளை நிறைந்திருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அத்தகைய பொழுதைக் காண எம் கண்கள் தவமிருப்பதே எமது கனவாகிறது.
இன்றைய
சமூகமும் மானுட
வாழ்வியலும் அன்றாடச் செய்திகளால் கட்டமைக்கப்படுகின்றன. உண்மையும்-பொய்மையும் கலந்தே உலா வருகின்றன. பல வேளைகளில் பொய்மை
புகழப்படுகிறது, உண்மை ஓரங்கட்டப்படுகிறது; பொய்மை-பசுத்தோல் போர்த்திய புலியாக உலா வருகிறது; உண்மையற்றத் தரவுகள் ஓங்கி ஒலிக்கின்றன. போலிகள் உண்மையைப் போலவே உருவெடுத்துள்ளன; ‘கல்யாணி கவரிங்’ போலவே நம்மையும் நம்பவைத்து விடுகின்றன. உண்மைகள் உரசிப் பார்க்கப்படவேண்டும். அது நீதியின் தளத்தில், நேர்மையின் தடத்தில், அன்பின் வழியில் உரசிப் பார்க்கப்படவேண்டும். கிறிஸ்துவின் மனநிலையில், திருவிவிலியத்தின் வழிநின்று, இறையரசின் மதிப்பீடுகளில் நாம் அதை உரசிப் பார்க்கவேண்டும்.
இன்றைய
சூழலில், ஒரு நாட்டின் சமூக-அரசியல்-பொருளாதார மற்றும் கலாச்சாரக் கட்டமைப்பை வடிவமைப்பதில் செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளின் பங்கு அளப்பரியது.
இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டில் அரசிற்கும் அதன் குடிமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது இத்தகைய
ஊடகமே!
குறிப்பாக,
மக்கள்மன்றப் பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்படுவதையும்
விவாதிக்கப்படுவதையும்
செயல்படுவதையும் உறுதிசெய்வது இவ்வூடகமே. வரலாற்று ரீதியாகத் தகவல்களைப் பரப்புவதற்கும், ஆட்சியாளர்களையும் அதிகாரிகளையும் அதற்காகப் பொறுப்பேற்க வைப்பதற்கும், தேசிய நீரோட்டத்தில் பொதுமக்களின் ஈடுபாட்டை வளர்ப்பதற்கும் ஒரு மூலைக்கல்லாகச் செயல்படுவதும் ஊடகமே!
மக்கள்
மத்தியில் சமூகப் பிரச்சினைகளை எடுத்துச்சென்று விழிப்புணர்வு கொடுப்பதிலும் நீதியின் வழியிலும் உண்மையைச் சுமந்த வாழ்விலும் அவர்களை இயக்கங்களாகக் கட்டமைப்பதிலும் ஊக்குவிப்பதிலும் இவ்வூடகங்களின் பங்கு மிகப்பெரிது.
மக்களின்
சமூக வாழ்வியல் பிரச்சினைகளான வறுமை, கல்வி, சுகாதாரம் மற்றும் ஊழல் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி, உண்மை மற்றும் நீதிக்கான குரலாக இவை ஓங்கி ஒலிக்கின்றன. தவறான தகவல் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் போன்ற சவால்கள் இருந்தபோதிலும், நடுநிலை தவறாத ஊடகங்களும் சமூகத்தில் உண்டல்லவோ! ‘நம் வாழ்வு’ வார இதழ் இப்பணியைத் துணிவோடும் தெளிவோடும் கடந்த 50 ஆண்டுகளாக ஆற்றிவருவது பெருமைக்குரியதே!
நவீன
ஊடக நிலப்பரப்பில் குறிப்பாக, இந்திய மண்ணில் கருத்துரிமை என்பது அண்மைக் காலங்களில் மிகப்பெரிய கேள்விக்குறியாகி இருக்கிறது. இத்தகைய சூழலில், கருத்துச் சுதந்திரம், உண்மையை எடுத்துச்சொல்வதில் சந்திக்கும் இடர்ப்பாடுகள், பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ஆயினும், அமெரிக்காவின் மூன்றாவது அதிபராக இருந்த தாமஸ் ஜெபர்சன் குறிப்பிடுவதுபோல, “நமது சுதந்திரம் பத்திரிகை சுதந்திரத்தைப் பொறுத்தது; அதை இழந்துவிடாமல் காக்கவேண்டியது நமது கடமை.”
இவ்வேளையில்
வாசிப்பு, ஊடக எழுத்தறிவு, பத்திரிகைத்துறை சார்ந்த கல்வி, செய்திகளில் உண்மைத்தன்மை, தவறான தகவல்களை எதிர்கொள்ளும் விதம், தொழில்நுட்பக் கருவிகள் பயன்பாடு உள்ளிட்ட பன்முக அணுகுமுறையில் நாமும், நமது எதிர்காலத் தலைமுறையினரும் விழிப்படைய வேண்டியுள்ளது.
சமூக
நீதியை முன்னிலைப்படுத்தி, சமூக மாற்றத்திற்கு வித்திடும் முயற்சியில் ‘நம் வாழ்வு’ முன்னெடுத்திருக்கும் இந்த முயற்சிக்குத் தொடர்ந்து கரம்கொடுக்க வேண்டுகிறேன். மாற்றங்களை மனத்தில் கொண்டு நேர்மறையான அணுகுமுறையுடன் நேரிய நேர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தி, சமூகச் சீர்திருத்தம் காண்போம்.
காட்சி ஊடகப் போதை தெளியட்டும்;
கடக்க வேண்டிய பாதை தெரியட்டும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
உண்மையுள்ள இடத்தில்தான் நீதி இருக்கும்; நீதி இருக்கும் இடத்தில்தான் வெற்றி இருக்கும். உண்மையும் நீதியும் நெருங்கியத் தொடர்பு உடையவை. உண்மை உன்னதமானது; உண்மையைவிடச் சிறந்தது உலகில் எதுவுமில்லை. உண்மை எப்போதும் உச்சம் கொண்டது. உண்மை இல்லாத இடத்தில் உயர்ந்த அறமும் இருப்பதில்லை; நீதியும் உலாவருவதுமில்லை. உண்மையும் நீதியும் ஒன்றையொன்று தழுவிக்கொள்ளும்.
“உண்மை என்பது பின் தொடரப்படுவது அல்ல; கண்டறியப்படுவதும் அல்ல; புத்தகங்களைப் புரட்டியோ, அனுபவங்களைத் திரட்டியோ அறியக்கூடியதும் அல்ல; மாறாக, அது உண்மையாகவே என்றென்றும் நீடித்து நிற்பவை” என்கிறார் தத்துவ ஞானி கே. கிருஷ்ணமூர்த்தி. அந்த உண்மைதான் இறைமையோடு அடையாளப்படுத்தப்படுகிறது. அந்த உண்மையை எடுத்துக்கூறுவதாலும் நிலைநாட்டுவதாலும் நீதிமன்ற நீதிபதிகள் உண்மையைச் சார்ந்தவர்களாக, நேர்மையாளர்கள் (noble man - my lord) என அழைக்கப்படுகிறார்கள்.
