சென்னை-மயிலை உயர் மறைமாவட்டத்தின் ‘உம் வாக்கு என் வாழ்வாக’ என்னும் கத்தோலிக்க மாத இதழின் வெள்ளி விழாக் கொண்டாட்டமானது பிப்ரவரி 22-ஆம் நாள் மேய்ப்புப் பணி நிலையத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்குத் தலைமையேற்ற சென்னை-மயிலை உயர் மறைமாவட்டப் பேராயர் மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி அவர்கள், “இம்மாத இதழ் 25 ஆண்டுகள் பயணித்து வந்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது; இறைவனுக்கு நன்றி கூறும் தருணம் இது. இந்த வெள்ளி விழா கொண்டாட்டம் இறைவனுக்கும் முன்னாள் ஆசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் நன்றி கூறும் தருணத்தோடு அமைந்துவிடாமல், இவ்விதலின் வளர்ச்சியையும், இதனுடைய அவசியத்தையும், இன்னும் இதைப் பரவலாக்க மேற்கொள்ள வேண்டிய திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் நாம் தீர்க்கமாக அலசிப் பார்க்க வேண்டிய தருணமாகவும் கொள்ளவேண்டும். அன்றாட இறைவார்த்தையை மாதந்தோறும் உங்கள் இல்லங்களுக்குக் கொண்டு வரும் இந்த இதழ், எல்லாருடைய கரங்களிலும், எல்லாப் பங்குத் தளங்களிலும் வீடுகளிலும் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆவல்” எனத் தெரிவித்து, இதனுடைய தற்போதைய ஆசிரியர் தந்தை ராக் சின்னப்பா அவர்களையும், முன்னாள் ஆசிரியர்களையும் மனத்தார வாழ்த்தினார். தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய ‘நம் வாழ்வு’ வார இதழின் முதன்மை ஆசிரியர் அருள்முனைவர் செ. இராஜசேகரன் அவர்கள், ‘மாதந்தோறும் இறைவார்த்தையைச் சுமந்து வரும் இந்த இதழ், நம் இல்லம் நோக்கி ‘தூது வரும் தேவபுறா’ எனக் குறிப்பிட்டார். மேலும், இந்த இதழின் பின்னிருக்கும் கடின உழைப்பு, காலத்தின் தேவை, இறை மக்களின் ஆதரவு என முக்கோண உறவு கொண்ட இதழியல் பணியைப் பற்றி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். சிறப்பு வாழ்த்துரையாளர்களாகக் கலந்துகொண்ட ‘நியூ லீடர்’ இதழின் ஆசிரியர் அருள்பணி. பங்குராசு, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் அதிபர் அருள்பணி. E. அருளப்பா ஆகியோருடன், சென்னை-மயிலை உயர் மறைமாவட்ட முதன்மை குரு பேரருள்தந்தை G.J அந்தோணிசாமி அவர்களும், பொதுநிலையினருக்கான பேராயரின் பதில்குரு பேரருள்தந்தை எம்.வி. ஜேக்கப், குருக்களுக்கான பேராயரின் பதில்குரு - பேரருள்தந்தை பீட்டர் தும்மா ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர். ஏறக்குறைய 300 வாசகர்கள் கலந்து கொண்ட இந்த வெள்ளி விழாக் கொண்டாட்டமானது ‘உம் வாக்கு என் வாழ்வாக’ மாத இதழின் ஆசிரியர் அருள்தந்தை ராக் சின்னப்பா மற்றும் அவர்களது ஆசிரியர் குழுவினரால் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.