news-details
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு (3-ஆம் ஆண்டு) (30-03-2025) யோசு 5:9,10-12: 2கொரி 5:17-21; லூக் 15:1-3,11-32

திருப்பலி முன்னுரை

இறைவனின் எல்லையில்லாத பேரன்பைப் பற்றித் தியானிக்க தவக்காலத்தின் நான்காம் வாரம் நமக்கு அழைப்பு விடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகத்தில்காணாமல்போன மகன்உவமை  கொடுக்கப்பட்டுள்ளது. இளைய மகன் தந்தையின் அன்பை உணராமல், சொத்தைப் பிரித்து  எடுத்துக்கொண்டு தொலை நாட்டிற்கு நெடும்பயணம் மேற்கொண்டான். அனைத்தையும் செலவழித்து உணவுக்கே வழியில்லாமல் அனாதையாகத் தனித்துவிடப்பட்டபோது, தந்தையின் பேரன்பையும் பாதுகாப்பையும் நினைத்து மனம் திருந்தி தந்தையிடம் வருகின்றான். தன்னைப் பிரிந்து சென்ற மகனைக் கண்டவுடன், தந்தை மகனை ஓடி வந்து அணைத்துக்கொள்கிறார், உடலுக்கும் மனத்திற்கும் விருந்து படைக்கின்றார். இந்தத் தந்தையைப் போலவே இறைவன் தம்முடைய அன்பை நமக்குக் கொடுக்க இருகரம் விரித்துக் காத்துக்கொண்டிருக்கின்றார். ஆனால், நாமோ, நமது எண்ணத்தால், சொற்களால், செயல்களால், தீய நடத்தையால் ஆண்டவரின் அன்பைத் தொலைத்து வாழ்ந்து வருகிறோம். அதனால் பல துன்பங்களையும் அனுபவிக்கிறோம். இத்தவக்காலத்தில்ஒப்புரவுஎன்ற அருளடையாளத்தால் உள்ளத்தைத் தூய்மை செய்து ஆண்டவரின் அன்புக்குள் அடைக்கலமாவோம். இளைய மகனின் தந்தையைப் போன்று நமது வாழ்க்கையில் மன்னிப்பைக் கொடுப்போம். மன்னிப்பே உறவுகளை ஒட்ட வைக்கும், மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும், தீராத நோய்களினின்று முழுமையான விடுதலையைத் தரும். எனவே, நாம் நமது பாவத்திலிருந்து மனம் மாற்றம் பெற்று, நற்செயல்களால் நமது வாழ்க்கைக்கு உயிர் கொடுப்போம்இப்பொழுதும் - எப்பொழுதும் என்ற இரு பொழுதுகளும் நம்மை விட்டு நீங்காது காத்துவரும் இறைப் பேரன்பில் நிலைக்க வரம் வேண்டி இணைவோம் இத் திருப்பலியில்.

முதல் வாசகம் முன்னுரை

நாம் கடவுளுடன் இணைந்திருக்கும்போது எந்தக் குறையும் நமக்கு இருக்காது. ஆண்டவர்  இஸ்ரயேல் மக்களுக்குக் கானான் தேசத்தைக் கொடுத்து, அவர்களை மகிழ்ச்சியின் பாதையில் வழிநடத்தினார். இறையுறவில் நிலைத்திருக்கும்போது நமது வாழ்க்கையிலும் பல நன்மைகளை அனுபவிப்போம்  என்று கூறும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

இரண்டாம் வாசகம் முன்னுரை

உலக வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுத்து நமது ஆன்மாவைத் தொலைத்துவிடாமல்உன்னதமான உயிரை நமக்காகக் கொடுத்து நிலைவாழ்வைப் பெற்றுத்தந்த இயேசுவோடு இணைந்து வாழ முயற்சி எடுக்கவும், அவரில் அவரோடு அவருக்காக வாழ்ந்து நிறைபலனைக் கொடுத்துத் தூய மக்களாய் வாழவும் அழைப்பு விடுக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. அன்பின் இறைவா! உமது பணிக்காகத் தங்களையே அர்ப்பணித்த எம் திரு அவைத் தலைவர்கள் அப்பணியைச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான உடல், ஆன்மிக நலனைக் கொடுத்துக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம்மீது பேரன்பு கொண்ட ஆண்டவரே! உமது பிள்ளைகளாகிய நாங்கள் அனைவரும் எங்கள் நற்செயல்களால் உமது அன்பில் நிலைத்து வாழவும், பகை, வெறுப்பு, மன்னிக்காத மனநிலை இவற்றிலிருந்து விடுபட்டு, உம் சாயலை மக்கள் அனைவரிலும் கண்டு மகிழ்வோடு வாழவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. எல்லையில்லாத அன்பால் எம்மைக் காக்கும் ஆண்டவரே! இன்றைய நற்செய்தியில் கூறப்பட்ட இளைய மகனைப் போன்று மனம் திருந்தி உம்மிடம் வரவும், எம்மோடு வாழும் சகோதர, சகோதரிகளோடு நல்லுறவுடன் வாழவும்  தேவையான வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. அன்பின் இறைவா! இத்தவக்காலத்தில் உணவில் மட்டும் நோன்பு இருக்காமல், எங்களது வார்த்தைகளில், பார்வையில், மற்றவர்களைப் பற்றிக் குறைபேசுவதில் போன்ற தவறான வாழ்க்கையிலிருந்து விலகி, உம்மை நெருங்கிவர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.