இன்று தவக்காலத்தின் முதல் ஞாயிறு. பொதுவாக, தவக்காலம் என்றதுமே சாம்பல், சாக்குத்துணி, நோன்பு, தவம், தர்மம் போன்ற அடையாளங்கள் நம் மனத்தை நிரப்பும். சோகம், துயரம், மனவருத்தம், ஒருவகைக் குற்ற உணர்வு, உடல் ஒறுத்தல் என்ற பாரமான எண்ணங்கள் மேலோங்கும். ஆனால், தவக்காலம் என்பது இறைவனின் இரக்கத்தையும் அருளையும் அன்பையும் மன்னிப்பையும் கொண்டு வரும் வசந்த காலம் என்ற பொருளில் சிந்திப்பது நல்லது.
தவக்காலம்,
நம்மையே நாம் புடமிட்டுப் பார்க்க வேண்டிய சுயஆய்வுக்கான காலம்; இறைவனின் நிபந்தனையற்ற அன்பினை நினைத்து உள்ளம் உருகி ஒப்புரவாகும் காலம்; குற்றங்களிலிருந்து திருந்தி வரும் காலம்; இறைவன் பக்கம் திரும்பி வரும் காலம்; இறைவனோடு ஒன்றிக்கவும், இலக்கு நோக்கிப் பயணிக்கவும் நமக்கு ஊக்கமளிக்கின்ற, வழிகாட்டுகின்ற காலம்; தீமைகளிலிருந்து விடுபட, தீயோனிடமிருந்து விலகிச் செல்ல ஆற்றல் தரும் காலம்; ஆண்டவனின் அருகில் செல்ல, அலகையின் ஆர்ப்பரிப்பிலிருந்து அகன்று செல்ல இறைவன் நம்மை அழைக்கும் மனமாற்றத்தின் காலம்.
ஒவ்வோர்
ஆண்டும் தவக்காலத்தின் முதல் ஞாயிறு, இயேசு சோதனைகளைச் சந்தித்த நிகழ்வைச் சிந்திக்க திரு அவை நம்மை அழைக்கிறது. இன்றைய நாளில் இயேசு சந்தித்த மூன்று சோதனைகளையும், அவற்றை எவ்வாறு இயேசு முறியடித்தார் என்பதையும் சிந்தித்து வாழ்வாக்க முயற்சி செய்வோம்.
சோதனை
என்பது என்ன? நம் தீய உணர்வுகளாலும் நாட்டங்களாலும் தீயன செய்வதற்குத் தூண்டப்படும் இயல்பே சோதனை. இச்சோதனைகள் நம் வாழ்விலிருந்து பிரிக்க முடியாத ஒரு முக்கியமான கூறு எனலாம். நம் வாழ்வில் நாம் சந்திக்கும் சோதனைகளை எப்படிப் பார்க்கிறோம்? தப்பித்துக்கொள்ள முடியாத அளவு பெருகிவரும் ஒரு காட்டாற்று வெள்ளத்தில் நாம் அடித்துச் செல்லப்படுவதுபோல நம்மில் பலர் சோதனைகளைப் பார்க்கிறோம். சோதனை நேரங்களில் ‘சோதனை தீரவில்லை, சொல்லி அழ யாருமில்லை’ - இப்படித்தான் நமது இயலாத் தன்மையை வெளிப்படுத்துகிறோம். ‘மிகப்பெரிய சோதனையில மாட்டிக்கொண்டேன், என்னால எழ முடியல’, ‘எல்லாம் என் தலைவிதி’,
‘ஒரே சோதனையா இருக்குப்பா, குடும்ப வாழ்க்கையை நடத்தவே முடியல...’ போன்ற உணர்வுகளை நாம் பல நேரங்களில் வெளிப்படுத்துகிறோம்.
சோதனைகளுக்கு,
தீய நாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வாழும்போது, நமது சொந்தச் சக்திக்கு மீறியதாய் சோதனைகள் வரும்போது, மனத்திலே உறுதி குறையலாம், நம்பிக்கை தளரலாம். ‘எதுவும் என்னால் செய்ய இயலாது’ என்ற மாயை உருவாகலாம். ஆனால், அவற்றை எதிர்த்து நிற்கவும், சோதனைகளோடு போராடி வெற்றிபெறவும் நம்முள் நல்ல எண்ணங்களும் உறுதியான மனமும் உள்ளன என்பதையே இயேசு இன்று நமக்கு உணர்த்துகிறார். இறைவனின் சக்தி நமக்குத் துணை வரும் என்ற நம்பிக்கையும், நம்மைக் காப்பதற்கு இறைவன் எப்போதும் நம்முள் இருக்கிறார் என்ற உணர்வும் நம்மில் உருவாக வேண்டும்.
