திருப்பலி முன்னுரை
‘நாம் அவரை நேசிக்கிறோம்; ஆனால், அவரது வருகைக்குப் பயப்படுகிறோம்’ என்று
இயேசு ஆண்டவரின் இரண்டாம் வருகையைப் பற்றி புனித அகுஸ்தினார் கூறியுள்ளார். ஆண்டவராம் இயேசு முதல் முறை கன்னி மரியாவிடமிருந்து பிறந்து, நற்செய்தி அறிவித்து, பாடுபட்டு, இறந்து, உயிர்த்தெழுந்து, விண்ணேற்றம் அடைந்தார். விண்ணேறிச் சென்ற அதே ஆண்டவர் மீண்டும் வருவார் என்று இறைவார்த்தை எடுத்துரைக்கும்போது, நம்மிலே சற்று பயம், தயக்கம் ஏற்படுகின்றது. இரண்டாம் வருகையின் முதல் அறிகுறி ‘கதிரவன் இருண்டுவிடும்.’ ‘கதிரவன் மறைந்தால் என்ன ஆகும்?’ என்று ஸ்காட் சுற்றுச் சூழல் பத்திரிகையாளர் கூறும்போது, ‘சூரியன் மறைந்தால் உடனடி இருள், வெப்பநிலை வீழ்ச்சியடையும், உயிரியல் சுழற்சி பாதிக்கப்படும், விவசாயம் இருக்காது, பசி, பட்டினி போன்றவை ஏற்படும்’
என்று கூறுகின்றார். இதனைக் கேட்கும்போது நமக்குப் பயமும் தயக்கமும் ஏற்படுகின்றன. கடவுளை அன்பு செய்கின்றோம் என்றால், அவருடைய வருகையைக் கண்டு பயப்படக்கூடாது. துணிவோடு நாம் இறைவனின் வருகையை எதிர்கொள்ளும் விதமாக நம் வாழ்வை அமைத்துக்கொள்வோம். அதற்கான வல்லமை வேண்டி இணைந்து செபிப்போம், இத்திருப்பலியில்.
முதல் வாசக
முன்னுரை
தானியேல்
புத்தகம் எபிரேய மொழியில் எழுதப்பட்ட இறைவாக்குப் புத்தகம். இதனை, ‘வெளிப்பாடு புத்தகம்’
என்றும் அழைப்பார்கள். இறுதிக்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்பதை முன்னறிவிக்கின்ற புத்தகம். ‘காவல்தூதர் மிக்கேலின் வருகை, நூலில் பெயர் இடம்பெற்றோர் மீட்புப் பெறுவர்; நூலில் இடம்பெறாதோர் வெட்கத்திற்கு ஆளாவார்கள், வானத்திலிருக்கும் பேரொளி ஞானிகளாக இருக்கின்றார்கள். எனவே, நாமும் ஞானிகளைப் போல திகழ வேண்டும்’
என்று எடுத்துரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
எருசலேமின்
வீழ்ச்சியோடு பழைய உடன்படிக்கை உடைபட்டது. அதனால் இனி பயனில்லை. கடவுள் மீண்டும் ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்த வேண்டிய தேவையிலிருக்கிறார் என்று எரேமியா கூறுகிறார். இந்தப் புதிய உடன்படிக்கை இதயத்தில் செய்யப்பட வேண்டியதாக இருக்கிறது. தினமும் பாவம் போக்கும் பலி செலுத்தப்படுகிறது. ஆனால், இறைமகன் தம்முடைய ஒரே பலியினால் பாவத்திலிருந்து நிறைவுள்ளவராக மாற்றியுள்ளார். எனவே, பாவத்திற்குக் கழுவாயாகச் செலுத்தும் பலி தேவையற்றது என்றுரைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. நீதியும்
நேர்மையுள்ள இறைவா! திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள் நீதியுடனும் நேர்மையுடனும் மக்களை வழிநடத்தவும், வழிகாட்டவும், இறைவனின் இறையாட்சிக் கனவை நிறைவேற்றவும் ஆற்றல் தர வேண்டி, இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
2. ‘உலகின் ஒளி
நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடவார்’ என்று மொழிந்த ஆண்டவரே! இருளில் வாழும் மக்களுக்கு ஒளியை நோக்கி வழிகாட்ட அருளைத் தர வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.
3. ‘இந்த வீட்டுக்கு
அமைதி உண்டாகுக’
என்று கூறிய ஆண்டவரே! எங்கள் குடும்பத்தில் கடன் பிரச்சினைகள், உறவுப் பிரச்சினைகள் நீங்கி இறைவன் தரும் அமைதியுடன் வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. ‘நீங்களே அவர்களுக்கு
உணவு கொடுங்கள்’
என்று மொழிந்த ஆண்டவரே! வறுமையோடும், பசியோடும் இருக்கும் மக்களுக்கு உணவு தந்தருள, எங்களுக்குப் பகிர்வு மனப்பான்மையையும், அன்பு உள்ளத்தையும் தர வேண்டுமென்று இறைவா
உம்மை மன்றாடுகிறோம்.