இன்று தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு! இயேசு தோற்ற மாற்றம் பெற்ற நிகழ்வையும் சிந்திக்கும் வாய்ப்பைத் திரு அவை நமக்கு வழங்குகின்றது. இயேசு தோற்ற மாற்ற நிகழ்வை ஏன் தவக்காலத்தில் சிந்திக்க வேண்டும்? இயேசுவின் தோற்ற மாற்றம் அவரின் கல்வாரிப் பயணத்திற்கான ஒரு முன்னோட்டம்; துன்பங்கள் வழியாகப் பெறப்போகும் மாட்சிமைக்கான முன்னடையாளம். கிறித்தவர்களாகிய நாம் சிலுவைகளைச் சுமக்காமல் உயிர்ப்பைக் கொண்டாட முடியாது என்பதை நம் மனத்திலே ஆழப்பதிக்கின்ற ஒரு நிகழ்வு. உடைபட மனமில்லாதவர் உருவாகவும் முடியாது, பிறரை உருவாக்கவும் முடியாது என்ற உண்மையை உணர்த்தும் ஓர் இறை வெளிப்பாடு இது.
இயேசுவின்
தோற்ற மாற்றம் பற்றிய நிகழ்வு ஒத்தமைவு நற்செய்திகள் மூன்றிலுமே காணப்படுகிறது (மத் 17:1-9; மாற் 9:2-10; லூக் 9:28-36). “நாங்கள் சூழ்ச்சியாகப் புனைந்த கதைகளை ஆதாரமாகக் கொண்டு பேசவில்லை; நாங்கள் அவரது மாண்பை நேரில் கண்டவர்கள்” (2பேது
1:16) என்று பேதுரு எழுதுவது இயேசுவின் தோற்ற மாற்றம் என்பது ‘புனையப்பட்ட கதை அல்ல; மாறாக, உண்மையாகவே நிகழ்ந்த ஒன்று’ என்பதை உறுதிப்படுத்துகிறது.
இன்றைய
லூக்கா நற்செய்தியின் அறிமுக வரிகள், “இயேசு இறைவனிடம் வேண்டுவதற்காக ஒரு மலைமீது ஏறினார்”
(9:28) என்கிறது. இங்கே மலையும் செபமும் நம் கவனத்தை ஈர்க்கின்றன. மலை உச்சி இறைவனோடு இணைகின்ற, இறைவன் தம்மை நமக்கு வெளிப்படுத்துகின்ற இடமாக மீட்பின் வரலாற்றிலும், திரு அவையின் படிப்பினையிலும் நாம் காண்கின்றோம். செபம் இறைவனை நோக்கி நம் கண்களைத் திருப்புவதற்கான ஒரு வாய்க்காலாக அமைகிறது. ஆழ்நிலை இறை வேண்டலில் இயேசுவின் முகத் தோற்றம் மட்டுமல்ல, அவர் உடுத்தியிருக்கும் ஆடை கூட மின்னல்
போல ஒளி வீசியது.
காசைப்
போட்டால் நாம் விரும்பும் பொருள்களைப் பெறும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள ஓர் இயந்திரத்தைப் போன்றதல்ல செபம். இறை வேண்டல் என்பது தேவைகளை அடுக்கிக் கொண்டே செல்வதுமல்ல; இறைவனின் பேரன்பை எண்ணி நன்றி சொல்வதே செபம். இறைவனின் விருப்பம் நம்மில் நிறைவேற நாம் அளிக்கும் அனுமதியே செபம். இயேசு நீண்ட செபத்தில் இரவெல்லாம் செலவிட்டார் (லூக் 6:12). தம் சீடர்கள் பல வகைகளிலே துன்பப்படுவார்கள்,
சோதிக்கப்படுவார்கள் என்பதை அறிந்தே செபித்தார் (2:31). தமது செபத்தின் வழியாக, தமது தோற்ற மாற்றத்தின் வழியாக இயேசு சீடர்களுக்கு உறுதியும் வலிமையும் அளித்தார் (யோவா 17:9). இயேசுவின் தோற்ற மாற்ற நிகழ்வு சீடர்கள் இயேசுவின் துன்பங்களையும், சிலுவைச் சாவையும் புரிந்து கொள்ள உதவியது எனலாம்.
