திருப்பலி முன்னுரை
அன்பு
நிறைந்த உறவுகளே! திருவருகைக் காலத்தின் இந்த நான்காம் வாரத்தில் அன்பு என்ற ஒளியை அனைவருக்கும் கொடுத்து மகிழ அன்னையாம் திரு அவை நம்மை அழைக்கிறது. ஆண்டவரின் பிறப்பிற்காய் தங்களை அர்ப்பணித்த அன்னை மரியாவையும், யோசேப்பையும்
தியானித்து நமது வாழ்க்கைப் பாதையைச் சீர்படுத்த இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. ஆண்டவரின் அன்பைச் சுவைத்தவர்கள், தன்னலம் மறந்து மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கு விரைந்து செல்வார்கள் என்பதற்கு இலக்கணம் அன்னை
மரியா. நமது குடும்ப உறவுக்கும் சமூக உறவுக்கும் நமக்கும் முன்மாதிரியாக இருப்பவரும் இவரே. இளம் வயதில் கருவுற்றிருக்கும் அன்னை மரியா, முதிர்ந்த வயதில்
கருவுற்றிருக்கும் நம்பிக்கையின் விழுதான எலிசபெத்தைச்
சந்தித்து உதவிசெய்து உடனிருக்க விரைந்து செல்கிறார். இந்தச் சந்திப்பு அன்பு, நம்பிக்கை, மகிழ்ச்சி, தோழமை, மனஅமைதி, உத்வேகம் எனும் ஆசிர்வாதங்களைக் கொடுப்பதாக
இருந்தது. நமது சந்திப்புகள் தோழமையை உறுதிப்படுத்துவதாக, மகிழ்ச்சியைக் கொடுப்பதாக, கவலைகளைத் தீர்ப்பதாக உள்ளனவா? எனச் சிந்திப்போம். அன்னை மரியாவைப் போன்று இறைத் திட்டத்திற்குப் பணிந்து, வார்த்தையாலும் வாழ்க்கையாலும் இயேசுவைச்
சுமந்து, தேவையில் இருப்போரைத் தேடிச்சென்று உதவி செய்து, நமது இதமான வார்த்தைகளால் பல இதயங்களுக்கு இன்பம்
கொடுத்து அர்த்தமுள்ள விதத்தில் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கொண்டாட வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை:
பல்வேறு போராட்டங்கள், மனக்கவலைகள், கடன் தொல்லைகள், வியாதிகள், குழப்பங்கள், புரிந்துகொள்ளாமை, சந்தேகம் என்று பல பிரச்சினைகள் நம்மைச்
சூழும்போது கடவுளை ‘சிக்’கெனப் பிடித்துக்கொள்வோம். ஏனென்றால், தம் மந்தையை மேய்ப்பதற்கு ஆண்டவர் வலிமையோடும் மாட்சியோடும் வருவார். அவரே அமைதியை அருள்வார். எனவே, எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று கூறுகிறார் இறைவாக்கினர் மீக்கா. ஆண்டவரின் வருகை நமக்கெல்லாம் ஆனந்தத்தைத் தரும் என்று கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை:
கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது, கடவுள் மறுப்பதை எவராலும் கொடுக்க முடியாது. கடவுளின் திட்டங்கள் நம்முடைய அறிவிற்கு அப்பாற்பட்டவை. இறைவன் நமக்குக் கொடுத்தவை, கொடுப்பவை அனைத்தும் நன்மைக்கே
என்ற அமைந்த மனநிலையோடு வாழ்வோம்.
‘இறைவா! உமது திருவுளம் நிறைவேற்ற இதோ வருகின்றேன்’ என்று
கூறி கடவுளின்
திட்டத்திற்குப் பணிந்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. ஆண்டவரே!
நீரே என்னை அழைத்துள்ளீர், இதோ வருகிறேன் என்று உமது பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்த திரு அவைத் தலைவர்களை ஆசிர்வதியும். அவர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும் அனைவருக்கும் உமது பிரசன்னத்தைத் தங்களின் வாழ்க்கையாலும், வார்த்தையாலும் கற்பித்து, மக்களை அன்பின் வழியில் நடத்திடத் தேவையான ஞானத்தைத் தந்து காக்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. எம்மை
மீட்க மனுவுரு எடுத்த நல்ல ஆயனே இறைவா! உமது திருமுன் கூடியிருக்கும் உமது பிள்ளைகளாகிய எங்கள் அனைவரையும் உமது அருளாலும் ஆற்றலாலும் நிறைத்து,
எமது குறைகளை நீக்கி, புனிதத்தில் நாளும் நாங்கள் வளர்ந்து, அச்சமின்றி உம்மை அறிவிக்கத் தேவையான ஆசிரைத் தரவேண்டுமென்று
இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. அன்பின்
இறைவா! அன்னை மரியாவும் எலிசபெத்தம்மாளும் சந்தித்த நிகழ்வு நிறை மகிழ்ச்சியைக் கொடுத்ததைப் போன்று, எங்களுடைய சந்திப்புகளும் பலன்தருவதாக அமையவும், பகையும் பொறாமையும் நீங்கி, பாசமும் அன்பும் நிறைந்த சந்திப்புகளாக எங்கள் சந்திப்புகள் மாற வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. எம்மைக்
காக்கும் ஆண்டவரே! நன்மை செய்ய விரைந்து சென்ற மரியாவைப் போன்று, எதிர்பார்ப்பின்றி பிறருக்கு உதவவும், எங்களை நேசிப்பவர்களுக்கும் வெறுப்பவர்களுக்கும் அன்பை மட்டுமே கொடுத்து வாழவும், மற்றவர்களை மனதாரப் பாராட்டி ஊக்கப்படுத்தவும் தேவையான உள்ளத்தை எமக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.