news-details
தலையங்கம்
ஆசிரியர் பக்கம்

மதம் - மனித குலத்தைப் பண்படுத்திய நாகரிகத்தின் அடையாளம் எனப் பெருமைகொள்வது ஒருபுறம்; அதுவே உலகமெங்கும் அமைதியற்ற சூழலை உருவாக்கிய காரணி என்பது மற்றொருபுறம். மதம் மனிதனைப் பண்படுத்தி, இதயத்தை ஈரமாக்கும் என்பதைக் கடந்து, அது இரத்தத்தில் கலந்து இன்று வகுப்புவாதத்தை வளர்க்கிறது.

உலகப் போர்களில் சிந்தப்பட்ட மனித இரத்தத்தைவிட மதச் சண்டைகளில் சிந்திய இரத்தமே அதிகம் என்பார்கள். அதற்கு நம் இந்தியாவே சான்று. மத அடிப்படையில் நாட்டுப் பிரிவினையில் நாம் இழந்தது ஐந்து இலட்சம் உயிர்கள். ஒரு கோடிக்கும் மேற்பட்ட இந்து, இஸ்லாமியர்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்து உயிரைக் கையில் பிடித்தபடி அகதிகளாக இடம்பெயர்ந்த சோகநிகழ்வை இன்றைய தலைமுறை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் கசப்பான படிப்பினைகள் தந்த பாடம்தான் இந்தியாவை மதச்சார்பற்ற அரசு நடக்கும் மண்ணாக மாற்றியது. மதச்சார்பின்மையும் சனநாயகமும் இந்தியா என்ற தேசிய நாணயத்தின் இரண்டு பக்கங்களாக அமைந்திருப்பதுதான் நாம் பெருமிதம் கொள்ளவேண்டிய அரசியல் சாதனை!

அந்த அடிப்படையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் இடம்பெற்றிருக்கும்மதச்சார்பின்மை (Secularism), ‘சமநிலைச் சமுதாயம் (Socialism) ஆகிய வார்த்தைகளை நீக்க உத்தரவிடுமாறு பா... முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியசுவாமி, சமூகச் செயல்பாட்டாளர் பல்ராம் சிங், வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய ஆகியோரால்  தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து அண்மையில் தீர்ப்பளித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.

சுதந்திரக் காற்றில் சுவாசம் காண குடியானவனின் கடைசி நம்பிக்கை நீதித்துறையே! அவ்வப்போது தீர்ப்புகளில் இந்நம்பிக்கை சிதைவது போன்று தோன்றினாலும், குறிப்பிடத்தக்க சில வழக்குகளில் தன்னுடைய நிலைப்பாட்டை உறுதிபட எண்பித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அரசமைப்புச் சட்டத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தை நாடெங்கும் சிறப்பிக்கும் இத்தருணத்தில் இந்தத் தீர்ப்பு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பாகவே கவனிக்கப்படுகிறது.

அயோத்தியின் பாபர் மசூதி வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து மேலும் பல இஸ்லாமியர்களின் மசூதிகள்மீது ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளும், பா... அரசும் விரும்பத்தகாத நிகழ்வுகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்தத் தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே அமைகிறது.

மதச்சார்பின்மை - என்பது வெவ்வேறு மத நம்பிக்கைகளைக் கொண்ட குடிமக்கள் யாவரையும் பாரபட்சமின்றிச் சமமாக நடத்துவதாகும். அந்த வகையில், இது விடுதலை இந்தியாவின் தனி முதல் கடமையைப் பிரதிபலிக்கிறது. ஆயினும், கடந்த பத்து ஆண்டுகளாகப் பா... ஆட்சியில் இது தொடர்பான சர்ச்சைகள் அவ்வப்போது எழுவது தொடர் கதையாகிக் கொண்டே இருக்கிறது.

அயோத்தியின் இராமர் கோவில் பிரச்சினையைப் போலவே, உத்தரப் பிரதேச மாநிலத்தின் சம்பல் மாவட்டத்தில் ஜாமா மசூதி அமைந்துள்ள இடம் சர்ச்சைக்குரியதாகவும் அங்குப் பாரம்பரியமிக்க ஹரிஹர கோவில் பிரதானமாக இருந்ததாகவும் 1529 - இல் முகலாயப் பேரரசர் பாபர் கோவிலைப் பகுதியாக இடித்து மசூதியைக் கட்டியதாகவும் ஒருவரலாறுகட்டமைக்கப்பட்டு தேசமெங்கும் பரப்பப்படுகிறது.

