news-details
தலையங்கம்
தாய்மொழி நம்... முகம்-முகவரி-உயிர்!

தாயின் கருவில் நாம் உருவாகும்போதே உயிர்நாடியில் இரண்டறக் கலந்தது நம் தாய்மொழி! நம் செவித்திறன் உணர்வில் முதன்முதலாக ஒலித்ததும் நம் தாய்மொழியே!

ஆகவேதான், தாயைப் புறக்கணிப்பதும் தாய்மொழியைப் புறக்கணிப்பதும் மனிதர்கள் செய்யும் பாவங்களிலேயே மன்னிக்க முடியாத பெரும் பாவம் என்பார்கள். இனிமையும் வளமையும் செழுமையும் கொண்ட செம்மொழியாம்தமிழ்நாம் பேசும் தாய்மொழியாக வாய்த்தது நமக்குக் கிடைத்த மாபெரும் வரமே!

ஓர் இனத்தின் தொன்மையான நாகரிகத்தையும் கலாச்சாரப் பண்பாட்டு விழுமியங்களையும் வாழையடி வாழையாக வளர்த்தெடுப்பதும் அடுத்த தலைமுறைக்கு அதைக் கடத்துவதும் அந்த இனத்தை அழியாமல் காத்து வருவதும் அதன் தாய்மொழி ஒன்றுதான். தாய்மொழியே அந்த இனத்தின் முகம், முகவரி, உயிர்நாடி! மொழி அழிந்தால் அந்த இனத்தின் முகம் அழியும்; மொழி தொலைந்தால் அந்த இனத்தின் தனித்துவமான அடையாளங்கள் மறைந்து போகும்.

ஆகவேதான், “மக்கள்தொகையில் வலிமை வாய்ந்த பெரும்பான்மையோரிடையே சிறுபான்மையினராக வாழும் தமிழர்கள், அந்தப் பெரும்பான்மையில் கலந்து, காலப்போக்கில் கரைந்து விடாது, தங்களது அடையாளத்தைக் காப்பதற்கு, அவர்களுக்கு இருக்கும் ஒரே கவசம் மொழிதான். அவர்கள் தங்கள் மொழியுடன், பண்பாட்டுப் பாரம்பரியத்துடன் தொடர்பு அற்றுப்போகாது வாழ வேண்டும். இதற்கான தேவைகளில் தலையாயது தமிழறிவு, அதன்வழி தமிழ்க்கலை, தமிழ் இலக்கிய வாழ்வோடு தொடர்புஎன்கிறார் அறிஞர் வா.செ. குழந்தைசாமி.

உலகம் ஏற்றுக்கொள்ளும் பேருண்மை இது! தாய்மொழியைப் பயன்படுத்துபவர்கள் உள்ளவரைதான் ஒரு மொழி வாழும், வளரும். அடுத்த தலைமுறைக்கு முறையாக வழங்கப்படாத மொழிகள் யாவும் வழக்கொழிந்து போகும். இன்றைய அரசியல் சூழலும், ஒன்றிய அரசின் ஆட்சியாளர்களின் திட்டங்களும்மெல்லத் தமிழினிச் சாகும்என்னும் பாரதியின் கூற்றை எண்பித்து விடுமோ என்றே  அச்சம் கொள்ளச் செய்கிறது.

மதத்தைக் கையில் எடுத்து அரசியல் நாடகத்தை அரங்கேற்றிவரும் ஒன்றிய பா... அரசு, இன்று மொழியைத் துணைக்கு அழைத்துக் கொண்டது. இந்தியப் பிரதமர் செல்லும் இடமெல்லாம்தமிழ் தொன்மையானது, ‘இனிமையானது, ‘இலக்கிய நயமானது, ‘இது ஒரு மூத்த மொழிஎன்றெல்லாம் புகழ் பாடி ஆட்சிக் கட்டிலில் அமர வழி வகுத்துக்கொண்டு, இன்று இம் மொழிக்கு ஊறு விளைவிக்கும் திட்டங்களைத் தீட்டிக்கொண்டிருக்கிறார். இவ்வேளையில்...

