ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தின் 4-ஆம் ஞாயிறை நாம் ‘மகிழும் ஞாயிறு’ (Laetare Sunday) என்று கொண்டாடுகிறோம். உயிர்ப்பை நோக்கிச் செல்லும் நம் தவக்காலப் பயணத்தில் மகிழ்வை வளர்க்க, இந்த ஞாயிறு நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஒருவர் மகிழ்ச்சி அடைவதற்கான பல நூறு காரணங்களைக் கூற முடியும். அவற்றில், மிக முக்கியமான காரணங்கள் - நாம் மன்னிப்பு பெற்ற, மன்னிப்பு வழங்கிய தருணங்கள்.
2014-ஆம் ஆண்டு
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவக்காலத்தின் 4-ஆம் ஞாயிறுக்கு முந்தைய வெள்ளி, சனி ஆகிய இரு நாள்களை ‘மன்னிப்பின் விழாவாக’
(Festival of Forgiveness) கொண்டாடுமாறு
அழைப்பு விடுத்தார். இந்த மன்னிப்பு விழாவின்போது, உலகெங்கும் பல கோவில்கள் 24 மணி
நேரமும் திறக்கப்பட்டிருப்பதும், அங்கு ஒப்புரவு அருளடையாளம் வழங்க அருள்பணியாளர்கள் காத்திருப்பதும் இவ்விழாவின் முக்கிய நிகழ்வுகளாகும். மன்னிப்பின் விழாவை அறிமுகம் செய்து வைத்தபோது திருத்தந்தை “ஆண்டவருக்கென 24 மணி நேரத்தை ஒதுக்கி, நாம் மனமாற்றத்திற்கான சிறப்பு நேரமாக அதைச் செலவிடுவோம். காணாமற்போன மகன் திரும்பி வந்தபோது, அதை ஒரு விழாவாகக் கொண்டாடிய தந்தையைப்போல, நாம் இதைக் கொண்டாடுவோம்” என்று
கூறினார்.
எதிர்நோக்கின்
சிறப்பு யூபிலி ஆண்டைக் கொண்டாடி வரும் இவ் வேளையில், ‘மன்னிப்பதில் சோர்வடையாத இறைவன்’ என்ற மையப் பொருளில் சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றன இன்றைய வாசகங்கள்.
இன்றைய
முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் இதுவரை பெற்றிராத இரண்டு மகிழ்ச்சியான அனுபவங்களைப் பெற்றுக் கொள்கின்றனர். முதலில், அவர்கள் எகிப்திலிருந்து வாக்களிக்கப்பட்ட நாட்டை நோக்கிப் புறப்படும்போது, எகிப்தியர் அவர்களைப் பார்த்து, “அறியாத கடவுளை நோக்கி நாடோடிகளாக அலைந்து திரிகிறீர்களே, நீங்கள் நம்பும் கடவுள் பொய்யர்; அவரது வாக்குறுதியும் பொய்” என அவர்கள்மீது பழிசுமத்தினர்.
ஆனால், கடவுளோ எகிப்தியரின் பழிச்சொற்களைப் பொய்யாக்கி, இஸ்ரயேல் மக்களை யோசுவா தலைமையில் யோர்தான் ஆற்றைக் கடக்கச்செய்து, பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்குள் நுழையச் செய்தார் (யோசு 5:9).
இரண்டாவது,
வாக்களிக்கப்பட்ட நாட்டிற்குள் நுழைந்த இஸ்ரயேல் மக்கள் அனைவருமே எகிப்தில் அடிமைகளாகப் பிறந்தவர்கள். எகிப்தியர்முன் பல தலைமுறைகளாக அடிமைகளாகக்
கைகட்டி வாழ்ந்தவர்கள். அவர்களில் எவருமே சுதந்திரமாகத் தாங்களே பயிரிட்டு, தயாரித்த உணவை உண்ட அனுபவம் இல்லாதவர்கள். இப்போது தாங்கள் உரிமையாகக் கொண்ட கானான் நாட்டில், தங்கள் நிலத்தின் விளைச்சலைத் தங்கள் விருப்பப்படி சுதந்திரமாக உண்ண ஆரம்பிக்கின்றனர். அவர்கள் வாழ்வில் அதுவரைப் பெற்றிராத மகிழ்ச்சியான ஓர் அனுபவத்தை முதல் முறையாகப் பெறுகின்றனர். இவர்களின் இந்த மகிழ்ச்சிக்குக் காரணம், எல்லை தாண்டி மன்னிப்பதில் சோர்வடையாத இறைவனைத் தவிர வேறு எவர் இருக்க முடியும்!
