“என்னங்கடா அங்கே சத்தம்? கொஞ்சம் சும்மா இருங்கடா! சும்மா கத்திக்கிட்டே இருக்கீங்க” எனச் சமையலறையிலிருந்து அம்மா தன் இரண்டு மகன்களையும் சத்தம் போட்டாள்.
“அம்மா,
அண்ணன் என்னைய சும்மா அடிச்சுக்கிட்டே இருக்காம்மா” தம்பி
புகார் செய்தான்.
“அம்மா,
இவன் சும்மா சொல்றாம்மா. நான் அடிக்கவே இல்லம்மா” என அண்ணன் கூறினான்.
“உங்களுக்கு
லீவு விட்டது தப்பாப் போச்சு. சும்மா அடக்கவே
முடியல”
அம்மா கூறினாள்.
“நீங்க
என்னம்மா, சும்மா நொயி நொயின்னு புலம்பிக்கிட்டே இருக்கீங்க?” மகன்கள் இருவரும் பேசினார்கள்.
“நானாடா
புலம்பிக்கிட்டே இருக்கேன்? சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டே இருந்தீங்க... உதை வாங்கிடுவீங்க.”
கொஞ்ச
நேரம் வீடு அமைதியா இருந்தது. சமையல் அறையிலிருந்தே அம்மா பையன்கள் சத்தத்தைக் காணோமே
என்று ஹாலில் எட்டிப்பார்த்தாள். மகன்கள் இருவரும் படுத்துக் கொண்டு மொபைலைப் பார்த்துக்
கொண்டு இருந்தார்கள்.
“டேய்
எந்திரிங்கடா, சும்மா செல்போன் பார்த்துக் கொண்டு இருந்தா கண்ணு கெட்டுப்போயிடும்டா!
படிக்கிறதுக்கு வீட்டுப்பாடம் ஒண்ணும் இல்லையா?” அம்மா கேட்டாள்.
“எங்களைக்
கொஞ்ச நேரம் சும்மா விடுங்கம்மா. ஏம்மா எங்களைப் படுத்துறீங்க?” எரிச்சலுடன் கூறினார்கள்.
மதியம்
சாப்பாட்டு நேரம் வந்தது. கம்பெனிக்குச் சென்ற அப்பா வீட்டுக்குத் திரும்பினார். அவரைக்
கண்டதும் “ஏங்க இவனுகரெண்டு பேரும் சும்மா செல்போன் பாத்துக்கிட்டே இருக்காங்க. சொன்னா
கேக்கமாட்டிங்கிறாங்க” என்றாள் அம்மா.
“டேய்
பாடம் படிக்கணும்னு சொன்னீங்க. கம்பெனிக்கு வந்திருக்கலாம்ல. சும்மா வீண்பொழுது போக்கிக்கிட்டு
இருக்கீங்க. ஏற்கெனவே சும்மா சும்மா செல் பாத்து கண்ணு கெட்டுப்போய் சோடாபாட்டில் கண்ணாடி
மாதிரி போட்டிருக்கீங்க. இனிமே கண்ணே தெரியாமப் போயிரும்டா! அப்பத்தான் உங்களுக்குப்
புத்தி வரும்” அப்பா கூறினார்.
“அப்பா,
சத்தம் போடாம சும்மா இருங்கப்பா. வந்தீங்களா, சாப்பீட்டீங்களா, கொஞ்ச நேரம் சும்மா
இருந்தீங்களான்னு போங்கப்பா” பையன்கள் கூறினார்கள்.
“டேய்,
அப்பாவைச் சும்மா சொல்லக்கூடாது. அவரு உங்களுக்காக இராப்பகலா உழைக்கிறாரு. நீங்க என்னடான்னா
சும்மா சலிச்சுக்கிறீங்க. சரி... சரி... எல்லாரும் சாப்பிடலாம் வாங்க” என்றாள் அம்மா.
எல்லாரும்
சாப்பிட உட்கார்ந்தார்கள். “என்னங்கம்மா, இன்னக்கி சுரைக்காய் கூட்டு வச்சுருக்கீங்க?
மீனு, நண்டு, கறி ஒண்ணும் எடுக்கலையா?” மூத்தவன்.