உன்னை

மொழிகளுக்கெல்லாம்

முதல் மொழி என்றார்...

அதனால் உன்னை

முதலாகப் போட்டு

வியாபாரம் தொடங்கி விட்டார்!’

எனும் கவிக்கோ அப்துல் ரகுமானின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

தமிழின் சிறப்பைப் பற்றிப் பேசும் பிரதமர், காசி தமிழ்ச்சங்க விழா எடுக் கும் பா... அரசு எனத் தமிழுக்கு ஆதரவாக இருப்பது போன்ற தோரணையில், இவர்கள் தமிழின் தொன்மையை அழிக்கும் திட்டங்களைத் திரைமறைவில் தீட்டுவது அதிர்ச்சியளிக்கிறது.

இருமொழிக் கொள்கையை உயிர் நாடியாகக் கொண்ட தமிழ் மண்ணில், தேசியக் கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகள் நாடெங்கும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

பழம்பெரும் நாகரிகத்தின் மூத்த மொழியான தமிழ்மொழி, நம் தாய் மொழியாகவும் இணைப்பு மொழி ஆங்கில மொழியாகவும் இருக்கும் இச்சூழலில், மூன்றாம் மொழியின் அவசியம் தான் என்ன? என்ற அடிப்படைக் கேள்வி நமக்கு எழுகிறது.

மும்மொழிக் கொள்கை என்பது தாய்மொழி அல்லது வட்டார மொழி, ஆங்கிலம், வேறு ஓர் அயல் மொழி, அதாவது மற்றோர் இந்திய மொழி இந்தக் கொள்கையின்  அடிப்படையில்தான்  கட்டமைக்கப்படுகிறது. வேலைவாய்ப்புகளையும் பொருளாதார வாய்ப்புகளையும் மாணவர்கள் பெருக்கிக்கொள்வதற்கு மாநிலங்களின் ஆட்சி மொழியையும், ஒன்றிய அரசின் இரண்டு ஆட்சி மொழிகளையும் பயில வேண்டும். அத்துடன் நாட்டின் ஒருமைப்பாட்டையும் பாரம்பரியத்தையும் பின்பற்றுவதற்கு மற்றொரு மொழியையும் படிக்க வேண்டும் என்ற நிலையில்தான் நாளை இது கட்டாயமாக்கப்படும்.

தமிழ் நமது தனித்த அடையாளம். மொழி வாரியாக அமைந்திருக்கும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்துவமான அடையாளங்கள் மேம்பட்டு இருக்கின்றன. அத்தகைய மாநில ஒருமைப்பாட்டைச் சிதைக்கும் வகையில் இருக்கிற வேறு எந்த மொழியும் இங்கு அவசியம் இல்லை. தமிழ்நாட்டு மாணவர்களின் வேலைவாய்ப்பிற்கு ஆங்கிலம் போதும் என்ற நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் நாம் பின்பற்றி வரும் இருமொழிக் கொள்கை.

மும்மொழிக் கொள்கையைத் திணிப்பதன் நோக்கம் என்ன? தமிழ்மொழியால் நாம் நம் மாநிலத்திற்குள் அடையாளப்படுத்தப்படுகிறோம்; ஆங்கில மொழியால் நாம் உலக அளவில் அடையாளப்படுத்தப்படுகிறோம். வேறு ஏதேனும் ஓர் இந்திய மொழி எனக் குறிப்பிடும் இம்மும்மொழிக் கொள்கை, பிறகு இந்தியன் என அடையாளப்படுத்தப்படுவதற்கு இந்தி மொழி அவசியம் எனச் சட்டம் இயற்றாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இத்தகைய சூழலில் மும்மொழிக் கொள்கையை வலியத் திணிப்பது மாநில உரிமையைப் பறிப்பதாகும். கல்வி என்பது மாநிலப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டு ஒத்திசைவுப் பட்டியலுக்குச் சென்றிருக்கிறதே தவிர, மத்திய அரசுப் பட்டியலில் கல்வி இல்லை. மத்திய அரசுப் பட்டியலில் கல்வி முழுமையாக இருப்பதைப்போல மாநில உரிமைகளின்மீது எதேச்சதிகாரம் கொண்டிருப்பது மொழிக்கொள்கையின் ஆணிவேரில் அமிலத்தை ஊற்றுவதற்குச் சமமாகும்.

