ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அமைதியைத் தருவதே மதங்களின் முதன்மையான நோக்கம்.
முரணும்
மோதலும் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட
மனிதகுல நலனுக்காகப் பிறந்ததுதான் மதமே தவிர, மனிதர்கள் முரண்படவும் மோதிக் கொள்ளவும் அது ஒருபோதும் காரணியாவதில்லை; ஆயினும், மனிதர்கள் ஏனோ மதத்தால் நம்பிக்கையால் வழிபாடுகளால் முரண்பட்டு மோதிக் கொள்கிறார்கள்!
உண்மை
ஒன்றுதான், அதுதான் பல வடிவங்களில் பார்க்கப்படுகிறது;
ஒளி ஒன்றுதான், வழிகள்தான் வெவ்வேறு என்பதை ஏனோ அவர்கள் அறியாமலிருக்கிறார்கள்!
அன்பு
சார்ந்த பண்புகளை ஒவ்வொருவர் இதயத்திலும் விதைப்பதே மதங்களின் உன்னத நோக்கம். அன்பையே சிந்தித்து, அன்பையே மூச்சுக்காற்றாகச் சுவாசித்து, ஆண்டவனையும் அன்பின் வடிவாகவே தரிசித்து மனிதம் வளர்ப்பதுதான் மதம். ஆகவேதான், சுவாமி விவேகானந்தர், “உலகில் இப்போதிருக்கும் எல்லா மதங்களையும், இனி பிறக்கப் போகும் புதிய மதங்களையும் இரு கை நீட்டி வரவேற்கிறேன்” என்றார்.
“எவரையும் வெறுப்பதல்ல மதத்தின் நோக்கம்; அன்பையும் அமைதியையும் அகிம்சையையும் வளர்ப்பதே
மதம். மதம் மனிதர்களை இணைப்பதற்குத்தானே தவிர, பிரிப்பதற்கில்லை” என்கிறார்
தேசத்தந்தை மகாத்மா காந்தி.
அவ்வகையில்,
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாட்டு மீனவர்கள் இணக்கமாகப் பகிர்ந்துகொள்ளும் கச்சத்தீவில் அமைந்திருக்கும் புனித அந்தோணியார் திருத்தலம் இரு நாட்டு மக்களின், அப்பகுதி மீனவர்களின் நம்பிக்கையைப் புதுப்பித்துக் கொள்ளவும் பாரம்பரியத்தைப் பகிர்ந்து கொள்ளவும் அன்போடு உறவு கொள்ளவும் வழிவகுக்கிறது. இலங்கை யாழ்ப்பாண கத்தோலிக்க மறைமாவட்டத்தால் திருத்தலமாக அறிவிக்கப்பட்டிருக்கும் கச்சத்தீவு - புனித அந்தோணியார் திருத்தலம் நூற்றாண்டு
கடந்து நிற்கும் பழம்பெரும் பாரம்பரியத்தைக் கொண்டது.
இராமநாதபுரம்,
சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கிய அன்றைய மதுரை கத்தோலிக்க உயர் மறைமாவட்ட எல்லைக்கு உட்பட்ட 280 ஏக்கர் பரப்பளவு கொண்ட இத்தீவு, 1975-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்தியா-இலங்கை இரு நாட்டுக் கூட்டு ஒப்பந்தத்தின் விளைவாக இலங்கைக்குச் சொந்தமாகும் வண்ணம் இந்திய அரசால் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை... “கச்சத்தீவு மீட்டெடுக்கப்பட வேண்டும், இந்திய-தமிழ்நாடு கடலோர மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய இந்த ஒப்பந்தம் திரும்பப் பெறவேண்டும்...” என்னும் போர்க்கொடி எழுந்து, போராட்டங்கள் தொடர்ந்து, இன்றும் இது தீர்வு காணப்படாத ஒரு தொடர் கதையாகிக் கொண்டிருப்பது பெரும் கவலையளிக்கிறது.