இந்திய
மக்களாட்சி அரசியல் அமைப்பைத் தாங்கிப் பிடிக்கும் சட்டமன்றங்கள் (The Legislature),
நிர்வாகத்துறை (The Executive),
நீதித்துறை (The Judiciary)
மற்றும் ஊடகத்துறை (The Media) எனும் வரிசையில் மிகவும் குறிப்பிடத்தக்கது நீதித்துறை. இந்திய அரசியலமைப்பு நீதித்துறையைச் சட்டத்தின் பாதுகாவலராகச் செயல்பட அதிகாரம் அளிக்கிறது. அதுவே இந்திய அரசியலமைப்பு தரும் மக்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறது; அவற்றை உறுதிசெய்கிறது.
மற்ற
துறைகளிலிருந்து விலகிநின்று தனித்துவமான அதிகாரம் கொண்ட அமைப்பாக நீதித்துறை விளங்குகிறது. இந்த நீதித்துறையின் முழுச் சுதந்திரம் அரசியலமைப்பின் அடிப்படை மற்றும் பிரிக்க முடியாத தன்மையாகும். சட்டச் செயல்பாடுகளில் நீதித்துறை நடுவராகச் செயல்படுவதுடன், அரசியலமைப்பில் உள்ள சிக்கல்களை மறுஆய்வு செய்யும் தளமாகவும், நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்றங்கள் இயற்றும் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பு வழங்கும் வரம்புகளை மீறுகிறதா? எனக் கண்காணிப்பதையும் அடிப்படைச் செயல்பாடாகக் கொண்டிருக்கிறது. அரசின் பிற துறைகள் நீதித்துறையின் செயல்பாட்டில் தலையிட முடியாது. இன்று அதுவும் கேள்விக்குறியாக இருப்பது வேறு கதை.
அரசின்
எந்தவொரு துறையும் நிறுவனமும், நாட்டின் எந்தவொரு குடிமகனின் அடிப்படை உரிமையும் மீறப்படாமலிருப்பதை உறுதி செய்கிறது. இதுவே சட்டத்தை விளக்கி, சர்ச்சைகளைத் தீர்த்து, அனைத்துக் குடிமக்களுக்கும் நீதி வழங்கும் அதிகார அமைப்பாகும். சனநாயகத்தின் காவல் தெய்வமாகவும், அரசியலமைப் பின் பாதுகாவலராகவும் கருதப்படும் இந்த நீதித்துறை அண்மைக் காலங்களில் தனது மாண்பினை இழந்து வருவது மிகவும் வேதனையளிக்கிறது. நீதித்துறையின் சுதந்திரம் பராமரிக்கப்படுவதையும் பாதுகாப்பதையும் உறுதி செய்யும் பல விதிகளை அரசியலமைப்பு
வழங்கியபோதும் அதன் சுதந்திரமும் அதிகாரமும் அண்மைக் காலங்களில் குறிப்பாக, பா.ச.க.
ஆட்சியில் கேள்விக்குறியாகிவருவது வருந்தத் தக்கது.
குறிப்பாக,
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாயை
நோக்கி வழக்குரைஞர் ராகேஷ் கிஷோர் காலணியை வீச முயன்ற நிகழ்வு, ஒட்டுமொத்த நீதித்துறையையே அவமானத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்தச் செயலுக்கான நியாயத்தைக் குறிப்பிடும் அவர், “சனாதன தர்மத்தை அவமதிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாது”
என்ற முழக்கத்தை எழுப்பியிருப்பது இன்னும் அதிர்ச்சி அளிக்கிறது.
உச்ச
நீதிமன்றத் தலைமை நீதிபதிகளான பி.ஆர். கவாய்
மற்றும் நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ள வழக்குகள் குறித்து நீதிமன்ற அறை எண் ஒன்றில் வழக்குரைஞர்களிடம் கேட்டறிந்து கொண்டிருந்தபோது உச்ச நீதிமன்ற வளாகத்திலேயே இந்நிகழ்வு நடைபெற்றிருப்பது நீதிமன்றத்தின் மாண்பினைக் கேள்விக்குறியாக்குகிறது. “இதுபோன்ற நிகழ்வுகளால் கவனம் சிதற வேண்டாம்; இது எங்களைப் பாதிக்கவில்லை; எங்களின் கவனமும் சிதறவில்லை” என்று
எந்தவிதத் தயக்கமும் இன்றி தலைமை நீதிபதி பி.ஆர். கவாய்
குறிப்பிட்டாலும் இந்த இழிசெயலின் குற்றத்தையும் இதன் பின்னணியில் இருக்கும் சனாதன நோக்கத்தையும் நாம் எளிதாகக் கடந்து சென்றுவிட முடியாது.
“உச்ச நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இத்தாக்குதல் ஒவ்வோர் இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது; இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது; இத்தகைய சூழலைத் தலைமை நீதிபதி அமைதியாகக் கையாண்ட விதம் பாராட்டுக்குரியது” என்று
ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடி குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்ட பதிவில், “உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான தாக்குதல் முயற்சி இதுவரை நடைபெறாத வெட்கக்கேடான நிகழ்வு; இது நமது நீதித்துறையின் கண்ணியம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான தாக்குதலாகும். நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறைப் பதவியை அடைந்துள்ள நபரை மிரட்டி அவமானப்படுத்தும் முயற்சியாகும்; கடந்த 10 ஆண்டுகளில் நமது சமூகத்தில் வெறுப்புணர்வு, மத வெறி ஆகியவை
எந்த அளவு பரவியுள்ளது என்பதை இந்தச் செயல் காட்டுகிறது” என்று
கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அவ்வாறே,
“தலைமை நீதிபதி பி.ஆர். கவாயைத்
தாக்க முயற்சித்தது, இந்திய அரசியலமைப்பின்மீது நடத்தப்பட்ட தாக்குதல்; தலைமை நீதிபதியுடன் தேசம் நிற்க வேண்டும்”
எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்
வெளியிட்டுள்ள செய்தியில், “உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீதான தாக்குதல் வெட்கக்கேடானது; இது நமது சனநாயகத்தின் மீது உயர்ந்த நீதித்துறை அலுவலகத்தின் மீதான தாக்குதலாகும். இது கடுமையான கண்ட னத்திற்குரியது; தலைமை நீதிபதி கருணை, அமைதி, பெருந்தன்மையுடன் இதற்குப் பதிலளித்த விதம் நீதித்துறையின் வலிமையைக் காட்டுகிறது; ஆனால், இந்த நிகழ்வை நாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது; நீதிபதியைத் தாக்க முயன்றவர் தனது செயலுக்கான காரணத்தை வெளியிட்டிருப்பது நமது சமூகத்தில் அடக்குமுறை, ஏற்றத்தாழ்வு மனநிலை இன்னும் எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது; நீதித்துறை உள்ளிட்ட அமைப்புகள் மீது மரியாதை ஏற்படுத்தும் கலாச்சாரத்தை நாம் வளர்க்க வேண்டும்”
என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இத்தகைய
விமர்சனங்கள் கண்டனங்கள் எழுந்த போதிலும் இச்செயலில் ஈடுபட்ட வழக்குரைஞர் சிறிதும் மனவருத்தம் தெரிவிக்காது, “கடவுள் சொல்லித்தான் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கவாயைத் தாக்க முயன்றேன்; நான் எந்தத் தவறும் செய்யவில்லை; எனக்கு எந்த வருத்தமும் இல்லை; மன்னிப்பு கேட்க மாட்டேன்”
என்று ஆணவத்துடன் பேசுவது இந்தக் குரலுக்கான பின்புலத்தையும் நீதித்துறையில் இச்சமூகத்திற்கு இருக்கும் செல்வாக்கையும் சற்றே எண்ணிப் பார்க்கச் செய்கிறது.
