திருப்பலி முன்னுரை
இறை இயேசுவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்னையாம் திரு அவை இன்று ‘அன்னை மரியா இறைவனின் தாய்’ என்ற விழாவைக் கொண்டாடி மகிழ்கிறது. அன்னை மரியா அருள் மிகப்பெற்றவர், அழகு நிறைந்தவர், இயேசுவைத் தம் கருவில் சுமந்த நற்கருணைப் பேழை, வாழ்வோர் அனைவரின் தாய், நாம் அனைவரும் வானுலகை அடையும் வழி, மாசுபடிந்த மனுகுலத்தின் மங்காத மகிமை, தன்னைப் படைத்த இறைவனுக்கே தாயானவர். மீட்பு வரலாற்றின் மையமாகவும் இருப்பவர். எனவேதான் நம் திருத்தந்தை பிரான்சிஸ் “அன்னை மரியாவைத் தன்னுடைய தாயாக ஏற்றுக்கொள்ளாத எவரும் இந்த மண்ணுலகில் ஆன்மிக அநாதைகள்” என்கிறார். இந்தப் புத்தாண்டில் அன்னையின் வழிகாட்டுதலும் பரிந்துபேசுதலும் நிரம்பக் கிடைக்கவும், இந்த 2025-ஆம் ஆண்டு முழுவதும் ஆண்டவருக்கு உகந்தவற்றைச் செய்து, நமது ஆன்மிகத் தாயான அன்னை மரியாவின் துணையை நாடி நாமும், நமது பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களும் வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம் முன்னுரை
2025
ஆண்டு முழுவதும் ஆண்டவர் நமக்கு ஆசி வழங்கி நம்மைக் காப்பதாகவும், தம் திருமுகத்தை நம்மேல் ஒளிரச்செய்து, அருள் பொழிந்து, நமக்கு அமைதியைக் கொடுத்து, அனைத்து நன்மைகளாலும் நம்மை நிரப்புவதாகவும் வாக்குறுதி தருகிறார். இறைவனின் அளப்பரிய ஆசிர்வாதத்தைப் பெற அழைக்கும் முதல் வாசகத்திற்கு நாம் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம் முன்னுரை
ஆண்டவரின் ஆவியைப்பெற்ற நாம் அனைவரும் அனைத்துவிதமான துன்பங்களிலிருந்தும் மீட்கப் பெறுவோம். சோதனையோ, இன்னலோ, நெருக்கடியோ, நோயோ எதுவும் நம்மை நெருங்க முடியாது. ஏனெனில், கடவுள் நமக்குத் தாயாக, தந்தையாக இருந்து நம்மை வழிநடத்துகிறார் எனக் கூறும் இவ்விரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1.
ஆண்டவரே! எம் திரு அவைக்கு ஆசிர்வாதமாய் நீர் கொடுத்த தலைவர்களுக்காய் நன்றி கூறுகின்றோம். ஒவ்வொரு நாளும் உமது அன்பின் பாதையில் இறைமக்களை வழிநடத்தவும், இமைப்பொழுதும் உம்மை விட்டுப் பிரியாது வாழவும், தங்கள் பணிகளைக் காலத்திற்கேற்ப கருத்தாய்ச் செய்வதற்குத் தேவையான அருள்வரங்களைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2.
ஆண்டவரே! உமது பேரன்பை நினைத்து நன்றி கூறுகின்றோம். இங்கு ஒரே குடும்பமாய் கூடியுள்ள நாங்கள் அனைவரும், எந்தச் சூழ்நிலையிலும் உம்மை விட்டுப் பிரியாதிருக்கவும், நீர் எங்களோடு வாழ்கிறீர் என்ற நம்பிக்கையில் ஒவ்வொரு நாளும் வாழவும் எங்களுக்குத் தேவையான ஞானத்தைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3.
ஆண்டவரே! இப்புதிய ஆண்டிலே எந்தக் கொடிய நோய்களும், பேரிடர்களும், வன்முறைகளும், பேராபத்துகளும் எம் மக்களைத் தாக்காது நீரே பாதுகாக்க வேண்டுமென்றும், அனைத்துக் குடும்பங்களிலும் அமைதி நிலைத்திட அருள்புரிய வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4.
வாழ்வு வழங்கும் ஆண்டவரே! உம் தாயை எமக்குத் தாயாக தந்த உமது கருணைக்காக நன்றி கூறுகின்றோம். அன்னை மரியைப்போன்று இயேசுவை எமது வாழ்க்கையால் சுமந்து இவ்வுலகிற்கு அறிவிக்கவும், எமது குடும்பங்களில் உள்ள குழந்தைகளை இறையன்பிலும், பிறரன்பிலும் நாளும் வளர்க்கவும் வரம் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.