news-details
தலையங்கம்
மேற்கில் உதித்த சூரியன்!

திரு அவைக்குப் புனிதர்களை அள்ளித் தந்த புண்ணிய பூமி பிரான்ஸ். மரியன்னையின் காட்சிகளால், அருள் நிறைந்த திருத்தலங்களால் புனிதம் தளும்பும் இப்புண்ணிய பூமியிலிருந்து எண்ணற்ற புனிதர்கள் திரு அவையை அலங்கரித்திருக்கிறார்கள். புனித பெர்னார்டு, ஜோன் ஆப் ஆர்க், புனித லூயி, புனித வின்சென்ட் தே பவுல், புனித பிரான்சிஸ் சலேசியார், புனித ஜான் மரிய சாந்தாள், புனித லூயி தே மாண்ட்போர்ட், புனித கத்தரின் இலபோரே, புனித பெர்னதெத், புனித மார்கிரேட் மேரி அலகோக், புனித ஜான் மரிய வியான்னி, குழந்தை இயேசுவின் புனித தெரசாள்... என அதன் பட்டியல் நீள்கிறது.

அவ்வாறே, பிரான்ஸ் நாடு - தமிழ்நாடு திரு அவைக்கும்  எண்ணற்ற மறைப்பணியாளர்களைத் தந்திருக்கிறது. வணக்கத்திற்குரிய மில்கியோர் தே மரியோன் பிரசியாக், அருள்தந்தை லூயி சவீனியன் துப்புயி, அருள்தந்தை லூயி இரவேல், அருள்தந்தை அதிரியான் கௌசானல் எனத் தொடரும் இப்பட்டியலில் இறை ஊழியர் அருள்தந்தை லூயி மரி லெவே தமிழகம் போற்றும் தவிர்க்க முடியாத மறைப்பணியாளர்.

தந்தை லூயி லெவே  இந்தியாவில் தம் குருத்துவப் பயிற்சிக் கால முதல் 65 ஆண்டுகள் மறைப்பணி செய்து அதிலும் குறிப்பாக, மறவ நாட்டுப் பகுதியில் ஆண்டாவூரணி, சருகணி, இராமநாதபுரம் பங்குத்தளங்களில் 52 ஆண்டுகள் திறம்படப் பணியாற்றி, மக்களை இறை ஞானத்திலும் இறை நம்பிக்கையிலும் சமூக, கல்வி, பொருளாதார மேம்பாட்டிலும் வளர, உயர வழிகாட்டினார்.

பங்குப் பணி, சமூகப் பணி, கல்விப் பணி என விரியும் தந்தை லெவேயின் ஆன்மிகமும் அவரது பணித்தள வாழ்வியலும் நமக்கு மிகப்பெரிய அறநெறிப் பாடங்கள். தந்தையின் வாழ்வியல் கூறுகளை, அவர் வாழ்ந்த புண்ணிய பூமியிலிருந்தும் அவர் உருவாக்கிய பல பேராளுமைகளின் அனுபவங்களிலிருந்தும் அறிந்தவன் என்ற வகையில் பெரும் மகிழ்வடைகிறேன்.

பெற்றோர், ஞானப்பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கும் அடுத்தத் தலைமுறைக்கும் கொடுக்கும் மதிப்புமிக்க சொத்து என்பது, தங்கள் மூதாதையரிடமிருந்து தாங்கள் பெற்றநம்பிக்கைஎன்னும் செல்வத்தைக் குறைவின்றி அவர்களுக்கு வழங்குவதே!” என்கிறார் நம் திருத்தந்தை பிரான்சிஸ். அத்தகைய எண்ணத்தில் சிவகங்கை மறைப்பணித்தளத்தில் தந்தையின் பணிவாழ்வைத் தங்கள் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் முந்தைய தலைமுறை வழங்கியதும் வழங்கி வருவதும் தனிச்சிறப்புக்குரியது.