குற்றங்களுக்கு
நீதிபதிகளிடமிருந்து தண்டனை பெற்றுத்தர வழக்காடும் வழக்குரைஞரே, நீதிபதிக்கு எதிராகச் செயல்பட்ட பெருங்குற்றத்தில் சிக்கி இருப்பது வேதனை அளிக்கிறது. இது வேலியே பயிரை மேய்ந்த கதையாகத்தான் இருக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மேன்மையும், நீதித்துறையின் மாண்பும் அண்மைக்காலங்களில் கேள்விக்குள்ளாகி வருவது வருந்தத்தக்கதே!
இத்தகைய
சூழலில் புரட்சிக் கவிஞன் பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன...
‘இனியொரு
விதி செய்வோம் -அதை
எந்த நாளும்
காப்போம்!’
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
தமிழ்நாட்டில் இன்று என்ன நடக்கிறது? தமிழ்க் குடிகளின் அரசியல் புரிதல் என்ன? தேர்தலை எதிர்கொள்ளும் அரசியல் கட்சிகளின் கள நிலவரம் என்ன? கேள்விக்குறியாகும் இளையோரின் எதிர்காலம்தான் என்ன? என ஆயிரம் கேள்விகள் வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல் அண்மைக் காலங்களில் சமூகத் தளம் நோக்கி, நம் சிந்தனை நோக்கி நாளும் பாய்ந்து கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் செப்டம்பர் 27-ஆம் நாள் ஒரு கருப்பு நாளாகவே மாறிப்போனது. வரலாற்றின் கருப்புப் பக்கங்களாகிப்போன கரூர் துயர நிகழ்வு கூடுதலாக இன்னும் ஆயிரமாயிரம் கேள்விகளை முன்வைக்கின்றன.
தமிழக
வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 18 பெண்கள், 9 குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு முன்பு ஓர் அரசியல் கட்சியின் பரப்புரைக் கூட்டத்தில் இதுபோன்ற துயர நிகழ்வுகள் நடைபெற்றதில்லை என்கின்ற அளவுக்கு இந்தக் கூட்ட நெரிசல் மரணங்கள் பேசு பொருளாகியிருக்கின்றன.
பல்வேறு
அரசியல் கட்சிகளின் தலைவர்களாலும் அரசியல் விமர்சகர்களாலும் சமூகச் செயல்பாட்டாளர்களாலும் இந்நிகழ்வு குறித்துப் பல்வேறு கருத்துகளும் கண்டன அறிக்கைகளும் வெளிவந்தாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் கூற்றை நாம் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது.
“கரூர் கொடுந்துயரத்தில் பா.ச.க
தனது அரசியல் விளையாட்டைத் தொடங்கியுள்ளது; கரூரில் நடந்த கொடூரத்தைப் பற்றி உண்மையைக் கண்டறியும் குழுவை அமைத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது; இந்நிலையில் காங்கிரஸ் பேரியக்கம் உடனடியாக இதுபோன்ற உண்மையைக் கண்டறியும் குழுவை நியமித்து கரூருக்கு அனுப்பி வைக்கவேண்டும்; பா.ச.க-வின் சதியை முறியடிக்க காங்கிரஸ் கட்சியின் தலையீடு உடனடியாகத் தேவைப்படுகிறது” எனத்
தெரிவித்திருக்கிறார்.
இக்கூற்றை,
தொல். திருமாவளவனின் கருத்தாகவும் குற்றச்சாட்டாகவும் விமர்சனமாகவும் பார்ப்பதையும் கடந்து, இதை ஒரு முன்னெச்சரிக்கையாகவே நாம் காணவேண்டியிருக்கிறது. “பா.ச.க
தனது அரசியல் விளையாட்டைத் தொடங்கியுள்ளது...” என்னும் சொற்றொடரில் புதைந்திருக்கிறது ஆயிரம் அர்த்தங்கள். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்; அரசியல் அறிவோர் இதன் ஆழம் உணரட்டும், என்றே நினைவூட்ட விழைகிறேன்.
இந்தியச்
சூழலில், கூட்ட நெரிசலில் விபத்துகள் ஏற்படுவது புதிதல்ல. மத நிகழ்வுகள், திருவிழாக்கள்,
பேருந்து - இரயில் நிலையங்கள், மக்கள் கூடும் பொதுநிகழ்வுகள் எனப் பல்வேறு நிகழ்வுகளின்போது கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கின்ற வரலாறு பல உண்டு. அவ்வாறே,
தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க சில கூட்ட நெரிசல் விபத்துகள் பதிவாகியிருக்கின்றன. 1992-ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற கும்பகோணம் மகாமக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 48 பேர் உயிரிழந்தனர். 2005-ஆம் ஆண்டு, சென்னையில் வியாசர்பாடி பகுதியில் அரசின் நிவாரண உதவிகள் பெறும் நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 48 பேர் உயிரிழந்தனர். இத்தகைய நிகழ்வுகள் அரசியல் கட்சி சார்ந்த நிகழ்வுகள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை அறிந்திடாத அளவுக்கு கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்டத்தில் இத்துயர நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.
இந்தியாவில்
கூட்ட நெரிசல் விபத்துகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகவும், 2003 முதல் 2025 காலகட்டங்களில் மட்டும் 23 கூட்ட நெரிசல் விபத்துகள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் கடந்த மூன்று ஆண்டுகளில் 11 துயர நிகழ்வுகள் நிகழ்ந்திருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 2025-இல் மட்டும் ஆறு கூட்ட நெரிசல் விபத்துகள் நடந்தேறி இருக்கின்றன; அதில் ஒன்று கரூர் நிகழ்வு என்பது இதயத்தைக் கணக்க வைக்கிறது.
