திருப்பலி முன்னுரை
தவக்காலம்
இது மனமாற்றத்தின் காலம்; ஆண்டவரின் பேரன்பைச் சுவைக்கும் காலம்; செபத்தில் நிலைத்து ஆண்டவரின் அருளைப் பெற்றுக்கொள்ளும் காலம்; மன்னித்து நல்ல மனிதர்களாக வாழும் காலம். சொற்களால், செயல்களால், நல்ல எண்ணங்களால் அமைதியை விதைக்கும் காலம். இத்தகைய புனிதமான தவக்காலத்தின் முதல் வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளோம். இன்றைய நற்செய்தியில் இயேசு நாற்பது நாள் நோன்பிருந்தபோது அலகையினால் சோதிக்கப்படுகிறார். தம்முடைய செபத்தால், வல்லமையான வார்த்தையால் அலகையை வென்றுவிடுகிறார். நாமும் அலகையின் செயல்களிலிருந்து விடுபடவேண்டும். திருப்பலி, செபமாலை, தனிச்செபம், குடும்பச் செபம் ஆகியவற்றின் வழியாக ஆண்டவரை நெருங்கிச் சென்று, அலகையை நாம் வெல்ல முடியும். எனவே, நம் வாழ்வுக்கு ஆதாரமாக இருக்கும் இறை வார்த்தையை அனுதினமும் படித்துத் தியானிப்போம்; ஆண்டவரின் பாதத்தைச் ‘சிக்’கெனப் பிடித்துக்கொள்வோம். பாவத்திலிருந்து விடுபட்டு தூயவர்களாக வாழ வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
மோசே,
இஸ்ரயேல் மக்களிடம், ‘ஆண்டவர் தம் வலிய கரத்தாலும், ஓங்கிய புயத்தாலும், அஞ்சத்தக்க பேராற்றலாலும், அடையாளங்களினாலும் எங்களை எகிப்திலிருந்து புறப்படச் செய்தார்’
என்று கூறி ஆண்டவரை மகிமைப்படுத்தும்படி கூறுகின்றார். நம்முடைய வாழ்க்கையில் ஆண்டவர் அன்றாடம் ஏராளமான நன்மைகளைச் செய்து வருகின்றார். ஆண்டவரின் பேரன்பை நினைத்து நன்றி கூற அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
ஆண்டவர்
வேண்டுவதற்கு மேலாகவே அருள்வளங்களை நமக்குத் தருகின்றார். தம்முடைய அளவற்ற நன்மைகளால் நாளும் நம்மை நிரப்புகின்றார். நம்பிக்கையோடு ஆண்டவரிடம் கேட்கும் அனைத்தையுமே நாம் பெற்றுக்கொள்வோம். அவரை நோக்கி மன்றாடும் யாவருக்கும் அவர் அளவற்ற நன்மைகளைப் பொழிகிறார் என்று தூய பவுல் கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! எம் திரு அவையை வழிநடத்தும் தலைவர்கள் அனைவரையும் ஆசிர்வதியும். உமது பணியைச் சிறப்பாகவும், விவேகத்தோடும் செய்வதற்குத் தேவையான உடல் மற்றும் மனவுறுதியைத் தந்திடவும், துன்பமான நேரங்களில் நீரே உம்முடைய தூதர்களைக் கொண்டு வழிநடத்திக் காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. அன்பின்
வடிவமான ஆண்டவரே! உம்முடைய
பேரன்பையும் பேரிரக்கத்தையும் சுவைத்து வாழ இத்தவக்காலத்தைத் துவங்கி இருக்கும் நாங்கள் அனைவரும் உலகச் செல்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட உன்னதச் செல்வமாகிய உமக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. உடன்
வாழும் ஆண்டவரே! எம்முடைய நாட்டிலும் பங்கிலும் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் ஆசிர்வதியும். தீராத நோய்களினின்றும், வறுமை, பசி, போர் போன்ற அழிவினின்றும் மக்களைக் காத்திடவும், அனைத்துக் குடும்பங்களுக்கும் அமைதி மற்றும் மகிழ்ச்சியைத் தந்திடவும் வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. உடன்
பயணிக்கும் ஆண்டவரே! எம் நாட்டில் வாழும் இளைஞர்
மற்றும் இளம் பெண்களை ஆசிர்வதியும். இணையம், அலைப்பேசி எனத் தொலைத்தொடர்புக் கருவிகளில் தொலைந்து போகாமல், மெய்ஞானமாகிய உம்மில் நம்பிக்கைகொண்டு உம் வழியில் வாழவும், அவர்களின் எதிர்காலம் சிறப்பானதாக அமைந்திடவும் அருள் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.