news-details
ஞாயிறு தோழன்
இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா (24-11-2024) தானியேல் 7:13-14; திருவெளிப்பாடு 1:5-8; யோவான் 18:33-37

திருப்பலி முன்னுரை

உலகத் தலைவர்களிடையே நிலவும்யார் பெரியவர்?’ என்ற போட்டியால் உலகெங்கும் அரசியல் நிலையற்ற தன்மையும், போர்களும், வன்முறைகளும் பெருகியுள்ளன. மூன்றாவது உலகப் போர், உலகின் பல பகுதிகளில் சிறு சிறு துண்டுகளாக ஆரம்பித்துள்ளதுஎன்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். முதல் உலகப்போர் முடிவுக்கு வந்த நிலையில் திருத்தந்தை 11 -ஆம் பயஸ் 1925 -இல்நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அரசர்என்று அக்டோபர் கடைசி ஞாயிறு அன்று சிறப்பிக்க அழைப்பு விடுத்தார். 1960-இல் திருத்தந்தை 23-ஆம் யோவான், இதனைப் பெருவிழாவாக  அறிவித்தார். திருத்தந்தை 6 -ஆம் பவுல்நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர்  என்று திருவழிபாட்டு ஆண்டின் நிறைவாகக் கொண்டாடுமாறு ஆணையிட்டார். அன்று முதல் இன்றுவரை இத்திருவிழாவைப் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். ஆயர், மீட்பர், செம்மறி, வழி, ஒளி, வாழ்வு என்ற பல கோணங்களில் கிறிஸ்துவை எண்ணிப் பார்க்கின்றோம். ஆனால், இன்று அவரை அரசராகப் பார்க்க நமக்குத் திரு அவை அழைப்பு விடுக்கின்றது. அரசனின் முதன்மையான பணி தன் ஆட்சி அதிகாரத்தில் அமைதியை நிலைநிறுத்த வேண்டும். எங்கு அமைதியிருக்கின்றதோ அங்கேதான் வளர்ச்சி இருக்கின்றது. அமைதியான ஆட்சிதான் நிலையான ஆட்சியாக, முடிவில்லா ஆட்சியாக அமையும். எனவே, இறைவன் தருகின்ற அமைதியான ஆட்சியில் நாமெல்லாம் நல்ல குடிமக்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

தானியேல் இரவில் கண்ட காட்சி முதல் வாசகமாகத் தரப்பட்டுள்ளது. இவ்வுலகத்தில் நடைபெறும் ஆட்சி மாறிக்கொண்டு வருகின்றது. அதிபர் ஆட்சி, இராணுவ ஆட்சி, மக்களாட்சி என எந்தக் கட்சியும் நிரந்தரமாக, நிலையான ஆட்சியை இதுவரை தந்தது கிடையாது. ஆனால், இறைவனின் ஆட்சி நிலையானது, அழியாதது என்றுரைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

இறந்தோருள் முதலில் உயிர்த்தெழுந்தவர் கிறிஸ்துவே! அவரே இவ்வுலகில் உள்ள மன்னர்களுக்கெல்லாம் தலைவர். அரசர்களுக்கெல்லாம் மேலான அரசர். அவரது இரண்டாம் வருகையின் போது மேகங்கள் சூழ வருவார். எல்லாம் வல்லவராகவும், ஆற்றல் மிகுந்தவராகவும் வருவார். அவரது ஆட்சி உரிமையில் நாம் பங்குபெறுவோம் என்று நம்பிக்கையோடு இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. வழிகாட்டும் வல்ல தந்தையே எம் இறைவா! எம்மை வழிநடத்தும் ஆன்மிக, அரசியல், சமூகத் தலைவர்கள் அனைவரையும் ஆசிர்வதியும். அவர்களுக்குத் தேவையான ஞானத்தையும், வல்லமையையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நல்ல ஆயனாம் எம் இறைவா! எம் குடும்பத்தை வழிநடத்தும் பெற்றோருக்காக மன்றாடுகிறோம். குடும்பத்தை இறைவனின் பாதையில் வழிநடத்திச் செல்ல அனைத்து வரங்களையும், ஆசிரையும் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. தலைமைக் குருவாம் எம் ஆண்டவரே! எங்களின் வாழ்வு செழிக்க உழைத்துக் கொண்டிருக்கும் எம் பங்குத்தந்தைக்காக மன்றாடுகிறோம். நீரே அவருடன் உடனிருந்து எங்களை வழிகாட்ட அருள் வல்லமையைத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எங்களைத் தேடி வந்து மீட்ட எம் இறைவா! நாங்கள் பாவமற்ற வாழ்வை வாழவும், பாவத்திற்கு ஏதுவான செயல்களில் நாங்கள் ஈடுபடாதவாறு எங்களைக் காக்கவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.