news-details
கவிதை
புதிதாய்ப் பிறப்போம்

புதிய எண்ணம் கொண்டிடுவீர்

புதிய சொல்லைப் பேசிடுவீர்

புதிய செயலில் இறங்கிடுவீர்

புதிய வாழ்வைத் தொடங்கிடுவீர்!

 

உனக்கும் பிறர்க்கும் நன்மைதரும்

உத்தம னாக வாழநினை!

உன்னைப் போலுன் அயலானை

உண்மை யுடனே அன்புசெய்!

 

புதிய உலகைப் படைப்பதற்குப்

புதிய சிந்தனை வேண்டுமன்றோ!

எதிலும் புதுமை கண்டிடவே

எழுச்சி யுடனே செயலாற்று!

 

கள்ளம் இல்லா உள்ளத்தைக்

கட்டி எழுப்பு எந்நாளும்!

எள்ளும் நிலையில் வீழாதே!

ஏற்றம் காண முனைந்துவிடு!

 

இழுக்கில் லாமல் வாழ்வதற்கு

என்றும் உனது மனத்திலுள்ள

அழுக்கை அகற்றி நற்செயலால்

ஆன்மா மகிழ செயல்படுவாய்!

 

வஞ்சனை என்றும் வேண்டாமே!

வாய்மை ஒன்றே போதுமன்றோ!

நெஞ்சம் நிறைந்து தீங்கிழைக்கும்

நிலையை மாற்றி மனம்மாறு!

 

சமூக நீதியைக் காக்கின்ற

சமத்துவ எண்ணம் தனைக்கொள்ளு!

அமைதி வழியில் பயணிக்க

அச்ச மின்றி நடைபோடு!

 

மனித நேய மீட்பரது

மாண்பு மிக்கப் பிறப்புவழி!

இனிதே வாழ இறங்கிடுவாய்!

இன்பம் பொங்க நின்றிடுவாய்!

 

பெண்மைப் பேணு எந்நாளும்!

பெருமை பேசா நாவைக்கொள்!

அண்மைச் செய்தி அன்பென்று

ஆண்டவர் வழியை நீதேடு!

 

சாதி வெறிகள் எதற்கையா?

சமய வெறிகள் வேண்டாமே!

ஆதி காலத் தேவனருள்

அண்டி வந்திட நீபாடு!

 

நாட்டைக் காத்தில் கடனன்றோ!

நாளும் உழைத்தல் பயனன்றோ!

வீட்டைக் காக்க விடியலினை

விரைந்து சென்று நீதேடு!

 

புதிய மனித ராகிடுவீர்!

புத்தொளிப் பெற்று வாழ்ந்திடுவீர்!

சதிக்கும் எண்ணம் உதிக்காமல்

சமாதா னத்தை நீதேடு!

 

உலகில் அமைதி உருவாக

உன்னத தேவன் பிறந்தாரே!

கலகம் இல்லாப் புத்துலகை

கவன முடனே உருவாக்கு!

 

மனிதர் புதிதாய்ப் பிறந்திட்டால்

மண்ணில் என்றும் மகிழ்ச்சிநிலை!

அநீதர் வழியில் சேராமல்

அமைதி வழியில் பணியாற்று!