தமிழ்நாட்டின்
அரசியல் சூழலில் நிகழ்ந்த பல்வேறு கட்சிக் கூட்டங்களில் இலட்சக்கணக்கில் மக்களும் தொண்டர்களும் கூடுவது எதார்த்தமான நிகழ்வு. அன்று முதல் இன்றுவரை, தேர்தல் பரப்புரையின்போது கட்சித்தலைவரைக் காணக் கூடுவதும் அரசியல் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டுப் பின்தொடர்வதும் எதார்த்தமான ஒன்றே. ஆனால், இன்றைய சூழலில் அத்தகைய அரசியல் கூட்டம் “ஆவேசக் கூட்டமாக”
மாறுவது பெரும் கவலையளிக்கிறது. கொள்கை, கோட்பாட்டு அரசியல் கூட்டங்கள், இன்று “கும்பல் அரசியல்” என விமர்சிக்கப்படும் அளவுக்கு நாகரிகம்
இழந்து நிற்கிறது.
தனக்கு
எவ்வளவு கூட்டம் கூடுகிறது என்ற கும்பல் காட்டு மோகம்தான், அதை மீடியாக்களில் சமூக வலைதளங்களில் காட்சிப்படுத்தும் செயல்பாடுகள்தான், இத்தகைய கொடிய துயர நிகழ்விற்குக் காரணமாக இருக்கிறது என்ற விமர்சனத்தையும் நாம் தவிர்க்க இயலாது.
விஜய்
செல்லும் இடமெல்லாம் கூரையிலும் மரத்திலும் ஏறிக்கொண்டு அவரைப் பார்ப்பதற்கு முண்டியடிக்கிற கூட்டம், விடிந்த பொழுதிலிருந்தே காத்துக்கிடக்கும் கூட்டம், அங்கு ஏற்படும் தள்ளு முள்ளு, பொது சொத்துகள் மீது அவரின் தொண்டர்கள் ஏற்படுத்தும் சேதம்... இவையெல்லாம் குறித்து, தொடர்ச்சியான விமர்சனங்கள் எழுந்த போதிலும் கட்சியினரின் ஒழுக்கத்திற்கான கட்டமைப்போ, சீர்திருத்தமோ, ஒழுங்கு நடவடிக்கைகளோ வெளிப்படையாக ஒன்றும் மேற்கொள்ளப்படவில்லை என்ற கருத்தும் இங்குக் கவனிக்கத்தக்கது.
விஜயின்
பரப்புரை நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்து வருகின்றன என்பதும் குறிப்பாக, விழுப்புரம் - விக்கிரவாண்டி மாநாட்டில் 42 பேர், மதுரை மாநாட்டில் 14 பேர், திருச்சியில் நடைபெற்ற பரப்புரையின்போது 12 பேர், அரியலூரில் 6 பேர், திருவாரூர் 17 பேர், நாகப்பட்டினத்தில் 5 பேர் என, தவெக-வின் ஒவ்வொரு மாநாட்டிலும், பரப்புரைக் கூட்டத்திலும் காயம் அடைந்தோரின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
பத்தாயிரம்
நபர்கள் மட்டுமே வருவார்கள் எனத் தவெக நிர்வாகிகள் அனுமதி கேட்ட மனுவில் குறிப்பிட்டிருப்பதாகவும், உளவுத்துறை 20 ஆயிரம் நபர்கள் வருவார்கள் எனக் கணித்ததாகவும் ஆனால், அங்குக் கூடியிருந்தவர்கள் 25,000 லிருந்து 27,000 வரை என்பதும் அதிர்ச்சி அளிக்கிறது. கூட்டத்தை அதிகரிக்க விஜய் தாமதமாக வந்ததால் நெரிசல் ஏற்பட்டது என முதல்கட்டத் தகவல்
அறிக்கையும், நெடுநேரம் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் போதுமான தண்ணீர் மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் அவதியுற்றனர் என்பதும், தேவையற்ற எதிர்பார்ப்புகளைக் கொடுத்து அசாதாரண சூழல்களை ஏற்படுத்தியதாலும், அதனால் நிகழ்ந்த நெரிசலால் மூச்சுத்திணறல், உயிர்ச்சேதம், படுகாயம் நிகழ்ந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.
மறுபுறம்,
தமிழ்நாடு அரசு உடனடியாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் ஒன்று ஏற்படுத்தியிருக்கிறது. அவ்வாணையம் விசாரணைகளையும் கள ஆய்வுகளையும் மேற்கொண்டு
வரும் சூழலில், இந்நிகழ்வில் மிகப்பெரிய சதி வேலை நடந்து இருக்கிறது என்றும் இந்த வழக்கை தமிழ்நாடு காவல் துறை விசாரித்தால் உண்மை வெளிவராது; எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனத் தவெக நிர்வாகம் கேட்டிருப்பதும் இந்நிகழ்வைப் பல கோணங்களில் சிந்திக்க
வைக்கிறது.
“கரூரில் நடந்தது பெருந்துயரம்; கொடுந்துயரம்; இதுவரை நடக்காத துயரம்; இனி நடக்கக்கூடாத துயரம்” எனக் கூறியிருக்கும் முதல்வர், நீதிபதியின் ஆணைய அறிக்கை கிடைத்த பிறகு, சிறப்பு ஆலோசனை மேற்கொண்டு பொதுக் கூட்டங்கள், பேரணிகளுக்கான நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார். இனி கடைப்பிடிக்க வேண்டிய ஆலோசனைகள் பல வந்தாலும்
இந்நிகழ்வு ஒரு சாமானியனான நமக்குக் கற்றுத் தரும் பாடங்கள் பல.
41 பேர்
இறந்த இந்தத் துயர நிகழ்வில் ஐவர் மட்டுமே 50 வயதைக் கடந்தவர்கள்; 36 பேர் நடுத்தர வயதைச் சார்ந்தவர்கள், இளையோர், சிறுவர், சிறுமியர். இது இன்றைய இளையோரின் அரசியல் ஆர்வமா அல்லது இரசிகர் மன்றப் போக்கா? என்றே கேட்கத் தோன்றுகிறது. விலைமதிப்பில்லா உயிருக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம் என்ன? என்ற கேள்வி எழுகிறது.
இளமையின்
வேகம் குறிப்பாக, குழு உளவியல் (Mass psychology) கட்டுப்பாடுகளைத் தகர்ப்பதும், ஒழுங்குகளுக்கு முரண்பட்டிருப்பதும், விளைவுகளைக் கண்டுகொள்ளாதிருப்பதும் தனக்கும் பிறருக்கும் பேராபத்துகளை விளைவிக்கக்கூடியது என்பதை இந்நிகழ்வு குறித்துக் காட்டுகிறது.
