தத்துவப் பேராசிரியராய் பரிணமித்து, திரு மறைப் போதகராய் பயணித்து, இன்று திரு அவையின் மேய்ப்பனாய் உயர்ந்து நிற்கிறார் மேதகு ஆயர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்கள்.
இவரின்
குருத்துவப் பணி வாழ்வின் ஏற்றங்களைக் காணும்போது இறவாக் காவியம் படைத்த கண்ணதாசனின்...
‘தத்துவ ஞானம் புத்துயிர் பெற்றது
யூத நிலத்தினிலே !
சத்திய
வேதம் நின்று நிலைத்தது
தரணி மீதினிலே!
எத்தனை
உண்மை வந்து பிறந்தது
இயேசு பிறந்ததிலே!
இத்தனை
நாளும் மானிடன் வாழ்வது
இயேசுவின் வார்த்தையிலே!’
என்னும்
வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.
தத்துவ
ஞானத்தில் தனிப்பெரும் புலமை கொண்டு, தன்னிலை அறிவதில் புத்தொளி கண்டு, தர்க்க விவாதத்தில் தனித்துவம் படைத்து, கற்ற கல்வியைக் கடையனுக்கும் புகுத்தி, மனித மாண்பை மாண்புறச் செய்ய, ‘மாற்றமே உன்னில் மானுட ஏற்றம்’ என்னும் தாரக மந்திரத்தோடு சென்னை - பூவிருந்தவல்லி திரு இருதயக் குருமடத்தில் உதவி இல்லத்தந்தையாய், ஆசானாய், நண்பனாய், வழிகாட்டியாய், ஆன்ம குருவாய் பயணித்து, மாணவர் உள்ளத்தில் எழும் அறியாமை இருளகற்றி சிந்தனைச் சுடர் ஏற்றியவர் புதிய ஆயர் அம்புரோஸ் அவர்கள்.
தத்துவ
நடைபயின்ற இவ்வித்தகர், தன்னிலே தனித்துவம் கொண்டதனால் தனது பணி வாழ்வில் பல ஏற்றங்கள் கண்டார்.
மறைமாவட்ட முதன்மைக் குருவாக, பேராலயப் பங்குப்பணியாளராக, கல்வி நிறுவனங்களின் இயக்குநராகப் பயணித்த இவரை, இந்தியத் திரு அவை தனக்கெனச் சொந்தம் கொண்டாடிக் கொண்டது. இந்தத் தத்துவப் போதகரைத் திரு அவையின் திருத்தூது மறைப் போதகராக வாரி அணைத்துக்கொண்டது அகில உலகத் திரு அவை. இத்தகைய அருள் நிறைந்த பயணத்தில், இவர் கொண்ட பன்முகத்தன்மைக்கும் பரந்துபட்ட பணித்தள அனுபவத்திற்கும் நிறைந்த ஞானத்திற்கும் கிடைத்த அங்கீகாரமே இந்த ஆயர் பணி.
திருத்தந்தையின்
இந்திய மறைத்தூதுப் பணியகத்தின் தேசிய இயக்குநராகவும் இந்திய இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர் பேரவையின் மறைபரப்புப் பணிக்குழுச் செயலராகவும் இவர் ஆற்றி வரும் பணிகளை அங்கீகரிக்கும் வண்ணம் அண்மையில் பிராந்திய பொறுப்பாளர்கள் கூடிய அமர்வில் திருத்தந்தையின் திருத்தூதுப் பணிக்கழகத்தின் உயர்மட்ட ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்தியத் திரு அவையின் நம் மறைபரப்புப் பணிக்குக் கிடைத்த மணிமகுடமே!
எளிய
தோற்றமும், இனிய புன்முறுவலும், கனிந்த உள்ளமும் கொண்ட புதிய ஆயர் அவர்கள், தன் ஆயர் பணிவாழ்வின் இலச்சினையாக ‘இரக்கமும் எதிர்நோக்கும்’ என்னும்
விருதுவாக்கைக் கொண்டிருப்பது,
அவர் மேற்கொண்டிருந்த பணிகளையும், இனி ஆற்றவிருக்கும் பணித்தள முன்னெடுப்புகளையும் கூர்மைப்படுத்துகிறது.