ஆயினும்,
இரு நாட்டு மீனவர்கள் கடல் எல்லைகளை இணக்கமாகப் பகிர்ந்து கொண்டதாலும் உறவு பாராட்டிக் கொண்டதாலும், இரு
நாட்டு மீனவர்கள் சந்தித்து மீன்வலைகளைப் பழுதுபார்க்கவும் உலர்த்திக் கொள்ளவும் சங்கமிக்கும் ஓர் இடமாக இத்தீவு திகழ்ந்ததால் இறை வேண்டுதலுக்கு ஓர் இல்லம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதன் நீட்சியாக உயர்ந்து நிற்பதுதான் பதுவை புனித அந்தோணியாருக்கு நேர்ந்தளிக்கப்பட்ட இந்தத் திருத்தலச் சிற்றாலயம். அன்றைய இராமநாதபுர கத்தோலிக்க இறைச் சமூகத்தால் குறிப்பாக, சீனிகுப்பன் படையாட்சி என்பவரால் இவ்வாலயம் 1905 -ஆம் ஆண்டு கட்டப்பட்டு புனித அந்தோணியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டதாக வரலாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இன்று இப்பகுதி இலங்கை வசம் இருப்பதால், யாழ்ப்பாண மறைமாவட்டத்தால் புதிய ஆலயம் கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
1982-ஆம் ஆண்டு
முதல் இவ்விழாவில் கலந்து கொள்வதற்கு இந்திய-தமிழ்நாடு மீனவர்களுக்கு குறிப்பாக, இராமேஸ்வரம் தீவில் வாழும் மக்களுக்கு முறையான அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இலங்கையில் தொடர்ந்த இனப்படுகொலை காலங்களில் இவ்விழாக் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டதுடன், இரு நாட்டு மீனவர்களும் வழிபாட்டிற்குச் செல்ல அனுமதியும் மறுக்கப்பட்டது. 2009-ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, ஏறக்குறைய 27 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, 2010-ஆம் ஆண்டு முதல் இவ்விழாவானது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
உலகெங்கும்
பல்வேறு இடங்களில் பல்வேறு சமய விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், கச்சத் தீவில் நிகழும் புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா தனித்துவம் பெற்றது. மூன்று நாள்கள் நடைபெறும் இவ்விழா இந்திய-இலங்கை உறவுக்கு ஒரு தொப்புள்கொடியாக அமைகிறது. இலங்கையில் நிகழ்ந்த போருக்கு முன்னும் போருக்குப் பின்னும் இரு நாட்டு மக்களையும் இணைக்கும் பாலமாக இவ்விழா தொடர்வது வரவேற்கத்தக்கது.
தற்போது,
ஆண்டுதோறும் நிகழும் இவ்விழாவில் இரு நாடுகளைச் சார்ந்த அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், இறைமக்கள் எனப் பெருந்திரளான மக்கள் கூடுவதும், திருப்பலி,
திருச்சிலுவைப் பாதை, திருச்செபமாலை என நிகழ்வுகளில் பங்கெடுப்பதும்
குறிப்பாக, பாக் சலசந்தியின் இருபுறமும் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்கள் தங்கள் உறவினர்களுடன் மீண்டும் இணைவதும் இறந்த உறவுகளை நினைவுகூர்வதும் அவர்களுக்காக இறைவேண்டல் மேற்கொள்வதும் உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்து தங்கள் மனக் காயங்களை ஆற்றிக்கொள்ளவும் பெரும் பங்கு வகிக்கிறது இப்பெருவிழா.