“சுரைக்காய்
மட்டும் சும்மாவா கிடைக்குது? நாட்டுக் காய்களையெல்லாம் நல்லா சாப்பிடப் பழகிக்குங்க. கறி, மீனு, முட்டையெல்லாம்
அதிகமா சாப்பிட்டா ஆயுள் கம்மி. காய்கறிகளை இரண்டு பங்கும், சோறு ஒரு பங்கும் சாப்பிட்டா
சீக்கே வராது” அம்மாவின் அட்வைஸ்.
“சும்மா
கதை விடாதிங்க. யாரோ சொல்றதைக் கேட்டுட்டு எங்களப் பட்டினியா போட்டுறாதீங்க. சித்த
வைத்தியருங்க வேற வேலை இல்லாம சும்மா ஏதாவது சொல்லிக்கிட்டே இருப்பாங்க” - சின்னவன்.
“டேய்,
என்ன வியாக்கியானம் பேசுறீங்க? மூத்தோர் சொல்லும் முழு நெல்லிக்கனியும் முன்னே கசக்கும்,
பின்னே இனிக்கும்னது சும்மாவா? அம்மா சொல்றதைக் கேட்டுட்டுச் சாப்பிடுங்கடா!” - அதட்டினார்
அப்பா.
“வாய்க்கு
ருசியா ஒண்ணுமில்லாம சும்மா எப்படிப்பா சுரைக்காயை மட்டும் சாப்பிட முடியும்?” - பிள்ளைகள்
கேட்டனர்.
“சுரைக்காயில்
ஆயிரம் நன்மை இருக்கு, கண்டதையும் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கிறாம சும்மா சாப்பிடுங்க” - அம்மா.
“டேய்,
ஒரு காலத்தில கூழ் சாப்பிடுறவன் ‘கூலிக்காரப்பய’ என்று
கேலி செஞ்சது போக, இப்ப கோடீஸ்வரன் கூழ் சாப்பிடுறான். உழைப்பாளி சோறு சாப்பிடுறான்,
காலம் மாறிப்போச்சு தெரியுமா?\\\" என்று அப்பா சொல்லிவிட்டு எழுந்தார். “நான் கம்பெனிக்குப்
போறேன். நீங்க ரெண்டு பேரும் மூணு மணியப்போல கம்பெனிக்கு வாங்க” - அப்பா கிளம்பினார்.
“அப்பா,
அங்க வந்து என்னப்பா செய்யப் போறோம்?”
“ஒண்ணும்
செய்ய வேண்டாம். கம்பெனியில் என்ன நடக்குதுன்னு சும்மா பாத்துக்கிட்டு இருந்தாபோதும்.”
மூன்று
மணிக்கு அண்ணன், தம்பி இருவரும் கம்பெனிக்குக் கிளம்பிச் சென்றார்கள். அப்பா மகன்களை
அலுவலகத்தில் அமரச் செய்தார். அந்த நேரத்தில் அப்பாவின் நண்பர்கள் முகமதுவும், முத்துவும்
வந்தார்கள்.
“என்னப்பா
ரெண்டு பேரும் இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க?” - அப்பா கேட்டார்.
“ஒண்ணுமில்லப்பா
சந்தியாகு, சும்மா உன்னைப் பாத்துட்டுப் போகலாமுன்னுதான் வந்தோம்” - கவலை தோய்ந்த முகத்துடன் சொன்னார்கள்.
“ரெண்டு
பேரும் சும்மாவா வந்தீங்க, ஏதாவது சுமந்துக்கிட்டு வரக்கூடாது?”அப்பா கேட்டார்.
“நெஞ்சில்
கவலைய, பாரத்தைச் சுமந்துக்கிட்டுத்தான் முகமது வந்திருக்கான்” - முத்து கூறிவிட்டு, கையிலிருந்த பழங்களைக் கொடுத்தான்.
“இதெல்லாம்
எதுக்கப்பா?”- அப்பா
“சும்மா
எப்படியப்பா வர்றது? கூடப் பிறக்கலைன்னாலும் எங்க தங்கச்சி, தங்கச்சி பிள்ளைங்கள்ல” - முகமது.
“முகமது
என்ன கவலையோட இருக்கீங்க? சும்மா சொல்லு, எதுவாக இருந்தாலும் உதவி செய்கிறேன்” - அப்பா
அப்பாவுக்கும்,
அவருடைய நண்பர்களுக்கும் நடக்கிற உரையாடலைப் பையன்கள் இருவரும் கவனித்துக் கொண்டிருந்தனர்.