இந்தியாவின் பொதுமொழி (Common Language) இந்தி என்கிறது அரசமைப்புச் சட்டம். மாநில மொழிகள் அனைத்தும் வட்டார மொழிகள் எனப்படுகின்றன. இந்தி உள்பட எந்த மொழியும் இன்று தேசிய மொழி (National Language) இல்லை என்பதே எதார்த்தம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், இந்தி வட மாநிலங்களில் பொது மொழியாக இருக்கிறதே தவிர, அது தேசிய மொழியாக இன்றுவரை வரையறுக்கப்படவில்லை. Hindi may be a common language in the Northern part of India, but not the National Language.

ஆட்சிமொழி குறித்து நாடாளுமன்றக் குழு அறிக்கையின்மீது விவாதம் நடந்தபோது, நேரு குறுக்கிட்டு, “இந்தி பேசாத மாநிலங்களின் மீது இந்தி திணிக்கப்படமாட்டாதுஎன்று 1959, ஆகஸ்டு 7 அன்று வழங்கிய இந்த உறுதிமொழி  இன்றுவரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவே பார்க்கப்படுகிறது. தங்கள் தாய்மொழியோடு ஆங்கிலம் ஒரு கூடுதல் மொழியாக நீடிக்க வேண்டும், ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாகவோ அல்லது கூடுதல் மொழியாகவோ மற்றொரு மொழியைக் கற்றுக்கொள்வது குறித்து முடிவு செய்யும் பொறுப்பை இந்தி பேசாத மக்களிடம் விட்டுவிட வேண்டும் என்பதுதான் நேரு வழங்கிய உறுதி மொழியின் உட்பொருள்.

அப்படி இருக்க, ஒன்றிய பா... அரசு தற்போது இந்தியை வலியத் திணிப்பதும் மற்ற மொழிகளின் மீது பாரபட்சம் காட்டுவதும் ஏன்? இந்தி மொழித் திணிப்பால் தமது தாய்மொழிகளை இழந்த வட மாநிலங்களின் நிலை நமக்கு ஏற்பட்டு விடக்கூடாது என்பதே நம் ஆதங்கம்.

தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கையால் தமிழ்நாடு உயர் கல்வி முதல் பொது சுகாதாரம் வரை இந்தியாவிலேயே முதல் மாநிலமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையில் படித்தவர்களில் 99 விழுக்காட்டினர் உலகம் முழுவதும் பல்வேறு துறைகளில் திறம்படப் பணியாற்றுகின்றனரே! பிறகு எதற்கு மும்மொழிக் கொள்கை?

ஆகவே, அரசியல் ஆதாயத்திற்காக மும்மொழிக் கொள்கையைச் சுமந்து வரும் ஒன்றிய அரசு அதைக் கைவிட வேண்டும். இருமொழிக் கொள்கையிலேயே சிறப்புற்று விளங்கும் நம் வாழ்வியலுக்கு மும்மொழிக் கொள்கை ஒவ்வாததும் தேவையற்றதும் என்றே கருதுகிறேன்! ‘விடுதலை வானில் பறந்திட எனக்குச் சொந்த சிறகுகள் இருக்க, இரவல் சிறகுகள் எனக்கு ஏன்?’ என்றே கேட்கத் தோன்றுகிறது.

இவ்வேளையில்...

தனித்தன்மை விடு

என் கூடவே இரு

என்கிறான்...

அவன் இறக்கைகளில்

நான் பறப்பது எப்படி?’

என்ற ஈழத்துக் கவிஞன் காசி ஆனந்தனின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

அன்புத் தோழமையில்,

அருள்முனைவர் செ. இராஜா @ இராஜசேகரன்

முதன்மை ஆசிரியர்