news-details
ஞாயிறு தோழன்
திருவருகைக் காலம் 2-ஆம் ஞாயிறு - 08-12-2024 (3-ஆம் ஆண்டு) பாரூக் 5:1-9; பிலி 1:4-6, 8-11; லூக் 3:1-6

திருப்பலி முன்னுரை

இன்று திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறு. அமைதி என்ற ஒளியை நம் அகத்தில் ஒளிர்விக்கும் வாரம். இன்றைய நற்செய்தி வாசகம் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்கவும், அவருக்காகப் பாதையைச் செம்மையாக்கவும் நம்மை அழைக்கிறது. ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குவது என்பது நமது உள்ளம் என்னும் ஆலயத்தைத் தூய்மை செய்வதாகும். நமது உள்ளத்தில் உள்ள கோபம், பகை, ஆணவம், வெறுப்பு, பொறாமை போன்றவற்றை அகற்றி, அமைதி என்ற விதையை விதைப்போம். அமைதி நிலவும் உள்ளத்தில்தான் அனைத்து நலன்களும் பெருகும். அமைதி இல்லாத உள்ளம் அழிவுக்கு வித்திடும். மற்றவர்களைக் காயப்படுத்தும் வார்த்தைகளைத் தவிர்ப்போம்; பகையை மறந்து மன்னிப்பு அருள்வோம். நல்லது செய்பவர்களுக்கு மட்டுமல்ல, நமக்குத் தீங்கு செய்பவர்களுக்கும் நன்மையை மட்டுமே செய்வோம். அப்போது நமது உள்ளத்திலும், இல்லத்திலும், பங்கிலும் அமைதி நிலவும். அமைதியை அனைவருக்கும் கொடுத்துவாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர்எருசலேமே, உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்து விடு; கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்து கொள்என்று கூறுகின்றார். பேராசை, ‘நான்என்ற ஆணவம், பல ஆண்டுகளாக மன்னிக்க மறுத்து வாழும் மந்த உள்ளம், மற்றவர்களைத் தேவைக்கு மட்டும் பயன்படுத்தித் தூக்கி எறியும் கலாச்சாரம் போன்ற நமது துன்ப ஆடைகளைக் களைந்து ஆண்டவர் அருளும் அமைதியைச் சுவைக்க அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

ஓரறிவு முதல் ஐந்தறிவு கொண்ட படைப்புகள் இறைவன் தன்னை எதற்காகப் படைத்தாரோ அந்தப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகின்றன. ஆனால், பகுத்தறிவைப் பெற்ற மனிதன் மட்டுமே தான் படைக்கப்பட்டதன் நோக்கம் அறியாமல் இருக்கிறான். ஆகவே, இறைவனின் சாயலைப் பெற்ற நாமனைவரும் இறைவனைப் பற்றிய அறிவிலும், தேர்ந்து தெளியும் பண்பிலும் சிறப்புற வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அமைதியின் தெய்வமே இறைவா! எல்லா மக்களினங்களையும் உம் திருமுன் கூட்டிச் சேர்க்கும் பணியை ஆற்றிடும் திரு அவையின் தலைவர்கள் உம்மைப் பின்பற்றி நல்ல ஆயர்களாகத் திகழ்ந்து மக்களை அமைதியின் பாதையில் வழிநடத்த தேவையான ஞானத்தைத் தந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. கருணையின் தெய்வமே இறைவா! நடந்து கொண்டிருக்கும் போர்கள் முடிவு பெறவும், அனைத்து மக்களும் நீர் இவ்வுலகிற்குக் கொண்டு வந்த அமைதியை அனுபவிக்கவும், ஒருவர் மற்றவருக்கு அமைதியின் தூதுவர்களாக வாழவும் தேவையான வரம் தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. அமைதியை விதைத்த ஆண்டவரே! எம் பங்கில் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் ஆசிர்வதியும். எம் குடும்பங்களில் அன்பும் அமைதியும் நிலைத்திடவும், ஒருவர் மற்றவரைப் புரிந்து கொண்டு அமைதியோடு வாழவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. ‘அமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்என்று மொழிந்த ஆண்டவரே! இத்திருப்பலியில் பங்குகொண்டுள்ள எங்கள் அனைவரையும் ஆசிர்வதியும். உமது உடலை உணவாகப் பெற்ற நாங்கள் அனைவரும் எங்கள் சொல்லாலும், செயலாலும் அமைதியை விதைக்க வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.