“சந்தியாகு,
என்னுடைய மகன் யாக்கூப்புக்கு திடீரென மாரடைப்பு வந்திருச்சு. இதயத்தில் இரண்டு அடைப்புகள்
இருக்காம். நாளைக்குள் மூன்று இலட்சம் பணம் கட்டினால்தான் நாளை மாலை ஐந்து மணிக்கு
ஆப்ரேஷன் நடக்கும். வேற வழி தெரியல, உன்னிடம்
கேட்டுட்டுப் போகலாமுன்னு வந்தோம்” - முகமது கூறினார்.
“அது
சரி, என் மகள் மூத்தவனும், உன் மகனும் ஒரே செட்டு. 28 வயதுதான் ஆகிறது. இந்த வயசுல
மாரடைப்பு வந்துருச்சே! அத நினைக்கும்போதுதான் வருத்தமாயிருக்கு” என்றார் சந்தியாகு.
“வீட்டில்
சாப்பிடுவதே இல்லை. மத்தியானம் பிரியாணி, இரவில் ஃப்ரைட் ரைஸ், பரோட்டா, ஃபாஸ்ட் புட்,
ஜங்க் புட் இவைகளையே சாப்பிட்டா மாரடைப்பு வராமல் என்ன செய்யும்? என்ன பிள்ளை வளர்த்திருக்கீங்க? சும்மா இந்த வயசில
வந்து ஆப்ரேசன்னு நின்னீங்கன்னா, இந்தத் தலைமுறைப் பசங்க எப்படி வாழப்போறாங்களோன்னு
டாக்டர் வருத்தப்பட்டார்...” முகமது கூறினார்.
“டேய்
பசங்களா, நிலைமையைக் கவனிச்சீங்களாடா? வீட்டுச் சாப்பாடு சாப்பிடாம சும்மா ஓட்டலில்
சாப்பிட்டா இந்தக் கதிதான்” - பசங்களை எச்சரித்தார் அப்பா.
“சரி
நண்பா, நல்ல வேளை... நீ கேக்குற நேரம் என்னிடம் பணம் இருக்கு. உன் மகன் நூறாண்டு வாழணும்.
இந்த மூணு இலட்சத்தையும் சும்மா வாங்கிட்டுப் போ. எப்ப முடியுமோ அப்பக் கொடு. ஆபத்துக்கு
இல்லாத பணம் எதுக்கு இருக்கு? எங்கிட்ட சும்மாதான்
இருக்கு” என்று அப்பா பணத்தைக் கொடுத்தார். முகமதுவும்
வாங்கிக் கொண்டார்.
“கொண்டு
போய் பையனை நன்றாகக் கவனி” என்று சொன்னவர், “இந்தா, லெதர் பேக்
சும்மாதான் இருக்கு; அதுல வச்சுக்கொண்டு போ, ஆப்ரேசன் நேரத்துல நான் வந்துடுறேன்” என்றார் சந்தியாகு.
“டேய்
தம்பிகளா, அம்மா வீட்ல செஞ்சு கொடுக்கிறதை மட்டுந்தான் சாப்பிடணும்” என்று முத்துவும், முகமதுவும் பிள்ளைகளிடம் கூறினார்கள்.
“சரிங்க
அங்கிள், வாழ்க்கையின் இரகசியத்தைப் புரிஞ்சுக்கிட்டோம், காய்கறிகளைத்தான் அதிகமாகச்
சாப்பிடுவோம். ஓட்டலில் கண்ட கண்ட உணவுகளைச் சாப்பிட மாட்டோம். பரோட்டாவிலுள்ள மைதா
இதயத்துக்குக் கேடு என்பதையும் தெரிஞ்சுக்கிட்டோம்” என்று பையன்கள் இருவரும் கூறினார்கள்.
முகமதுவும்
முத்துவும் மருத்துவமனைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.
அப்பா தன் மகன்களிடம், “சரி, வீட்டுக்குப் புறப்படுங்க.
சும்மா வேடிக்கை பாத்துக்கிட்டு, செல்போன் பாத்துக்கிட்டு நடந்து போகாமா கவனமா ரோட்டைக்
கிராஸ் பண்ணி வீடு சேருங்க” என்று சொன்னார். அப்பா, அம்மான்னா சும்மாவா?