இயேசு
ஏன் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவரை மட்டும் மலைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்? இயேசு முதன்முறை தம் பாடுகளை அறிவித்த போது, அதை முதலில் எதிர்த்தவர் பேதுரு. இயேசு அவரைக் கடிந்துகொண்ட பாணி, பேதுருவை மட்டுமல்ல, மற்ற சீடர்களையும் பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியிருக்க வேண்டும். ஏனெனில், சீடர்களின் எதிர்பார்ப்புகள் இயேசுவின் இப்புதிய வெளிப்பாடுகளால் தவிடுபொடியாகி விட்டன. பேதுரு அனைவரின் சார்பாக நின்றுகொண்டு, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே; எங்களுக்கு என்ன கிடைக்கும்?” (மத் 19:27) என்று தங்கள் இயலாமைகளை வெளிப்படுத்துகின்றார். செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் தங்கள் தாயின் மூலமாக, “அரியணையின் வலப்புறமும் இடப்புறமும் அமர”
(மத் 20:21) பரிந்துரை செய்கின்றனர். இந்தச் சூழலில் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகிய மூவருக்கும் உடனடியாக ஓர் ‘ஆன்மிக அருள்’ தேவைப்பட்டது.
ஆகவே,
சீடர்களின் பலவீனத்தை நன்கு அறிந்தவரான இயேசு, அவர்கள்மீது இரக்கம் கொண்டு தம் பாடுகளுக்கும் இறப்பிற்குப்பின் வரவிருந்த தமது வெற்றியைத் தம் தோற்ற மாற்றத்தின் வழியாக வெளிப்படுத்துகின்றார். இயேசுவின் பாடுகளைப்பற்றிக் கேட்டு நொந்துபோயிருந்த பேதுரு, இப்போது அவரது வெற்றிகரமான தோற்றத்தில் பெருமகிழ்ச்சி கொள்கிறார். இதே தோற்றத்தில் இயேசு நீடித்திருக்க வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறார். ஆனால், இயேசுவோ சீடர்கள் நம்பிக்கையில் ஆழப்பட வேண்டும், வாழ்வின் உண்மைத்தன்மையை உணர வேண்டும், தமது சிலுவையைச் சுமக்கும் திருத்தூதர்களாக மாற்றம் பெறவேண்டும் எனக் கூறி மலையை விட்டு இறங்கிப் பணிசெய்ய அழைத்து வருகிறார்.
தோற்ற
மாற்ற நிகழ்வில் நம் கூடுதல் கவனத்தை ஈர்ப்பவர்கள் மோசேயும் எலியாவும். இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் மோசேயும் எலியாவும் மிக முக்கியமானவர்கள். மோசே மிகப்பெரிய திருச்சட்ட அறிஞர்; இறைவாக்கினர் எலியா இறைவாக்கினர்களுள் தலைமையானவர். கடவுளைத் தேடக்கூடியவர்கள் வாழ்வில் வரக்கூடிய பல்வேறு போராட்டங்களைச் சந்திக்க வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துபவர்கள் இவர்கள். மோசே இறைவன் கொடுத்த கட்டளைகளைப் பெற்றுக்கொண்டு அதன்படியே மக்களை வழிநடத்த புறப்பட்டபொழுது, அவர் மக்களால் எதிர்க்கப்பட்டு, பல்வேறு முணுமுணுப்பிற்கு ஆளான சூழலிலும், கடவுளின் பார்வையில் மோசே ஏற்றுக்கொள்ளப்பட்டார். எலியாவும் அன்றைய காலத்தில் போலி பொய்வாக்கினர்களால் எதிர்க்கப்பட்டாலும், கடவுளால் அவர் இறைவாக்கினராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். எனவே, பாடுகளிலும் போராட்டங்களிலும் எதிர்ப்புகளிலும் இறைவனின் திட்டத்தை நிறைவேற்றும் இயேசுவுடன் கடவுள் உடனிருக்கிறார் என்பதுதான் மோசேயும் எலியாவும் இயேசுவோடு உரையாடிய செய்தி (லூக் 9:31).
கடவுளின்
திட்டத்தை நிறைவேற்றும்போது துன்பத்தைத் தவிர்க்க முடியாது. ‘சிலுவையின்றி மீட்பு இல்லை’,
‘துன்பமின்றி வெற்றியில்லை.’ சிலுவைக்கு அப்பால் மாட்சி! இறப்பிற்கு அப்பால் உயிர்ப்பு! இதுதான் இயேசுவின் தோற்ற மாற்றம் தரும் மையச் செய்தி.