குழந்தைகள்,
பெண்கள், இளையோர் எனப் பலரும் பங்கெடுக்கும் இத்தகைய நிகழ்வுகளுக்கு மத்திய, மாநில அரசுகள் முறையான வழிகாட்டுதலை, நெறிமுறைகளை வகுத்துக் கொடுக்க வேண்டும். இத்தகைய சூழல்களில் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதும், பாதுகாப்பு நெறிமுறைகள், முதலுதவிப் பணிகள் தீவிரமாக நடைமுறைப்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட வேண்டும். இத்தகைய நிகழ்வுகள் இனி நிகழாத வண்ணம் தனி மனிதனும் சமூகமும் அரசும் உறுதி மேற்கொள்ளவேண்டும். ‘சுயம்’ கட்டுப்பாடு கொண்டால் மட்டுமே, ‘சமூகம்’ நெறிப்படுத்தப்பட முடியும். முடிந்தால் முடியாதது ஒன்றுமில்லை!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
ஒன்றிய பா.ச.க. அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் வெறிச்சோடிக் கிடந்த இந்தியக் குடிகளின் வீதிகள், இன்று வியப்பில் ஆழ்ந்து கிடக்கின்றன.
கும்பி
(வயிறு) எரிந்த போதும் குடல் கருகிய போதும், கண்டுகொள்ளாத ஒன்றிய அரசு, இன்று சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் பேசுகிறது. இந்தச் சீர்திருத்தம், “நாட்டின் வளர்ச்சிப் பயணத்திற்கு வேகம் ஊட்டும்; தொழில் புரிவதை எளிதாக்கி முதலீடுகளை மேலும் ஈர்க்கும்”
என்று கணித்திருக்கிறார் ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடி. இந்த உண்மையைக் கண்டறிய அவருக்கு 12 ஆண்டுகாலம் தேவைப்பட்டிருக்கிறது.
செல்லும்
இடமெங்கும் தமிழ் இலக்கிய மேற்கோள்களைச் சுட்டிக்காட்டும் மோடி ஜி, 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் நாள் தமிழ்நாட்டிற்குத் தேர்தல் பரப்புரைக்கு வந்தபோதும் மறக்காமல் ஒளவையாரின் பாடல் வரிகளை மேற்கோள் காட்டினார். ஆனால், பொருள் உணர்ந்து கூறினாரா? என்பதுதான் பெரும் கேள்விக்குறி.
“வரப்புயர நீர் உயரும்;
நீர்
உயர நெல் உயரும்;
நெல்
உயர குடி உயரும்;
குடி
உயர கோல் உயரும்;
கோல்
உயர கோன் உயர்வான்!”
என்னும்
வரிகளை மேடை முழக்கமாகக் கூறி வந்தாரே தவிர, மக்கள் தங்கள் வாழ்வில் காண வாய்ப்புத் தரவே இல்லை.
நாட்டில்
ஒருசில மாநில வரிகள் தவிர, பிற 17 வரிகள் மற்றும் 13 கூடுதல் வரிகளை ஒருங்கிணைத்து 2017-ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் இந்த ஜி.எஸ்.டி-யை அறிமுகம் செய்தது
பா.ச.க. அரசு.
கடந்த எட்டு ஆண்டுகளில் நாட்டின் சிறு-குறு தொழில்கள் மிகவும் நசுக்கப்பட்டு, மக்களின் வாழ்வாதாரம் முடக்கப்பட்டு, அவர்களின் அன்றாட வாழ்வியல் தேவையின் பணமதிப்பு உயர்ந்து, குடும்பங்களின் ஆண்டு வருமானம் சிதைந்து, ஏழ்மையும் வறுமையும் முற்றாக அகலாத மண்ணாக மாறிப்போன இந்த நாட்டில், இன்று ஜி.எஸ்.டி.
சீர்திருத்தம் பற்றிப் பேசுகிறார். ஒட்டகத்தை விட்டுவிட்டுக் கொசுவை வடிகட்டிய இவர், பொருளாதாரச் சீர்திருத்தத்திற்கு ‘மாட்டின் தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்த கதையாகிப்’
போனார்.
பண
மதிப்பிழப்பு ஒரு பக்கம் வாழ்வைப் பந்தாடுகின்ற போது, ஒன்றிய பா.ச.க.
அரசு, நாட்டில் 5%, 12%, 18%, 28% என
நான்கு விகித ஜி.எஸ்.டி.
முறையைக் கொண்டு வந்தது. வறுமைக்கோடு என்பது வறுமைக் காடாகிப் போனது. முள்செடியில் விழுந்த விதையாகத்தான் முண்டி முளைத்த யாவரும் நெருக்கப்பட்டார்கள்; நசுக்கப்பட்டார்கள். ஏழைகளின் வாழ்க்கை தற்கொலைகளில் தடம்புரண்டது. தலைமையின் பார்வை தவத்தில் ஒன்றித்திருந்தது. அப்போதெல்லாம் வராத ஞானம், எட்டு ஆண்டுகள் கழித்து இன்று அவர்களுக்கு எட்டியிருக்கிறது.
நான்கு
நிலை ஜி.எஸ்.டி.-யில் 12%, 18% ஆகிய நிலைகளை
நீக்கிவிட்டு, 5%, 18% ஆகிய இருநிலை
விகிதமுறையைச் செயல்படுத்தவும், புகையிலை போன்ற தீங்கு விளைவிக்கும் பொருள்கள் மற்றும் ஆடம்பரப் பொருள்கள் மீது மட்டும் 40% வரி
விதிக்கும் புதிய சீர்திருத்தத்தை இன்று வெளியிட்டிருக்கிறது.
ஏறக்குறைய
375 பொருள்கள் மீதான வரிகுறைப்பால் ஏழைகள், நடுத்தர வகுப்பினர், இளைஞர்கள், விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர் யாவரும் பெரிதும் பலனடைவர் என்றும், மருந்துகள், மருத்துவக் காப்பீடுகள், சமையல் உணவுப்பொருள்கள், வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்கள் என அடிப்படைத் தேவைகள்
மீது வரி குறைத்திருப்பதால் இத்தீபாவளி விழா ‘சேமிப்புத் திருவிழாவாக’ அமைந்திருக்கிறது
என்றும் குறிப்பிட்டிருக்கிறார் மோடி.
ஆயினும்,
எட்டு ஆண்டுகள் கழித்து இன்று விழித்துக்கொண்ட ஒன்றிய அரசு, ஜி.எஸ்.டி.
