டீச்சர் சீபா ஒரு மாதத்திற்கு முன்புதான் அங்கு ஒரு வாடகை வீட்டிற்குக் குடி வந்திருந்தாள். நல்ல உயரமும், அதற்கேற்ற உடலமைப்பும், நேர்த்தியான உடையலங்காரமும், ‘கண்டிப்பான டீச்சராக இருப்பாளோ?’ என்றே நினைக்க வைக்கும். பள்ளி வேளை முடிந்து வீடு திரும்பிய சீபா டீச்சர், ஓட்டி வந்த அழகிய சிவப்பு நிற ஸ்கூட்டி வீட்டு வாசலில் வந்து நின்றதுதான் தாமதம், எதிரே புல்தரையில் அமர்ந்துகொண்டு அரட்டையடித்துக் கொண்டிருந்த பெண்களின் மொத்தக் கவனமும் அவள்மீது திரும்பியது.
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையுடைய புதுமைப் பெண்ணாக்கும் டீச்சரம்மா? அதனால் அந்தப் பார்வை ஓரக் கண்ணால்கூட நம்மைச் சீண்டாதாக்கும்” என
எகத்தாளமாகச் சொல்லி நமட்டுச் சிரிப்பு சிரித்தாள் சர்மிளா.
“கூந்தலுள்ள சீமாட்டி வலக்கொண்டையும் போடுவாள், இடக்கொண்டையும் போடுவாள் என்று அந்தக் காலத்தில் சும்மாவா சொல்லிப்புட்டுப் போனாங்க? ஒவ்வொரு நாளும் புதுசு புதுசா ஹேர்ஸ்டைல், இரகம் இரகமாகக் கட்டும் புடவை வகை, அதற்கேற்ற அணிகலன் மற்றும் ஒப்பனையும்... நம்மள மாதிரியா அஞ்சுக்கும் பத்துக்கும் அடுத்தவங்க கையை எதிர்பார்த்துக்கிட்டு. அவ புருசனும் சம்பாதிக்கிறான்,
அவளும் சம்பாதிக்கிறா...… அப்புறம் என்ன குறைச்சல்?” எனப் பெருமூச்சு விட்டாள் சரிதா.
ஆனால்
உமா…
“உண்மையிலேயே சீபா டீச்சர் அழகா ஹீரோயின் போலத்தான் இருக்காங்க” என்றாள்.
“என்னடி இது அதிசயமா இருக்கு! பூ விக்கிறவ, இஸ்திரி
போடுற ஆளு, வாட்ச்மேன் எல்லாரையும் மயக்குற மாதிரி உன்னையும் மயக்கிட்டா போல” என்றாள் சரசு.
சரசு
சொல்லிக் கொண்டிருக்கும்போதே அவள் பேரன் அடித்த பந்து சீபா வீட்டுக் கண்ணாடி சன்னலைப் பதம் பார்த்து அவள் வீட்டிற்குள் பாய்ந்தது. அவ்வளவுதான். ‘ஓ!’ எனக் கத்திய அச்சிறுவன் “ஆச்சி… எனக்குப் பயமா இருக்கு; நீங்க போய் எடுத்துத் தாங்க” என்று விடாமல் தொந்தரவு பண்ண ஆரம்பித்தான்.
“இதென்னடி பெரிய வம்பாப் போச்சு?” என்று சொல்லியபடியே அடம்பிடிக்கும் பேரனை இழுத்துக் கொண்டு சீபா வீட்டருகில் சென்றாள் சரசு.
“யாரு ஜன்னலை உடைத்தது?” என்று உறுமியபடியே வெளிவருவாள் என நினைத்த சரசுவை,
மென்மையான புன்முறுவலுடன் எதிர்கொண்டாள் சீபா.
அழுதுகொண்டிருந்த
சிறுவனின் கையில் பந்தைக் கொடுத்து “கவனமா விளையாடனும்; நல்லவேளை, ஜன்னல் பக்கத்தில யாராவது நின்றிருந்தால் மண்டை உடைஞ்சிருக்கும்” என்று
செல்லிக்கொண்டே சரசுவைப் பார்த்து, “வாங்க
அக்கா. உள்ளே வாங்க.… குடிவந்து ஒரு மாதமாகியும் உங்ககிட்ட பேசி அறிமுகப்படுத்திக்க முடியல. காபி சாப்பிட்டுட்டு போகலாம்” என்றாள் சீபா.
“இல்லமா, பரவாயில்லை…” என்றபடியே
அமைதியாக வரவேற்பறையில் அமர்ந்தாள் சரசு.