வரலாறுஎன்பது ஆவணப்படுத்தப்பட்ட உண்மைத்தரவுகளின் தொகுப்பு. ஆனால், பா..தரவுபடுத்தும் தொகுப்பில் உண்மைகளுக்கு ஒருபோதும் இடமிருந்தது இல்லை. அனைத்துமே உறுதித்தன்மையற்ற, கற்பனை கலந்த செய்திகளையே உலாவ விட்டுக் கொண்டிருக்கிறது. ‘கூறப்படுவதாகவும்... சொல்லப்படுவதாகவும்... நம்பப்படுவதாகவும்... கணிக்கப்படுவதாகவும்...’ என அனைத்துமேதாகவும்...’ என்ற உறுதியற்றத் தன்மையைக் கடந்த ஒரு நூற்றாண்டாக அது வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

இத்தகைய சூழலில், ஞானபாதி மசூதி - காசி விஸ்வநாதர் உள்பட பல்வேறு வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான பல வழக்குகளில் இந்துகள் தரப்பில் வாதாடிய உச்ச நீதிமன்ற வழக்குரைஞர் விஷ்ணு சங்கர் ஜெயின், சம்பல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம், சங்கப்பரிவாரங்கள் சமர்ப்பித்தஆவணங்களின்அடிப்படையில் மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்டிருப்பதும், அது தொடர்பாக எழுந்த வன்முறைச் சம்பவங்களும் துப்பாக்கிச் சூடுவரை சென்றிருப்பதும் நம்மை அதிர்ச்சியடைய வைக்கிறது. யோகி ஆதித்யநாத் ஆட்டுவிக்கும் காவல்துறையின் செயல்பாடுகளும், அதன் பின்விளைவாக நிகழ்ந்த உயிர்ப்பலிகளும் மிகுந்த வேதனை அளிக்கின்றன.

நாட்டில் உள்ள ஒவ்வொரு மசூதியிலும் ஆய்வு மேற்கொள்ள முயலும் பா..., ஆர்.எஸ்.எஸ்.-சின் செயல்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கவை. இவ்வாறு, ஒவ்வொரு மசூதியிலும் ஆய்வுகள் மேற்கொள்ளத் தொடங்கினால் அதன் முடிவுதான் என்ன? பல சமணக் கோவில்கள், புத்த விகாரைகள் இந்து கோவில்களாக மாற்றப்பட்ட செய்திகளும் இங்கு ஏராளம். அவற்றையும் தோண்டிப் பார்க்க அந்தந்த மதத்தினர் களத்தில் இறங்கினால்  இந்துத்துவ வாதிகளின் பதில் என்னவாக இருக்கும்? தொடரும் இந்தபெரும்பான்மைவாதிகளின்அட்டூழியங்கள் சிறுபான்மையினரின் மனங்களில் பாதுகாப்பற்ற உணர்வையே பரிணமிக்கச் செய்கிறது.

நாட்டின் மத வன்முறையைத் தூண்டும் செயல்களை மத்திய அரசு உடனே நிறுத்த வேண்டும்; இஸ்லாமியர்களைச் சமமாக நடத்த வேண்டும்எனத் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃப்ரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.

மக்களைச் சாதி அடிப்படையிலும் மத அடிப்படையிலும் பிளவுபடுத்தும் அனைத்து முயற்சிகளையும் பிரதமர் மேற்கொண்டு வருகிறார்\" என்று இந்தத் தேசத்தின் முதன்மை அமைச்சரை நோக்கி விரலை நீட்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே, “எல்லாச் சூழலிலும் அனைத்து சமூகத்தைச் சேர்ந்தவர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்என மதம் கடந்து மனிதநேயத்துடன் வாழ மக்களுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.

இராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, நாட்டில் உள்ள ஒவ்வொரு மசூதியிலும் அங்கு ஏற்கெனவே கோவில் இருந்ததாகக் கூறி ஆய்வுகள் நடத்த பா... முயற்சிக்கிறது. ஆனால், பா...-வினர் இரட்டை வேடம் அணிந்து ஒற்றுமையைப் பாதுகாப்பதுபோல் நடித்து வருகின்றனர்\" என்று கார்கே மேலும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இச்சூழலில், சாம்பல் மாவட்ட நீதிமன்றம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்வதற்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். மேலும், அங்கு நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி தேவேந்திர குமார் அரோரா தலைமையில், ஓய்வு பெற்ற ..எஸ். அதிகாரி அமித் மோகன் பிரசாத், ஓய்வு பெற்ற .பி.எஸ். அதிகாரி அரவிந்த் குமார் ஜெயின் ஆகிய மூன்று நபர்கள் கொண்ட விசாரணை ஆணையத்தை அறிவித்திருக்கிறார் உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல்.

அனைத்துப் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ‘மசூதி-மந்திர்மட்டுமே இந்தத் தேசத்தின் தலையாயப் பிரச்சினை என மக்களை மூளைச்சலவை செய்யும் பா...வின் அரசியல் அநாகரிகத்தை நாம் எளிதில் கடந்து சென்றுவிட முடியாது. இது மேலும் தொடரும் பட்சத்தில், நாம் இதுகாறும் கட்டிக் காத்து வந்த நாட்டின் பன்முகத் தன்மைக்கும் மதச்சார்பின்மைக்கும் பேராபத்து என்பதை நாம் உணர்ந்தாக வேண்டும்.

இன்றுமசூதி-மந்திர்எனத் தொடங்கும் இப்பிரச்சினை, நாளைதேவாலயம்-மடாலயம்எனக்  கட்டமைக்கப்பட்டு நாமும் உள்ளிழுக்கப்படுவோம். எனவே, தற்போதைய நிகழ்வுகளைஇது முஸ்லிம்களுக்கானதுஎன்று நாம் வாளாவிருக்க முடியாது. ஒட்டுமொத்த சிறுபான்மையினருக்கும் பேரச்சத்தையும் கலக்கத்தையும் உண்டு பண்ணக் காத்திருக்கும் பரிவாரங்களின் ஒரு செயல் திட்டமாகவே இதை நாம் எண்ண வேண்டும். மீறியும் நாம் இதை வேடிக்கை பார்த்தால்...? ‘இன்று உனக்கு; நாளை எனக்குஎன்ற கதைதான்.

இன்று இந்திய மக்கள்தொகையில் 14.2% இஸ்லாமியர்களும், 2.38% கிறித்தவர்களும், 1.3% சீக்கியர்களும் இருக்கின்றனர் என்கிறது 2011-ஆம் ஆண்டின் புள்ளி விவரம். இப்படியிருக்க வெறும் 20 விழுக்காட்டினராக, அதாவது ஐந்தில் ஒரு பங்கினராக இருக்கும் மதச்சிறுபான்மையினரைத்தான் பெரும்பான்மையினரின் பகையாகக் காட்டுகின்றன பரிவாரங்கள்.

பல்வேறு வண்ணங்களும் வாசங்களும் நிறைந்த அழகிய ஒரு நந்தவனம் நம் இந்தியச் சமுதாயம். இதில் வகுப்புவாத களைகள் மண்டிவிடாமல் பாதுகாப்பதும் பராமரிப்பதும் பன்மையில் ஒருமை காணுவதும் நம் முதல் கடமை.

மதச் சிறுபான்மையினர் பாதுகாக்கப்பட வேண்டும்என்னும் அரசமைப்புச் சட்டம் பா...வின் கடந்த பத்தாண்டு கால ஆட்சியில் காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.

ஆலய மணி ஓசையும்

மசூதியின் அழைப்பொலியும்

காற்றில் கரைந்து

சங்கமிக்கும் அர்த்தம்

இவர்களுக்கு எப்போது விளங்கும்?’

என்னும் அப்துல் ரகுமானின் கவிதை வரிகள் இங்கு நினைவுக்கு வருகின்றன. இந்தப் பிரிவினைவாதிகளுக்கு இக்கவிதையின் அர்த்தம் நன்கு விளங்கும். ஆனால், அவர்களோ கேளாக் காதினர்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்