news-details
கவிதை
கல்வாரிப் பயணம் புகட்டும் பாடம்!

உலகிற்கு உண்மையும்

நன்மையும்

வேப்பங்காய்தான்...

பதவியும் பணமும் மனிதனைப்

பீடித்திழுக்கும் பேய்தான்!

உண்மையைக் கைகழுவியவன்

மனசு அழுக்கானது!

காட்டிக் கொடுத்தால் காசு கிடைக்கும்

எட்டப்பன் குரு யூதாசு!

மணிமகுடம் சூடும் தலையில்

முள்முடியும் சூடப்படும் தலைபத்திரம்!

ஆடையைத் தொட்டாலே

அற்புதங்கள் மகிழாதே...

ஆடை முழுவதும் அகற்றப்படும்?

வாழ்க - வாழ்த்தும் ஒழிக - வசையும்

நீர்க்குமிழிதான்!

தவறுகிறவன் மனிதன்

மனம் மாறுகின்றவன்

மாபரனின் மைந்தன்!

அவமான சின்னம்கூட

மாமனிதன் கரங்களில்

அற்புதப் பாத்திரமாகும்!

சாட்டையால் அடித்தவன்

சிலுவை சுமத்தியவன்

ஈட்டியால் குத்தியவன் யார்? தெரியாது!!

ஆனால், எல்லா வலியும் தாங்கியவன்...

சரித்திரம்  படைக்கிறான்!

வாழ்வில் விழுந்து, எழுகிறவன்தான்...

வெற்றி சிகரம் ஏறுவான்!

பிறர் துயர் துடைப்பவரும்

பிறர் சுமையைத் தாங்குவோரும்

பிறருக்காய் கண்ணீர் வடிப்போரும்

கடவுளின் வடிவங்கள்!

வாள் எடுத்தவன்

வாளாலே சாவான்...

வாழ்க்கையையே

கொடுப்பவன்

வரலாறாய் வாழ்வான்!

மனிதன் இறப்புக்குப் பின்னும்

உயிர்ப்புடன் வாழ்கின்றான்

தான் வாழ்ந்த வாழ்வால்!