இயேசு பிறப்பு விழா-2025 யூபிலிக் கொண்டாட்டம்
என் இனிய
‘நம்
வாழ்வு’ வாசகப் பெருமக்களே!
உங்கள் ஒவ்வொருவருக்கும்
கிறிஸ்து
பிறப்பு
விழா நல்வாழ்த்துகள்!
‘மார்கழிக் குளிரில் மங்களம் இசைக்க
மாமரியின்
மடியினிலே மாணிக்கம் பிறக்க
மனுவுரு
வான தேவ மைந்தன்
மாடடைக்
குடிலில் மலர்இதழ் விரித்தார்!
அகமும்
புறமும் அருள்நிலை தெளிந்து
நிறை
குடமான திருக் கோவிலாக
மாடடைக்
குடிலும் தீவனத் தொட்டியும்
மாட்சியில்
ஒளிர்ந்தது மாபரன் பிறந்ததால்!’
என்கிறது
‘திருக்குடும்பத் திருக்காவியம்.’ மாசில்லா மனுவுரு பிறந்து, மாட்டுக் கொட்டிலும் தீவனத் தொட்டியும் பேரொளியின் மாட்சியில் ஒளிரும் இத்திருநாளின் அருளும் ஆசிரும் உங்கள் ஒவ்வொருவருடைய உள்ளங்களிலும் இல்லங்களிலும் நிறைந்திட வாழ்த்துகிறேன்.
கிறிஸ்து
பிறப்பு விழா - அன்பின் விழா; பகிர்வின் விழா; இது ஓர் உறவின் விழா. ஆகவே, இவ்விழா
அன்பு - பகிர்வு - உறவு என்னும் முக்கோண உறவுத் தன்மையை வெளிப்படுத்துகிறது.
அன்பாய்
விளங்கும் கடவுள் (1யோவா 4:8), அந்த அன்பை ஆழமாக எண்பிக்க வார்த்தையாம் தம் மகனை (யோவா 1:1) அன்பாய் மனுவுரு எடுக்கச் செய்கிறார் (யோவா 3:16). அன்பு இங்கே உருவம் பெறுகிறது; அடையாளப்படுத்தப்படுகிறது. இந்த அன்பு, மண்ணகத்தை முத்தமிட தந்தையாம் கடவுளின் எண்ணத்தில் உதித்தது பகிர்தலே! தம் மகனை இவ்வுலகோடு பகிர்ந்துகொண்டார். எங்கெல்லாம் அன்பு ஆழப்படுகிறதோ அங்கே பகிர்தல் பரிணாமப்படுகிறது. அன்பு பகிரப்படுவதால் உறவு உறுதி பெறுகிறது. கிறிஸ்து பிறப்பு விழா வெளிப்படுத்தும் பேருண்மை இது!
திரு
அவையில் மூன்று வெவ்வேறு தருணங்களில் யூபிலி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வோர் ஆயிரம் ஆண்டிலும் மாபெரும் யூபிலி விழாவும் இரக்கத்தின் யூபிலி ஆண்டு கொண்டாடப்பட்டதுபோல, ஒவ்வொரு சூழலுக்கும் ஏற்ப யூபிலி விழாக்களும் மற்றும் ஒவ்வொரு 25-வது ஆண்டிலும்
யூபிலி விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
கிறிஸ்து
பிறப்பு விழாக்களில் இந்த ஆண்டு, யூபிலி-2025-ஆம் ஆண்டாகக் கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக 2023-ஆம் ஆண்டை ‘சங்க ஏடுகளைக் கற்றறியும்’ கற்றல்
ஆண்டாகவும், 2024-ஆம் ஆண்டை ‘இறைவேண்டல் ஆண்டாகவும்’ கொண்டாடிய
நாம், இந்த 2025-யூபிலி ஆண்டை ‘திருப்பயண ஆண்டாக’ கொண்டாடி, ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள்’ என்ற
மையக்கருத்தில் சிந்திக்க அழைக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகவே, “எதிர்நோக்கு என்னும் நெருப்பை நாம் தொடர்ந்து பற்றி எரியச் செய்ய வேண்டும்; எதிர்நோக்கு என்னும் திரியை அணையாமல் பிடித்துக்கொள்ள வேண்டும்”
என்கிறார். இந்தக் கிறிஸ்து பிறப்பின் யூபிலி ஆண்டில் கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடவும், அவரை முழுமையாக அறியவும்-அறிவிக்கவும் அன்பு செய்யவும்-அண்டி வரவும் முயல்வோம். அவ்வாறே, திரு அவையைக் கொண்டாடவும் ஒவ்வொருவரும் நமது கிறித்தவ வாழ்வை, திருமுழுக்கு அழைப்பைக் கொண்டாடவும், ஒருங்கிணைந்த திரு அவையாகப் பயணிக்கவும் முயன்றிடுவோம்.
