news-details
ஞாயிறு தோழன்
ஆண்டின் பொதுக்காலம் 32-ஆம் ஞாயிறு (10-11-2024) 1அர 17:10-16; எபி 9:24-28; மாற்கு 12:38-44

திருப்பலி முன்னுரை

பூக்களும் எதிரியாகிப் போனது இவளுக்கு, வசந்தமும் வழிமாறிப்போனது... 

பொட்டுக்கு என்ன வழக்கு,

இவளின் நெற்றியின் மேல்

ஒட்டி உறவாட மறுக்கிறதே...’

என்று கைம்பெண்ணின் நிலைமையைப் புதுக்கவிதையாக வடிக்கின்றார் மன்னர்ராஜ். துணைவனை இழந்து, குழந்தைகளோடு வாழும் இளம் வயது கைம்பெண்களின் வாழ்க்கை என்பது மிகக் கொடுமையானது. அவர்கள் புறக்கணிக்கப்பட்டவராகவும், மதிப்பற்றவராகவும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இந்த நவீன காலத்தில் வீட்டில் நடக்கும் மகிழ்ச்சியான நிகழ்வுகளில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இன்றும் கைம்பெண்கள் இருப்பது மிகவும் வேதனைக்குரியது. ‘ஆடுகள் வாழ்வு பெறும் பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்தேன்என்று ஆண்டவர் தம் நோக்கத்தை வெளிப்படுத்துகிறார். இன்றைய வாசகங்களில் இடம்பெறும் கைம்பெண்களின் செயல்பாடுகள் உயர்வாகக் காட்டப்படுகின்றன. ‘இறைவன் அளவுகளையும், எண்ணிக்கைகளையும் கருதுபவர் அல்லர்; மாறாக, தரமான வாழ்வைக் கருதுபவர்என்று திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைக்கின்றார். பலவீனமானவர்களை ஒதுக்கிவைக்காமல், அவர்களுடன் இணைந்து வாழ்வதுதான் இறைவனின் விருப்பமாக இருக்கிறது. கைப்பெண்களைப் புறக்கணிக்காமல், அவர்களுடன் சகோதர அன்புடன் வாழ முயல்வோம். இணைந்து பயணிக்கும், எதிர்நோக்கின் திரு அவையாக நாம் ஒவ்வொருவரும் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.…

முதல் வாசக முன்னுரை

சாரிபாத்து என்பது பிற இன மக்கள் வாழும் பெனிசிய துறைமுக நகர். மத்திய தரைக்கடலின் கரையோரத்தில் தீர், சீதோன் நகர்களுக்கு இடையில் அமைந்துள்ளது. கடவுளின் மக்களை வரவேற்கும் மற்றொரு புற இன நகர். அப்பகுதிக்கு இறைவாக்கினர் எலியா சென்று, கைம்பெண்ணைச் சந்திக்கின்றார். எலியா காலத்தில் மிகக் கொடிய பஞ்சம் நிலவியது. அப்பஞ்சத்திலிருந்து கைம்பெண்ணின் குடும்பத்தை எவ்வாறு காப்பாற்றினார்? அக்குடும்பம் எவ்வாறு இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டது? என்றுரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

கிறிஸ்துவின் குருத்துவ உடன்படிக்கைச் செயல்பாடுகள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவைஇயேசு மெல்கிசதேக்கின் வழிவந்த உண்மையான குரு, அவர் வழியாக மட்டுமே நிலையான மீட்பு உண்டு. தலைமைக் குரு ஆலயத்திற்குள் நுழைந்து மக்களின் பாவங்களுக்காகப் பரிகாரப் பலி செய்வார். அதனைவிட மேலான பலியை ஆண்டவர் இயேசு நிறைவேற்றிவிட்டார். அவர் மீண்டும் வருவார், பலி செலுத்துவதற்காக அல்ல; மாறாக, அவருக்காகக் காத்திருப்போரை மீட்பதற்காக என எடுத்துரைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பே உருவான இறைவா! எம் பகுதியில் ஓரங்கட்டப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட மக்களை அன்பு செய்து, அவர்களோடு இணைந்து வாழ அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அனாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் நீதி வழங்குபவரே இறைவா! கைம்பெண்களுக்கு உரிய நீதியை வழங்கி, அவர்களும் இறைவனின் சாயல் என்பதை உணர்ந்து வாழ அருள் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. வழிநடத்தும் ஆயனே எம் இறைவா! எம் பங்கை வழி நடத்தும் எம் பங்குத்தந்தைக்காக மன்றாடுகிறோம். ஆன்மிக வழிகாட்டியாக, எங்கள் இன்பத்திலும் துன்பத்திலும் பங்குகொள்ளும் அவருக்கு ஆரோக்கியமான உடல் நிலையையும், மனநிலையையும் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில், அவர்கள் இரக்கம் பெறுவர்என்று மொழிந்த எம் ஆண்டவரே! இரக்கத்தின் செயல்களைச் செய்து, இரக்கத்தின் சாட்சியாக நாங்கள் வாழ அருள் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.