குறைப்பின் மூலம் ‘மக்கள் தங்கள் கனவுகளை எளிதாகப் பூர்த்தி செய்ய முடியும்’
என்று கொக்கரிக்கிறது. கனவுகள் கருகிச் சிதைந்துபோன பிறகு இன்று ‘கனவுகள் பூர்த்தியாகும்’ என்று
கற்பனை கொள்கிறது.
நவராத்திரியின்
தொடக்கத்தில் “தற்சார்பு தேசம்’ என்னும் இலக்கை எட்ட, மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுக்க அடியெடுத்து வைக்கிறது நம் நாடு” என மோடி கூறுகிறார்.
“நவராத்திரி தொடக்க நாளில் ஜி.எஸ்.டி.
சலுகை அமலாகிறது’
என மகிழ்ச்சியைப் பகிர்ந்த பிரதமர் அவர்களே! எட்டு ஆண்டுகளாக ஜி.எஸ்.டி.
கொடுமையால் மக்களின் தூக்கத்தைக் கெடுத்து, அவர்கள் வாழ்வைச் சிவராத்திரி ஆக்கியதற்கு யார் பொறுப்பு?” என்று கேட்கும் மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனின் கேள்விக்குப் பதில் இல்லை.
மேலும்,
நடப்பாண்டில் தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ஆண்டுக்கு ரூபாய் 12 இலட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது ஜி.எஸ்.டி.
குறைப்பையும் கருத்தில்கொண்டால், நடுத்தர வகுப்பினருக்கு இது இரட்டை மகிழ்வு தரக்கூடியதாகும்; இவ்விரு நடவடிக்கைகளால் இந்திய மக்களின் பணம் ரூ.2.5 இலட்சம் கோடி சேமிக்கப்படும் என்று தெரிவித்திருக்கும் ஒன்றிய முதன்மை அமைச்சர் மோடியிடம், “இதைத்தானே தொடக்கத்திலிருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம்; எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை
எப்போதோ சேமித்திருக்குமே!” என்று விமர்சித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்.
இந்த
ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தை இந்தியக் குடிமகனாக நாம் வரவேற்றாலும், இது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும்
காலமும் நேரமும் கருத்தாய்க் கணிக்கப்பட வேண்டியிருக்கிறது. 2017-இல் ஜி.எஸ்.டி.
நடைமுறைப்படுத்தப்பட்டதன்
மூலம் புதிய வரலாறு தொடங்கப்பட்டது; ‘ஒரே நாடு-ஒரே வரி’ கனவு நனவானது என்று பெருமைப்படும் ஒன்றிய அரசு, பா.ச.க.
ஆட்சி செய்யும் மாநிலங்களுக்குத் தாராளமாக ஜி.எஸ்.டி.
நிதி வழங்கியதும், மற்ற மாநிலங்களை வஞ்சித்ததும் உலகறிந்த உண்மை. மும்மொழிக் கொள்கை, இந்தித் திணிப்பு எனப் பல கொள்கைகளுக்கு ஒத்துழைப்புத்
தராத தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுத்ததும் யாவரும் அறிந்த உண்மையே!
பா.ச.க. ஆளும்
மாநிலங்களை வளமாக்கிய பிறகு, இன்று கடை திறந்திருக்கிறது பா.ச.க.
அரசு. மடை திறந்தது போன்ற மாயை கொண்டு, ஜி.எஸ்.டி.
அறிமுகத்திற்குப் பிறகு இந்தியாவின் வணிக நடைமுறைகள் உலகளாவிய வணிக நடைமுறைக்கு ஏற்றதாக மாறியிருப்பதை மறந்து விடக்கூடாது என மார்தட்டிக் கொண்டாலும்,
வணிகர்களின் அன்றாட வர்த்தக நடைமுறைகளில் ஆயிரம் முரண்பாடுகள் இருந்ததையும் மறுக்க இயலாது. ஜி.எஸ்.டி.
என்ற பெயரில் ஏழைக் குடியானவனின் சுருக்குப்பையில் கை வைத்ததுதான் இந்தப்
பா.ச.க. ஆட்சியின்
வெற்றியின் இரகசியம்.
‘குடிமக்களே கடவுள்’ என்னும் தாரக மந்திரமே ஜி.எஸ்.டி.
குறைப்புக்கான அடிப்படைக் காரணம் என்னும் ஒன்றிய அரசின் கூற்று, இன்று அனைவருடைய நகைப்புக்கும் உள்ளாகிறது. கடவுள்கள் (மக்கள்) காணாமல் போன பின்புதான், இங்கு ஒரு பக்தன் கடவுள்களைத் தேடுகிறான். பல் துலக்கும் பற்பசை முதல், மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு ஆக்சிஜன் சிலிண்டர் வரை ஜி.எஸ்.டி.
விதித்தது இந்த அரசு என்பதை மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள். பெண்களின் வருமானம், அவர்களது தன்னிறைவு பேசும் இந்த அரசுதான், அவர்களுடைய அன்றாடத் தேவைக்கான பொருள்கள் மீதும் ஜி.எஸ்.டி.
விதித்ததையும் எளிதில் எவரும் மறக்கமாட்டார்கள்.
‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவாய்...’ எனப் பெருமூச்சுவிட்டுக் காத்திருந்த சூழலில், இந்தச் சீர்திருத்தத்தின் காலச்சூழலைக் கருத்தில் கொள்ள வேண்டும். எதிர்வரும் பீகார், தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்காளத் தேர்தல்களை நாம் மறந்து விடக்கூடாது.
அன்று,
கி.மு., கி.பி. என்று
இரண்டாகப் பிளவுபட்டது உலக வரலாறு; பா.ச.க.-வின் ஆட்சி வரலாறோ தே.மு., தே.பி. என்றே பிரிகிறது: கடந்த 12 ஆண்டுகால வரலாற்றைச் சற்றுப் பின்னோக்கிப் பாருங்கள். பா.ச.க
அரசின், அரசியல் தலைவர்களின், ஆட்சிப் பொறுப்பாளர்களின் நடை, உடை, பாவனைகள் தேர்தலுக்கு முன், தேர்தலுக்குப் பின் என்றே வரையறுக்கப்படுகிறது.
எது
எப்படியோ, ஏமாறுபவர்கள் இருக்கும்வரை, ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்!
விழித்துக்
கொண்டால் விடியல் நமக்கு;
விவேகம்
கொண்டால் உலகே நமக்கு!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
வழியையும் - வலியையும் ஒருசேர உணர்த்தும் ஓர் ஒப்பற்ற ஆன்மா, சிறுமலர் (little flower) - தூய குழந்தையை இயேசுவின் தெரேசா. ஆயிரம் வழிகள் கண்முன் தோன்றலாம்; அவற்றுள் தேர்ந்து தெளிந்து இறைவழியை அறிவதும், அவ் வழியில் பொதிந்திருக்கும் வலிகளை உணர்வதும், தெய்வீக அன்பின் வெளிப்பாடு என்பதை நிறைவாக உணர்ந்தவர், வாழ்ந்தவர், நமக்கு உணர்த்துபவர் அவர்.