மன்னிப்புக்
கேட்கத் தெரிந்தவர் மனம் திருந்தி வாழ்வார்; மன்னிப்புக் கொடுக்கத் தெரிந்தவர் மனம் மகிழ்ந்து வாழ்வார். மன்னிப்புக் கேட்பதற்கும் மன்னிப்புக் கொடுப்பதற்கும் நாம் கற்றுக்கொண்டால் வாழ்க்கை நமக்கு மிகவும் எளிதாகிவிடும் அல்லவா! இந்தச் சிந்தனைகளை விவரிக்கிறது ‘இரக்கத்தின் நற்செய்தி’
என அழைக்கப்படும் லூக்கா நற்செய்தியில் கூறப்பட்டுள்ள ‘காணாமல்போன மகன்’ உவமை.
வரிதண்டுவோர்,
பாவிகள் யாவரோடும் இயேசு உரையாடி, உண்டு மகிழ்ந்ததை விரும்பாத பரிசேயரும் மறைநூல் அறிஞரும் இயேசுவுக்கு எதிராக ‘முணுமுணுத்தனர்’ (லூக்
15:1,2). இவர்களின் முணுமுணுப்புக்கான காரணம் என்ன? வரிதண்டுவோர், பாவிகள் மட்டில் இயேசுவின் நிலைப்பாடு என்ன? என்று ஆராய்ந்தாலே இன்று இயேசு நமக்குக் கூறவிரும்பும் கருத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
பழைய
ஏற்பாட்டுப் பார்வையில் யூதர்கள் பாவிகளோடும் பிற இனத்தாரோடும் பழகுவது இல்லை. அவர்களை யூதர்கள் ‘பாவிகள்’ என்றே கருதினர். பாவிகளை மீட்க வந்த இயேசுவோ அவர்களோடு உண்டு, உரையாடி, வரவேற்று மகிழ்ந்தார்; அவர்களுக்கு வாழ்வளிக்க விரும்பினார்; அவர்களின் பாவநிலையை ஏற்றார் (2கொரி 5:21). இந்தப் பின்னணியில் புறக்கணிக்கப்பட்டு, பாவிகளாகக் கருதப்பட்டவர்கள் தங்களை இளைய மகனுடன் இனம் காணலாம். இயேசுவிடம் திரும்பி வரும் அவர்களின் உணர்வு, மனம்மாறித் திரும்பி வந்த இளைய மகனின் உணர்வைப்போல அமைகிறது. அவர்களின் இந்தச் செயல் மூலமாக இறைவன் பாவிகளை வெறுத்து ஒதுக்குபவர் அல்லர் என்பதை இயேசு நிறுவுகிறார்.
மேலும்,
மூத்த மகன் நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதலின் முன்மாதிரியாகத் தோன்றினாலும், ஆழ்ந்த தவறான புரிதல் கொண்டவராக இருக்கிறார். மனம் மாறித் திரும்பி வந்த தம்பியை மகிழ்ந்து கொண்டாட மனமில்லாமல், தந்தைக்கு எதிராக முணுமுணுக்கிறார். இந்த எதிர்ப்பில் அவரது உண்மை நிலை தெளிவாகவும் ஓர் அன்பற்ற கீழ்ப்படிதல் துல்லியமாகவும் வெளிப்படுகிறது. “உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை” (15:29) எனத்
தந்தையிடம் முறையிடும் இந்த மகனின் செயல் பரிசேயர், மறைநூல் அறிஞரின் உணர்வைப் போல அமைகிறது. இவ்வுவமையில் மனம்மாறி வருபவர்களை மனமகிழ்வோடு ஏற்றுக்கொள்ளவும் இந்த மனமாற்றம் கொண்டாடப்பட வேண்டும் என்பதும் இயேசு வலியுறுத்தும் செய்தி.
இந்த
உவமையில் முக்கியமாகச் சிந்திக்கப்பட வேண்டியவர் தன் மகன்மீது உண்மையான அன்பு கொண்டிருக்கும் இரக்கமிகுந்த தந்தைதான். அவர் தான் இன்றைய நற்செய்தியின் மையம். அவர்தான் உண்மையில் கொண்டாடப்பட வேண்டியவர். தன்னிலை இழந்து, தன் தந்தையை விட்டு விலகிச் சென்ற இளைய மகன் தன் தந்தையின் மன்னிப்பையும் அன்பையும் தேடித் திரும்பி வருகிறான். வயது முதிர்ந்த காலத்தில், தன் பாதுகாப்பிற்கென எதையும் வைத்துக் கொள்ளாமல் ‘தன் சொத்தைப் பகிர்ந்தளித்த’ (லூக்
15:12) தந்தையின் நற்குணத்தை அறிகிறான். தான் எண்ணியதற்கு மாறாக அவர் ‘எத்துணை இனியவர்’
(திபா 34:8) என்பதை உணர்கிறான். தான் தொலைவில் இருக்கும்போதே தன்னை நோக்கி நகரும் தன் தந்தையின் இதயத்தைப் பார்க்கிறான். தந்தையும் அவன்மீது பரிவுகொண்டு, ஓடித் தழுவி, அவனை முத்தமிட்டு, எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக்கொள்கிறார். அது மட்டுமல்லாமல், அவனுக்குப்
பெரிய விருந்தொன்று அளிக்கிறார். எனவே, இவ்வுவமையை ஊதாரி
மகனின் உவமை என்பதைவிட ‘ஊதாரி தந்தையின் உவமை’ என்பது எவ்வளவு பொருத்தமாய் அமைகிறது அன்றோ!