தந்தையின் விண்ணகப் பிறப்பு (மார்ச் 21, 1973) அரை நூற்றாண்டு காலம் கடந்தாலும், பொன்விழா காணும்நம் வாழ்வுவார இதழ் தனது தொடக்கக் காலங்களிலேயே குறிப்பாக, 1978-79 -களில் தந்தையின் மறைப்பணி வாழ்வின் சிறப்புகளைக் கட்டுரைகளாக வடித்திருக்கிறது என்பது தனிச்சிறப்பு.

எவரிடத்தில் விருப்பும் வெறுப்பும் இல்லையோ, அவரே உண்மையான துறவி, இறைத் தொண்டன்; ஆசையும் தேவையுமற்ற நிலையில் ஒரு மனிதருக்குள் நிகழும் மாற்றமே துறவு வாழ்வு; உறவுப் பந்தங்களிலிருந்து விலகி நிற்பதும், உலகப் பற்றுகளை விலக்கி நிற்பதும் துறவு வாழ்வின் அடிப்படைக் கூறுகள்என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

பிரான்ஸ் நாட்டிலிருந்து மதுரை மறைப்பணித்தளம் நோக்கிய அவரது பார்வை துறவு வாழ்வின் மேன்மையை எடுத்துக்கூறுகிறது. இளம் வயதிலேயே தந்தையை இழந்திருந்தாலும், அவ்வேளையில் நோய்வாய்ப்பட்டிருந்த அன்புத் தாயைப் பிரிந்து, உறவுகளைத் துறந்து இந்தியா நோக்கி, தன் பயணத்தில் விழிகளைப் பதித்தது போற்றத்தக்கது. தாய்மண்ணிலிருந்து விடைபெறும் முன் அன்னை மரியா பெர்னதெத்துவுக்குக் காட்சி கொடுத்த லூர்து நகர் மசபியேல் குகைக்குச் சென்று முழந்தாள்படியிட்டு அன்னையையும் அவரது அன்பு மகனையும் பற்றிக்கொண்ட வாழ்வு...

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 

பற்றுக பற்று விடற்கு (குறள் 350)

என்னும் வள்ளுவரின் வாக்கை உறுதிப்படுத்துவதாகவே அமைகிறது.

இயேசுவின் சீடத்துவமும் அவரது குருத்துவமும் தனித்துவம் வாய்ந்தவை. “என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத்  தூக்கிக்கொண்டு, என்னைப் பின்பற்றட்டும் (மத் 16:24) என்கிறார் இயேசு. இயேசுவின் சீடத்துவம் என்பது சுயநலம் துறப்பதாகும்; தன் நலனிலும் தன்னைச் சார்ந்தவர் நலனிலும் மட்டுமே நாட்டம்கொள்ளும் சாதாரண உலக வாழ்வைத் துறந்து, உலகம் முழுவதையும் தன் உறவாக ஏற்று, எல்லா உயிர்களின் நலனுக்காகவும் செயல்படும் பெருவாழ்வின் பேரருளில் கரைந்து போவதாகும். தந்தை லெவேயின் வாழ்வு இக்கூற்றுக்கு முற்றிலும் சான்று பகர்கிறது.

ஒரு மனிதனுக்கு முகவரி தருபவை மூன்று: ஒன்று, அவன் பிறந்த நாடு (Nationality); இரண்டு, அவன் பிறந்த ஊர் (Place of Birth); மூன்று, அவன் பிறந்த குடும்பம், அவன் பிறந்த வீடு (House of Birth / Ancestral Clan). அதாவது, அவனுடைய பெற்றோர், அவன் யாருடைய பிள்ளை என்ற அடையாளம். இவற்றில் ஒன்று தவறினாலும் முகவரி சிதைந்து விடும்.