இயேசு
‘அலகையினால் சோதிக்கப்பட்டார்’(லூக்
4:1) என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. தூய ஆவியாரால் இயேசுவின் பணியில் தொடங்கப்பட்ட திட்டமானது தீய ஆவியால் தடங்கலுறுகிறது. அவர் தீய நாட்டங்களாலோ உணர்வுகளாலோ சோதனைக்குட்படவில்லை; மாறாக, தம் பணிக்குறிக்கோளிலிருந்து திசைமாற அலகையினால் தூண்டப்படுகிறார். அவர் சோதனைகளைச் சந்தித்து, அலகையின் பிடியில் விழாது, அதைத் துரத்தி மிக எளிதாக வெற்றி கண்டார். எப்படி? அவர் பாலைநிலத்தில் நாற்பது நாள் தம் தந்தையின் கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார். தூய்மையான கண்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும்போது எப்படிச் சோதனையில் விழமுடியும்? தந்தையும் தம் மகனை விழவிடவில்லை என்பது இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் நல்லதொரு பாடம்.
இயேசு
அலகையால் மூன்று சோதனைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார். அவை: அ) இயேசு தம்முடைய
இறையாற்றலைப் பயன்படுத்தித் தம் பசியைத் தீர்த்துக் கொள்ள, அதாவது கல்லை அப்பமாக்கி உண்ண;
ஆ)
உலக அரசுகள் மேல் அதிகாரம் பெற தன்னைத் தெண்டனிட்டு வணங்க; இ) ‘கடவுள் காப்பாற்றுகிறாரா?’ என்பதைச் சோதித்துப் பார்க்க, கோவிலின் உயர்ந்த பகுதியிலிருந்து குதிக்க என்பன.
கல்லை
அப்பமாக மாற்றச் சொல்லி முன்வைத்த முதல் சோதனை, நம் பேராசையுடன் தொடர்புடையது. கடவுளின் துணை இன்றியும், கடவுளுக்கு எதிராகச் சென்றும் நாம், வாழ்வில் நிறைவைக் காணமுடியும் என்று பல வேளைகளில் நம்மை
நம்பவைக்க அலகை எடுக்கும் முயற்சிகளையே இந்தச் சோதனை குறித்துக் காட்டுகிறது. இரண்டாவது சோதனை, பணம், பதவி, மற்றும் அதிகாரம் என்ற பொய்த் தெய்வங்கள் முன் தலை வணங்குவதைக் குறிக்கின்றது. மூன்றாவது சோதனை, கடவுளை நம் சுய இலாபத்திற்காகப் பயன்படுத்த முனைவதைக் குறித்துக்காட்டுகிறது. இம்மூன்று சோதனைகளையும் 1. பேராசையைத் தூண்டும் சோதனை, 2. அதிகாரத்தின்மீது நாட்டம் கொள்ளும் சோதனை, 3. புகழ் மற்றும் ஆணவத்தின் மீதான ஆசையைத் தூண்டும் சோதனை என வகைப்படுத்தலாம்.
இயேசு
எவ்வாறு இச்சோதனைகளை முறியடித்தார்? 1. இயேசு தந்தையின்மீது கொண்ட உறவு (இறைவேண்டல்). 2. உலகப்பொருள்களின்மீது அவருக்கிருந்த பற்றின்மை (இச்சையின்மை). 3. தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றும் மன உறுதிப்பாடு (இறைவார்த்தை).
இவை மூன்றும் இயேசுவுக்கு அலகையின் திட்டங்களைப் புறந்தள்ளும் வெற்றிகரமான பாதைகளாக அமைந்தன. இயேசு இறைவார்த்தையைப் பயன்படுத்தி அலகையை வென்றது, கடவுளின் முன் தாழ்ச்சியோடும் மன உறுதியோடும் செயல்பட்டது
நம் வாழ்விற்குச் சிறந்ததொரு பாடமாக அமைகிறது.
திருத்தந்தை
பிரான்சிஸ் இயேசு எதிர்கொண்ட இந்த மூன்று சோதனைகளையும் குறித்து மக்களுக்குப் போதிக்கும்போது, “ஒரு பொருளை உடைமையாக்குவதில் அல்ல; அதைப் பகிர்வதிலும், பிறர்மீது அதிகாரம் காட்டுவதில் அல்ல; அன்புகூர்வதிலும், புகழ், ஆணவத்தின்மீதும் அல்ல; பணிபுரிவதிலும் நாம் செயல்பட்டால் இயேசுவைப்போல அலகையின் திட்டங்களை முறியடிக்க முடியும்”
என்கிறார் (மூவேளைச் செபவுரை, மார்ச் 6, 2022).