இந்த
உவமையிலிருந்து கடவுள் ‘நல்ல தந்தை’ என்பதை உணர்கிறோம். அவர் நம் செயல்களுக்குப் பலனோ தண்டனையோ அளிக்கும் ஓர் அதிகாரியென்று காணாது, நம்மை அன்பு செய்யும் தந்தையாக அவரைக் காணவேண்டும். நம் பாவங்களைக் கண்டு வியப்போ திகிலோ கொள்பவரல்லர் கடவுள். நம் பலவீனத்தை அவர் அறிவார். அவர் ஒருபோதும் நம்மை விட்டுப் பிரிந்ததில்லை. நம் அனைத்து அனுபவங்களிலும் அவர் நம்மோடு இருக்கிறார். எவ்வளவு தூரம் நாம் சென்றிருந்தாலும், என்ன தவறு செய்திருந்தாலும், நமது வாழ்வையும் நேரத்தையும் வீணடித்திருந்தாலும், இறைவனிடம் திரும்பிவர முடிவு செய்தோமானால் அன்பில் சோர்வடையாத நம் தந்தை நமக்காகத் தமது கரங்களை விரித்துக் காத்திருக்கின்றார்.
இறைத்தந்தையின்
மன்னிப்பு அவரது அன்பை மிகத்தெளிவாகக் காணக்கூடிய அடையாளம். இறைமன்னிப்பு ஒரு வரையறைக்கு உட்பட்டதல்ல; இறைவனின் இரக்கத்தில் மன்னிப்புப் பெறாத எந்தப் பாவமும் இல்லை. “கடவுள் நம் மிகக் கொடிய பாவங்களையும்கூட மன்னித்து, நம்மை வரவேற்று, நம்மோடு விருந்து கொண்டாடுபவர்; ஆனால், நாம்தான் அவரிடம் மன்னிப்புக் கேட்பதற்குச் சோர்வடைகிறோம்” என்கிறார்
திருத்தந்தை பிரான்சிஸ் (மூவேளைச் செபவுரை, 27.03.2022). மன்னிப்பு எப்போதுமே நம் வானகத் தந்தையின் இலவசச் செயலாக உள்ளது. ஒப்புரவு அருளடையாளத்தில் நாம் பெறும் இறைவனின் மன்னிப்பு, அவரிடம் நாம் திரும்பி வரவும், அவர் நமக்கு நெருக்கமாக இருப்பதை அனுபவிக்கவும் நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
நிறைவாக,
நம் இதயங்கள் மூடப்பட்டு, மன்னிக்க இயலாமல் இருப்பதுதான் பல உறவுச் சிக்கல்களுக்குக்
காரணமாக அமைகிறது. நம் வாழ்வில் மனக்கசப்பு, பழிவாங்குதல், கோபம் ஆகியவை நம் வாழ்வைத் துன்பமாக மாற்றுகின்றன. இன்றைய இரண்டாம் வாசகத்தின் அழைப்பிற்கேற்ப, பாவமறியாத கிறிஸ்து, பாவிகளாகிய நம் அனைவரோடும் தம்மை இணைத்துக் கொண்டு, நமக்காகப் பாவப்பரிகாரப் பலியானதுபோல, நாம் அனைவரும் இயேசுவின் அன்பால் இயக்கப்பட்டு, பிறரோடு ஒப்புரவாகி, அவரைப்போல தியாக வாழ்க்கை வாழமுயல்வோம்.
இறைவன்
மட்டுமே நம் பாவங்களை மன்னிக்கிறார். அவரிடமிருந்து மன்னிப்பு உறுதியானது. நம் இறைத்தந்தையைப் போன்று நாமும் இரக்கம்நிறை மனத்துடன் பிறரை நிபந்தனையின்றி மன்னித்து ஏற்றுக்கொள்வோம். பிறரை மன்னிப்பது நமக்குக் கடினமாக இருக்குமேயானால், தூய பிலிப்பு நேரி கூறுவதுபோல, “சிலுவையில் தொங்கும் இயேசுவை உற்றுநோக்குவோம்.” நம் தவறுகளுக்காக மனம் வருந்தி, கடவுளின் இரக்கத்தைப் பெறுவதன் வழியாக அக்களிப்போம். நம் அயலவரை மனத்தில் சுமையின்றி நோக்கும் சக்திபெறுவோம்.
மன்னிப்பதில்
ஒருபோதும் சோர்வடையாத இறைத் தந்தையைப்போல மன்னிக்கும் மனமும், இளைய மகனைப்போல மன்னிப்பு வேண்டும் மனமும் பெறுவோம். அதற்கான அருளை ஆண்டவர் இயேசு நமக்கு அருளவேண்டும் என்று இந்நாளில் ஒன்றிணைந்து மன்றாடுவோம்.