இவ்வாண்டு
ஏறக்குறைய 9,000 மக்கள் கூடிய இக்கச்சத்தீவு
புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா, வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்றாக அமைந்திருக்கிறது. இந்தியாவிலிருந்து முதன் முறையாகச் சிவகங்கை மறைமாவட்ட ஆயரும், தமிழ்நாடு ஆயர் பேரவையின் ‘நம் வாழ்வு’ அச்சு ஊடகப் பணியகத்தின் தலைவருமான மேதகு முனைவர் லூர்து ஆனந்தம் அவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு, இப்பெருவிழாவிற்கான கொடியை ஏற்றிவைத்து, திருவிழா சிறப்புத் திருப்பலி நிறைவேற்றி இறையாசிரைப் பெற்றுத் தந்ததும் இவ்விழாவில் கலந்துகொண்டு இலங்கைக் கத்தோலிக்க மறைமாவட்டங்களின் நிர்வாகத்தினர், கடற்படை உயர் அதிகாரிகள், அரசுத் தலைவர்கள் எனப் பல முக்கியத் தலைவர்களைச்
சந்தித்ததும் இரு நாட்டு உறவுகளுக்கான அமைதி முன்னெடுப்பாகப் பார்க்கப்படுகிறது. இராமேஸ்வரம் தீவிலும் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலும் இந்திய-இலங்கை மீனவர் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வழிவகுக்கும் என்றே கருதப்படுகிறது.
குறிப்பாக,
அண்மையில் இராமேஸ்வரம் பகுதியிலிருந்து கைது செய்யப்பட்ட 40 மீனவர்களின்
விடுதலை தொடர்பாக யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் மேதகு ஜஸ்டின் ஞானப்பிரகாசம் அவர்களைச் சந்தித்து மேற்கொண்ட முயற்சிகளும், அதன் விளைவாக அந்த 40 மீனவர்களும் திருவிழா கொடியேற்ற நாளில் வெள்ளிக்கிழமை அன்று விடுதலை செய்யப்பட்டதும், இதன் நீட்சியாக இலங்கை மீன் வளத்துறை அமைச்சர் இரு நாட்டு ஆயர்களைச் சந்தித்ததும், இப்பிரச்சினைகளுக்குச் சுமூகமான தீர்வு கிட்டும் என்றே நம்பிக்கை அளிக்கிறது.
இவ்விழா
சிறப்புற நிகழ இரு நாட்டு அரசுத் தலைவர்களும் பேராதரவளிப்பதும் கடற்படையினர் ஒத்துழைப்பு தருவதும் பாராட்டத்தக்கதே! இவர்கள் நம் நன்றிக்குரியவர்களே! இவ்விழாவிற்கும் தற்போது மீனவர்களின் விடுதலைக்கும் பேருதவி புரிந்த யாழ்ப்பாண மறைமாவட்ட ஆயர் அவர்களையும் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்!
இவ்விழாவில்
கலந்துகொள்ள இரு நாட்டு மக்களும் கொண்டிருந்த ஆர்வமும், விழாவில் கலந்துகொண்ட ஈடுபாடும் மெய்சிலிர்க்க வைக்கிறது. மற்ற திருத்தலங்களைப்போல போதிய இடவசதி, தங்குமிடம், அடிப்படைத் தேவைகள், உணவு, குடி நீர் இல்லாதிருந்தும் ஆயிரக்கணக்கில் மக்கள் இங்குக் கூடுவது அவர்களின் மதம் கடந்த மனித நேயத்தையும், வழிபாடு கடந்த வாழ்வியலையும், உறவு கடந்த உள்ள ஒன்றிப்பையும் எண்பிக்கிறது.
இது
ஏதோ கிறித்தவர்களின் ஒரு விழாவாகப் பார்க்கப்படுவதில்லை; மாறாக, இப்பகுதியில் கடல் தாயை நம்பி தங்கள் வாழ்வாதாரத்தைக் கட்டமைத்துக்கொள்ளும் எல்லா மதத்து மீனவர்களும், இக்கடலையும் கடல் தந்த வளங்களையும் ஆதாரமாகக் கொண்ட பல வணிகர்களும் சாதி,
மதம், இனம், மொழி கடந்து ஒன்றுகூடும் இப்பெருவிழாவானது சமத்துவத்தின் கூறாகவும், சகோதரத்துவத்தின் அடையாளமாகவும் விளங்குகிறது என்பதே பேருண்மை!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்