இயேசுவின்
தோற்ற மாற்ற நிகழ்வில் துன்பம் மற்றும் சாவு பற்றி இயேசு கொண்டிருந்த கருத்தைப் புரிந்துகொள்வது நமது சிந்தனையை இன்னும் கூர்மைப்படுத்தும். இயேசு ஏழை எளியவர்களோடும் ஒடுக்கப்பட்டவர்களோடும் தம்மையே ஒன்றுபடுத்திக் கொண்டார். அவர்கள்மேல் பரிவு கொண்டார். இக்காரணத்திற்காகத்தான் அவர் துன்புறுத்தப்படலானார். துன்பத்தை ஒழிப்பதற்கான ஒரே வழி துன்புறத் தயாராக இருப்பது என்பதையே இயேசு வாழ்ந்து காட்டினார். துன்பத்தைப் போக்குவதற்குத் துன்புறுவதே ஒரே வழி என இயேசு தம்
சீடர்களுக்குக் கற்றுக்கொடுக்கலானார். துன்புறும் மனிதரைக் கண்டு இரக்கப்படுவது மட்டுமல்ல, அவரோடு நாமும் துன்புற வேண்டும். ஆகவேதான், “தம்மைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும்” (9:23) என்றார். லூக்கா மட்டுமே ‘நாள்தோறும் சிலுவையைத் தூக்கட்டும்’ எனச்
சீடத்துவத்தின் கடினத்தன்மையை விளக்குகிறார்.
சீடத்துவத்தின்
உச்சம் இறப்பதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான். ‘என் பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக்கொள்வார்” (9:24) என்றே
இயேசு சீடர்களுக்கு அறிவுரை வழங்கினார். இறையாட்சிக்குச் சான்று பகர வேண்டுமென்றால் தாம் இறக்கவேண்டும் என இயேசு எண்ணினார்.
தாம் சொன்னபடியே இயேசு அனைத்து மனிதருக்காகவும் தம் உயிரைக் கையளிக்க முன்வந்தார். தம் சொல்லும் செயலும் தம்மை இடர்களுக்கு இட்டுச்செல்லும் என்பதை உறுதியாக உணர்ந்தபோதிலும், மக்களின் நலனுக்காகப் பல நற்செயல்களைப் புரிந்தார்.
இயேசு மனித குலத்தின் நலனுக்காக இறப்பதற்கு முன்வருவதன் வெள்ளோட்டம்தான் இயேசுவின் தோற்ற மாற்றம். இயேசு தம்முடைய இறையாட்சி இலட்சியத்தை அடைய அவர் கையிலெடுத்த ஒரே ஆயுதம் தந்தையின்மீது கொண்ட நம்பிக்கை.
வார்த்தைகளைவிட
செயல்களே வலிமை வாய்ந்தவை என்பார்கள். ஆனால், செயல்களைவிடவும் வலிமை வாய்ந்தவை இறப்பு! இறையாட்சி வர வேண்டும் என்பதற்காக
இயேசு இறந்தார்! எனவே, துன்புற, இறக்க எப்போதும் தயாராக இருக்கவேண்டும் என்பதே இயேசுவின் தோற்ற மாற்றம் தரும் அழைப்பு! இயேசுவின் அழைப்பை ஏற்ற திருத்தூதர்கள் இயேசுவுடன் எருசலேம் வரை சென்று இறக்கவும் துணிந்தார்கள்; பலர் மறைச்சாட்சியரானார்கள்.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் பவுல் உண்மைக் கிறித்தவர்களுக்கும் போலிக் கிறித்தவர்களுக்குமான முரண்பாட்டை விளக்குகிறார். சிலுவையின் பகைவர்களாக இல்லாமல், சிலுவையை அரவணைப்பவர்களாக இருக்கவேண்டும். சிலுவையைத் தூக்கிச் செல்பவர்களே விண்ணகக் குடியுரிமையைப் பெறத் தகுதி உடையவர்கள் என்கிறார். தொடக்க வரியான “நீங்கள் அனைவரும் என்னைப்போல் வாழுங்கள்”
(பிலி 3:17) என்ற அழைப்பு அவரின் கடிதத்தில் பலமுறை இடம் பெற்றுள்ளன (1கொரி 4:16; 11:1; 1தெச 1:6; 2:10; 2தெச 3:7,9). இங்கே அவர் தன்னை முன்னிலைப்படுத்தவில்லை; மாறாக, “இயேசுவினுடைய முன்மாதிரிகையைப் பின்பற்றுகிறவர்களாய் இருங்கள்”
என்கிறார். ‘கிறிஸ்துவின் மனத்தை’
(1கொரி 2:16) உள் வாங்கியவர் பவுல். பிலிப்பியருக்கு பவுல் எழுதிய கடிதத் தின் மையச்செய்தியே இவ்வாசகத்தின் இறுதி வரியாக அமைகிறது - “ஆண்டவரோடுள்ள உறவில் நிலைத்திருங்கள்” (4:1).
எனவே,
இயேசு சுமக்கும் சிலுவையில் கொஞ்சம் நாமும் தோள் கொடுப்போம். அவரது அன்பில், உறவில் நிலைத்திருப்போம். பிறருக்கென நம்மையே அர்ப்பணிக்க, உடைபட, உயிர்கொடுக்க முன்வருவோம்.