அன்பு
அழகானது; இன்னும் சற்று ஆழமாகச் சிந்திக்கின்றபோது அன்பு மட்டும்தான் பேரழகானது! “கடவுள் அன்பாய் இருக்கிறார்” (1யோவா
4:8); அந்த அன்பு அழகாய் இருக்கிறது; இறை ஆதவனிடமிருந்து ஒளிபெற்றுச் சுடர்விடும் விண்மீன்கள் யாவும் அழகு கொண்டவையே. மானிடர் யாம் அனைவரும் அவர் சாயலில் படைக்கப்பட்டவர் அன்றோ! (தொநூ 1:26-27). ஆகவே, அன்பு உலகில் எங்கும் விரவிக்கிடக்கிறது; உலகம் அழகில் நிறைந்திருக்கிறது.
இந்த
அன்பு, நமது வாழ்வில் இரண்டறக் கலந் திருக்கிறது என்பதை உணர்ந்த ஆதித் தமிழ்க்குடி, தமிழர் வாழ்வியலை ‘அகம்’,
‘புறம்’ என்று
இரு தளங்களாக வரையறைத்திருக்கிறது. இந்த இரண்டிற்குமே அன்பே அடித்தளம் என எடுத்துரைக்கிறது நம் இலக்கியங்கள்.
அன்பு சமூகத்தில் ஆழப்படும்போதும், எங்கும் ஆளப்படும்போதும் உறவுகள் ஊன்றப்படுகின்றன. உறவுச் சமூகம் தழைக்க, அந்த அன்பு ஒவ்வொரு நாளும் பொலிவு பெறவேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரிய வேண்டாமா?
அகத்தின்
அழகை முகத்தில் காணும் ஒரே கணம், ஒரு தாய் தன் குழந்தையோடு கொஞ்சி விளையாடும் மகிழ்ச்சியான தருணத்தில் இருக்கிறது. குழந்தையின் முகமும் தாயின் முகமும் அன்பின் உச்சத்தில் அழகு கொண்டிருக்கும்; அங்கே உண்மையான அன்பின் வடிவங்கள் பிறப்பெடுக்கும்.
அத்தகைய
அன்பை இறையுறவில் கண்டவர் சிறுமலர். இயேசுவின் தூய முகத்தைத் தன் தியான வழிமுறையாய்க் கொண்டு தெய்வீக அன்பைத் தன்வயப்படுத்தியவர்; இறையன்பில் இரண்டறக் கலந்தவர்.
அவருடைய
‘இயேசுவின் திருமுகத் தியானம்’ ஆழமான பொருள் கொண்டது; நிறைவான அருள் கொண்டது. “ஓ இயேசுவே, உமது
தூய திருமுகத்தை வணங்குகிறேன்; அன்று இறைமையின் இனிமையும் அழகும் கொண்ட உம் திருமுகம் இன்று துயரங்களின் அடையாளமாய் கோரமுகமாய்க் காட்சி தருகிறதே! உருக்குலைந்த உமது இந்த முகத்தில் அளவிட முடியாத உம் அன்பைக் காண்கிறேன். உம்மை அன்பு செய்யத் தீர்மானித்ததுடன், பலரும் உம் திருமுகத்தை அன்பு செய்ய வழிகாட்ட விழைகிறேன். உம் கண்களிலிருந்து வடியும் எண்ணிலாக் கண்ணீர்த்துளிகள் விலைமதிப்பில்லாப் பவளமணிகளாகத் தெரிகின்றன. நான் அவற்றை அள்ளிச் சேர்க்க விரும்புகிறேன். பாவத்தில் வீழ்ந்து கிடக்கும் ஆன்மாக்களை விலை கொடுத்து மீட்பதற்காக, அதைப் பயன்படுத்த விழைகிறேன். என் இதயத்தின் ஆழத்தில் உம் திருமுகத்தைப் பொறித்து வைக்க ஆசைப்படுகிறேன். உமது தெய்வீகத் திருமுகம் என்னை அன்பில் பற்றியெரியச் செய்வதாக. அதுவே வான்வீட்டில் உம்முடைய திருமுகத்தைத் தொடர்ந்து நான் தியானிக்க என்னைத் தகுதி உள்ளவளாக்குவதாக!” என்று செபிக்கிறார். இங்கே ‘அன்புக்கு உண்டோ அடைக்கும்தாழ்’ என்பது
வெள்ளிடைமலையாகிறது.
அன்பைத்
(கடவுளைத்) தன்வயப்படுத்தும் அவரின் தேடல், அவருடைய 15 வயதிலேயே தொடங்குகிறது. பிரான்ஸ் நாட்டின் அலன்சோன் என்ற ஊரில் தொடங்கிய அவருடைய தேடல் பயணம், 16-வது வயதில் கார்மேல் மடம் கண்டு, அருள்வழி கண்டு, இறை மொழி கொண்டு, இயேசுவின் திருமுகம் கண்டு பூரித்துநின்றது. குழந்தை உள்ளம், ஆழ்ந்த தாழ்ச்சி, பலிப்பொருளாகத் தன்னைக் கடவுளுக்கு அர்ப்பணிக்கும் மனநிலை, இறையன்பு, இறைநம்பிக்கை... என வளர்நிலை கண்ட
அவருடைய துறவு வாழ்வு, இறை வழியில் சிலுவையின் கொடிய வலி கண்டாலும், மிகுந்த பொறுமையோடும் மகிழ்வோடும் மனவலிமையோடும் அவர் வாழ்ந்து வந்தது துறவு நிலையின் உன்னத அடையாளம்.
கார்மேல்
மடத்தில் சிலுவைகள் நிறைந்த அவருடைய வாழ்வு, ஒரு மறைச்சாட்சியின் வாழ்வுக்கு ஒப்பானதாகவே இருந்தது. “கார்மேல் சபையில் தான் சேர்ந்தது ஆன்மாக்களை மீட்கவும் குருக்களுக்காக மன்றாடுவதற்காகவுமே” என்று
கூறிய அவர், தனது
24-வது வயதில் விண்ணகப் பிறப்படைந்தாலும் அவருடைய ‘ஓர் ஆன்மாவின் சரிதை’
(The story
of a soul) தரும் ‘எளிய வழியானது’
(The little
way) அவரது வாழ்வு கடவுளுக்கு ஏற்ற உன்னதப் பலியாகவும், திரு அவையில் பாவிகளை மனமாற்ற ஆன்மாக்களைச் செதுக்கும் ஒப்பற்ற உளியாகவும் அறியப்படுகிறது. இயேசுவின் எளிய மலராக அறியப்பட்ட அவரோ... ஆண்டவரின் அழகு மலர்த் தோட்டம். ஆகவேதான், “நான் விண்ணகம் சென்று பூமியில் உள்ள யாவர்மீதும் ரோஜா மலர்களை மாரிப் பொழிவேன்”
என்றார்.
