news-details
ஞாயிறு தோழன்
ஆண்டவரின் திருமுழுக்குப் பெருவிழா (மூன்றாம் ஆண்டு - 12-01- 2025) எசாயா 40:1-5,9-11; தீத்து 2:11-14;3:4-7; லூக்கா 3:15-16,21-22

திருப்பலி முன்னுரை

இன்று நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாட அன்னையாம் திரு அவை நம்மை அழைக்கிறது. இயேசுவின் யோர்தான் அனுபவம் உன்னதமானது. இயேசு அங்குத் திருமுழுக்குப் பெறும் வேளையில்என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்என்று வானத்திலிருந்து தந்தையின் குரல் கேட்கிறது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது இறங்குகிறார். இவ்வாறு தந்தை, மகன், தூய ஆவி என்ற மூவொரு இறைவனின் வல்லமையை உணர்த்தும் விழாவாக இவ்விழா இருக்கிறது. நாம் திருமுழுக்கின் வழியாக ஐந்து விதமான ஆசிர்களைப் பெற்றுள்ளோம். 1) கடவுளின் குழந்தைகளாக நாம் மாறுகிறோம், 2) மீட்புத் திட்டத்தில் பங்குபெறும் உரிமையைப் பெறுகிறோம், 3) தூய ஆவியின் வல்லமையால் நிரப்பப்படுகிறோம், 4) ஆதிப் பாவம் கழுவப் பெற்று தூய்மையாகிறோம், 5) அகில உலகக் கத்தோலிக்கத் திரு அவையின் உறுப்பினராகிறோம். இத்தகு சிறப்பு வாய்ந்த திருமுழுக்கைப் பெற்ற நாம் ஆண்டவருக்கு நன்றி கூறுவோம். இயேசு திருமுழுக்குப் பெற்ற பிறகு ஏழைகளுக்கு நற்செய்தியை அறிவிக்கவும், சிறைப்பட்டோருக்கு விடுதலை வழங்கவும், பார்வையற்றோருக்கு பார்வைக் கொடுக்கவும், ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலையை வழங்கவும், ஆண்டவரின் அருள்தரும் ஆண்டினை அறிவிக்கவும் துவங்கினார். திருமுழுக்குப் பெற்ற நாமும் நம்முடன் வாழும் சகோதர சகோதரிகளுக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுத்து வாழ்வோம்அப்போது நம் அனைவரையும் பார்த்துநீயே என் அன்பார்ந்த மகன் / மகள்என்று ஆண்டவர் கூறுவார். ஆண்டவரின் அன்பை அன்றாடம் அனுபவித்து, அறிவித்து வாழ வரம்வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்

முதல் வாசகம் முன்னுரை

நம்முடன் வாழும் ஆண்டவரோடு நாம் இணைந்திருக்கும்போது, நம் வாழ்க்கையில் பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை எல்லாம் நேராக்கப்படும்; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும்; அவரது மாட்சி வெளிப்படுத்தப்படும் என்று கூறி அவரில் வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசகம் முன்னுரை

வல்லமை மிக்க இறைவனின் வழிநடத்துதலையும் பராமரிப்பையும் மறந்து பாவம் செய்தபோதும் அவர் நம்மை விட்டு விலகுவதில்லைதம் இரக்கத்தை முன்னிட்டு புதுப்பிறப்பு அளிக்கும் நீரினாலும், புதுப்பிக்கும் தூய ஆவியாலும் நம்மை மீட்டுக் காத்து வருகிறார்நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீயநாட்டங்களையும் மறுத்து, கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் வாழும்போது நிலை வாழ்வைப் பெறலாம் என்று கூறும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1) பாதுகாக்கும் ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்தும் திரு அவைத் தலைவர்களை ஆசிர்வதியும். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட இறை மக்களைக் கருத்தாய் வழிநடத்தவும், நாங்களும் திரு அவை எமக்கு விடுக்கும் அழைப்பிற்குச் செவிகொடுத்து வாழவும் தேவையான வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2) வழிகாட்டும் ஆண்டவரே! திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடும் நாங்கள் அனைவரும் தூய ஆவியின் குரலுக்குச் செவிகொடுத்து வாழவும், நீர் எமக்குக் கொடுத்துள்ள இந்த வாழ்க்கையின் மேன்மையை உணர்ந்து, ஒவ்வொரு நாளும் நன்றியுள்ள மக்களாக வாழவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3) அன்பின் இறைவா! திருமுழுக்கில் ஞானப்பெற்றோராக இருந்துஎம் பிள்ளைகளை வழிநடத்துவோம்என்று வாக்குறுதி கொடுத்த நாங்கள் அனைவரும் எங்கள் குழந்தைகளை ஞானத்திலும் ஒழுக்கத்திலும் வளர்க்கவும், திருப்பலியில் தவறாது பங்கேற்கும் ஆர்வத்தை அவர்கள் மனத்தில் விதைக்கவும், தேவையான வரத்தை எமக்குத் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்

4) பாசமுள்ள ஆண்டவரே! எம் பங்கிலுள்ள அனைத்துக் குடும்பங்களையும் ஆசிர்வதியும். நாங்கள் அனைவரும் திருமுழுக்கின் வழியாக ஒரே குடும்பமாக இணைக்கப்பட்டுள்ளோம் என்பதை அறிந்து, அனைவரையும் அன்பு செய்து நல்லுறவோடு வாழவும், பங்குத்தந்தையோடு இணைந்து பங்கு என்ற தலத் திரு அவையை வளர்த்தெடுக்கவும் தேவையான வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.