news-details
தமிழக செய்திகள்
கிறிஸ்து பிறப்பு விழா - யூபிலி 2025 நல்வாழ்த்துகளும் ஆசிரும்!

ஆதவன் உதிக்க, காரிருள் மறைவது போன்று... நம்மைச் சூழ்ந்திருக்கும் காரிருளின் பல்வேறு தன்மைகளை முற்றிலுமாகப் போக்கிட பேரொளி தந்திடஉலகின் ஒளியாய்பிறந்துள்ள பாலன் இயேசுவின் பெயரால் உங்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகளையும் செபங்களையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்.

பிறந்துள்ள பாலன் இயேசுவின் வருகையானது நமக்கும், நம் குடும்பங்களுக்கும் பங்குத்தளங்களுக்கும் துறவற இல்லங்களுக்கும் அவருடைய வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்த அனைவருக்கும் அமைதியையும் மகிழ்ச்சியையும் புது வாழ்வையும் புது விடியலையும் நிறைவாகத் தருவதாக!

கிறிஸ்து பிறப்பு அன்பின் காலம். மகிழ்வை, அமைதியை, இறைவனின் நிறை ஆசிரைப் பகிரும் காலம். கடந்த காலத்தின் நிறைவையும், நிகழ்காலத்தின் மகிழ்வையும், எதிர்காலத்தின் எதிர்நோக்கையும் குறித்துக் காட்டி நன்றியுணர்வுடன் வாழ வழிகாட்டும் காலம்.

கிறிஸ்து பிறப்பின்-2025 யூபிலி ஆண்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அறைகூவலுக்கேற்ப புதிய எதிர்நோக்குடன் ஒருங்கியக்கப் பாதையில்எதிர்நோக்கின் திருப்பயணிகளாகநாம் பயணிப்போம். அன்பு, சமத்துவம், சகோதரத்துவம், உண்மை, நீதி, நேர்மை எனும் இறையாட்சியின் மதிப்பீடுகளில் வாழ்ந்து இவ்விழுமியங்கள் கொண்ட சமூகத்தை உருவாக்குவோம்.

பிறக்கும் பாலன் இயேசு நம் அனைவருக்கும் விண்ணக மகிழ்வையும், அமைதியையும், ஆசியையும் நிறைவாக அருள்வாராக!

+ மேதகு பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி

சென்னை - மயிலை உயர் மறைமாவட்டம், தலைவர், தமிழ்நாடு ஆயர் பேரவை