ஆபிரகாமை அழைத்த இறைவன், “உன் நாட்டிலிருந்தும் உன் இனத்தவரிடமிருந்தும் உன் தந்தை வீட்டிலிருந்தும் புறப்பட்டு நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குச் செல் (தொநூ 12:1) என்கிறார். இது முற்றிலுமாகத் தன் சொந்த முகவரியைத் துறந்து, புது முகவரியை நோக்கி மேற்கொள்ளும் பயணம். நம்பிக்கையோடு பயணம் மேற்கொண்ட ஆபிரகாமுக்கு, அங்கு புதிய நாடு, புதிய உறவு, புதிய வாழ்விடம் (கூடாரம்) வழங்கப்பட்டன. ஆண்டவர் அவருக்கு நிறைவான ஆசி வழங்கினார்; அவரைப் பெரிய இனமாக்கினார்; அவர் பெயரைச் சிறப்புறச் செய்தார். அவரோ பல தலைமுறையினருக்கும் ஆசியாக விளங்கினார். நம்பிக்கையின் மாபெரும் தந்தை ஆனார்.

தந்தை லெவேயின் வாழ்வும் ஆபிரகாமின் வாழ்வைப் போன்றதே! தன் சொந்த மண்ணையும் மக்களையும் உறவையும் உடைமையையும் விட்டு விட்டு இறைவன் விதைத்த இறையழைத்தலின் மாண்பினை உணர்ந்து, அனைத்தையும் துறந்து, இயேசு சபையினரின் மதுரை மறைப்பணித்தளம் நோக்கி அவர் மேற்கொண்ட பயணம் அவரை மறவ நாட்டில் நம்பிக்கையின் தந்தையாக உயர்த்தியது.

சேசுவே, அன்பின் அரசே!

உமது அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்!’

என்று அவருடைய உதடுகள் உச்சரித்த இந்தச் செபம், இன்றும் இப்பகுதியில் செபிக்கப்படாத வீடுகள் இல்லை; உச்சரிக்காத உதடுகள் இல்லை.

எளிய மறைக்கல்வி, ஆழமான பக்தி, இடைவிடாத இறை வேண்டல், விரல்களை விட்டு விடை பெறாத செபமாலை, எளிமையான உடை, மறவ நாட்டில் மறைச்சாட்சியான அருளானந்தரின் செந்நீர் தியாகத்தை உணர்த்தும் சிவப்பு நிறக்கச்சை, முதுமையில் தன்னைத் தாங்கிப் பிடிக்கும் ஊன்றுகோல், அருளே உருவான திருமுகம், அன்பும் பரிசும் அமைதியும் மகிழ்வும் தரும் கிறிஸ்துமஸ் தாத்தாவை நினைவூட்டும் வெண்ணிறத் தாடியோடு கூடியதாத்தா சாமியின் உதவும் எண்ணம், ‘ஏழைப் பங்காளனாய்மக்களோடு மக்களாக வாழ்ந்த எளிமையான வாழ்வு என இவருடைய ஒட்டு மொத்த வாழ்வும் வாழ்வியலும் இறைநம்பிக்கையிலும், அது பிறப்பெடுக்கும் ஆன்மிகத்திலும், அது செயலாக்கம் பெறும் மக்கள் பணியிலும்  மையம் கொண்டிருந்தது.

மேற்கே உதித்த இந்தச் சூரியன், கிழக்கு நோக்கிப் பயணித்து, இம்மறவ நாட்டின் இருளகற்றி மக்கள் வாழ்வில் இறை ஒளி ஏற்றியதே, இம்மேற்கத்திய சூரியனின் புகழ் இன்றும் ஓங்கியிருக்கக் காரணம். மண்ணுலகில் மறைந்த இச்சூரியன் விண்ணுலகில் இன்றும் ஒளி வீசிக்கொண்டிருக்கும் என்பதே எமது நம்பிக்கை. இவ்வொளியை மீண்டும் நாம் தரிசிப்போம் என்பதே எமது எதிர்நோக்கு. தனது அர்த்தமுள்ள அர்ப்பண வாழ்வால், கிறிஸ்துவின் சீடத்துவத்திற்குப் பெருமை சேர்த்து, தன் எடுத்துக்காட்டான வாழ்வால் குருக்களுக்கு உன்னத மாதிரியாய் முன்னிற்கும் தந்தை லூயி லெவே, புனிதரின் திருக்கூட்டத்தில் அணிசெய்யப்பட வேண்டும் என்பதே எமது செபம்!

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்