ஆகவே,
அடையாள முறையில் இந்த யூபிலி ஆண்டைக் கொண்டாட உரோமைக்குத் திருப்பயணம் மேற்கொண்டு தூய பேதுரு-பவுல், தூய யோவான் இலாத்தரன், தூய
கன்னி மரியா, உரோமை நகருக்கு வெளியே உள்ள தூய பவுல் என நான்கு
பேராலயங்களின்
கதவுகள் திறக்கப்பட்டு, அதன் வழியே கடந்து செல்லும் திருப்பயணத்தை முன்னெடுக்க அழைப்பு விடுக்கிறார் திருத்தந்தை.
மேலும்,
கிறிஸ்து பிறப்பு விழாவில் பல அடையாளங்கள் நமக்கு
முன்வைக்கப்படுகின்றன.
இடையர்களுக்குத் தோன்றிய ஆண்டவருடைய தூதர், “குழந்தையைத் துணிகளில் சுற்றித் தீவனத் தொட்டியில் கிடத்தியிருப்பதைக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம்” என்றார்
(லூக் 2:12). பெத்லகேமில் பிறந்த குழந்தை இயேசு, மீட்பை எதிர்நோக்கிக் காத்திருப்போருக்கு இறைவன் அருளிய மாபெரும் அடையாளம். கடவுளின் அன்புக்கும், அவரது இரக்கத்திற்கும், உடனிருப்பிற்கும் இக்குழந்தை
அடையாளமாக முன்வைக்கப்படுகிறது. அவ்வாறே, நமது குடும்பங்களிலும் நம் குழந்தைகள் அடையாளங்களாக இருக்கின்றனர். அவர்கள் நம்பிக்கையின், மகிழ்ச்சியின்,
அன்பின், உறவின், எதிர்நோக்கின் அடையாளங்கள். இவர்கள் குடும்ப நலனையும் சமூகத்தின் நலனையும் ஒட்டுமொத்த உலகின் நலனையும் குறித்துக்காட்டும் உன்னத அடையாளங்கள்.
ஆகவே,
கருவில் உருவாகும் தருணம் முதற்கொண்டு குழந்தைகள் பாதுகாக்கப்படவும் அன்பு செய்யப்படவும் அரவணைக்கப்படவும் ஏற்றுக்கொள்ளப்படவும் உறுதியேற்போம். குழந்தைகள் கொடுமைப்படுத்தப்படுவதும், பட்டினியால் மடிவதும், அடிமைப்படுத்தப்படுவதும், வன்முறைக்குப் பலியாவதும், கடத்தப்படுவதும், பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. இத்தகைய செயல்கள் தொடரும் சூழலில், இதை நினைக்கும்போதே குழந்தையாக மனுவுரு எடுத்துள்ள கடவுளின் முன்பாக நாம் வெட்கப்பட வேண்டும்.
விண்மீன்
மற்றோர் அடையாளம். இயேசுவை நோக்கி யாவரையும் அழைத்து வரும் ஓர் அடையாளம். கிறிஸ்துவை ஆவலாய்த் தேடுபவரையும், அறியாதிருப்போரையும் அவரை நோக்கி அழைத்துவர விண்மீன்களாகச் செயல்படுவோம். இது மதமாற்றத்திற்காக அல்ல; மாறாக, மனமாற்றத்திற்காகவும் சமூக மாற்றத்திற்காகவும் உலக மாற்றத்திற்குமான ஒரு வழிகாட்டல்.
இந்த
விண்மீன் நிற்கும் இடம் இயேசு பிறந்த இடம். வீடுகளில் விண்மீனை அலங்கரிக்கும் நாம், இயேசு இங்கே பிறந்திருக்கிறார் என்பதையே பிறருக்கு அறிவிக்கிறோம். நம் இல்லத்தில் பாலன் பிறந்திருக்கிறார் என்பதை அறிவிக்கும் நாம், நம் உள்ளத்திலும் அவர் பிறந்திருக்கிறார் என்பதை உரக்கச் சொல்ல வேண்டும். அதற்கு அந்த விண்மீன் நம் தலையின்மீது வந்து நிற்க வேண்டும். நம் உள்ளத்திலும் அவர் பிறக்க வேண்டும். ஒளியால் நாம் நிறைந்திட வேண்டும். தாய்மடி
கண்ட இந்த உலகின் ஒளி உங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் இறையருளால் ஒளிர்விக்க வாழ்த்துகிறேன்.
மீண்டும்
உங்கள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்