திருப்பலி முன்னுரை
இன்று,
திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு. இது அன்பின் காலம்; நம்பிக்கையின் காலம்; மகிழ்வின் காலம்; இறைமகனின் வருகைக்காக நம்மையே தயாரிக்கும் காலம். நம் அகத்தை தூய்மை செய்து மீட்பரின் வருகையை ஆனந்தமாக எதிர்நோக்கும் காலம். “தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி
வருகின்றது” என்ற
நற்செய்தி வார்த்தைக்கேற்ப நமது மீட்பரின் வருகையை எதிர்நோக்கி இருக்கும் நாம் அனைத்திலும், அனைவரிலும் இறைவனைக் காணவும், நம்பிக்கை வாழ்வில் தொய்வின்றிப் பயணிக்கவும் இந்த
முதல் வாரம் நம்மை அழைக்கிறது. இறைவன் தந்த இந்த மகத்தான திருவருகைக் காலத்தில் அனைவரையும் மன்னித்து நல்லுறவோடு வாழவும், இல்லாதவர்கள், இயலாதவர்கள் அனைவருக்கும் நமது உடனிருப்பைக் கொடுக்கவும், ஒருவர் மற்றவருக்கு உறவின் பாலமாக வாழவும், மற்றவரின் தேவை அறிந்து உதவி செய்யவும், உள்ளம் என்னும் ஆலயத்தை ஒப்புரவு என்னும் அருளடையாளத்தால் தூய்மை செய்து, குழந்தை இயேசு தங்கும் இல்லமாக மாற்றவும், ஒருவர் மற்றவருக்கு நற்செய்தியின் தூதுவர்களாக வாழவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசக
முன்னுரை
“நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார்” என்று
ஆண்டவரின் வருகையைப் பற்றியும், அவர் கொண்டு வரும் விழுமியங்களைப் பற்றியும் கூறுகிறது
இன்றைய முதல் வாசகம். நீதியும், நேர்மையும் நலிந்து கொண்டிருக்கும் இச்சமூகத்தில், அவற்றை வளர்த்தெடுக்கும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் உண்டு என்ற கருத்தை வலியுறுத்தும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
கிறித்தவ
வாழ்வின் ஆணிவேர் அன்பு. கடவுள் எவ்வாறு எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் நம்மை அன்பு செய்கிறாரோ, அவ்வாறே நாமும்
நம்முடன் வாழும் சகோதர-சகோதரிகளை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செய்ய வேண்டும். இத்தகைய
அன்பில் நாளும் வளர வேண்டும். இந்த அன்பு வாழ்வில் குற்றமின்றித் தூய்மையாக வாழ இறைவனே நமக்குப் பலம் கொடுப்பார் என்று கூறும் இரண்டாம் வாசகத்திற்கு நாம் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. நல்ல
ஆயனே இறைவா! திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள்
அனைவரையும் ஆசிர்வதியும். அவர்கள் உமது
வார்த்தையை வாழ்க்கையால் போதிக்கவும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களை ஞானத்தோடு வழிநடத்தவும், அழைத்த உம்மில் ஆழமான நம்பிக்கைக் கொண்டு வாழவும் வரம் தர இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
2. ‘நான் உங்களோடு
இருக்கின்றேன்’ என்று
மொழிந்த ஆண்டவரே! இந்நாள் வரை எம்மைக் காத்து வழிநடத்திய மேலான அருளுக்காக நன்றி கூறுகின்றோம். எம்முடன் வாழும் சகோதர- சகோதரிகளின் துன்ப நேரங்களில் நாங்கள் துணையிருந்து, அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியேற்ற வரம் தர இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.
3. அன்பு
இறைவா! கிறித்தவன் / கிறித்தவள் என்ற முகவரியைக் கொண்டுள்ள நாங்கள் அனைவரும் அன்பு, அமைதி, மன்னிப்பு, சமத்துவம், சகோதரத்துவம் போன்ற
விழுமியங்களைக் கடைப்பிடித்து வாழ தேவையான அருள்வரத்தை தர
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. தந்தையே
இறைவா! இந்தத் திருவருகைக் காலத்தில் வாழ்வு
கொடுக்கும் உன்னத செல்வமாகிய உம்மை அதிகமாகத் தேடவும், திருப்பலி, குடும்ப செபம், அன்பியங்கள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவும் வரம் தர இறைவா உம்மை
மன்றாடுகிறோம்.