அப்போது
அங்கு வந்த இஸ்திரிக்காரர், “அம்மா இந்தாங்க. ஐயா எங்கேயோ வெளியூருக்குப் போறார்னு அவசரமா துணி தேய்ச்சுத் தரச்சொன்னீங்களே... அதுதான் சீக்கிரமே…
இஸ்திரி போட்டாந்தேன்” என்று
கூறியபடி மேசையில் அயர்ன் பண்ணிய துணிகளை வைத்தபோது, அவர் கையில் அதற்கான கூலியைக் கொடுத்த சீபா “அம்மாவின் மருத்துவச் செலவுக்குப் பணம் தேவைன்னு கேட்டேல்ல... இந்தா, இத சிகிச்சைக்கு வெச்சுக்கோ” என்றாள்.
கண்களில்
நீர் நிரம்பக் கரம் கூப்பியபடி நன்றி சொல்லி வெளியேறினான் அவன்.
அப்போது
அங்கு வந்த வாட்ச்மேன், “டீச்சரம்மா, மளிகைச் சாமான் வாங்கச் சொன்னீங்களே... சிட்டையைக் கொடுங்க.… நான் போயி சூப்பர் மார்க்கெட்டில வாங்கிட்டு வாரேன்” என்றார்.
“இல்லப்பா,… அங்க போகவேண்டாம். தெரு முனையில அண்ணாச்சி கடையிருக்கு, அங்க போய் வாங்குங்க, போதும். நம்மளை நம்பி, நமக்காகவே கடை வைச்சிருக்கிற இவங்களை நாம ஆதரிக்கலேன்னா எப்படி? நீங்க அண்ணாச்சிக் கடையிலேயே வாங்கிட்டு வாங்க” என்று சொன்னபடியே, “தம்பி, எந்த வகுப்புப் படிக்கிறீங்க? இந்தாங்க சாக்லேட்”
என்றபடியே கைப்பையிலிருந்த இனிப்பைச் சரசுவின் பேரன் கையில் சீபா கொடுக்க, அச்சம் நீங்க அழகாய் சிரித்தான் அவன்!
“அம்மா பூ வாங்கீக்கோங்க! இன்று
விலை ஜாஸ்தி. இங்க யாருமே வாங்கலை. நீங்களாவது வாங்குனா போணியாகும்” வாசலில்
நின்றபடி குரல் கொடுத்தாள் பூ விற்பவள்.
“சரி... இரண்டு முழம் தாங்க”
வாங்கிய
சீபா அதில் ஒரு முழத்தை சரசக்காவின் கையில் கொடுத்தாள்.
மனத்தில்
குற்றவுணர்ச்சி கைகளில் நடுக்கமாக, மறுக்காமல் வாங்கிக் கொண்டாள் சரசு.
“மகராசி நீ நல்லாயிருக்கணும். இந்த வட்டாரத்தில
சொன்ன விலைக்குப் பூ வாங்கி அன்னன்னக்கி
என் வீட்ல வெளக்கேத்தி வெக்கிற குலசாமி நீ நல்லாயிருக்கணும்” என்றாள் பூ விற்பவள்.
“இப்படிச் சில்லறை வியாபாரம் செய்யறவங்க கேட்ட காச பேரம் பேசாம கொடுத்திடுவேன் அக்கா. பெரிய பெரிய கடைகள்ல பொருள் வாங்கும்போது நாம பேரம் பேச முடியுமா என்ன?” என்றாள் சீபா.
“ஆமாம் டீச்சர், நீங்க சொல்றது சரிதான்” என்று கூறியவளாய், “அப்ப நான் வர்றேன்,…ரொம்ப நன்றி” என்றாள்.…
“எதற்கு சரசக்கா?”
“எல்லாத்துக்கும்தான்” என்று
சொல்லியபடியே பேரனுடன் அவள் திரும்பியபோது சரசுவை எதிர்பாத்தபடி ஆவலுடன் காத்திருந்த பெண்களில் ஒருத்தி, “சரசு அக்கா,… சீபா டீச்சர் பந்தை எடுத்துக் கொடுத்தாங்களா?” எனக் கேட்க, “ம்... எம் பேரனுக்கும் பந்து கெடச்சுது, எனக்கும் நல்ல பாடம் கிடைச்சுது” என்றாள்.
அப்போது
“ஒண்ணும் புரியலையே?” என்று கேட்ட அவர்களிடம், “சீபா டீச்சர் தோற்றத்திலேயும் அழகு, உள்ளத்திலேயும் அழகு” என்றாள் சரசு!