கார்மேல்
மடத்தில் நான்கு சுவர்களுக்குள் அடங்கிய அவரது துறவு வாழ்க்கை இன்று மறைப்பணியாளர்களின் பாதுகாவலராகவும், திரு அவையின் மறைவல்லுநர்களில் ஒருவராகவும் திரு அவை அவரை உயர்த்தியிருக்கிறது.
சிறிய
மலராக, சின்ன இராணியாக, இயேசுவின் செல்ல மகளாக விண்ணகத்தில் அவரருகில் அமர்ந்திருக்கும் குழந்தை இயேசுவின் தெரேசா புனித நிலை அடைந்த நூற்றாண்டு விழாவைப் பொருளுள்ள வகையில் கொண்டாட கார்மேல் துறவற சபைகள் ஒன்றிணைந்து வெளிக்கொணரும் இச்சிறப்பிதழ், குழந்தை இயேசுவின் தெரேசா இன்னும் அதிகமாக அறியப்படவும், அவருடைய எளிய வழியைப் பின்பற்றி இயேசுவைப் பலர் அடையவும் பேருதவியாக அமையும் என நம்புகிறேன். இம்முயற்சியில்
எம்மோடு தோள் கொடுத்த அத்துணை நல்லுள்ளங்களுக்கும் சிறப்பாக, யாவரையும் ஒருங்கிணைத்து இச்சிறப்பிதழ் சிறப்பாக வெளிவர பெரும் முயற்சி மேற்கொண்ட அருள்பணி. சேவியர் OCD அவர்களுக்கும்
‘நம் வாழ்வு’ தனது நன்றியை உரித்தாக்குகிறது.
அனைவருக்கும்
நூற்றாண்டு
விழா
நல்வாழ்த்துகள்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்
மரியா - பேரருள் களஞ்சியம்! அவர் அருள் மிகப்பெற்றவர் (லூக் 1:28); அருளின் ஊற்று; வளங்களின் வாய்க்கால். அலைகள் மோதும் உலகின், ஆழிப்பெருங் கடலில் ஆதவனைச் சுமந்து வந்த ஓவியமான ஓடம் அவர்!
யோசேப்பைப்
பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட தேன்தமிழ்க் காவியம் தேம்பாவணியில், தன் துணையை அறிந்த போது யோசேப்பு...
‘பாருலகு அளித்துக் காக்கப்
பரமனை
உயிர்க்கும் தாயே!
பேருலகு
உவப்பக் கன்னி
பெயர்கிலள்
பெறுவாள் ஆகில்,
ஈருலகு
இறைஞ்சும் அன்னாள்
என்
மணத் துணைவி ஆமோ!’ (7:72)
என்று
மகிழ்ந்து ஏற்றுக்கொண்டதாய் வீரமாமுனிவர் வடிக்கிறார். முன்பொருநாள் உள்ளம் கலங்கிய கணவரை, இன்று உற்றுநோக்கினால் அவர் மனத்துயர் நீங்கும் என அறிந்த அன்னையின்
உதடுகளில்...
‘உருகிய துணைவனை உருகி நோக்கினள்;
பெருகிய
துயர்செயும் பிணிகள் ஏதையா?
மருகிய
அடிமையா வளைவது எது - என
அருகு
இயைந்து அன்புற அறைந்து இறைஞ்சினாள்!’ (7:83)
என்றே
வீரமாமுனிவர் தீட்டுகிறார். அத்தகைய சிறப்பு மிக்க நம் அன்னை மரியா, நமது வாழ்வின் நம்பிக்கை விளக்காக, இயேசுவை அடையும் இனிய வழியாக நம்முடன் பயணிக்கிறார்.
“இறைவன் கண்களில் விலையேறப்பெற்றவராய்...” (எசா 43:4) விளங்கிய அன்னையைத் தூய்மை, தாய்மை, மேன்மை என்னும் அணிகலன்களால் இறைவன் அழகு செய்தார். அன்னையைத் தனக்கு ஏற்ற இனிய இல்லிடமாய் அமைத்து, மண்ணில் மலர்ந்த மாணிக்கமாய், மாசில்லாக் கன்னிகையாய், மகிமையின் வாசலாய், திரு அவையின் தாயாய், திருத்தூதர்களின் அரசியாய், புதுமைகள் புரியும் புண்ணியக் கரமாய், பரிந்து பேசும் அட்சயப் பாத்திரமாய், அண்டி வந்தோரின் அடைக்கலமாய் இறைவன் நமக்குத் தந்திருக்கிறார்.
அவ்வாறே,
‘உலகம் மூன்றினும் உவமை நீக்கிய
இலயை
மூன்றினும் இழிவு இல் கன்னியாய்,
அலகு
இல் மூன்றினுள் நடுவ மைந்தனை
நிலவு
மூன்றினும் நிறப்ப ஈன்றனள்’
என்கிறது
மற்றோர் இலக்கியப் படைப்பு. அதாவது, இமயம், பூமி, பாதாளம் எனும் மூன்று உலகங்களிலும் ஒப்புமை இல்லாதவர் மரியா என்றும், பாவம், குற்றம், களங்கு எனும் மூன்று களங்கங்களும் இல்லாத தூய கன்னியாய் வாழ்ந்தவர் என்றும், மூன்று பிறப்புகளுக்கும் மேலான இறை மைந்தனை, இயேசுவைத் தன் கருவறையில் தாங்கி, விண்ணவர், தூயவர், மானிடர் எனும் மூன்று நிலைகளுக்கும் ஒளிதரும் நிலவாகப் பிறந்தார் என்றும் பெருமைப்பட எடுத்துரைக்கிறது.
தான்
உற்றுநோக்குபவருக்குக்
குறைதீர்க்கவும், தன்னை உற்றுநோக்குபவருக்கு நிறைவளிக்கவும் அன்னை வீற்றிருக்கும் குறிப்பிடத்தக்க
திருத்தலங்களில் ஒன்று கருமத்தம்பட்டி புனித செபமாலை அன்னைத் திருத்தலம்!
இந்நாளில்
திருவுடை அணிந்து, திருச்செபமாலை எடுத்து,
அன்னைக்குப் புகழ் மாலை தொடுக்கும் திருத்தலப் பயணிகளாய், அவர் அருள்வரம் பெறும் அன்புப் பிள்ளைகளாய், அவர் பாதம் கூடுவோம்! அவர் புகழைப் பாடுவோம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர் செ. இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்