news-details
ஞாயிறு தோழன்
கிறிஸ்துமஸ் பெருவிழா (25-12-2024) எசாயா 9:2-4,6-7; தீத்து 2:11-14; லூக்கா 2:1-14

திருப்பலி முன்னுரை:

நமக்கெல்லாம் மாபெரும் மகிழ்ச்சியைக் கொடுக்க, விண்ணக தேவன் மண்ணகம் இறங்கி வந்த கிறிஸ்து பிறப்பு விழாவை இன்று நாம் கொண்டாடுகின்றோம். அனைத்துப் புண்ணியங்களின் தாயான தாழ்ச்சியின் வடிவமாகவும், நம்மைப் புனிதனாக்கப் புனிதத்தின் ஊற்றான தேவன் குழந்தையின் உருவிலும், அனைத்து மக்களுக்கும் நிலைவாழ்வைக் கொடுக்க வார்த்தையின் வடிவிலும், ஏழை எளிய மக்களுக்கு வாழ்வு வழங்க உணவு வடிவிலும், நம் அனைவரையும் விண்ணகம் நோக்கிய பாதையில் வழிநடத்த கடவுள் வடிவிலும், பாவங்களிலிருந்து மனுக்குலத்தை மீட்க மீட்பர் வடிவிலும், பசும்புல் நிலம் நோக்கி நம்மை அழைத்துச்செல்லும் நல்ல ஆயனாகவும் இறைமகன் இயேசு பிறந்துள்ளார். இம்மாபெரும் விழாவில் பங்குகொள்ள மகிழ்ச்சியோடு வருகை புரிந்திருக்கும் நாம் அனைவரும் நட்சத்திரங்களாக ஒளிவீசி, வான தூதர்களைப்போல வாழ்நாளெல்லாம் இறைவனைப் புகழ்ந்து, இடையர்களைப் போன்று இயேசுவைக் கண்டு, ஞானிகளைப் போன்று கடவுளின் குரலுக்குச் செவிகொடுத்து வாழ்க்கைப் பாதையை  மாற்றி, தீவனத்தொட்டியைப் போன்று இயேசுவைச் சுமந்து, மாட்டுத் தொழுவம் போன்று குழந்தை இயேசுவுக்கு இடம் கொடுத்து, அன்னை மரியைப் போன்று ஆண்டவரின் திட்டத்திற்குப் பணிந்து, புனித யோசேப்பைப் போன்று இயேசுவுடன் நடந்து, உள்ளம் என்னும் குடிலில் இயேசுவைப் பிறக்கச் செய்வோம். கிறிஸ்துவின் 2025-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை  ஒரு மாபெரும்  ஜூபிலியின் துவக்கமாகக் கொண்டாடுகின்றோம். இந்த ஆண்டிலே நாம் அனைவரும் இயேசுவாகப் பிறப்பெடுத்து, அனைத்து மனிதருக்கும் வாழ்வு கொடுக்க வரம் வேண்டி இத்திருப்பலியில் இணைவோம்.

முதல் வாசகம் முன்னுரை: நம்மைப் பேரொளியில் வழிநடத்தவும் துன்பங்களை இன்பமாக்கவும் அனைத்துக் கட்டுகளையும் தகர்க்கவும் சுமைகளைச் சுகமாக்கவும் அடக்கி ஆள்வோரின் ஆணவத்தை அழித்து அனைத்து மக்களுக்கும் வாழ்வு கொடுக்கவும், வன்முறைகளை அழித்து அமைதியை வழங்கவும் ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர்; வலிமைமிகு இறைவன்; என்றுமுள தந்தை; அமைதியின் அரசர் என்று கூறி கடவுளின் பராமரிப்பை உணர்ந்துவாழ அழைப்பு விடுக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை: விஞ்ஞான உலகில் மெய் ஞானமாகிய இறைவனைப் பற்றிக்கொண்டு, தீய நாட்டங்களை மறுத்து, கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இவ்வுலகில் வாழ்ந்து, ஒவ்வொரு நாளும் நற்செயல்கள் செய்வதில் வளர்ந்து, நம்பிக்கை வாழ்வில் அனுதினமும் நடந்து கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சியைக் கண்டு மகிழ்வோடு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. மீட்பை வழங்க இறங்கி வந்த ஆண்டவரே! உமது மீட்புப் பணியை இந்த அவனியில் செய்வதற்குத் தங்களையே அர்ப்பணித்துக்கொண்ட திரு அவைத் தலைவர்களை ஆசிர்வதித்து, அனைத்து நலன்களையும் கொடுத்து, பணிவாழ்வில் உடன் பயணித்து, தாயாக, தந்தையாக இருந்து அவர்களைக் காத்து வழிடத்த வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. அன்பைக் கொடுக்க அவனிக்கு வந்த ஆண்டவரே! கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாடும் நாங்கள் அனைவரும் அளவில்லாத உமது அன்பை அனுதினமும் சுவைத்து, அதை அனைவருக்கும் கொடுத்து நல்லுறவோடு வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. எம்மைத் தேடிவந்து மகிழ்ச்சியைக் கொடுத்த ஆண்டவரே! நாங்களும் இந்த நல்ல நாளில் ஏழைகள், அனாதைகள், சாலையோரத்தில் வாழும் நண்பர்கள், துப்புரவுப் பணியாளர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள், முதியோர் இல்லத்தில் இருக்கும் மூத்தோர் அனைவரையும் தேடிச்சென்று, எங்களிடம் உள்ளதைப் பகிர்ந்து கொடுக்க வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. எம் நம்பிக்கையாகப் பிறந்த ஆண்டவரே! இயேசு பிறந்த 2025-ஆம் ஆண்டின் யூபிலி விழாவைத் தொடங்கும் இந்நாளிலே, எம் திருத்தந்தை இந்த ஆண்டில் நம்பிக்கையின் திருப்பயணிகளாக வாழ எமக்கு அழைப்புவிடுத்துள்ளதை அறிந்துள்ள  நாங்கள், இயேசுவின் மீது நம்பிக்கை கொண்டு வாழவும், உடன்வாழும் அனைவருக்கும் நம்பிக்கையின் தூதுவர்களாகச் செயல்படவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.