மத்தியப்பிரதேசத்தில் கிறித்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், மத்தியப்பிரதேச குழந்தைகள் உரிமைகள் ஆணையம் பள்ளி நிகழ்வுகளில் பங்கேற்க குழந்தைகளுக்குப் பெற்றோர்களிடமிருந்து எழுத்துப்பூர்வ அனுமதி பெறக் கோரியுள்ள உத்தரவு கிறித்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடுபவர்களை நேரடியாகக் குறிவைக்கும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. ஜபல்பூரின் மறைமாவட்டக் கல்வியாளர் அருள்பணியாளர் தங்கச்சன் ஜோஸ், இந்த உத்தரவு நேரடியாகக் கல்வி மையங்களைத் தாக்கும் முயற்சியெனக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த உத்தரவு 2023 -ஆம் ஆண்டிலும் பிறப்பிக்கப்பட்டது, அதன்படி கிறிஸ்துமஸ் நிகழ்வுகளில் மாணவர்களைப் பங்கேற்க அனுமதிக்க பெற்றோரிடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறப்படுகிறது.