சோதனைகள்
இல்லாத வாழ்க்கை இல்லை. அலகையின் சோதனையில் விழாதவர்கள் எவரும் இல்லை. நாம் யாவருமே வாழ்கையின் வெவ்வேறு கட்டங்களில் சோதனைகளை எதிர்கொள்கிறோம். நாம் எதிர்கொள்ளும் சோதனைகள் பல்வேறு வகைகளில் அமைகின்றன. மனஅழுத்தம், அச்சம், விரக்தி போன்ற உளவியல் சோதனைகள், வேலை இழப்பு, வறுமை, கடன் போன்ற பொருளாதாரச் சோதனைகள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பான உறவுசார்ந்த சோதனைகள், நோய், மனநலப் பாதிப்புகள் போன்ற உடல்நலச் சோதனைகள், அநீதி, சாதி, சமய வேறுபாடுகள் போன்ற சமூகச் சோதனைகள் என நாம் எதிர்கொள்பவை
கணக்கிலடங்காதவை. துன்பம் அல்லது சோதனைகளுக்கு ‘மனிதப் பேராசையும்’ ஓர்
அடிப்படைக் காரணமாக அமைகிறது.
இன்றைய
நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள சோதனைகளைப் போன்றே பொருள், அதிகாரம் மற்றும் புகழுக்கான சோதனைகள் நம் வாழ்வுப் பயணத்திலும் வருகின்றன. நம் ஒவ்வொருவருடைய வாழ்விலும் உடல் ஆசை, பண ஆசை, பொருளாசை,
பதவி ஆசை, புகழாசை என்பவை தீராத ஆசைகளாக இறுதிவரை இருக்கின்றன. ஆசைகள் ஒரு மனிதருக்கு அதிகமாக இருப்பதால்தான் தொடர்ந்து துன்பங்களும் சோதனைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. ஆசைகள் இல்லை என்றால், துன்பம் இல்லை என ‘அவாஅறுத்தல்’ எனும்
அதிகாரத்தில் ஐயன் வள்ளுவர் இவ்வாறு பாடுகிறார்:
‘அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது
மேன்மேல் வரும்’
(குறள் 368).
நாம்
எப்படிச் சோதனைகளில் வெற்றி காணமுடியும் என்பதற்கு இன்றைய முதல் இரண்டு வாசகங்களிலிருந்து சில பாடங்களைக் கற்றுக்கொள்வோம். இன்றைய முதல் வாசகம் இஸ்ரயேல் மக்களின் மிகப் பழமையான ‘நம்பிக்கை முழக்கம்’
ஆகும். இவ்வாசகம் இஸ்ரயேல் மக்களின் வாழ்வைச் சுருங்கக் கூறுகிறது. சாதாரண நாடோடி இனமாக இருந்த இஸ்ரயேல் மக்களைக் கடவுள் தெரிந்துகொண்டு, ஓர் இனமாக, நாடாகக் கட்டி எழுப்பினார். பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டைக் கொடையாக வழங்கி அங்கே அவர்களைக் குடியமர்த்துகிறார். வலிய கரத்தாலும் அஞ்சத்தக்க பேராற்றலாலும் கடவுள் அருஞ்செயல்களை நிகழ்த்தி வழிநடத்தி வந்ததற்காகவும், நாட்டை வழங்கியதற்காகவும், முதற்கனிகளை ஆண்டவருக்குப் படைக்க வந்த இஸ்ரயேல் மக்கள் கடவுள் தந்த உரிமைகளை நினைவுகூர்ந்து நன்றிகூறுகின்றனர். இரண்டாம் வாசகத்தில், ‘இயேசுவே ஆண்டவர்’ எனவும், ‘அவர் சாவை வென்று உயிர்த்தெழுந்தார் எனவும் நாவால் அறிக்கையிட்டு வாழ்பவரே மீட்பு பெறுவர்’ எனப் பவுல் அறிக்கையிடுகிறார்.
ஆக,
ஒருவர் தான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, அவ்வப்போது தன்னைச் சரிசெய்துகொள்ளும்போதும், உயிருள்ள இறைவனின் வார்த்தையின் மீது ஆழமான நம்பிக்கை கொண்டு வாழும்போதும் சவால்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ள முடியும் என்கிறது முதல் இரண்டு வாசகங்கள்.
நிறைவாக,
நாம் தொடங்கியிருக்கின்ற இத்தவக்காலத்தில், நாம் என்ன செய்யலாம்? முதலில், இடைவிடா இறைவேண்டல் நமக்குத் தேவை. இத்தவக்காலத்தில் அமைதிக்கும் இறைவேண்டலுக்கும் நேரத்தை ஒதுக்கி, நம் இதயங்களைக் குழப்பிக் கொண்டிருக்கும் அலகையின் கவர்ச்சிகரமான சூழ்ச்சிகளை முறியடிப்போம். இரண்டாவது, எவ்வேளையிலும், பாவச்சோதனைகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தாமலும் அலகையோடு உடன்பாடு செய்து கொள்ளாமலும் தீமைகளை எதிர்கொள்ள இறைவார்த்தையின் துணையை நாடுவோம். இறுதியாக, நம் கண்களை இறைவனின் பார்வையோடு பதித்து அவர் திருவுளம் நிறைவேற்ற முன்வருவோம். இன்றைய பதிலுரைப் பாடல் உரைப்பது போன்று, “துன்ப வேளைகளில் எங்களோடு இருந்தருளும், ஆண்டவரே” என இறைவனை நோக்கி
வேண்டிக்கொள்வோம்.