‘அன்பாய்’ இருக்கும் கடவுளின் திருப்பெயருக்கான பட்டியலில், கடவுளின் திருப்பெயர் ‘இரக்கம்’
- அதாவது, “The Name of God is Mercy” என்கிறார் கர்தினால்
வால்டர் கஸ்பார். “கிறிஸ்துவின் அன்பு, தந்தையாம் கடவுளின் இரக்கத்தை வெளிப்படுத்துகிறது; அவரே இரக்கமிகு தந்தையின் திருமுகம்”
என்றும் (இயேசுவின்
திரு இருதயப் பெருவிழா மறையுரை, 2014), “அந்த இயேசுவின் திறந்த இதயம் நமக்குமுன் சென்று, நிபந்தனையின்றி அவருடைய அன்பையும் நட்பையும் நமக்கு வழங்கவே நமக்காகக் காத்திருக்கிறது” என்றும்
(அவர் நம்மை அன்பு செய்தார்: Dilexit Nos, no.1)
குறிப்பிடுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்தக் கனிந்த, இரக்கம் நிறைந்த இயேசுவின் முகமாய், முகவரியாய்த் தன்னை அடையாளப்படுத்த முன்வருகிறார் புதிய ஆயர்.
‘எதிர்நோக்கு’ என்பது
தனிமனித மற்றும் சமூக மாற்றத்தையும், புதிய நாளுக்கான நிறைவாழ்வின் விடியலையும், ஆழ்ந்த பொருள் கொண்ட ஆன்மிக வாழ்வையும் கட்டமைக்கும் அடித்தளம். ஆகவேதான் தூய பவுல், “எதிர்நோக்கு கொண்டோர் மிகுந்த துணிச்சலோடு செயல்படுவர்; அங்கே தூய ஆவி சார்ந்த திருப்பணிகள் மாட்சி பொருந்தியதாயிருக்கும்...” என்று குறிப்பிடுகிறார் (2கொரி 3:8-12).
அவ்வாறே
தனது வேலூர் மறைப்பணித்தளத்தில் புதிய பரிணாமத்தை, மக்களின் ஏற்றமிகு வாழ்வை, புதிய விடியலை, மறுமலர்ச்சி காணும் திரு அவையை உருவாக்கிட எதிர்நோக்கை
இலக்காகத் தீட்டியிருக்கிறார் நம் புதிய ஆயர். இரக்கம், எதிர்நோக்கு எனும் இவ்விரு மதிப்பீடுகளைத் தன் பணித்தள விருதுவாக்காகக் கொண்டிருக்கும் ஆயரின் பணி சிறந்தோங்க, செழித்தோங்க வாழ்த்துவோம்!
இத்தகையோர் இருப்பதனால்தான் நானிலம் நலம் பெற்றிருக்கிறது என்று எண்ணும்போது...
‘கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான்
உண்டிவ் வுலகு’
(குறள் 571)
எனும்
ஐயன் வள்ளுவரின் வார்த்தையே நம் எண்ணத்தில் நிழலாடுகிறது. அதாவது, இந்த உலகம் ‘அன்பு, இரக்கம் இணைந்த கண்ணோட்டம்’ எனப்படுகிற
பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது என்கிறார். ஆகவே, அன்பினாலும்
இரக்கத்தாலும் தூண்டப்பட்ட புதிய ஆயரின் வாழ்வும், எதிர்நோக்கினால் கட்டமைக்கப்பட்ட புது விடியலுக்கான பணிகளும், மூவொரு இறைவனின் வல்லமையால், அன்னையின் பரிந்துரையால் நல்லாயன் வழியில் சிறப்புற அமைந்திட வாழ்த்தி செபிப்போம்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்